|
|||||
இன்றைய ஹிந்துவில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடம் நடத்தும் “Homeschooling” பற்றிய விரிவான கட்டுரையொன்று வந்திருக்கிறது. |
|||||
இந்த ஹோம் ஸ்கூலிங்கை நான் எதிர்க்கிறேன். தங்களது குழந்தைகளை வீட்டிலேயே வைத்து பாடம் சொல்லித்தருவதற்கு என்னதான் பெற்றோர்களுக்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும், பள்ளிகள் என்னதான் மோசமான, சுரண்டல் அமைப்பு முறையைக் கொண்டதாக இருந்தாலும், ஒரு குழந்தையின் பள்ளி அனுபவத்தை எதைக் கொண்டும் பதிலீடு செய்யமுடியாது என்பது என் எண்ணம். மேலும் அதை பதிலீடு செய்துவிடக் கூடாது என்பதும் எனது கருத்து. எனக்கு குடும்ப அமைப்பு முறையின் மீது எந்த மதிப்பும் கிடையாது. மேலும் நமது இந்தியக் குடும்ப அமைப்பு முறை பத்தாம்பசலித்தனத்தை அடித்தளமாகக் கொண்டது. தனி மனிதர்கள் அடையும் பதட்டங்கள், சுதந்திரத்தின் எல்லை, ஒருவருக்கொருவர் சமூகமாக உதவிக்கொள்வது போன்றவை குறித்த அடிப்படைப் புரிதல்களுடன்தான் இதைச் சொல்கிறேன். நம்முடைய உயர் கலாச்சாரம், மேலான நாகரிகம் போன்ற illusion சமாச்சாரங்களில் எனக்கு ஆர்வம் இல்லை. அப்படி ஒன்று நம்மிடம் கொட்டிக் கிடக்கிறது என்று நம்புபவர்கள் இந்த வரியுடன் கூட இப்பதிவைக் கடந்துவிடலாம். பரஸ்பர மனவுளைச்சல் மிச்சம். இந்தியப் பெற்றோர்கள் என்றாலே ஒன்று சமூக விரோதிகள் அல்லது potential சமூக விரோதிகள் எனும் சுய விமர்சனத்துடன் இருந்தால் மட்டுமே நான் சொல்லவருவதை உங்களால் திறந்த மனதுடன் அணுகமுடியும். அவர்களுக்காக மட்டுமே நான் இதை எழுதுகிறேன். ஹிந்துவின் கட்டுரையில் கூட, வீட்டிலிருந்தபடியே படிக்கும் குழந்தைக்கு, மிகத் தெளிவாக பெற்றோர்கள் எதைப் படிக்கவேண்டும் என்கிற பட்டியல் தயாரிக்கிறார்கள் என்றெல்லாம் வருகிறது. பெற்றோர்கள் தத்தமது குழந்தைகளுடன் ஒரு குழுவாக பூங்காக்களில் சந்திக்கிறார்கள். உரையாடுகிறார்கள். பாடத்திட்டத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இதெல்லாம் மிகச் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் கடந்து, ஒரு குழந்தைக்கு புதிதாக எதுவும் அறிமுகமாக சாத்தியமில்லை என்பதே என் அவதானம். புதிதாக என்றால் அதன் கசடுகளும் சேர்ந்துதான். சமூகம் என்பது எல்லாம் சேர்ந்தது தானே. பென்சில் திருடும் சக நண்பனிலிருந்து, குஞ்சைத் தொட்டுப் பார்க்கும் அடுத்த உயர் வகுப்புப் பையன் வரை. சிறுமிகள் இதில் பையன்களை விட உக்கிரம். நமது சூழலில் குடும்பமாக ஒன்று கூடுகிறார்கள், விவாதிக்கிறார்கள் என்றால் என்ன பொருள். சாதியாக, வர்க்கமாக ஒன்று கூடுகிறார்கள் என்றுதானே பொருள். வந்துவிட்டானைய்யா சாதியை தூக்கிக்கொண்டு என்று அங்கலாய்க்காதீர்கள். பெங்களூரில், தன் வீட்டிலேயே குழந்தையை வைத்து பாடம் சொல்லிக்கொடுக்கும் மத்தியதர வர்க்க மென்பொறியாளர், எத்தகைய சாதிய, வர்க்கப் பின்னணி கொண்ட இன்னொரு குடும்பத்துடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். இப்படி ஒரு குடும்பத்தால் வீட்டில் வைத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும் என்ன என்னவித சமூகப் புரிதல் வந்துவிடும். இப்போதே