|
||||||||
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் |
||||||||
மொழியைக் குறித்த சொல்லே காலத்தையும் குறிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த சொல் ” தமிழ் ”. ஆம். சங்கத் தமிழ் என்றாலே சங்க காலத்தையும் குறிக்கும் சொல்லாடலாக உள்ளது நமது தனித் தமிழ்ச் சிறப்பாகும். சங்க காலம் தொடர்பான கால வரையறையில் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் கி.மு.5ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை சங்க காலம் என பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அக் கால வரையறையின் வாயிலான பற்பல ஆய்வுகள் மேற்கொண்டு மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் தொடர்பான ஆய்வுரைகளை வழங்கியுள்ளனர். தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் வளர்த்த நமது தமிழ்ச் சமூகம், தமிழ் எழுத்துக்கள் இன்றைய பயன்பாட்டில் பயன்படுத்தும் வடிவத்திற்கு முன்னர் சங்க காலத்தில் பிராமிய வடிவத்தில் இருந்தது. சங்க காலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கில் இருந்தது தமிழி அல்லது தமிழ் பிராமி எழுத்துரு வகையே ஆகும். பிராமிய எழுத்துருவை ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமி என்றும், ஆய்வாளர் நாகசாமி அவர்கள் தமிழி என்றும், நடனகாசிநாதன், பேராசிரியர் ராசவேல் அவர்கள் தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் என்றும் அழைக்கின்றனர். வடஇந்திய பிராமி எழுத்துக்களுக்கும், சங்க காலத்தில் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை உண்டு. ஆனால் இதில் பல வேறுபாடுகள் இருந்தன. தமிழில் உள்ள ழ,ள,ற,ன போன்ற எழுத்து வடிவங்கள் வட பிராமியில் இல்லை. இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கும் பிராமி எழுத்துக்கள் புத்த தர்மத்தைப் போதிக்கும் பிராகிருத மொழியில் இருக்கும் பொழுது, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்திய பிராமியிலிருந்து வேறுபடுத்தி உணர்த்தும் பொருட்டு தமிழ் பிராமி அல்லது தமிழி என்றழைத்தனர். இவற்றை சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் என்றே கூறலாம். சமணக் கல்வெட்டுகள் வாயிலாக தமிழின் தொன்மையையும், தமிழர்களின் பண்பாட்டு வாழ்வியல் முறைகளையும் நாம் அறியலாம். இக் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் பிராமி எழுத்துரு வடிவங்களிலே இருப்பது இதன் தொன்மையை பறைசாற்றுகிறது. அதனால் இவை சங்க கால கல்வெட்டுகள் என்றும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்றம், தொல்தமிழ்க் கல்வெட்டுகள் என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது. இதுவரை 32 இடங்களில் ஆய்வு செய்து கிடைத்த 95 கல்வெட்டுகளில் 5 விழுப்புரம் மாவட்டத்திலும், குறிப்பாக செஞ்சி மற்றும் செஞ்சி வட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளில் 4 கல்வெட்டுகள் இருப்பது செஞ்சி பகுதியின் சிறப்பாகும். திருக்கோவலூர் ஜம்பையில் 1 கல்வெட்டு உள்ளது. இதன் வாயிலாக செஞ்சி சங்க காலத்தில் சிறப்பு பெற்ற பகுதியாக இருந்தது இவ்வாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சங்க காலத்தில் செஞ்சி : சங்க கால செஞ்சியின் சிறப்புகளை அறிவதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது தமிழ்பிராமியக் கல்வெட்டுகளான சமணக் கல்வெட்டுகளே ஆகும். பிராமிய எழுத்து என்ற பெயரே, சமண சமயத்தின் முதல் தீர்த்தங்காரரான ரிஷப தேவருக்கு இரு மகள்கள் என்றும் அவற்றுள் ஒருவர் பெயர் சுந்தரி, மற்றொரு மகளின் பெயர் ”பிராம்மி” என்றும், சுந்தரி மொழியையும், பிராமி எழுத்தையும் குறிப்பதாகவும், இதன் வாயிலாகவே பிராமி எழுத்துரு பெயர் வழக்கு வந்தது