- முனைவர் கி.செம்பியன்
செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் (466)
(செய்தக்க அல்ல செயக் கெடும் -- அரசன் தன் வினைகளுட் செய்தக்கனவல்லவற்றைச் செய்தலாற் கெடும்; செய்தக்க செய்யாமையானும் கெடும் -- இனி அதனானேயன்றிச் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமை தன்னானுங் கெடும் செய்யத்தக்கனவல்லவாவன -- பெரிய முயற்சியினவும், செய்தாற் பயனில்லனவும், அது சிறியதாயினவும், ஐயமாயினவும், பின்றுயர்விளைப்பனவுமெனவிவை, செய்யத்தக்னவாவன. அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்;யாமைகளின் அறிவு ஆண்மை பெருமையென்னும் மூவகையாற்றலுட் பொருள் படையென இருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாமாகலான், இரண்டுங் கேட்டிற்கேதுவாயின -- பரிமேலழகர்)
நெற்பயிருக்கு ஒரு நேரத்தில் நீர் நிறுத்தவேண்டும்; ஒரு நேரத்தில் நெற்பயிரைக் காயவிட வேண்டும்!
நீரை நிறுத்துவது நீதியா, காயவிடுவது நீதியா?
எல்லா நேரத்திலும் நீர் உணவாகாது!
எல்லா நேரத்திலும் காய்தலும் நலமாகாது!
செய்யத்தகாதவற்றைச் செய்;தாலும் கெடும்; செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் கெடும்.
கட்டடத்திற்கு இன்றுதான் கான்கிரீட் தளம் இட்டார்கள்; ஆறுமணி நேரம்வரை அதில் தண்ணீர் விழக்கூடாது; உலரவிட வேண்டும்; அதன் பின்பு பாத்தி கட்டிப் பத்து நாட்களுக்குத் தண்ணீர் கட்டவேண்டும்!
தண்ணீர் ஊற்றக்கூடாத நேரத்தில் ஊற்றினால் கெடும்; ஊற்றவேண்டிய நேரத்தில் ஊற்றாவிட்டாலும் கெடும்!
நீரை நிறுத்துவது நீதியா, உலரவிடுவது நீதியா?
மாணவர்கள் விடைத்தாளி;ல் எழுதக்கூடாத பதிலை எழுதினால் மதிப்பெண் இல்லை; எழுதவேண்டியதை எழுதாமல் விட்டாலும் மதிப்பெண் இல்லை;!
எழுதுவது சரியா, எழுதாமல் விடுவது சரியா?
ஆசிரியர்கள் சொல்லக்கூடாத கருத்தைச் சொன்னால் கேடு; சொல்லவேண்டியதைச்; சொல்லாமல் விட்டாலும் கேடு!
நோயாளிக்குப் போடக்கூடாத ஊசியைப் போட்டாலும் சாவான்; போடவேண்டிய ஊசியைப் போடாவிட்டாலும் சாவான்!
போடுவது நீதியா, போடக்கூடாதது நீதியா?
உண்ணக்கூடாததை உண்டாலும் நோய்; உண்ணவேண்டியதை உண்ணாமல் விட்டாலும் நோய்!
காவலர்கள் பிடிக்கவேண்டியவர்களைப் பிடிக்காமல் விட்டாலும் துன்பம்; பிடிக்கக்கூடாதவர்களைப் பிடித்தாலும் துன்பம்!
ஓர் அரசு போடக்கூடாத சட்டத்தைப் போட்டாலும் இன்னல்; போடவேண்டிய சட்டத்தைப் போடாமல் விட்டாலும் இன்னல்!
நீதிபதிகள் கொடுக்கவேண்டிய தண்டனையைக் கொடுக்காவிட்டாலும் தீங்கு; கொடுக்கக்கூடாத தண்டனையைக் கொடுத்தாலும் தீங்கு!
இந்தக் குறள் யாருக்காக?
மன்னருக்கா, உழவருக்கா, மாணவருக்கா, ஆசிரியர்க்கா, பொறியாளர்க்கா, மருத்துவர்க்கா, நோயாளிக்கா, அரசுக்கா, காவலர்க்கா, நீதிபதிக்;கா?
தமிழ்நாட்டார்க்கு மட்டுமா, இந்தியாவிற்கு மட்டுமா, உலகத்தார்க்காகவா?
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நாங்கள் மட்டும் படிக்கமாட்டோம்!
ஏனெனில்,
நாங்கள் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று முழங்கும் பச்சைத் தமிழர்கள்!
(தொடரும்....)
|