LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

சிறு காப்பியம்

                                     சிறு காப்பியம்

போர் மறவன்

(காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த் 
தலைவி வருந்துகிறாள்.)

தலைவி

என்றன் மலருடல் இறுக அணைக்கும்அக்
குன்றுநேர் தோளையும், கொடுத்த இன்பத்தையும்
உளம்மறக் காதே ஒருநொடி யேனும்!
எனை அவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்!
வான நிலவும், வண்புனல், தென்றலும் 
ஊனையும் உயிரையும் உருக்கின! இந்தக்
கிளிபேச் சோஎனில் கிழித்தது காதையே!
புளித்தது பாலும்! பூ நெடி நாற்றம்!

(காதலன் வரும் காலடி ஓசையிற் காதைச் 
செலுத்துகிறாள்.)

காலடி ஓசை காதில் விழுந்தது.
நீள வாள் அறை சுமந்தகண் 
ணாளன் வருகின்றான்இல்லை அட்டியே!

(தலைவன் வருகை கண்ட தலைவி 
வணக்கம் புகலுகிறாள்)

தலைவன்

வாழிஎன் அன்பு மயிலே, எனைப்பார்!
சூழும்நம் நாட்டுத் தோலாப் பெரும்படை
கிளம்பிற்று! முரசொலி கேள் நீ! விடைகொடு!

(தலைவி திடுக்கிடுகிறாள். அவள் முகம் 
துன்பத்தில் தோய்கிறது.)

மங்கை என்னுயிர் வாங்க வந்தாய்! 
ஒன்றும் என்வாய் உரையாது காண்க!
பாண்டி நாட்டைப் பகைவன் சூழ்ந்தான்
ஆண்டகை என்கடன் என்ன அன்னமே?
நாடுதானே நம்மைப் பெற்றது?
நாமே தாமே நாட்டைக் காப்பவர!¢ 
உடலும் பொருளும் உயிரும் ஈன்ற
கடல்நிகர் நாட்டைக் காத்தற் கன்றோ?
பிழைப்புக் கருதி அமைப்பின்றி வந்த 
அழுக்குளத் தாரிய அரிவைநீ அன்றே!
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்பெரும் பழங்குடி 
நல்லியல் நங்கை நடுக்குறல் தகுமோ?
சென்றுவா என்று நன்று வாழ்த்திச்
சென்றுவர விடைகொடு சிரிப்பொடும் களிப்பொடும்!

தலைவி

பிரியா துன்பால் பெற்ற இன்பத்தை
நினைந்துள்ளம், கண்ணில் நீரைச் சேர்த்து! 
வாழையடி வாழைஎன வந்தஎன் மாண்பு
வாழிய சென்று வருக என்றது.

(தலைவன் தலைவியை ஆரத்தழுவிப் 
பிரியா உளத்தோடு பிரிந்து செல்கிறான்.)

(பகைவன் வாளொடு போர்க்களத்தில் 
எதிர்ப்படுகிறான்¢ வாளை உருவுகின்றான். 
தலைவனும் வாளை உருவினான்.)

தலைவன்

பகையே கேள்நீ, பாண்டிமா நாட்டின்
மாப்புகழ் மறவரின் வழிவந் தவன்நான்!
என்வாள் உன்உயி ரிருக்கும் உடலைச் 
சின்ன பின்னம் செய்ய வல்லது!
வாளை எடுநின் வல்லமை காட்டுக.
(இருவரும் வாட்போர் புரிகிறார்கள்)

(தலைவன் எதிரியின் வாள் புகுந்த தன் 
மார்பைக் கையால் அழுத்தியப்படி சாய்
கிறான்)

தலைவன்

ஆஎன் மார்பில் அவன் வாள் பாய்ந்ததே!
(தரையில் வீழ்ந்து, நாற்றிசையையும் பார்க்கிறான்.)
என்னை நோக்கி என்றன் அருமைக்
கன்னல் மொழியாள், கண்ணீர் உகுத்துச் 
சாப்பாடும் இன்றித் தான்நின் றிருப்பாள்
என்நிலை அவள்பால் யார்போய் உரைப்பார்!

(வானில் பறவை ஒன்று மிதந்து போவதைக் காண்கின்றான்.)

பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்றுகேள்! 
நீபோம் பாங்கில் நேரிழை என்மனை,
மாபெரும் வீட்டு மணிஒளி மாடியில் 
உலவாது மேனி, உரையாது செவ்வாய், 
இமையாது வேற்கண், என்மேல் கருத்தாய்
இருப்பாள் அவள்பால் இனிது கூறுக;
பெருமையை உன்றன் அருமை மணாளன்
அடைந்தான். அவன்தன் அன்னை நாட்டுக் 
குயிரைப் படைத்தான், உடலைப் படைத்தான்,
என்று கூறி ஏகுக மறந்திடேல்!

(தலைவன் தோள் உயர்த்தி உரத்த குரலில்)

பாண்டி மா நாடே, பாவையே!
வேண்டினேன் உம்பால் மீளா விடையே!


ஒன்பது சுவை

1

உவகை

( இரவு! அவள் மாடியில் நின்றபடி, தான் வரச்சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க் கிறாள் அவன் வருகின்றான்.)

காதலன்


என்மேல் உன்றனுக்கு எத்தனை அன்படி 
என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்!
உன்னை யன்றிஇவ் வுலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன்
காத்திருப் பேன்எனக் கழறினை வந்தேன்
பூத்திருக் கும்உன் புதுமுகம் காட்டினை. 
மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி 
நூலே ணியினைக் கால்விரல் பற்றித்
தொத்தும் கிளிப்போல் தொடர்ந்திறங் குவதாய்
முத்தெழுத் தஞ்சல் எழுதினை! உயிரே
இறங்கடி ஏந்தும் என்கை நோக்கி! 

(அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.)

வா பறந்து! வா வா மயிலே!

(அவளைத் தோளில் தாங்கி இறங்குகிறான்.)

வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை;
ஒரே ஒரு முத்தம் உதவு. சரி! பற!
(இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர் குதிரைமேல் 
ஏறி அப்புறப்படுகிறார்கள்)

2

வியப்பு

(இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள்.
குதிரையை ஒரு மரத்தில் கட்டி.)

காதலன்

வந்து சேர்ந்தோம் மலர்ச்சோ லைக்கண்!
என்னிரு தோளும் உன்உடல் தாங்கவும், 
உன்னிரு மலர்க்கைகள் என்மெய் தழுவ்வும்
ஆனது! நகரினை அகன்றோம் எளிதில்!
(இருவரும் உலாவுகின்றனர்)

காதலன்

சோம்பிக் கிடந்த தோகை மாமயில்
தழைவான் கண்டு மழைவான் என்று
களித்தாடு கின்றது காணடி! வியப்பிது! 
(சிறிது தொலைவில் செல்லுகிறார்கள்)

3

இழிப்பு

காதலன்

குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமரத்
திருகிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது!
சுருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்; 
இழ்ந்த தோற்றத்தன் என்னபார்க் கின்றான்?
நமைநோக்கி ஏனவன் நகரு கின்றான்? 
உற்றுபார்! அவன் பெருங் கள்வன்.
காவடி ஓசை காட்டாது மெல்லஅக் 
கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை
உணர்க! அன்புக்குரியாய் உணர்க!

(தம்மை நோக்கி வரும் அத்தீயனை 
இருவரும் பார்க்கிறார்கள்)

4

வெகுளி (கோபம்)

காதலன்

வெகுளியை என்உளத்து விளைக்கின் றானவன்! 
புலிபாய்ந் திடும்எனில் போய்ஒழிந் திடும்நரி!

(காதலன் கண்ணில் கனல் எழுகின்றது. தன் 
உள்ளங்கை மடங்குகின்றது, அந்த கள்வன்
தன்னை நெருங்குவதையும் காதலன் காணு
கின்றான்; காதலி காணுகின்றாள்.)

5

நகை

காதலன்

நட்டு வீழ்ந்தான் நடை தடுமாறி!
கள்ளுண் டான். அவ் வெள்ளத்திலதன்
உள்ளம் கரைத்தான். உணர்வி ழந்தான்.
உடைந்தது முன்பல் ஒழுகிற்று குருதி! 
(இருவரும் சிரிக்கிறார்கள்) 

காதலன்

ஆந்தைபோல் விழித்தான். அடங்காச் சிரிப்பை
நமக்குப் பெண்ணே நல்விருந் தாக்கினான்.
(இருவரும் மறுபுறம் செல்கிறார்கள்)

6

மறம் (வீரம்)

காதலன்

என்ன முழக்கம்? யார் இங்கு வந்தனர்?
கால்பட்டுச் சருகு கலகல என்றது.
(உறையினின்று வாளை உருவும் ஓசை கேட்கிறது.)