என்றும் ஆய்வாளர் கணேசன் அவர்கள் கூறுகின்றார். தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைப்பதற்கு இன்றும் அதன் பழமையை உணர்த்தும் தமிழ்பிராமி எனப்படும் தமிழி எழுத்துக்களே பெரும் காரணம். இவை 2400 ஆண்டுகள் பழமையானது. தமிழ் எழுத்தின் தொடக்கத்தைக் காட்டும் இந்த அரிய கல்வெட்டு எழுத்துக்கள் சமண துறவியர்கள் நடத்திய அறப் பள்ளிகளிலேயே அதிகமாக காணக் கிடைக்கிறது. செஞ்சி பகுதியானது இயற்கையிலேயே கல்குவியலாகவும், பாறைகளாகவும், கனிம வளம் கொண்டவையாகவும் விளங்கும் இயற்கையான மலைகள் நிறைந்ததாகும். இதன் காரணமாகவே இம் மலைப் பகுதிகள் தமிழகத்தின் தொன்மை கல்வி நிறுவனங்களாக, சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தும் அறப் பள்ளிகளாக விளங்கியிருக்கின்றன. செஞ்சிக்கு தென்மேற்கே உள்ளது வரிக்கல் கிராமம். இங்குள்ள சிவகிரி மலையில் 2000 ஆண்டு பழமையான சமண படுக்கைகளை பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன் குழுவினர் கண்டறிந்து ஆய்வு செய்து வழங்கியுள்ளனர். இந்த சிவகிரி மலையின் தெற்கே 89 அடி நீளம் கொண்ட குகை உள்ளது. குகையின் மேற்கே 10 சமணப் படுக்கைகளும், மலையின் கீழ்ப் பகுதியில் தெற்கில் சிறிய பாறையில் சமணப் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சமணத்துடன் தொடர்புடைய ஜைனகிரி என்ற பெயர் கொண்ட இம்மலையே 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிவகிரி என மாற்றி உள்ளனர். மேலும் மலையின் உச்சியில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானக் கோயில் இருந்துள்ளது. அடித்தளத்தில் காணப்படும் செங்கல்லின் நீளம் 34 செ.மீ, அகலம் 6.5 செ.மீ இருப்பதால் இது சங்க காலத்தைச்சேர்ந்தது என உறுதியாகின்றது. அரிக்கமேடு பகுதியில் சங்க காலத்தில் காணப்படும் செங்கல் அளவில் இது ஒத்துப் போவதாக ஆய்வாளர் கூறுவதிலிருந்து செஞ்சியின் சங்க காலச் செழுமையை அறிய முடிகிறது. இது தவிர செஞ்சியின் சுற்றுப் பகுதி ஊர்களான சிறுகடம்பூர், தொண்டூர், நெகனூர் பட்டி, பறையன்பட்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால கல்வெட்டுகளில் சமண முனிவர்களுக்கு அறப் பள்ளிகள் அமைத்துக் கொடுத்ததை தொண்டூர், நெகனூர்பட்டி கல்வெட்டுகள் வாயிலாகவும், சமண முனிவர்கள் வடக்கிருந்த நிகழ்வு, திருநாதர் குன்று, பறையன்பட்டு கல்வெட்டுகள் வாயிலாகவும் நம்மால் அறிய முடிகிறது. இங்கு காணப்படும் குகைக் கல்வெட்டுகள் வாயிலாக அமைந்த அறப் பள்ளிகள் மூலம் கணிதம், வானியல், விஞ்ஞானம், உயிர் ஞானம், மொழியறிவு, மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு தானம், புகலிட தானம் அளித்த செய்திகளையும் அறிய முடிகிறது. சிறுகடம்பூர் திருநாதர் குன்று : செஞ்சிக் கோட்டையின் வடக்கே சிங்கவரம் செல்லும் சாலையின் மேற்கே அமைந்துள்ளது திருநாதர் குன்று. இப்பகுதி சிம்மபுரி என்றும் அழைக்கப்பட்டதாகும். சமண அறத்தைப் பரப்பிய 24 தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில் இச் சிற்பங்களின் தலையின் மேற்பகுதியில் முக்குடை காணப்படுகிறது. மதுரை கழுகுமலையில் உள்ள சமணச் சிற்பங்கள்போல் இது காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது 4-5ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாகும். பாறையின் வலது பாகத்தில் ஒரு தீர்த்தங்கரர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். மலையின் நடுப் பகுதியில் ஒரு பெரிய பாறையில் பத்மாசனத்தில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், மேல் பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளது தெரிகிறது. மலைமீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்த நிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் வளர்ந்த, மாறுதல் அடைகின்ற கால கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன் முதலில் தென்படுகிறது என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் திரு.