LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

முப்பெரும் பாடல்கள் - கண்ணன் பாட்டு பகுதி - 3

10. கண்ணன்-என் காதலன்
 
செஞ்சுருட்டி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சத் துடித்த தடீ!

கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ!
பாயின் மிசை நானும்-தனியே
படுத் திருக்கையி லே,
வாயினில் வந்ததெல்லாம்-சகியே!
தாயினைக் கண்டாலும்-சகியே!
சலிப்பு வந்த தடீ!

வளர்த்துப் பேசிடு வீர்;
நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே!
நுங்க ளுறவையெல் லாம்.
உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்த தடீ!

கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்த தில்லை.
பாலுங் கசந்ததடீ!-சகியே!
படுக்கை நொந்த தடீ!

நாலு வயித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலந்துச் சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.
கனவு கண்டதிலே-ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றா மல்,
இனம் விளங்க வில்லை-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில மட்டிலுமே -புதிதோர்
மகிழ்ச்சி கண்ட தடீ!

உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே!
அழகு வந்த தடீ!

எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!

எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்ற தடீ!

11. கண்ணன் -என் காதலன்

உறக்கமும் விழிப்பும்.
நாத நாமக்கிரியை-ஆதி தாளம்
ரசங்கள் :பீபத்ஸம்.சிருங்காரம்
 நேரம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி-உங்கள்
நினைப்புத் தெரியவில்லை,கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளி ரவிலே-என்ன
தூளி படுகுதடி,இவ்விடத்திலே?
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்-அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்ததென்று வார்த்தை சொல்கிறீர்,-மிகச்
சலிப்புக் தருகுதடி சகிப் பெண்களே!

நானும் பலதினங்கள் பொறுத்திருந்தேன்,-இது
நாளுக்கு நாளதிக மாகிவிட் டதே;
கூன னொருவன் வந்ததிந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்
அருகினி லோடஇவள் மூர்ச்சை யுற்றதும்
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும்.
பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்த
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்
கொத்துக் கனல்விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்ததும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும்.
எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!

என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்;
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே;
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்லுவீர்.
(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)
கண்கள் உறங்கவொரு காரண முண்டோ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?

பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்;
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்.
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே?

12. கண்ணன்-என் காதலன் (காட்டிலே தேடுதல்)

ஹிந்துஸ்தானி தோடி-ஆதி தாளம்
ரசங்கள்-பயாநகம், அற்புதம்
திக்குத் தெரியாத காட்டில்-உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.
மிக்க நலமுடைய மரங்கள்,-பல
விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு   (திக்குத்)

நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு  (திக்குத்)

ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம்
அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு,-ஒரு  (திக்குத்)

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்
சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன்
முன்னின் றோடுமிள மான்கள்-இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு    (திக்குத்)

கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு
கண்ணும் துயில்படர லானேன்-ஒரு
வேல்கைக் கொண்டுகொலை வேடன்-உள்ளம்
வெட்கங் கொண்டொழிய விழித்தான்-ஒரு    (திக்குத்)

பெண்ணே உனதழகைக் கண்டு -மனம்
பித்தங் கொள்ளு’ தென்று நகைத்தான்-அடி
கண்ணே,எனதிருகண் மணியே-உனைக்
கட்டித் தழுவமனங் கொண்டேன்.       (திக்குத்)

சோர்ந்தே படுத்திருக்க லாமோ?-நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவை
தேர்ந்தே கனிகள்கொண்டு வருவேன்-நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.         (திக்குத்)

என்றே கொடியவிழி வேடன்-உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான்-தனி
நின்றே இருகரமுங் குவித்து-அந்த
நீசன் முன்னர்இவை சொல்வேன்;          (திக்குத்)

அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன்
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்தன்
கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?
“ஏடீ,சாத்திரங்கள் வேண்டேன்-நின
தின்பம் வேண்டுமடி,கனியே!-நின்தன்
மோடி கிறுக்குதடி தலையை,-நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போல
காதா லிந்தவுரை கேட்டேன்-அட
கண்ணா’வென் றலறி வீழ்ந்தேன்-மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே-என்தன்
போதந் தெளியநினைக் கண்டேன்.
கண்ணா!வேடனெங்கு போனான்?-உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ?-மணி
வண்ணா! என தபயக் குரலில்-எனை
வாழ்விக்க வந்த அருள் வாழி!

13. கண்ணன்-என் காதலன் (பாங்கியைத் தூது விடுத்தல்)

தங்கப் பாட்டு மெட்டு
ரசங்கள்: சிரங்காரம்,ரௌத்ரம்

1. கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் (அடி தங்கமே தங்கம்)
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்-பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.

2. கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்-என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்

3. சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?-அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ

4. மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே-கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.

5. ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.

6. சோர மிழைத்திடையர் பெண்களுடனே-அவன்
சூழ்ச்சித் திறமை ப காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

7. பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதிவந்திட்டான்-அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே

8. நேர முழுதிலுமப் பாவி தன்னையே-உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்.

14. கண்ணன்-என் காதலன்
 
(பிரிவாற்றாமை)
ராகம்-பிலஹரி

1. ஆசை முகமறந்து போச்சே-இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகமறக்க லாமோ?

2. கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில்
கண்ண னழழுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு காணில்-அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்

3. ஓய்வு மொழிதலுமில்லாமல்-அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்த
மாயன் புகழினையெய் போதும்.

4. கண்ணன் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போல-ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

5. தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த
வைய முழுதுமில்லை தோழி!

6. கண்ணன் முகமறந்து போனால்-இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய்-இனி
வாழும் வழியென்னடி தோழி?

15. கண்ணன்-என் காந்தன்
 
வராளி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்

1. கனிகள் கொண்டுதரும்-கண்ணன்
கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும்-பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான்-கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே-வண்ணம்
இயன்ற சவ்வாதும்.

2. கொண்டை முடிப்பதற்கே-மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே-கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே-செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன்
பேசருந் தெய்வமடி!

3. குங்குமங் கொண்டுவரும்-கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம்-தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல்-முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ!-பின்னோர்
வருத்த மில்லையடீ!

16. கண்ணம்மா-என் காதலி (காட்சி வியப்பு)

செஞ்சுருட்டி-ஏகதாளம்
ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம்

1. சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
நக்ஷத் திரங்க ளடி!

2. சோலை மல ரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது
நெஞ்சி லலைக ளடி!
கோலக் குயி லோசை-உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.

3. சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-இது பார்.
கன்னத்து முத்த மொன்று!

17. கண்ணம்மா-என் காதலி
 
(பின்னே வந்து நின்று கண் மறைத்தல்)
நாதநாமக்கிரியை-ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். 1

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன். 2

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவி“என்ன செய்தி சொல்என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதிஎன்றாள். 3

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன். 4

18. கண்ணம்மா-என் காதலி
 
(முகத்திரை களைதல்)
நாதநாமக்கிரியை -ஆதி தாளம்
சிருங்கார ரசம்
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ!-பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்-பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ
ஓரிரு முறைகண்டு பழகிய பின்-வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்-வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே -கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ? 2

19. கண்ணம்மா-என் காதலி
 
(நாணிக் கண் புதைத்தல்)
நாதநாமக்கிரியை-ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை-இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன்-நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எநனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! 1

கன்னி வயதிலுனைக் கண்ட தில்லையோ?-கன்னங்
கன்றிச் சிவக்க முத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மாகநம்மள் எண்ணுவ தில்லை-இரண்
டாவுயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? துகில்
பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ
என்னைப் புறமெனவுங் கருதுவதோ-கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? 2

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்-சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ?
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே-விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினையச் சோதி கவ்வுங்கால்-அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்;-அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன் றடீ!-மிக
நெடும்பண்டைக் காலமுதல் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை,-அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்-கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான். 4

முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன்-ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில மிகவல்லர் காண்;-அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில்
ஏதுக்கு நாண முற்றுக் கண்புதைப்பதே? 5

20. கண்ணம்மா-என் காதலி
 
(குறிப்பிடம் தவறியது)
செஞ்சுருட்டி-ஆதிதாளம்
சிருங்கார ரசம்
தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி!  1

மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?  2

கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான்
அங்கு வருதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள்-எதற் காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.  3
 
கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி!  4

21. கண்ணம்மா-என் காதலி

யோகம்

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா! 2

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!  3

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!  6

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா! 8

22. கண்ணன்-என் ஆண்டான்

புன்னாகவராளி-திஸ்ர ஏகதாளம்
ரசகங்கள் : அற்புதம்,கருணை
தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பார முனக் காண்டே!
ஆண்டே!-பாரமுனக் காண்டே!  1

துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குறித்து நின்
ஆணை வழி நடப்பேன்;
ஆண்டே-ஆணைவழி நடப்பேன்.  2

சேரிமுழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள் பாடிடுவேன்?
பேரிகை கொட்டித் திசைக ளதிர நின்
பெயர் முழுக்கிடுவேன்;
ஆண்டே!-பெயர் முழக்கிடுவேன்.  3

பண்ணைப் பறையர்தங் கூட்டத்தி லேயிவன்
பாக்கிய மோங்கி விட்டான்;
கண்ணனடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற் றங்கு வந்தேன்;
ஆண்டே! காதலுற் றிங்கு வந்தேன்; 4

காடு கழனிகள் காத்திடுவன்,நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே!-பக்குவஞ் சொல்லாண்டே! 5

தோட்டங்கள் மொத்திச் செடி வளர்க்கச் சொல்லிச்
சோதனை போடாண்டே!
காட்டு மழைழக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
கட்டியடி யாண்டே!
ஆண்டே!-கட்டியடி யாண்டே!  6

பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே?
உபகாரங்கள்-ஆகிட வேண்டுமையே! 7

மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி
வாங்கித் தரவேணும்;
தானத்துகுச் சில வேட்டிகள் வாங்கித்
தரவுங் கடனாண்டே!
சில வேட்டி-தரவுங் கடனாண்டே! 8

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
யொரு சில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் -தொலைத்திட வேண்டுமையே! 9

பேயும் பிசாசுந் திருடரு மென்றன்
பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும்-வழிசெய்ய வேண்டுமையே! 10

23. கண்ணம்மா-எனது குல தெய்வம்
 
ராகம்-புன்னாக வராளி
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
சரணங்கள்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று  (நின்)
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று  (நின்)
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்  (நின்)
துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட  (நின்)
நல்லதுதீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!      (நின்)

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural 3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.