LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பத்தாம் திருமுறை-6

ஐந்தாம் தந்திரம்

1. சுத்த சைவம்

1419     ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுல காளி யிலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.     1

1420     சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு
சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்று
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.     2

1421     கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.     3

1422     வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
புதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.     4


2. அசுத்த சைவம்

1423     இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத்
தினையார் இணைக்குழை யீரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே.     1

1424     காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.     2

1425     கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.     3

1426     ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.     4


3. மார்க்க சைவம்

1427     பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ்
சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.     1

1428     கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சத்தசை வப்பத்த நித்தனே.     2

1429     ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மேயொன்
றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே.     3

1430     சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ்
சத்தும் அசத்துந் தணந்த பராபரை
உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.     4

1431     சத்தும் அசுத்துந் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியு மங்கே சிறந்துள தானே.     5

1432     தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.     6

1433     பூரணம் தன்னிலே வைத்தற்ற வப்போதே
மாரண மந்த மதித்தானந் தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும் போகங்
காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே.     7

1434     மாறாத ஞான மதிப்பற மாயோகந்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே.     8

1435     வேதாந்தங் கண்டோர் பிரமமித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணமன்ன சைவர் உபாயமே.     9

1436     விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காம லெணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.     10

1437     ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.     11


4. கடுஞ் சுத்த சைவம்

1438     வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேனி
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.     1

1439     உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.     2

1440     சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.     3

1441     நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே.     4

1442     சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.     5


5. சரியை

1443     நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே.     1

1444     உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே.     2

1445     நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.     3

1446     பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே.     4

1447     சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.     5

1448     கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபந்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே.     6

1449     சரியாதி நான்குந் தருஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.     7

1450     சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே.     8


6. கிரியை

1451     பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்
டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.     1

1452     கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.     2

1453     கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே.     3

1454     இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.     4

1455     பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.     5

1456     அன்பின் உருகுவ நாளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே.     6


7. யோகம்

1457     நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.     1

1458     ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லால்
ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரியயன் என்றுளார்
ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே.     2

1459     பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே.     3

1460     உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.     4

1461     எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.     5

1462     விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே.     6

1463     பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நகர நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே.     7

1464     ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்த னிவனென்றே அன்புறு வார்களே.     8

1465     யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தருகிரி யாதி சரியையாந்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.     9

1466     யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.     10


8. ஞானம்

1467     ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.     1

1468     சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம்
உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.     2

1469     தன்பால் உலகுந் தனக்கரு காவதும்
அன்பா லெனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.     3

1470     இருக்குஞ் சேம இடம்பிரமமாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகந்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.     4

1471     அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.     5

1472     ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதோறுங்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.     6

1473     ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.     7

1474     ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.     8

1475     நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.     9

1476     ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதய
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குறு பாதமே.     10


9. சன்மார்க்கம்

1477     சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்
தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.     1

1478     சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே.     2

1479     தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே.     3

1480     தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.     4

1481     தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று
மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது
மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந்
தாவை னாயுறலானசன் மார்க்கமே.     5

1482     சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.     6

1483     சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே.     7

1484     சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப்
பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே.     8

1485     அன்னிய பாசமும் ஆகுங் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.     9

1486     பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே.     10

1487     மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர்
மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே.     11


10. சகமார்க்கம்

1488     சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்க ஞானத் துறதியு மாமே.     1

1489     மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடாம்
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே.     2

1490     யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.     3

1491     யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.     4

1492     ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மேதாதி யீரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாஞ்ச மார்க்கமே.     5

1493     பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி யெறிவ னயிர்மன வாளாற்
கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன்
வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே.     6

1494     வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.     7


11. சற்புத்திர மார்க்கம்

1495     மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.     1

1496     பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மர்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.     2

1497     அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரையன்னந் தாமரை நீலங்
குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகால் அறநெறி சேர்கி லாரே.     3

1498     அருங்கரை யாவது அவ்வடி நீழற்
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாயுல கேழினொத் தானே.     4

1499     உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கிலப் பான்மையு னாமே.     5

1500     நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.     6

1501     திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே.     7


12. தாச மார்க்கம்

1502     எளியனல் தீப மீடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே.     1