வெங்கடேசன். இந்த திருநாதர் குன்றின் கல்வெட்டில்தான் ” ஐ ” எனும் தமிழ் எழுத்து பிறந்துள்ளது என்றும் வெங்கடேசன் கூறுகிறார். ஆகவே ஐ பிறந்து தை பிறந்த மலையாகிறது. தமிழுக்கு எழுத்து தந்த மலையாகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் சந்திரநந்தி ஆசிரியர் என்னும் சமணத் துறவி 57 நாட்கள் நோன்பிருந்து ( சல்லேகனை ) வீடுபேறு பெற்றார் என்றும், இளைய பட்டாரகர் என்னும் சமணத் துறவி 30 நாட்கள் நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்றும், கோயில் விளக்கேற்ற 400 ஆடுகள் தானம் தரப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது. பறையன்பட்டு கல்வெட்டு : செஞ்சி, அவலூர்பேட்டை அருகே உள்ளது பறையன்பட்டு. இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் வடக்கிருந்து வீடுபேறு பெற்ற நிகழ்வு பொறிக்கப்பட்டுள்ளது. நமோத்து, பாணாட்டு வச் ச ணந்தி ஆசாரிய ர் மாணாக்கராராத னி நோற்று (மு)டித்த (நி) சீதிகை
” நமோத்து ” என்பது நமோஸ்து என்ற சமஸ்கிருதச் சொல்லைக் குறிக்கிறது. தமிழில் வணங்குகிறேன் என்று பொருள். பாணாட்டைச் சேர்ந்த வச்சநந்தி என்ற சமண ஆசாரியரின் மாணாக்கர் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததற்காக எடுக்கப் பெற்ற தவம் செய்யும் இருக்கை என்று பொருள். சமணத் துறவிகள் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பதற்காக இந்நிசீதிகைகள் ஏற்படுத்தபபடுவது இயல்பாகும்.. இக் கல்வெட்டின் வாயிலாக சமண முனிவர்களின் சமய மாண்பினை அறியலாம். பிற கல்வெட்டுகளில் சமணத் துறவிகளுக்குப் பிறர் செய்த கொடைகளை – பாளிய் – இருக்கை- அமைத்துக் கொடுத்ததை மட்டுமே பேசுகிறது. ஆனால் இக் கல்வெட்டில் சமண சமயத்தின் கொள்கை பேசப்படுகிறது.
தொண்டூர் கல்வெட்டு : செஞ்சியின் கிழக்கே தொண்டூர் கிராமம் உள்ளது. இங்கு காணப்படும் சமணக் கல்வெட்டு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இங்குள்ள பஞ்சனார்படி என்ற மலைக் குன்றில் தெற்கு வடக்காக 3 சமணப் படுக்கைகள் உள்ளன. இங்கு கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் அகழ் ஊரைச் சேர்ந்த அறமோசி என்பவர் அமைத்துக் கொடுத்த சமணப் பள்ளி என உள்ளது. இந்தக் கல்வெட்டுதான் நடுநாடு என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் மிகப் பழமையான கல்வெட்டு என்பது ஆய்வாளர்கள் கருத்து. மலையின் மேல் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளது. பஞ்சனார்படி குகைத் தளத்தின் வெளியே தரைப் பாறையில் இரு வரிகளில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. ” இளங்காயிபன் ஏவ அகழ் ஊரறம் மோசி செயித அதிடானம் ”
என்பது இதன் வாசகம். அதிடானம் என்பது புனித இருக்கையை குறிக்கும் சொல்லாகும். அகழூர் என்பது அகழ் ஊர் என இக் கல்வெட்டில் உள்ளது. இன்று தொண்டூர் அருகில் அகலூர் என்ற ஊர் உள்ளது இதை மெய்ப்பிப்பதாக உள்ளது. மேலும் அகழூரினர் ஒன்றாக இணைந்து இளங்காயிபன் என்பவர் பணிக்க அறம் செய்துள்ளனர். மோசி என்பது ஒரு நபரின் பெயராகக் கொள்ளலாம். ” திருந்து மொழி மோசி பாடிய ஆயும் ” ( புறம் : 158 ) புறநானூற்றுப் பாடலான இப் பாடலின் பொருள், திருந்திய சொல்லையுடைய மோசி என்னும் புலவனாற் பாடப்பட்ட ஆயும் என்பது பொருளாகும். இதில் உள்ள மோசி சங்க காலப் புலவர் பெயரை சுட்டுவதால், கல்வெட்டில் உள்ள மோசி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு நபரின் பெயர் என்பது உறுதிப்படுகிறது.
நெகனூர்பட்டி கல்வெட்டு : இக் கல்வெட்டு 3 – 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக் கல்வெட்டும் சமணர் இருக்கை செய்வித்துக் கொடுத்ததை கூறுகிறது.
