|
|||||
எங்கள் குலதெய்வம் - பெரியசாமி, சீப்புலியான், காமாட்சி |
|||||
குலதெய்வம் : பெரியசாமி, சீப்புலியான், காமாட்சி
அமைவிடம் : பெரியம்பாளையம்
வழி : பெரம்பலூர் மாவட்டம் வீரகனூரில் இருந்து கடம்பூர், பூலாம்பாடி வழியாக பெரியம்பாளையம்
அடையாளம் : ஏரிக்கரை கோயில், கூகிள் மேப்பில் தேடினால் ‘குடிசாமி டெம்பிள்’ என்று இருக்கும்.
குலதெய்வம் : பெரியசாமி, சீப்புலியான், காமாட்சி அமைவிடம் : பெரியம்பாளையம் வழி : பெரம்பலூர் மாவட்டம் வீரகனூரில் இருந்து கடம்பூர், பூலாம்பாடி வழியாக பெரியம்பாளையம் அடையாளம் : ஏரிக்கரை கோயில், கூகிள் மேப்பில் தேடினால் ‘குடிசாமி டெம்பிள்’ என்று இருக்கும். குலதெய்வம் கோயிலுக்கு போய்வருகிறோம் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டதேயில்லை. ‘நம்ம கோயிலுக்கு போய் வரலாம்’ என்றுதான் சொல்லுவோம். அதுவும் சிறுவயதில் அது ஒரு கனவுப்பிரதேசம். சின்னப்பையனுக்கு என்னென்ன பிடிக்கும்? இனிப்புகள், வண்டியில் பயணம், விளையாட அகன்ற இயற்கையான இடம். கூடவே பக்கத்து வீட்டு நண்பர்கள், இது அத்தனையும் ஒரு நாள் ஒன்றாக கிடைத்தால் என்ன மகிழ்ச்சியோ அது. நாங்கள் அப்போது பல குடும்பங்கள் சேர்ந்து பூஜை போடும்போது லாரி வாடகைக்கு எடுத்துப்போவோம். நடுவில் கார், பஸ்ஸில் போய் வருவது இந்த கணக்கில் வராது. வீட்டில் யாருக்காவது குழந்தை பிறந்தால் அதற்கு முதல் மொட்டை, காதுகுத்துதல் குலதெய்வம் கோயிலில்தான். ஒரு வாரம் முன்னிருந்தே ஏற்பாடுகள் செய்யப்படும். மொத்த செலவை கணக்கிட்டு ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்று பிரித்துக்கொள்வார்கள். தலைமையாக வீட்டின் பெரியவர் வசம் பணம் கொடுத்துவிடுவார்கள். அவர் வேலைகளை பிரித்துக்கொடுப்பார். வண்டி, பாத்திரங்கள் பேச ஒருவர், அவரே ஆடுகள் , கோழிகள், ஒரு பன்றிக்குட்டி என்று ஏற்பாடு செய்ய வேண்டும். முப்பூசை என்று இதற்கு பெயர். துணிகள் எடுக்க, குழந்தைகளுக்கு சின்னதாய் தோடுகள் வாங்க என்றெல்லாம் ஒருவர். மளிகை சாமான்கள் தனி. இது தவிர பூஜைக்கான பூக்கள் மாலைகள் எல்லாம் முகூர்த்தம் இல்லாத நாளில் ஆர்டர் கொடுத்து அட்வான்ஸ் தந்துவிட்டால் செலவில் கொஞ்சம் மீதமாகும். ஒரு வாரம் முன்னமே பத்திரிக்கை அச்சடிக்க கொடுத்து வாங்கிவிட வேண்டும். எத்தனை பேரை கூப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து கூப்பிட வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதில் முதல் வட்டம், இரண்டாவது வட்டம் என்று பட்டியல் பிரிக்கப்படும். தவிர்க்கவேகூடாது, கூப்பிடவில்லையென்றால் கோபித்துக் கொள்வார்கள் என்பது முதல் வட்டம். இதில் ஆள் பற்றவில்லையென்றால் இரண்டாவது வட்டம் போகவேண்டும். பெரும்பாலும் முதல் வட்டத்திலேயே ஒரு சிலரை கழிப்பதுதான் நடந்திருக்கிறது. சொந்தங்கள், நண்பர்கள் எவ்வளவு