LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மற்றவை

பரத சேனாபதீயம்

தெய்வ வணக்கம்

ஆனைமுக னாறுமுக னம்பிகைபொன் னம்பலவன்
ஞானகுரு வாணியையுள் நாடு. ....1

1. நூலின் தன்மை

பன்னிரு தாண்டவங்கள்-தாண்டவ பதி

திருவள ருலகிற் சீவகோ டிகளின்
உரைமன முணரா தொளிரு மாதி
தன்னா னந்தஞ் சந்தியை கவுரி
திரிபுரங் காளி சீர்முனி யழித்தல்
உக்கிரம் பூத முயர்பிர ளயமே
புசங்கஞ் சுத்தம் புகலீ ராறின்
பகுதிசால் விளக்கும் பதமலர் தொழுவாம். ....2

கட்டளைக் கலித்துறை

பரதமெ னும்பெயர் மூன்றெழுத் தாகும் பகருமதன்
சரதநல் லோர்பக ரோதை புரவியச் சம்மிரதம்
சுரதவன் பாலை நிலங்கதிர் தெய்வஞ்சொல் சாதி மன்னன்
உரைதரு பாலன் பருவமு நாளுத் தரமுடனே. ....3

உத்தம ராசிவண் கன்னியு முண்டி யுயரமிழ்தம்
வித்தக நற்கதி விண்ணவ ராமித னர்த்தமெல்லாம்
இத்தகை யாமலை மங்கைக்கு மேற்ப வெடுத்துரைத்தான்
அத்தன்பொன் னம்பலத் தாடிய நாடக வாகமே. ....4

ரகரம்

ஆகம மேவும் ரகர நடுவெழுத் தாகுமிசை
கோகில மாகு மிரதமுஞ் சாந்தங் குலவுநிலம்
மோக மருதமுந் தெய்வமு மிந்திரன் மொய்த்தகுலத்
தோகை யரச னவிட்ட மகரமுஞ் சொல்லினனே. ....5

சொல்லும் பருவமும் பாலனும் பாலனந் தொல்கதியும்
புல்லு மிருக மெனுமுறை யோடு பொருந்தவெடுத்
தல்லுந் தருவு மறலு நெறிபுன லார்முகிலும்
வெல்லுங் கருங்குழ லாட்குமுக் கண்ணன் விளம்பினனே...6

தகரம்

வேதிய ரோதுந் தகர விறுதியின் மேலெழுத்திற்
கோதிய வோசையு மன்ன மிரதமும் வீரமென்னத்
தீதி னிலங்குறிஞ் சித்தெய்வ மேருகன் சாதிமன்னன்
ஏதில் பருவம் புருடனு மாமென் றிசைத்தனனே. ....7

சாத்திய நாளது சோதியும் ராசியும் தயங்குதுலாம்
தோற்றிய வுண்டி யமுதங் கதிசொல் விண்ணவராம்
போற்று மிமயப் பொருப்பி லுலவும் பொலமயிலுக்
கேற்றி நல்லுணர் வந்தனு மின்ன தியம்பினனே. ....8

மகரம்

இயம்பும் பிரணவத் தீறா யிதற்கு மியைமகரம்
நயந்தரு மோசை கிரவுஞ்ச மேரச மின்சிரிப்பாம்
பயங்கெழு முல்லை நிலங்கோ பகவனும் பால்வசியன்
சயந்தரு நல்லபருவமு மன்னவன் றான்றெரியே. ....9

தெரிகின்ற நாண்மக மாகுமி ராசியுஞ் சிங்கமதாம்
பருகின்ற வுண்டிசித் ரான்னம தாகும் பகர்கதிமேல்
விரிகின்ற தோகை யுறுமயி லாகு மிடைநுடங்கக்
கிரியை யிகழ்ந்தெழு மென்முலை யாட்கிவை கேண்மினென்றே. ....10

பாவ ராக தாளங்களின் பாகுபாடுகள்

மானசம் பாவம் வாசிக மிராசும்
காயிகந் தாளம் கழறுவ தன்றியும்
காரணம் பாவம் சூக்கும மிராசும்
தூலந் தாளம் தோன்றுவ தன்றியும்
நிஷ்களம் பாவம் நிரவலி ராகம்
சகளந் தாளம் சாற்றுவ தன்றியும்
இச்சை பாவ மிராசு மறியாம்
கிரியை தாளங் கிளத்துவ தன்றியும்
சிறப்பும் பாவஞ் சேர்க்கை யிராகம்
பொதுவே தாளம் புகலுவ தன்றியும்
நிருத்தம் பாவங் கீத மிராகம்
வாத்தியந் தாளம் வகைவகை விளங்கும். ....11


