LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[126-150]

பாடல் 126 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் தனனத் தனனத்
          தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்
     ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்
          கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் ...... பவனூணாக் 
கருதிச் சருவிக் கயலைக் கயமுட்
     படுவித் துழையைக் கவனத் தடைசிக்
          கணையைக் கடைவித் துவடுத் தனையுப் ...... பினின்மேவி 
அடலைச் செயல்சத் தியையக் கினியிற்
     புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்
          தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் ...... தசகோரம் 
அலறப் பணிரத் நமணிக் குழையைச்
     சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்
          டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் ...... படுவேனோ 
சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்
     தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்
          தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் ...... பரிவாலே 
சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
     குமரர்க் குமநுக் க்ரகமெய்ப் பலகைச்
          சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் ...... தியில்ஞான 
படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
     த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
          பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் ...... குருநாதா 
பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்
     றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்
          பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் ...... பெருமாளே.
சமுத்திரத்தை ஒரு எல்லையைத் தாண்டாதபடி சிறையில் வைத்து, மலர்ச் சோலையில உள்ள வண்டை உடலில் வரி ரேகைகளை அமைத்து ஒடுக்கி, மடுவில் உள்ள தாமரை மலரை வாடச் செய்து, ஆலகால விஷத்தை பலி ஏந்தி இரப்பவனாகிய சிவ பெருமானுக்கு உணவாகக் கருதிவைத்து, போராடும் கயல் மீனை குளத்தில் புக வைத்து, மானை காட்டில் அடையச் செய்து, பாணத்தை உலையில் கடைய வைத்து, மாவடுவை உப்பினில் ஊறவைத்து, வெற்றிச் செயல் கொண்ட வேற்படையை தீயினில் புக வைத்து, யமனை உதைத்திட்டு, ஒளி பொருந்திய வாளை ஆட்டமுற்று முறிய வைத்து, மதிக்கப்படும் சகோரப் பட்சியை (வெட்கத்தால்) அலறும்படிச் செய்து, ரத்தினத்தால் செய்யப்பட்ட மணிக்குழையோடு போராடுவதும், மயக்கும் மை அணிந்ததும், ஒளி வீசுவதும், மருட்டுதல் செய்யும் மனத்தை உடைய விலைமாதர்களின் கடைக்கண்களில் அகப்படுவேனோ? சடை மகுடத்தவனாகிய சிவபெருமானின் ஆணையின்படி மேன்மையான குலத்தில் ஒரு செட்டி இடத்தே தோன்றி, அருளும் ஞானமும் கொண்ட ருத்ர ஜன்மன்* என்னும் பெயருடன் திகழ்ந்து, அன்புடனே சநகர், அகஸ்தியர், புலஸ்தியர், சநற்குமரர் ஆகியோர்களுக்கு அருள் பாலித்தவனே, சங்கப்பலகையில் வீற்றிருந்த நாற்பத்தொன்பது புலவர்களுக்கும் வேறுபாடு இல்லாத முறையில் ஞானப் பகுதியில் உள்ள இலக்கண இலக்கிய முத்தமிழில் (சிவபெருமான் இயற்றிய) அகப்பொருள் விளக்கத்தை குற்றமின்றி உணர்வித்து அருளிய வித்தகனே, சற்குரு நாதனே, பவளக் கொடி சுற்றிய அழகிய கமுகு மரத்தின் உச்சிக் குலையினின்றும் பல முத்துக்கள் உதிர்கின்ற பழநிப் பதி மலையில் நின்றருளும் பெருமாளே. 
முதல் 12 வரிகளில் கண்ணுக்கு உவமையாகக் கருதப்படும் கடல், வண்டு, தாமரை, விஷம், கயல் மீன், மாவடு, வேல், மான், யமன், வாள், சகோரப் பட்சி ஆகியவை எங்ஙனம் கண்ணுக்கு உவமை ஆகா என்பதை ஒவ்வோர் உவமைக்கும் ஒரு குறை உள்ளது என்று கூறப்படும் முறை தனிச் சிறப்பு வாய்ந்தது.
* மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர். - திருவிளையாடல் புராணம்.
பாடல் 127 - பழநி
ராகம் - தந்யாஸி ; தாளம் - ஆதி
தனன தனதனன தனன தனதனன
     தனன தனதனன ...... தனதான
கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
     கடின குடவுதர ...... விபா£த 
கரட தடமுமத நளின சிறுநயன
     கரிணி முகவரது ...... துணைவோனே 
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
     வலம்வ ருமரகத ...... மயில்வீரா 
மகப திதருசுதை குறமி னொடிருவரு
     மருவு சரசவித ...... மணவாளா 
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
     ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும் 
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
     மரக ரசரவண ...... பவலோலா 
படல வுடுபதியை யிதழி யணிசடில
     பசுப திவரநதி ...... அழகான 
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
     பழநி மலையில்வரு ...... பெருமாளே.
கடலை, பொரி, அவரை, பலவிதமான பழங்கள், கரும்பு இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம் போன்ற வயிற்றையும், அதிசயமான மதம் பாய்ந்த அடையாளத்தையும், மும்மதத்தையும்* தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும் கொண்ட யானைமுகத்தோருக்கு இளையவனே, வடமலையாகிய மகாமேருவின் சிகரங்களும் அதிரும்படி, ஒரே நொடியில் உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே, தேவேந்திரனின் திருமகள் தேவயானையுடனும், குறமகள் வள்ளியுடனும், இருவரையும் ஒருங்கே தழுவி இன்ப ஆடல் புரியும் கணவனே, வலிமை பொருந்திய அசுரர்களின் குலம் முழுவதும் அழியுமாறும், உயர்ந்த தேவர்களின் சிறை நீங்கவும், அழகு மிகுந்த சிவந்த கதிரொளியை வீசும் வேலை செலுத்திய ஹரஹர சரவணபவனே, திருவிளையாடல் புரிபவனே, கூட்டமாக உள்ள நக்ஷத்திரங்களின் தலைவனாம் சந்திரனையும் கொன்றைமலரையும் தரித்திருக்கின்ற ஜடாமுடியுடைய பசுபதியாகிய சிவபெருமானும், ஜீவநதியாகிய கங்காதேவியும், அழகிய பழமையான நிர்மலையாகிய உமாதேவியும் பெற்றருளிய மழலைச் சொல் பேசும் குழந்தையே, பழநி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 
* மும்மதங்கள்: இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று சக்திகளையும் மும்மதங்களாகக் கொண்டவர்.
பாடல் 128 - பழநி
ராகம் - தேஷ்; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனன தனத்த தாதத தனன தனத்த தானன
     தனன தனத்த தானன ...... தனதான
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
     கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான 
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
     கனதன மொத்த மேனியு ...... முகமாறும் 
அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்
     அரவு பிடித்த தோகையு ...... முலகேழும் 
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
     அபிந வபத்ம பாதமு ...... மறவேனே 
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
     ரணமு கசுத்த வீரிய ...... குணமான 
இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
     இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே 
பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
     பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக 
பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்
     பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.
நற்கதியை அடையமுடியாதபடி தடுக்கின்ற பொதுமகளிரின் புதிய ரத்னாபரணங்களை அனிந்துள்ள பெருமார்பாகிய மலைமேல் மோகம் மிக்க கொண்டதனால் கவலை கொண்ட மனத்தினனாக நான் இருந்த போதிலும், உனது சிறப்பான புகழ்பெற்ற தங்கநிதி போன்ற திருமேனியையும் (1), ஆறு திருமுகங்களையும் (2) மிகுந்த வலிமை பொருந்திய தோள்களையும் (3) கூரிய நுனியை உடைய வெற்றி வேலினையும் (4) பாம்பினைக் கால்களில் பிடித்துள்ள கலாப மயிலையும் (5) ஏழுலகங்களும் அதிரும்படியாக கொக்கரிக்கும் கோழியையும் (6) உன்னடியார்கள் வாழ்த்தி வணங்கி வாழ்வு பெறும் புதிய தாமரை மலர் போன்ற திருவடிகளையும் (7) ஒருபோதும் மறக்கமாட்டேன். சூரிய அம்சமாக வந்த சுக்¡£வன் ரஜோகுணத்தை மேற்கொண்டு (வாலியை) எதிர்த்து, தோற்று நின்ற கொடிய போர்க்களத்தில், சுத்த வீரியம் வாய்ந்த குணத்தினனாகிய தம்பி சுக்¡£வனுக்கு உதவி, அவன்பெரிய அரசாட்சியைப் பெற்று வாழுமாறு அன்புடன் அருளிய ராகவனின் மருமகனே, பதினோரு ருத்திரர்களின்* பிரகாசம் விளங்கும் கோவிலில் அன்போடு எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரனே, தேவலோகத்தில் உள்ள வாசம் மிகு கற்பக விருட்சங்கள் இருக்கும் காட்டில் வரிகளை உடைய வண்டுகள் மொய்ப்பதால் கற்பக மலர்கள் உதிர்கின்ற பழநி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் மிக அருமையானது. முருகனது அத்தனை உறுப்புக்களையும் தொகுத்து அளிக்கும் பாட்டு.(1) திருமேனி, (2) ஆறு முகங்கள், (3) தோள்கள், (4) வேல், (5) மயில், (6) கோழி, (7) திருவடிகள்.
* 11 ருத்திரர்கள் பின்வருமாறு: மஹாதேவன், ஹரன், ருத்திரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசான்யன், விஜயன், வீமதேவன், பவோத்பவன், கபாலி, ஸெளம்யன்.
பாடல் 129 - பழநி
ராகம் - மோஹனம்; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான
கரிய பெரிய எருமை கடவு
     கடிய கொடிய ...... திரிசூலன் 
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
     கழிய முடுகி ...... யெழுகாலந் 
திரியு நரியு மெரியு முரிமை
     தெரிய விரவி ...... யணுகாதே 
செறிவு மறிவு முறவு மனைய
     திகழு மடிகள் ...... தரவேணும் 
பரிய வரையி னரிவை மருவு
     பரம ரருளு ...... முருகோனே 
பழன முழவர் கொழுவி லெழுது
     பழைய பழநி ...... யமர்வோனே 
அரியு மயனும் வெருவ வுருவ
     அரிய கிரியை ...... யெறிவோனே 
அயிலு மயிலு மறமு நிறமும்
     அழகு முடைய ...... பெருமாளே.
கறுத்த பெரிய எருமையைச் செலுத்தும் கடுமையும் கொடுமையும் கொண்ட முச்சூலம் ஏந்திய யமன் கோபித்து, நெருக்கி அழுத்தும் பாசக்கயிறோடு உயிர் நீங்கும்படியாக வேகமாய் எழுந்து வரும்பொழுது, திரிகின்ற நரியும், நெருப்பும் உரிமை கோரி நெருங்கி அணுகாமல் என் நிறைவும், அறிவும், உறவும் போன்று விளங்கும் உன் திருவடிகளைத் தந்தருள வேண்டும். பெருமலையாம் இமகிரியின் மகளாம் பார்வதியை மணந்த பரமசிவன் அருளிய முருகோனே, வயல்களில் உழவர்கள் ஏர்க்காலால் உழுகின்ற பழம்பெரும் பழநியில் வீற்றிருப்பவனே, திருமாலும் பிரமனும் அஞ்சி நிற்க, உருவிச் செல்லும்படி அரிதான கிரெளஞ்ச மலைமீது வேலாயுதத்தைச் செலுத்தியவனே, வேலும், மயிலும், வீரமும், ஒளியும், அழகும் கொண்ட பெருமாளே. 
பாடல் 130 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான
கரிய மேகம தோஇரு ளோகுழல்
     அரிய பூரண மாமதி யோமுகம்
          கணைகொ லோஅயில் வேலது வோவிழி ...... யிதழ்பாகோ 
கமுகு தானிக ரோவளை யோகளம்
     அரிய மாமல ரோதுளி ரோகரம்
          கனக மேரது வோகுட மோமுலை ...... மொழிதேனோ 
கருணை மால்துயி லாலிலை யோவயி
     றிடைய தீரொரு நூலது வோவென
          கனக மாமயில் போல்மட வாருடன் ...... மிகநாடி 
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
     வதனின் மேலென தாவியை நீயிரு
          கமல மீதினி லேவர வேயருள் ...... புரிவாயே 
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
     மதனை யேவிழி யால்விழ வேசெயும்
          சிவசொ ரூபம கேசுர னீடிய ...... தனயோனே 
சினம தாய்வரு சூரர்கள் வேரற
     அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
          சிறைகள் மீளவு மேவடி வேல்விடு ...... முருகோனே 
பரிவு சேர்கம லாலய சீதன
     மருவு வார்திரு மாலரி நாரணர்
          பழைய மாயவர் மாதவ னார்திரு ...... மருகோனே 
பனக மாமணி தேவிக்ரு பாகரி
     குமர னேபதி னாலுல கோர்புகழ்
          பழநி மாமலை மீதினி லேயுறை ...... பெருமாளே.
கூந்தல் கரு நிறமான மேகமோ, இருள் படலமோ? முகம் அருமையான சிறந்த முழு நிலவோ? கண்கள் அம்போ, கூர்மையான வேல்தானோ? உதடுகள் சர்க்கரைப் பாகோ? கழுத்து பாக்கு மரத்தை நிகரானதோ, சங்கோ? கை அருமையான சிறந்த தாமரை மலரோ, இளந்தளிரோ? மார்பகம் பொன் நிறமான மேரு மலையோ, பொற் குடமோ? பேச்சு தேனோ? வயிறு, கருணாமூர்த்தி திருமால் துயில் கொள்ளும் ஆலிலையோ? இடுப்பு ஆனது ஈர்க்குச்சியோ, ஒரு நூலோ? என்று சொல்லுமாறு உள்ள பொன் நிறத்து அழகிய மயில் போன்ற விலைமாதர்களை மிகவும் விரும்பி, குற்றமுள்ளவனாய் வயது ஏறி ஒரு நூறு வருடத்துக்கு மேல் வாழ்வதைக் காட்டிலும் மேலானது (என்னவென்றால்) எனது உயிரை நீ இப்போது உன்னுடைய இரண்டு தாமரை போன்ற திருவடிகளில் சேரும்படி அருள் புரிவதுதான். திரிபுரத்தில் உள்ளவர்கள் வெந்து சாம்பராகுமாறும், மிக்கு வந்த மன்மதனை நெற்றிக் கண்ணால் (எரித்து) மாண்டு வீழுமாறும் செய்த சிவ சொரூபனான மகேஸ்வரனின் பெருமை மிக்க மகனே, கோபத்துடன் வந்த அசுரர்கள் வேர் அறும்படியும், அமரரும், விண்ணோர்களும், வாட்டம் உற்று இருந்த தேவர்களும்* சிறையினின்று மீளும்படியும் கூரிய வேலைச் செலுத்திய முருகோனே, அன்பு கொண்டு தாமரைக் கோயிலில் வாழ்கின்ற லக்ஷ்மியின் மார்பைத் தழுவுகின்றவராகிய திருமால், பாவங்களைப் போக்கும் நாராயணர், பழமை வாய்ந்த, மாயையில் வல்லவரும், பெரிய தவத்துக்கு உரியவரும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே. பாம்பாகிய அணிகலத்தை உடைய தேவியும், கருணைக்கு உறைவிடம் ஆனவளும் ஆகிய பார்வதி அம்மையின் குமாரனே, பதினான்கு உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் போற்றும் பழனி மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அமரர் = அமுதம் உண்டு சாவா நிலை பெற்றவர். வானவர் = புண்ணிய மிகுதியால் வான் உலகில் வாழ்பவர். தேவர் = எட்டு வசுக்கள், பன்னிரு ஆதித்தர்கள், பதினொரு ருத்திரர்கள், இரு அச்வனிகள் என்ற முப்பத்தி முத்தேவர்.
பாடல் 131 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான
கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற்
     கயல்விழிப் பார்வையிற் ...... பொருள்பேசிக் 
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
     கலதியிட் டேயழைத் ...... தணையூடே 
செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
     றிறமளித் தேபொருட் ...... பறிமாதர் 
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
     சிவபதத் தேபதித் ...... தருள்வாயே 
திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்
     சிறிதருட் டேவருட் ...... புதல்வோனே 
திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்
     திருடர்கெட் டோடவிட் ...... டிடும்வேலா 
பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
     படியினிட் டேகுரக் ...... கினமாடும் 
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
     பரிவுறச் சேர்மணப் ...... பெருமாளே.
யானைகளின் இரு கொம்புகள் என்னும்படி உள்ள மார்பகங்களை அசைத்து ஆடி, நல்ல கயல் மீன் போன்ற கண்களின் பார்வை கொண்டே (தமக்குக் கொடுக்க வேண்டிய) பொருள் அளவைப் பேசி, ஆடையை இழுத்துவிட்டும், குலுக் என்ற ஒலியுடன் சிரித்து மயக்கமாகிய குழப்பத்தினைத் தந்தும், (வந்தவரை) அழைத்துப் படுக்கையில் நெருங்கியும், அலங்கரித்த சிற்றிடை துடித்து அசைய, நிரம்பத் தங்கள் திறமைகளைக் காட்டி, பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் சூழ்ச்சிகள் என்னைக் கவராத வண்ணம், இந்தக் கலி யுகத்தில் புகழப்படுகின்ற சிவ பதவியில் என்னைப் பொருந்த வைத்து அருள்வாயாக. திரிபுரம் எனப்படும் அழகிய மலை போன்ற நகரங்கள் எரியும்படி, அருமையான புன்னகையைச் சிறிது அருளிய தேவராகிய சிவபெருமான் பெற்ற மகனே, அலைகடல் கோவென்று கதற, கிரவுஞ்ச மலையும் குலமலைகள் ஏழும் தூளாகும்படியும், கள்வர்களாகிய அசுரர்கள் அழிந்து எங்கெங்கும் ஓடும்படியும் வேலை விட்டு எய்த வேலனே, வாசனை வீசும் பலாப் பழங்களைக் கீறி, நல்ல (மலைப்) படிகளில் போட்டு குரங்கின் கூட்டங்கள் விளையாடும் பழனியில் சிறப்பாக விளங்கி, புகழப்படும் குறப் பெண்ணாகிய வள்ளியை அன்புடன் தழுவிய மணவாளப் பெருமாளே. 
பாடல் 132 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான
கருகிய கன்று வரிசெறி கண்கள்
     கயல்நிக ரென்று ...... துதிபேசிக் 
கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
     கடிவிட முண்டு ...... பலநாளும் 
விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
     விதிவழி நின்று ...... தளராதே 
விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
     விதபத மென்று ...... பெறுவேனோ 
முருகக டம்ப குறமகள் பங்க
     முறையென அண்டர் ...... முறைபேச 
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
     முரணசுர் வென்ற ...... வடிவேலா 
பரிமள இன்ப மரகத துங்க
     பகடித வென்றி ...... மயில்வீரா 
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
     பழநிய மர்ந்த ...... பெருமாளே.
கருமை நிறம் படைத்து அகன்று, ரேகைகள் நிறைந்த கண்கள் கயல் மீன்களுக்கு ஒப்பானது என்று புகழ்ச்சிப் பேச்சுக்களைப் பேசி, (விலைமாதரின்) புடவையின் சுருளின் இடையில் அகப்பட்டு, கொடுமையான வாயூறல் என்னும் விஷத்தை உண்டு அனுபவித்து, பல நாட்கள் வஞ்சனையைச் செய்யும் கொடிய வினையாலாகிய உடம்பைச் சுமந்து, விதி போகின்ற வழியே நின்று நான் தளர்ந்து விடாமல், வாசனை வீசுகின்ற மாலைகள் பொருந்திய பரிசுத்தமான, நன்மை செய்யும் திருவடியை என்று பெறுவேனோ? முருகனே, கடம்பனே, குற மகள் வள்ளியின் பங்கனே என்று ஓலம் செய்து தேவர்கள் முறையிட, பழைய கடல் போல பரந்து வருகின்ற, வலிமையும் வஞ்சகமும் கொண்ட பகைவர்களாகிய அசுரர்களை வெற்றி கொண்ட வடிவேலனே, நறுமணம் போல் இன்பத்தைத் தருவதும், பச்சை நிறமானதும், பரிசுத்தமானதும், வலிமையும் நன்மையும் உடையதும் ஆகிய, வெற்றி கொண்ட மயில் மீது அமர்ந்த வீரனே, தலை மயிரைப் பறிக்கின்ற இழிந்தோராகிய சமணர்களை (திருஞானசம்பந்தராக வந்து) கழு ஏறச் செய்து, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 133 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
     தனத்ததன தனத்ததன
          தனத்தனா தனதன ...... தனதான
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
     கடைக்கணொடு சிரித்தணுகு
          கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர் 
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
     கனத்தவிரு தனத்தின்மிசை
          கலக்குமோ கனமதில் ...... மருளாமே 
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
     யுனைப்புகழு மெனைப்புவியில்
          ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே 
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி
     யுரைக்கமறை யடுத்துபொருள்
          உணர்த்துநா ளடிமையு ...... முடையேனோ 
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
     படிக்கடலு மலைக்கவல
          பருத்ததோ கையில்வரு ...... முருகோனே 