பேர் இன்னமும் நம்முடன் ஒட்டுதலாய் இருக்கிறார்கள் என்பதன் ப்ளூ பிரிண்ட் போல இந்த பட்டியல் அமையும். அதை ஆளுக்கு இவ்வளவு பேர் என்று பத்திரிக்கை கொடுக்க பிரித்துக்கொள்வார்கள். புறப்படும் நாளுக்கு முன் வீட்டில் பெண்களுக்குதான் அதிக வேலை. காலையில் சாப்பிட கட்டுச்சோறு செய்யவேண்டும். புளிசாதம், எலுமிச்சை சாதம், பொங்கல் தற்போது இட்லியும் இதில் சேர்ந்துவிடுகிறது. செய்வது எளிதாக இருக்கும் என. பொதுவான பொருட்கள், சமைத்தவை, முதலில் தனியாக பாதுகாப்பாய் வண்டியில் ஏற்றப்படும். அதன் பின் விருந்தினர்கள். பின்னர் குடும்பத்தினர். நடுவில் பெண்கள் உட்கார்ந்துகொள்ள ஆண்கள் சுற்றிலும் நின்று கொள்வார்கள். ஓரமாய் வேடிக்கை பார்த்தபடி வர சிறுவர்களிடம் போட்டி இருக்கும். தற்போது இரண்டு மூன்று வேன்களாக பேசிச் செல்கிறார்கள். இது சற்று பாதுகாப்பானதாக இருக்கும். வெயில் வருவதற்குள் கிளம்பிவிடுவார்கள். எங்கள் ஊரில் (ஆத்தூர்-சேலம் மாவட்டம்) இருந்து ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம். பெரம்பலூர் மாவட்டம் வீரகனூரில் இருந்து பெரியம்பாளையம் ஏரிக்கரை கோயில் என்று புதியவர்கள் விசாரித்துக் கொள்ளவேண்டும். வீரகனூரில் இருந்து ஆற்றை கடந்து செல்லும் சாலையில் இருந்து வழி பிரியும். நல்ல தார் சாலை. ஆனால் ஒரு வாகனம் மட்டும் செல்லும் ஆதலால் வேகமாக வண்டியை ஓட்டாமல் சற்று மிதமான வேகத்தில் செல்வது நல்லது. ஒரு இருபது நிமிட பயணத்தில் கோயில் இருக்கும் ஏரிக்கரையை அடையலாம். திருச்சியில் இருந்து வருவதானால் வீரகனூர் வருவதற்கு பத்து நிமிடம் முன் இடது புறம் ரோடு பிரியும். சரியாக அதே இருபது நிமிட பயணம். மெயின் ரோட்டை ஒட்டி ஏரியின் கரையில் கோயில் அமைந்துள்ளது. மெதுவாக எல்லோரும் இறங்கி அங்கே போடப்பட்டிருக்கும் போர் பைப்பில் தண்ணீர் அடித்து கைகால் கழுவிக்கொள்வார்கள். முதலில் அனைவருக்கும் இலை கொடுத்து கட்டுச்சோறு, டிஃபன் வகைகளை சாப்பிட வைக்கவேண்டும். அதுதான் மரபு என்று பாட்டி சொல்வார்கள். இதை அவர்கள் சொல்வதை வைத்து காரணத்தை யோசித்தோம். அந்த காலத்தில் மாட்டு வண்டியை தயார் செய்துகொள்வார்களாம். இரண்டு மூன்று வண்டிகள், சில சமயம் வசதியை பொறுத்து பத்து வண்டிகள் கூட போகுமாம். வண்டி முழுதும் வைக்கோல் நிரப்பி மெத்தை போல் செய்து அதன் மேல் சணல் சாக்கு, போர்வை கொண்டு மூடி, அத்துடன் வண்டியை கூடாரம் போல வளைவாய் கிட்டத்தட்ட அந்த கால குதிரை வண்டிகள் போல் மழை வெயில் பாதிக்காமல் கூரை செய்து அதில் ஒரு வண்டிக்கு பத்து பதினைந்து பேர் என ஏறிக்கொள்வார்கள். வண்டியின் கீழே லாந்தர் விளக்கு ஏற்றி தொங்கவிடப்படும். மெதுவாக முதல் நாள் இரவு கிளம்பும் வண்டி விடிய விடிய பயணம் செய்து மெதுவாக கோயிலை அடையும். வந்தவுடனே