LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

ஆறாம் திருமுறை - முதற் பகுதி


6. 01 கோயில் - பெரியதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

1    அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை
    அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
    தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
    கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
    பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.1
2    கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
    காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
    அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
    ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
    மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
    வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.2
3    கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
    கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
    வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
    வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
    அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
    அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
    பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.3
4    அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை
    அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
    மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை
    மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்
    திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
    திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
    பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.4
5    அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
    அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி
    வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
    வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
    பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
    பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
    பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.5
6    கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக்
    கனவயிரக் குன்றனைய காட்சி யானை
    அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை
    அருமறையோ டாறங்க மாயி னானைச்
    சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
    சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
    பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.6
7    வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
    வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
    அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
    அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்
    சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்
    துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
    பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.7
8    காரானை ஈருரிவைப் போர்வை யானைக்
    காமருபூங் கச்சியே கம்பன் றன்னை
    ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை
    அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
    பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
    பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
    பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.8
9    முற்றாத பால்மதியஞ் சூடினானை
    மூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச்
    செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்
    திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
    குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்
    கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.9
10    காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
    கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்
    சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
    திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
    ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
    ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
    பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.     6.1.10

திருச்சிற்றம்பலம்


6. 02 கோயில் - புக்கதிருத்தாண்டகம்


திருச்சிற்றம்பலம்

11     மங்குல் மதிதவழும் மாட வீதி
    மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
    கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
    குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
    தங்கு மிடமறியார் சால நாளார்
    தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
    பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.1
12    நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
    நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்
    பாகப் பொழுதெல்லாம் பாசூர்த் தங்கிப்
    பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
    வேதமும் வேள்விப் புகையு மோவா
    விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
    போகமும் பொய்யாப் பொருளு மானார்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.2
13    துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலுந்
    தூமதியும் பாம்பு முடையார் போலும்
    மறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்
    மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்
    அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
    அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
    புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.3
14    வாரேறு வனமுலையாள் பாக மாக
    மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
    சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்
    திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
    காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த
    கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
    போரேறு தாமேறிப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.4
15    காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
    கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட
    ஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும்
    உத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்
    சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்
    திருவாரூர்த் திருமூலத் தான மேயார்
    போரார் விடையேறிப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.5
16    காதார் குழையினர் கட்டங் கத்தார்
    கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
    மூதாயர் மூதாதை யில்லார் போலும்
    முதலு மிறுதியுந் தாமே போலும்
    மாதாய மாதர் மகிழ வன்று
    மன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாட்
    போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.6
17    இறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும்
    இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
    பிறந்தார்க்கு மென்றும் பிறவா தார்க்கும்
    பெரியான்றன் பெருமையே பேச நின்று
    மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
    மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
    புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.7
18    குலாவெண் டலைமாலை யென்பு பூண்டு
    குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்
    கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
    கையோ டனலேந்திக் காடு றைவார்
    நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
    நிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்
    புலால்வெண் டலையேந்திப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.8
19    சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
    சங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
    பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
    படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
    வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லாம்
    மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
    பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்றப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.9
20    பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்
    பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்
    ஏதங்கள் தீர இருந்தார் போலும்
    எழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்
    வேதங்க ளோதியோர் வீணை யேந்தி
    விடையொன்று தாமேறி வேத கீதர்
    பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.     6.2.10
21    பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
    பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
    சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத்
    தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
    விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
    ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
    கட்டங்கங் கையதே சென்று காணீர்
    கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.     6.2.11

திருச்சிற்றம்பலம்


6. 03 திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

22     வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை
    வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
    பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
    பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
    அறிதற் கரியசீ ரம்மான் றன்னை
    அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
    எறிகெடிலத் தானை இறைவன் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.1
23    வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை
    வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னைப்
    புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னைப்
    பொன்பிதிர்ந் தன்ன சடையான் றன்னை
    வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை
    வாரா வுலகருள வல்லான் றன்னை
    எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.2
24    முந்தி யுலகம் படைத்தான் றன்னை
    மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
    சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னைத்
    தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னைச்
    சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
    செழுங்கெடில வீரட்ட மேவி னானை
    எந்தை பெருமானை ஈசன் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.3
25    மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
    மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்
    அந்தரமு மலைகடலு மானான் றன்னை
    அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னைக்
    கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்
    கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
    இந்திரனும் வானவருந் தொழச்செல் வானை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.4
26    ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
    உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
    வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
    வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
    அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன்
    அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
    திருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்
    டேழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.5
27    ஆறேற்க வல்ல சடையான் றன்னை
    அஞ்சனம் போலு மிடற்றான் றன்னைக்
    கூறேற்கக் கூறமர வல்லான் றன்னைக்
    கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை
    நீறேற்கப் பூசும் அகலத் தானை
    நின்மலன் றன்னை நிமலன் றன்னை
    ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.6
28    குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
    குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
    உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்
    டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
    வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
    வானவர்க ளேத்தப் படுவான் றன்னை
    எண்டிசைக்கு மூர்த்தியாய் நின்றான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.7
29    உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
    ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
    கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
    கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்
    மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் றன்னை
    மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
    எறிகெடில நாடர் பெருமான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.8
30    நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
    நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
    மறையானை மாசொன் றிலாதான் றன்னை
    வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னைக்
    கறையானைக் காதார் குழையான் றன்னைக்
    கட்டங்க மேந்திய கையி னானை
    இறையானை எந்தை பெருமான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.9
31    தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
    தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
    வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
    வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் றன்னைக்
    கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலு மூதுங்
    கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
    எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.10
32    முலைமறைக்கப் பட்டுநீ ராடப் பெண்கள்
    முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித்
    தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
    தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
    மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை
    மதனழியச் செற்றசே வடியி னானை
    இலைமறித்த கொன்றையந் தாரான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.     6.3.11

திருச்சிற்றம்பலம்


6. 04 திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

33     சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச்
    சடாமகுடத் திருத்துமே சாம வேதக்
    கந்தருவம் விரும்புமே கபால மேந்து
    கையனே மெய்யனே கனக மேனிப்
    பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
    பசுவேறு மேபரம யோகி யாமே
    ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.1
34    ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
    இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
    பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
    படவரவந் தடமார்பிற் பயில்வித் தானே
    நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே
    நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே
    ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.2
35    முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
    முதலாகி நடுவாகி முடிவா னானே
    கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
    கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
    பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
    பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
    அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.3
36    செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
    வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
    வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்
    சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
    கையனே காலங்கள் மூன்றா னானே
    கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
    ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
    அவனாகி லதிகைவீ ரட்ட னாமே.    6.4.4
37    பாடுமே யொழியாமே நால்வே தமும்
    படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்
    சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்
    சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
    கூடுமே குடமுழவம் வீணை தாளங்
    குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்
    தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.5
38    ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள
    உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
    விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
    வெள்ளப் புனற்கங்கை செஞ்சடைமேல்
    இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
    இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்
    அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.6
39    குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
    குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே
    கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
    கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
    எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
    ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்
    அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.7
40    மாலாகி மதமிக்க களிறு தன்னை
    வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
    மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்
    வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே
    கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்
    குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
    ஆலால முண்டிருண்ட கண்டத் தானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.8
41    செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
    செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
    வம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல்
    மணவாள னேவலங்கை மழுவா ளனே
    நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
    நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
    அம்பனே அண்டகோ சரத்து ளானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.9
42    எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்
    இளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே
    கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
    கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
    தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
    சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
    அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.10
43    நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
    நீண்டானே நேரொருவ ரில்லா தானே
    கொடியேறு கோலமா மணிகண் டனே
    கொல்வேங்கை அதளனே கோவ ணவனே
    பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்
    புவலோகந் திரியுமே புரிநூ லானே
    அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.     6.4.11

திருச்சிற்றம்பலம்


6. 05 திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

44     எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
    கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
    கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
    கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
    கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
    வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
    வீரட்டங் காதல் விமலா போற்றி.     6.5.1
45    பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
    பல்லூழி யாய படைத்தாய் போற்றி
    ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி
    உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி
    காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
    கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
    ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.     6.5.2
46    முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
    முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
    எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
    ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
    சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
    சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
    தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
    திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.     6.5.3
47    சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி
    தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
    கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
    குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
    பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
    பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
    ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.     6.5.4
48    நீறேறு நீல மிடற்றாய் போற்றி
    நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
    கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
    கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
    ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
    அடியார்கட் காரமுத மானாய் போற்றி
    ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
    இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.     6.5.5
49    பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
    பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
    வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
    வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
    நாடுவார் நாடற் கரியாய் போற்றி
    நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
    ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.     6.5.6
50    மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
    மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
    விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
    வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
    பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
    பார்முழுது மாய பரமா போற்றி
    கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
    கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.     6.5.7
51    வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
    விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
    துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
    தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
    நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
    நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
    அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.     6.5.8
52    சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
    சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
    புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
    புண்ணியனே போற்றி புனிதா போற்றி
    சந்தியாய் நின்ற சதுரா போற்றி
    தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
    அந்தியாய் நின்ற அரனே போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.     6.5.9
53    முக்கணா போற்றி முதல்வா போற்றி
    முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
    தக்கணா போற்றி தருமா போற்றி
    தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
    தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
    துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
    எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
    எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.     6.5.10

திருச்சிற்றம்பலம்


6. 06 திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

54     அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
    அருமறையான் சென்னிக் கணியாமடி
    சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
    சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
    பரவுவார் பாவம் பறைக்கும்மடி
    பதினெண் கணங்களும் பாடும்மடி
    திரைவிரவு தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.     6.6.1
55     கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
    குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
    படுமுழவம் பாணி பயிற்றும்மடி
    பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
    கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
    கடல்வையங் காப்பான் கருதும்மடி
    நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
    நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.     6.6.2
56     வைதெழுவார் காமம்பொய் போகாவடி
    வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி
    கைதொழுது நாமேத்திக் காணும்மடி
    கணக்கு வழக்கைக் கடந்தவடி
    நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி
    நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
    தெய்வப் புனற்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.     6.6.3
57     அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
    அழகெழுத லாகா அருட்சேவடி
    சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
    சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
    பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
    பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
    திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.     6.6.4
58     ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
    ஊழிதோ றூழி உயர்ந்தவடி
    பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
    புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
    இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
    இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
    திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.     6.6.5
59     திருமகட்குச் செந்தா மரையாமடி
    சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
    பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
    புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
    உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
    உருவென் றுணரப் படாதவடி
    திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.     6.6.6
60     உரைமாலை யெல்லா முடையவடி
    உரையால் உணரப் படாதவடி
    வரைமாதை வாடாமை வைக்கும்மடி
    வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
    அரைமாத் திரையில் லடங்கும்மடி
    அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
    கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
    கமழ்வீரட் டானக் காபாலியடி.     6.6.7
61     நறுமலராய் நாறு மலர்ச்சேவடி
    நடுவாய் உலகநா டாயவடி
    செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
    தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
    மறுமதியை மாசு கழுவும்மடி
    மந்திரமுந் தந்திரமு மாயவடி
    செறிகெடில நாடர் பெருமானடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.     6.6.8
62    அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
    அடியார்கட் காரமுத மாயவடி
    பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
    பற்றற்றார் பற்றும் பவளவடி
    மணியடி பொன்னடி மாண்பாமடி
    மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
    தணிபாடு தண்கெடில நாடன்னடி
    தகைசார் வீரட்டத் தலைவனடி.     6.6.9
63     அந்தாம ரைப்போ தலர்ந்தவடி
    அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி
    முந்தாகி முன்னே முளைத்தவடி
    முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
    பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
    பவளத் தடவரையே போல்வானடி
    வெந்தார் சுடலைநீ றாடும்மடி
    வீரட்டங் காதல் விமலனடி.     6.6.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருவீரட்டேசுவரர்,
தேவியார் - திருவதிகைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


6. 07 திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

64     செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ்
    சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்
    தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந்
    தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும்
    நல்லூருந் தேவன் குடிமருகலும்
    நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்
    கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக்
    கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே.    6.7.1
65     தீர்த்தப் புனற்கெடில வீரட்டமுந்
    திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
    ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை
    அறையணி நல்லூரும் அரநெறியும்
    ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன்
    இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
    கார்த்தயங்கு சோலைக் கயிலாயமுங்
    கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே.     6.7.2
66     சிறையார் புனற்கெடில வீரட்டமுந்
    திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்
    துறையார் வனமுனிக ளேத்தநின்ற
    சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும்
    அறையார் புனலொழுகு காவிரிசூழ்
    ஐயாற் றமுதன் பழனம்நல்ல
    கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங்
    கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே.     6.7.3
67     திரையார் புனற்கெடில வீரட்டமுந்
    திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
    உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
    ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
    வரையா ரருவிசூழ் மாநதியும்
    மாகாளங் கேதாரம் மாமேருவுங்
    கரையார் புனலொழுகு காவிரிசூழ்
    கடம்பந் துறையுறைவார் காப்புக்களே.     6.7.4
68     செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
    திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங்
    கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங்
    குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
    பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும்
    பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்
    கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்
    கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.     6.7.5
69     தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ்
    செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று
    பவ்வந் திரியும் பருப்பதமும்
    பறியலூர் வீரட்டம் பாவநாசம்
    மவ்வந் திரையும் மணிமுத்தமும்
    மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
    கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங்
    கழிப்பாலை தம்முடைய காப்புக்களே.     6.7.6
70     தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
    சிக்காலி வல்லந் திருவேட்டியும்
    உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
    உறையூர் நறையூர் அரணநல்லூர்
    விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
    மீயச்சூர் வீழி மிழலைமிக்க
    கண்ணார் நுதலார் கரபுரமுங்
    காபாலி யாரவர்தங் காப்புக்களே.     6.7.7
71     தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்
    திண்டீச் சரமுந் திருப்புகலூர்
    எள்ளும் படையான் இடைத்தானமும்
    ஏயீச் சரமுநல் லேமங்கூடல்
    கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங்
    குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
    கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங்
    காரோணந் தம்முடைய காப்புக்களே.     6.7.8
72     சீரார் புனற்கெடில வீரட்டமுந்
திருக்காட்டுப் பள்ளி திருவெண்காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும்
    நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்
    காரார் கமழ்கொன்றைத் தாரார்க்கென்றுங்
    கடவூரில் வீரட்டங் காப்புக்களே.     6.7.9
73     சிந்தும் புனற்கெடில வீரட்டமுந்
    திருவாஞ் சியமுந் திருநள்ளாறும்
    அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
    ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்
    எந்தம் பெருமாற் கிடமாவது
    இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
    கந்தங் கமழுங் கரவீரமுங்
    கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.     6.7.10
74     தேனார் புனற்கெடில வீரட்டமுந்
    திருச்செம்பொன் பள்ளிதிருப் பூவணமும்
    வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
    மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி
    ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
    இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலைக்
    கானார் மயிலார் கருமாரியுங்
    கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.     6.7.11
75     திருநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
    திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
    வருநீர் வளம்பெருகு மானிருபமும்
    மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
    பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
    பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்
    கருநீல வண்டரற்றுங் காளத்தியுங்
    கயிலாயந் தம்முடைய காப்புக்களே.     6.7.12

திருச்சிற்றம்பலம்


6.8 திருக்காளத்தி - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

76     விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
    வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
    மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
    மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
    பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
    பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
    கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட
    கணநாதன் காணவனென் கண்ணு ளானே.     6.8.1
77     இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
    எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
    முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
    முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
    படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
    பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
    கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.     6.8.2
78     நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
    ஞானப் பெருங்கடற்கோர் நாவா யன்ன
    பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண்
    புரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண்
    சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண்
    தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங்
    காரணன்காண் காளத்தி காணப் பட்ட
    கணநாதன் காணவனென் கண்ணு ளானே.     6.8.3
79     செற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண்
    திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க்
    குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
    உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்
    சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்
    சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
    கற்றான்காண் காளத்தி காணப் பட்ட
    கணநாதன் காணவனென் கண்ணு ளானே.    6.8.4
80     மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
    வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
    இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
    ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
    புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
    பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
    கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.     6.8.5
81     எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
    ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்தப்
    பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்
    புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்
    நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு
    நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
    கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.     6.8.6
82     கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
    கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
    எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
    எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
    திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
    தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
    கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.    6.8.7
83     இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
    இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
    வில்லாடி வேடனா யோடி னான்காண்
    வெண்ணூ லுஞ்சேர்ந்த அகலத் தான்காண்
    மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
    மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
    கல்லாலின் கீழிருந்த காபா லிகான்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.    6.8.8
84     தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
    திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க
    ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்
    நம்பன்காண் ஞானத் தொளியா னான்காண்
    வானப்பே ரூரு மறிய வோடி
    மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக்
    கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.    6.8.9
85     இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
    ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
    குறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்
    குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
    மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
    மறைக்காட் டுறையும் மணிகண் டன்காண்
    கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.    6.8.10
86     உண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண்
    ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்
    பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்
    பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
    அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்
    அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
    கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே.     6.8.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர்,
தேவியார் - ஞானப்பூங்கோதையாரம்மை.

திருச்சிற்றம்பலம்


6.9 திருஆமாத்தூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

87    வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
    வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
    கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
    கடியதோர் விடையேறிக் காபா லியார்
    சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
    தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
    அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.1
88     வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
    விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
    கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்
    கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்
    நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
    நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
    அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்
    ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே.     6.9.2
89     கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்
    கடிய விடையேறிக் காபா லியார்
    இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
    இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
    பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
    பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
    அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.3
90     பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
    படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
    கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
    இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
    பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
    பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
    அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.4
91     உருளுடைய தேர்புரவி யோடும் யானை
    ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
    றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
    இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
    பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
    புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ
    அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.5
92     வீறுடைய ஏறேறி நீறு பூசி
    வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக்
    கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
    குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
    பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்
    பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
    ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.    6.9.6
93     கையோர் கபாலத்தர் மானின் றோலர்
    கருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே
    செய்ய திருமேனி வெண்ணீ றாடித்
    திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
    மெய்யொரு பாகத் துமையை வைத்து
    மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து
    ஐயனார் போகின்றார் வந்து காணீர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.7
94     ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
    றொற்றியூர் உம்மூரே உணரக் கூறீர்
    நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
    நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
    என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
    இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ
    அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
    டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.8
95     கல்லலகு தாங்கொண்டு காளத் தியார்
    கடியவிடை யேறிக் காணக் காண
    இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
    என்றாருக் கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்
    சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
    துருத்தி பழனமோ நெய்த்தானமோ
    அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.9
96     மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
    மணிமிழலை மேய மணாளர் போலுங்
    கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங்
    கொடுகொட்டி தாள முடையார் போலுஞ்
    செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந்
    தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
    அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.     6.9.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆமாத்தீசுவரர்,
தேவியார் - அழகியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


6.10 திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

97    நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
    நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்
    பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்
    பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
    ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
    அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
    பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.1
98     காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
    களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
    ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
    உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற்
    பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
    குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
    பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.2
99    பூதப் படையுடையார் பொங்கு நூலார்
    புலித்தோ லுடையினார் போரேற் றினார்
    வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
    விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி
    ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
    உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
    பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.3
100     நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
    நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
    ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
    ஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார்
    வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
    மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
    பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.4
101    தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
    துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
    இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
    இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
    அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
    அருக்கனா யாரழலாய் அடியார் மேலைப்
    பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.5
102     கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
    கானப்பேர் காதலார் காதல் செய்து
    மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
    மானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண
    நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
    நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
    படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.6
103     முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
    மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
    கற்றார் பரவுங் கழலார் திங்கள்
    கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
    பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
    பான்மையா லூழி உலக மானார்
    பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.7
104     கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார்
    கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப்
    பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
    பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
    மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
    மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்
    பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.8
105     ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
    இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
    நீறேறு மேனியார் நீல முண்டார்
    நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
    ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
    அனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
    பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.9
106     கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
    காரோணங் காதலார் காதல் செய்து
    நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
    நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
    மல்லூர் மணிமலையின் மேலி ருந்து
    வாளரக்கர் கோன்றலையை மாளச் செற்றுப்
    பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.     6.10.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர்,
தேவியார் - காம்பன்னதோளியம்மை.

திருச்சிற்றம்பலம்


6.11 திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

107     பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப்
    பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
    துறவாதே கட்டறுத்த சோதி யானைத்
    தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்
    திறமாய எத்திசையுந் தானே யாகித்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நிறமா மொளியானை நீடூ ரானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.     6.11.1
108     பின்றானும் முன்றானு மானான் றன்னைப்
    பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னை
    நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி
    நல்வினையுந் தீவினையு மானான் றன்னைச்
    சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நின்றாய நீடூர் நிலாவி னானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.     6.11.2
109     இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை
    இனியநினை யாதார்க் கின்னா தானை
    வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
    மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
    செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நெல்லால் விளைகழனி நீடூ ரானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.     6.11.3
110     கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
    கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப்
    பலவாய வேடங்கள் தானே யாகிப்
    பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
    சிலையாற் புரமெரித்த தீயா டியைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நிலையார் மணிமாட நீடூ ரானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.    6.11.4
111     நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
    நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
    ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
    அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
    தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நீக்காத பேரொளிசேர் நீடு ரானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.     6.11.5
112     பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த
    முடையானை முடைநாறும் புன்க லத்தில்
    ஊணலா வூணானை யொருவர் காணா
    உத்தமனை யொளிதிகழும் மேனி யானைச்
    சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நீணுலா மலர்க்கழனி நீடூ ரானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.    6.11.6
113     உரையார் பொருளுக் குலப்பி லானை
    ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப்
    புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்
    புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத்
    திரையார் புனல்சேர் மகுடத் தானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நிரையார் மணிமாட நீடூ ரானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.     6.11.7
114     கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை
    மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
    ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
    அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்
    சீரரவக் கழலானை நிழலார் சோலைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நீரரவத் தண்கழனி நீடூ ரானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.    6.11.8
115     கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
    கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
    பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
    புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்
    செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.     6.11.9
116    இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே
    இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை
    நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை
    நலனழித்து நன்கருளிச் செய்தான் றன்னைத்
    திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நிகழுமா வல்லானை நீடூ ரானை
    நீதனே னென்னேநான் நினையா வாறே.     6.11.10

இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன. திருப்புன்கூரில்,
சுவாமிபெயர் - சிவலோகநாதர்,
தேவியார் - சொக்கநாயகியம்மை.
திருநீடூரில்,
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர்,

திருச்சிற்றம்பலம்


6.12 திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

117    ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
    ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து
    தாமெடுத்த கூரை தவிரப் போவார்
    தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்
    கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
    கழிப்பாலை மேய கபாலப் பனார்
    வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.     6.12.1
118    முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
    முன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை
    பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
    பிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்
    கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை
    கழிப்பாலை மேய கபாலப் பனார்
    மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.     6.12.2
119    நெளிவுண்டாக் கருதாதே நிமலன் றன்னை
    நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
    ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
    ஒருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்
    களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக்
    கழிப்பாலை மேய கபாலப் பனார்
    வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.     6.12.3
120    பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
    புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
    அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி
    ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்
    கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
    கழிப்பாலை மேய கபாலப் பனார்
    மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.    6.12.4
121    விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
    வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்
    எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
    இறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்
    கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
    கழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார்
    மண்ணானாய் மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.    6.12.5
122    விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
    விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்
    பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
    பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
    கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
    கழிப்பாலை மேய கபாலப் பனார்
    வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.     6.12.6
123    பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்
    பேதப் படுகின்ற பேதை மீர்காள்
    இணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
    எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
    கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
    கழிப்பாலை மேய கபாலப் பனார்
    மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.    6.12.7
124    இயல்பாய ஈசனை எந்தை தந்தை
    என்சிந்தை மேவி யுறைகின் றானை
    முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான
    தியம்பகன் திரிசூலத் தன்ன கையன்
    கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்
    கழிப்பாலை மேய கபாலப் பனார்
    மயலாய மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.     6.12.8
125    செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
    சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
    உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
    காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்
    கற்றதோர் நூலினன் களிறு செற்றான்
    கழிப்பாலை மேய கபாலப் பனார்
    மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.     6.12.9
126    பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்
    புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
    இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
    ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்
    கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
    கால்விரலா லூன்று கழிப்பா லையார்
    வருதலங்க மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.     6.12.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்,
தேவியார் - வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


6.13 திருப்புறம்பயம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

127    கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்
    கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்
    நடமாடு நன்மருகல் வைகி நாளும்
    நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்
    படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
    பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்
    பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.1
128     முற்றொருவர் போல முழுநீ றாடி
    முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
    ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை
    ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்
    மற்றொருவ ரில்லைத் துணை யெனக்கு
    மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
    புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.2
129     ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
    ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
    ஏகாச மாவிட்டோ டொன்றேந் திவந்
    திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
    பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
    பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
    போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.3
130    பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப்
    பனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர்
    நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை
    நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்
    கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்
    கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்
    பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.4
131    செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
    சிரமாலை சூடிச் சிவந்த மேனி
    மத்தகத்த யானை யுரிவை மூடி

    மடவா ளவளோடு மானொன் றேந்தி
    அத்தவத்த தேவர் அறுப தின்மர்
    ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
    புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.5
132    நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
    நல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப்
    பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
    பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்
    துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
    துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
    புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.6
133    மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
    மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
    செறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு
    திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி
    நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
    நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
    பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.7
134    நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
    நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
    கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட் டியுங்
    குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை
    நல்லாலை நல்லூரே தவிரே னென்று
    நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப்
    பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.8
135    விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
    வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
    திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
    திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
    அரையேறு மேகலையாள் பாக மாக
    ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
    புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.9
136    கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
    குமரனும் விக்கின விநாய கனும்
    பூவாய பீடத்து மேல யனும்
    பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
    பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
    பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
    பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
    புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.     6.13.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர்,
தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.

திருச்சிற்றம்பலம்


6.14 திருநல்லூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

137     நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
    நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
    சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
    செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
    இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
    இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
    நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.1
138    பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
    புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
    மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
    வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
    மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
    வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
    நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.2
139    தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
    துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
    பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
    பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
    சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
    சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
    நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.3
140    வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
    பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
    கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
    கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
    சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்
    சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
    நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.4
141    விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
    வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்
    கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
    கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
    திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
    திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
    நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.5
142    உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
    உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
    மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
    மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
    செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
    சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
    நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.6
143    மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
    மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
    நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
    நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
    ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
    ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
    நாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.7
144    குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
    குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
    உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
    உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
    நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
    நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
    நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.8
145    சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
    திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
    நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
    நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
    கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
    குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
    நன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.9
146    பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
    பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
    ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
    அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
    ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
    உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
    நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.10
147    குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
    குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
    உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
    ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
    புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
    புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
    நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
    நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.     6.14.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்,
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.

திருச்சிற்றம்பலம்


6.15 திருக்கருகாவூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

148    குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
    கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
    பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
    பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
    ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
    உள்நின்ற நாவிற் குரையா டியாங்
    கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.1
149    வித்தாம் முளையாகும் வேரே தானாம்
    வேண்டு முருவமாம் விரும்பி நின்ற
    பத்தா மடியார்க்கோர் பாங்க னுமாம்
    பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாந்
    தொத்தா மமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
    தோன்றாதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
    கத்தாம் அடியேற்குக் காணா காட்டுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.2
150    பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
    பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
    கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
    கொண்ட சமயத்தார் தேவ னாகி
    ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்
    ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
    காத்தானாங் காலன் அடையா வண்ணங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.3
151    இரவனாம் எல்லி நடமா டியாம்
    எண்டிசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
    அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம்
    ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங்
    குரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங்
    கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்
    கரவனாங் காட்சிக் கெளியா னுமாங்
    கண்ணாங் கருவூ ரெந்தை தானே.     6.15.4
152    படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
    பரிசொன் றறியாமை நின்றான் றானாம்
    உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
    ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
    அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம்
    அசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகுங்
    கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.5
153    மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
    மூவாத மேனிமுக் கண்ணி னானாஞ்
    சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
    செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
    மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
    மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாங்
    காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.6
154    அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
    ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
    திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
    தீவினை நாசனென் சிந்தை யானாம்
    உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
    உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
    கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.7
155    துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
    சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
    படிதானாம் பாவ மறுப்பா னாகும்
    பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங்
    கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
    கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்
    கடியானாங் காட்சிக் கரியா னாகுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.8
156    விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
    விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
    பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
    பலபலவும் பாணி பயின்றான் றானாம்
    எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
    என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்
    கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.9
157    பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி
    உள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானாய்ச்
    செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
    சிலைகுனியத் தீமூட்டுந் திண்மை யானாம்
    அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி
    இருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக்
    கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.10
158    ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
    ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
    இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
    இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
    அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
    ஆகாய மந்திரமு மானா னாகுங்
    கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.     6.15.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்,
தேவியார் - கரும்பனையாளம்மை.

