LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1092 - களவியல்

Next Kural >

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும்.(தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான்.)
மணக்குடவர் உரை:
என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம், வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று; பெரிது. தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின் அது களவாயிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
கண் களவு கொள்ளும் சிறுநோக்கம்- இவள் கண்கள் எனக்குத் தெரியாமல் என்னை மறைவாகப் பார்க்கும் இடுகிய பார்வை ; காமத்தில் செம்பாகம் அன்று பெரிது- மெய்யுறு புணர்ச்சியில் சரிபாதியன்று, அதற்கும் மேற்பட்டதாம். தான் நோக்குங்கால் கவிழ்ந்து நிலம் நோக்கியும் தான் நோக்காக்கால் தன்னை நேர் நோக்கியும் வருதலாற் 'களவு கொள்ளும்' என்றும் தன்னை நோக்குவது இடுகியும் நேரங்குறுகியுமிருத்தலால் 'சிறுநோக்கம்' என்றும், அச்சிறுநோக்கம் தன்மேற் காதலை யுணர்த்துதலால் இனிப் புணர்தலுறுதிபற்றிச் 'செம்பாகமன்று பெரிது' என்றுங் கூறினான்.
கலைஞர் உரை:
கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!.
சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கண்கள் மறையும்படி மைகளைச் சுருக்கிக்கொண்டு இப்பொழுது இவள் பார்க்கிற இந்தச் சிறு பார்வைதான் காம நோயைத் தணிக்கச் செம்மையான பக்குவமுள்ள மருந்து. முன் பார்த்த பெரிய பார்வை அப்படியன்று. (அது நோயுண்டாக்கியது.)
Translation
The furtive glance, that gleams one instant bright, Is more than half of love's supreme delight.
Explanation
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).
Transliteration
Kankalavu Kollum Sirunokkam Kaamaththil Sempaakam Andru Peridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >