LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- முல்லைப்பாட்டு

பாட்டின் வரலாறு

    இனித், திருமுருகாற்றுப்படை முதலான பாட்டுக்கள் ஒன்பதும் உள்ளோன் ஒரு தலைவனையே குறிப்பிட்டுப் பாடவந்தமையால், இம்முல்லைப்பாட்டிற்குத் தலைவன் பெயர் எழுதப்படவில்லையாயினும், இதற்கும் உள்ளோன் ஒரு தலைவன் உண்டென்று துணியப்படும். இம் முல்லைப்பாட்டை அடுத்திருக்கின்ற மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கலாமென்பது கருதப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங் கானம் என்னும் இடத்தில் தன்னைப் பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் அரசர் எழுவரொடும் போர்புரிதற் பொருட்டுச் சென்றபோது, அவன்றன் மனைவி கொழுநன் பிரிந்த துயரத்தை ஆற்றிக் கொண்டிருந்த அருமையும், அவன் அவ் வரசரையெல்லாம் வென்று தான் சொன்னவண்ணங் கார்காலத் துவக்கத்தில் மீண்டு வந்தமையுங் கண்டு நப்பூதனார் இதனைப் பாடினாரென்பது புலப்படும். இவ்வாறே நெடுநல்வாடையிலும் ஆசிரியர் நக்கீரனார், நெடுஞ்செழியன் மனைவி அவனைப் பிரிந்து வருந்திய துன்பத்தினை விரித்துச்,

    "செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
    குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
    இன்னே வருகுவர் இன்துணை யோரென
    முகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து
    உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயரா
    மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
    செவ்விரல் கடைக்கண் செர்த்திச் சிலதெறியாப்
    புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவை"

    என்று கூறுதலொடு நப்பூதனார் கூறுவதையும் ஒப்பிட்டு உணர்ந்துகொள்க.

    வாடைக்காலத்தும் வேனிற்காலத்தும் அரசர்கள் போர்மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக்காலத் தமிழ்நாட்டு வழக்காம் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலின் 1 வேனிற் காலத்துப் போர்மேற் சென்ற தலைவன் திரும்பி மனையாள்பால் வந்து சேர்தற்குரிய கார்காலத் துவக்கத்திலே பிரிவாற்றியிருந்த தலைவியின் முல்லையழுக்கத்தைப் பொருளாக வைத்து நப்பூதனார் இம்முல்லைப்பாட் டியற்றினார். திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனையாளைப் பிரிந்து போர் மேற்செல்லத், தலைமகள் பிரிவாற்றாது வருந்திய பாலையென்னும் அகப்பொருள் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றினாரென்று பகுத்தறிந்துகொள்க. வேனிற் காலத்திற் பெரும்போர் துவங்கி நடைபெறுகையில் வேனில் கழிந்து கார்காலந் தோன்றியதாக இருபடை மக்களும் அக்காலங் கழியுந் துணையும் போர் விட்டிருந்து, மறித்துங் கூதிர்காலத் தொடக்கத்திலே போர் துவங்குவாராகலின், அக்காலத்திலே அரசர் தம் மனைக்கு மீண்டு வந்து தங்கிப் பின்னருங் கூதிர் காலத்திலே போரை நச்சிப் போவது வழக்கமாகும் என்க.

    இனி, நெடுஞ்செழியன் தமிழில் வல்லவன், சிறந்த கொடையாளி, அஞ்சாத பேராண்மை வாய்ந்தவன் என்பது புறநானூற்றில் அவன் பாடிய ' நகுதக்கனரே' என்னுஞ் செய்யுளால் இனிது விளங்கலானும், தமிழ்ப்புலவர் பலரைச் சேர்த்துவைத்துத் தமிழை வளப்படுத்து வந்தான் என்பது மதுரைக்காஞ்சி முதலியவற்றால் தெரிதலானும் இவனையும் இவன் கற்புடைமனைவியையுஞ் சிறப்பித்துப் புலவர்பலர் பாடினாரென்பது துணிபு. அற்றேல், இதில் அவ்வரசன் பெயர் சொல்லப்படாமை என்னையெனின்; அகப் பொருளழுக்கம் பயின்று வருகின்ற இதன்கண் அவ்வாறு ஒரு தலைமகன் பெயர் சுட்டிச் சொல்லப்படமாட்டாதென்பதை முன்னரே காட்டினாம். இங்ஙனமே நெடுநல்வாடை யுள்ளுந் தலைவன் பெயர் குறித்துச் சொல்லப்படாமை காண்க.

