|
|||||
எங்கள் குலதெய்வம் - ஶ்ரீ சந்தனக் கருப்பையா சுவாமி |
|||||
குலதெய்வம் ஏன்?: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம் கண்டிப்பாக இருக்கும். நாம் எந்த இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும் நமது குலதெய்வத்தை வணங்கி விட்டுத் தான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். இதையே தான் காஞ்சி மகாப் பெரியவாளும்
சொல்லி இருக்கிறார். குடும்பத்தில் எந்தச் சுப காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வத்தை வணங்கி விட்டுத் தான் மேற்கொண்டு செய்ய வேண்டும். அப்போது தான் நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் தடங்கள் இல்லாமல் நல்லபடியாக நடக்கும்.
எப்படிக் கண்டுபிடிப்பது?:
ஒரு சிலருக்குத் தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. அப்போது எப்படிக் குலதெய்வத்தைக் கும்பிட முடியும் என்ற கேள்வி எழும். அதற்குப் பெரியவர்கள் சொன்ன பதில் இது தான்: " உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் குலதெய்வம் எது என்று தெரியாது; ஆனால் உங்கள் குலதெய்வத்திற்கு உங்களை யார் என்று தெரியும். அதனால் நீங்கள் உங்கள் சுவாமி அறையில் ஒரு விளக்கில் நெய் விட்டுத் திரி போட்டு விளக்கு ஏற்றி, " எங்கள் வீட்டுக் குலதெய்வமே! எனக்கு எது குலதெய்வம் என்று தெரியவில்லை; அதனால் என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று வேண்டிக் கொள்ளலாம்.
எங்கள் குலதெய்வம்:
எங்கள் குலதெய்வம் பழையனூர் ஶ்ரீ சந்தனக் கருப்பையா சுவாமி. இந்தக் கோயில் மதுரையில் இருந்து 15 கி.மீ, திருப்புவனத்தில் இருந்து மேற்கே 11 கி.மீ தொலைவில் உள்ள பழையனூர் என்ற கிராமத்தில் இருக்கிறது. திருப்பாச்சேத்தியில் இருந்தும் பழையனூர் 15 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தது .இங்கு ஶ்ரீ சந்தனக் கருப்பையா, ஶ்ரீ சுந்தர மகாலிங்கம், ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் பரிவார தேவதைகள் வீற்றிருந்து அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சந்தனக் கருப்பையா எழுந்தருளிய விதம்:
சதுரகிரி மகாலிங்க மலியில் பலாமரத்தின் அடியில் வீற்றிருந்த
கருப்பையாவின் கம்பீரமான உருவத்தைப் பார்த்தவுடன் அங்கு வந்த பம்பை கொட்டு கொட்டுகிறவர்கள் கருப்பையா சிலையை ஒரு குழந்தையைத் தூளியில் வைப்பது போல வைத்துத் தூக்கி வருகின்றனர். அப்படி வந்து கொண்டு இருக்கும் போது வைகையின் உபநதியான கிருதமால் நதி அருகே வந்தவுடன், இவர்கள் அங்கு சுவாமியை இறக்கி வைத்து விட்டு, இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லுகின்றனர் . திரும்பி வந்து தூக்கும் போது அவர்களால் தூக்க முடியவில்லை. அப்போது ஒரு அசரீரி கேட்கிறது: " நான் சுந்தர மகாலிங்கம் எல்லைக்கு வந்து விட்டேன்; இங்கேயே இருக்கிறேன்!" என்று. அவர்களும் அங்கேயே வைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள்.
இங்கு சுந்தர மகாலிங்க சுவாமி சுயம்புவாகத் தோன்றியவர். அவர் நிலத்தை உழும்போது கொழுமுனை தட்டவே, செய்யும் வேலையை நிறுத்தி விட்டுப் பார்க்கும் போது அங்கு கிடைத்தது தான் இந்த லிங்கத் திருமேனி. இன்றும் அந்த அடையாளத்தைக் காணலாம்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் சிங்கப் பல்லுடன் கிரீடம் அணிந்து, பூத, பிசாச, துர்சக்திகளைத் தன்னுள் அடக்கி, சாந்த சொரூபியாகக் காட்சி தருகிறாள்.
பொதுவாகப் பிராமணக் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த மாதிரிக் கிராம தெய்வங்கள் குலதெய்வமாக இருக்காது. ஆனால் பழையனூரில் முன்பு அக்ரஹாரம் இருந்து இருக்கிறது. அதனால் இன்றும் பல பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்
-களுக்குக் குலதெய்வமாக ஶ்ரீ சந்தனக் கருப்பையா சுவாமி இருக்கிறார்.
