LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

இரண்டாம் அங்கம் : முதற்களம்

     இடம்: அரண்மனை
    காலம்: வைகறை
    [ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை]

(நேரிசை ஆசிரியப்பா)
ஜீவகன்:    சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே!
புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு
மருமா னாகமதித் ததும் அவரே;
என்றுங் குழந்தை யன்றே; மன்றல்
விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது
வரையும் மறதியா யிருந்தது தவறே
யாம்இனித் தாமத மின்றியிம் மணமே
கருமமாய்க் கருதி முடிப்பாம்;
வருமுன் கருதும் மந்திர வமைச்சே!
குடிலன்:     இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம்
அறைவதெப் படியான்? அநேக நாளாப்
பலமுறை நினைந்த துண்டிப் பரிசே;
நலமுறப் புரிசை நன்கு முடியும்
அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச்
சற்றும் மறந்தே னன்று; தனியே
கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை
விட்டுள தோஇனி வேறொரு காரியம்?
புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன்
காண்டரும் ஆண்டகை யென்றும் ஞானம்
மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந்
திரியுந் தவசிகள் உரைசெய யானுங்
கேட்டதுண்டு; மற்றவன் நாட்டிற்கு
இன்றே தூதுவ ரேவின், மங்கையை
மன்றல் செய்வான் மனதோ வன்றோ
என்றியாம் அறியலாம் எளிதில்; அறியார்
பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும்
இலை இன் றேதூ தேவுவம்
பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே
பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை?
ஜீவ:     பகருதி வௌிப்படப் பண்பாய்
நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே!
குடில:     எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்;
கண்ணகன் ஞானங் கழறும் பலவிதம்.
மணஞ்செய முதன்முதற் பேசி வருதல்
இணங்கிய ஆடவ ரிலுள் ளாரே;
அன்றி யாடவர்த் தேடி மன்றல்
சாற்றிதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்
முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும்
ஜீவ:     கூடா தஃதொரு காலும்; குடில!
கேடாம் நமது கீர்த்திக் கென்றும்;
மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்;
என்னே ஆத்திரம்? நமது
கன்னியை விழையும் மன்னருங் குறைவோ?
குடில:     குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ!
மூவரும் தேவரும் யாவரும் விரும்புங்
கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக்
கணக்கிட லாமோ? கலிங்கன் சோழன்,
கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர்
மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன்
குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற்
கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்;
வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில்
நேரான்; மகதன் தீராத் தரித்திரன்;
இன்னம் பலரும் இங்ஙனம் நமது
கன்னியை விழைந்துங் கல்வி வடிவு
குணம்பபலங் குலம்பொரு ளொன்றிவை பலவும்
இணங்கா ரேமாந் திருந்தார் அரசருள்
கொங்கன் றனக்கே இங்கிவை யாவும்
பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன்
ஆகையில் இவ்வயின் அணைந்திலன் எங்ஙனத்
திருத்தமா யவன் கருத் தறிந்திடு முன்னம்
ஏதுவுந் தூதரை? ஏதிலனன்றே.
ஜீவ:     படுமோ அஃதொரு காலும்? குடில
மற்றவன் கருத்தினை யுணர
உற்றதோ ருபாயம் என்னுள துரையே
குடில:     உண்டு பலவும் உபாயம்; பண்டே
இவனைக் கருதியே யிருந்தேன்; புதிய
கடிபுரி முடியும் முன்னர்க் கழறல்
தகுதி யன்றெனக் கருதிச்
சாற்றா தொழிந்தென் மாற்றல ரேறே.
ஜீவ:     நல்லது! குடில! இல்லை யுனைப் போல
எங்குஞ் சூழ்ச்சித் துணைவர்
பங்கமி லுபாயம் என்கொல்? பகரே.
குடில:     வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச்
செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது அதன்
அந்தமில் பெருவளம் அறியார் யாரே?
மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும்
புரையறு செல்வம் நிலைபெற வளரும்;
மழலைவண் டானம் புலர்மீன் கவர,
ஓம்பு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி
புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற
எருவையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும்
அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்
கேடகை மலர் நிழல் இனமெனக் கருதித்
தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த
ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே;
வால்வளை சூலுளைந் தீன்றவண் முத்தம்
ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற்
பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும்
கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக்
கூம்பீய நெய்தற் பூந்தளிர் குளிர
மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்;
அலமுகந் தாக்குழை யலமரும் ஆமை
நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில்
வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும்;
பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில்
நளிமீன் கோட்பறை விளிகேட் குறங்கா;
வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில்,

உப்பார் பஃறி யொருநிறை பிணிப்பர்.
இப்பெருந் தேயத் தெங்கும் இராப்பகல்
தப்பினும் மாரி தன்கடன் தவறா.
கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட
அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி

வடியும்நீ ரேநம் இடிதீர் சாரல்
நன்னீர்ப் பெருக்கமும் முந்நீர்த் நீத்தமும்
எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில்
நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்
மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருக்கால்;

வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம்
ஓமென வோஇறந் தொலிக்கப் பிரணவ
நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்;
நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும்
படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித்