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
     பணிப்பனிரு புயச்சயில
          பரக்கவே இயல்தெரி ...... வயலூரா 
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
     செயித்தருளு மிசைப்பிரிய
          திருத்தமா தவர்புகழ் ...... குருநாதா 
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
     திருப்பழநி மலைக்குளுறை
          திருக்கைவே லழகிய ...... பெருமாளே.
கரும்பு வில்லில் வாசனை உடைய மலர்க் கணைகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தியது போல் கடைக் கண் நோக்குடன் சிரித்து நெருங்கி, எண்ணத்தினால் தந்திரச் செயல்கள் புரிகின்ற இளம் மாதர்களின், கோபமுள்ள யானையும் திடுக்கிடும்படி செழிப்புற்று மிகவும் எதிர்த்து, மலை போல் பருத்துள்ள இரண்டு மார்பகங்களின் மேல் கலந்து கொள்ளும் மோக வெறியில் மயங்காமல், மனம் ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும் எண்ணம் என் மனதில் உண்டாகும்படி உனது திரு உள்ளத்தில் நினைத்து அருள் செய்து, உன்னைப் புகழ்ந்து பாடும் என்னை நிகரில்லாத புலவனாகும் வகையை உன்னுடைய திருவருளால், ருத்திர மூர்த்தியும் விளக்கம் பெற வேண்டி, எனக்கு உபதேசித்து அருளுக என்று உன்னை அணுகிக் கேட்க, நீ அவருக்கு உபதேசித்த அந்த ரகசியப் பிரணவப் பொருளை அடியேனுக்கும் உணர்த்தும்படியான நாள் ஒன்றை அடியேனும் பெறுவேனோ? (கிரெளஞ்ச) மலையையும், பெரிய உருவம் உள்ள அரக்கர்களையும், ஒலித்து எழுகின்ற, பூமியிலுள்ள ஏழு கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருமையான மயிலில் மீது வரும் முருகனே, பதிக்கப்பட்ட மரகதத்துடன் ரத்தின மணிகள் வரிசையில் அமைக்கப்பட்ட பலவகையான அணிகலன்களை அணிந்துள்ள, மலை போன்ற பன்னிரண்டு புயங்களை உடையவனே, விரிவாகவே இலக்கியத் தமிழைத் தெரிந்த வயலூர் முருகனே, திருப்புகழை உரைப்பவர்களுடையவும் படிப்பவர்களுடையவும் வறுமையும் பகைமையும் தொலைந்து வெற்றி தந்தருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய சிறந்த தவத்தினர் புகழ்கின்ற குருநாதனே, வில் ஏந்திய குறவர்களுடைய ஓலைக் குடிசையிலும், புகை போன்ற கருமையுடைய மேகங்கள் அருகில் தவழ்ந்து செல்லுகின்ற அழகிய பழனி மலையிலும் வீற்றிருக்கும், திருக்கையில் வேல் ஏந்தும் அழகிய பெருமாளே. 
மடமாதர் கலக்குமோ கனமதில் மருளாதே ஒருத்தனாம் வகைதிரு வருளாலே உணர்த்துநா ளடிமையு முடையேனோ பருத்ததோ கையில்வரு முருகோனே பரக்கவே யியல்தெரி வயலூரா திருத்தமா தவர்புகழ் குருநாதா திருக்கைவே லழகிய பெருமாளே.
பாடல் 134 - பழநி
ராகம் - விஜயநாகரி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
- எடுப்பு - 1/2 தள்ளி
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
     கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே 
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
     கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி 
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
     அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் 
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
     அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ 
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
     உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே 
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
     உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே 
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா 
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
     பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
கருவிலே ஓர் ஊருவாகி வந்து பிறந்து, வயதுக்கு ஒத்தபடி வளர்ந்து, பல கலைகள் கற்றறிந்து, மன்மதனுடைய சேட்டையினால், கருங் கூந்தலையுடைய பெண்களின் பாதச்சுவடு என் மார்பில் புதையும்படி அழுந்தி, கவலைகள் பெரிதாகி மனம் நொந்து, மிகவும் வாட்டம் அடைந்து, ஹர ஹர சிவாய என்று நாள்தோறும் நினையாது நின்று, (செளரம், காணாபத்யம், கெளமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று) ஆறு சமயங்களின் உண்மை ஒன்றுகூட அறியாதவனாய், உணவு தருவோர்கள் தம்முடைய வீடுகளின் முன் வாசலில் நின்று, தினந்தோறும் வெட்கத்தை விட்டு அழிந்து போவேனோ? பாம்பின் படத்தின்மேல் கண்வளர்ந்த (ஆதிசேஷன் மீது துயின்ற) பெருமை மிக்க பெருமாள், ஸ்ரீரங்கத்தில் உள்ளவர், உலகை அளந்த திருமால் மகிழ்ச்சி கொள்ளும் மருமகனே (தாய், தந்தை என்ற) இரண்டு வம்சாவளியிலும் பிரகாசமாகவும் பரிசுத்தமாகவும் விளங்குபவனே வெற்றிக் கவிராஜ சிங்கமாக (சம்பந்த மூர்த்தியாக) சொந்த ஊரான புகலியூர் (சீகாழி) பதியில் அன்று வந்து தோன்றியவனே பரவை நாச்சியார் வீட்டுக்கு (சுந்தரருக்காக) அன்று ஒரு காலத்தில் தூது நடந்த பரம சிவனுடைய அருளால் வளர்ந்த குமரேசப் பெருமானே பகையாய் நின்ற அசுரர் சேனைகளை மடிவித்து, தேவர்களை சிறையினின்றும் மீளும்படி வென்று, பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. 
பாடல் 135 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனன தானன தானா தானா
     தனன தானன தானா தானா
          தனன தானன தானா தானா ...... தனதான
கலக வாள்விழி வேலோ சேலோ
     மதுர வாய்மொழி தேனோ பாலோ
          கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய் 
களமு நீள்கமு கோதோள் வேயோ
     உதர மானது மாலேர் பாயோ
          களப வார்முலை மேரோ கோடோ ...... இடைதானும் 
இழைய தோமலர் வேதா வானோ
     னெழுதி னானிலை யோவாய் பேசீ
          ரிதென மோனமி னாரே பா¡£ ...... ரெனமாதர் 
இருகண் மாயையி லேமூழ் காதே
     யுனது காவிய நூலா ராய்வே
          னிடர்ப டாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும் 
அலைவி லாதுயர் வானோ ரானோர்
     நிலைமை யேகுறி வேலா சீலா
          அடியர் பாலரு ளீவாய் நீபார் ...... மணிமார்பா 
அழகு லாவுவி சாகா வாகா
     ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா
          ரயலு லாவிய சீலா கோலா ...... கலவீரா 
வலபை கேள்வர்பி னானாய் கானார்
     குறவர் மாதும ணாளா நாளார்
          வனச மேல்வரு தேவா மூவா ...... மயில்வாழ்வே 
மதுர ஞானவி நோதா நாதா
     பழநி மேவுகு மாரா தீரா
          மயுர வாகன தேவா வானோர் ...... பெருமாளே.
கலகத்தை விளைவிக்கின்ற ஒளி பெற்ற கண்கள் வேலாயுதமோ, சேல் மீனோ? இனிய வாய்ச் சொல் தேனோ, பாலோ? கரு நிறமான நீண்ட கூந்தல் மேகமோ, காடோ? வாய் பவளமோ? கழுத்து நீண்ட பாக்கு மரமோ? தோள் மூங்கிலோ? வயிறானது திருமால் பள்ளி கொண்ட அழகிய ஆல் இலையோ? சந்தனக் கலவை பூசிய கச்சணிந்த மார்பகம் மேரு மலையோ, யானைத் தந்தமோ? இடைதான் நூலோ, தாமரை மேல் வீற்றிருக்கும் பிரம தேவன் இடையை எழுதவில்லையோ? வாய் திறந்து பேசுங்கள். இது என்ன மெளனம் சாதிக்கின்றீர்கள், மின் போன்ற பெண்மணிகளே பாருங்கள், என்று பேசி விலைமாதர்களுடைய இரண்டு கண்கள் என்னும் மாயைக் கடலில் முழுகாமல், உன்னுடைய பிரபந்த நூல்களை ஆராய்வேன். இடர்கள் எவையும் என்னைப் பீடிக்காத வகையில் உனது திருவருள் நிறைந்த வாழ்வைத் தந்தருள வேண்டும். அலைச்சல் இல்லாத வண்ணம், உயர்வு பெற்ற தேவர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலனே, ஒழுக்கம் நிறைந்தவனே, அடியார்களுக்குத் திருவருள் பாலிப்பவனே, கடப்ப மாலை அணிந்த அழகிய மார்பனே, அழகு பொலியும் முருகக் கடவுளே, கம்பீரம் நிறைந்த (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னலை ஒத்த தேவயானை மகிழ்கின்ற கணவனே, உன்னைப் பணிந்து தாழ்பவர்களுடைய அருகிலே உலாவும் சீலனே, ஆடம்பர வீரனே, வல்லபையின் கணவராகிய விநாயகருடைய தம்பியே, காட்டில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, புதிய தாமரை மீது எழுந்தருளி உள்ள தேவனே*, முதுமை இல்லாத மயிலின் செல்வமே, இனிய ஞான வழிகளில் பொழுது போக்கும் நாதனே, பழனி மலையில் வீற்றிருக்கும் குமாரனே, தீரனே, மயில் வாகன தேவனே, தேவர்களின் பெருமாளே. 
* முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் அழகிய தாமரை மலர் மீது அழகே ஒரு வடிவாய் குழந்தை உருவாகத் தோன்றி அருளினார் என்பதைக் குறிக்கும்.
பாடல் 136 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனனத் தனதன தானன தானன
     தனனத் தனதன தானன தானன
          தனனத் தனதன தானன தானன ...... தனதான
கலகக் கயல்விழி போர்செய வேள்படை
     நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்
          கனியக் கனியவு மேமொழி பேசிய ...... விலைமாதர் 
கலவித் தொழினல மேயினி தாமென
     மனமிப் படிதின மேயுழ லாவகை
          கருணைப் படியெனை யாளவு மேயருள் ...... தரவேணும் 
இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி
     குழையத் தழுவிய மேன்மையி னாலுயர்
          இசைபெற் றருளிய காமுக னாகிய ...... வடிவோனே 
இதமிக் கருமறை வேதிய ரானவர்
     புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
          இசையத் தருமநு கூலவ சீகர ...... முதல்வோனே 
நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்
     செவியிற் பிரணவ மோதிய தேசிக
          நிருதர்க் கொருபகை யாளியு மாகிய ...... சுடர்வேலா 
நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
     அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
          நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு ...... முரியோனே 
பலவிற் கனிபணை மீறிய மாமர
     முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
          பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய ...... வகையாலே 
பழனத் துழவர்க ளேரிட வேவிளை
     கழனிப் புரவுகள் போதவு மீறிய
          பழநிச் சிவகிரி மீதினி லேவளர் ...... பெருமாளே.
கலகத்தைத் தரும் மீன் போன்ற கண்கள் போர் புரிய, மன்மதனுடைய சேனையாகிய பெண்கள் கூட்டத்தின் நடுவிலும் பக்கங்களிலும் வரும் பாவிகளும், கோபத்தை உடையவர்களும், இனிக்க இனிக்கப் பேச்சுக்களைப் பேசுபவர்களும் ஆகிய வேசியருடன் சேர்ந்திருக்கும் தொழிலே நன்மையானது, இவ்வுலகில் இனிது என்று எனது மனம் இப்படி தினந்தோறும் அலையாதவாறு, உனது கருணை வழியே என்னை ஆண்டு அருள் புரிவாயாக. இலவ மலருக்கு உறவு என்னும்படி சிவந்த அதரத்தை உடைய வள்ளி நாயகி உள்ளம் குழையுமாறு மனம் உருகித் தழுவிய சிறப்பினால், உயர்ந்த புகழைப் பெற்று உயிர்களுக்கு அருள் புரிந்த காதலன் என வேடம் கொண்ட அழகனே, நன்மை மிகுந்த, அரிய வேதங்களைக் கற்ற மறையோர் வேதங்களைச் சொல்ல, அன்புடனே அவர்களுக்கு அருட் செல்வங்களை இசைந்து தருகின்ற அனுகூலனே, மனதைக் கவர்பவனே, முதல்வனே, மதியைச் சடையின் மீது அணிந்துள்ள மூலப் பொருளாகிய சிவபெருமானுடைய காதில் பிரணவப் பொருளை ஓதிய குரு மூர்த்தியே, அசுரர்களுக்கு ஓர் ஒப்பற்ற பகைவனாய் வந்த, ஒளி வீசும் வேலனே, பரிசுத்தமான குரு மூர்த்தியே, பன்னிரு திருக்கண்களும் அருளைப் பொழிய அடியார்களை நாள் தோறும் ஒப்பில்லாதவர் என்னும்படி உள்ளம் மிகவும் மகிழும் உரிமை உடையவனே, பலாப்பழங்கள், கிளைகள் மிகுந்த மாமரங்களின் வாசனையுடன் பழுத்த பழங்களுடன், நீண்ட வாளை மீன்கள் பாய்வதால் தனித் தனியே உதிர்கின்ற சோலைகள் பொருந்தி உள்ள தன்மையாலே, வயலில் உழவர்கள் ஏரிட்டு விளைகின்ற வயல்களின் செழுமைகள் மிகவும் மேம்படுகின்ற பழனிச் சிவகிரியின் மீது வீற்றிருந்து அருளும் பெருமாளே. 
பாடல் 137 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு
     கனதனம் விற்கச் சமைந்த மங்கையர்
          கயல்கள்சி வப்பப் பரிந்து நண்பொடு ...... மின்பமூறிக் 
கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு
     மவசமி குத்துப் பொருந்தி யின்புறு
          கலகம்வி ளைத்துக் கலந்து மண்டணை ...... யங்கமீதே 
குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை
     கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்
          குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி ...... லங்கம்வேறாய்க் 
குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர
     முகதல முத்துப் பொலிந்தி லங்கிட
          கொடியம யற்செய்ப் பெருந்த டந்தனில் ...... மங்கலாமோ 
இலகிய சித்ரப் புனந்த னிந்துறை
     குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி
          னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் ...... கந்தவேளே 
எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி
     யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு
          மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய ...... செங்கைவேலா 
பலவித நற்கற் படர்ந்த சுந்தரி
     பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி
          பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு ...... கின்றபாலைப் 
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
     பகரென இச்சித் துகந்து கொண்டருள்
          பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
கலவி இன்பத்தில் ஆசைப்பட்டு பரிந்து (தங்கள் வீட்டு வாயிலில்) நின்று இரண்டு பருத்த மார்பகங்களை விற்பதற்கு ஒப்புதலாகி நிற்கும் விலை மகளிரின் கயல் மீன் போன்ற கண்கள் சிவக்கும்படி அவர்கள் மீது அன்பு கொண்டு நட்புடன் இன்பத்தில் அழுந்தி, கொவ்வைப் பழம் போன்ற இதழ்களை அடிக்கடி உண்டு, அச்செயல்களால் தன் வசம் இழத்தல் அதிகப்பட்டு காம லீலைகளில் பொருந்தி இன்பம் உறுகின்றபின் மறுபடியும் ஊடல் கொண்டு பின் கலந்தும், நெருங்கிய பஞ்சு அணைகளுடன் கூடிய கட்டிலின் மேல் குலவுகின்ற பலமுள்ள கைகளோடும் அங்கு அணைந்து, கொடி போலும் மெல்லிய இடை மிகவும் துவண்டு, குளிர்ந்த மேகம் போன்ற அளக பாரக் கூந்தல் கட்டு அவிழவும், முன்னிருந்த உடம்பின் பொலிவு வேறுபடவும், அடையாளமாகவும், வட்டமாகவும் நெருக்கமாகவும் உள்ள குங்குமப் பொட்டுள்ள முகத்தில் (முத்துப் போன்ற) வேர்வைத் துளி பொலிந்து விளங்கிடவும், தீய காம மயக்கத்தை உண்டு பண்ணும் பெரிய குளத்தில் விழுந்து மழுங்கிப் போகலாமா? விளங்கும் அழகிய தினைப் புனத்தில் தனித்திருந்த குறமகளாகிய வள்ளி, கச்சு அணிந்த மார்பகங்களை உடைய மின்னொளி போன்ற வள்ளியின் இனிமை உள்ள தாமரை ஒத்த பாதங்களில் பணிந்தருளிய கந்த வேளே, ஏழு கடல்களும் வற்றிப் போகும்படி, பெரிய பொல்லாத கிரெளஞ்ச மலை இடிந்து விழ, மிகுந்த வேகத்தை வெளிப்படுத்திக் கொண்டு வந்த பகைவர் பதைபதைக்க அழிவு செய்து விளக்கமுற்ற வேலினைச் சிவந்த கையில் ஏந்தினவனே, பல விதமான நல்ல கற்புக் குணங்கள் மிக்க அழகியும், நன்கு பயின்ற இமய மலை அரசன் ஈன்ற செழிப்பான கொடி போன்ற உமா தேவியின் திருமுலையில் மிக்கு நிறைந்த குணமுள்ள சிவஞான அமுதத்தை, பல திக்குகளில் உள்ளவர்களும் மெச்சிப் புகழும்படி சிறந்த தமிழ்ப் பாக்களை பாடுக என்று கூறிக் கொடுக்க, (அப்பாலை) விருப்பமுடனும் மகிழ்ச்சியுடனும் உட்கொண்டு (தேவாரத்தை) அருளிய திருஞானசம்பந்தனே, பழனி மலை மீது விளங்கி நின்றருளும் தம்பிரானே. 
பாடல் 138 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தத்த தான தனதனன தத்த தான
     தனதனன தத்த தான ...... தனதான
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
     கபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர் 
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
     கலகலென மிக்க நூல்க ...... ளதனாலே 
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
     தெரிவரிய சித்தி யான ...... வுபதேசந் 
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
     திருவடியெ னக்கு நேர்வ ...... தொருநாளே 
கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
     குரகதமு கத்தர் சீய ...... முகவீரர் 
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
     குலவியிட வெற்றி வேலை ...... விடுவோனே 
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
     பரிமளத னத்தில் மேவு ...... மணிமார்பா 
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
     பழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே.
தாம் கற்ற கலைகளைக் கொண்டு, பெளத்தர்களும், விருப்பமான கிரியைகளைச் செய்வதே நியதி என்று கருதும் கருமவாதிகளும், முகமதியர்களும், மாயாவாதிகளும், கபில முனிவர் நிறுவிய சாங்கியர்களும், சொல்லப்பட்ட அந்தக் காணாபத்யர்களும், உலகாயதர்களாகிய சமூகவாதிகளும், கலகம் புரியும் தர்க்கவாதிகளான வாம மதத்தினரும், பைரவர்களும், தம்முடன் மாறுபட்ட கொள்கையுடன் சத்தத்துடன் அதிக விதமான நூல்களின் மேற் கோள்களுடன் சண்டை இட்டு, எதிர் தாக்கி வாது செய்தாலும், ஒருவருக்குமே உண்மை இதுதான் என்று தெரிதற்கு அரிதான, வீடு தரும் பொருளான உபதேசத்தை, யான் அறியும்படி விளக்கி ஞான தரிசனத்தையும் அருளி, மேம்பட்ட உனது திருவடியை எனக்குத் தந்தருளும் நாள் உண்டோ? கொலைகள் நேரும்படியாக எதிர்த்து வந்த கோரமான யானை முகமுடைய தாரகாசுரனுடன் குதிரை முகமுடையவர்கள், சிங்க முகம் உடையவர்கள் ஆகிய பல அசுர வீரர்களின் குறைபட்ட உடலை எடுத்து வீசி எறிந்து, பேயும் பத்ர காளியும் மகிழ்ச்சி அடைந்து வாயால் குலவை ஒலி (நாவை உதடுகளுக்கு இடையே வேகமாக அசைத்து எழுப்பும் ஒலியை) எழுப்ப, வெற்றி வேலைச் செலுத்தியவனே, நல்ல விளைச்சல் இருந்த தினைப் புனத்தில் உலாவுகின்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் அழகிய, கனத்த, வாசனையுடன் கூடிய மார்பினைத் தழுவிய அழகிய மார்பனே, ஒன்றோடொன்று போர் செய்து கொண்டு மிக்கெழுந்த பெண் குரங்குகள் மழை பொழியும் மேகத்தைக் கண்டு அஞ்சி ஏறி ஒளிந்து கொள்ளும் பழனி மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
பாடல் 139 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த
     தனதனன தத்த தந்த ...... தனதான
களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து
     கயலொடுப கைத்த கண்கள் ...... குழைதாவக் 
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து
     கடியிருளு டுக்கு லங்க ...... ளெனவீழ 
முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப
     முருகிதழ்சி வப்ப நின்று ...... விலைகூறி 
முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
     முடுகுமவ ருக்கி ரங்கி ...... மெலிவேனோ 
இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து
     இனியபொரு ளைப்ப கர்ந்த ...... குருநாதா 
இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப
     எனதுதலை யிற்ப தங்க ...... ளருள்வோனே 
குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து
     குமரசிவ வெற்ப மர்ந்த ...... குகவேலா 
குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த
     குறவர்மக ளைப்பு ணர்ந்த ...... பெருமாளே.
கலவைச் சந்தனம் அணிந்த மார்பகத்தைத் திறந்து, முல்லை போன்ற பற்களைக் காட்டி, கயல் மீனோடு மாறுபட்ட கண்கள் (செவிகளிலுள்ள) தோடுகளின் மீது தாவவும், கருத்த கூந்தலை வாரி ஒழுங்கு படுத்தி, (மலர்கள்) சொருகப்பட்ட கொண்டை கலைவதால், இருளை நீக்குகின்ற நட்சத்திரக் கூட்டங்களைப் போல் உதிரவும், பூரணச் சந்திரனைப் போல சிறந்த ஒளி பொருந்திய முகத்தை மினுக்கி, இன்பம் தரும் வாசனையுள்ள இதழ்கள் சிவக்கும்படி (வாயிற்படியில்) நின்று விலை பேசி, (வந்தவருடைய) பொருள் யாவும் தமது கையில் வந்த பின் அழகிய புடவையைத் திறந்து நெருங்கி உறவாடும் வேசியர்களுக்கு (ஈடுபட்டு) இரங்கி மெலிந்து நிற்பேனோ? பிறைச் சந்திரனையும், கொன்றை மலரையும், தும்பையையும், பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானுக்கு இணங்கி, இனிமை வாய்ந்த (பிரணவமாகிய) மூலப் பொருளை உபதேசித்த குரு நாதனே, யானை முகக் கணபதிக்குப் பிரியமான தம்பியே, நறுமணமுடைய கடப்ப மாலையை அணிபவனே, எனது தலையில் உனது திருவடியைச் சூட்டியவனே, குழந்தை என்று எடுத்து மகிழ்ந்த உமா தேவியின் திருமுலைகளைப் பற்றி (ஞானப்) பாலை உண்ட குமரனே, சிவ மலையில் (பழநி மலையில்) வீற்றிருக்கும் குகனே, வேலனே, சிறு குடிசைக்கு அருகில் நெருங்கியிருந்த பரண் அமைந்த தினைப் புனத்திலிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை மணந்த பெருமாளே. 
பாடல் 140 - பழநி
ராகம் - .....; தாளம் -
தனத்த தனதன தனதன தந்தத்
     தனத்த தனதன தனதன தந்தத்
          தனத்த தனதன தனதன தந்தத் ...... தனதான
கறுத்த குழலணி மலரணி பொங்கப்
     பதித்த சிலைநுத லணிதில தம்பொற்
          கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் ...... சிரமான 
கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்
     குவட்டு முலையசை படஇடை யண்மைக்
          கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் ...... கொடிபோலச் 
சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்
     குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்
          டிருக்கு நடைபழ கிகள்கள பங்கச் ...... சுடைமாதர் 
திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்
     குவட்டி யவர்வலை யழலுறு பங்கத்
          திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் ...... தவிர்வேனோ 
பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்
     செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்
          படித்த மதியற லரவணி சம்புக் ...... குருநாதா 
பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்
     கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
          படைக்கை மணியயில் விடுநட னங்கொட் ...... கதிர்வேலா 
தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்
     குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்
          சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற் ...... றிருபாதா 
சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்
     குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
          சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் ...... பெருமாளே.
கரிய கூந்தலில் அணியப்பட்ட மலர் வரிசை நன்கு விளங்கவும், வில்லைப் போன்ற நெற்றியில் பதித்துள்ள அழகிய பொட்டும், ஒளி பொருந்திய அம்புக்கு ஒத்த, சுழற்சி கொண்டு எழும் தாமரை மலர் போன்ற, கண்களும், கமுகுக்கு ஒத்த கழுத்தில் உள்ள மணி மாலையும், வளைகளும், குண்டலங்களும் ஒளி விட்டு வீசவும், மலை போன்ற மார்பகங்கள் அசையவும், இடுப்பை ஒட்டினாற்போல அணிந்துள்ள சேலை இறுகக் கட்டியபடியால் வஞ்சிக் கொடியைப் போல் இடை நெளியவும், மெல்லிய கழுத்திலிருந்து பொங்கி எழும் இன்ப மதம் ஒழுகும் இனிய சொற்கள் குயில்களின் குரலைப் போல் ஒலிக்க, அழகிய மயில்கள் அன்னங்கள் இவைகளின் நடை போலக் காணப்படும் நடையைப் பழகுபவரும், கலவைச் சாந்து படும் இறுகிய கச்சை அணிந்த விலைமாதர்கள் ஆடவரைத் திகைக்கச் செய்கின்ற ஆற்றலோடு பொருளைப் பறிக்கும் ஒளி பொருந்திய கண்களை வளைத்து தம்முடைய வலையாகிய நெருப்பு ஒத்த துன்பத்தில் திடமாக வீழச் செய்யவல்ல கீழானவருடைய வழியில் செல்வதால் கிடைக்கும் இன்பத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? கண்களுடன் விளங்கும், பறிக்கப்பட்ட பிரம கபாலத்தையும், மழுவாயுதம், மான் இவைகளை ஏந்திய திருக்கைகள் இலங்கும் சிவபெருமான், புது கொன்றை தும்பை மலர்கள், பொருந்திய சந்திரன், கங்கை நதி, பாம்பு இவைகளைச் சடையில் அணிந்த சம்புவுக்கு குருநாதனே, பருத்த அசுரர்களின் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் ஆகிய மலைகள் மடியவும், கொதித்த அலை வீசும் கடல் எரியவும், செவ்விய அழகிய படைகளை ஏந்தும் திருக் கரத்தினின்று மணி கட்டிய வேலாயுதத்தைத் தெரிந்து செலுத்தி வெற்றி நடனம் புரியும் கதிர்வேலனே, கண் தெறித்து ஆதி சேஷனது உடம்பு நிமிரவும், அழகிய ஒளி பொருந்திய சிகரங்களை உடைய ஒள்ளிய திசைக் கிரிகளும் பொடியாகும்படியாக, வேகத்தில் சிறந்த மயிலின் மீது ஏறி உலகை வலம் வந்த அழகிய பாதங்களை உடையவனே, சிறந்த அழகு பொருந்திய லக்ஷ்மியின் புதல்வியும், வஞ்சிக் கொடி போன்ற குறமகளும், உமா தேவியின் மருமகளுமாகிய வள்ளி நாயகியின் மார்பாகிய மலையைத் தழுவும் குகனே, சிவ மலையில் (* பழநியில்) வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* இடும்பன் காவடியாகக் கொண்டு வந்த சிவ மலை, சக்தி மலைகளுள், முருகன் வீற்றிருக்கும் பழனி மலை, சிவமலை எனப்படும் - பழனி புராணம்.
பாடல் 141 - பழநி
ராகம் - ...; தாளம் -
தனன தந்தன தந்த தானன
     தனன தந்தன தந்த தானன
          தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
கனக கும்பமி ரண்டு நேர்மலை
     யெனநெ ருங்குகு ரும்பை மாமணி
          கதிர்சி றந்தவ டங்கு லாவிய ...... முந்துசூதம் 
கடையில் நின்றுப ரந்து நாடொறு
     மிளகி விஞ்சியெ ழுந்த கோமள
          களப குங்கும கொங்கை யானையை ...... யின்பமாக 
அனைவ ருங்கொளு மென்று மேவிலை
     யிடும டந்தையர் தங்கள் தோதக
          மதின்ம ருண்டுது வண்ட வாசையில் ...... நைந்துபாயல் 
அவச மன்கொளு மின்ப சாகர
     முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி
          தருப தங்கதி யெம்பி ரானருள் ...... தந்திடாயோ 
தனத னந்தன தந்த னாவென
     டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
          தகுதி திந்திகு திந்த தோவென ...... வுந்துதாளந் 
தமர சஞ்சலி சஞ்ச லாவென
     முழவு டுண்டுடு டுண்டு டூவென
          தருண கிண்கிணி கிண்கி ணாரமு ...... முந்தவோதும் 
பணிப தங்கய மெண்டி சாமுக
     கரிய டங்கலு மண்ட கோளகை
          பதறி நின்றிட நின்று தோதக ...... என்றுதோகை 
பவுரி கொண்டிட மண்டி யேவரு
     நிசிச ரன்கிளை கொன்ற வேலவ
          பழநி யங்கிரி யின்கண் மேவிய ...... தம்பிரானே.
இரண்டு பொன் குடத்துக்கு ஒப்பான மலைக்கு நிகர் என்று கூறும்படி நெருங்கியுள்ள இள நீர் குரும்பைப் போன்று, அழகிய மணிகள் ஒளி சிறந்த மாலைகளில் விளங்கினவாய், முற்பட்ட சூதாடு கருவிகளைப் போன்ற மார்பகங்களுடன், வீட்டு வாயிலில் நின்று யாரை வசப்படுத்தலாம் என்ற பரபரப்பு கொண்டு, ஒவ்வொரு நாளும், இளகி மேல் எழுந்துள்ள அழகிய கலவைச் சாந்து அணிந்த குங்குமம் விளங்கும் யானையைப் போன்ற மார்பகங்களை இன்பத்துடன் எல்லாரும் கொள்ளுங்கள் என்று விலைக்கு விற்கும் விலைமாதர்களுடைய மாய்மாலச் செயலில் மயங்கி வாடி, உள்ளம் நசுங்கி, படுக்கையில் பரவசம் போன்ற மயக்கத்தை அதிகமாகக் கொள்ளும் இன்பக் கடலில் முழுகும் வஞ்சக மனத்தைத் தொலைக்கவல்ல உனது திருவடியாகிய புகலிடத்தை, எம்பிரானே, நீ அருளமாட்டாயோ? பேரிகை தனதனந்தன தந்தனா டிகுகு டிங்குகு டிங்கு என்று முழங்க, வீச்சுடன் தாளவாத்தியங்கள் தகுதி திந்திகு திந்த தோவென்று சப்திக்க, டமருகம் என்ற வாத்தியம் சஞ்சலி சஞ்சலா என்று ஒலிக்க, முரசு டுண்டுடு டுண்டு டூவென்று அடிக்கப்பட, சிறிய சதங்கை கிண்கிண் என்று முற்பட்டு ஒலிக்க, பாம்பைத் தனது பாதத்தில் பூண்டதாய், எட்டு திசைகளில் உள்ள யானைகள் யாவும், உருண்டை வடிவமான அண்டங்களும் நடுங்கி நிற்கவும், தோகை மயில் தோ தக என்ற ஒலிக் குறிப்புடன் நடனம் புரிய, நெருங்கி வந்த அசுரனாகிய சூரனது கூட்டத்தைக் கொன்ற வேலவனே, அழகிய பழனி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 
பாடல் 142 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
கனத்திறுகிப் பெருத்திளகிப்
     பணைத்துமணத் திதத்துமுகக்
          கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய் 
கவட்டையுமெத் தடக்கிமதர்த்
     தறக்கெருவித் திதத்திடுநற்
          கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந் 
தனத்தியர்கட் கிதத்துமிகுத்
     தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
          றவித்திழிசொற் பவக்கடலுற் ...... றயர்வாலே 
சலித்தவெறித் துடக்குமனத்
     திடக்கனெனச் சிரிக்கமயற்
          சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோ 
புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
     திருக்குதனக் குடத்தினறைப்
          புயத்தவநற் கருத்தையுடைக் ...... குகவீரா 
பொருப்பரசற் கிரக்கமொடுற்
     றறற்சடிலத் தவச்சிவனிற்
          புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதா 
சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
     திகைத்துவிழக் கணப்பொழுதிற்
          சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் ...... துடையோனே 
செருக்கொடுநற் றவக்கமலத்
     தயற்குமரிக் கருட்புரிசைத்
          திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
பாரமுள்ளதாய், அழுத்தம் உள்ளதாய், பெருத்ததாய், நெகிழ்ச்சி உள்ளதாய், எழுச்சி உடையதாய், நறு மணம் வீசுவதாய், இதம் தருவதாய், நுனி கரு நிறம் உடையதாய், பரப்புள்ளதாய், மேரு மலைக்கு ஒப்பானதாய், கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அறக் கெருவித்து இதத்திடு நல் கலைச் சவுளித் தலைக் குலவிக் களி கூரும் கபடத்தை மிகவும் உள்ளடக்கியதாய், செழிப்புள்ளதாய், மிக்க ஆடம்பரம் உள்ளதாய், இன்பம் தருமாறு நல்ல ஆடையையும், அணி கலன்களுடன் மேற்கொண்டதாய், இன்பம் மிகும் மார்பகங்களை உடைய பொது மகளிர் கண்களுக்கு இன்பத்துடன் ஈடுபட்டு, நெருப்பில் இட்ட மெழுகைப் போல் பூமியில் தவிப்புண்டு, இழிவான சொல்லுக்கு இடமான பிறவிக் கடலில் (நீந்த முடியாமல்) ஏற்பட்ட சோர்வினால் அலுத்த வெறியில் கட்டுண்ட மனத்தையுடைய கீழ் மகன் என்று (உலகோர்) சிரிக்க, (வேசியர்) மயக்கத்துக்கும் கோபத்துக்கும் வசை மொழிகளுக்கும் இணக்கம் உடையவனாக இருக்கக் கடவேனோ? தினைப் புனத்திலிருந்த (வள்ளி) மலைக் குறத்தியாகிய வள்ளியின் சிறந்த கண்களும், குடம் போன்ற மார்பகங்களும் படும் மணம் வீசும் புயத்தவனே, நல்ல எண்ணத்தை உடைய குக வீரனே, மலை அரசனான இமவானிடம் அன்புடன் (அவனது நாட்டிற்குச்) சென்ற கங்கையைத் தரித்த சடை முடியை உடைய அந்தச் சிவனிடத்து உள்ள ஞானாம்பாளுக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கும் குழந்தைநாதனே, கோபத்துடன் எதிர்த்து வந்த துஷ்ட அரக்கர்களை திகைப்புண்டு விழும்படி, ஒரு நொடிப் பொழுதில் அழித்திட்ட, நல்ல ஒளி வீசும் கைப்படையாகிய வேலை உடையவனே, களிப்புடன் நல்ல தவம் நிறைந்த தாமரைப் பீடத்துப் பிரமனுக்கும், திருமாலுக்கும் அருள் பாலித்தவனே, மதில் சூழ்ந்த திருப் பழனி மலையில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 
பாடல் 143 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனனா தனந்தனத் தனனா தனந்தனத்
     தனனா தனந்தனத் ...... தனதான
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
     புரமா ரணந்துளுத் ...... திடுமானார் 
கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
     பொருளே யிழந்துவிட் ...... டயர்வாயே 
மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
     டறவே யுலந்துசுக் ...... கதுபோலே 
வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
     பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ 
புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்
     புணர்கா தல்கொண்டஅக் ...... கிழவோனே 
புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்
     டெழவே லெறிந்தவுக் ...... கிரவீரா 
தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச்
     சிறுகீ தசெம்பதத் ...... தருளாளா 
சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத்
     திருவா வினன்குடிப் ...... பெருமாளே.
பாரத்துடன் எழுந்து மலை போல் உயர்ந்து, கற்பூரம் முதலியன பூசப்பட்டு, மரணத்தைத் தரவல்ல (மந்திர வித்தை கொண்டது போல) செழிப்புடன் வளர்ந்த மார்பகங்கள் கொண்ட விலைமாதர்களின் கொவ்வைக் கனி போன்ற செவ்வாயை விரும்பி, விடாது உறுதியாகத் தழுவி, கைப் பொருள் எல்லாவற்றையும் இழந்து விட்டு, தளர்ச்சியுற்று மனம் தளர்ந்து, விக்கல் எடுத்து, அளவின்றி உடல் அழிவுற்று சுக்கு போலாகி உலர்ந்து, தன் வசம் அழிந்து ஒடுக்குகின்ற நோயை அகற்றி, சேமநிதி (நீயே) என்று கருதி உன்னைப் புகழ மாட்டேனோ? தினைப் புன வேடர்கள் பெற்ற அழகிய குற மகளாகிய வள்ளி இன்பம் கொள்ளும்படி, அவளைச் சேர்வதற்குக் காதல் கொண்ட அந்தக் கிழ வேடம் பூண்டவனே, ஏழு கடல்களும் வற்றும்படி, ஏழு மலைகளோடு, சூரனுடைய தலைகள் பொடிபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய பெருங் கோப வீரனே, நாள் தோறும் விரும்பக் கூடிய குங்குமப்பூ முதலிய வாசனைகள் பூசப்பட்ட தோள்களில் மணம் நிறைந்தவனே, கிண்கிணிகளின் மெல்லிய இசையுடன் கூடிய செவ்விய திருவடிகளை உடைய அருளாளனே, சிவலோகத்தில் உள்ள சங்கரிக்குத் தலைவனான சிவபெருமானுடைய பிள்ளையே, பசுமையான நீர் நிலைகளையுடைய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 144 - பழநி
ராகம் - ...; தாளம் -
தான தந்ததனத் தான தந்ததனத்
     தான தந்ததனத் ...... தனதான
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
     காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக் 
கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
     காய மொன்றுபொறுத் ...... தடியேனும் 
தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
     சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம் 
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
     தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான் 
சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
     தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா 
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
     சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே 
ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்
     றால முண்டவருக் ...... குரியோனே 
ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்
     றாவி னன்குடியிற் ...... பெருமாளே.
மேகங்களை அணிந்த மலைகளுடன் கூடிய இப் பூமியில் பிறந்து, வினைகளைப் பெருக்கும் காதலினால் உள்ளம் சோர்ந்து, தடுமாற்றம் கொண்டு, வாயு, நரம்பு, இரத்தம், தோல், கொழுப்பு இவைகளோடு கூடிய பொய்யான உடல் ஒன்றினைச் சுமந்து அடியேனாகிய நான், மாலை சேர்ந்த கூந்தலையும், கூர்மையான கண்களையும், வில்லுக்கு ஒப்பான நெற்றியையும் உடைய கொடி போன்ற பொதுமகளிருடைய பாதங்களை வணங்கி, அவர்களுடைய அழகிய தோள்களின் மேல் ஆசைப்பட்டு, மிகவும் கீழான நிலையை அடைந்து, அழிந்து போகத் தக்கதாமோ? சூரனுடைய உடல் அழிந்து போக, தேவர்கள் நின்று போற்ற, கடலும் வற்றிப்போக, சண்டை செய்யும் வேலனே, பரிசுத்தம் கொண்ட மயில் போன்ற வள்ளி நின்ற, தினைப் புனங்கள் சூழ்ந்த வள்ளிமலையில் திரிகின்றவனே, பிரமன், கருடக் கொடியையுடைய திருமால் இருவரும் வணங்க, ஆலகால விஷம் முழுவதையும் உண்ட சிவபெருமானுக்கு உரியவனே, கரும்பு ஆலைகளும், வயல்களும், சோலைகளும் பக்கங்களில் சூழ்ந்துள்ள திருவாவினன்குடியில் (பழநியில்) வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 145 - பழநி
ராகம் - கெளளை; தாளம் - ஆதி - 2 களை - 16
தனந்த தனதன தனதன தனதன
     தனந்த தனதன தனதன தனதன
          தனந்த தனதன தனதன தனதன ...... தனதான
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
     எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
          குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக் 
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
     இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
          குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான 
சரம்ப ருறவனை நரகனை துரகனை
     இரங்கு கலியனை பரிவுறு சடலனை
          சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித் 
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
     அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
          தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே 
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
     லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
          லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா 
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
     டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
          இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே 
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
     அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
          செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா 
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
     சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
          செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே.