இலயம் போகம் அதிகாரங்கள்


பாவ மூன்றும் பார்க்கு முறையே
மேவு மிலய போகவதி காரம்
என்னுங் காரண மெனப்பன் னும்மே. ....12


சக்தர்

இலயத்தி லுன்னு மிவனே சக்தன். ....13

உத்யுக்தர்

சொல்போ கத்திற் சுகிப்பித் தவனே
வில்லுத் தியுக்த னெனவி ளம்பும். ....14

பிரவிர்த்தர்

அறையதி கார வவதரத் திற்றான்
உறைதரு தத்துவ முற்றுச் சத்தியோ
டொத்து முயன்றவன் ஓதும் பிரவிர்த்தன். ....15

அபிநயம்

படர்க்கை யெய்திச் சிவன்சிவை யிருவராற்
காரிய மாம்பிர பஞ்சங் களிலே
முமுக்ஷூவுக்கு மோக்கசா தனங்கள்
விளக்கச் சிவன்பால் நிகழு மோக்ஷ
நியாய மகத்துவமே நிலவபி நயமாம் ....16


பாதக்கிரமம்

போகத் தவாவுடைப் புட்க ளுக்குப்
போக சாதன நியமித் துணர்த்தச்
சத்தி பால்நிகழ் சாதன நியாமகம்
பாதக் கிரம மெனப்பன் னும்மே. ....17


ஐந்தொழில்

பாவ மூன்றோ டபிநயம் பதக்கிரமம்
தீதி லைந்து முறையே சிவன்சிவை
சதாசிவன் மகேசன் சாற்றுஞ் சுத்தம்
ஐந்துதத் துவத்தின் பானிலை பெறூஉம்
சிருட்டி திதிசங் காரந் திரோபவம்
அனுக்கி ரகமைங் கிருத்திய மமையும். ....18


ஆனந்த தாண்டவம்

ஆதலி னைந்துங் கூடிய நிலைக்களம்
ஆதி சிவத்திற் கைந்தொழி லாகும்
ஆனந்த தாண்டவ மறையப் படுமே. ....19

திரோபவம் திதியிலு மனுக்கிரக மழிப்பினும்
அடங்க வைந்து மூன்றா குவபோல்
அபிநயம் பாவத் தடிக்கிரமந் தாளத்
தடங்க வைந்து மூன்ற தாகிப்
பரதமெனக் காரணக் குறிநிலை பெற்றன. ....20

இம்முறை யன்றி வேறா யியம்பினும்
அம்முறை நூன்முறை யாமென வமைக்க. ....21

ஆனந்த தாண்டவத்தின் தொகையும் விரியும்

ஆனந்த தாண்டவம் பொதுமையி னொன்றாய்த்
தேச காலம் திருஷ்டா தரிசனம்
பேதத் தாற்பிர யோசனத் தாலும்
சிறப்பிற் பத்தோ டிரண்டுநூற் றெட்டாய்
விரியின் வைத்து வேதா கமமுதல்
புராணேதி காசம் பரதமும் புகலும். ....22

பரதம் உபதேசிக்கப்பெற்ற முறை

முதநூல்

பரத மூன்றுமுத் தேவன் வடிவமாய்க்
கரதலக் கனியெனக் காட்டிய வற்றைத்
தெரிக்கு நூலுந் தௌிமறை யந்தமு
முதலிய வெல்லா முன்னரி யயனுமை
பின்னிந் திரன்முதற் பண்ணவர் தமக்கும்
நந்தி முதலிய கணஞ்சா ரங்க
தேவர் முதலா முனிக்குஞ் செப்பினன். ....23

வழிநூல்

கௌரீகடகம்

அவருள்.
பார்வதி பாவ ராக தாளப்
பகுப்பெலா மறிய வழிநூ லாற்றி
அவற்றை யரனரங் கத்தி லாடிப்
பாடிக் காட்டப் பரமனு மகிழ்ந்து
நின்னட மெமக்கு நிரம்பவா னந்தம்
ஈந்த திதனை யியற்றுவா ரியம்புவார்
தேர்வார் யாவருஞ் சேர்துன் பிழிந்து
தீர்க்கமாய் வாழச் செப்பின னருளால். ....24


