LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-125

3.125.திருநல்லூர்ப்பெருமணம் 
பண் - அந்தாளிக்குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது 
சுவாமிபெயர் - சிவலோகத்தியாகேசர். 
தேவியார் - நங்கையுமைநாயகியம்மை. 
4137 கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே 3.125.1
அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார். 
4138 தருமண லோதஞ்சேர் தண்கட னித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயு நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர் பாகங் [கொண்டானே 3.125.2
கடலலைகள் அழித்துவிடாமல் வைத்துள்ள இயற்கைக் கரையிலுள்ள மணலோடு, பதுமை போன்ற சிறுமியர் அலைகள் வீசிக்குவித்த, குளிர்ச்சி பொருந்திய கடலில் விளைந்த முத்துக்களையே, பருத்த மணலாகக் கொண்டு சிற்றில் இழைத்து, சிறுசோறிட்டு, நறுமணம் கமழும் மலர்களை வைத்துக் கொண்டு, பாவைகட்கு மணம் செய்து விளையாடுகினற சிறப்பினையுடையது நல்லூர்ப் பெருமணம். அப்பெருமணத் திருக்கோயிலின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமான் தன்னிற் பிரிவில்லா உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டருளினன். 
4139 அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் 
றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே 3.125.3
மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி காரணமாக, அனைத்துயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த சிந்தையராவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நற்றவத்தைச் செய்வர். அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் கோயிலில் விரும்பி வீற்றிந்தருளுகின்ற, அனைத்துயிர்கட்கும் இன்பம் தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத் தொண்டு செய்வர். 
4140 வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே 3.125.4
சிவபெருமான் வலிமையான புலியின் தோலை ஆடையாக உடுத்துள்ளவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவர். விரிந்த கோவணத்தை அணிந்தவர். அப்பெருமான் சிவநெறி ஒழுகும் நற்பண்பாளர்களால் தொழப்படும் வண்ணம் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் வாழ்க்கையையுடையவர். இதுவே புண்ணியரான சிவபெருமானின் இயல்பாகும். 
4141 ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே 3.125.5
இறைவனே! நீவிர் இடபத்தை விரும்பி வாகனமாகக் கொண்டுள்ளீர். நெருப்பேந்திச் சுடுகாட்டில் ஆடுகின்றீர். திருவெண்ணீற்றினை விரும்பிப் பூசியுள்ளீர். வரிசையாக அழகுடன் விளங்கும் தேன் துளித்து நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளீர். செல்வம் பெருகும் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்துள்ளீர். 
4142 சிட்டப்பட் டார்க்கௌ யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது
நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தி ராலெம் பிரானிரே 3.125.6
சிவபெருமான் நியமம் தவறாது வழிபடுபவர்கட்கு எளியர். வேடுவக் கோலத்தில் நெற்றிப்பட்டம் கட்டிய தலையினை உடையவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது நாட்டியங்களின் கொட்டு வாத்திய ஓசையும், திருவிழா முதலிய கொண்டாட்டங்களின் ஓசையும் ஒழியாத, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலாகும். எம் தலைவராகிய நீர் ஏனைய தலங்களிலும் விரும்பி வீற்றிருக்கின்றீர். 
4143 மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே 3.125.7
இறைவன் மழைமேகம் போன்ற இருண்ட திருநீல கண்டத்தன். எட்டுத் திருத்தோள்களை உடையவன். வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டவன். பதுங்கியிருந்து பாயும் தன்மையுடைய புலியினை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தவன். அதன்மேல் பாம்பைக் கச்சாக இறுகக் கட்டியவன். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத் தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில், உயிர்கள் போகம் துய்க்கும் பொருட்டுப் போகவடிவில் விளங்குகின்றான். மேலும் மன்னுயிர்கள் நற்றவம் புரிந்து திருவடிப் பேறெய்தும் பொருட்டு யோகத்தையே புரிந்தருள்வன். 
4144 தக்கிருந் தீரன்று தாளா லரக்கனை
உக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே 3.125.8
இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த முழுமுதல் தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில் இலங்கையை ஆண்ட அசுரனான இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்றபோது, உயர்ந்த அம்மலையின்கீழ் அவன் உடல் குழைந்து நொறுங்கும்படி சிரித்துக் கொண்டிருந்நீர். இந்நாளில் திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர். அடியார்களாகிய நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!. 
4145 ஏலுந்தண் டாமரை யானு மியல்புடை
மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே 3.125.9
குளிர்ச்சி பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய மாண்பை ஒரு சிறிதும் அறிந்திலர். இறைவனின் அடிமுடியைத் தேட முயன்றும் காண்கிலர். நால்வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானே அவ்வேதங்களின் உட்பொருளாய் விளங்குகின்றார் என நல்லோர் நுவல்வர். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் நிலையாக வீற்றிருந்தருளுகின்றார். 
4146 ஆத ரமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமண மேவிய
வேதன தாள்தொழ வீடௌ தாமே 3.125.10
இறைவனை உணரும் அறிவில்லாத சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோர்கள் கூறும் புன்னெறியைக் கேட்டு, நன்னெறியாம் சித்தாந்தச் சிவநெறிக்கண் இணங்காது பிணங்கி நிற்கும். பெற்றியீர்! வாருங்கள். அனைத்துயிர்க்கும் தலைவன் சிவபெருமான். திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வேதங்களின் பொருளான சிவபெருமானின் திருவடிகளை வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் வீடுபேறு எளிதில் கிட்டும். 
4147 நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே 3.125.11
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்திப்பேற்றை அருளும், திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம் வாய்க்கும். 
திருச்சிற்றம்பலம்
மூன்றாம் திருமுறை முற்றும்.