திருச்சிற்றம்பலம்


6.16 திருவிடைமருது - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

159     சூலப் படையுடையார் தாமே போலுஞ்
    சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
    மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
    மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
    வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
    மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
    ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.    6.16.1
160    காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்
    காரானை ஈருரிவை போர்த்தார் போலும்
    பாரார் பரவப் படுவார் போலும்
    பத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்
    சீரால் வணங்கப் படுவார் போலுந்
    திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
    ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.     6.16.2
161    வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
    விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்
    பூதங்க ளாய புராணர் போலும்
    புகழ வளரொளியாய் நின்றார் போலும்
    பாதம் பரவப் படுவார் போலும்
    பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
    ஏதங்க ளான கடிவார் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.    6.16.3
162    திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
    திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
    விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
    வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
    பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
    பரங்குன்ற மேய பரமர் போலும்
    எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.     6.16.4
163    ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
    உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்
    பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
    படுவெண் டலையிற் பலிகொள் வாரும்
    மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
    மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்
    ஏகம்ப மேயாரு மெல்லா மாவார்
    இடைமருது மேவிய ஈச னாரே.     6.16.5
164    ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
    அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்
    செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்
    திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்
    கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
    கூத்தாட வல்ல குழகர் போலும்
    எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.     6.16.6
165    பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
    பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
    விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
    விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
    தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
    பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
    எரியாய தாமரைமே லியங்கி னாரும்
    இடைமருது மேவிய ஈச னாரே.     6.16.7
166    தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
    சுடர்வா யரவசைத்த சோதி போலும்
    ஆல மமுதாக வுண்டார் போலும்
    அடியார்கட் காரமுத மானார் போலுங்
    காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
    கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்
    ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.     6.16.8
167    பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
    படைக்கணாள் பாக முடையார் போலும்
    அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
    மணிநீல கண்ட முடையார் போலும்
    வந்த வரவுஞ் செலவு மாகி
    மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
    எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.    6.16.9
168    கொன்றையங் கூவிள மாலை தன்னைக்
    குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
    நின்ற அனங்கனை நீறா நோக்கி
    நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
    அன்றவ் வரக்கன் அலறி வீழ
    அருவரையைக் காலா லழுத்தி னாரும்
    என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்
    இடைமருது மேவிய ஈச னாரே.     6.16.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்,
தேவியார் - நலமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


6.17 திருவிடைமருது - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

169    ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர்
    அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்
    நீறு தடவந் திடப மேறி
    நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்
    கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
    கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
    ஈறுந் நடுவு முதலு மாவார்
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.     6.17.1
170     மங்குல் மதிவைப்பர் வான நாடர்
    மடமா னிடமுடையர் மாத ராளைப்
    பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
    பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
    சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
    சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
    எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்
    இடைமருது மேவி யிடங் கொண்டாரே.    6.17.2
171     ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்
    அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
    காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
    கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்
    கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
    கொடுமழுவர் கோழம்ப மேய ஈசர்
    ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.     6.17.3
172    தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ்
    செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்
    வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
    மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்
    நேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு
    நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்
    ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.    6.17.4
173     கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்
    கரவாதே தந்நினைய கிற்பார் பாவந்
    துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
    தூய மறைமொழியர் தீயா லொட்டி
    நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
    நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்
    இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.     6.17.5
174     கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்
    குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
    பொடியாரு மேனியர் பூதிப் பையர்
    புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
    அடியார் குடியாவர் அந்த ணாளர்
    ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
    இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.     6.17.6
175     பச்சை நிறமுடையர் பாலர் சாலப்
    பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
    கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
    கலனொன்று கையேந்தி இல்லந் தோறும்
    பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்
    பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்
    இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.     6.17.7
176     காவார் சடைமுடியர் காரோ ணத்தர்
    கயிலாய மன்னினார் பன்னு மின்சொற்
    பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
    பயிலுந் திருவுருவம் பாக மேயார்
    பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
    புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட
    ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.     6.17.8
177    புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர்
    பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்
    பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்
    பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
    எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை
    எவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்
    இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.    6.17.9
178    விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
    விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்
    மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
    மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்
    சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
    செழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால்
    இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி
    இடைமருது மேவி யிடங்கொண் டாரே.     6.17.10

திருச்சிற்றம்பலம்


6.18 திருப்பூவணம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

179     வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
    வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்
    கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
    காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
    இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
    எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
    பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.    6.18.1
180     ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
    அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
    ஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும்
    ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்
    சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
    செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
    பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.     6.18.2
181     கல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங்
    கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
    சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ்
    சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
    அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
    ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
    பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.     6.18.3
182     படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்
    பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
    நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
    நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்
    உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று
    மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
    புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.    6.18.4
183     மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
    மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
    இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
    இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங்
    கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
    ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்
    புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.    6.18.5
184    பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
    பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்
    சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
    திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
    ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
    உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
    போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.    6.18.6
185     தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
    சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
    மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
    வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றுந்
    துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
    தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
    பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.     6.18.7
186     செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்
    திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்
    நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
    நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
    மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
    மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
    பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.     6.18.8
187     அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
    அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
    மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
    மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
    திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
    செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
    பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.    6.18.9
188     ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று
    தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
    பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
    பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்
    கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங்
    குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
    பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.    6.18.10
189     ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே
    அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
    வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை
    மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்
    நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை
    நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
    போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.     6.18.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர்,
தேவியார் - மின்னாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்


6.19 திருவாலவாய் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

190     முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
    முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
    வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
    வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
    துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
    தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
    திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.1
191     விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை
    மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்
    பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்
    பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
    உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்
    கரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னைத்
    தெண்ணிலவு தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.2
192     நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை
    நிலமருவி நீரோடக் கண்டான் றன்னைப்
    பாற்றிரளைப் பயின்றாட வல்லான் றன்னைப்
    பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைக்
    காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
    கடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித்
    தீத்திரளைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.3
193     வானமிது வெல்லா முடையான் றன்னை
    வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
    கானமதில் நடமாட வல்லான் றன்னைக்
    கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்
    ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை
    உணர்வாகி அடியேன துள்ளே நின்ற
    தேனமுதைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.4
194     ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை
    ஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும்
    பேரானைப் பிறர்க்கென்று மரியான் றன்னைப்
    பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
    ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை
    அருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ்
    சீரானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.5
195     மூவனை மூர்த்தியை மூவா மேனி
    உடையானை மூவுலகுந் தானே யெங்கும்
    பாவனைப் பாவ மறுப்பான் றன்னைப்
    படியெழுத லாகாத மங்கை யோடும்
    மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
    விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
    தேவனைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.6
196     துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத்
    துன்பந் துடைத்தாள வல்லான் றன்னை
    இறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை
    எல்லி நடமாட வல்லான் றன்னை
    மறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை
    மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்
    சிறந்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.    6.19.7
197     வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
    கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்
    தூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச்
    சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
    தாயானைத் தவமாய தன்மை யானைத்
    தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
    சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.8
198    பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் றன்னைப்
    பழியிலியாய் நஞ்சமுண் டமுதீந் தானை
    வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை
    வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
    மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை
    மேலாய தேவாதி தேவர்க் கென்றுந்
    திகைச்சுடரைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.9
199     மலையானை மாமேறு மன்னி னானை
    வளர்புன் சடையானை வானோர் தங்கள்
    தலையானை என்றலையின் உச்சி யென்றுந்
    தாபித் திருந்தானைத் தானே யெங்குந்
    துலையாக ஒருவரையு மில்லா தானைத்
    தோன்றாதார் மதின்மூன்றுந் துவள வெய்த
    சிலையானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.10
200     தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் றன்னைத்
    தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்
    பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் றன்னைப்
    பரிந்தவற்குப் பாசுபத மீந்தான் றன்னை
    ஆத்தனை அடியேனுக் கன்பன் றன்னை
    அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
    தீர்த்தனைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
    சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.     6.19.11