    இனி, இச்செய்யுள் இல்லோன் றலைவனாக வைத்துப் புனைந்து கட்டி இயற்றப்பட்டதென உரை கூறினாருமுளர். பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலிய அரும்பெருந் தமிழ் நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லது புனைந்து கூறுங் கட்டுவழக்குத் தமிழில் இல்லை என்றற்கு அக்காலத்து இயற்றப்பட்ட நூல்களே சான்றாமாகலின், அவர் கூறியது பொருந்தா வுரை என்க. அற்றாயின், இறையனார்களவியலுரையில் இல்லோன் தலைவனாக வரும் புனைந்துரை வழக்குச் சொல்லப்பட்ட தென்னையெனின்; அங்ஙனம் அருகி வருவதுஞ் செய்யுள் வழக்கேயாம் பொய்யென்று களையப்படாது என்று அறிவுறுத்தற் பொருட்டுச் சொல்லப்பட்டதே யல்லாமல், அக்காலத்து அங்ஙனம் நூல்செய்தல் உண்டென்பதூஉம் அதனாற் பெறப்பட்டதில்லையென்றொழிக.

    செய்யுட்பொருள் நிகழும் இடம் 89 ஆவது அடியிற் காண்க

    இனிப், பாட்டுடைத்தலைவி யிருக்கும் இடம் பல்லான் மலிந்த முல்லைநிலக் காட்டில் மிகவும் அழகிதாகக் கட்டப்பட்ட எழுநிலை மாடமாகும். பரிய மரங்கள் நெருங்கி அடர்ந்து தண்நிழல் பயப்பவுங், காட்டுக் கோழிகள் பேட்டுடனுங் குஞ்சுடனும் முல்லைக்கொடிகள் பிணைந்து படர்ந்த பந்தரின் கீழ்ச் செல்லவும், புள்ளினங்கள் செய்யும் ஓசையன்றி வேற்றொலி விரவாது தனித்து மிக்க எழிலுடன் விளங்கும் முல்லைக்காடு காதல் இன்பம் நுகருந் தலைமக்கட்குக் கழிபெருஞ்சுவை மிகுக்குஞ் சிறப்புடைமையாற் பழைய நாளிற் பெருஞ் செல்வ வளம் வாய்ந்தோர் அங்கு மாளிகை அமைத்து அதில் வாழ்தல் வழக்கம்.

    (24 - 79) அடிகாறுங் காண்க

    இனித், தலைமகளைப் பிரிந்து வினைமுடிக்கப் போன தலைமகன் இருக்கும் இடம்: பகைவர் நகரத்தைச் சூழ்ந்து அரணாயிருக்கும் முல்லைக்காட்டிற் பாடி வீடாகும். முற்கால இயற்கைப்படி அரசர் தம் நகரத்திற்குக் காவலாக மதில், அகழி, பாலைவெளி முதலியவற்றை அரணாக அமைத்தலேயன்றி, அவற்றிற்கும் புறத்தே அடர்ந்த காடுகளையுங் காவலரணாக வைப்பர். இவ்வாறு சமைக்கப்பட்ட பகைவரது காட்டிற் சென்று பாட்டுடைத்தலைவன் பாசறை யிலிருக்கும் இருப்புச் சொல்லப்படுகின்றது.