வெறும் வயிற்றில் பசியுடன் அனைவரும் இருப்பார்கள் என்பதால் முதலில் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வுக்குப்பின் குளித்து பூஜைக்கு தயார் ஆவார்கள் என்றும் அதுவே மரபாகியிருக்கலாம் என்றும் தெரிந்துகொண்டோம். மாட்டு வண்டி காலத்தில் அனைவரும் ஏரிக்கரையை ஒட்டி இருக்கும் மதகில் போய் குளித்து தயார் ஆவார்களாம். கோயிலின் முன்புறம் இருக்கும் வயல் வெளியில் தூரமாய் நான்கைந்து பாசன கிணறுகள் தண்ணீர் நிரம்பி இருக்குமாம். நீச்சல் தெரிந்தவர்கள் பொதீர் பொதீரென்று குதித்து குளித்து வருவார்களாம். இதெல்லாம் விருந்தினர்கள். இப்போதெல்லாம் போர் தண்ணீர்தான். ஏரியில் எனக்குத் தெரிந்து குட்டை போல சில சமயம் தண்ணீர் பார்த்திருக்கிறேன். ஏரி நிரம்பிப் பார்ப்பது கனவாகவே போய்விடும் என்று தோன்றும். அதேபோல பூஜை வேலையில் ஈடுபடும் பெண்களும் தயார் ஆவார்கள். மொட்டை அடிப்பவர்கள் காத்திருக்க வேண்டும். அதில் குழந்தைகள் இருப்பார்கள் எனில் அவர்களுக்கு சுடுதண்ணீர் வைக்க வேண்டும். கோயிலின் காம்பவுண்டு உள்ளேயே கல் அடுப்பு போல உள்ளது. விறகுகளை, சுள்ளிகளை ஏரி ஓரமாக சேகரித்துக்கொள்ளலாம். சமையலுக்கு மட்டும் நாம் வரும்போதே விறகுகளை எடுத்து வந்துவிடுவது நல்லது. இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது, அடுப்பு பற்ற வைக்கும்முன் கோயில் முன் இருக்கும் அகன்ற ஆலமரத்தை ஒரு பார்வை பார்த்துவிடுங்கள். சில சமயம் பிரமாண்டமாக சில தேன்கூடுகள் கட்டப்பட்டிருக்கலாம். அது சமயம் கோயிலின் உள்ளே அடுப்பு மூட்டாமல் கொஞ்சம் தூரமாய் சென்று அடுப்பு அமைத்துக்கொள்வது நல்லது. புகையின் காரணமாக தேனீக்கள் கோபமடைவது விடுவது சில சமயம் நடந்திருக்கிறதாம். தற்போது கேஸ் சிலிண்டர் அடுப்புகளை கொண்டு போவதாகவும் சொன்னார்கள். மொட்டை அடிப்பதில் ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது. இரட்டைபடையில் இருக்கக்கூடாது. அதாவது குறைந்தது மூன்றில் இருந்து மொட்டை என்ணிக்கை இருக்க வேண்டும். மூன்று, ஐந்து, ஏழு இப்படி. இரட்டைதான் இருக்கிறது என்றால் யாரையாவது இழுத்து உட்கார வைத்துவிடுங்கள். இல்லையெனில் பெண்கள் யாரையாவது பூமுடி கொடுக்கச்சொல்லுவார்கள். பூமுடி என்றால், கூந்தலின் நுனியில் பூ வைத்து அந்த நுனியை மட்டும் கட் செய்வது. இதுவும் மொட்டையில் ஒரு எண்ணிக்கை ஆகிவிடும். ஒரு சில குழந்தைகள் ஆவென்று வாய் பிளந்தபடி மொட்டை அடிக்க ஒத்துழைக்கும். ஆனால் பல குழந்தைகள் என்னவோ ஏதோ என்று அழ ஆரம்பித்துவிடும். அவற்றை கைகால்களை அசையாமல் பிடித்து மெதுவாக ஜாக்கிரதையாக மொட்டை போட வேண்டும். பெரும்பாலும் மாமன் முறையில் இருப்பவர்கள் மடியில் உட்காரவைத்து குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள். ஒரு வேலை மாமன் முறையில் யாரும் வரவில்லையென்றால், வயதான