கூட குழந்தைகள், இந்தப் புரிதல்களில் இருந்தெல்லாம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அது ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அவர்களை புதிய இடத்தில் புதிய ஆட்களுடன் பழக வைப்பதற்கு அச்சப்படும் சூழலே இங்கு நிலவுகிறது. நம் கண் முன்னால் கொட்டிக் கிடப்பதெல்லாம் தவறான செய்திகளே. அந்த அச்சம், மேலும் மேலும் குழந்தைகளது வெளியை சுருக்கும் ஆட்களாக நம்மை மாற்றி வைத்திருக்கிறது. Good touch, bad touch சொல்லிக்கொடுத்தே தாலியறுகிறது. இப்படியான சூழலில் குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே ஜன்னல் பள்ளிதான். அதையும் தடுப்பது சரியில்லை. இன்னொரு முக்கியமான விஷயம், குழந்தைகளுக்கு இருக்கவேண்டிய மாற்று மத நண்பர்களுடனான ஸ்நேகம். வீட்டிலேயே இருந்து படிக்கும் ஒரு ஹிந்துக் குழந்தைக்கு அவன் எந்த சாதிக்காரனாக இருந்தாலும் சரி ஒரு இஸ்லாமியன் என்பவன் மியூசியத்தில் இருக்கும் புராதன ஓவியம்தான் இல்லையா. இதுதான் ஒரு இஸ்லாமியக் குழந்தைக்கும், கிருஸ்துவக் குழந்தைக்கும். Homeschooling க்கு மாற்றாக என்னவெல்லாம் வழிமுறைகளைக் கையாளலாம் என்று யோசிக்கிறேன். வேண்டுமானால், பள்ளியின் அழுத்தத்துக்கு ஆட்படாமல் இருக்கலாம். பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்கின் போது, எங்கள் குழந்தையின் மதிப்பெண் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை, நாங்கள் உங்கள் மீது எப்போதும் புகார் சொல்ல மாட்டோம் என்று உறுதியளித்து விடலாம். Homeschooling என்று இணையத்தில் பீராய்ந்து பாடத்திட்டத்தை தேடி எடுக்கலாம். நாமே வீட்டில் ஒரு கல்விப் பட்டியல் தயாரித்து வைத்துகொண்டு அதைக் கூடுதலாகப் பயிற்றுவிக்கலாம். இதெல்லாம் உதவும். அதை விடுத்து, முழுவதும் பள்ளியைப் புறக்கணிப்பது எதிர்மறை விளைவுகளையே தரும் என்று நம்புகிறேன். சமீபகாலமாக நான் அனுமானிக்கும் மற்றொன்று, பெற்றோர்களுக்கு, குறிப்பாக அம்மாக்களுக்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது என்பதுதான். பத்தில் எட்டு குழந்தைகள் அப்பாக்களை விட இன்று அம்மாக்களைக் கண்டே அஞ்சுகின்றன. பாடம் நடத்துவது, மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு தங்களது குழந்தைகளின் திறனை மதிப்பிடுவது, பெற்றோர்கள் வாட்ஸப் குழுமங்களில் உரையாடல்களில் ஈடுபட்டு பாடங்களைப் பகிர்ந்துகொள்வது போன்ற காரியங்களில் அப்பாக்களை விட அம்மாக்களே அதிகமும் ஈடுபடுகிறார்கள். இப்போது பள்ளி செல்லும் குழந்தைகளின் அம்மாக்கள் பெரும்பாலும் 90s கிட்ஸாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பதால், அப்துல் கலாம், விவேக், அம்பானி, பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற அறிவுஜீவிகள் மீது அதீத ஏக்கத்தில் அவர்கள் இருக்கவே வாய்ப்பு. இந்த ஹோம் ஸ்கூலிங்கில் அவர்கள் மோடி பக்தர்களாகவும் இருந்துவிட்டால் அதோகதிதான். இந்தியாவை அப்புறம் நிர்மலா சீத்தாராமனே நினைத்தாலும் கூட காப்பாற்றமுடியாது.
|
|||||
by Swathi on 21 Oct 2019 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|