LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மறைந்து போன தமிழ் நூல்கள்

பழைய இராமாயணம்

முன்னுரை:
கம்ப இராமாயணத்திற்கும் முன்பே சில தமிழ் இராமாயணங்கள் இருந்தன என்பதற்குத் திண்ணிய சான்றுகள் உள்ளன. சங்கக் காலத்திலேயே தமிழில் இராமாயணம் இருந்தது என்பது புறநானூற்றின் 378-ஆம் பாடலிலிருந்தும் அக நானூற்றின் 70-ஆம் பாடலிலிருந்தும் வால்மீகி இராமாயணத்தில் இல்லாத நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதினின்று தெரிகிறது என்று பெர்க்கெலி பல்கலைத் தமிழ்-வடமொழிப் பேராசிரியர் 'சார்'ச் ·ஆர்ட்டு (George Hart) “The Poems of Ancient Tamil: their milieu and their Sanskrit counterparts”, (1975) என்னும் நூலில் நுவல்கிறார்.

புறநானூற்றின் சான்று (குரங்குகளும் அணிகலனும்):

புறநானூற்றின் 378-ஆம் பாடலில் அரசனிடமிருந்து அணிகலன்களைப் பரிசில் பெற்ற பாணர்கள் அவற்றை அணிந்துகொள்ளும் செய்தியை நகைச்சுவையாகச் சொல்லும்போது புலவர் ஊன்பொதி பசுங்குடையார் கீழக்கண்டவாறு பாடுவார்:

“...
இலம்பா(டு) இழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்(கு)அமை மரபின மிடற்றுயாக் குநரும்
மிடற்(று)அமை மரபின அரைக்குயாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே
...”
    [புறநானூறு: 378:13-21]


    “... [சோழன் இளஞ்சேட்சென்னி ஈந்த பரிசிலால்] வறுமையை இழந்த என் பெரிய சுற்றத்தார் அவன் கொடுத்த அணிகலன்களில் விரலுக்கு அணிய வேண்டியதைக் காதிலும் காதுக்கு அணியவேண்டியதை விரலிலும் இடைக்கு அணிவதைக் கழுத்திலும் அணிந்துகொண்டது பெரும் வலிமையை உடைய இராமனின் தன் துணையாகிய சீதையை இராவணன் வௌவிச் சென்றபோது சீதை நிலத்தில் வீசி யெறிந்திருந்த நகைகளைக் கண்டெடுத்தவுடன் குரங்குகள் அவ்வணிகலன்களில் எதை எந்த உறுப்பின்மீது அணிவதென்று தெரியாமல் தங்கள் உடம்பின்மேல் மாறி மாறி அணிந்துகொண்டதைப் போல் வேடிக்கையாக இருந்தது” என்று சொல்கிறார்.

    வால்மீகியிலோ (4:6) குரங்குகள் சீதையின் நகைகளைக் கண்டுபிடிக்கும் காட்சிச் சித்திரிக்கப் படவேயில்லை; மாறாகச் சுக்கிரீவன் இராமனிடம் சீதையின் அணிகலன்கலைக் காட்டி அவை சீதை இராவணனாற் கடத்தப் படும்போது தானும் நான்கு குரங்குகளும் நிலத்தில் இருப்பதைக் கண்டு சீதை அவற்றைக் கீழே வீசியதாக மட்டுமே சொல்கிறான்.

    அகநானூற்றின் சான்று (இராமன் அவித்த ஆலமரம்):

    அகநானூற்றின் 70-அம் பாடல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலாகும். அதில் தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:
    “...
    நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
    அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
    பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
    வதுவை கூடிய பின்றை....
    ...
    வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
    முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
    வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
    பல்வீழ் ஆலம் போல
    ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே”. (அகநானூறு:70:5-17)

    அ·தாவது, “உன்னைத் திருமணம் செய்துகொள்ளும்முன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு];
    வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான தனு*ச்கோடியில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!” என்றாள்.

    மேற்கண்டவாறு தனு*ச்கோடி நிகழ்ச்சி வால்மீகி இராமாயணத்தில் இல்லை; அதில் வேறுமாதிரி உள்ளது.

    மேற்சுட்டிய அதே நூலில் ·ஆர்ட்டுச் சாற்றுவார்: “வால்மீகியின் வடமொழி இராமாயணத்தைத் தமிழ் இராமாயணத்தோடு ஒப்பிடும்போது தமிழது கவித்துவம் நிறைந்திருப்பது தெளிவாகிறது; அதிலும் அகநானூற்று நிகழ்ச்சி இன்னும் கவித்துவம் நிரம்பி யுள்ளது என்று எமக்குத் தோன்றுகிறது.

