LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    கட்டுரை/தொடர்கள் Print Friendly and PDF

குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் வைத்த இளம் தம்பதியர்

நேர்காணல்

குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் வைத்த இளம் தம்பதியர்.. தங்கள் அனுபவத்தைப் பகிர்கிறார்கள்.. 

                                                இரமா ஆறுமுகம், டெலவேர்,அமெரிக்கா

தமிழகத்தில் உடன்குடியைப் பூர்விகமாகக் கொண்டு தற்போது சவுதி அரேபியாவில் பணிபுரியும் நண்பர் ஆமித் சா .  இவர் சமீபத்தில் பிறந்த தன் பெண் குழந்தைக்கு அவிரா என்று அழகு தமிழில் பெயர் சூட்டியுள்ளார். இது குறித்து ஒரு நேர்காணல்…

இரமா: வணக்கம் ஆமித். புரியாத மொழியில் வாயில் நுழையாத பெயர்கள் வைப்பதைப் பெற்றோர்கள் பெருமையாக நினைக்கும் இந்தக் காலத்தில் இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட நீங்கள் உங்கள் மகளுக்குத் தமிழில் பெயர் சூட்டியது மிகவும் சிறப்பு. 

உங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்று கூற முடியுமா?

 

ஆமித்: வணக்கம் இரமா. நான் படித்து முடித்து 5 வருடங்கள் பணிபுரிந்த பின்  வேலையைத் துறந்து விட்டு இரண்டு வருடங்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். அதன் பின் பணி நிமித்தமாகப் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். என் பயண அனுபவங்களால், தாய்மொழி தமிழ் மேலுள்ள பற்று பன்மடங்கு அதிகமாயிற்று. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், யாராவது அன்புச் செல்வன், கார்மேகம் என்று தமிழ்ப் பெயருடன் அறிமுகம் செய்து கொண்டால் ஏற்படும் இன்பம் மற்றும் தோழமையே தனி. அதனால் எனக்குத் திருமணமாகிக் குழந்தை பிறக்கும் போது தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

 

இரமா: உங்கள் முயற்சிக்கு உங்கள் வீட்டில் கிடைத்த ஆதரவைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

 

ஆமித்: என் மனைவியும் என்னைப் போல் சிந்திக்கக் கூடியவர்  தான். அவரிடம்  இதைப் பற்றிக் கூறிய போது உடனே ஏற்றுக் கொண்டு விட்டார். ஆனால் என் பெற்றோர்களைச் சம்மதிக்க வைப்பது தான் சற்று சவாலான காரியமாக இருந்தது. ஒரு இஸ்லாமியரின் பெயர் அரபி மொழியில் தான் இருக்க வேண்டும் என்று என் பெற்றோர்கள் கருதினார்கள். நான் உலகின் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவின்  முதல் பெண் அதிபர் திருமிகு மேகாவதி சுகர்னோபுத்ரி  இஸ்லாமியராக இருந்தாலும் பெயர் சமஸ்கிருத மொழியில் இருக்கிறது. அது மட்டுமல்ல, இன்னொரு பெரிய இஸ்லாமிய நாடான துருக்கியின் அதிபர் இஸ்லாத்தைப் பின்பற்றும் திருமிகு ரிசப் டய்யிப் எர்டோகன் பெயரும் அரபி மொழியில் இல்லை என்று எடுத்துக் கூறினேன். மத்தியக் கிழக்கு நாடுகளில் கடுமையான இஸ்லாமியச் சட்ட திட்டங்கள் ஏற்படுவதற்கு முன்னால் தமிழகத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களின் பெயர்கள் தமிழில் வழங்கியதையும் தற்போது கூட என் உறவினர்கள் சிலரின் பெயர் ராஜா முகமது மற்றும் ரோஜா என்று இருப்பதையும் எடுத்துரைத்தேன். மேலும் தமிழ்ப் பெயர் என்றாலே இந்துக் கடவுள்களின் பெயராக இருப்பதை என் பெற்றோர்கள் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு நான் ஆறுமுகம், வேலன், பிறைசூடன் போன்ற பெயர்கள் இந்துக் கடவுள்களின் பெயர்கள் தான். ஆனால் இளமாறன், கயல், அன்பு, பால் நிலா போன்ற மதம் மற்றும் கடவுள் சாராத தமிழ்ப் பெயர்களைச் சூட்டலாமே  என வாதிட்டேன். கடைசியில் நான் சொல்வதை ஏற்றுக் கொண்டு என் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்டச் சம்மதித்தனர்.