திருச்சிற்றம்பலம்


6.20 திருநள்ளாறு - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

201    ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று
    அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற்
    சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
    சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
    மாதிமைய மாதோர்கூ றாயி னானை
    மாமலர்மே லயனோடு மாலுங் காணா
    நாதியை நம்பியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.1
202    படையானைப் பாசுபத வேடத் தானைப்
    பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
    அடையாமைக் காப்பானை அடியார் தங்கள்
    அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
    சடையானைச் சந்திரனைத் தரித்தான் றன்னைச்
    சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
    நடையானை நம்பியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.2
203    படவரவ மொன்றுகொண் டரையி லார்த்த
    பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை
    அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
    அமுதாக உண்டானை ஆதி யானை
    மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
    மாமணியை மாணிக்காய்க் காலன் றன்னை
    நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.3
204    கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்
    கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
    சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்
    சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
    பட்டங்க மாலை நிறையச் சூடிப்
    பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
    நட்டங்க மாடியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.4
205    உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
    ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ்
    சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்
    திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோ கனைக்
    கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானைக்
    கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை
    நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.5
206    குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக்
    குலவரையன் மடப்பாவை இடப்பா லானை
    மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
    மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்
    சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்
    தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
    நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.6
207    பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
    புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
    மாவிரியக் களிறுரித்த மைந்தன் றன்னை
    மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
    தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
    சிதைத்தானை உதைத்தவன்றன் சிரங்கொண் டானை
    நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.7
208    சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
    தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற
    வில்லானை எல்லார்க்கு மேலா னானை
    மெல்லியலாள் பாகனை வேதம் நான்குங்
    கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்
    காளத்தி யானைக் கயிலை மேய
    நல்லானை நம்பியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.8
209    குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
    குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை
    அன்றாக அவுணர்புர மூன்றும் வேவ
    ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்
    சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்
    சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்
    நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.9
210    இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
    இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி
    உறவாகி இன்னிசைகேட் டிரங்கி மீண்டே
    உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை
    மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
    மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
    நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.     6.20.10

திருச்சிற்றம்பலம்


6.21 திருவாக்கூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

211     முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
    மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்
    கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்
    கல்லலகு பாணி பயின்றார் போலுங்
    கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
    குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும்
    அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.1
212    ஓதிற் றொருநூலு மில்லை போலும்
    உணரப் படாதொன் றில்லை போலுங்
    காதிற்குழை யிலங்கப் பெய்தார் போலுங்
    கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
    வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
    விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்
    ஆதிக் களவாகி நின்றார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.2
213    மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
    மணிநீல கண்ட முடையார் போலும்
    நெய்யார் திரிசூலங் கையார் போலும்
    நீறேறு தோளெட் டுடையார் போலும்
    வையார் மழுவாட் படையார் போலும்
    வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்
    ஐவா யரவமொன் றார்த்தார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.3
214    வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
    வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
    பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
    பூங்கங்கை தோய்ந்த சடையார் போலுங்
    கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலுங்
    கட்டங்க மேந்திய கையார் போலும்
    அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.4
215    ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
    இடுவெண் டலைகலனா ஏந்தி நாளும்
    மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
    புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
    மாகாச மாயவெண் ணீருந் தீயும்
    மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
    ஆகாச மென்றிவையு மானார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.5
216    மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள்
    மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
    மூதூர் முதுதிரைக ளானார் போலும்
    முதலு மிறுதியு மில்லார் போலுந்
    தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
    திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
    ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.6
217    மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
    மான்றோ லுடையா மகிழ்ந்தார் போலுங்
    கோலானைக் கோளழலாற் காய்ந்தார் போலுங்
    குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலுங்
    காலனைக் காலாற் கடந்தார் போலுங்
    கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
    ஆலானைந் தாட லுகப்பார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.7
218    கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
    காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
    உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
    ஊழித்தீ யன்ன ஒளியார் போலும்
    எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
    ஏறேறிச் செல்லு மிறைவர் போலும்
    அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.8
219    கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
    கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
    நெடியானுஞ் சதுர்முகனுந் நேட நின்ற
    நீலநற் கண்டத் திறையார் போலும்
    படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
    மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்
    அடியார் புகலிடம தானார் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.9
220    திரையானுஞ் செந்தா மரைமே லானுந்
    தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
    புரையா னெனப்படுவார் தாமே போலும்
    போரேறு தாமேறிச் செல்வார் போலுங்
    கரையா வரைவில்லே நாகம் நாணாக்
    காலத்தீ யன்ன கனலார் போலும்
    வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
    ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.     6.21.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதவீசுவரர்,
தேவியார் - கட்கநேத்திராம்பிகை.

திருச்சிற்றம்பலம்

6.22 திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

221    பாரார் பரவும் பழனத் தானைப்
    பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானை
    சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
    திகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப்
    பேரா யிரமுடைய பெம்மான் றன்னைப்
    பிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக்
    காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.1
222    விண்ணோர் பெருமானை வீரட் டானை
    வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
    பெண்ணானை ஆணானைப் பேடி யானைப்
    பெரும்பெற்றத் தண்புலியூர் பேணி னானை
    அண்ணா மலையானை ஆனைந் தாடும்
    அணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னைக்
    கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.2
223    சிறையார் வரிவண்டு தேனே பாடுந்
    திருமறைக்காட் டெந்தை சிவலோ கனை
    மறையான்றன் வாய்மூருங் கீழ்வே ளூரும்
    வலிவலமுந் தேவூரும் மன்னி யங்கே
    உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்
    பற்றியாள் கின்ற பரமன் றன்னைக்
    கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.3
224    அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
    ஆச்சிரா மன்னகரு மானைக் காவும்
    முன்னமே கோயிலாக் கொண்டான் றன்னை
    மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்
    சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடிச்
    செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்
    கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.4
225    நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை
    ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய
    படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்
    பன்மையே பேசும் படிறன் றன்னை
    மடையிடையே வாளை யுகளும் பொய்கை
    மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்
    கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.5
226    புலங்கொள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப்
    பூம்புகார்க் கற்பகத்தை புன்கூர் மேய
    அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை
    அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை
    இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
    ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னைக்
    கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.6
227    பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்
    புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்
    சின்மணிய மூவிலைய சூலத் தானைத்
    தென்சிராப் பள்ளிச் சிவலோ கனை
    மன்மணியை வான்சுடலை யூராப் பேணி
    வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்
    கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.7
228    வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை
    விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்
    புண்டலைய மால்யானை யுரிபோர்த் தானைப்
    புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
    எண்டிசையு மெரியாட வல்லான் றன்னை
    ஏகம்ப மேயானை எம்மான் றன்னைக்
    கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.8
229    சொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத்
    தொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னை
    வில்லானை மீயச்சூர் மேவி னானை
    வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்
    பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்றப்
    பொறியரவம் மார்பாரப் பூண்டான் றன்னைக்
    கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.9
230    மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்
    மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ்
    சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
    மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
    பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை
    அவன்பற்றே பற்றாகக் காணி னல்லாற்
    கனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.10
231    நெடியானும் மலரவனும் நேடி யாங்கே
    நேருருவங் காணாமே சென்று நின்ற
    படியானைப் பாம்புரமே காத லானைப்
    பாம்பரையோ டார்த்த படிறன் றன்னைச்
    செடிநாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று
    சென்றானை நின்றியூர் மேயான் றன்னைக்
    கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக்
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.     6.22.11

திருச்சிற்றம்பலம்


6.23 திருமறைக்காடு - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

232    தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
    காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
    வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
    மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
    மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.     6.23.1
233    கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
    காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
    மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
    மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
    பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
    பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
    வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.     6.23.2
234    சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய்
    திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
    நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
    நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
    சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
    தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
    மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.     6.23.3
235    கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
    காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
    புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
    புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
    வெள்ளி மிளிர்பிறைமேற் சூடி கண்டாய்
    வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
    வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.     6.23.4
236    மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
    ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
    ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
    அண்ணா மலையுறையு மண்ணல் கண்டாய்
    வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.     6.23.5
237    ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய்
    அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
    கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
    குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
    நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
    நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
    வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.    6.23.6
238    வேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய்
    விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
    ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
    அமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய்
    பால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய்
    பருப்பதத் தான்கண்டாய் பரவை மேனி
    மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.     6.23.7
239    அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
    அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
    டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய்
    என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
    மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
    வெண்காடன் கண்டாய் வினைகள் போக
    மம்ம ரறுக்கு மருந்து கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.    6.23.8
240    மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
    முத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய்
    ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்
    ஆதியு மந்தமு மானான் கண்டாய்
    பால விருத்தனு மானான் கண்டாய்
    பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
    மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.     6.23.9
241    அயனவனும் மாலவனு மறியா வண்ணம்
    ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
    துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று
    சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
    பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
    பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
    மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாலன் றானே.     6.23.10

திருச்சிற்றம்பலம்


6.24 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

242    கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
    கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
    அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
    அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
    எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
    எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
    செம்மானத் தொளியன்ன மேனி யான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.1
243    ஊனேறு படுதலையில் உண்டி யான்காண்
    ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
    ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண்
    அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
    மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
    மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
    தேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.2
244    ஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண்
    இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
    தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
    சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் றான்காண்
    ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
    அனலாடி காண்அடியார்க் கமிர்தா னான்காண்
    தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.3
245    கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்
    கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்
    எங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
    ஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண்
    பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண்
    பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்
    செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.4
246    காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்
    கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
    போரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண்
    புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
    நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்
    நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
    சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.5
247    பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்
    பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
    கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
    கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்
    இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்
    இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்
    சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.6
248    தலையுருவச் சிரமாலை சூடி னான்காண்
    தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்
    அலையுருவச் சுடராழி ஆக்கி னான்காண்
    அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்
    கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்
    கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்
    சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.7
249    ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
    அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
    கையன்காண் கடற்பூதப் படையி னான்காண்
    கண்ணெரியால் ஐங்கணையோ னுடல்காய்ந் தான்காண்
    வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
    வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
    செய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.8
250    மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்
    மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
    இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
    இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
    கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்
    கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
    சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.9
251    பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
    புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
    மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்
    மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
    எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்
    இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
    செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றான்காண்
    திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.     6.24.10