    “வடமொழியில் (6:21) இராமன் இலங்கையின்மேல் படையெடுக்கும் முன் கடலுக்கு வணக்கம் செலுத்திவிட்டுக் கரையில் தருப்பைப்புற் படுக்கையில் மூன்று பகலும் மூன்று இரவும் படுத்துறங்கியபின் மீண்டும் கடலை வணங்குகிறான்; அப்போதும் கடல் அடங்கி இணங்காதிருக்கவும் தன் வில்லில் நான்முகன் கொடுத்த அம்பைத் (பிரமாத்திரம்) தொடுத்து அதை வறண்டுபோமாறு அச்சுறுத்தவும் கடல் இராமனின் விருப்பத்திற்கு இணங்குகிறது.

    “அவ்வாறு வடமொழியில் கற்பனையோ ஒப்பனையோ இன்றி அக்காட்சி சித்திரிக்கப் பட்டிருக்கச் சங்கக்கால இராமாயணத்திலோ இராமன் உறங்கும்போது ஆலமரத்தை அமைதியாக்கிக் கடலை முழங்கச் செய்து கடலின் அடங்காமையை தமிழ்ப் புலவன் அழகிய முரண்காட்டி வெளிக்கொணர்கிறான்.

    “அத்தகைய வேறுபாடுகளைக் காணும்போதும் தமிழ்ப் புலவர்கள் தங்கள் அவையினர்க்கு இராமாயணத்தைப் பற்றி நல்ல பழக்கம் உள்ளதாகக் கருதிப் பாடியுள்ளதைக் காணும்போதும் சங்கக் காலத்திலேயே தமிழகத்தில் தமிழில் ஓர் இராமாயணம் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அக்காலத்தில் இருந்த தமிழ்ப் புலவர்களின் பேரெண்ணிக்கையையைக் கருதும்போதும் தமிழ்க் கவிதையின் உயர்ந்த நிலையை எண்ணும்போதும் அது எதிர்பார்க்கவேண்டிய வொன்றே.”

    ·ஆர்ட்டுத் தொடர்கிறார்: “ அந்தப் பழைய இராமாயணத்தின் சில பகுதிகள் பிழைத்திருந்திருக்கலாம். மயிலை சீனி வேங்கடசாமி “மறைந்த போன தமிழ்நூல்கள்” என்னும் நூலில் ஒரு பழைய இராமாயணத்தினின்றும் நான்கு செய்யுள்களைக் காட்டியுள்ளார்; அப்பகுதிகள் இரண்டு பழந்தொகை நூல்களின் உரையில் இருந்ததனால் காக்கப்பட்டன. ஆனால் அவை சங்கக் காலத் தொகை நூல்களைப் போல் தொன்மையானவையா என்று நம்மால் துணிய முடியவில்லை.”

    இந்தப் பழைய இராமாயணத்தின் ஆசிரியர் பெயரும் காலமும் தெரியவில்லை; ஆனால் இது கம்ப இராமாயணத்திற்கும் மிகவும் முந்தியது என்பது உறுதி; ஏனெனில் அகவற்பாக்கள் கம்பனுக்கும் பல நூற்றாண்டுகள் முன்பே வழக்கு அருகிப்போயின.

    எனவே இந்த அரிய செய்யுள்கள் கிட்டியது நமது பெரும்பேறென்று மகிழ்ந்து அவற்றைச் சுவைத்துப் போற்றிப் பாதுகாப்போமாக. நமக்குக் கிட்டியுள்ள தமிழ்நூல்களுக்கு இனிமேலும் யாதோர் இடுக்கணும் நேராதவாறு கவனமாக இருத்தல் இன்றியமையாதது. இன்னும் பல்லாயிரக் கணக்கான ஓலைச் சுவடிகள் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பதிப்புக் காணாமல் உழல்வது நம் எல்லார்க்கும் ஆற்றவியலாத துயர் அளிக்கும் செய்தியே. நாம் பொருளுதவியும் அறிஞர் உதவியும் திரட்டி அவற்றைக் காப்பது நம் கடமை.
    பழைய இராமாயணம்
    மயிலை சீனி.வேங்கடசாமி:

    அகவற்பாவினால் இயற்றப்பட்ட பழைய இராமாயாணம் ஒன்று இருந்ததென்பது, ஆசிரியமாலை என்னும் தொகைநூலிலிருந்து தெரிகிறது. ஆசிரியமாலை, ஆசிரியப் பாக்களினால் ஆன நூல்களிலிருந்து சில பாடல்கள் தொகுக்கப்பட்ட செய்யுளைக் கொண்ட நூல். ஆசிரிய மாலையும் இறந்துபட்டுப் போன நூலே. அதிலிருந்து சில செய்யுள்களைப் புறத்திரட்டு என்னும் தொகைநூலில் சேர்த்துள்ளனர்.

