டீசலுக்கு பதிலாக நாகை மாணவர்கள் கண்டுபிடித்த மாற்று எரிபொருள், இவர்கள் அண்ணா பல்கலைகழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள்.
தரங்கம்பாடி, ஹைடெக் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் முரளி ஆகியோருடன், திருக்குவளை அண்ணா பல்கலைகழகத்தில் இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வரும் வெற்றிவேல், விக்னேஷ், மகேஷ்ராஜா, பிரவீன்குமார் ஆகிய 4 மாணவர்கள் இணைந்து வாகனங்களுக்கான இந்த புதிய எரிபொருளை கண்டறிந்துள்ளனர்.
மாணவர்கள் கூறுகையில்,” இந்த புதிய எரிபொருளில், 80 சதவீதம் சுத்திகரிக்கப்படாத தவிடு எண்ணெய் மற்றும் 20 சதவீதம் டீசல் என்ற அளவில் கலக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருளை பயன்படுத்தும்போது, ஒரு லிட்டரில் 45 கிமீ தூரம் செல்ல முடியும்.
85 சதவீதம் தூய்மையான இந்த எரிபொருளை தயாரிக்க குறைவான செலவு பிடிக்கிறது. எனவே, ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்க முடியும். டீசலைவிட 85 சதவீதம் குறைவாக புகை வெளியாகும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.
இந்த எரிபொருள் எஞ்சின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கச் செய்யும். எந்தவொரு டீசல் எஞ்சினிலும் இந்த எரிபொருளை பயன்படுத்தலாம். இதற்கென எஞ்சினில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை, என்று தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பை வணிக ரீதியில் சாத்தியமாக்கவும், ஊக்குவிக்கவும் அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் நெல் பயிரிடப்படுவதால், தவிடு மலிவாக கிடைக்கும். எனவே, எரிபொருள் உற்பத்தி தங்கு தடையின்றி செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு அரசு உதவி கிடைத்தால் பொருளாதார ரீதியிலும் மேம்பாடு ஏற்பட வழி பிறக்கும்.
|