திருச்சிற்றம்பலம்


6.25 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

252     உயிரா வணமிருந் துற்று நோக்கி
    உள்ளக் கிழியி னுரு வெழுதி
    உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
    உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
    அயிரா வணமேறா தானே றேறி
    அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
    அயிரா வணமேயென் னம்மா னேநின்
    அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.     6.25.1
253    எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
    இளையார்கள் நம்மை இகழா முன்னம்
    பழுது படநினையேல் பாவி நெஞ்சே
    பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
    முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
    முடியா லுறவணங்கி முற்றம் பற்றி
    அழுது திருவடிக்கே பூசை செய்ய
    இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.     6.25.2
254    தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
    திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக்
    காரூரா நின்ற கழனிச் சாயற்
    கண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும்
    ஓரூரா உலகெலா மொப்பக் கூடி
    உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
    ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
    அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே.     6.25.3
255    கோவணமோ தோலோ உடை யாவது
    கொல்லேறோ வேழமோ ஊர்வ துதான்
    பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
    பொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ
    தீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடித்
    திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
    ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
    அறியேன்மற் றூராமா றாரூர் தானே.     6.25.4
256    ஏந்து மழுவாளர் இன்னம் பரார்
    எரிபவள வண்ணர் குடமூக் கிலார்
    வாய்ந்த வளைக்கையாள் பாக மாக
    வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்
    போந்தா ரடிகள் புறம்ப யத்தே
    புகலூர்க்கே போயினார் போரே றேறி
    ஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்
    அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.     6.25.5
257    கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
    கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
    உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
    வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
    மருவாகி நின்னடியே மறவே னம்மான்
    மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்
    திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
    செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.    6.25.6
258    முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
    பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
    அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
    தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே.     6.25.7
259    ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
    அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
    பாடுவார் தும்புருவும் நார தாதி
    பரவுவார் அமரர்களு மமரர் கோனுந்
    தேடுவார் திருமாலும் நான்மு கனுந்
    தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங்
    கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
    குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.    6.25.8
260    நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
    நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
    ஓரூரு மொழியாமே ஒற்றித் தெங்கும்
    உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
    தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
    திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
    தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
    அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.    6.25.9
261    நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
    நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
    பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
    பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
    இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
    இராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
    எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
    இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.     6.25.10
262    கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்
    கருவரைபோற் களியானை கதறக் கையால்
    உரித்தெடுத்துச் சிவந்ததன்றோல் பொருந்த மூடி
    உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்
    திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த்தானம்
    திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்
    அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி
    அப்பனார் இப்பருவ மாரூ ராரே.     6.25.11

திருச்சிற்றம்பலம்


6.26 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

263     பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்
    பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை
    வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை
    வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச்
    சோதிச்சந் திரன்மேனி மறுச்செய்தானைச்
    சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை
    ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.     6.26.1
264    வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
    விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
    ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை
    ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை
    அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை
    அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை
    அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.     6.26.2
265    ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை
    ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை
    வருகாலஞ் செல்கால மாயி னானை
    வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைப்
    பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்
    புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை
    அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.     6.26.3
266    மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
    வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
    ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை
    உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்
    வைப்பானைக் களைவானை வருவிப் பானை
    வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
    அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.     6.26.4
267    பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்
    பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத்
    துண்டத்தின் துணிபொருளைச் சுடுதீ யாகிச்
    சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக்
    கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து
    கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை
    அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.     6.26.5
268    நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
    நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப்
    பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்
    பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச்
    சோதியாய் இருளாகிச் சுவைக ளாகிச்
    சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
    ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.     6.26.6
    இப்பதிகத்தில் 7,8,9,10-ம் செய்யுட்கள்     6.26.7-10
திருச்சிற்றம்பலம்


6.27 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

269     பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
    புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
    இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்
    கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்
    தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
    தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
    எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்
    இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.    6.27.1
270    ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
    றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
    உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க்
    கில்லையே னுகர்போகம் யானேல் வானோர்
    உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி
    ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
    தம்பெருமா னார்நின்ற அரனைக் காண்பேன்
    தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.    6.27.2
271    சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்
    செழுங்கணால் நோக்குமிது வூக்க மன்று
    பல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூதப்
    பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்
    சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்
    தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்
    நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால்
    நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.     6.27.3
272    உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
    துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்
    மன்னுருவத் தியற்கைளால் வைப்பீர்க் கையோ
    வையகமே போதாதே யானேல் வானோர்
    பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
    புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
    தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத்
    தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.     6.27.4
273    துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
    சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
    ஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
    உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன்
    வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
    மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
    அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
    ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.     6.27.5
274    பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
    குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
    உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம்
    உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
    அங்கமலத் தயனொடுமா லாகி மற்றும்
    அதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணாச்
    செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை ஆரூர்ச்
    செல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே.    6.27.6
275    இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
    வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
    குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
    குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
    அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
    அமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர்
    உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
    ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.     6.27.7
276    விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
    வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
    நிரந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்
    கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
    கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த
    கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரிற்
    பரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற்
    பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே.     6.27.8
277    மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
    முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
    நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
    நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்
    நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
    நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்
    ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
    ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.     6.27.9
278    சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித்
    துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
    செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல்
    செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
    தருக்கிமிக வரையெடுத்த அரக்க னாகந்
    தளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டு
    இரக்கமெழுந் தருளியவெம் பெருமான் பாதத்
    திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.     6.27.10

திருச்சிற்றம்பலம்


6.28 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

279    நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்
    நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங்
    காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்
    கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங்
    கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங்
    கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்
    ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.1
280    பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
    பாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங்
    கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங்
    காபாலங் கட்டங்கக் கொடியார் போலும்
    பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
    பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
    அரியதோர் அரணங்க ளட்டார் போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.2
281    துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந்
    தூய திருமேனிச் செல்வர் போலும்
    பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
    பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும்
    மணியுடைய மாநாக மார்ப்பார் போலும்
    வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
    அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.3
282    ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்
    ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
    நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
    ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்
    காட்டகத்தே ஆட லுடையார் போலுங்
    காமரங்கள் பாடித் திரிவார் போலும்
    ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.4
283    ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்
    இமையவர்க ளேத்த இருந்தார் போலுங்
    கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
    கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
    வானத் திளமதிசேர் சடையார் போலும்
    வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
    ஆனத்து முன்னெழுந்தாய் நின்றார் போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.5
284    காமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங்
    கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலுஞ்
    சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ்
    சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
    நாமனையும் வேதத்தார் தாமே போலும்
    நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
    ஆமனையுந் திருமுடியார் தாமே போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.6
285    முடியார் மதியரவம் வைத்தார் போலும்
    மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலுஞ்
    செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
    செல்கதி தான்கண்ட சிவனார் போலுங்
    கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
    கங்காள வேடக் கருத்தர் போலும்
    அடியார் அடிமை உகப்பார் போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.7
286    இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்
    இமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலுஞ்
    சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந்
    தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்
    மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
    மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
    அந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.8
287    பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
    பிறவி யிறவி இலாதார் போலும்
    முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
    முழுநீறு பூசு முதல்வர் போலுங்
    கண்டத் திறையே கறுத்தார் போலுங்
    காளத்தி காரோணம் மேயார் போலும்
    அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.9
288    ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
    ஊழி பலகண் டிருந்தார் போலும்
    பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
    பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
    உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
    உகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும்
    அருகாக வந்தென்னை அஞ்ச லென்பார்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.10
289    நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
    ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்
    கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்
    கோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலுஞ்
    சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்
    திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
    அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
    அணியாரூர்த் திருமூலத் தான னாரே.     6.28.11

திருச்சிற்றம்பலம்


6.29 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

290    திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
    தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்
    குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
    கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
    பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
    பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
    அருமணியை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.1
291    பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப்
    பொங்குவெண் ணூலானைப் புனிதன் றன்னை
    மின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை
    வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் றன்னைத்
    தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
    தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி
    அன்னானை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.2
292    ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை
    ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னைக்
    கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக்
    கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னைக்
    காற்றானைத் தீயானை நீரு மாகிக்
    கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள
    ஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.3
293    முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை
    மூவாத மேனிமுக் கண்ணி னானைச்
    சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்
    சங்கரனைச் சங்கக் குழையான் றன்னை
    மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
    மறுமையு மிம்மையு மானான் றன்னை
    அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.4
294    பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்
    பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே
    உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்
    ஓரிபல விடநட்ட மாடி னானைத்
    துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி
    நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற
    அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.5
295    பழகிய வல்வினைகள் பாற்று வானைப்
    பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங்
    குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்
    கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை
    விழவனை வீரட்ட மேவி னானை
    விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
    அழகனை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.6
296    சூளா மணிசேர் முடியான் றன்னைச்
    சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்
    கோள்வா யரவ மசைத்தான் றன்னைக்
    கொல்புலித்தோ லாடைக் குழகன் றன்னை
    நாள்வாயும் பத்தர் மனத்து ளானை
    நம்பனை நக்கனை முக்க ணானை
    ஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.7
297    முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை
    மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
    கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து
    கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னைப்
    பத்தனைப் பத்தர் மனத்து ளானைப்
    பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை
    அத்தனை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.8
298    பையா டரவங்கை யேந்தி னானைப்
    பரிதிபோற் றிருமேனிப் பால்நீற் றானை
    நெய்யாடு திருமேனி நிமலன் றன்னை
    நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்
    செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்
    செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை
    ஐயாறு மேயானை ஆரூ ரானை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.9
299    சீரார் முடிபத் துடையான் றன்னைத்
    தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்
    பேரார் பெருமை கொடுத்தான் றன்னைப்
    பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப்
    போரார் புரங்கள் புரள நூறும்
    புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
    ஆரானை ஆரூரி லம்மான் றன்னை
    அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.     6.29.10