சிறு குடிலாகிய இந்த வீடு - உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட வழுவழுப்பான கொழுப்பும், எலும்பும், அடுக்காகச் சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும், முறையின்றி சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன், இவற்றோடு கெட்ட அழுக்குகள் நிறைந்ததுமான, இந்த வீட்டில் (உடலில்) ஐவர் (ஐம்புலன்கள்) குடி புகுந்துள்ளனர். அவர்கள் மிகவும் கடுமையான கொடுங்குணத்தினர். அகந்தை கொண்டவர்கள். ஒரு வழியில் போகாதவர்கள். குற்றம் உடையவர்கள். குரங்கு போல் சேட்டை செய்பவர்கள். அறிவில்லாதவர்கள். நன்னெறியில் ஒழுகாதவர்கள். மிருகத் தன்மை உடைய வலிமை வாய்ந்தவர்கள். விஷம் போன்ற குணம் உடையவர்கள். (இத்தகையோர்களுடன்) நட்பு உடையவனை, நரகம் புகுகின்றவனை, குதிரை போல் மிக வேகமாகச் செல்லும் மனத்தை உடையவனை, அழுது ஏங்கும் வறியவனை, துன்பத்துக்கு உறைவிடமாகிய உடல்மேல் அன்பு கொண்டவனுமாகிய என்னை, அழகிய முகத்தவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, நீஅழகோடு மயிலின் மீது ஏறி வந்து, செழிப்புடன் பூரித்த சிவ ஒளியை என்னுடைய மனதில் அழுந்தும்படி நன்றாக ஓதி உபதேசிக்கும் பொருட்டு வந்த திருமுகச் சிரிப்பு பூத்த ஒளியையும், குளிர்ந்த கண்களையும், உனது மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் நான் மறவேன்.* இலுப்ப மரங்களும் மகிழ மரங்களும் நிறைந்து இவைகளின் மேல் பல மேகங்கள் தங்கும் சோலைகளில் வசிக்கின்ற குயில்களும் வண்டுகளும் இனிமையான ஒலிகளைப் பரப்ப, மயில்கள் அந்த இசைக்கு ஒத்து நடமிடுகின்ற இணை இல்லாத சிதம்பரம் என்னும் வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே. இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை இடிந்து பொடியாக, பல மலைகளும் பொடிபட, மகர மீன்கள் உறையும் கடல் தீப்பற்றிக்கொள்ள, ஒளி பெற்ற எட்டு திசைகளில் உள்ள யானைகளும் கலங்கிப் பிளிற, ஆர்ப்பரித்து வந்த அசுரர்களோடு (அவர்களுடைய) யானை, குதிரை முதலிய படைகளையும் யம லோகத்துக்கு அனுப்பிய தலைவனே, உயர்ந்த பொன் நிறம் கொண்ட பிரமனும், முனிவர்களும், தேவர்களும், அரம்பை மகளிரும் அரகர, சிவசிவ, சுயம்பு மூர்த்தியே என்று புகழ, நடனம் செய்கின்ற திருவடி அழகாக அமையப்பெற்ற சிவபெருமானுக்கு குருநாதனே, செழித்த பவளம் போன்ற, நிலவைப் பழித்துச் சிரிக்கும் மலர்ந்த முகமும், சிறப்புடன் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் இரு மார்பகங்களும் அழுந்தும் வண்ணம் வெற்றி கொண்டு அவளை அணைத்த குகனே, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இப்பாடலில் அருணகிரியார் முருகதரிசனத்துக்கு நன்றி செலுத்துகிறார்.
பாடல் 146 - பழநி
ராகம் - கேதார கெளளை; தாளம் - மிஸ்ர சாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான
குருதி மலசல மொழுகு நரகுட
     லரிய புழுவது நெளியு முடல்மத
          குருபி நிணசதை விளையு முளைசளி ...... யுடலூடே 
குடிக ளெனபல குடிகை வலிகொடு
     குமர வலிதலை வயிறு வலியென
          கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணி 
மருவி மதனனுள் கரிய புளகித
     மணிய சலபல கவடி மலர்புனை
          மதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகா 
மனது துயரற வினைகள் சிதறிட
     மதன பிணியொடு கலைகள் சிதறிட
          மனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயே 
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
     நிசித அரவளை முடிகள் சிதறிட
          நெறிய கிரிகட லெரிய வுருவிய ...... கதிர்வேலா 
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
     நிருப குருபர குமர சரணென
          நெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனே 
பருதி மதிகனல் விழிய சிவனிட
     மருவு மொருமலை யரையர் திருமகள்
          படிவ முகிலென அரியி னிளையவ ...... ளருள்பாலா 
பரம கணபதி யயலின் மதகரி
     வடிவு கொடுவர விரவு குறமக
          ளபய மெனவணை பழநி மருவிய ...... பெருமாளே.
ரத்தம், மலம், நீர், இவை ஒழுகுகின்ற மனிதக் குடலையும், சிறிய புழுக்கள் நெளியக்கூடிய உடலையும் கொண்டு, மதம் கொண்ட விகார வடிவம் கொண்டவனாய், கொழுப்பு, சதை, ஊறி எழும் சேறு போன்ற சளி இவை உடலினுள்ளே குடியிருப்பவர்கள் போல உரிமையுடன் பலவும் குடிகொண்டு, வலியதான கண்ட வலி (ஒருவகை வலிப்பு நோய்), தலைவலி, வயிற்றுவலி என்று கொடுமையான நோய்கள் செய்யும் வேதனை மிகுந்த இந்த உடலை, மிகவும் விரும்பிய யான், மாதருடன் கலந்து, பொறாமையால் மன்மதனின் உள்ளமும் கரிந்து போகும்படியாக, புளகாங்கிதமும், மணிகளும் பூண்ட, மலை போன்ற, பல நகைகளை அணிந்த, மலர்களைப் புனைந்த, மதன நூல்களில் கூறியபடி, பெருமலையன்ன மார்பகங்களில் மயக்கம் கொள்ளாமல், மனத்தின் துன்பங்கள் ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும், காமநோயும் காம சாஸ்திரமும் விலகி நீங்கவும், என் மனம் பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி அருள்வாயாக. அசுரர்கள் அழிந்து பொடியாகுமாறும், தேவர்கள் தங்கள் அமராவதிப் பதியைப் பெறுமாறும், கூர்மையான நாகாஸ்திரம், சக்ராயுதம் என்ற பாணங்களின் நுனிகள் சிதறுமாறும், மலைகள் நெறிந்து பொடிபடவும், கடல்கள் தீப்பற்றி எரியவும், செலுத்திய ஒளிமிகுந்த வேலாயுதத்தை உடையவனே, நிரம்பவும் மலர்களைப் பொழிந்து தேவர்களும் முநிவர்களும், அரசனே, குருநாதனே, குமரனே, சரணம் என்று பணிய, பெரிய மேகத்தின் உடலைக் கிழித்துக் கொண்டு ஊடுருவி வருகின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே, சூரியன், சந்திரன், அக்கினி இவற்றை விழியாகக் கொண்ட சிவபிரானின் இடப்பக்கத்தில் இருப்பவளும், ஒப்பற்ற மலையரசனான ஹிமவானின் திருமகளாக வந்தவளும், தன் வடிவம் மேகம்போல் கருத்த திருமாலின் தங்கையானவளுமான பார்வதி தேவி அருளிய குழந்தையே, பரம் பொருளாகிய கணபதி அருகில் மதயானை உருவம் எடுத்து வர, உடனிருந்த குறமகள் வள்ளி அபயம் என அடைக்கலம் புகுந்து தழுவ, பழநியில் வசிக்கின்ற பெருமாளே. 
பாடல் 147 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான
குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
     குமுத வதரமு ...... றுவலாரம் 
குழைம கரம்வளை மொழிகு யிலமுது
     குயமு ளரிமுகை ...... கிரிசூது 
விழிக யலயில்ப கழிவ ருணிகரு
     விளைகு வளைவிட ...... மெனநாயேன் 
மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி
     வெறிது ளம்விதன ...... முறலாமோ 
கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
     கழல்ப ணியவருள் ...... மயில்வீரா 
கமலை திருமரு கமலை நிருதரு
     கமலை தொளைசெய்த ...... கதிர்வேலா 
பழனி மலைவரு பழநி மலைதரு
     பழநி மலைமுரு ...... கவிசாகா 
பரவு பரவைகொல் பரவை வணஅரி
     பரவு மிமையவர் ...... பெருமாளே.
பெண்களின் கூந்தல் காடு, மேகம் (போன்றது). நெற்றி வீரம் பொருந்திய வில். வாய் இதழ்கள் குமுத மலர். பற்கள் முத்துக்கள். மகர மீன் வடிவம் பொருந்திய குண்டலம் தரித்துள்ள காது வள்ளிக் கொடி இலை போன்றது. பேச்சு குயில் போன்றும் அமுதம் போன்றும் இனியது. மார்பகங்கள் தாமரை அரும்பையும், மலையையும், சூதாடும் கருவியையும் போன்றவை. கண்கள் கயல் மீன், வேல் என்றும், அம்பு, கடல், கரு விளை மலர், நீலோற்பல மலர், நஞ்சு என்றெல்லாம் உவமை கூறி, நாயேனாகிய அடியேன் மிகவும் பெண்களை சிறிதும் பயனற்ற வழிகளில் வியந்துரைத்து வீணாக என் உள்ளம் விசனப்படலாமோ? செய்த வினைகள் கழல (நீங்க), வீரக் கழலையும் தண்டை முதலிய ஆபரணங்களையும் அணிந்துள்ள திருவடிகளைப் பணியும்படி அருள் புரிவாயாக, மயில் வீரனே, தாமரையில் வாழும் லக்ஷ்மியின் மருகனே, (கிரெளஞ்சம், எழு கிரி ஆகிய) மலைவாழ் அரக்கர்கள் அழிய அந்த மலைகளைத் தொளைத்த ஒளி வீசும் வேலனே, பழம் போன்றவளும், இமய மலையில் அவதரித்தவளும், பழமையுடைய நிமலையும் ஆகிய பார்வதி பெற்ற, பழநிமலைவாழ் முருகனே, விசாக மூர்த்தியே, பரந்துள்ள கடலில் மீது பாணத்தைச் செலுத்தி அடக்கிய கடல் நிறம் உடைய (ராமனாகிய) திருமால் போற்றும், தேவர்களின் பெருமாளே. 
பாடல் 148 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனன தனன தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ
     கொலைகள் செயவெ ...... களவோடே 
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
     குமுற வளையி ...... னொலிமீற 
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
     இடையு மசைய ...... மயில்போலே 
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
     இடரில் மயலில் ...... உளர்வேனோ 
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
     விஜய கிரிசொல் ...... அணிவோனே 
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
     விபின கெமனி ...... யருள்பாலா 
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
     படிவ வடிவ ...... முடையோனே 
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
     பழநி மருவு ...... பெருமாளே.
கூந்தல் சரியவும், பேச்சு பதறவும், கண்கள் புரண்டு கொலைத் தொழிலைக் காட்டவும், களவு எண்ணத்துடன் குலவுதல் செய்து, கிகிகி என்ற ஓசை எழவும், கண்டத்தில் (புட்குரல்கள்) குமுறி எழவும், வளையல்களின் ஒலி மிகுந்து மேலெழவும், இளநீர் என்று சொல்லும்படி மார்பகங்கள் அசையவும், இரண்டு தொடைகளும் இடுப்பும் அசையவும், மயில் போல் நடனமாடி, (இதழ்களில் இருந்து) இன்ப ஊற்று வடியவும் மிகுதியான கலவி புரிகின்ற பரத்தையருடைய துன்பத்திலும் மயக்கிலும் பட்டு அழிவேனோ? விளங்கிய இலக்கியச் சுவை பொலிவுறும் அருணகிரி* என்கின்ற புலவன் சொல்லுகின்ற வெற்றி மலை போன்ற புகழ் மாலையை அணிபவனே, தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகிய உமை பெற்ற குழந்தையே, பழைமையான வேத முடிவில் பிரணவத்தை (அ + உ+ ம் = ஓம் என்ற) உருவத் திரு மேனியாகக் கொண்டவனே, நன்செய் புன்செய் நிலங்களும், கமுகு மரங்களும், வாழை, பலா மரங்களும் விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இப்பாடலில் கவிஞர் அருணகிரிநாதர் தம்மைப் பற்றி மூன்றாம் மனிதர் போலக் கூறும் குறிப்பை வைத்து, சிலர் கவிஞர் இதனை இயற்றவில்லை எனக் கூறுவர்.
பாடல் 149 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
குறித்தமணிப் பணித்துகிலைத்
     திருத்தியுடுத் திருட்குழலைக்
          குலைத்துமுடித் திலைச்சுருளைப் ...... பிளவோடே 
குதட்டியதுப் புதட்டைமடித்
     தயிற்பயிலிட் டழைத்துமருட்
          கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் ...... குறியாலே 
பொறித்ததனத் தணைத்துமனச்
     செருக்கினர்கைப் பொருட்கவரப்
          புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் ...... திடுமாதர் 
புலத்தலையிற் செலுத்துமனப்
     ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
          புரித்தருளித் திருக்கழலைத் ...... தருவாயே 
பறித்ததலைத் திருட்டமணக்
     குருக்களசட் டுருக்களிடைப்
          பழுக்களுகக் கழுக்கள்புகத் ...... திருநீறு 
பரப்பியதத் திருப்பதிபுக்
     கனற்புனலிற் கனத்தசொலைப்
          பதித்தெழுதிப் புகட்டதிறற் ...... கவிராசா 
செறித்தசடைச் சசித்தரியத்
     தகப்பன்மதித் துகப்பனெனச்
          சிறக்கவெழுத் தருட்கருணைப் ...... பெருவாழ்வே 
திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத்
     தடுத்தடிமைப் படுத்தஅருட்
          டிருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
சிறந்ததென்று கருதிய ரத்தின மணிகள் பதித்த ஆபரணங்களையும் ஆடைகளையும் முறையே சரிப்படுத்தி உடுத்து, கரிய கூந்தலை கலைத்து முடித்து, வெற்றிலையைப் பாக்குப் பிளவுடன் மெல்லுகின்ற பவளம் போன்ற இதழ்களை மடித்து, வேல் போன்ற கண்களால் நெருக்கி அருகே அழைத்து, காம மயக்கத்தைக் கொடுத்து நல்லுணர்வைக் கெடுத்து, நகக் குறியால் அடையாளம் இடப்பட்ட மார்பகத்தில் அணைத்து, மனம் கர்வம் கொண்டவராய், (தம்மிடம் வந்தவர்களிடம்) கைப் பொருளைக் கவரும் பொருட்டு கலவியில் கட்டுப்படுத்துகின்ற விலைமாதர்கள். அவர்களிடத்தில் செலுத்துகின்ற மயக்கம் அற்றுப் போக நான் பெரும் புகழ் பெற அன்பு கூர்ந்து அருள் புரிந்து உனது அழகிய திருவடியைத் தருவாயாக. ரோமத்தை விலக்கிய தலையையும் கள்ள நெஞ்சத்தையும் உடைய சமணக் குருக்களாகிய அறிவில்லாதவர்களின் விலா எலும்புகள் முறிந்து விழ, (அவர்கள்) கழு மரங்கள் ஏறும்படி விபூதியைப் பரவ வைத்த அந்த மதுரையம்பதிக்குச் சென்று, நெருப்பிலும் நீரிலும் பெருமை வாய்ந்த (தேவாரத்) திருப் பதிகத்தைப் பொறித்து எழுதப்பட்ட ஏடுகளைப் புகவிட்ட ஞான வலிமையுடைய (சம்பந்தராக வந்த) கவியரசனே, நெருங்கி அடர்ந்த சடையில் சந்திரனைத் தரித்த அந்தத் தந்தையாகிய சிவ பெருமான் பாராட்டி மகிழ்வான் என்று சிறப்புறும் வகையில் பிரணவத்தின் பொருளை உபதேசித்து அருளிய கருணைச் செல்வமே, விளக்கமுறும் வயலூரில் என்னைத் தடுத்து ஆட்கொண்டு அடிமை ஆக்கிய அருளாளனே, அழகிய பழனி மலையில் உறையும் குமரப் பெருமாளே. 
பாடல் 150 - பழநி
ராகம் - ....; தாளம் -
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
     தனதன தனதன தனதன தனதன
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
     தனதன தனதன தனதன தனதன
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
     தனதன தனதன தனதன தனதன ...... தனதான
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
     படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
     கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்
கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்
     சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் ...... விரகாலும் 
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
     குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
     தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
     பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் ...... மயலாலும் 
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
     டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
     தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
     தமுமிக வருள்பெற விடைதரு விதமுன ...... மருள்வாயே 
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
     அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
     செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
     துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் ...... மருகோனே 
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
     தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
     டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
     றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ...... யடுவோனே 
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
     சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
     றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
     விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை ...... புயவீரா 
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
     கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
     படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
     அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு ...... திறலோனே 
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
     கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
     தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
     கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே.
மலையும் வளர்ச்சி குறைந்து இருக்கும்படியும், பூச்செண்டும் வாடும்படியாகவும் வளர்ந்த மார்பகத்தில் கஸ்தூரிக் கலவை பூண்பவர். சந்திரனைப் போலவும் அழகு தங்கும் குளிர்ச்சியும் சிவப்பு நிறமும் பொருந்திய தாமரை போன்று விளங்கும் முகத்தைக் கொண்ட (விலை) மாதர்கள். கொஞ்சுதலும், கெஞ்சிக் கேட்பதும் செய்தும், வஞ்சகமாக, சமாதானம் வரும்படி, ஒப்பற்ற செயல்களைப் புரியும் மாதர். சூழ்ச்சியாலும், கும்பல் கூடியிருத்தலும், வேடிக்கையும், அழகும், ஆணவமும் (இக்குணங்கள்) தம்முள் குடிவளர்த்துள்ள பொல்லாதவர்கள். கடுமையானவர்கள். எங்கே, எங்கே எமக்கு உரிய பங்கு என்று கூறி, எப்போதும் தமக்குச் சொந்தமானது என்று நிலை நிறுத்தி, பின் நலம் பேசி அணைபவர். கொஞ்சமே உள்ள இன்பத்தைக் கொடுத்து என்னிடம் உள்ள பொருள் அனைத்தையும் சாமர்த்தியமாக கவர்ந்து கொள்பவர்கள். காம இச்சையாலும், எந்த நாளும் மனம் இரங்கி நொந்து போதலையும், துன்பத்தையும் கொண்டுள்ள நான் உனது மலர் போன்ற இரு திருவடியை போற்றுதற்கும், மனத்தில் நல்லது என்று எப்பொழுதும் அறிந்து என்றும் (உன் திருக்கோயிலுக்குச்) சென்று தொழுகின்ற பெருமையின் பண்பை என் அறிவில் நின் அருளால் நான் பெறவும், இன்பமும் நற்பண்பும் உற்சாகமும் உனது தொடர்பும் சேர்ந்து நிரம்பும்படியான அருளைப் பெறவும் நீ அனுமதி செய்யும் வழியை முன்னதாகக் காட்டி அருள் புரிவாயாக. பயத்தால் ஏங்கிய கம்சன் வஞ்சகன், அற்பன். (கண்ணனைக் கொல்லும் பொருட்டு) அவன் ஏவிய அதிசயமான செயலை உடைய (பூதனை என்ற) பேயை வெற்றி கொண்டு, கொன்று, துண்டம் துண்டமாகச் செய்த திருமால், ஒரு காலத்தில் இரணியன் என்னும் வலியவனுடைய உயிரை உண்ட நரசிங்க வடிவினர், ஆதிசேஷனாகிய தோணி மேல் (பாற்கடலில்) துயில் கொள்பவர், அன்ன வாகனனாகிய பிரம தேவனைப் பெற்ற கரிய மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே, நிகரில்லாத சூரிய மண்டலம் வரை உயர்ந்து நின்ற கிரெளஞ்ச மலை பிளக்கும்படியும், மதம் பொழியும் யானை முகமுடைய தாரகாசுரனது உடம்பு நெரிபட்டு அழியவும், டுண் டுண் டுண் டுண் டிண் டிண் டிண் டிண் டிடி என்ற ஒலியுடன், விழும்படியான நிலையில் இருந்த ஏழு உலகங்களும் அதிர்ச்சி கொள்ளவும், ஒள்ளிய சங்கம் சஞ்சம் சஞ்சம் என்று ஒலிக்கவும், இந்திரன் வணங்கவும் அசுரர்களை மாய்த்தவனே, நீயே முக்காலும் அடைக்கலம், சிவனுக்கு அருளிய ஞான மூர்த்தியே என்று முனிவர்கள் பணியும், தொம்தம் தொம்தம் என்ற தாளத்தோடு ஒலி பரவ நடம் செய்யும் சிவபெருமான் அருளிய ஆறுமுகனே, தேன் உண்ணுகிற இடத்தில் வண்டுகளைக் கொண்டு விளங்க, வாசனை வீசுகின்ற குரா மலர்கள் மலரும், அழகு செய்கின்ற தோள்களை உடைய வீரனே, பிற மதங்கள் முக்தி வழி அன்று என்று கூறி தங்கள் நெறி ஒன்றையே கொண்டு அன்பு இல்லாமல் அங்கு அடியவர்களை இகழ்ந்து பேசிய சமணர்களை கழுவில் அவர்கள் உடல் சிந்தும்படியும், குறைபட்டு மாளும்படியும் செய்து, ஒரே வெள்ளமாய் நுரைத்து வந்த வைகையாற்றில் ஏடுகள் எதிர் வரச் செய்து, (அத்தகைய செயல்களால்) சிவத்தின் தன்மையை எங்கும் பரவச் செய்து, எலும்பிலிருந்து பூம்பாவையை எதிரில் உயிரோடு வரும்படி செய்த கவி பாடிய திருஞானசம்பந்தராக வந்து தேவார திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்து அருளிய சமர்த்தனே, அண்டங்களை உண்டாக்கியும், முன்னொரு நாளில் அவற்றை உண்டும், முடுகி வந்த போரில் அருச்சுனனின் ரதத்தைத் (தேர்ப் பாகனாக வந்து) செலுத்திய பரிசுத்த மூர்த்தி, தீயாரை வஞ்சம் புரிந்து அழிப்பவரும், பாஞ்ச ஜன்யம் என்ற சங்கை உடையவரும் ஆகிய திருமாலின் புதல்வராகிய பிரம்ம தேவருடைய புத்திரரான நாரத முனிவர் புரிந்த வேள்வியில் பிறந்த ஆட்டுக் கடாவின் மீது ஏறுகின்ற வல்லவனே, தமது அடையாள உறுப்பாக தாமரையும், சங்கும் பொலிந்து விளங்கும் தடாகங்கள் நிறைந்த வளப்பம் பொருந்திய சிவ கிரியாகிய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 126 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் தனனத் தனனத்          தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான

கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்     ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்          கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் ...... பவனூணாக் 
கருதிச் சருவிக் கயலைக் கயமுட்     படுவித் துழையைக் கவனத் தடைசிக்          கணையைக் கடைவித் துவடுத் தனையுப் ...... பினின்மேவி 
அடலைச் செயல்சத் தியையக் கினியிற்     புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்          தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் ...... தசகோரம் 
அலறப் பணிரத் நமணிக் குழையைச்     சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்          டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் ...... படுவேனோ 
சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்     தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்          தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் ...... பரிவாலே 
சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்     குமரர்க் குமநுக் க்ரகமெய்ப் பலகைச்          சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் ...... தியில்ஞான 
படலத் துறுலக் கணலக் யதமிழ்த்     த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்          பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் ...... குருநாதா 
பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்     றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்          பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் ...... பெருமாளே.

சமுத்திரத்தை ஒரு எல்லையைத் தாண்டாதபடி சிறையில் வைத்து, மலர்ச் சோலையில உள்ள வண்டை உடலில் வரி ரேகைகளை அமைத்து ஒடுக்கி, மடுவில் உள்ள தாமரை மலரை வாடச் செய்து, ஆலகால விஷத்தை பலி ஏந்தி இரப்பவனாகிய சிவ பெருமானுக்கு உணவாகக் கருதிவைத்து, போராடும் கயல் மீனை குளத்தில் புக வைத்து, மானை காட்டில் அடையச் செய்து, பாணத்தை உலையில் கடைய வைத்து, மாவடுவை உப்பினில் ஊறவைத்து, வெற்றிச் செயல் கொண்ட வேற்படையை தீயினில் புக வைத்து, யமனை உதைத்திட்டு, ஒளி பொருந்திய வாளை ஆட்டமுற்று முறிய வைத்து, மதிக்கப்படும் சகோரப் பட்சியை (வெட்கத்தால்) அலறும்படிச் செய்து, ரத்தினத்தால் செய்யப்பட்ட மணிக்குழையோடு போராடுவதும், மயக்கும் மை அணிந்ததும், ஒளி வீசுவதும், மருட்டுதல் செய்யும் மனத்தை உடைய விலைமாதர்களின் கடைக்கண்களில் அகப்படுவேனோ? சடை மகுடத்தவனாகிய சிவபெருமானின் ஆணையின்படி மேன்மையான குலத்தில் ஒரு செட்டி இடத்தே தோன்றி, அருளும் ஞானமும் கொண்ட ருத்ர ஜன்மன்* என்னும் பெயருடன் திகழ்ந்து, அன்புடனே சநகர், அகஸ்தியர், புலஸ்தியர், சநற்குமரர் ஆகியோர்களுக்கு அருள் பாலித்தவனே, சங்கப்பலகையில் வீற்றிருந்த நாற்பத்தொன்பது புலவர்களுக்கும் வேறுபாடு இல்லாத முறையில் ஞானப் பகுதியில் உள்ள இலக்கண இலக்கிய முத்தமிழில் (சிவபெருமான் இயற்றிய) அகப்பொருள் விளக்கத்தை குற்றமின்றி உணர்வித்து அருளிய வித்தகனே, சற்குரு நாதனே, பவளக் கொடி சுற்றிய அழகிய கமுகு மரத்தின் உச்சிக் குலையினின்றும் பல முத்துக்கள் உதிர்கின்ற பழநிப் பதி மலையில் நின்றருளும் பெருமாளே. 
முதல் 12 வரிகளில் கண்ணுக்கு உவமையாகக் கருதப்படும் கடல், வண்டு, தாமரை, விஷம், கயல் மீன், மாவடு, வேல், மான், யமன், வாள், சகோரப் பட்சி ஆகியவை எங்ஙனம் கண்ணுக்கு உவமை ஆகா என்பதை ஒவ்வோர் உவமைக்கும் ஒரு குறை உள்ளது என்று கூறப்படும் முறை தனிச் சிறப்பு வாய்ந்தது.
* மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர். - திருவிளையாடல் புராணம்.

