தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று(16-05-2018) காலை 09.30 மணிக்கு வெளியாக இருக்கின்றன.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 6,903 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதியுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும். இவற்றை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in. என்ற இணையதள முகவரிகளில் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு, குறுந்செய்தியாக, ஆக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும். தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வரும்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பள்ளிகள் வழியாகவும் தனித் தேர்வர்கள் தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை முதல், மே, 19 வரை விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீடு தேவைப்படுவோர் விடைத்தாள் நகல் பெற்ற பின் மறுமதிப்பீடுக்கும் மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் நகல் பெறுவோர் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது, வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
மாணவர்கள் வரும், 21ம் தேதி பிற்பகல் முதல், தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம்.
|