தாத்தா முறை யாரையாவது பிடித்து உட்கார வைத்துவிடலாம். தலை நிறைய முடியுடன் இருந்த குழந்தைகளுக்கு, திடீரென்று பாரம் குறைந்தார்போல தோன்றி தலையை தடவி தடவி பார்ப்பது அழகு. அதுவும் அனைத்து குழந்தைகளும் மொட்டையில் அழகுதான். தண்ணீரை ஊற்றி தலை முழுதும் கரைத்த சந்தனத்தை பூசி புது உடையில் அவர்களின் அழகை காண கோடி கண் வேண்டும். முக்கிய படலம் இனிதான். காது குத்துதல். அதே மாமன் மடி. முதலில் காது குத்துபவர் குழந்தையிடம் பேச்சு கொடுத்து, கையில் ஏதேனும் இனிப்பு கொடுத்து தாஜா செய்துவைத்துக் கொள்வார். குழந்தையும் சிரித்தபடி அழகாக காதை காட்டும். ‘யார்கிட்ட காது குத்துற’ என்ற வரிகள் இப்படித்தான் வந்திருக்கும் போல. இரண்டு காதிலும் புள்ளி வைத்து மார்க் செய்வார். இதற்கு ஆசாரியை கையோடு கூட்டிச் செல்வார்கள். மொட்டை அடிக்க காது குத்த என்று நம்முடனே பயணம் செய்வார்கள். ஒருவேளை மறந்துவிட்டால், ஊருக்குள் சென்று தேடி, கூப்பிட்டு வரவேண்டும். இதையும் திட்டமிட்டுக்கொள்வது நல்லது. முதல் காதை தடவி மெதுவாக குத்தும் வரை சிரித்தபடி இருக்கும் குழந்தை சட்டென்று முகம் மாறி கத்த ஆரம்பிக்கும். அதன் மனம் முழுவதும் அந்த ஆசாரியை எப்படி திட்டும் என்பது அதன் முகத்தில் இருந்து தெரியும். அடுத்த காதை குத்துவதுதான் பிரம்மப்ரயத்தனம். ஆனால் அனுபவ ஆசாரிகள் அதையும் சமாளித்து வேலையை முடித்துவிடுவார்கள். மார்க் செய்யும்போது மட்டும் கவனமாக பார்த்து ஒரே சீராக நடுவில் குத்தப்படுகிறதா என்று கவனித்துக் கொள்ளவேண்டும். இதன் இடையில் சமையல் வேலைகள் ஆரம்பித்துவிடும். ஒரு புறம் ஆடுகள் கோழிகள் மாலையிட்டு பலியிடப்பட்டு, சுத்தம் செய்து தயாராக வந்துவிடும். பெரிய ஆட்டுஉரல், அம்மி எல்லாம் அங்கே போடப்பட்டிருக்கும். பயன்படுத்திக் கொள்ளலாம். கொதிக்கும் குழம்பு வாசனை ஏரியை தாண்டி ஊர் வரை செல்லும். சுடச்சுட சாதம் தயாராகும். சொல்வது உடனே என்றாலும் இது எல்லாம் முடிய மதியம் ஆகியிருக்கும். சாமி முன்பு இலை போடப்பட்டு சமைத்தவை, சாதம் குழம்பு என எடுத்து படையலிடுவார்கள். அதே சமயம், கோயிலின் வெளியே வரிசையாக இருக்கும் ஐம்பது அறுபது சிலைகளுக்கு பூ பொட்டு வைக்கும் வேலை சுட்டிகளுடையது. இதெல்லாம் காவல் தெய்வமா அல்லது வேண்டிக்கொள்பவர்கள் கொண்டு வந்து வைத்த சிலைகளா என்பது தெரியவில்லை. கோயிலின் உள்ளே பெரியசாமி, காமாட்சி, சீப்புலியான் முக்கிய சாமிகள். இவைதான் குலதெய்வம். இவை கர்ப்பகிருஹத்தில் இருக்கும். இதன் இருபுறமும் வெளியில் வரிசையாக சிலைகள் இருக்கும் இவற்றுக்கு விளக்கு ஏற்றி பூ பொட்டு வைப்பது பெண்கள் வேலை. வெளியே கருப்புசாமி கம்பீரமாக கையில் பெரிய அரிவாளுடன் இருப்பார். அவரின் இருபுறமும் பெரிய பெரிய