தாமரைத் தூமுகை தூமமில் விளங்கா,
நிலவொளி முத்துங் கவடியும் பணமா,
அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண,
துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ்
செங்கட் போத்துங் கம்புட் கோழியுங்

கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும்
பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும்
என்றிவை பலவும் எண்ணில் குழீஇச்
சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும்,
அந்தியங் காடியின் சந்தங் காட்டித்

தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும்
பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்;
வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி
ஈறிலாச் சகரர் எண்ணில ராமெனப்
பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப்

போற்றிய குரவையே பொலிதரு மொருசார்;
சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர்
நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர்
நடுவர் களைப்பகை யடுபவ ராதியாக்
கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும்

தருமொலி பரந்தே தங்குவ தொருசார்;
குன்றென அரித்துக் குவித்திடுஞ் செந்நெற்
போர்மிசைக் காரா காரெனப் பொலியக்
கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும்
மங்கல வொலியே மல்குவ தொருசார்;

தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ்
சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை
உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி
உடல்குழைத் தெங்கும் உலப்பறு செல்வப்
பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம் நல்குவள்,

எனிலினி யானிங் கியம்புவதென்னை?
அனையவந் நாடெலாம் அரச! மற்றுனக்கே
உரித்தென அங்குள பாடையே உரைக்கும்.
சின்னா ளாகச் சேரனாண் டிடினும்
இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை

கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை.
பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே
கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம்
மணத்திற் குதவியாய் வந்ததது நன்றே.
ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக்
கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில்
நாட்டிய நமது நகர்வலி கருதி
மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி
வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம்
ஒப்புர வாகா தொழியான்; பின்னர்,
அந்நியோந் நியசமா தானச் சின்னம்
ஆகவோர் விவாக மாயின் நன்றெனக்
குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின்
மறுத்திடா நுடன்மண முடிக்குதும் நன்றே
ஜீவ:     மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம்
இதுவே! குடில! இதனால்
வதுவையும் நடந்தா மதித்தேம் மனத்தே.
குடில:     அப்படி யன்றே செப்பிய உபாயம்
போது மாயினும் ஏகுந் தூதுவர்
திறதாற் சித்தி யாகவேண் டியதே
வினைதெரிந் துரைத்தல் பெரிதல. அஃது
தனைநன் காற்றலே யாற்றல். அதனால்
அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம்
பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும்
வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந்
துணிவுங் காலமுங் களமுந் துணியுங்
குணமும், மந்திரத் தலைவர் துணைமையும்
உடையனே வினையாள் தூதனென் றோதினர்
அன்ன தூதரை யனுப்பின் மன்னவ!
உன்ன தெண்ண முறுமே யுறுதி;
அன்றெனி லன்றே; அதனால்
வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே.
ஜீவ:     அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக்
குரிமை பூண்டநின் அருமை மகன்பல
தேவனே யுள்ளான். மேவலர் பலர்பால்
முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான்
அன்னவன் றன்னை அமைச்ச
ஏவிடத் தயையா யிசைவாய் நீயே.
குடில:     ஐய மதற்கென்? ஐய என்னுடல்
ஆவியும் பொருளும்மேவிய சுற்றமும்
நினதே யன்றோ! உனதே வலுக்கியான்
இசையா தொழிவானோ! வசையறு புதல்வன்
பாலியன் மிகவும்; காரியம் பெரிது.
ஜீவ:     பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம்
விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில்
நலமா யுரைப்பன் நம்பல தேவன்
வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது
உரைத்தனர் முனிவர், உதிய னவைக்கே
யோசனை யின்றி நடேசனை யேவில்
நன்றாய் முடிப்பனிம் மன்றல்
என்றார் அவர்க்குத் திருந்த வாறே!
குடில:     குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர்
அறிந்ததவ் வளவே யாகும். ஏழை!
துறந்தா ரறிவரோ தூதின் தன்மை?
இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும்
எல்லா மில்லை; ஆதலால் எவருங்
கட்டுக கோவில், வெட்டுக ஏரி
என்று திரிதரும் இவர்களோ நமது
நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்?
இராச்சிய பாண சூத்திரம் யார்க்கும்
நீச்சே யன்றி நிலையோ? நடேசன்!
யோசனை நன்று! நடேசன்! ஆ!ஆ!
ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர்
உள்ளம் மெள்ள உண்டு மற்றவர்
அம்மை யப்பரை அணுகா தகன்று
தம்மையும் மறந்தே தலைதடு மாறச்
செய்யுமோர் சேவக முண்மற் றவன்பால்
ஐயமொன் றில்லை. அதனால் மொய்குழல்
மாதர்பாற் றூதுசெல் வல்லமை கூடும்.
பித்த னெப்படிச் சுந்தரர்க்கு
ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே!
முனிவரும் வரவர மதியிழந் தனரே.
ஜீவ:     இருக்கும். இருக்கும். இணையறு குடில!
பொருக்கெனப் போயும் புதல்வற் குணர்த்தி
விடுத்திடு தூது விரைந்து;
கால விளம்பனஞ் சாலவுந் தீதே
குடில:     ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில்
தூது செல்வான் தொழுதுன் அநுமதி
பெறவரு வான்நீ காண்டி
இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே!
[குடிலன் போக]
ஜீவ:     (தனதுள்)
நல்லது! ஆ!ஆ! நமது பாக்கியம்
அல்லவோ இவனைநாம் அமைச்சனாய்ப் பெற்றதும்?
என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை?
[சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க]
(பிரபுக்களை நோக்கி)
வம்மின் வம்மின் வந்து சிறிது
கால மானது போலும் நமது
மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு
இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும்
அருந்திறற் சூழ்ச்சியன்.
முதற்பிரபு:     அதற்கெ னையம்
சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி
இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர்
எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ!
வல்லவன் யாதிலும்.
நாரா:     (தனதுள்)
    நல்லது கருதான்
    வல்லமை யென்பயன்
2ம் பிரபு:     
    மன்னவ! அதிலும்
    உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில்
    வைத்த பரிவும் பக்தியு மெத்தனை!
    குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட
    ஆஞ்ச னேயனோ அறியேம்!
நாரா:     (தனதுள்)
வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன்
விடுப்பனோ விடமென? குடிப்பனே!
சேவகன்:     
    கொற்றவ!
    நேற்று மாலையில் நின்றிரு வாணையிற்
    சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ
    சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால்
    தந்தன னெக்கித் தரள மாலை.
நாரா:     (தனதுள்)
எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம்.
ஜீவ:     பார்மின், பார்மின், நம்மிசை வைத்த
ஆர்வமும் அன்பும் ஆ!ஆ!
நாராள்     (தனதுள்)
பேசா திருக்கி லேசுமே நம்மனம்
குறியாற் கூறுவம்; அறிகி லறிக.
[நாராயணன் செல்ல]
3ம் பிரபு:    சாட்சியு மொகண் காட்சியாம் இதற்கும்!
அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ?
எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி
பத்தி பண்ணுநர் சுமித்திரை பயந்த
புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய
எத்திறத் தவரும் இறைவ! இவனுக்
கிணையா தன்னய மெண்ண்ணாப் பெருமையில்?
[நாராயணன் மூக்கிற் கரி தேய்த்து வர]
ஜீவ:     (நாராயணனை நோக்கி)
ஏ!ஏ! நாரணா கரியா யுன்மூக்
கிருந்தவா றென்னை? ஏ!ஏ! இதுவென்!
நாரா:     மூக்கிற் கரிய ருளரென நாயனார்
தூக்கிய குறளின் சொல்படி எல்லாம்
உள்ளத்தின் னருகவ ரில்லா ராவரோ?
ஜீவ:     ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்?
யாவரும்:    ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ!
[யாவரும் நகைக்க]
ஜீவ:     (பிரபுக்களை நோக்கி)
நாரணா! நீயும் நடேசன் தோழனே
நல்லது விசேடமொன் றில்லை போலும்.
முதற்பிரபு:    இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின்
வாகுவே தாங்க! மங்கலம் வரவே!
[பிரபுக்கள் போக]
ஜீவ:     நாரா யணா! உனக் கேனிப் பித்து?
தீரா இடும்பையே தௌிவி லையுறல்.
நாரா:     எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை
கோடிய மாந்தர் கோடியின் மேலாம்
ஜீவ:     எதற்குந் திருக்குறள் இடந்தரும்! விடுவிடு.
விரும்பி யெவருந் தின்னுங்
கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே.
[அரசனும் சேவர்களும் போக]
நாரா:     ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன்,
உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான்.

