LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-59

6.059.திருவெண்ணி 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர். 
தேவியார் - அழகியநாயகியம்மை. 
2676 தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்
தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்
பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.1
வெண்ணி என்ற திருத்தலத்திலே விரும்பித் தங்கியிருக்கின்ற உலகியலிலிருந்த வேறுபட்டவராகிய சிவபெருமானார், தொண்டுகளால் விளங்கும் அடியவர்களுக்கு ஒப்பற்ற வழியாய் உள்ளவரும், திருநீறு அணிந்த மார்பினரும், தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி தழற்பிழம்பாய்க் காட்சி வழங்கிய பழம்பொருளானவரும், வண்டுகள் தங்கும் கொன்றை மாலை அணிந்தவரும், தேவர்களுக்காக விடத்தை உண்டவலியவரும், பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவரும் ஆவார்.
2677 நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும்
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.2
செம்மேனியில் வெண்ணீறு பூசியவரும், நெற்றிக் கண்ணரும், பார்வதி பாகரும், பூந்துருத்தியில் உறையும் பழையவரும், யானைக் கொம்பு போன்ற பிறையை முடிமாலையாச் சூடியவரும், வளைகுளம், மறைக்காடு இவற்றில் தங்கியவரும், தம்மை விரும்பும் அடியாருடைய உள்ளத்தில் உறைபவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தர் ஆவார்.
2678 கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்
கரிகாட்டில் எரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்
பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.3
வெண்ணி அமர்ந்துறையும் விகிர்தனார், கையில் முத்தலைச் சூலம் ஏந்தினாரும், சுடுகாட்டு நெருப்பில் கூத்து நிகழ்த்தும் கடவுளும், படமெடுக்கும் பாம்பினை ஆட்டுபவரும், தம்மை வழிபடுகின்றவர்களின் பாவத்தை அழிப்பவரும், கயல் மீன்கள் பாயும் வயல்களை உடைய திருப்புன்கூர் மேவிய செல்வரும், உடல்முழுதும் வெண்ணீறு பூசியவரும் ஆவர்.
2679 சடையேறு புனல்வைத்த சதுர னாருந்
தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி
யுண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.4
சடையில் கங்கை வெள்ளத்தைச் சூடிய திறலுடைய வரும், தக்கனுடைய பெரிய வேள்வி நிறைவேறாமல் தடுத்தவரும், உடையாக அணிந்த புலித்தோல் மீது பாம்பினை இறுக்கிக் கட்டிப் பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும், நீர்மடையில் ஏறிக் கயல்பாயு மாறு நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட மயிலாடுதுறையின் தலைவரும், காளை எழுதிய கொடியை உயர்த்திய எம் புனிதரும், வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே.
2680 மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி
மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்
பருப்பதமும் பாசூரும் மன்னி னாரும்
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்
கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.5
ஐம்பூதங்களும், அவற்றின் பண்புகளுமாய் நிலைபெற்றவரும், பண்ணோடு கூடிய பாடலும் கூத்தும் நிகழும் சீசைலம், பாசூர் இவற்றில் உறைபவரும், நெற்றிக்கண்ணினரும், மண்டையோட்டினை ஏந்தி வீட்டு வாயில்தோறும் பிச்சை ஏற்கும் செயலை உடையவரும், பிறையை முடிமாலையாக உடையவரும், வெண்ணியமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2681 வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாரும்
கூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும்
குரைகழ லாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்
ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
வேடுவராய் மேல்விசயற் கருள்செய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.6
அடியவருக்கு வீட்டுலகம் நல்குபவரும், விடமுண்ட நீலகண்டரும், பகைவருடைய மும்மதில்களையும் எரித்தவரும், திருவடியால் கூற்றுவனை உதைத்தவரும், படமெடுத்தாடும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவரும், கல்லால மர நிழலிலிருந்து அறத்தை உபதேசித்தவரும், வேடராய் முன்னொரு காலத்தில் அருச்சுனனுக்கு அருளியவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2682 மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
மடவா ளவளோடு மானொன் றேந்திச்
சிட்டிலங்கு வேடத்த ராகி நாளுஞ்
சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த
காலன்றன் கால மறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.7
தேன்பொருந்திய கொன்றைமாலை சூடி மான் ஒன்றைக் கையில் ஏந்திப் பார்வதியோடு ஞானம் புலப்படும் வேடத் தோடும் சிலவாகிய பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும், உறுதியான பாசத்தால் மார்க்கண்டேயனைக் கட்டவந்த கூற்றுவனுடைய வாழ் நாளைப் போக்கியவரும், ஒளிவீசும் வெள்ளிய காதணி சேரும் காதுகளை உடையவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2683 செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்
திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்
ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
வெஞ்சினத்த வேழமது உரிசெய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.8
செஞ்சடையில் வெண்பிறை சூடியவரும், திருவால வாய் உறையும் செல்வரும், மைதீட்டிய கண்களை உடைய பார்வதி பாகரும், நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுமாகி இருப்பவரும், மேகத்தை அளாவிய நீண்ட சோலைகளையும் மாட வீதிகளையும் மதிலையும் உடைய ஆரூரில் புகுந்து அங்கே நிலையாகத் தங்கிய வரும், மிக்க கோபத்தை உடைய யானையின் தோலை உரித்தவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2684 வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
களங்கொளவென் சிந்தை யுள்ளே மன்னினாருங்
கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
உளங்குளிர அமுதூறி யண்ணிப் பாரும்
உத்தமரா யெத்திசையும் மன்னி னாரும்
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.9
வளமான பிறைசூடும் சடையினரும், தேவர்களுக்காக விடத்தை உண்ட வலியவரும், என் உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு தங்கியவரும் கச்சி ஏகம்பத்து உறைபவரும், என் உள்ளம் குளிருமாறு அமுதமாக ஊற்றெடுத்து இனிப்பவரும், மேம்பட்டவராய் எல்லாத் திசைகளிலும் நிலைபெற்றிருப்பவரும், ஒளிவீசும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2685 பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்
புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்
குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்
திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.059.10
பொன்போல் விளங்கும் கொன்றை மாலை சூடிப் புகலூரிலும் பூவணத்திலும் உறைபவரும், அச்சம் தரும் முத்தலைச் சூலம் ஏந்தியவரும், குளிர்ச்சி தரும் கங்கைபொருந்திய செஞ்சடையை உடைய இளையரும், இராவணனுடைய பத்துத்தலைகளையும் தம் காலின் அழகிய விரலால் வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவரும், மின்னல்போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.