குதிரைகளும் அவற்றின் உடன் வரும் வீரர்களும் இருப்பார்கள். இதெல்லாம் அவ்வப்போது வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இதுதவிர கல்லால் ஆன சிறு சிறு குதிரைகள் இருபதுக்கும் மேல் வரிசையாக இருக்கும். இதுதான் குழந்தைகளின் விருப்ப சாமிகள். எளிதில் அவர்களாகவே ஏறி உட்கார்ந்துகொண்டு விளையாடுவார்கள். சாமி கும்பிடுவதில் ஒரு முக்கிய விஷயம், வயதான பூசாரி தன் வாயையும் மூக்கையும் ஒரு துணியால் இறுக கட்டிக்கொண்டுதான் பூஜை செய்வார். பூஜை முடியும் வரை அதை கழட்ட மாட்டார். இதை சிறு வயதில் பார்க்கும்போது கொஞ்சம் பயமாக இருக்கும். இப்போது பழகிவிட்டது. படையல் இலையில் இருந்து ஒரு சிறு இலையில் கொஞ்சம் மாற்றி எடுத்துக்கொண்டு சுற்றிலும் இருக்கும் சாமிகளுக்கும், வெளியே இருக்கும் சாமிகளுக்கும் சென்று காட்டிவிட்டு வருவார். அதன் பின் தீப ஆராதனை, சடங்குகள் முடிந்து எல்லோரும் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வோம். வெளியே பந்தி போடப்படும். அப்போது காம்பவுண்ட் இல்லை வெறும் மண் தரை. மரங்கள் இருக்கும். தற்போது காரை போடப்பட்டு மேலே சிமெண்ட் அட்டை போடப்பட்டிருக்கிறது. அங்கே ஒரு நேரத்தில் ஒரு ஐம்பது பேருக்கு தாராளமாக சாப்பாடு போடலாம். குலதெய்வம் கோயிலில் செய்யப்படும் அந்த குழம்புக்கு எங்கிருந்துதான் அந்த ருசி வருகிறதோ தெரியவில்லை. ஓடியாடி வேலை செய்து பசியோடு இருப்பதாலா, அல்லது அந்த சூழ்நிலை மற்றும் நண்பர்கள் சொந்தங்கள் உடன் இருப்பதாலா தெரியவில்லை. வீடுகளில் வைக்கப்படும் குழம்பு கெட்டியாக இருக்கும். கோயிலில் சிறிது நீர்விட்டது போலதான் இருக்கும். ஆனால் சூடான சோறு மீது அந்த குழம்பை ஊற்றியதும் இலையின் வாசத்துடன் கலந்து அது ஒரு தேவாமிர்த படையலாய் தெரியும். மிக திருப்தியாக சாப்பிட்டு மீண்டும் ஒரு ஓய்வு. குழந்தைகளுக்கு மொய், பரிசு கொடுப்பவர்கள் கொடுப்பார்கள். சாயந்திரம் எல்லோரும் கிளம்ப ஆரம்பிப்பார்கள். உடைமைகளை சரிபார்த்துக் கொண்டு பிள்ளைகளை பத்திரமாக கூட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும். குழந்தைகள் தான் அவ்வளவு சீக்கிரம் கிளம்ப மாட்டார்கள். காலையில் புதிதாக தெரிந்த அந்த சின்னச்சின்ன குதிரைகள் சாயந்திரத்திற்குள் குழந்தைகளின் தோழர்களாக மாறி அவர்களுடன் பேச ஆரம்பித்துவிட்டது போல் இருக்கும் ஒவ்வொரு குதிரையிடமும் போய் சொல்லிவிட்டு வருவார்கள். சில துணிச்சலான சிறுவர்கள் கருப்புசாமியிடம் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள். கிளம்புவதற்கு முன் இன்னொரு சின்ன வேலை. கோயிலில் இருந்து ஒரு அரை மைல் தொலைவில் இந்த கோயிலைச் சேர்ந்த பெரியாயி சாமி ஒரு மரத்தடியில் இருக்கும் . நடந்துதான் போக வேண்டும். இங்கே முடிந்து கிளம்பும்போது யாராவது சிலர் மட்டும் போய் அங்கே ஒரு எலுமிச்சை, காதுவளை கருகமணி