1.பாவம்

அபிநயம்

பாவப் பகுதி பகருங் காலை
அகத்தி னினைத்த ததுவா மிதனை
முகத்தாற் கரத்தா லசைத்துமுற் காட்டலஃ
தபிநய மென்றிங் கறையப் படுமே. ....25

அபிநயவகை

அபிநயம்.
ஆங்கிக வாசிகம் ஆகா ரியமே
சாத்விக மென்று சதுர்வித மாமே. ....26


ஆங்கிகாபிநயத்தின் உட்பிரிவுகள்


இவற்றுள்,
ஆங்கி கத்தையறையுங் காலை
சூசிகா பாவசா தொந்த லாட்ச ணிகமே. ....27


தொந்தாபிநயத்தின் வகைகள்

இதுவே,
ஆவா கிகம்பா விகமனு பாவிகம்
எனமூன் றாக வியம்பினர் நூலோர். ....28


இலாட்சணிகாபிநயம்

தரணிவி லுள்ள சகல பொருளையும்
பெயர்கூ றாமற் பிறரறி யும்வணம்
அபிநயிப் பதேலா க்ஷணிகா பிநயம். ....29

வாசிகாபிநயத்தின் வகைகள்

வாசிகா பிநயம் வகுக்குங் காலைச்
சங்கீதோ பகீதஞ் சுசப்த முபசப்தம்
எனநான் காக விசைக்கு மென்ப. ....30

ஆகாரியத்தின் வகைகள்

ஆகா ரியத்தை அறையுங் காலை
நிஜா காரியம் வியஜா காரியம்
வியபிசாரிய மபிசா ரியாவொடு நான்காம். ....31

சாத்விகாபிநயத்தின் வகை

சாத்விகா பிநயஞ் சாற்றுங் காலை
சாக்குசி வியஞ்சகந் தானிரண் டாமே. ....32

நடனம் முதலிய ஐந்து

நடனம் நாட்டியந் தாண்டவம் நிருத்தியம்
நிருத்த மைவகைச் சத்தியி னிமித்தம்
ஆதியின் முனைவ னாடி யருளினன். ....33

அவையே.
உலகிற் பலவா றுரைப்பன வுரைப்பாம். ....34

சாரி மூன்று

ஆகாச சாரி யரும்பூ சாரி
தேரி சாரி மூன்றெனச் செப்பினர். ....35

இலாசியம் இரண்டு

இலாசியங் குமாரஞ் சுகுமார மென்று
பேசின ரிரண்டாய்ப் பெரியோர் தாமே. ....36

விருத்தி இரண்டு

விருத்தி சித்தம் பாவிய மிரண்டாம். ....37


2. இராகம்

இராகப் பருப்பை யிசைக்குங் காலை
எழுசரக் கேதுவா மதன்பிரத் தாரம்
அதனிற் றோன்று மநேக ராகமும்
அதனிற் சனிக்குங் கிராமமூர்ச் சனைகளும்
மேள கர்த்தா வதிற்றோன் றிசையும்
இன்னு முளவெலா மிசைப்ப னாங்கே. ....38

நாதத்தின் வகை

நாத மிசைபண் ணிரண்டென நவில்வர். ....39

இசையும் பண்ணும்

சிந்தி ராகம் பாவினம் பண்ணாம். ....40

3. தாளம்


தாளமு மவற்றின தேதுவும் பிறப்பும்
அங்க மக்கர மைந்து சாதியும்
ஆறா தாரத் திருந்தா றங்கமும்
மற்று முளவெலாம் வகுப்ப னாங்கே. ....41

அம்பிகை செய்தது

அம்பிகை யானை முகற்கறு முகற்கும்
அருளி னுபதே சித்தனன் மாதோ. ....42

கணபதி செய்தது

ஆனை முகன்றாண் டவமுத லைந்தை
ஆற்றி யரன்முன் னாடிய வதனால்
நிருத்த கணபதி நாம நிலைபெற்
றதன்பெய ரானூல் சாற்றி வசிட்டர்
ஆதிய முனிவர்க் கறைந்தனன் நானே. ....43