 

இரமா: எப்படி நீங்கள் உறுதியாக இருந்து நினைத்ததைச் சாதித்துக் காட்டினீர்கள் என்பதைக் கேட்கவே பெருமையாக இருக்கிறது. 

எப்படி உங்கள் மகளுக்கு அவிரா என்று பெயர் சூட்டினீர்கள். இந்தப் பெயர் பொது வழக்கில் இல்லாத பெயராக இருக்கிறதே?

 

ஆமித்: எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தமிழ்ப் பெயரைக் கண்டுபிடிப்பது அடுத்த சவாலாக இருந்தது. நாங்கள் நிலவுடன் தொடர்புடைய பெயரை வைப்பது என்று முதலில் முடிவு செய்து விட்டு நிலவுடன் தொடர்புடைய பெயர்களைத் தேடினோம். இதில் திருவள்ளுவரைத் தவிர வேறு யார் நமக்குச் சிறப்பாக உதவிட முடியும் ?  திருக்குறளில் 1117 ஆம் குறளான 

“அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
 மறுவுண்டோ மாதர் முகத்து”

என்ற குறளிலிருந்து அவிர்மதி என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம். அவிர்மதி என்ற பெயர் பழைய காலத்துப் பெயர் போல் தெரிகிறது என்று என் மனைவியும் பெற்றோர்களும் கருதியதால், ஒளி அல்லது வெளிச்சம் என்ற பொருள் தரும் வகையில் அவிரா என்று சுருக்கி என் மகளுக்குப் பெயர் சூட்டினோம். 

இரமா:  நம் தமிழ் மொழி நமது அடையாளம்.  மதம் என்பது தனி மனிதரின் நம்பிக்கை சார்ந்த விஷயம். தமிழர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டி நம் அடையாளத்தைக் காப்பது இன்றைய சூழலில் மிகவும் இன்றியமையாதது. வீட்டினரைப் புரியவைத்துத் தமிழில் பெயர் சூட்டும் உங்களைப் போன்றவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். உங்களைப் போன்றவர்களைப் பின்பற்றிப் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

 

ஆமித்: நிச்சயமாக. வலைத்தமிழுக்காக என்னை நேர்காணல் செய்ததற்கு நன்றி. வணக்கம்.

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆசிரியர் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் ஆசிரியர் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல்
இன்றைய ஹிந்துவில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடம் நடத்தும் “Homeschooling” பற்றிய விரிவான கட்டுரையொன்று வந்திருக்கிறது. இன்றைய ஹிந்துவில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடம் நடத்தும் “Homeschooling” பற்றிய விரிவான கட்டுரையொன்று வந்திருக்கிறது.
அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்களா?  உண்மையாகவா?  -மு.சிவலிங்கம் அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்களா? உண்மையாகவா? -மு.சிவலிங்கம்
மாயக் கலையும், மந்திர வித்தையும் : 03 - மந்திர வித்தை என்பது என்ன? மாயக் கலையும், மந்திர வித்தையும் : 03 - மந்திர வித்தை என்பது என்ன?
மாயக் கலையும், மந்திர வித்தையும் : 02 - மந்திரக்கலையின் வரலாறு மாயக் கலையும், மந்திர வித்தையும் : 02 - மந்திரக்கலையின் வரலாறு
மாயக் கலையும், மந்திர வித்தையும் - மாயக்கலை நிபுணர் திரு. P.K.இனியன் மாயக் கலையும், மந்திர வித்தையும் - மாயக்கலை நிபுணர் திரு. P.K.இனியன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.