|
|||||
கஜா புயல் தாக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்! |
|||||
கஜா புயல் தாக்கிய பகுதிகளில் ஒத்திவைக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் துவங்கிய போது, மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் நவம்பர் 2ல் துவங்கி டிசம்பர் 15ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 16ம் தேதி கஜா புயலின் தாக்குதலால், 8 பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பேரிடர் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ள பகுதிகளை தவிர அனைத்து பகுதி கல்லூரிகளிலும் ஏற்கனவே அறிவித்த பட்டியலில் உள்ள பாட வரிசைப்படி 27 ம் தேதி பருவ தேர்வு நடைபெறும், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. ஆனால் நாகை, திருத்துறைப்பூண்டி உள்பட 5 கல்லூரிகள் மட்டும் தேர்வு நடத்த முடியாது என தெரிவித்து விட்டன. அதன்படி திருத்துறைப்பூண்டி, வேதாரண்யத்தில் தேர்வுகள் நடக்கவில்லை. மற்ற அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நடந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரியில் தேர்வு நடந்தது. கல்லூரியில் 3,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 90 சதவீதம் பேர் கிராம பகுதிகளில் இருந்து வருகின்றனர். கிராமங்களில் மின்சாரம், குடிநீர் இல்லை. பஸ் வசதி இல்லை. வீடு இடிந்து உள்ளதால் மாணவர்கள் படிக்க முடியவில்லை. இதனால் பருவ தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்து இருந்தனர்.இந்நிலையில் தேர்வு நடந்ததால் ஆத்திரமடைந்த கிராமப்புற மாணவ, மாணவிகள் தேர்வை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி முதல்வர் பணிக்கு வராததால் மன்னார்குடி போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் தேர்வை புறக்கணித்து வீடுகளுக்கு சென்றனர். நகர்ப் புறத்தில் இருந்து வந்த மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதினர். |
|||||
by Mani Bharathi on 29 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|