“ பெரும் பொகய் செக்கந்தி தாயியரு செக்கந்தண்ணி செ யிவித்த பள்ளி ”
பெரும் பொகய் என்ற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவனின் தாயார் சேக்கந்தண்ணி செய்வித்த பள்ளி ( சமணர் இருக்கை ) என்று கல்வெட்டு கூறுகிறது என்பது பேராசிரியர் சு.ராஜவேலு அவர்களின் கருத்தாகும். நெகனூர்பட்டி மேற்கே உள்ள அடுக்கண்கல் என்ற குன்றின் கீழ் அருகில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் கூரைப் பகுதியில் விளிம்பில் இக் கல்வெட்டு உள்ளது. சேக்கந்தண்ணி என்பதை ” சேக்கந் அண்ணி ” என பிரித்துப் படிக்க வேண்டும். இவரை சமணப் பெண் துறவியாகக் கொள்ளலாம். சேக்கிழார் என்பதில் சே குடிப் பெயராக இருப்பது போல சே குடிப் பெயராகக் கொள்ளலாம். சே என்பது காளை என்ற பொருளில் ,
” கயிறு இரு கதச் சேப் போல” ( அகம் : 36 )
என்று அகப்பாடலில் அகநாநூறு கூறுகிறது. கந்தி என்ற சொல்,
” கறந்த பால் அணைய கந்தி “ ( சீவகம் : 26 : 49 )
கறந்திட்ட பால் போலுந் தூய தவப் பெண் என்று சீவக சிந்தாமணி கூறுகிறது. அதேபோல் சூடாமணி கந்தி, கௌந்தி என்ற சொற்களுக்கும் பெண் துறவி என்று பொருள் சொல்கிறது. இதன் மூலம் சே என்பது காளையையும், கந்தி என்பது துறவியையும் குறிப்பது உறுதிப்படுகிறது.
தொகுப்புரை :
முடிவுரை :
ஒரு இனத்தின் நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை அறிய வரலாற்றோடு கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள் வழியாகவே நிறுவப்பட்டு நம்மால் அறிய முடிகிறது. செஞ்சி பகுதியில் கிடைத்த இக் கல்வெட்டுகளின் மூலம் சமண முனிவர்களின் மலைப் பள்ளிகள் மானிடருக்கு, இம்சை செய்யாமை, களவு செய்யாமை, பொய் சொல்லாமை, பிறன் மனை விழையாமை, மிகு பொருள் விரும்பாமை போன்ற வாழ்வியல் நெறிகளை விளக்கிக் கூறுவதை அறிய முடிகிறது. இதன் வழியாக சங்க கால மக்களின் வாழ்வியல் அறங்களையும் இதன் வழியாக அறிய முடிகிறது. தொடர்ந்து தற்கால மக்களும் மேற்கண்ட அறங்களை கடைபிடித்து ஒழுகினால் சமூகம் உய்வுறும் என்பது தெளிவு. அதற்கு மேலதிக ஆய்வுகளும், தொல்லியல் கல்வெட்டு ஆய்வுகளும் அவசியம் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.
துணைநின்ற நூல்கள் :
1. ரிஷபா – ஆதி பகவன் – ஸ்வாமி ஆர்.பி.பிரக்வாட் – தமிழில் சன்மதி – ஸ்ரீ ரத்னா ஹீரிபாய் இலக்கிய பிரசுரங்கள், 46, கோவிந்தப்ப நாய்க்கன் தெரு, சென்னை – 1.
2. புறநானூறு மூலமும், உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம், சென்னை – 14
3. அகநானூறு - மூலமும், உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம், சென்னை – 14
4. சீவக சிந்தாமணி மூலமும், உரையும் - ஔவை சு.துரைசாமிப் பிள்ளை – திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சென்னை – 18.
5. களப்பிரர் கால கல்வெட்டுகள் – பேராசிரியர் மா.பவானி., கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
குறிப்புதவிகள் : 1. திரு.ஸ்ரீதர்., தமிழ் பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 2. Thiru.Mahadevan., Early Tamil Epigraphy., - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
கட்டுரையாளர் : கு.கதிரவன்., 33/V4, நேத்தாஜி தெரு, திருவண்ணாமலை சாலை, கிருஷ்ணாபுரம், செஞ்சி – 604 202 கைப்பேசி : 94432 89897 படம் விளக்கம்: 1. திருநாதர் குன்று( 24 தீர்த்தங்கரர்கள்) – சிறுகடம்பூர் : 2. நெகனூர்பட்டி தமிழ் பிராமி கல்வெட்டு: |
||||||||
by kathiravan K on 27 Jul 2018 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|