முனைவர் ப. குமார் (1976) … தமிழாய்வுலகில் இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர். செயலாற்றல் மிகுந்த ஒரு ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் தமிழில் முதுகலைப் பட்டம் (2000), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (2001) முனைவர் பட்டம் (2008) ஆகியவற்றைப் பெற்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். நூலகவியல், வங்கமொழி ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகளையும் மேற்கொண்டுள்ளார். சில மாதங்கள் மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் பணியாற்றியபிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் 2008 முதல் 2012 வரை சிறப்புநிலை விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் திருவாரூர் தமிழ்நாடு நடுவண் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இணைந்து, பணியாற்றிவருகிறார். ஆய்வியல் நிறைஞர் படிப்பிற்காக ‘மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் ஒரு மிகச் சிறப்பான ஆய்வை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, முனைவர் பட்ட ஆய்விற்காக ‘ இயந்திர மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டார். இயந்திர மொழிபெயர்ப்பிற்குத் தேவையான அகராதி எவ்வாறு அமையவேண்டும் என்பதே அவரது ஆய்வு. கணினிமொழியியல் நோக்கில் இந்த ஆய்வை அவர் மேற்கொண்டுள்ளார். தற்போது மனித மூளைக்காக உருவாக்கப்பட்டுள்ள அகராதிகள் இயந்திர மொழிபெயர்ப்பிற்குப் போதுமானது இல்லை என்பதை நிறுவி, ஜேம்ஸ் புஸ்ட்ஜோவ்ஸ்கி ( James Pustejovsky) என்ற கணினிமொழியியலாளர் முன்வைத்துள்ள ‘உருவாக்க அகராதி’ (Generative Lexicon) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அகராதி அமைக்கப்படவேண்டும் என்று நிறுவியுள்ளார். மிகக் கடுமையான ஒரு தலைப்பை எடுத்து, வெற்றி கண்டுள்ளார் இவர். இன்றைக்கு மிகத் தேவையான ஒரு ஆய்வாக இது அமைந்துள்ளது. ‘மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்’ என்ற ஒரு நூலின் ஆசிரியராகவும், ‘பிங்கல நிகண்டு ‘ என்ற நூலின் தொகுப்பாளராகவும், ‘ஆய்வுக்கதிர்’ என்ற ஒரு தொகுப்பிற்குப் பதிப்பாளராகவும் இருந்துள்ளார்.
தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகளில் பங்கேற்று, பல ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். மொழிபெயர்ப்பியல், அகராதியியல், தரவுமொழியியல் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்திவருகிறார். ஆய்வுக் கட்டுரைக்கான போட்டிகள் பலவற்றில் பங்கேற்று, பல பரிசுகளைப் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் பல பணிமனைகளையும் கருத்தரங்குகளையும் என்னுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்த உதவியுள்ளார். முதுகலை மாணவர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் அன்றும் இன்றும் துணையாக இருந்து செயல்படும் ஒரு பேராசிரியர் இவர் என்றால் அது மிகையாது. அவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்!
-தெய்வ சுந்தரம் நயினார்
|