LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- முல்லைப்பாட்டு

பாட்டின் பொருள் நலம் வியத்தல்

    கடலில் முகந்த நீரைப் பொழிந்து கொண்டே எழுந்து உயர்ந்த கரியமுகிலிற்கு, மாவலி வார்த்த நீர் ஒழுகுங் கையுடனே ஓங்கி வளர்ந்த கரிய திருமாலை ஒப்புமை கூறியது மனனுணர்விற்கு இசைந்த உவமையாகப் பொருந்தி நிற்கின்றது. நிலத்தில் ஊன்றிய வில்லிலே அம்புறாத் துணியைத் தொங்கவிட்டிருப்பதற்குப், பார்ப்பனத் துறவி காவிக்கல்லில் தோய்த்த உடையைத் தனது முக்கோலிற் றொங்கவிட்டிருப்பதை உவமை கூறியது மிகவும் பொருத்தமாக விருக்கின்றது. இதனால் இவ்வாசிரியர் துறவிகளிடத்துப் பழக்கமுடையர் என்பதுந், துறவொழுக்கத்தில் வேட்கையுடைய ரென்பதுங் குறிப்பாக அறியப்படும்.

    மெய்காப்பாளர் பாடிவீட்டில் இடையாமத்திலே தூக்கமயக்கத்தோடும் அசைந்து திரிதல், பூத்த புனலிக் கொடி படர்ந்த தூறு வாடைக்காற்றில் அசைவது போல் இருக்கின்றது என்பதனாலுங், காயாமலர் கறுப்பாகவுங், கொன்றை பொன்னிறமாகவுந், தோன்றி சிவப்பாகவும் இருக்கும் என்பதனாலும், வரகங் கொல்லையில் மான்கள் தாவிக் குதிக்கின்றன, கார்காலத்தில் வள்ளிக்கிழங்கு முற்றிவிடுகின்றன என்பதனாலும், இவர் இயற்கைப் பொருள்களைக் கண்டறிவதிலும், அவற்றைத் தாங்கண்டவாறே சொல்வதிலுந் திறமை மிக்குடையரென்பது இனிது விளங்கும்.

    இன்னும், முதுபெண்டிர் நற்சொற் கேட்கும்பொருட்டு ஊர்ப்பக்கத்தே திருமால் கோயிலிற் போய் நாழி நெல்லும் முல்லையுந் தூவி வணங்குதலுங், குளிர் மிகுதியால் தோளிற் கட்டிய கையுடன் நிற்கும் ஓர் இடைப்பெண் ஆன்கன்றுகட்குத் தேற்தல் சொல்லுதலுங், காட்டிலே பாடிவீடு அமைத்தலும், அப்பாடி வீட்டினுள் நாற்சந்தி கூடும் முற்றத்திலே யானைப்பாகர் யானையைக் குத்திக் கவளம் ஊட்டுதலும், வில்லினால் வளைவாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு இடையிலே அரசனுக்கென்று வண்ணத்திரையினால் வேறொரு வீடு வகுக்கப்பட்டிருத்தலும், அவ்வீட்டின் உள்ளே பெண்கள் பலர் கையில் விளக்கு ஏந்தி நிற்றலுங், குதிரை முதலியவற்றின் கழுத்திற் கட்டிய மணியோசை இரவில் அடங்கிவிட்டதும், மெய்காப்பாளர் அரசனிருக்கையைச் சுற்றிக் காவலாகத் திரிதலும், பொழுதறிவோர் கொப்பரை நீரில் இட்ட நாழிகை வட்டிலைப் பார்த்து வந்து அரசன் எதிரிலே இடையாமம் ஆயிற்று என்றலும், யவனர்களாற் புலிச்சங்கிலி விட்டு மிக அழகியதாக வகுக்கப்பட்ட பள்ளியறையுள் அவர்கள் விளக்குக் காட்டச் சென்று அரசன் பள்ளிகொண்டிருத்தலும், அப்போது ஊமை மிலேச்சர் பள்ளியறையைச் சுற்றிக் காவலாக இருத்தலும், படுக்கைமேல் உள்ள அரசன் மறுநாட்போரை விரும்பும் உள்ளத்தோடு உறக்கம் பெறானாய், முன்னாட் போரிற் புண்பட்ட யானை குதிரைகளையுஞ் செஞ்சோற்றுக் கடன் கழித்து இறந்தொழிந்த அரிய போர்மறவரையும் நினைந்து வருந்தி ஒரு கையை மெத்தையின் மேலும் மற்று ஒரு கையைத் தலையின் கீழும் வைத்துப் படுத்திருத்தலும், தலைமகள் ஏழடுக்கு மாளிகையில் தன் கணவன் வருகையை நினைந்து பிரிவின் துன்பத்தை ஆற்றிக் கொண்டு பாவையின் கையிலுள்ள விளக்கானது எரிய மாளிகையின் கூடல்வாயிலிலே வந்துவிழும் நீர்த்திரள் ஒலிப்ப மயில்போற் படுத்திருத்தலும், அப்போது தலைவன் தன்றேரினை விரைவாகச் செலுத்திக் கொண்டு காட்டிலே வருதலும் நாம் நேரே காண்கின்றது போலவும், ஓவியம் எழுதி நங்கண்ணெதிரே காட்டுகின்றது போலவும் மிக்க அழகுடன் சொல்லப்படுதல் காண்க.

    இனி, இவ் வாசிரியர் தாம் புனைந்துரைக்கும் பொருள்களின் உள்ளே நுழைந்து அவற்றை விரிவாகப் புனைந்துரைக்கின்றா ரென்பதும் ஈண்டு அறியற்பாற்று; இவ்வியற்கை பத்துப்பாட்டுக்கள் இயற்றிய புலவர் எல்லாரிடத்தும் பொதுவாகக் காணப்படுவதொன்றாகும். ஆயினும், இவரையழிந்த ஏனைப்புலவ ரெல்லரும் நம் உள்ளத்தின் கற்பனையுணர்வு தளர்வடையா வண்ணம் விரித்துப் புனைந்து சொல்லுதற்கு இசைந்த நன்பொருள்களையே விரித்துரைக்கின்றனர் ; மற்று இவரோ புனைந்துரை விரிப்பதாற் சுவைப்படாத ஓரொவொன்றினையுஞ் சிறிது அகலவிரித்துக் கூறுகின்றார் ; பாடிவீடு அமைக்கப்பட்ட தன்மையினை இவர் இன்னுஞ் சுருக்கிக் கூறியிருந்தால் இப் பாட்டு இன்னும் பொருட்சுவை முதிர்ந்து விளங்கும். திருமுருகாற்றுப்படை முதலான ஏனைச் சில பாட்டுக்களுக்கு இம் முல்லைப்பாட்டு இவ்வாற்றால் ஒரு சிறிது தாழ்ந்ததுபோலுமென அவை தம்மை ஒப்பு நோக்கிக் கற்பார்க்கு ஒருகாற் றோன்றினுந் தோன்றும். என்றாலும் இப் பாட்டின்கட் கண்ட பொருட்கோவை நினைக்குந்தோறும் இன்பம் பயக்கும் விழுப்பம் வாய்ந்து மிளிர்கின்றமை காண்மின்!

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.