|
||||||||
வளர்ப்புப் பிராணிகளுக்கு நடுகல் |
||||||||
![]() கல்லிலே கலைவண்ணம் கண்டவன் தமிழன். தமிழனின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டிற்கு ஆதாரமாக திகழ்பவை தமிழன் கட்டிய கோயில்கள், குளங்கள் என பல இருந்தாலும் அவற்றில் எஞ்சியிருப்பது கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களும், நடுகற்களும் தான். சவ அடக்கமுறைகளில் ஒன்றான வீரக்கற்கள் அல்லது நடுகற்கள் தொடர்பு கொண்டவையாகும். சங்க இலக்கியங்கள் நடுகற்களைக் குறிப்பிட்டாலும் சங்ககால நடுகல் ஒன்று கூட இல்லை. அவையாவும் கால வெள்ளத்தில் அழிந்துவிட்டன. அறப்போராகவும், மறப்போராகவும் இருந்த போர்கள் தற்போது வஞ்சகப்போர்களாக-பயங்கரவாத போர்களாக -பயனற்ற முடிவில்லாத போர்களாக மாறிவருகிறது. பண்டைத் தமிழகத்தில் போர்களுக்கு ஒரு நெறிமுறை வகுத்து வீரமும் விவேகமும் தம் இரு கண்களாக தமிழர் கருதி வந்தனர். மாண்ட தசரதனுக்குச் சிலை செய்து வைத்ததும் இறந்த சீதைக்குத் தங்கத்தில் பிரதிமம் செய்து வைத்ததும் நீத்தார் நினைவைப் போற்றும் செயலாகும். விக்கிரம ஆண்டு என்பது கி.பி. 57 ல் தொடங்குகிறது. விக்கிரமன் இறந்த ஆண்டு என்பது சமண சமய வழக்காறாகும். இராவணலீலா என்பது இராவணன் மாண்ட நினைவு நாளைக் குறிப்பிடும். நரகாசுரன் மாண்ட நாள் தீபாவளி என்றும் கூறுவர். வர்த்தமான மகாவீரர் மண்ணுல வாழ்வு நீத்த நாளே தீபாவளி. இறந்தவர்களுக்கு நினைவுக்கற்கள் எடுக்காமல் விட்டுவிட்டால் அடுக்கடுக்காதத் துன்பங்கள் வரும் என்று மக்கள் நம்பினர். அரசமரம், அத்திமரம், நீர்நிலை அல்லது இறந்த இடத்தில் நினைவுக் கல் எழுப்பினர். ஒரு சிலர் தற்போதும் எழுப்புகின்றனர். அவ்வாறு மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் விலங்குகளுக்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. நாய், எருது, குதிரை, கிளி, யானை ஆகிய நன்றியுள்ள ஜீவன்களுக்கும் நினைவுக்கற்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் செஞ்சிவட்டம் கடலிலியில் தேசிங்குராஜனுக்கும் அவன் குதிரைக்கும் நினைவுக்கற்கள் உள்ளன. இதனையே வள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்று கூறுகிறார். சதாரண போர்வீரன் நடுகல் சிற்பங்களில் தேவமங்கையரால் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது போல் காட்டப்பட்டுள்ளனர். கிளிக்கு எடுத்த நினைவுக்கல் ஜெயகேசி மன்னனாகிய கதம்ப மன்னன் கிளி மீது கொண்டிருந்த பாசத்தால் தீயில் விழுந்து உயிர்விட்டுள்ளான். ஜெயகேசியின் செல்லக்கிளி, மன்னன் உணவு அருந்தும்போது தானும் உடனிருந்து உணவினை உண்ணும். ஒரு நாள் அரசனுடைய இருக்கைக்கு கீழே பூனை ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்ட கிளி அச்சமடைந்தது. மன்னன் பலமுறை ஆசையாக அழைத்தும் அந்தக் கிளி வரவில்லை. இறுதியாக அரசன் கோபத்துடன் கத்தினான். கிளிக்கு எந்த இடையூறு வந்தாலும் அதற்கான பொறுப்பை ஏற்பதாகக் கூறி இறுதியாக கிளியை அழைத்தான். கிளியும் கூண்டிலிருந்து வெளியே வந்தது. அப்போது மன்னன் இருக்கையின் கீழ் இருந்த பூனை திடீரென்று பாய்ந்து சென்று கிளியைக் கொன்று விட்டது. நிகழ்ந்த சம்பவத்தைக் கண்ணெதிரே கண்ட அரசன் தான் உறுதியளித்ததற் கிணங்க உயிர்விட முனைந்து தீயில் விழுந்தான்.
தமிழகத்தில் குரிசிலாப்பட்டு கிராமத்தில் நாடோடிக் கலைஞன் ஒருவன் கிளிக்காக உயிர் விட்டதை க.இராசன் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். திருவாலங்காட்டினையடுத்த பழையனூரில் எழுபது வேளாளர்கள் நீலி என்ற பேயின் செயலால் உயிர்விட்ட சம்பவம் நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது. இதே போல திருச்சியில் குந்தவை நாச்சியார் தான் ஆசையாக வளர்த்த கிளிமீது பாசம் கொண்டு கிளி இறந்த பிறகு தன்னுடைய சமாதி அருகே கிளிக்கு சமாதி கட்டி வழிபட்டுள்ளார். இன்றளவும் திருச்சியில் உள்ள நத்தர் வலி சமாதியருகே கிளியும் வழிபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கால்நடைகளுக்கு வைக்கப்பட்ட நடுகற்கள் சாலையோரத்தில் பல உள்ளது. தற்பொழுது சாலை விரிவாக்கத்தால் அவை உடைக்கப்பட்டும், அப்புறப்படுத்தப்பட்டும் நம்முடைய வரலாறு மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் துறையினர் இவற்றை ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் சந்ததியினருக்கு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். வலைத்தமிழுக்காக, வைகை அனிஷ் |
||||||||
by Swathi on 30 Jul 2014 0 Comments | ||||||||
Tags: Nadugal நடுகல் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|