    செய்யுட்பொருள் நிகழுங்காலம் (5 - 6) அடிகளைக் காண்க

    இனித், தலைமகள் முல்லைநிலத்து மாளிகையில் இருக்குங்காலங் கார்காலத்தில் மாலைப்பொழுதாகும். கார்காலத்து மழை பொழிந்த முல்லைக்கானம் மரஞ்செடிகொடிகளில் இலைகள் நீரைத் துளிப்பப், பறவைகள் ஆணும் பெண்ணுமாய் இன்பம் நுகர்ந்து கூடுகளில் ஒடுங்கிக் கிடப்ப, வானத்திற் கரியமுகில்கள் பரவி எங்கும் மப்பும் மாசியுமாய் இருப்ப, அதனொடு மங்கல் மாலையுஞ் சேர்ந்து மழைக்காலத்தின் இருண்ட இயல்பை மிகுதிப் படுத்தித் தோன்றும் போது, தனியளாய் இருக்குந் தலைவிக்கு ஆற்றாமை மிகுதலுங் கணவன் கற்பித்த சொற்றவறாமல் அவள் அதனைப் பொறுத்து இருத்தலும், அங்ஙனம் இருப்போளுக்குக் கழிபேர் உவகை தோன்றத் தலைவன் மீண்டு வருதலும் போல்வன எல்லாம் இசைவாய் நடைபெறுதற்கு இக்காலம் பெரிதும் ஏற்புடைத்தாதல் காண்க.

    50 ஆவது அடியைக் காண்க

    இனித், தலைமகன் பாசறைவீட்டில் இருக்குங்காலம் வேனிற்காலத்து இறுதி நாளில் இடையாமம் என்க. வேனிற்காலத்துப் பகைவயிற் பிரிந்த தலைமகன், வெஞ்சுடர் வெப்பந் தீர நால்வகைப் படையும் நீரும் நிழலும் பெறும்பொருட்டுக் கான்யாறு ஓடும் (24 ஆவது அடி) காட்டில் தங்கிப் பகைவரொடு போர் இயற்றுங் காலமும் அதுவேயாம் என்க. இப்பாட்டில் அவன் பெரும்பான்மையும் போர்வினை முடித்து அவ்வேனிற்காலத்தின் கடை நாள் இரவிற் பாசறையில் இருக்கும் இருப்பும், மற்றைநாள் தொடங்குங் கார்காலத்தில் அவ்வினையினை முற்றும் முடித்து இரவுகழிய வருநாள் மாலைப் பொழுதில் மீண்டுந் தன் தலைவிபாற் சென்றமையுஞ் சொல்லப்படுகின்றன. இப்பொருள் அறியமாட்டாத நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் தலைவன் பாசறையிருப்புங் கார்காலம் உரித்தென்று உரை கூறினார்; ஆசிரியர் தொல்காப்பியனார், "கூதிர்வேனில் என்றிரு பாசறைக், காதலின் ஒன்றியக் கண்ணிய மரபினும்" என்பதனாற் குளிர் காலத்துப் பாசறையும் வேனிற்காலத்துப் பாசறையும் என இரண்டே உடம்படுதலானுந், தலைமகட்குக் கார்காலங் குறித்துவந்த தலைமகன் அது கண்ட வளவானே தான் எடுத்துக்கொண்ட வினை முடித்து மீளுவான் என்பது அவர்க்கும் உடம்பாடாகலானும், இச்செய்யுள் செய்கின்ற நப்பூதனார்க்கும் அதுவே கருத்தாகலானும், போர்வினைக்கு மிகவும் இடையூறு பயப்பதான கார்காலத்தில் இருபடை மக்களும் போர்விட்டிருத்தலே உலகவியற்கையகலானும் அவர் பாசறையிருப்பிற்குக் கார்காலமும் உரித்தென்றது பொருந்தாதென மறுக்க, எடுத்தவினை முடியாதாயின் அதனை இடைப்பட்ட கார்காலத்தில் விட்டிருந்து, திரும்பவுங் கூதிர்காலத்தே அதனைத் துவங்கி நிகழ்த்துவர் என்றறிக.

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.