மாட்டிவிட்டு ஒரு கற்பூரம் காட்டிவிட்டு வரவேண்டும். அது முடிந்து அவர்கள் வந்தவுடன் வண்டி கிளம்பும். அங்கிருந்து சொந்த ஊர் வரை காவலுக்கு சாமி வரும் என்பது நம்பிக்கை. நம் ஊரில் எல்லையை தொட்டவுடன் யாராவது இறங்கி எல்லையில் ஒரு கற்பூரம் ஏற்றி கும்பிட்டு அது அணையும் வரை காத்திருந்து சாமியை மீண்டும் வழியனுப்ப வேண்டும். பின்னர் திரும்பிப் பார்க்காமல் வண்டியில் ஏறி வீடு வந்துவிடலாம். கோயிலுக்கு போய் சில ஆண்டுகள் ஆகின்றன என்று மனைவி சொல்ல ஒரு விடுமுறை நாளில் கிளம்பினோம். வானம் கருக்கலாக இருந்தது. அதனால் குழந்தைகளை விட்டுவிட்டு தனியாக பைக்கில் மழைக்கோட்டு சகிதம் சென்றோம். பூசாரி இறந்துவிட்டதால் அவர் மனைவியான பாட்டியம்மாதான் வந்தார்கள். கோயிலுக்கு சென்றவுடன் ஆச்சரியம். கோயிலை கடக்கும் வாய்க்கால் ஒன்று நிறைந்து தண்ணீர் முழங்கால் வரை அழகாக சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. வண்டியை அங்கே நிறுத்தி கழுவிக்கொண்டிருக்கும்போது அந்த பாட்டி மெதுவாக நடந்து வந்தார்கள். கையோடு கொண்டு வந்த பொங்கலை சாப்பிட்டு, முகம் கழுவி பூஜை முடிந்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு சிறிது ஓய்வு. முதலில் வெறும் கர்ப்பகிருஹம் மட்டும் இருந்த கோயில் சில ஆண்டுகளுக்கு முன் முழுதாக சுற்றிலும் மண்டபம் போல கட்டப்பட்டு அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. அதற்கு உதவியவர்களின் பெயர்கள் கல்வெட்டு போல் பதிக்கப்பட்டிருக்க, பெரும்பாலும் எங்கள் ஊர் என்று நினைத்து படிக்க, தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வந்து உதவியதை படித்து தெரிந்துகொண்டோம். இவ்வளவு பேருக்கு இந்த தெய்வம் ஆதி தெய்வமாக இருக்கிறது என்று மகிழ்வுடன் இருக்க, அதில் முஸ்லிம் நண்பர்களின் பெயர்கள் இருந்தது கண்டு ஆச்சரியம் இன்னும் அதிகமாகியது. இதுதான் தமிழ்நாட்டு குலதெய்வ கோயில்களின் சிறப்பு என்று மகிழ்வாக இருந்தது. “குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல” என்றார் அந்த பாட்டி. “இன்னும் மழை அதிகமா வந்து கொஞ்சமாவது ஏரியில் தண்ணீர் வரட்டும் அம்மா… அப்போ கூட்டி வந்தால் குழந்தைகளுக்கும் வேடிக்கையாக இருக்கும்” என்றேன் நான். “அட கடவுளே… இந்த வாய்க்கால் தண்ணீர் எல்லாம் எங்கிருந்து வருதுன்னு நினைச்ச தம்பி… ஏரி நிறைஞ்சு வழியும் மீதம் தண்ணீர் இது “ என்று அவர் சொல்ல ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விட்டோம். அவசர அவசரமாக ஓடி, மேடேறி பார்க்க அந்த நிறைந்த கடல் போன்ற எரியின் காட்சி கண்களை நிறைத்தது. வாழ்நாளில் ஏரி நிறைந்து பார்த்துவிட்டோம் என்ற மகிழ்வுடன் வீடு திரும்பினோம். |
|||||
by Sakthivel on 15 Feb 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|