3.125.திருநல்லூர்ப்பெருமணம் 
பண் - அந்தாளிக்குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது 
சுவாமிபெயர் - சிவலோகத்தியாகேசர். தேவியார் - நங்கையுமைநாயகியம்மை. 

4137 கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்திலசொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்நல்லூர்ப் பெருமண மேயநம் பானே 3.125.1
அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார். 

4138 தருமண லோதஞ்சேர் தண்கட னித்திலம்பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்வருமணங் கூட்டி மணஞ்செயு நல்லூர்ப்பெருமணத் தான்பெண்ணோர் பாகங் [கொண்டானே 3.125.2
கடலலைகள் அழித்துவிடாமல் வைத்துள்ள இயற்கைக் கரையிலுள்ள மணலோடு, பதுமை போன்ற சிறுமியர் அலைகள் வீசிக்குவித்த, குளிர்ச்சி பொருந்திய கடலில் விளைந்த முத்துக்களையே, பருத்த மணலாகக் கொண்டு சிற்றில் இழைத்து, சிறுசோறிட்டு, நறுமணம் கமழும் மலர்களை வைத்துக் கொண்டு, பாவைகட்கு மணம் செய்து விளையாடுகினற சிறப்பினையுடையது நல்லூர்ப் பெருமணம். அப்பெருமணத் திருக்கோயிலின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமான் தன்னிற் பிரிவில்லா உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டருளினன். 

4139 அன்புறு சிந்தைய ராகி யடியவர்நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார்துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே 3.125.3
மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி காரணமாக, அனைத்துயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த சிந்தையராவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நற்றவத்தைச் செய்வர். அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் கோயிலில் விரும்பி வீற்றிந்தருளுகின்ற, அனைத்துயிர்கட்கும் இன்பம் தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத் தொண்டு செய்வர். 

4140 வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பதுகொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே 3.125.4
சிவபெருமான் வலிமையான புலியின் தோலை ஆடையாக உடுத்துள்ளவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவர். விரிந்த கோவணத்தை அணிந்தவர். அப்பெருமான் சிவநெறி ஒழுகும் நற்பண்பாளர்களால் தொழப்படும் வண்ணம் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் வாழ்க்கையையுடையவர். இதுவே புண்ணியரான சிவபெருமானின் இயல்பாகும். 