பாடல் 127 - பழநி
ராகம் - தந்யாஸி ; தாளம் - ஆதி

தனன தனதனன தனன தனதனன     தனன தனதனன ...... தனதான

கடலை பொரியவரை பலக னிகழைநுகர்     கடின குடவுதர ...... விபா£த 
கரட தடமுமத நளின சிறுநயன     கரிணி முகவரது ...... துணைவோனே 
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்     வலம்வ ருமரகத ...... மயில்வீரா 
மகப திதருசுதை குறமி னொடிருவரு     மருவு சரசவித ...... மணவாளா 
அடல சுரர்கள்குல முழுது மடியவுய     ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும் 
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு     மரக ரசரவண ...... பவலோலா 
படல வுடுபதியை யிதழி யணிசடில     பசுப திவரநதி ...... அழகான 
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை     பழநி மலையில்வரு ...... பெருமாளே.

கடலை, பொரி, அவரை, பலவிதமான பழங்கள், கரும்பு இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம் போன்ற வயிற்றையும், அதிசயமான மதம் பாய்ந்த அடையாளத்தையும், மும்மதத்தையும்* தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும் கொண்ட யானைமுகத்தோருக்கு இளையவனே, வடமலையாகிய மகாமேருவின் சிகரங்களும் அதிரும்படி, ஒரே நொடியில் உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே, தேவேந்திரனின் திருமகள் தேவயானையுடனும், குறமகள் வள்ளியுடனும், இருவரையும் ஒருங்கே தழுவி இன்ப ஆடல் புரியும் கணவனே, வலிமை பொருந்திய அசுரர்களின் குலம் முழுவதும் அழியுமாறும், உயர்ந்த தேவர்களின் சிறை நீங்கவும், அழகு மிகுந்த சிவந்த கதிரொளியை வீசும் வேலை செலுத்திய ஹரஹர சரவணபவனே, திருவிளையாடல் புரிபவனே, கூட்டமாக உள்ள நக்ஷத்திரங்களின் தலைவனாம் சந்திரனையும் கொன்றைமலரையும் தரித்திருக்கின்ற ஜடாமுடியுடைய பசுபதியாகிய சிவபெருமானும், ஜீவநதியாகிய கங்காதேவியும், அழகிய பழமையான நிர்மலையாகிய உமாதேவியும் பெற்றருளிய மழலைச் சொல் பேசும் குழந்தையே, பழநி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 
* மும்மதங்கள்: இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று சக்திகளையும் மும்மதங்களாகக் கொண்டவர்.

பாடல் 128 - பழநி
ராகம் - தேஷ்; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2

தனன தனத்த தாதத தனன தனத்த தானன     தனன தனத்த தானன ...... தனதான

கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண     கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான 
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய     கனதன மொத்த மேனியு ...... முகமாறும் 
அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்     அரவு பிடித்த தோகையு ...... முலகேழும் 
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்     அபிந வபத்ம பாதமு ...... மறவேனே 
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு     ரணமு கசுத்த வீரிய ...... குணமான 
இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற     இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே 
பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை     பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக 
பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்     பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.

நற்கதியை அடையமுடியாதபடி தடுக்கின்ற பொதுமகளிரின் புதிய ரத்னாபரணங்களை அனிந்துள்ள பெருமார்பாகிய மலைமேல் மோகம் மிக்க கொண்டதனால் கவலை கொண்ட மனத்தினனாக நான் இருந்த போதிலும், உனது சிறப்பான புகழ்பெற்ற தங்கநிதி போன்ற திருமேனியையும் (1), ஆறு திருமுகங்களையும் (2) மிகுந்த வலிமை பொருந்திய தோள்களையும் (3) கூரிய நுனியை உடைய வெற்றி வேலினையும் (4) பாம்பினைக் கால்களில் பிடித்துள்ள கலாப மயிலையும் (5) ஏழுலகங்களும் அதிரும்படியாக கொக்கரிக்கும் கோழியையும் (6) உன்னடியார்கள் வாழ்த்தி வணங்கி வாழ்வு பெறும் புதிய தாமரை மலர் போன்ற திருவடிகளையும் (7) ஒருபோதும் மறக்கமாட்டேன். சூரிய அம்சமாக வந்த சுக்¡£வன் ரஜோகுணத்தை மேற்கொண்டு (வாலியை) எதிர்த்து, தோற்று நின்ற கொடிய போர்க்களத்தில், சுத்த வீரியம் வாய்ந்த குணத்தினனாகிய தம்பி சுக்¡£வனுக்கு உதவி, அவன்பெரிய அரசாட்சியைப் பெற்று வாழுமாறு அன்புடன் அருளிய ராகவனின் மருமகனே, பதினோரு ருத்திரர்களின்* பிரகாசம் விளங்கும் கோவிலில் அன்போடு எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரனே, தேவலோகத்தில் உள்ள வாசம் மிகு கற்பக விருட்சங்கள் இருக்கும் காட்டில் வரிகளை உடைய வண்டுகள் மொய்ப்பதால் கற்பக மலர்கள் உதிர்கின்ற பழநி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் மிக அருமையானது. முருகனது அத்தனை உறுப்புக்களையும் தொகுத்து அளிக்கும் பாட்டு.(1) திருமேனி, (2) ஆறு முகங்கள், (3) தோள்கள், (4) வேல், (5) மயில், (6) கோழி, (7) திருவடிகள்.
* 11 ருத்திரர்கள் பின்வருமாறு: மஹாதேவன், ஹரன், ருத்திரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசான்யன், விஜயன், வீமதேவன், பவோத்பவன், கபாலி, ஸெளம்யன்.

பாடல் 129 - பழநி
ராகம் - மோஹனம்; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தனன தனன தனன தனன     தனன தனன ...... தனதான

கரிய பெரிய எருமை கடவு     கடிய கொடிய ...... திரிசூலன் 
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்     கழிய முடுகி ...... யெழுகாலந் 
திரியு நரியு மெரியு முரிமை     தெரிய விரவி ...... யணுகாதே 
செறிவு மறிவு முறவு மனைய     திகழு மடிகள் ...... தரவேணும் 
பரிய வரையி னரிவை மருவு     பரம ரருளு ...... முருகோனே 
பழன முழவர் கொழுவி லெழுது     பழைய பழநி ...... யமர்வோனே 
அரியு மயனும் வெருவ வுருவ     அரிய கிரியை ...... யெறிவோனே 
அயிலு மயிலு மறமு நிறமும்     அழகு முடைய ...... பெருமாளே.