(தனிமொழி)
வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை
யுளத்தான்! களங்கம் ஓரான், குடிலனோ
சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான்
ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந்
தன்னயங் கருதி யன்றி மன்னனைச்

சற்று மெண்ணான் முற்றுஞ் சாலமா
நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா
வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை
நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார்
இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர்

வடித்து வடித்து மாற்றொலி போன்றே
தடுத்து மெம்மை சாற்றுவர் யாரே?
என்னே யரசர் தன்மை? மன்னுயிர்க்
காக்கமும் அழிவும் அவர்தங் கடைக்கண்
நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப்

பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம்
உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ?
கருப்போ தேனோ என்றவர் களிப்பது
நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ?
விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை

கொட்டிற் கோடி பிறழுமே கொட்டும்
வாலாற் றேளும், வாயாற் பாம்புங்
காலும் விடமெனக் கருதி யாவும்
அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து
பாரா ராளும் பாரென் படாவே?

யாரையான் நோவ! அதிலுங் கொடுமை!
அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ?
உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண
ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம்
மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங்

கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்?
குடிலன் செய்யும் படிறுகள் வௌியாப்
பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க
என்றால், நோக்க நின்றார் நிலையில்
தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ்

சான்றோடு காட்டுந் தன்மைய வலவே
சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை
காட்டினுங் கீறிய வரையலாற் காணார்
என்செய? இனியான் எப்படிச் செப்புவன்
நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ்

சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும்
ஓரில் யாதோ பெரிய உறுகண்
நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும்
என்னே யொருவன் வல்லமை!
இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே.
[நாராயணன் போக]

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.