LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஒன்பதாம் திருமுறை-7

திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா

1. கோயில் - பாதாதி கேசம்


215     மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே.     1

216     சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என் சிந்தை உள்ளிடங் கொண்டனவே.     2

217     குருண்ட வார்குழல் கோதை மார்குயில் போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள் திருமல்லு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே.     3

218     போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை அச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தடமில்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய்ப்புலித் தோல்மிசை தொடுத்து வீக்கும் பொன்நூல் தன்னினொடு
தாழ்ந்த கச்ச தன்றே தமியேனைத் தளிர்வித்ததே.     4

219     பந்த பாசமெலாம்அறப் பசுபாசம் நீக்கிய பன்முனிவரோ(டு)
அந்தணர் வழங்கும் அணியார் தில்லை அம்பலவன்
செந்தழல் புரைமேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள்
உந்திவான்கழி என்உள்ளத்(து) உள்ளிடங் கொண்டனவே.     5

220     குதிரை மாவொடு தேர்பல குவிந்(து) ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு
மதுரமாய் மொழியார் மகிழ்ந்தேத்து சிற்றம் பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம் என்னுள்ளத்(து) உள்ளிடங் கொண்டனவே.     6

221     படங்கொள் பாம்பனை யானொடு பிரமன் பரம்பரா! அருளென்று
தடங்கையால் தொழவும் தழலாடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்களும் தடமார்பினில் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்ட மன்றே வினையேனை மெலிவித்தவே.     7

222     செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்யநின்று மகிழ்ந்தாடு சிற்றம் பலவன்
செய்யவாயின் முறுவலும் திகழும் திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண் டனவே.     8

223     செற்றவன் பரந்தீ எழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறிநீர்த் தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுக மும்முகத்தினும்
நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சு ளேதிளைக் கின்றனவே.     9

224     தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக் கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ் அகத்து மொட்டொடு மத்தமும்
பிறைக்கொள் சென்னி யன்றே பிரியா(து) என்னுள் நின்றனவே.     10

225     தூவி நீரொடு பூஅவை தொழு(து) ஏத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி உள்நிறுத்தி அமர்ந்தூறிய அன்பினராய்த்
தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக் கூத்தினைத் திருவாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடையான்அடி மேவுவரே.     11


2. கோயில் - பவளமால்வரை

226     பவளமால் வரையைப் பனிபடர்ந்(து)
    அனையதோர் படரொளிதரு திருநீறும்
    குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
    துன்றுபொற் குழல்திருச் சடையும்
    திவள மாளிகை சூழ்தரு தில்லை
    யுள்திரு நடம்புரி கின்ற
    தவள வண்ணனை நினைதொறும்
    என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.     1

227     ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஒட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே.     2

228     அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று) அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக் காலனை உயிர்செ வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே.     3

229     அருள்செய்(து) ஆடுநல் அம்பலக் கூத்தனே ! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்கமோ?
திரளும் நீள்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.     4

230     வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழந்(து) இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாவே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை அம்பலத் தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே.     5

231     தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைத்து அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்(து) என்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்
வாய்ந்த மாலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே.     6

232     உடையும் பாய்புலித் தோலும்நல் அரவமும் உண்பதும் பலிதேர்ந்து
விடைய(து) ஊர்வது மேவிடங் கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும்
உடைய கோவினை அன்றிமற்று ஆரையும் உள்ளுவது அறியேனே.     7

233     அறிவும் மிக்கநல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயடு தந்தையும் உடன்பிறந் தவரோடும்
பிறிய விட்டுனை அடைந்தனன் என்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்கும்கொண் டந்தணர் ஏத்தநன் மாநடம் மகிழ்வானே.     8

234     வான நாடுடை மைந்தனே ! ஓஎன்பன் 'வந்தரு ளாய்' என்பன்
பால்நெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ணனேஎன்பன்
தேனமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற
என் வாமணிப் பூணணி மார்பனே ! எனக்கருள் புரியாயே.     9

235     புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூகரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக் காதலித்(து) இனையவர் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன(து) அடியினை பணிவாரே.     10


3. கோயில் - அல்லாய்ப் பகலாய்

236     அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித் தேவன் ஆடுமே 1

237     அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே.     2

238     இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல்
திளையும் மாடத்திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின்(று)
அளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே.     3

239     சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே.     4

240     ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே.     5

241     குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் பபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே.     6

242     சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில்தில்லை
அத்தா! அருளாய் அணியம் பலவா! என்றென் றவரேத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே.     7


243     அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அரளென்று
துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே.     8

244     மாலோ(டு) அயனும் அமரர் பதியும் வந்து வணங்கிநின்(று)
ஆல கண்டா ! அரனே ! அருளாய் என்றென்(று) அவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பாலா டுமுடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே.     9

245     நெடிய சமணும் அறைசாக் கியரும் நிரம்பாப் பல்கோடிச்
செடியும் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
அடிகள் அவரை ஆருர் நம்பி அவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடைய கோலக் குழகன் ஆடுமே.     10

246     வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத் தானைத்
தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப்
பானோர் பாடல் பத்தும் பாடப் பாவ நாசமே.     11


4. கோயில் - கோலமலர்

247     கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை நகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே.     1

248     காண்பதி யான் என்றுகோல் கதிர்மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென்(று) அறிதற்கு அரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறையோர் மலர்ப் பாதங்களே.     2

249     கள்ளவிழ் தாமரைமேல் கண்டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந் தோங்கிய சீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒருவனை உணர்வரிதே.     3


250     அரிவையோர் கூறுகந்தான் அழகன் எழில் மால்கரியின்
உரிவைநல் உத்தரியம் உகந்தான் உம் பரார்தம்பிரான்
புரிபவர்க்(கு) இன்னருள்செய் புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)
எரிமகிழ்ந் தாடுகின்ற எம்பிரான்என் இறையவனே.     4

251     இறையவனை என்கதியை என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும் மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே.     5

252     நினைத்தேன் இனிப்போக்குவனோ? நிமலத் திரளை நினைப்பார்
மனத்தி னுளேயிருந்த மணியைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக் கனகங்கதிர் ஒண்பவளம்
சினத்தோடு வந்தெறியும் தில்லைமாநகர்க் கூத்தனையே.     6

253     கூத்தனை வானவர்தம் கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவருவின் முதலைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற எம்பிரானடி சேர்வன்கொலோ? 7

254     சேர்வன்கொலோ அன்னையீர் திகழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) என் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவும் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் என்பால் நேசனையே.     8

255     நேசமு டையவர்கள் நெஞ்சுளே யிடங்கொண் டிருந்த
காய்சின மால்லிடையூர் கண்ணுதலைக் காமருசீர்த்
தேசமிகு புகழோர் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஈசனை எவ்வுயிர்க்கும் எம்மிறைவன்என்(று) ஏத்துவனே.     9

256     இறைவனை ஏத்துகின்ற இளையாள்மொழி இன்றமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணியாலைகள் சூழ்மயிலை
மறைவல ஆலிசொல்லை மகிழ்ந்தேத்துக வானெளிதே.     10


திருச்சிற்றம்பலம்

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.