வாழ்க்கை அனுபவங்கள்:
1. என்னுடைய முப்பாட்டனார் காலத்தில் நடந்த சம்பவம் இதோ:
100 வருடங்களுக்கு முன்பு
B.கிருஷ்ணன் என்ற 10 வயதுப் பையனை, மாலை 5 மணி வாக்கில் கோட்டை வாசல் பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் தையற்கடைக்குப் போய் தைத்த துணிகளை வாங்கிக் கொண்டு வரும்படி வீட்டில் அம்மா அனுப்பி வைக்கிறார். இந்தப் பையனும் வாங்கப் போய்க் கொண்டு இருக்கும் போது வழியில் இரண்டு ஆட்கள் வந்து இந்தப் பையனைப் பார்த்து, " இந்தா தம்பி! இந்த வெள்ளரிக்காயை வாங்கிக்கோ!" என்று சொல்லித் தந்து இருக்கிறார்கள். வெள்ளரிக்காயை வாங்கிக் கொண்டவுடன், தன் சுயநினைவு இல்லாமல் அவர்களுடன் போய் விட்டான்.
தேவி பட்டினம் போகும் சாலையில் ' கோப்பேரி மடம் ' என்ற இடத்துக்கு அருகில் வந்ததும் அங்கு உள்ள கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். அங்கு போனதும் அந்தப் பையனை, போட்டுக் கொண்டு இருக்கும் கடுக்கன் (காதில் போட்டுக் கொள்வது), கையில் உள்ள காப்பு எல்லாவற்றையும் கழட்டி விடுமாறு சொன்னார்கள். அதன்படியே அந்தப் பையன் செய்தவுடன், ஒரு
மண் பானையில் தண்ணீர் கொண்டு வந்து அந்தப் பையன் தலையில் விட்டவுடன், அவனுக்கு நினைவு வந்து விட்டது. அப்போது ஒரு அரிவாளை எடுத்துப் பையனைக் குனியச் சொல்லி, வெட்டப் போகும் போது, அந்தப் பையன் சத்தமாகக் " கருப்பையா காப்பாத்து!" என்று கத்தியவுடன்,
அப்போது தேவிபட்டினத்தில் இருந்து இராமநாதபுரத்திற்கு ரோந்து வந்து கொண்டு இருந்த காவலர் காதில் விழ, அவர் போலீஸ் விசிலை ஊதி விட்டார்.
அந்த விசில் சத்தம் கேட்டவுடன் அந்த இரண்டு பேரும் அப்படியே அந்தப் பையனை விட்டு விட்டுப் போய் விட்டார்கள். அந்தக் காவலர்கள் வந்து பார்க்கும் போது,
இந்தச் சின்னப் பையன் தலையில் ஈரம் சொட்டச் சொட்ட நின்று கொண்டு இருப்பதைப் பார்க்கிறார்கள். " தம்பி என்ன நடந்தது?" என்று கேட்கும் போது,
" தையல்கடைக்கு வந்தது, இந்த இரண்டு பேர் வெள்ளரிக்காய் கொடுத்தவுடன் தன்னிலை மறந்து அவர்களுடன் வந்தது, தலையில் தண்ணீர் விட்டவுடன் தனக்கு நினைவு வந்தது, அவர்கள் தன்னைக் குனியச் சொல்லி அரிவாளால் வெட்டப் போகும் போது ' கருப்பையா காப்பாத்து ' என்று நான் கத்தும் போது தான் நீங்கள் விசில் ஊதினீர்கள்; அதைக் கேட்டு அவர்கள் என்னை விட்டு விட்டுப் போய் விட்டார்கள்!" என்று சொன்னவுடன், அவர் சொல்கிறார். " என்னோட பேரு கருப்பையா!" என்று சொல்கிறார்.