திருச்சிற்றம்பலம்


6.30 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

300    எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்
    ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
    வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
    வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
    அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
    அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
    செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.     6.30.1
301    அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்
    ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
    கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
    குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
    தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் சொல்லுந்
    தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந்
    திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.     6.30.2
302    நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண்
    நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தான்காண்
    வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்
    வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
    காரேறு முகிலனைய கண்டத் தான்காண்
    கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
    சீரேறு மணிமாடத் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.     6.30.3
303    கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்
    கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்
    ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
    உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
    ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
    ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
    தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.     6.30.4
304    பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
    பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
    மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
    வானவரு மறியாத நெறிதந் தான்காண்
    நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
    நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
    சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.     6.30.5
305    சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண்
    தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண்
    அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
    அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
    எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக
    அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
    செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.     6.30.6
306    நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்
    நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
    மின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
    வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
    துன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண்
    சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த
    தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.     6.30.7
307    பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்
    புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
    மின்னலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்
    வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
    கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
    கோலமா நீறணிந்த மேனி யான்காண்
    செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.    6.30.8
308    விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
    வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்
    மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண்
    வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
    புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்
    புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண்
    தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.     6.30.9
309    செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
    தென்னானைக் காவன்காண் தீயில் வீழ
    மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
    வஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண்
    அருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும்
    ஐந்நான்கு தோளுநெரிந் தலற வன்று
    திருவிரலா லடர்த்தவன்காண் திருவா ரூரிற்
    றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.     6.30.10

திருச்சிற்றம்பலம்


6.31 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

310     இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
    ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்
    சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்றுந்
    தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்
    கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
    கலைமான் மறியேந்து கையா வென்றும்
    அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும்
    ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.     6.31.1
311    செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
    சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாகப்
    பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
    புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
    அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்
    அம்மானே ஆரூரெம் மரசே யென்றுங்
    கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்
    கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.     6.31.2
312    நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
    நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குக்
    புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
    பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
    தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
    சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
    அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
    ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.     6.31.3
313    புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம்
    நெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள்நீ
    நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும்
    நுந்தாத வொண்சுடரே யென்று நாளும்
    விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
    விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
    எண்ணரிய திருநாம முடையா யென்றும்
    எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.     6.31.4
314    இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால்
    இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்
    பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும்
    பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும்
    அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்
    அணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங்
    குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே
    குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.     6.31.5
315    நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
    நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்
    சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ்
    சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
    பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
    புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்
    தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்
    திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.     6.31.6
316    பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்
    பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற்
    சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற்
    சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
    உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
    உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
    புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்
    பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.     6.31.7
317    மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
    வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்
    அதிபதியே ஆரமுதே ஆதி யென்றும்
    அம்மானே ஆரூரெம் மையா வென்றுந்
    துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்
    சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
    கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
    கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.     6.31.8
318    பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே
    பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
    தேசத் தொளிவிளக்கே தேவ தேவே
    திருவாரூர்த் திருமூலத் தானா வென்றும்
    நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி

    நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
    ஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும்
    எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே.     6.31.9
319    புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
    புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
    சலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்றுந்
    தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
    இலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும்
    எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்
    நலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும்
    நாடோ றும் நவின்றேத்தாய் நன்மை யாமே.     6.31.10

திருச்சிற்றம்பலம்


6.32 திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

320    கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
    கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
    அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
    அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
    மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
    வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
    செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.1
321    வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
    மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
    கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
    கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி
    அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
    ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
    செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.2
322    மலையான் மடந்தை மணாளா போற்றி
    மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
    நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
    நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி
    இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி
    ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
    சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.3
323    பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
    பூதப் படையுடையாய் போற்றி போற்றி
    மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
    மறியேந்து கையானே போற்றி போற்றி
    உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
    உலகுக் கொருவனே போற்றி போற்றி
    சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.4
324    நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
    நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
    வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
    வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
    துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
    தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி
    செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.5
325    சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
    சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
    பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
    புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
    அங்கமலத் தயனோடு மாலுங் காணா
    அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
    செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.6
326    வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
    வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
    கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
    குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
    நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
    நால்வேத மாறங்க மானாய் போற்றி
    செம்பொனே மரகதமே மணியே போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.7
327    உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
    உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
    வள்ளலே போற்றி மணாளா போற்றி
    வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
    வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
    மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி
    தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.8
328    பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
    புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
    தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
    திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
    சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
    சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
    சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.9
329    பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
    பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
    கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி
    காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
    அருமந்த தேவர்க் கரசே போற்றி
    அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
    சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
    திருமூலத் தானனே போற்றி போற்றி.     6.32.10

திருச்சிற்றம்பலம்


6.33 திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

330     பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப்
    பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
    கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்
    காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
    இருங்கனக மதிலாரூர் மூலத் தானத்
    தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்
    அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.     6.33.1
331    கற்பகமும் இருசுடரு மாயி னானைக்
    காளத்தி கயிலாய மலையு ளானை
    விற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை
    விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னைப்
    பொற்பமரும் பொழிலாரூர் மூலத் தானம்
    பொருந்தியவெம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
    அற்புதனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.    6.33.2
332    பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்
    பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை
    வேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னை
    மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
    போதியலும் பொழிலாரூர் மூலத் தானம்
    புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
    ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.     6.33.3
333    நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை
    நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
    சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
    தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை
    இந்துநுழை பொழிலாரூர் மூலத் தானம்
    இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்
    அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.     6.33.4
334    சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்
    சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை
    விடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை
    மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை
    மடற்குலவு பொழிலாரூர் மூலத் தானம்
    மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
    அடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.     6.33.5
335    தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்
    தகுதில்லை நடம்பயிலுந் தலைவன் றன்னை
    மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
    மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை
    மேயவனைப் பொழிலாரூர் மூலத் தானம்
    விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே
    ஆயவனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.    6.33.6
336    பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்
    புகலூரும் புறம்பயமும் மேயான் றன்னை
    மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
    மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
    இருளியல்நற் பொழிலாரூர் மூலத் தானத்
    தினிதமரும் பெருமானை இமையோ ரேத்த
    அருளியனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.     6.33.7
337    காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்
    காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப்
    பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப்
    பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச்
    சேலுகளும் வயலாரூர் மூலத் தானஞ்
    சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற
    ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.     6.33.8
338    ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை
    ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
    வைப்பவனை மாணிக்கச் சோதி யானை
    மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானை
    *மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற
    வினையிலியைத் திருமூலத் தானம் மேய
    அப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
    * இச்செய்யுளின் பின்னிரு அடிகள் பிற பதிப்புகளில்
    காணப்படவில்லை.     6.33.9
339    பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப்
    பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
    இகலவனை இராவணனை இடர்செய் தானை
    ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
    புகழ்நிலவு பொழிலாரூர் மூலத் தானம்
    பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
    அகலவனை அரநெறியி லப்பன் றன்னை
    அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.     6.33.10

திருச்சிற்றம்பலம்


6.34 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்


340    ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
    ஓருருவே மூவுருவ மான நாளோ
    கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
    காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
    மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ
    மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்
    திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.    6.34.1
341    மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
    வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
    நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
    நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
    அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
    அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
    சிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.    6.34.2
342    பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
    நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
    வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ
    விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
    மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
    மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
    ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
    அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.     6.34.3
343    ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ
    ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
    தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
    தக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ
    நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
    நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி
    வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
    வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.    6.34.4
344    பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே
    பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே
    நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே
    நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
    சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
    சீர்மையே கூர்மையே குணமே நல்ல
    கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
    குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.    6.34.5
345    திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்
    சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
    மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து
    மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ
    பிறங்கியசீர்ப் பிரமன்றன் தலைகை யேந்திப்
    பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
    அறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ
    அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.     6.34.6
346    நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
    நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்
    கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
    காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று
    வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
    வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்
    சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
    தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.     6.34.7
347    பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
    பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
    கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
    கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
    பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
    பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
    வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
    விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.    6.34.8
348    புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
    பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங்
    கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
    கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
    நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
    நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டுந்
    திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.    6.34.9
349    ஈசனா யுலகேழும் மலையு மாகி
    இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ
    வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
    மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
    தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
    சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ
    தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.    6.34.10

