திருமணமான ஒவ்வொருவரும் தம்பதிகளாகப் பார்க்கவேண்டிய திரைப்படம் "இறுகப்பற்று"
பலரும் இத்திரைப்படம் குறித்துத் தொடர்ந்து பேசியதால் ஆர்வத்துடன் பார்த்தேன்..
இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள "இறுகப்பற்று" திரைப்படம், இக்காலகட்டத்தில் தம்பதியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். உறவுச் சிக்கலில் உள்ள தம்பதியர் பலர் மீண்டும் இத்திரைப்படத்தைக் காண்பதன்மூலம் இல்லரத்தில் சேர்வார்கள், பிரிந்துபோன பலர் தவறு எங்குள்ளது என்று சுயவிழிப்புணர்வு பெற்று தன்னை உணர்ந்து இணைவார்கள் என்று நம்பிக்கையை ஏற்படுத்தும் படம்.
தெனாலிராமன், எலி திரைப்படங்களை எடுத்த இயக்குனர் யுவராஜ், இப்படி ஒரு அழகான வாழ்வியல் படத்தை இயக்கியுள்ளதற்கு வாழ்த்துகள்.. பாடல்.. சண்டை, வன்முறை, ஆபாச வசனங்கள், நகைச்சுவை என்ற பெயரில் அள்ளித்தெளித்த ஒட்டாத காட்சிகள் என்று சென்றுகொண்டிருக்கும் தமிழ் சினிமாமல் அவ்வப்போது இதுபோன்ற கவிதை போன்ற திரைப்படங்கள் வந்து நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இத்திரைப்படம் இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் பெரும் திருப்பமாக அமையும் என்று நம்புகிறேன். நாம்தான் இது போன்றவைகளை மனம் விட்டுப் பேசவேண்டும்.. பாராட்டவேண்டும்.. பார்க்கவேண்டும்.. வெற்றிபெற வைக்கவேண்டும்.
திரைப்படங்கள் எவ்வளவு வலிமையானது என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்..
மூன்று வெவ்வேறு சூழலில் , இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமான மூன்று தம்பதிகளின் வாழ்வியல் முறையை எடுத்து , குடும்ப உறவில் உள்ள சிக்கல்களை விரிவாகத் திரைக்கதையில் கொண்டுவந்து இவர்கள் மூவரின் உறவுச் சிக்கல்கள் தீர்கிறதா ? எப்படித் தீர்கிறது? என்பதுதான் கதை.
இதில் வரும் பல கருத்துகள் மிக ஆழமானவை, எதார்த்தமானவை. பலர் வாழ்வியலில் பொருத்திப்பார்க்கும் அளவுக்கு உண்மைத்தன்மையுடன் களப்பணி செய்து திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ்.
திரைக்கதையில் உள்ள சில முக்கிய கருத்துகள் குறித்து இங்கே குறிப்பிடுவோம்.
உறவு (relationship ) என்பது ஒரு அறிவியல். ஒருவர் பிரதமராக வேண்டுமானாலும் ஆகிவிடலாம் , திருமண உறவில் வெற்றிபெறுவது எளிதல்ல என்று தொடங்குகிறது..
தம்பதிகளின் உரையாடலில் ஒருவர் மற்றொருவரை " நீ, உன்னால் "என்று குற்றம் சாட்டுவதாலேயே பல உறவுகள் சிக்கலில் உள்ளது என்று பதிவிடுகிறது.
தொலைபேசியை ஒரு நாளைக்கு குறைந்தது 3.5 மணி நேரம் பார்க்கும் கண்கள், தன் வாழ்க்கைத் துணையின் கண்களை எத்தனை நிமிடம் நேருக்குநேர் பார்த்து பேசுகிறார்கள் என்று கேட்டு குடும்பநல ஆலோசகர் தம்பதிகளை கண்பார்த்து பேசுதல் என்பதை நேருக்கு நேர் பார்க்கவைப்பதை ஒரு யோகா செய்வதைப்போன்று செய்யவைக்கிறார்.