1503     அதுவிது வாதிப் பரமென் றகல்வர்
இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடு
மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.     2

1504     அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்ப வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.     3

1505     அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக்
கண்ணவ னென்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.     4

1506     வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றாண்ணலை
நேசத் திருந்த நினைவறி யாரே.     5


13. சாலோகம்

1507     சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ்
சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால்
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோகம் இல்லாப் பரனுரு வாமே.     1

1508     சமயங் கிரியையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.     2


14. சாமீபம்

1509     பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாச மருளான தாகும்இச் சாமீபம்
பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே.     1


15. சாரூபம்

1510     தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே.     1

1511     சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகுஞ் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவன் கதிர்வடி வாமே.     2


16. சாயுச்சியம்

1512     சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது
சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்
சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல்
சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.     1

1513     சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத் தானந்த சத்தியே.     2


17. சத்திநிபாதம்

மந்தம்

1514     இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே.     1

1515     தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய கொல்லையு மாமே.     2

1516     இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே யாதியருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயல் தானே.     3

1517     இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.     4

மந்ததரம்

1518     மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே.     5

1519     கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.     6

1520     செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.     7

1521     எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்
தையலுந் தானுந் தனிநா யகமென்பர்
வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.     8

1522     கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.     9

தீவிரம்

1523     அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்
உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.     10

1524     பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.     11

1525     தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.     12

1526     நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத வொருவன்
அணுகும் உலகெங்கு மாவியு மாமே.     13

தீவிரதரம்

1527     இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.     14

1528     இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ் செய்கின்ற குழலியை உன்னி
அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.     15

1529     மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ்
சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து)
ஊனை விளக்கி யுடனிருந் தானே.     16


18. அருசமயப் பிணக்கம்

1530     ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.     1

1531     உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.     2

1532     உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.     3

1533     ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.     4

1534     சிவமல்ல தில்லை யறையே சிவமாந்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு)
அவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே.     5

1535     அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியு முயன்றில ராதலான்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே.     6

1536     சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே.     7

1537     நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயமவ் ஆறுட் படுவன
கூறு சமயங்கன் கொண்டநெறிநில்லா
ஈறு பரநெறி யில்லா நெறியன்றே.     8

1538     கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவமெங்குந் தோய்வற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.     9

1539     மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்
முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி
இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.     10

1540     சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராமவர்
காயம் விளைக்குங் கருத்தறி யார்களே.     11

1541     வழியரண் டுக்குமோர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவழி வார்நெறி நாடநில் லாரே.     12

1542     மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப்படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.     13

1543     அரநெறி யப்பனை யாதிப் பிரானை
உரநெறி யாகி யுளம்புகுந் தானைப்
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனெறி யாவிடிற் பல்வகைத் தூரமே.     14

1544     பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.     15

1545     ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த வுருவது வாமே.     16

1546     அந்நெறி நாடி அமரரு முனிவருஞ்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.     17

1547     உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான வங்கியு ளாங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.     18

1548     வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.     19

1549     வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யாம்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே.     20


19. நிராசாரம்

1550     இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.     1

1551     பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.     2

1552     இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்
அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.     3

1553     தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே.     4

1554     அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.     5

1555     மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.     6

1556     ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.     7


20. உட்சமயம்

1557     இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமயங்க ளாறும்தன் றாளிணை நாட
அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே.     1

1558     ஒன்றது பேரூர் வழியா றதற்கு
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே.     2

1559     சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை
உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துயமினே.     2

1560     சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.     3

1561     ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதங்
காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே.     4

1562     அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ்
சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.     5

1563     தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே.     6

1564     ஈரு மனத்தை யிரண்டற வீசுமின்
ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே
வாரு மரநெறி மன்னியே முன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே 7

1565     மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி
னயக்குறி காணில் அரநெறி யாமே.     8

1566     ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.     9

1567     சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத் துளார்க்குவகுத்துவைத் தானே.     10

1568     இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே.     11

1569     ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.     12

1570     ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே.     13

1571     ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே.     14

1572     அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை
அறியவொண் ணாத அறுவகை யாக்கி
அறியவொண் ணாத அறுவகைக் கோசத்
தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே.     15


ஐந்தாம் தந்திரம் முற்றிற்று.

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.