இராமநாதபுரத்தில் பாபு ஐயர் அவர்களின் பையன் நான்; வீட்டுல எல்லோரும் என்னைத் தேடிட்டு இருப்பாங்க; என்னை எங்க வீட்டில் கொண்டு போய் விட்டுடுங்க!" என்று சொல்கிறான். அதற்கு அந்தக் காவலர் சொல்கிறார்: "இப்போது இரவு நேரம் ஆகி விட்டது; தேவிபட்டினம் சத்திரத்தில் ராத்திரி இருந்து விட்டு, காலையில் கொண்டு போய் விடுகிறேன்!" என்று சொன்னவுடன், " அங்கு தான் எங்க தாத்தா பேஷ்காரராக இருக்கிறார்!" என்று சொன்னவுடன் அந்தப் பையனை அந்தச் சத்திரத்தில் கொண்டு போய் விட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். இதற்குள் இந்தப் பையன் வீட்டில் தையல் கடைக்குப் போன பையன் இன்னும் வரவில்லையே என்று கவலைப்பட்டு, எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
மறுநாள் காலை விடிந்தவுடன் அந்தக் காவலர் அந்தச் சிறுவனைக் கூட்டிக் கொண்டு வந்து அவனுடைய பெற்றோரிடம் விட்டு விட்டு முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகளையும் சொல்கிறார். அப்போது வீட்டிற்குத் தலைச்சன் பையனைப் பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் இந்தச் சிறுவனைப் பலியிடக் கூட்டிக் கொண்டு போய் இருக்கிறார்கள். நல்ல வேளை சந்தனக் கருப்பையா தான் காப்பாத்தினார்; பையனைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்றும் காவலர் சொல்லி விட்டுப் போனார்.
2ஆவது அனுபவம்:
என் மாமியார் சொல்லிக் கேட்டது. இப்போது என் கணவருக்கு 66 வயது ஆகிறது. அவருக்கு 3 வயதாக இருக்கும் போது, குலதெய்வம் சந்தனக் கருப்பையா கோயிலில் குழந்தைக்கு முடி இறக்குவதற்காக
என் மாமியார் இடுப்பில் 3 வயதுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டும்
என் மாமனார் பொங்கல் வைக்கத்
தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். முதலில் பெண் குழந்தை உள்ளது. அடுத்துப் பையன் பிறந்தால் உன் சன்னதிக்கு வந்து குழந்தைக்கு மொட்டை போடுகிறேன் என்று என் மாமியார் வேண்டிக் கொண்டாராம். வேண்டுதலை நிறைவேற்ற இப்போது போய்க் கொண்டு இருக்கிறார்கள். அப்போது பஸ் வசதி எல்லாம் கிடையாது. எனவே நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கும் சரியாக வழி தெரியாது. ஒரு குத்து மதிப்பா நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
அப்போது நடுவழியில் ஒருவன் கையில் அரிவாளோடு
வந்து கொண்டு இருக்கிறான். அந்தக் காலத்தில் வழிப்பறிக் கொள்ளையர்கள் நிறைய உண்டு.
என் மாமியார், மாமனாருக்கு அப்போது சின்ன வயசு ஆதலால் அவர்கள் பயந்து போய் விட்டார்கள். என் மாமியார் மனதுக்குள் வேண்டிக் கொள்கிறார்:
"கருப்பையா! எப்படியாவது என் வேண்டுதலை நிறைவேற்றி வைத்து விடுப்பா!" என்று.
அப்போது அந்த முரடன் இவர்களைப் பார்த்து, " எங்கே போறீங்க?" என்று கேட்டவுடன், இவர்கள் பயந்து கொண்டே,
" நாங்கள் எங்கள் குழந்தைக்கு மொட்டை போடணும், அதுக்குத் தான் போய்க் கொண்டு இருக்கிறோம்; கோயில் எங்க இருக்குன்னு தெரியவில்லை எங்களுக்கு!" என்றதும் அந்த முரடன், " என் பின்னாடியே வாங்க!"
என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பிக்கிறான். இவர்களும் அவன் பின்னாடியே பயத்துடன் நடக்கிறார்கள். கோயில் வாசல் வந்தவுடன், " இது தான் நீங்க சொன்ன கோயில்!" என்று சொல்லி விட்டு அடுத்த வினாடி மறைந்து விடுகிறான். இவர்களும் வேண்டுதலை நிறைவேற்றி விட்டு வீட்டுக்கு வந்தார்களாம்.
இவர்களுக்கு வழி காட்டியது சந்தனக் கருப்பையா தான் என்று நம்புகிறார்கள். அது வரை குலதெய்வம் கோயிலுக்கு வழி தெரியாமல் இருந்தவர்கள் என் மாமியார், மாமனார் கோயிலுக்குப் போய் விட்டு வந்தவுடன் தொடர்ந்து எல்லோரும் போக ஆரம்பித்து விட்டார்களாம். இது எங்கள் குடும்பத்தில் நடந்தது.