பெரும்பாலோர் குடும்ப உறவில் ஏற்படும் விரிசலுக்கு அடிப்படை காரணம் (root Cause , Symtom ) மனிதர்களுடைய குணாதிசயம், பழக்கவழக்கம், வேறு எங்கோ சந்தித்த சிக்கல்களின் பதிவு என்பதை உணராமல் நிகழ்காலத்துடன் மல்லு காட்டுகிறார்கள் என்பதை குடும்பநல ஆலோசகர் கதாபாத்திரம் மூலம் ஆழப் பதிவிடுகிறது கதை.
"உறவுகள் ஒரே நொடியில் உருமாறும் காதலும் அன்பும் பொய்த்துப்போகும் இரவுகள் அழுகைகள் நிரம்பும் அந்த இரவுகளுக்கு யாரும் விதிவிலக்கல்ல "
என்ற வரிகள் மெல்லிய இசையுடன் வருவது அருமை..
உருகி உருகிக் காதலித்தவர்களும் , பல கோடி செலவுசெய்து உறவுகளைக் கூட்டிப் பெற்றோர் செய்துவைத்த திருமணங்களும் இன்று சரியான காரணம் இல்லாமல் விவாகரத்து செய்துகொள்வது நாளும் பெருகிவருகிறது. இதற்கு உடல் பருமன், தொலைபேசி பயன்படுத்துதல், குடி, முடி சொட்டை , குறட்டை, அழகு, நேர்த்தியாக உடையணியாமை, குட்டை,நெட்டை , கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகல, பழக்கவழக்கம் பிடிக்கவில்லை என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்று இப்படத்தில் காண்பிக்கப்படுகிறது.. உண்மையில் இன்றைய எதார்த்த சூழலில் இருவரும் சரிசமமாக இந்த சிக்கல்களுக்குக் காரணமாக உள்ளனர் என்பதைக் கள நிலவரம் அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
பெண்களின் மொழி அறிந்துகொள்வது குறித்து வருகிறது.. சாப்பிட்டாச்சா என்று மனைவி மதியம் அழைத்துக் கேட்டால், சாப்பாடு நன்றாக இருந்ததா என்று அர்த்தம் என்றும், அவர்கள் நேரடியாக உரையாடல் இருக்காது என்பதால் கணவன்மார்கள் கூர்ந்து கவனித்து அவர்களின் மனோபாவத்தை உணர்ந்துகொள்ளவேண்டும் என்று பெண்களின் இயல்பை ஒரு பாத்திரம் பேசுகிறது..
விவாகரத்துக்கு ஒரு கணவன் அறிவிக்கும்போது இதற்கு அர்த்தம், உடன் முடிவெடுத்துவிட்டான் என்பதல்ல
1. குழப்பத்தில் உள்ளேன் 2. கொஞ்சம் எதையும் கேட்காமல் , சண்டை செய்யாமல் தனிமையில் விடு 3. எனக்கு மனநிலை குழப்பமாக உள்ளது. 4. நானே சரியாகி வந்துவிடுவேன்
என்பதே பொருள் என்றும், விவாகரத்து கேட்பவர்களில் 10% மட்டுமே உண்மையான காரணம், வெறுப்பு ஆகியவற்றால் விவாகரத்தின் கடைசி வரை செல்கிறார்கள் , மீதம் 90% அதற்கு உடனடி எதிர்வினையாற்றுவதால் நடக்கிறது என்று கதையில் சொல்லப்படுகிறது.
தம்பதிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் காதல் மொழி வேறுபடும் என்று கீழ்க்காணும் நான்கு நிலைகள் குறிப்பிடப்படுகிறது.
1. Word of affirmation 2. Quality Time 3. Touch 4. Gift
தம்பதிகளுக்குள் கோபம் என்பது இயற்கையானது. அது வெறுப்பாக மாறாத வகையில் சிக்கல் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது.
இயல்பாகச் சண்டைபோட்டுப் புரிதல் இல்லாமல் , அவ்வப்போது குத்திக்காட்டாமல் உரையாடாமல் இருப்பதும் சிக்கல் வந்துவிடக்கூடாது , சண்டை வந்துவிடக்கூடாது என்று அதீத எச்சரிக்கையுடன், இயல்பை மறைத்து மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் உறவுச் சிக்கலைச் சந்திக்கிறது என்று இருவேறு கதாபாத்திரங்கள் பேசுகிறது.