கறுத்த பெரிய எருமையைச் செலுத்தும் கடுமையும் கொடுமையும் கொண்ட முச்சூலம் ஏந்திய யமன் கோபித்து, நெருக்கி அழுத்தும் பாசக்கயிறோடு உயிர் நீங்கும்படியாக வேகமாய் எழுந்து வரும்பொழுது, திரிகின்ற நரியும், நெருப்பும் உரிமை கோரி நெருங்கி அணுகாமல் என் நிறைவும், அறிவும், உறவும் போன்று விளங்கும் உன் திருவடிகளைத் தந்தருள வேண்டும். பெருமலையாம் இமகிரியின் மகளாம் பார்வதியை மணந்த பரமசிவன் அருளிய முருகோனே, வயல்களில் உழவர்கள் ஏர்க்காலால் உழுகின்ற பழம்பெரும் பழநியில் வீற்றிருப்பவனே, திருமாலும் பிரமனும் அஞ்சி நிற்க, உருவிச் செல்லும்படி அரிதான கிரெளஞ்ச மலைமீது வேலாயுதத்தைச் செலுத்தியவனே, வேலும், மயிலும், வீரமும், ஒளியும், அழகும் கொண்ட பெருமாளே. 

பாடல் 130 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனன தானன தானன தானன     தனன தானன தானன தானன          தனன தானன தானன தானன ...... தனதான

கரிய மேகம தோஇரு ளோகுழல்     அரிய பூரண மாமதி யோமுகம்          கணைகொ லோஅயில் வேலது வோவிழி ...... யிதழ்பாகோ 
கமுகு தானிக ரோவளை யோகளம்     அரிய மாமல ரோதுளி ரோகரம்          கனக மேரது வோகுட மோமுலை ...... மொழிதேனோ 
கருணை மால்துயி லாலிலை யோவயி     றிடைய தீரொரு நூலது வோவென          கனக மாமயில் போல்மட வாருடன் ...... மிகநாடி 
கசட னாய்வய தாயொரு நூறுசெல்     வதனின் மேலென தாவியை நீயிரு          கமல மீதினி லேவர வேயருள் ...... புரிவாயே 
திரிபு ராதிகள் நீறெழ வேமிக     மதனை யேவிழி யால்விழ வேசெயும்          சிவசொ ரூபம கேசுர னீடிய ...... தனயோனே 
சினம தாய்வரு சூரர்கள் வேரற     அமரர் வானவர் வாடிடு தேவர்கள்          சிறைகள் மீளவு மேவடி வேல்விடு ...... முருகோனே 
பரிவு சேர்கம லாலய சீதன     மருவு வார்திரு மாலரி நாரணர்          பழைய மாயவர் மாதவ னார்திரு ...... மருகோனே 
பனக மாமணி தேவிக்ரு பாகரி     குமர னேபதி னாலுல கோர்புகழ்          பழநி மாமலை மீதினி லேயுறை ...... பெருமாளே.

கூந்தல் கரு நிறமான மேகமோ, இருள் படலமோ? முகம் அருமையான சிறந்த முழு நிலவோ? கண்கள் அம்போ, கூர்மையான வேல்தானோ? உதடுகள் சர்க்கரைப் பாகோ? கழுத்து பாக்கு மரத்தை நிகரானதோ, சங்கோ? கை அருமையான சிறந்த தாமரை மலரோ, இளந்தளிரோ? மார்பகம் பொன் நிறமான மேரு மலையோ, பொற் குடமோ? பேச்சு தேனோ? வயிறு, கருணாமூர்த்தி திருமால் துயில் கொள்ளும் ஆலிலையோ? இடுப்பு ஆனது ஈர்க்குச்சியோ, ஒரு நூலோ? என்று சொல்லுமாறு உள்ள பொன் நிறத்து அழகிய மயில் போன்ற விலைமாதர்களை மிகவும் விரும்பி, குற்றமுள்ளவனாய் வயது ஏறி ஒரு நூறு வருடத்துக்கு மேல் வாழ்வதைக் காட்டிலும் மேலானது (என்னவென்றால்) எனது உயிரை நீ இப்போது உன்னுடைய இரண்டு தாமரை போன்ற திருவடிகளில் சேரும்படி அருள் புரிவதுதான். திரிபுரத்தில் உள்ளவர்கள் வெந்து சாம்பராகுமாறும், மிக்கு வந்த மன்மதனை நெற்றிக் கண்ணால் (எரித்து) மாண்டு வீழுமாறும் செய்த சிவ சொரூபனான மகேஸ்வரனின் பெருமை மிக்க மகனே, கோபத்துடன் வந்த அசுரர்கள் வேர் அறும்படியும், அமரரும், விண்ணோர்களும், வாட்டம் உற்று இருந்த தேவர்களும்* சிறையினின்று மீளும்படியும் கூரிய வேலைச் செலுத்திய முருகோனே, அன்பு கொண்டு தாமரைக் கோயிலில் வாழ்கின்ற லக்ஷ்மியின் மார்பைத் தழுவுகின்றவராகிய திருமால், பாவங்களைப் போக்கும் நாராயணர், பழமை வாய்ந்த, மாயையில் வல்லவரும், பெரிய தவத்துக்கு உரியவரும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே. பாம்பாகிய அணிகலத்தை உடைய தேவியும், கருணைக்கு உறைவிடம் ஆனவளும் ஆகிய பார்வதி அம்மையின் குமாரனே, பதினான்கு உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் போற்றும் பழனி மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அமரர் = அமுதம் உண்டு சாவா நிலை பெற்றவர். வானவர் = புண்ணிய மிகுதியால் வான் உலகில் வாழ்பவர். தேவர் = எட்டு வசுக்கள், பன்னிரு ஆதித்தர்கள், பதினொரு ருத்திரர்கள், இரு அச்வனிகள் என்ற முப்பத்தி முத்தேவர்.

பாடல் 131 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனத் தானனத் தனதனத் தானனத்     தனதனத் தானனத் ...... தனதான

கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற்     கயல்விழிப் பார்வையிற் ...... பொருள்பேசிக் 
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்     கலதியிட் டேயழைத் ...... தணையூடே 
செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்     றிறமளித் தேபொருட் ...... பறிமாதர் 
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்     சிவபதத் தேபதித் ...... தருள்வாயே 
திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்     சிறிதருட் டேவருட் ...... புதல்வோனே 
திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்     திருடர்கெட் டோடவிட் ...... டிடும்வேலா 
பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்     படியினிட் டேகுரக் ...... கினமாடும் 
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்     பரிவுறச் சேர்மணப் ...... பெருமாளே.

யானைகளின் இரு கொம்புகள் என்னும்படி உள்ள மார்பகங்களை அசைத்து ஆடி, நல்ல கயல் மீன் போன்ற கண்களின் பார்வை கொண்டே (தமக்குக் கொடுக்க வேண்டிய) பொருள் அளவைப் பேசி, ஆடையை இழுத்துவிட்டும், குலுக் என்ற ஒலியுடன் சிரித்து மயக்கமாகிய குழப்பத்தினைத் தந்தும், (வந்தவரை) அழைத்துப் படுக்கையில் நெருங்கியும், அலங்கரித்த சிற்றிடை துடித்து அசைய, நிரம்பத் தங்கள் திறமைகளைக் காட்டி, பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் சூழ்ச்சிகள் என்னைக் கவராத வண்ணம், இந்தக் கலி யுகத்தில் புகழப்படுகின்ற சிவ பதவியில் என்னைப் பொருந்த வைத்து அருள்வாயாக. திரிபுரம் எனப்படும் அழகிய மலை போன்ற நகரங்கள் எரியும்படி, அருமையான புன்னகையைச் சிறிது அருளிய தேவராகிய சிவபெருமான் பெற்ற மகனே, அலைகடல் கோவென்று கதற, கிரவுஞ்ச மலையும் குலமலைகள் ஏழும் தூளாகும்படியும், கள்வர்களாகிய அசுரர்கள் அழிந்து எங்கெங்கும் ஓடும்படியும் வேலை விட்டு எய்த வேலனே, வாசனை வீசும் பலாப் பழங்களைக் கீறி, நல்ல (மலைப்) படிகளில் போட்டு குரங்கின் கூட்டங்கள் விளையாடும் பழனியில் சிறப்பாக விளங்கி, புகழப்படும் குறப் பெண்ணாகிய வள்ளியை அன்புடன் தழுவிய மணவாளப் பெருமாளே. 

பாடல் 132 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதன தந்த தனதன தந்த     தனதன தந்த ...... தனதான

கருகிய கன்று வரிசெறி கண்கள்     கயல்நிக ரென்று ...... துதிபேசிக் 
கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற     கடிவிட முண்டு ...... பலநாளும் 
விரகுறு சண்ட வினையுடல் கொண்டு     விதிவழி நின்று ...... தளராதே 
விரைகமழ் தொங்கல் மருவிய துங்க     விதபத மென்று ...... பெறுவேனோ 
முருகக டம்ப குறமகள் பங்க     முறையென அண்டர் ...... முறைபேச 
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச     முரணசுர் வென்ற ...... வடிவேலா 
பரிமள இன்ப மரகத துங்க     பகடித வென்றி ...... மயில்வீரா 
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு     பழநிய மர்ந்த ...... பெருமாளே.

கருமை நிறம் படைத்து அகன்று, ரேகைகள் நிறைந்த கண்கள் கயல் மீன்களுக்கு ஒப்பானது என்று புகழ்ச்சிப் பேச்சுக்களைப் பேசி, (விலைமாதரின்) புடவையின் சுருளின் இடையில் அகப்பட்டு, கொடுமையான வாயூறல் என்னும் விஷத்தை உண்டு அனுபவித்து, பல நாட்கள் வஞ்சனையைச் செய்யும் கொடிய வினையாலாகிய உடம்பைச் சுமந்து, விதி போகின்ற வழியே நின்று நான் தளர்ந்து விடாமல், வாசனை வீசுகின்ற மாலைகள் பொருந்திய பரிசுத்தமான, நன்மை செய்யும் திருவடியை என்று பெறுவேனோ? முருகனே, கடம்பனே, குற மகள் வள்ளியின் பங்கனே என்று ஓலம் செய்து தேவர்கள் முறையிட, பழைய கடல் போல பரந்து வருகின்ற, வலிமையும் வஞ்சகமும் கொண்ட பகைவர்களாகிய அசுரர்களை வெற்றி கொண்ட வடிவேலனே, நறுமணம் போல் இன்பத்தைத் தருவதும், பச்சை நிறமானதும், பரிசுத்தமானதும், வலிமையும் நன்மையும் உடையதும் ஆகிய, வெற்றி கொண்ட மயில் மீது அமர்ந்த வீரனே, தலை மயிரைப் பறிக்கின்ற இழிந்தோராகிய சமணர்களை (திருஞானசம்பந்தராக வந்து) கழு ஏறச் செய்து, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 133 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன     தனத்ததன தனத்ததன          தனத்தனா தனதன ...... தனதான

கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய     கடைக்கணொடு சிரித்தணுகு          கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர் 
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை     கனத்தவிரு தனத்தின்மிசை          கலக்குமோ கனமதில் ...... மருளாமே 
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி     யுனைப்புகழு மெனைப்புவியில்          ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே 
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி     யுரைக்கமறை யடுத்துபொருள்          உணர்த்துநா ளடிமையு ...... முடையேனோ 
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு     படிக்கடலு மலைக்கவல          பருத்ததோ கையில்வரு ...... முருகோனே 
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல     பணிப்பனிரு புயச்சயில          பரக்கவே இயல்தெரி ...... வயலூரா 
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை     செயித்தருளு மிசைப்பிரிய          திருத்தமா தவர்புகழ் ...... குருநாதா 
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்     திருப்பழநி மலைக்குளுறை          திருக்கைவே லழகிய ...... பெருமாளே.

கரும்பு வில்லில் வாசனை உடைய மலர்க் கணைகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தியது போல் கடைக் கண் நோக்குடன் சிரித்து நெருங்கி, எண்ணத்தினால் தந்திரச் செயல்கள் புரிகின்ற இளம் மாதர்களின், கோபமுள்ள யானையும் திடுக்கிடும்படி செழிப்புற்று மிகவும் எதிர்த்து, மலை போல் பருத்துள்ள இரண்டு மார்பகங்களின் மேல் கலந்து கொள்ளும் மோக வெறியில் மயங்காமல், மனம் ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும் எண்ணம் என் மனதில் உண்டாகும்படி உனது திரு உள்ளத்தில் நினைத்து அருள் செய்து, உன்னைப் புகழ்ந்து பாடும் என்னை நிகரில்லாத புலவனாகும் வகையை உன்னுடைய திருவருளால், ருத்திர மூர்த்தியும் விளக்கம் பெற வேண்டி, எனக்கு உபதேசித்து அருளுக என்று உன்னை அணுகிக் கேட்க, நீ அவருக்கு உபதேசித்த அந்த ரகசியப் பிரணவப் பொருளை அடியேனுக்கும் உணர்த்தும்படியான நாள் ஒன்றை அடியேனும் பெறுவேனோ? (கிரெளஞ்ச) மலையையும், பெரிய உருவம் உள்ள அரக்கர்களையும், ஒலித்து எழுகின்ற, பூமியிலுள்ள ஏழு கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருமையான மயிலில் மீது வரும் முருகனே, பதிக்கப்பட்ட மரகதத்துடன் ரத்தின மணிகள் வரிசையில் அமைக்கப்பட்ட பலவகையான அணிகலன்களை அணிந்துள்ள, மலை போன்ற பன்னிரண்டு புயங்களை உடையவனே, விரிவாகவே இலக்கியத் தமிழைத் தெரிந்த வயலூர் முருகனே, திருப்புகழை உரைப்பவர்களுடையவும் படிப்பவர்களுடையவும் வறுமையும் பகைமையும் தொலைந்து வெற்றி தந்தருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய சிறந்த தவத்தினர் புகழ்கின்ற குருநாதனே, வில் ஏந்திய குறவர்களுடைய ஓலைக் குடிசையிலும், புகை போன்ற கருமையுடைய மேகங்கள் அருகில் தவழ்ந்து செல்லுகின்ற அழகிய பழனி மலையிலும் வீற்றிருக்கும், திருக்கையில் வேல் ஏந்தும் அழகிய பெருமாளே. 
மடமாதர் கலக்குமோ கனமதில் மருளாதே ஒருத்தனாம் வகைதிரு வருளாலே உணர்த்துநா ளடிமையு முடையேனோ பருத்ததோ கையில்வரு முருகோனே பரக்கவே யியல்தெரி வயலூரா திருத்தமா தவர்புகழ் குருநாதா திருக்கைவே லழகிய பெருமாளே.

பாடல் 134 - பழநி
ராகம் - விஜயநாகரி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 - எடுப்பு - 1/2 தள்ளி

தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த ...... தனதான

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து     கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே 
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து     கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி 
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று     அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் 
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று     அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ 
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்     உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே 
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க     உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே 
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற     பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா 
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று     பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.