கந்தன் செய்தது

கந்த னால்வகைப் பால மூலிதப்
பிரபந்தங் கள்தன் பெயராற் செய்து
வாயு மதங்கற் குபதே சித்தனன்
அவனனு மற்குமீ ரொன்பா னாகும்
சித்தர் தமக்குஞ் செப்பினன் றானே. ....44

அனுமன் செய்தது

அனுமன் விவாதிகள் கருவ மடங்க
அசல முருகக் குண்டகக் கிரியாவெனும்
இராகம் பாடி யடக்கி மேலும்
சன்னிய ராக மாறாயிரஞ் சமைத்ததற்
கனும கடக மெனும்பெய ரணிந்தனன். ....45

காளி தேவி இயற்றியவை

காளி சதிலய முகசிம் மளமே
பாதம் பேரணி சித்திரம் பட்டசம்
ஆதிய விருநூற் றீரெண் ணாட்டியம்
இசைத்தனன் சிவாசா ரியரா தியர்க்கே. ....46

திருமால் செய்தது

அரிநா தத்தை வருண தொனியாத்மக
மென் றிரண்டியற்றிக் கீதப் பிரபந்த
நூலை நூற்றுத் தண்டு முனிவ
ராதி யோர்க்கங் கறைந்தனன் றானே. ....47

பிரமன் செய்தது

அயனிருக் கேயசுர் சாம மதர்வணத்
திருந்து முறையே வாத்திய மபிநயம்
கீத மிரத மாக்கிக் கலைமகள்
சுரர்கள் முனிவ ராதியர்க் குரைத்தனன். ....48

சரசுவதி செய்தது

அன்னவ ளரம்பை யூர்வசிக் கறைந்தனன். ....49

இந்திரன் செய்தது

அமரர்கோன் பாவ நான்க தாக்கி
ஐயிரண் டெட்டோ டரும்வாத் தியங்களின்
இலக்கண மருச்சுன னெழினட சேகரர்க்
கியம்பின னவனுத் தரைக்கீந் தனனே. ....50

பிரகஸ்பதி செய்தது

பிரகஸ் பதியாங் கிகமா றாகவும்
வாசிக மிருவித மாகா ரியமவ்
விருவகை யாகச் சாத்விக மன்னதாய்
ஆக்கிப் பவமுனி யாதியர்க் களித்தனன். ....51

சுக்கிரர் செய்தது

சுக்கிர னெழுவகைத் தோற்றந் தமக்கும்
ஏழெண் டேயத் திறைவர் தமக்கும்
ஒன்பான் கிரகங் களுக்கு நிறீஇப்பின்
இராவண போதா யனர்க்கிசைத் தனனே. ....52

இராவணன் செய்தது

இராவணன் மறைகளை யிசையோ டோதவும்
எழுதாதி னின்றும் மேழ்சுர மெடுத்தும்
பத்தியிற் சாமம் பாடிப் பரசிவன்
கருணையிற் பாதல நின்றுகரை யேறினன். ....53

சூரியன் செய்தது

சூரியன் சந்திரர் நாகசுர முதலிய
துளைதோற் கருவி வாத்திய விலக்கணம்
சுவேத முனிமுத லியோர்க்குச் சொற்றனன். ....54

நந்திகேசுவரர் செய்தது

நந்தி நாட்டிய நிருத்திய நிருத்தம்
ஒரோ வொன்றையு மிருவகை யுஞற்றி
அவற்றையுங் கஞ்சக் கருவி யாதிய
வாத்திய விலக்கணம் பிருங்கி முனிவர்
உருத்திர கணிகைய ரவர்சுதர்க் குரைத்தனர். ....55

அகத்தியர் செய்தது

அகத்திய னவயவ பேதநா லேழனுள்
ஒரோ வொன்றை யிரண்டின் டுஞற்றி
அவற்றை நான்கொடு நந்நான் காக்கிச்
சிவன்சிவை முறையே வொருமையைத் தெரிந்து
ராச சேகர வழுதிக் கிசைத்தனன். ....56

வசிட்டர் செய்தது

வசிட்டன் முகங்கண் முக்கொடு வன்கரம்
பாதஞ் செவிபோற் பன்னு முறையே
சத்தஞ் சோதிடஞ் சிக்ஷை கற்பம்
சந்தசு நிருத்த மாஞ்சதுர் மறையின்
அங்க மவற்றுள் நிருத்தமென் றிதனைச்
சத்தி பராசரன் வியாசற்குச் சாற்றினன். ....57