உறவு என்பது கண்ணாடி போன்று பார்க்கலாம்- தொட்டதற்கெல்லாம் விட்டுவிட்டுச் சென்றுவிடலாம். ரப்பர் போன்று பார்க்கலாம் - அறுந்தாலும் முடித்துப் போட்டு முடிந்தவரை இழுக்கலாம் என்று குடும்பநல ஆலோசகர் சொல்லும் அறிவுரை ஒருவரைச் சிந்திக்கவைத்து விவாகரத்து கேட்டுத் திரும்பப்பெறும் நிலையை ஏற்படுத்துவதைக் காட்டியுள்ளார் இயக்குநர்.
சொந்த தொழில் செய்ய விரும்பும் ஒருவரை BE படித்து மென்பொருள் துறையில் போய் படும் வேதனையை, சம்பளம் குறைவாக இருந்தாலும் வேலையை விட்டுவிட்டு மீண்டும் தனக்குப் பிடித்த தொழிலைச் செய்துவிட்டு குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பது என்று பல வாழ்வியல் உண்மைகளைத் தொட்டுச் செல்கிறார்கள் பல கதை மாந்தர்கள்.
தாம்பத்தியத்தில் ஒரு சிறு சிக்கல் வரும்போதே , அமைதியாக மனதுவிட்டு உரையாடித் தீர்வுகண்டு செல்லவேண்டும் என்றும் இல்லையேல் அது நான்கு நிலைகளை ஒருவர் படிப்படியாகக் கடந்து நான்காவது நிலைக்குச் சென்றுவிட்டால் சரிசெய்வது கடினம் என்று கதையில் சொல்லப்பட்டுள்ளது. அந்த கீழ்க்காணும் நான்கு நிலைகள் குறிப்பிடப்படுகிறது.
1. பொறுத்துப்போகுதல் 2. பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசாமல் மூட்டை கட்டி வைத்தால் 3. ஏற்றுக்கொள்ளாமை (Rejection) 4. அடக்குமுறை (Repression)
காதல் திருமணம், பார்த்து வைத்த திருமணம் எதுவும் உறவுக்கு உத்தரவாதம் இல்லை என்பதும் ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்த வாழ்வைப் போலித்தனம், நடிப்பு , பெரும் வியூகம் வகுத்து பிரச்சினை வந்துவிடாமல் மெனக்கெடாமல் , மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளத் திட்டமிடாமல், இயல்பாக வருவதைக் கையாளும் திறமையை வளர்த்துக்கொண்டு சண்டை, கோபம், ஊடல், அழுகை என்று அனைத்தையும் உள்ளடக்கியதுதான் திருமண வாழ்க்கை என்பதை உணர்ந்து அதைச் சூழலுக்கு ஏற்ப கையாண்டு வெற்றிபெறுவதில் அடங்கியுள்ளது வெற்றி என்பதைத் தொட்டுச் செல்கிறது கதை..
இப்படம் எப்போதும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும்.. இதையொட்டி மேலும் பல படங்கள் வெவ்வேறு கோணத்தில் வருவதற்கு இப்படத்தின் வெற்றி அடித்தளமாக அமையும் என்று நம்புகிறேன்..
நட்சத்திரங்கள் ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த் , விக்ரம் பிரபு, ,ஸ்ரீ, சானியா அனைவரின் நடிப்பும் அருமை. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மறைந்த நடிகர் மனோபாலா கவனம் ஈர்க்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை உணர்வு பூர்வ காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கேற்ப நேர்த்தியாகப் பயணித்துள்ளது.
இதில் வரும் சில திருமண உறவுகள் சார்ந்த மனவியல் சார்ந்த கருத்துகளை துறைசார்ந்த அறிஞர்கள்தான் உறுதிப்படுத்தவேண்டும் என்றாலும், இயக்குநர் செய்துள்ள களப்பணி, உழைப்பு போற்றத்தக்கது
தற்போது திரையில் பார்க்கமுடியாதவர்க Netflix -ல் பார்க்கமுடியும்.
-வலைத்தமிழ் திரைவிமர்சனக் குழு
|