LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பத்தாம் திருமுறை-2

முதல் தந்திரம்


1. உபதேசம்


113     விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே     1

114     களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே     2

115     பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே     3

116     வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே     4

117     சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே     5

118     மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே     6

119     அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே     7

120     ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே     8

121     வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே     9

122     சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே     10

123     அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் போ஢ன்பத்து அருள்வெளி தானே     11

124     வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே     12

125     சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோ ர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே     13

126     முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே     14

127     இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே     15

128     சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே     16

129     தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே     17

130     எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே     18

131     மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே     19

132     பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே     20

133     பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே     21

134     புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே     22

135     சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடா஢ற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே     23

136     அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே     24

137     அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே     25

138     திருவடி யேசிவ மாவது தோ஢ல்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே     26

139     தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே     27

140     தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே     28

141     சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்இன் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே     29

142     போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே     30


2. யாக்கை நிலையாமை

143     மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே     1

144     பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே     2

145     ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
போ஢னை நீக்கிப் பிணமென்று போ஢ட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே     3

146     காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறி யாதே     4

147     சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே     5

148     அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே     6

149     மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே     7

150     வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே     8

151     கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே     9

152     பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே     10

153     நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே     11

154     முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே     12

155     மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே     13

156     வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே     14

157     ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே     15

158     வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே     16

159     ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே     17

160     அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே     18

161     மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வா஢யாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே     19

162     கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே     20

163     முட்டை பிறந்தது முந்_று நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே     21

164     இடிஞ்சில் இருக்க விளக்கொ஢ கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே     22

165     மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே     23

166     குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்தது நடுவே
புடையு மனிதனார் போக்கும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே     24

167     காக்கை கவா஢லென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே     25


3. செல்வம் நிலையாமை

168     அருளும் அரசனும் ஆனையம் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சோ஢ன்
மருளும் பினையவன் மாதவ மன்றே     1

169     இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே     2

170     தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே     3

171     ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே     4

172     தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே     5

173     மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே     6

174     வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவும் துணையொன்று கூடலு மாமே     7

175     வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே     8

176     உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே     9


4. இளமை நிலையாமை

177     கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே     1

178     ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே     2

179     தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே     3

180     விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே     4

181     பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே     5

182     காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே     6

183     பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே     7

184     கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே     8

185     ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே     9

186     எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ து அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே     10


5. உயிர் நிலையாமை

187     தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே     1

188     ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே     2

189     மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே     3

190     வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே     4

191     சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே     5

192     மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே     6

193     துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்சொ஢ கொள்ளி
அடுத்தொ஢ யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே     7

194     இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே     8

195     ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே     9

196     அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே     10


6. கொல்லாமை

197     பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே     1

198     கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே, 2


7. புலால் மறுத்தல்

199     பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே     1

200     கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே     2


8. பிறன்மனை நயவாமை

201     ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே     1

202     திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே     2

203     பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே     3


9. மகளிர் இழிவு

204     இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே     1

205     மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே     2

206     இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே     3

207     வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே     4

208     கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே     5


10.நல்குரவு

209     புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ராயினார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே     1

210     பொய்க்குழி தூர்ப்பான் புலா஢ புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே     2

211     கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே     3

212     தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே     4

213     அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே     5


11. அக்கினி காரியம்

214     வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையும் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே     1

215     ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே     2

216     அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே     3

217     போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே     4

218     நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே     5

219     பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே     6

220     பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே     7

221     ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே     8

222     ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே     9

223     அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே     10


12. அந்தண ரொழுக்கம்

224     அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே     1

225     வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்க்களே     2

226     காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே     3

227     பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே     4

228     சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே     5

229     வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே     6

230     நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே     7

231     சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே     8

232     திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே     9

233     மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதொ஢ந்து அந்தண ராமே     10

234     அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே     11

235     வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கதுபோதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே     12

236     ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே     13

237     தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே     14


13. அரசாட்சி முறை
(இராச தோடம்)


238     கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே     1

239     நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே     2

240     வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே     3

241     மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே     4

242     ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே     5

243     ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே     6

244     திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே     7

245     வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
போந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே     8

246     கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே     9

247     தத்தம்சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே     10


14. வானச் சிறப்பு

248     அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே     1

249     வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே     2


15. தானச் சிறப்பு

250     ஆர்க்கும் இடுமின் அவா஢வர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே     1


16. அறஞ்செய்வான் திறம்

251     தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே     1

252     யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே     2

253     அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயனறி யாரே     3

254     அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே     4

255     தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே     5

256     துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே     6

257     தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே     7

258     திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்
விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே     8

259     பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே     9


17. அறஞ்செயான் திறம்

260     எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே     1

261     ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் போ஢டர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே     2

262     அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே     3

263     இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே     4

264     பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே     5

265     வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே     6

266     கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே     7

267     இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே     8

268     கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே     9

269     செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே     10


18. அன்புடைமை

270     அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே     1

271     பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே     2

272     என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே     3

273     ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே     4

274     என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே     5

275     தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே     6

276     முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே     7

277     கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே     8

278     நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே     9

279     அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே     6


19. அன்பு செய்வாரை அறியும் சிவன்

280     இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே     1

281     இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே     2

282     அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே     3

283     புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே     4

284     உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தொ஢ந்தறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே     5

285     கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே     6

286     நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே     7

287     முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே     8

288     ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே     9

289     விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே     10


20. கல்வி

290     குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே     1

291     கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே     2

292     நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே     3

293     கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே     4

294     துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே     5

295     நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே     6

296     ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே     7

297     வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே     8

298     பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் போ஢ன்பம் உற்றுநின் றாரே     9

299     கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே     10


21. கேள்வி கேட்டமைதல்

300     அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே     1


301     தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே     2

302     மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே     3

303     பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே     4

304     ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே     5

305     விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே     6

306     சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவார் அன்றே     7

307     உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே     8

308     புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே     9

309     வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே     10


22. கல்லாமை

310     கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே     1

311     வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே     2

312     நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே     3

313     கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே     4

314     நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே     5

315     விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே     6

316     கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே     7

317     கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே     8

318     கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே     9

319     ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே     10


23. நடுவு நிலைமை

320     நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே     1

321     நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே     2

322     நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே     3

323     தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே     4


24. கள்ளுண்ணாமை

324     கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே     1

325     சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே     2

326     காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே     3

327     வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே     4

328     உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே     5

329     மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே     6

330     மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே     7

331     இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே     8

332     சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே     9

333     சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே     10

334     தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே     11

335     யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே     12

336     உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே     13


முதல் தந்திரம் முற்றிற்று

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.