பல்வேறு திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகள், சிறந்த குழந்தைகள் திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் என இரண்டு தேசிய விருதுகள் வென்ற திரைப்படம் காக்கா முட்டை.
தனுஷ், வெற்றி மாறன் தயாரிப்பில், மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் காக்கா முட்டை.
ஒரு வரி கதை :
அப்பா சிறையில் இருக்கிறார். அம்மா, பாட்டியுடன் குடிசையில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட விரும்புகிறார்கள். அவர்களால் அது முடிந்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
கூவத்தின் கரையில் வாழும் ஐஸ்வர்யாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். சிறிய குற்றம் ஒன்றிற்காக கணவன் சிறைக்குச் செல்ல, குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிட்டு, ரயில்வே தண்டவாளத்தில் கரி பொறுக்க விடுகிறாள். பாத்திர கம்பெனிக்கு வேலைக்குச் சென்று பிழைக்கிறாள்.
கணவனை மீட்க பணம் சேர்க்கிறாள். மரத்தில் ஏறி காக்கா முட்டையை எடுத்து சாப்பிடுவதால் அண்ணன் விக்னேசுக்கும், தம்பி ரமேசுக்கும் அதுவே பட்டப் பெயராகிவிடுகிறது. அவர்கள் வாழும் பகுதியில் பீட்சா கடை ஒன்று திறக்கிறார்கள். அங்கு பீட்சா சாப்பிடுவதை ஆசையுடன் பார்க்கும் இருவரும் தாங்களும் பீட்சா சாப்பிட வேண்டும் என்கிற ஆசையில் காசு சேர்க்கிறார்கள்.
ஒரு வழியாக காசு சேர்த்து கடைக்குச் சென்றால் அவர்களின் அழுக்கு உடை, கடைக்குள் செல்லத் தடையாக இருக்கிறது. இந்த தடைகளை தாண்டி சிறுவர்கள் இருவரின் பீட்சா ஆசை நிறைவேறியதா என்பது மீதி கதை.
எளிய கதையின் வாயிலாக, சென்னை நகரின் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். துர்நாற்றத்தையும், சாக்கடையாகிப்போன கூவம் நதியையும் அதன் இயல்போடு ஏற்றுக்கொண்ட அந்த மக்களின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் பின்னிக்கிடக்கும் அரசியலையும், போலித்தனத்தையும் நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார்.
பீட்சா வாங்க பணம் சேர்ப்பது ஆகட்டும், பாட்டி வீட்டிலேயே உருவாக்கி தரும் பீட்சா என ஆங்காங்கே எதார்த்தமான விஷயங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். அதிலும் பீட்சா கொண்டு வருபவரிடம் "அண்ணா.. ஒரு தடவை திறந்து காட்டுங்க வழி சொல்றேன்" என்றவுடன் திறந்து காட்டும் போது சிறுவர்கள் காட்டும் எக்ஸ்பிரஷன் இருக்கிறதே அய்யோ!
இரண்டு சிறுவர்களும் கிடைக்கும் பணக்கார நண்பன் கொடுக்கும் பீட்சாவை சாப்பிடாமல் கிளம்புவது, நாயை விற்க முனைப்பது, புதுத்துணி வாங்க இவர்கள் போடும் திட்டம் என எதுவுமே கதைக்கு மிகாமல் கதையோடு ஒன்றியே பயணிப்பது இப்படத்துக்கு மிகப்பெரிய பலம்.
தேசிய விருதே அங்கீகரித்து விட்ட ரமேஷ், விக்னேஷ் நடிப்பு பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவர்கள் கேமரா முன் தங்கள் நிஜ வாழ்க்கையை இன்னொருமுறை வாழ்ந்திருக்கிறார்கள்.
பல படங்களில் நாயகனுடன் பாடல் காட்சிகள், காதல் காட்சிகள் என நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு இந்தப் படத்தின் அம்மா கதாபாத்திரம். நிஜமாகவே சேரித் தாயாகவே வாழ்ந்திருக்கிறார். மகன்களின் சின்ன சின்ன குறும்புகளை ரசிப்பதும், அவர்களை காணாமல் தவிப்பதும், கணவனை மீட்க உழைப்பதுமாய் அந்த கேரக்டருக்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்.
ரமேஷ் திலக், யோகி பாபுவின் ஏமாற்று வாழ்க்கையும் அவர்கள் அடிக்கடி வாங்கும் பல்பும் காமெடி காட்சிகள் என்றாலும் அத்தனையும் உண்மை. ரமேஷ், விக்னேசை ேசரியின் மற்ற சிறுவர்கள் எதிர் கொள்ளும் விதம், அவர்களுக்கு இருக்கும் ரயில்வே கலாசி நண்பன் ேஜா மல்லூரி கேரக்டர், பணக்கார வீட்டு எச்சில் பீட்சாவை திண்ணாத சுயகவுரவம் போன்றவற்றை காட்சிப்படுத்தியிருப்பது சுவாரஸ்யம்.
காட்சிக்கு தகுந்தவாறு பின்னணி இசையை அமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷை கண்டிப்பாக பாராட்டியே வேண்டும். பீட்சா கடை முதலாளியே ரமேசையும், விக்னேசையும் கைகூப்பி அழைத்து பீட்சா ஊட்டிவிடுகிற நிலையை உண்டாக்கும் அந்த கடைசி 20 நிமிட திரைக்கதை அபாரம். அந்த சுவாரஸ்யம், படம் முழுவதும் இருந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.
சிம்புவை இப்படத்தில் பீட்சா கடையை திறந்து வைப்பவராகவும், இறுதியில் ஒரு காட்சியில் சிறு வசனம் பேசுவதற்கும் மட்டுமே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வழியாக சிம்பு நடிப்பில் அவரது ரசிகர்களுக்கு ஒரு படம் வெளியாகிவிட்டது.
மொத்தத்தில் காக்கா முட்டை கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்க பாஸ்....
|