வியாசர் செய்தது

வியாசன்,
சன்னிய ராகஞ் சகத்திர மாக்கி
அன்னதைத் தன்னருஞ் சீடர்க் கறைந்தனன். ....58

நாரதர் செய்தது

நாரத னரப்புக் கருவிநல் வாத்தியம்
இலக்க ணங்களு மிராகசுர விரிவும்
திரிலோ கத்துள செவ்வி யோர்க்குத்
தெரிவுற வன்பிற் செப்பினன் றானே. ....59

தத்தில கோகளர் செய்தது

தத்திலன் விக்கிமன் றனக்குங் கோகளன்
போசமன் னற்கும் புகன்றனர் றாமே. ....60

தும்புரு

தும்புரு கண்டத் தொனியி னிலக்கணம்
திராக விரிவுந் தெரிந்துய ராஞ்ஞை
வற்க ராதியர்க்கு வகுத்தனன் றானே. ....61

வீரவல்லப்பன் - பரதமுனி

வீரவல்ல பன் விவிதநாட் டியத்தையும்
அவற்றின தடைவும் வாத்திய வணியும்
கண்டான் பரத முனிப்பெயர் கருணையிற்
கொண்டங் குழைக்குப தேசித் தனனதை
அன்னவ ளுத்தர மத்திய தெக்கிண
அரிவையர்க் குங்கோ பிகைக்கு மளித்தனன். ....62

சாரங்கதேவன் மஹாபரதம், மஹாபரதசூடாமணி

சாரங்க தேவன் றன்பெரு முணர்வால்
நவரச முகத்தினும் பதார்த்த மத்தத்தினும்
இராக மங்கத்தினுந் தாளம் பதத்தினும்
சித்தம் சிவத்தினுஞ் செய்து நிர்த்திக்க
அவன்சிங் கார சேகரப் பெயரடைந்து
தன்மதம் பிறர்மத முறவோ ரிலக்கங்
கிரந்த முடையவோர் சார்புநூல் கிளத்தி
அதற்கு மாபரத மெனும்பே ரளித்தனன்
பின்னர்ச்சில் வாணாள் பல்பிணி யுடைய
சிற்றறி வினரிதைக் கற்ற லரிதெனத்
தெரிந்ததைச் சுருக்கிநாற் சகத்திரஞ் செய்து
மாபரத சூடாமணிப்பெயர் புனைந்து
சோமநா தற்குச் சொற்றனன் றானே. ....63

ஆசிரியன் தன்மை

ஈவோன் றன்மை யீத லியற்கை
மலைநிலம் பூவே துலாக்கோ லென்னும்
இன்னரு ளுலைவி லுணர்வுடை யோரே. ....64

ஆடலாசிரியன்

இருவகைக் கூத்தி னிலக்கணங் களையும்
பல்வகைக் கூத்தும் விலக்கிற் புணர்த்துப்
பன்னீ ராடலும் பாட்டும் கொட்டும்
விதிநூற் கொள்கையும் விளங்க வறிந்தாங்
காடலும் பாடலும் பாணியுந் தூக்கும்
கூடிய நெறியிற் குலவுங் காலை
ஒற்றை யிரட்டை முத்திரை நிருத்தம்
உற்றகை யுணர்ந்து கூத்துவருங் காலை
ஆட னிகழிடத் தவிநய மின்மையும்
அவிநய நிகழிடத் தாட லின்மையும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற் கமைந்தவ னாசிரிய னென்ப. ....65

இசையாசிரியன்

யாழ்குழல் சீர்மிட றாழ்குரற் றண்ணுமை
ஆடல் இசைந்த பாட லிசையுடன்
வரிக்கு மாடற்கு முரிப்பொரு ளியக்கித்
தேசிகத் திருவி னோசை கடைப்பிடித்
தோசை யெல்லா மாசின் றுணர்ந்த
அறிவின னாகிக் கவியது குறிப்பும்
ஆடற் றொகுதியும் பகுதிப் பாடலும்
வசையறு கேள்வியும் வகுத்து விரிக்கும்
அசையா மரபின னிசையோ னென்ப. ....66

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.