இங்கு சந்தனக் கருப்பையா சன்னதியில் சீலைக்காரி அம்மன் அருவமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பூக்கட்டும் பண்டாரம் மறவர் வம்சத்தினர் அறங்காவலராக உள்ளனர். இந்தக் கருப்பையா சன்னதியில் இருந்து சுந்தர மகாலிங்கம் சன்னதிக்குப்
போகும் பாதையில் இடது பக்கம் மூன்று சிறு பெண் தெய்வங்களின் சிலைகள் இருக்கும். அதில் நடுவில் உள்ளது பழையனூர் நீலி குடல் பிடுங்கி ராக்கச்சி என்ற பெயரில் இருக்கிறார்.
இந்தக் கோயிலில் பம்பை கொட்டுபவர்களுக்கு மரியாதை செய்யும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு மகா சிவராத்திரி அன்றும் முதலில் எங்கள் தாயாதிக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு வந்து விடுவோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் இருந்து வருவார்கள். ஒவ்வொரு வருடமும் இராமநாதபுரத்தில் இருந்து ஶ்ரீ. B.K. மணி ஐயர் என்பவர் தான் சுவாமிக்கு அபிசேகம், அலங்காரம், பூஜை எல்லாம் செய்வார். அவர் கருப்பையாவுக்குக் கற்பூர ஆரத்தி எடுத்து விட்டு, வெளியே வரும் போது பார்த்தால், அப்படியே சந்தனக் கருப்பையாவே எழுந்து நடந்து வருவது போல் இருக்கும்.
நான் முன்னாடி வாழ்க்கை அனுபவத்தில் சொன்ன B. கிருஷ்ணன் என்ற சிறுவன் தான் B. K.மணி ஐயரின் அப்பா.
மகா சிவராத்திரியை ஒட்டி 5 நாட்கள் திருவிழா நடக்கும். இதில் சுந்தர மகாலிங்கம் சாமியும், அங்காள பரமேஸ்வரி அம்மனும் தான் தேரில் வீதி உலா வருவார்கள். சந்தனக் கருப்பையா சுவாமி பாரி வேட்டைக்கு மட்டும்
தான் வருவார்.
சிறப்புக்கள்:
* எல்லா சாதியினரும் குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.
* பெண்கள் திருமணம் ஆகிச்
சென்றாலும் பிறந்த வீட்டுத்
தெய்வம் என்று கொண்டாடி
வணங்கலாம்.
* துடிப்பான தெய்வம்.
* நாம் நம்பிக்கையுடன் வேண்டிக்
கொண்டால், கட்டாயம் நம்
பிரார்த்தனையை நிறைவேற்றி
வைப்பார்.
* நாம் எங்காவது வெளியே முக்கிய
வேலையாகவோ, மருத்துவ
- மனைக்கோ சென்றால், அங்கு
யாராவது ஒருத்தர் பெயர்
நிச்சயம் ' கருப்பையா ' என்று
இருக்கும். அதை வைத்தே நாம் செல்லும் காரியம் கண்டிப்பாக நல்லபடியாக நடக்கும் என்று
நம்பலாம்.
எங்கள் வீட்டில் நான் செய்வது:
நான் தினமும் சாமி கும்பிடுவதற்கு முன்பு, சந்தனக் கருப்பையா சுவாமிக்கு என்று ஒரு உண்டியல் வைத்து இருக்கிறேன். அதில் எங்க குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் போட்டு வருவேன். அதே போல மனது வருததமாக இருந்தாலும் அந்த உண்டியலில் காசு போடுவேன். நல்லது நடந்தாலும் காசு போடுவேன். இப்படிப் போட்டுக் கொண்டே வருவதால் அந்த உண்டியலில் தொகை நிறையச் சேர்ந்து விடும். அந்தப் பணத்தைக் குல தெய்வம் கோயிலுக்குப் போகச் செலவு செய்து கொள்ளுவோம்.
சந்தனக் கருப்பையா:
1. காயத்ரி மந்திரம்
2. அஷ்டோத்திரம்
3. சாலிஸா
4. கவசம்
சுந்தர மகாலிங்கம்:
1. அஷ்டோத்திரம்
2. காயத்ரி மந்திரம்
அங்காள பரமேஸ்வரி:
1. அஷ்டோத்திரம்
2. காயத்ரி மந்திரம்
இந்த ஸ்லோகங்கள் புத்தகமாக அச்சிட்டுக் (திரு. B.K. மணி ஐயர் தான் கொடுத்தார்) கொடுத்ததைத்
தினமும் பாராயணம் செய்து வருகிறோம்.
இணைப்பு: கோயில் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை இத்துடன் இணைத்து இருக்கிறேன்.
நன்றி!
|
|||||
by Sakthivel on 15 Feb 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|