திருச்சிற்றம்பலம்


6.35 திருவெண்காடு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

350    தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
    சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
    பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
    பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
    நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
    நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
    வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.1
351    பாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர்
    பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
    ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
    ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
    ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
    ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்
    வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.2
352    நென்னலையோர் ஓடேத்திப் பிச்சைக் கென்று
    வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
    அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
    அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
    நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
    என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்
    மென்முலையார் கூடி விரும்பி யாடும்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.3
353    ஆகத் துமையடக்கி ஆறு சூடி
    ஐவா யரவசைத்தங் கானே றேறிப்
    போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்
    புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்
    பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
    பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
    மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.4
354    கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங்
    கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
    உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல
    உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
    கள்ள விழிவிழிப்பார் காணாக் கண்ணாற்
    கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
    வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.5
355    தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்
    சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
    பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்
    பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாராற்
    கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக்
    கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
    விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.6
356    பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக்
    கோள்நாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்
    உண்பா ருறங்குவார் ஒவ்வா நங்காய்
    உண்பதுவும் நஞ்சன்றே லோபி யுண்ணார்
    பண்பா லவிர்சடையர் பற்றி நோக்கிப்
    பாலைப் பரிசழியப் பேசு கின்றார்
    விண்பால் மதிசூடி வேத மோதி
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.7
357    மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
    வானவரும் மாலயனுங் கூடித் தங்கள்
    சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்
    தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்
    கருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல்
    என்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து
    விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.8
358    புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
    காணார் பொறியழலாய் நின்றான் றன்னை
    உள்ளானை யொன்றலா உருவி னானை
    உலகுக் கொருவிளக்காய் நின்றான் றன்னைக்
    கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும்
    ஓவாமே நின்று தவங்கள் செய்த
    வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.9
359    மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி
    மாவேழம் வில்லா மதித்தான் றன்னை
    நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க
    நொடிவரையில் நோவ விழித்தான் றன்னைக்
    காக்குங் கடலிலங்கைக் கோமான் றன்னைக்
    கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி
    வீக்கந் தவிர்த்த விரலார் போலும்
    வெண்காடு மேவிய விகிர்த னாரே.    6.35.10

திருச்சிற்றம்பலம்


6.36 திருப்பழனம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

360     அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
    அமரர்களுக் கருள்செய்யு மாதி தாமே
    கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
    கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே
    சிலையாற் புரமூன் றெரித்தார் தாமே
    தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
    பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.36.1
361    வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே
    மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே
    கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே
    கருத்துடைய பூதப் படையார் தாமே
    உள்ளத் துவகை தருவார் தாமே
    உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
    பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.36.2
362    இரவும் பகலுமாய் நின்றார் தாமே
    எப்போது மென்னெஞ்சத் துள்ளார் தாமே
    அரவ மரையி லசைத்தார் தாமே
    அனலாடி யங்கை மறித்தார் தாமே
    குரவங் கமழுங்குற் றாலர் தாமே
    கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே
    பரவு மடியார்க்குப் பாங்கர் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.36.3
363    மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே
    வரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே
    நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
    நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
    ஏறு கொடுஞ்சூலக் கையார் தாமே
    என்பா பரண மணிந்தார் தாமே
    பாறுண் தலையிற் பலியார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.364
364    சீரால் வணங்கப் படுவார் தாமே
    திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே
    ஆரா வமுதமு மானார் தாமே
    அளவில் பெருமை யுடையார் தாமே
    நீரார் நியம முடையார் தாமே
    நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே
    பாரார் பரவப் படுவார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.36.5
365    கால னுயிர்வௌவ வல்லார் தாமே
    கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
    கோலம் பலவு முகப்பார் தாமே
    கோள்நாக நாணாகப் பூண்டார் தாமே
    நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
    நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே
    பால விருத்தரு மானார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.36.6
366    ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே
    ஏழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே
    ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
    அளவில் பெருமை யுடையார் தாமே
    தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
    தீவா யரவதனை யார்த்தார் தாமே
    பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.36.7
367    ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
    உள்ளூறு மன்பர் மனத்தார் தாமே
    பேராதென் சிந்தை யிருந்தார் தாமே
    பிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே
    ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே
    உலகை நடுங்காமற் காப்பார் தாமே
    பாரார் முழவத் திடையார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.36.8
368    நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே
    நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே
    பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே
    பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே
    ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
    அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
    பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.36.9
369    விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே
    விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே
    புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே
    பூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே
    அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே
    அரக்கனையு மாற்ற லழித்தார் தாமே
    படையாப் பல்பூத முடையார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே.    6.36.10

திருச்சிற்றம்பலம்


6.37 திருவையாறு - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

370    ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
    அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
    கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
    குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
    பேரா யிரமுடையா யென்றேன் நானே
    பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
    ஆரா வமுதேயென் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.1
371    தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
    தீர்த்தா புராணனே யென்றேன் நானே
    மூவா மதிசூடி யென்றேன் நானே
    முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
    ஏவார் சிலையானே யென்றேன் நானே
    இடும்பைக் கடல்நின்று மேற வாங்கி
    ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.2
372    அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
    அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
    நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
    நாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே
    நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது
    நிறையு மமுதமே யென்றேன் நானே
    அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.3
373    தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
    துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
    எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
    ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே
    அல்லற் கடல்புக் கழுந்து வேனை
    வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே
    எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.4
374    இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
    இருசுடர் வானத்தா யென்றேன் நானே
    தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
    துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
    கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
    கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
    அண்டத்துக் கப்பாலாம் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.5
375    பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
    பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே
    கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
    கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே
    பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
    பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே
    அற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.6
376    விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
    விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
    எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
    ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
    பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
    பசுபதி பால்நீற்றா யென்றேன் நானே
    அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.7
377    அவனென்று நானுன்னை அஞ்சா தேனை
    அல்ல லறுப்பானே யென்றேன் நானே
    சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
    செல்வந் தருவானே யென்றேன் நானே
    பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று
    பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
    அவனென்றே யாதியே ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.8
378    கச்சியே கம்பனே யென்றேன் நானே
    கயிலாயா காரோணா வென்றேன் நானே
    நிச்சன் மணாளனே யென்றேன் நானே
    நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
    உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
    உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
    அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.9
379    வில்லாடி வேடனே யென்றேன் நானே
    வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
    சொல்லாய சூழலா யென்றேன் நானே
    சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே
    எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
    இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
    அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.37.10
திருச்சிற்றம்பலம்


6.38 திருவையாறு - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

380     ஓசை ஒலியெலா மானாய் நீயே
    உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
    வாச மலரெலா மானாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
    பேசப் பெரிது மினியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
    தேச விளக்கெலா மானாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.1
381    நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
    நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
    காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
    காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
    ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
    அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
    தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.2
382    கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
    கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
    தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே
    சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
    மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
    மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
    சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ    6.38.3
383    வானுற்ற மாமலைக ளானாய் நீயே
    வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
    ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே
    ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
    ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே
    அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
    தேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.4
384    பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
    பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
    உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
    ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
    கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
    கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
    திண்ணார் மழுவாட் படையாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.5
385    உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
    உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
    கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
    கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
    பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
    பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
    செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.6
386    எல்லா வுலகமு மானாய் நீயே
    ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
    நல்லாரை நன்மை யறிவாய் நீயே
    ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
    பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
    புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
    செல்வாய செல்வந் தருவாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.7
387    ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே
    அளவில் பெருமை யுடையாய் நீயே
    பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
    போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
    நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
    நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
    தேவ ரறியாத தேவன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.8
388    எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
    ஏகம்ப மேய இறைவன் நீயே
    வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
    வாரா வுலகருள வல்லாய் நீயே
    தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே
    தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
    திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.9
389    விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
    விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
    கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
    காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
    தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
    தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
    திண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.10
390    ஆரு மறியா இடத்தாய் நீயே
    ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
    பேரும் பெரிய இலங்கை வேந்தன்
    பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
    ஊரும் புரமூன்று மட்டாய் நீயே
    ஒண்டா மரையானும் மாலுங் கூடித்
    தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.    6.38.11

திருச்சிற்றம்பலம்


6.39 திருமழபாடி - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

391     நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
    நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
    கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
    கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
    ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
    ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
    மாறானார் தம்மரண மட்டான் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.1
392    கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
    கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
    அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
    அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
    அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
    அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
    மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.2
393    நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
    நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
    பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
    பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
    செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
    மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.3
394    அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
    அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
    கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
    கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
    சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
    மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.4
395    உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்
    உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
    நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
    நால்வேத மாறங்க மானான் கண்டாய்
    உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
    உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
    மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.5
396    தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய்
    தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
    பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய்
    புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
    ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
    இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
    மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.6
397    நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
    நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
    பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
    பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
    ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
    அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
    வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.7
398    பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய்
    பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
    மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
    வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
    தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
    தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
    மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.8
399    ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்
    அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்
    காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய்
    கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
    பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
    பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
    மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.9
400     ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய்
    ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
    விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
    விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
    இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை
    ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
    மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.    6.39.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்,
தேவியார் - அழகாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்


6.40 திருமழபாடி - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

401     அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
    அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற்
    சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத்
    திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
    நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
    நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
    மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.40.1
402    அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
    அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த
    மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு
    வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே
    கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக்
    கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம்
    மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.40.2
403    உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
    ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
    பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட
    பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
    புரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம்
    பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
    வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.40.3
404    ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா
    ஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு
    ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா
    நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
    மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
    வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
    வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.40.4
405    சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்
    திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
    உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்
    ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
    நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
    நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு
    வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.40.5
406    சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
    செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
    புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
    பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு
    தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
    தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
    மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.40.6
407    சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
    சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
    இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
    என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
    பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப்
    பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
    வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.    6.40.7
    இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.    6.40.8-10

திருச்சிற்றம்பலம்


6.41 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

408     வகையெலா முடையாயும் நீயே யென்றும்
    வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
    மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
    வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
    பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
    பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்
    திகையெலாந் தொழச்செல்வாய் நீயே யென்றும்
    நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.     6.41.1
409    ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
    ஆதிக் கயிலாயன் நீயே யென்றுங்
    கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
    கோடிகா மேய குழகா வென்றும்
    பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்
    பழையனூர் மேவிய பண்பா வென்றுந்
    தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.