காதலன்

எவனோ உரையினின் றுருவினான் வாளை; 
ஒலிஒன்று கிலுக்கென்று கேட்டது பெண்ணே!
ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய்.
நினது தந்தை நீண்டமுடி மன்னன்
அனுப்பிய மறவன் அவனே போலும்!

(காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை உற்று 
நோக்கியிருக்கிறாள்.)

காதலன்

(கன்னெதிர் வந்து நின்ற மறவனை நோக்கி)

அரசன் ஆணையால் அடைந்தவன் நீயே 
முரன் முழங்கும் முன்றிலுக் கப்பால்
அரண்மனை புனைந்த அழகு மாடியில்
வைத்தப்பூ மாலையை வாடாது கொணர்ந்தது-
இத்தோள்! உன்னைஇங்கு எதிர்ப்பதும் இத்தோள்
நேரிழை இன்றி நிலைக்காது வாழ்வெனக்
கோரி அவளைக் கொணர்ந்ததும் இத்தோள்!
போர்மற வர்சூழ் பாரே எதிர்ப்பினும்
நேரில் எதிர்க்க நினைத்ததும் இத்தோள்!
உறையி னின்று வாளை உருவினேன்
தமிழ்நாட்டு மறவன்நீ தமிழ்நாட்டு மறவன்நான் 
என்னையும் என்பால் அன்புவைத் தாளையும்
நன்று வாழ்த்தி நட வந்தவழி!
இலைஎனில் சும்மா இராதே; தொடங்கு போர்!

(வாள் போர் நடக்கிறது.)

காதலன்

மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்;
வாழி தோழா! நின் பெயர் வாழி! 

(வந்தவன் இறந்துடுகிறான்)

7

அச்சம்

(காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கிறான்)

காதலன்

அன்பு மெல்லியல் அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ?
கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச 
வஞ்சக் களவன் மாய்த்திட் டானோ!

(தேடிச் செல்லுகிறான். பல புறங்களிலுமு 
அவன் பார்வை சுழல்கின்றது)

8

அவலம்

(காதலி ஒருபுறம் இறந்து கிடக்கிறாள்.
காதலன் காணுகின்றான்.)

காதலன்

ஐயகோ அவள்தான்! அவள்தான் மாண்டாள், 
பொரிவிழிக் கள்வன் புயலெனத் தோன்றி
அழகு விளக்கை அவித்தான்! நல்ல 
கவிதையின் சுவையைக் கலைத்தான் ஐயகோ!
என்றன் அனபே, என்றன் உயிரே!
என்னால் வந்தாய், என்னுடன் வந்தாய். 
பெண்ணாம என்னுயிர் போனது! குருதியின்
சேற்றில் மிதந்தனுன் சாற்றுச் சுவையுடல்!
கண்கள் பொருக்குமோ காண உன்நிலை!
எண்ணம் வெடித்ததே எல்லாம் நீஎன
இருந்தேன்; இவ்வகை இவ்விடம் இறந்தாய்! 
தனித்தேன், உய்விலை, தையலே தையலே!
என்பால் இயற்கை ஈந்த இன்பத்தைச்
சுவைக்குமுன் மண்ணில் சுவர வைத்துக்
கண்ணீர் பெருக்கிதான் கதற வைத்ததே!
ஐயகோ பிரிந்தாய்! ஐயகோ பிரிந்தாய்! 

9

அறநிலை

கல்வி இல்லார்க்குக் கல்வி ஈகிலார்
செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார்
பசிப்பிணி, நோக்கித் தனிநடை கொண்டது!
அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ
இன்சொல்லோ என்ன இருத்தல் கூடும்? 
வாழ்வான் ஒருவன் வாழ்வானைக் காணின் 
வீழ இடும்பை விளைக்கின் றானே!
வையம் உய்யுமாறு
செய்வன செய்து கிடப்பேன் இனிதே! 

சிறு காப்பியம் முற்றும்.


by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.