LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF
- தமிழ் வழி வாழ்வியல்

தமிழர்களின் திருமண முறைகள் (Tamil Marriage System)-1

தமிழர்களின் திருமண முறைகள் (Tamil Marriage System)  - 1

 

  திருமணம்  என்பது ஒரு சட்ட, சமூக,உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. திருமணமானது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே நடைபெறுகிறது.ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே மணம் எனப்படும்.

 

   திருமணம் மனித சமுதாயத்தின் நலன் கருதி மனிதனால் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறையாகும். மனித இனத்தைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக்குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும்,  நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். மணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே ஆகும்.

 

திருமணம்- சொல்லும் பொருளும் :  (Marriage – Meaning) 

 மணம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பினும், பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருளை உடையதாக இருந்தது. 'மண்ணுதல்' என்ற சொல்லின் பொருள் கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகுபெறுதல் எனப்பல பொருட்கள் உள்ளன. திருமணத்தைக் குறிக்கும் ' மணம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது தெரியவில்லை. மண் இயற்கையிலேயே மணம் உடையது. அதனை மண் மணம் என்பது தமிழர் வழக்கு. இல்லறத்திற்கு நுழைவாயிலாக அமைவதனை 'மணம்' என்ற சொல்லால் குறிப்பிட்டதன் நோக்கம் மண்ணைப் போன்று  பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். மனமொத்து, வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டனர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.

 

மணம் பற்றிய பிற சொற்கள் : 

 மணம் என்பதைக் குறிக்க பல்வேறு சொற்களை பண்டைய தமிழர்கள் பயன்படுத்தினர். அவை முறையே கடி, மணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. இவை மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற பல காரணங்களால் பெயர் பெற்ற சொற்களாக உள்ளன. சில சொற்கள் பிற மொழியாலர் தொடர்பு, பிற சமயத்தவர் தொடர்பு காரணமாக வழக்கில் இடம் பெற்றிருக்கலாம்.சான்றாகக் ' கல்யாணம்" என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில்  ஆசாரக்கோவையிலும், நாலடியாரிலும், பயின்று வந்துள்ளதைக் காணலாம்

 

 

கரணம் : 

 

“கரணம்” என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.

 

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணமென்ப

 

என்பது தொல்காப்பியத்தில் உள்ள குறிப்பு. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே','புணர்ந்துடன் போகிய காலையான' என்ற நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால் 'கரணம்' என்ற சொல் இன்று வழக்கில் இல்லை.

 

கடி-மணம் : 

'கடி' என்பது பல பொருள் தரும் உரிச்சொல் ஆகும். 'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் கன்னித்தன்மை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது.

  "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம்.கடிமணம் என்பது நல்ல மணம், நன்மை பெற உதவும் மணம் என்றும் பொருளைத் தருகிறது. மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறாது.

 

  இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும் , மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டுகிறது. சீவக சிந்தாமணியில் 'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் சுட்டப்படுதலால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்தும் திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம்.

 

மன்றல்: 

 'மன்றம் ' என்ற சொல் ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. உற்றார் உறவினர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, மணவினைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை அறியலாம். 'மன்றல்' என்ற சொல் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது.

 

வரைவு: 

வரை என்பதற்கு மலை, வரையறை என்ற இரு பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத்தொல்காப்பியம் "வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் உள்ளதை காணலாம்.

 

வதுவை: 

வதுவை என்ற சொல்லுக்கு 'வதிதல்' என்று பொருள். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல்  சிலம்பு,  சிந்தாமணி,பெருங்கதை,  கந்தபுராணம்,  போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கிறது.

 

பழந்தமிழரும் திருமணமும் :

பண்டைத் தமிழர் தங்கள் வாழ்வில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறுவதில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். எனவும் பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். 'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே 'கற்பு நெறி' எனப்பட்டது

 

பண்டைய திருமண முறைகள் (Traditional marriage Types)

சேவை புரிந்தும்,பொருள் கொடுத்தும் மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல், திறமையை வெளிக்காட்டும் வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், தன் காதல் மிகுதியைக் காட்டி மணத்தல் ஆகிய இவ்வகை மண்முறைகள் களவுநெறி, கற்புநெறி ஆகிய இருவகை மண முறைகளிலும் இருந்தது. உறவு முறைத்திருமணம், கலப்புமணம் ஆகிய வகைகளில் கூட களவு மணமும் இருந்தது என்பதனை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.