4141 ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றைநாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்வேறுகந் தீருமை கூறுகந் தீரே 3.125.5
இறைவனே! நீவிர் இடபத்தை விரும்பி வாகனமாகக் கொண்டுள்ளீர். நெருப்பேந்திச் சுடுகாட்டில் ஆடுகின்றீர். திருவெண்ணீற்றினை விரும்பிப் பூசியுள்ளீர். வரிசையாக அழகுடன் விளங்கும் தேன் துளித்து நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளீர். செல்வம் பெருகும் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்துள்ளீர். 

4142 சிட்டப்பட் டார்க்கௌ யான்செங்கண் வேட்டுவப்பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவதுநட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்திட்டப்பட் டாலொத்தி ராலெம் பிரானிரே 3.125.6
சிவபெருமான் நியமம் தவறாது வழிபடுபவர்கட்கு எளியர். வேடுவக் கோலத்தில் நெற்றிப்பட்டம் கட்டிய தலையினை உடையவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது நாட்டியங்களின் கொட்டு வாத்திய ஓசையும், திருவிழா முதலிய கொண்டாட்டங்களின் ஓசையும் ஒழியாத, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலாகும். எம் தலைவராகிய நீர் ஏனைய தலங்களிலும் விரும்பி வீற்றிருக்கின்றீர். 

4143 மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமைபாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்தநாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்லபோகத்தன் யோகத்தை யேபுரிந் தானே 3.125.7
இறைவன் மழைமேகம் போன்ற இருண்ட திருநீல கண்டத்தன். எட்டுத் திருத்தோள்களை உடையவன். வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டவன். பதுங்கியிருந்து பாயும் தன்மையுடைய புலியினை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தவன். அதன்மேல் பாம்பைக் கச்சாக இறுகக் கட்டியவன். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத் தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில், உயிர்கள் போகம் துய்க்கும் பொருட்டுப் போகவடிவில் விளங்குகின்றான். மேலும் மன்னுயிர்கள் நற்றவம் புரிந்து திருவடிப் பேறெய்தும் பொருட்டு யோகத்தையே புரிந்தருள்வன். 

4144 தக்கிருந் தீரன்று தாளா லரக்கனைஉக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டுநக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே 3.125.8
இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த முழுமுதல் தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில் இலங்கையை ஆண்ட அசுரனான இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்றபோது, உயர்ந்த அம்மலையின்கீழ் அவன் உடல் குழைந்து நொறுங்கும்படி சிரித்துக் கொண்டிருந்நீர். இந்நாளில் திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர். அடியார்களாகிய நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!. 

4145 ஏலுந்தண் டாமரை யானு மியல்புடைமாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறைநாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே 3.125.9
குளிர்ச்சி பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய மாண்பை ஒரு சிறிதும் அறிந்திலர். இறைவனின் அடிமுடியைத் தேட முயன்றும் காண்கிலர். நால்வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானே அவ்வேதங்களின் உட்பொருளாய் விளங்குகின்றார் என நல்லோர் நுவல்வர். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் நிலையாக வீற்றிருந்தருளுகின்றார். 

4146 ஆத ரமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்நாதனை நல்லூர்ப் பெருமண மேவியவேதன தாள்தொழ வீடௌ தாமே 3.125.10
இறைவனை உணரும் அறிவில்லாத சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோர்கள் கூறும் புன்னெறியைக் கேட்டு, நன்னெறியாம் சித்தாந்தச் சிவநெறிக்கண் இணங்காது பிணங்கி நிற்கும். பெற்றியீர்! வாருங்கள். அனைத்துயிர்க்கும் தலைவன் சிவபெருமான். திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வேதங்களின் பொருளான சிவபெருமானின் திருவடிகளை வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் வீடுபேறு எளிதில் கிட்டும். 

4147 நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானைஉறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்கறும்பழி பாவ மவல மிலரே 3.125.11
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்திப்பேற்றை அருளும், திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம் வாய்க்கும். 

திருச்சிற்றம்பலம்

மூன்றாம் திருமுறை முற்றும்.

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.