    ஆசிரியமாலையில் தொகுக்கப் பட்டிருந்த பழைய இராமாயணச் செய்யுள்களில் ஐந்து செய்யுள்கள் புறத்திரட்டில் சேர்க்கப் பட்டுள்ளன. அவை கீழே வருமாறு:

    “
    மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து
    கான்உறை வாழ்க்கையில் கலந்த இராமன்
    மாஅ இரலை வேட்டம் போகித்
    தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது
    சுற்றமும் சேண்இடை அதுவே முற்றியது
    நஞ்சுகறை படுத்த புன்மிடற்(று) இறைவன்
    உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள்
    வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி
    வன்தோள் ஆண்தகை ஊரே அன்றே
    சொல்முறை மறந்தனம் வாழி
    வில்லும் உண்(டு)அவற்(கு) அந்நாள் ஆங்கே.

    அரும்பதக் குறிப்பு:
    தாதை = தந்தை; இரலை = மான்; வேட்டம் = வேட்டை; மிடறு = கழுத்து; நஞ்சு...இறைவன் = நஞ்சுண்ட...சிவன்; வெண்கோட்டுக் குன்றம் = பனி படர்ந்த உச்சியைக் கொண்ட இமயம்; மீளி = வலிய ஆடவன் (இராவணன்). இராமன் மாயமன் வேட்டையால் சீதையைப் பிரிந்ததும், சிவன் அமர்ந்திருந்த இமயத்தை இராவணன் எடுக்க முயன்றதும் பாடப்படுகின்றன.

    மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும்
    நீலக் குவளை நிறனும் பாழ்பட
    இலங்கை அகழி மூன்றும் அரக்கியர்
    கருங்கா னெடுமழைக் கண்ணும் விளிம்(பு)அழிந்து
    பெருநீர் உகுத்தன மாதோ வதுவக்
    குரங்குதொழில் ஆண்ட இராமன்
    அலங்குதட(று) ஒள்வாள் அகன்ற ஞான்றே.

    அரும்பதக் குறிப்பு:
    அலங்கு = மின்னுகின்ற; தடறு = உறை

    இருசுடர் வழங்காப் பெருமூ(து) இலங்கை
    நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை
    எண்(கு)இடை மிடைந்த பைங்கண் சேனையிற்
    பச்சை போர்த்த பலபுறத் தண்ணடை
    எச்சார் மருங்கினும் எயிற்புறத்(து) இறுத்தலின்
    கடல்சூழ் அரணம் போன்ற
    உடல்சின வேந்தன் முற்றிய ஊரே.”

    அரும்பதக் குறிப்பு:
    ஞான்று = காலம்; எண்கு மிடைந்த = கரடிகள் கலந்த (சுக்கிரீவன் சேனையில் 'சாம்பவான் முதலிய கரடிகள் இருந்தன). எயில் = மதில்

    மேற்கண்ட செய்யுள்கள் தொல்காப்பியம்:புறத்திணை:12-ஆம் சூத்திர உரையில் நச்சினார்க்கினியராலும் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன.

    “மேலது வானத்து மூவா நகரும்
    கீழது நாகர் நாடும் புடையன
    திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
    கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
    பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
    கண்நுதல் வானவன் காதலின் இருந்த
    குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
    தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
    வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன்
    மாலை வெண்குடை அரக்கர் கோவே.

    அரும்பதக் குறிப்பு:
    தோலா = தோல்வியடையாத; துப்பு = வலிமை; மள்ளர் = வீரர்;
    இராவணன் தான் சேர்த்த செல்வத்தைத் தன் வீரர்க்கு வகுத்து அளித்தது சொல்லப்பட்டுள்ளது.

    இருபால் சேனையும் நனிமருண்டு நோக்க
    முடுகியல் பெருவிசை அரவுக்கடும் கொட்பின்
    எண்திசை மருங்கினும் எண்நிறைந்து தோன்றினும்
    ஒருதனி அனுமன் கைஅகன்று பரப்பிய
    வன்மரம் துணிபட வேறுபல நோன்படை
    வழங்கி அகம்பன்தோள் படையாக ஓச்சி
    ஆங்க,
    அனுமன் அங்கையின் அழுத்தலின் தனாது
    வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம்கரிந்(து)
    உயிர்போகு செந்நெறி பெறாமையின்
    பொருள்அகத்து நின்றன நெடும்சேண் பொழுதே.

    கடலும் மலையும் நேர்படக் கிடந்த
    மண்ண வளாக நுண்வெயில் துகளினும்
    நொய்தால் அம்ம தானே இ·(து)அவன்
    குறித்தன நெடியான் கொல்லோ மொய்தவ
    வாங்குசிலை இராமன் தம்பி ஆங்(கு)அவன்
    அடிபொறை ஆற்றின் அல்லது
    முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே.”

    மேற்கண்ட செய்யுளை நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்:பொருள்:புறத்திணை:21-ஆம் சூத்திரத்தின் “கட்டில் நீத்த பால்” என்பதன் உரையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.