 

சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரியவரும் தமிழரின் மணமாக

 

  • மரபு வழி மணம்
  • சேவை மணம்
  • போர் நிகழ்த்தி மணம்
  • துணங்கையாடி மணம்
  • பரிசம் கொடுத்து மணம்
  • ஏறு தழுவி மணம்
  • மடலேறி மணம்

 

ஆகிய மண முறைகள் நடைமுறையில் இருந்தது.

 

மரபு வழி மணம் : 

மரபு வழி மணத்தை பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர்.பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். மரபு வழி மணமே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது.

 

போர் நிகழ்த்தி மணத்தல் : 

தொல்காப்ப்பியம்  தமிழர்களின் வீர உணர்வை விளக்கும் வகையில் 'மகட்பாற்காஞ்சி' என்னும் துறையை  சுட்டுகிறது. சமுதாயத்தில் ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது, போரிட்டு வெற்றி பெற்றுத் தான் விரும்பிய பெண்ணை மனந்து கொள்ளுதல் என்ற வழக்கம் பண்டைத் தமிழர் வாழ்வில் இடம் பெற்றமைக்குப் புறநானுற்றில் பாடல்கள் சான்றாக அமைகின்றன.

 

துணங்கையாடி மணம் : 

 மகளிர் விளையாட்டில் துணங்கையாடுதல் என்பது ஒன்று. விழாக்காலங்களில் துணங்கையும், மன்னர்ப்போரும் ஒருங்கே நிகழும். துணங்கைக் கூத்துக்குரிய நாள் நிச்சயிக்கப்பட்டு, அந்நாளில் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே துணங்கையும், மன்னர்ப்போரும் நிகழ்த்திய செய்தியை குறுந்தொகைப் பாடல் சான்று காட்டுகிறது.

 

பரிசம் கொடுத்து மணத்தல் : 

பரிசம் கொடுத்தல் என்பது மணமகளின் பெற்றோர் தனது மகளுக்கு வழங்கிய சீர்வரிசைப் பொருள்களை மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும் மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்றாக  பின்வரும் பாடல்  உள்ளது.

 

" உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே "

 

என்ற குறிப்பு இதனை உனர்த்துகிறது.

சில சமயங்களில் ஏதேனும் காரணம் குறித்து மணமகன் தரும் பரிசத்தை மணமகளின் பெற்றோர் ஏற்காமல் மகளைக் கொடுக்கவும் மறுப்பர்.தற்காலத்தில் பரிசம் கொடுத்து மகளை மணத்தல் சில சமூகத்தாரிடம் காணப்படுகிறது. மேலும் பொருள் பெற்று மணத்தல் என்பதும் உள்ளது.

 

ஏறு தழுவுதல் : 

தமிழரின் வீர உணர்வைக் பறைசாற்றும் செயலே 'ஏறு தழுவுதல்' ஆகும். கலித்தொகையில் ஏறு தலுவுதலை  முல்லைக்கலியில் ஆயர் மத்தியில் நிலவிய மணவினை சடங்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் மகளை மணக்கப் போகும் ஆணின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். முல்லை நில ஆயர்கள் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் தொழிலையுடையவர்கள். அவற்றிற்குப் புலி முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர் கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல் இன்றியமையாதது. காளையை அடக்கி தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள் என்ற குறிக்கோளுடன் ஏறு வளர்த்தனர். அவ்வேற்றினைத் தழுவி அதற்குப் பரிசுப்பொருளாக ஆயர் மகளை மணப்பதற்குத் துணிந்த இளைஞர்களாக ஆயர்கள் இருந்தனர்.

by   on 24 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்! செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்!
தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1    -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1 -இராம.கி
12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள் 12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள்
சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது..... சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.....
விடை தெரியாத ஏழு கேள்விகளும் முனைவர். பொன்ராஜ் பதிலும் விடை தெரியாத ஏழு கேள்விகளும் முனைவர். பொன்ராஜ் பதிலும்
[ம.சு.கு]வின் :  வெற்றியாளர்களின் பாதை ! [ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.