கருவிலே ஓர் ஊருவாகி வந்து பிறந்து, வயதுக்கு ஒத்தபடி வளர்ந்து, பல கலைகள் கற்றறிந்து, மன்மதனுடைய சேட்டையினால், கருங் கூந்தலையுடைய பெண்களின் பாதச்சுவடு என் மார்பில் புதையும்படி அழுந்தி, கவலைகள் பெரிதாகி மனம் நொந்து, மிகவும் வாட்டம் அடைந்து, ஹர ஹர சிவாய என்று நாள்தோறும் நினையாது நின்று, (செளரம், காணாபத்யம், கெளமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று) ஆறு சமயங்களின் உண்மை ஒன்றுகூட அறியாதவனாய், உணவு தருவோர்கள் தம்முடைய வீடுகளின் முன் வாசலில் நின்று, தினந்தோறும் வெட்கத்தை விட்டு அழிந்து போவேனோ? பாம்பின் படத்தின்மேல் கண்வளர்ந்த (ஆதிசேஷன் மீது துயின்ற) பெருமை மிக்க பெருமாள், ஸ்ரீரங்கத்தில் உள்ளவர், உலகை அளந்த திருமால் மகிழ்ச்சி கொள்ளும் மருமகனே (தாய், தந்தை என்ற) இரண்டு வம்சாவளியிலும் பிரகாசமாகவும் பரிசுத்தமாகவும் விளங்குபவனே வெற்றிக் கவிராஜ சிங்கமாக (சம்பந்த மூர்த்தியாக) சொந்த ஊரான புகலியூர் (சீகாழி) பதியில் அன்று வந்து தோன்றியவனே பரவை நாச்சியார் வீட்டுக்கு (சுந்தரருக்காக) அன்று ஒரு காலத்தில் தூது நடந்த பரம சிவனுடைய அருளால் வளர்ந்த குமரேசப் பெருமானே பகையாய் நின்ற அசுரர் சேனைகளை மடிவித்து, தேவர்களை சிறையினின்றும் மீளும்படி வென்று, பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. 

பாடல் 135 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனன தானன தானா தானா     தனன தானன தானா தானா          தனன தானன தானா தானா ...... தனதான

கலக வாள்விழி வேலோ சேலோ     மதுர வாய்மொழி தேனோ பாலோ          கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய் 
களமு நீள்கமு கோதோள் வேயோ     உதர மானது மாலேர் பாயோ          களப வார்முலை மேரோ கோடோ ...... இடைதானும் 
இழைய தோமலர் வேதா வானோ     னெழுதி னானிலை யோவாய் பேசீ          ரிதென மோனமி னாரே பா¡£ ...... ரெனமாதர் 
இருகண் மாயையி லேமூழ் காதே     யுனது காவிய நூலா ராய்வே          னிடர்ப டாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும் 
அலைவி லாதுயர் வானோ ரானோர்     நிலைமை யேகுறி வேலா சீலா          அடியர் பாலரு ளீவாய் நீபார் ...... மணிமார்பா 
அழகு லாவுவி சாகா வாகா     ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா          ரயலு லாவிய சீலா கோலா ...... கலவீரா 
வலபை கேள்வர்பி னானாய் கானார்     குறவர் மாதும ணாளா நாளார்          வனச மேல்வரு தேவா மூவா ...... மயில்வாழ்வே 
மதுர ஞானவி நோதா நாதா     பழநி மேவுகு மாரா தீரா          மயுர வாகன தேவா வானோர் ...... பெருமாளே.

கலகத்தை விளைவிக்கின்ற ஒளி பெற்ற கண்கள் வேலாயுதமோ, சேல் மீனோ? இனிய வாய்ச் சொல் தேனோ, பாலோ? கரு நிறமான நீண்ட கூந்தல் மேகமோ, காடோ? வாய் பவளமோ? கழுத்து நீண்ட பாக்கு மரமோ? தோள் மூங்கிலோ? வயிறானது திருமால் பள்ளி கொண்ட அழகிய ஆல் இலையோ? சந்தனக் கலவை பூசிய கச்சணிந்த மார்பகம் மேரு மலையோ, யானைத் தந்தமோ? இடைதான் நூலோ, தாமரை மேல் வீற்றிருக்கும் பிரம தேவன் இடையை எழுதவில்லையோ? வாய் திறந்து பேசுங்கள். இது என்ன மெளனம் சாதிக்கின்றீர்கள், மின் போன்ற பெண்மணிகளே பாருங்கள், என்று பேசி விலைமாதர்களுடைய இரண்டு கண்கள் என்னும் மாயைக் கடலில் முழுகாமல், உன்னுடைய பிரபந்த நூல்களை ஆராய்வேன். இடர்கள் எவையும் என்னைப் பீடிக்காத வகையில் உனது திருவருள் நிறைந்த வாழ்வைத் தந்தருள வேண்டும். அலைச்சல் இல்லாத வண்ணம், உயர்வு பெற்ற தேவர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலனே, ஒழுக்கம் நிறைந்தவனே, அடியார்களுக்குத் திருவருள் பாலிப்பவனே, கடப்ப மாலை அணிந்த அழகிய மார்பனே, அழகு பொலியும் முருகக் கடவுளே, கம்பீரம் நிறைந்த (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னலை ஒத்த தேவயானை மகிழ்கின்ற கணவனே, உன்னைப் பணிந்து தாழ்பவர்களுடைய அருகிலே உலாவும் சீலனே, ஆடம்பர வீரனே, வல்லபையின் கணவராகிய விநாயகருடைய தம்பியே, காட்டில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, புதிய தாமரை மீது எழுந்தருளி உள்ள தேவனே*, முதுமை இல்லாத மயிலின் செல்வமே, இனிய ஞான வழிகளில் பொழுது போக்கும் நாதனே, பழனி மலையில் வீற்றிருக்கும் குமாரனே, தீரனே, மயில் வாகன தேவனே, தேவர்களின் பெருமாளே. 
* முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் அழகிய தாமரை மலர் மீது அழகே ஒரு வடிவாய் குழந்தை உருவாகத் தோன்றி அருளினார் என்பதைக் குறிக்கும்.

பாடல் 136 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனனத் தனதன தானன தானன     தனனத் தனதன தானன தானன          தனனத் தனதன தானன தானன ...... தனதான

கலகக் கயல்விழி போர்செய வேள்படை     நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்          கனியக் கனியவு மேமொழி பேசிய ...... விலைமாதர் 
கலவித் தொழினல மேயினி தாமென     மனமிப் படிதின மேயுழ லாவகை          கருணைப் படியெனை யாளவு மேயருள் ...... தரவேணும் 
இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி     குழையத் தழுவிய மேன்மையி னாலுயர்          இசைபெற் றருளிய காமுக னாகிய ...... வடிவோனே 
இதமிக் கருமறை வேதிய ரானவர்     புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்          இசையத் தருமநு கூலவ சீகர ...... முதல்வோனே 
நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்     செவியிற் பிரணவ மோதிய தேசிக          நிருதர்க் கொருபகை யாளியு மாகிய ...... சுடர்வேலா 
நிமலக் குருபர ஆறிரு பார்வையும்     அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்          நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு ...... முரியோனே 
பலவிற் கனிபணை மீறிய மாமர     முருகிற் கனியுட னேநெடு வாளைகள்          பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய ...... வகையாலே 
பழனத் துழவர்க ளேரிட வேவிளை     கழனிப் புரவுகள் போதவு மீறிய          பழநிச் சிவகிரி மீதினி லேவளர் ...... பெருமாளே.

கலகத்தைத் தரும் மீன் போன்ற கண்கள் போர் புரிய, மன்மதனுடைய சேனையாகிய பெண்கள் கூட்டத்தின் நடுவிலும் பக்கங்களிலும் வரும் பாவிகளும், கோபத்தை உடையவர்களும், இனிக்க இனிக்கப் பேச்சுக்களைப் பேசுபவர்களும் ஆகிய வேசியருடன் சேர்ந்திருக்கும் தொழிலே நன்மையானது, இவ்வுலகில் இனிது என்று எனது மனம் இப்படி தினந்தோறும் அலையாதவாறு, உனது கருணை வழியே என்னை ஆண்டு அருள் புரிவாயாக. இலவ மலருக்கு உறவு என்னும்படி சிவந்த அதரத்தை உடைய வள்ளி நாயகி உள்ளம் குழையுமாறு மனம் உருகித் தழுவிய சிறப்பினால், உயர்ந்த புகழைப் பெற்று உயிர்களுக்கு அருள் புரிந்த காதலன் என வேடம் கொண்ட அழகனே, நன்மை மிகுந்த, அரிய வேதங்களைக் கற்ற மறையோர் வேதங்களைச் சொல்ல, அன்புடனே அவர்களுக்கு அருட் செல்வங்களை இசைந்து தருகின்ற அனுகூலனே, மனதைக் கவர்பவனே, முதல்வனே, மதியைச் சடையின் மீது அணிந்துள்ள மூலப் பொருளாகிய சிவபெருமானுடைய காதில் பிரணவப் பொருளை ஓதிய குரு மூர்த்தியே, அசுரர்களுக்கு ஓர் ஒப்பற்ற பகைவனாய் வந்த, ஒளி வீசும் வேலனே, பரிசுத்தமான குரு மூர்த்தியே, பன்னிரு திருக்கண்களும் அருளைப் பொழிய அடியார்களை நாள் தோறும் ஒப்பில்லாதவர் என்னும்படி உள்ளம் மிகவும் மகிழும் உரிமை உடையவனே, பலாப்பழங்கள், கிளைகள் மிகுந்த மாமரங்களின் வாசனையுடன் பழுத்த பழங்களுடன், நீண்ட வாளை மீன்கள் பாய்வதால் தனித் தனியே உதிர்கின்ற சோலைகள் பொருந்தி உள்ள தன்மையாலே, வயலில் உழவர்கள் ஏரிட்டு விளைகின்ற வயல்களின் செழுமைகள் மிகவும் மேம்படுகின்ற பழனிச் சிவகிரியின் மீது வீற்றிருந்து அருளும் பெருமாளே. 

பாடல் 137 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதன தத்தத் தனந்த தந்தன     தனதன தத்தத் தனந்த தந்தன          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான

கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு     கனதனம் விற்கச் சமைந்த மங்கையர்          கயல்கள்சி வப்பப் பரிந்து நண்பொடு ...... மின்பமூறிக் 
கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு     மவசமி குத்துப் பொருந்தி யின்புறு          கலகம்வி ளைத்துக் கலந்து மண்டணை ...... யங்கமீதே 
குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை     கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்          குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி ...... லங்கம்வேறாய்க் 
குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர     முகதல முத்துப் பொலிந்தி லங்கிட          கொடியம யற்செய்ப் பெருந்த டந்தனில் ...... மங்கலாமோ 
இலகிய சித்ரப் புனந்த னிந்துறை     குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி          னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் ...... கந்தவேளே 
எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி     யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு          மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய ...... செங்கைவேலா 
பலவித நற்கற் படர்ந்த சுந்தரி     பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி          பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு ...... கின்றபாலைப் 
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்     பகரென இச்சித் துகந்து கொண்டருள்          பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.

கலவி இன்பத்தில் ஆசைப்பட்டு பரிந்து (தங்கள் வீட்டு வாயிலில்) நின்று இரண்டு பருத்த மார்பகங்களை விற்பதற்கு ஒப்புதலாகி நிற்கும் விலை மகளிரின் கயல் மீன் போன்ற கண்கள் சிவக்கும்படி அவர்கள் மீது அன்பு கொண்டு நட்புடன் இன்பத்தில் அழுந்தி, கொவ்வைப் பழம் போன்ற இதழ்களை அடிக்கடி உண்டு, அச்செயல்களால் தன் வசம் இழத்தல் அதிகப்பட்டு காம லீலைகளில் பொருந்தி இன்பம் உறுகின்றபின் மறுபடியும் ஊடல் கொண்டு பின் கலந்தும், நெருங்கிய பஞ்சு அணைகளுடன் கூடிய கட்டிலின் மேல் குலவுகின்ற பலமுள்ள கைகளோடும் அங்கு அணைந்து, கொடி போலும் மெல்லிய இடை மிகவும் துவண்டு, குளிர்ந்த மேகம் போன்ற அளக பாரக் கூந்தல் கட்டு அவிழவும், முன்னிருந்த உடம்பின் பொலிவு வேறுபடவும், அடையாளமாகவும், வட்டமாகவும் நெருக்கமாகவும் உள்ள குங்குமப் பொட்டுள்ள முகத்தில் (முத்துப் போன்ற) வேர்வைத் துளி பொலிந்து விளங்கிடவும், தீய காம மயக்கத்தை உண்டு பண்ணும் பெரிய குளத்தில் விழுந்து மழுங்கிப் போகலாமா? விளங்கும் அழகிய தினைப் புனத்தில் தனித்திருந்த குறமகளாகிய வள்ளி, கச்சு அணிந்த மார்பகங்களை உடைய மின்னொளி போன்ற வள்ளியின் இனிமை உள்ள தாமரை ஒத்த பாதங்களில் பணிந்தருளிய கந்த வேளே, ஏழு கடல்களும் வற்றிப் போகும்படி, பெரிய பொல்லாத கிரெளஞ்ச மலை இடிந்து விழ, மிகுந்த வேகத்தை வெளிப்படுத்திக் கொண்டு வந்த பகைவர் பதைபதைக்க அழிவு செய்து விளக்கமுற்ற வேலினைச் சிவந்த கையில் ஏந்தினவனே, பல விதமான நல்ல கற்புக் குணங்கள் மிக்க அழகியும், நன்கு பயின்ற இமய மலை அரசன் ஈன்ற செழிப்பான கொடி போன்ற உமா தேவியின் திருமுலையில் மிக்கு நிறைந்த குணமுள்ள சிவஞான அமுதத்தை, பல திக்குகளில் உள்ளவர்களும் மெச்சிப் புகழும்படி சிறந்த தமிழ்ப் பாக்களை பாடுக என்று கூறிக் கொடுக்க, (அப்பாலை) விருப்பமுடனும் மகிழ்ச்சியுடனும் உட்கொண்டு (தேவாரத்தை) அருளிய திருஞானசம்பந்தனே, பழனி மலை மீது விளங்கி நின்றருளும் தம்பிரானே. 

பாடல் 138 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தத்த தான தனதனன தத்த தான     தனதனன தத்த தான ...... தனதான

கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய     கபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர் 
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு     கலகலென மிக்க நூல்க ...... ளதனாலே 
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி     தெரிவரிய சித்தி யான ...... வுபதேசந் 
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு     திருவடியெ னக்கு நேர்வ ...... தொருநாளே 
கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு     குரகதமு கத்தர் சீய ...... முகவீரர் 
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி     குலவியிட வெற்றி வேலை ...... விடுவோனே 
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார     பரிமளத னத்தில் மேவு ...... மணிமார்பா 
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு     பழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே.

தாம் கற்ற கலைகளைக் கொண்டு, பெளத்தர்களும், விருப்பமான கிரியைகளைச் செய்வதே நியதி என்று கருதும் கருமவாதிகளும், முகமதியர்களும், மாயாவாதிகளும், கபில முனிவர் நிறுவிய சாங்கியர்களும், சொல்லப்பட்ட அந்தக் காணாபத்யர்களும், உலகாயதர்களாகிய சமூகவாதிகளும், கலகம் புரியும் தர்க்கவாதிகளான வாம மதத்தினரும், பைரவர்களும், தம்முடன் மாறுபட்ட கொள்கையுடன் சத்தத்துடன் அதிக விதமான நூல்களின் மேற் கோள்களுடன் சண்டை இட்டு, எதிர் தாக்கி வாது செய்தாலும், ஒருவருக்குமே உண்மை இதுதான் என்று தெரிதற்கு அரிதான, வீடு தரும் பொருளான உபதேசத்தை, யான் அறியும்படி விளக்கி ஞான தரிசனத்தையும் அருளி, மேம்பட்ட உனது திருவடியை எனக்குத் தந்தருளும் நாள் உண்டோ? கொலைகள் நேரும்படியாக எதிர்த்து வந்த கோரமான யானை முகமுடைய தாரகாசுரனுடன் குதிரை முகமுடையவர்கள், சிங்க முகம் உடையவர்கள் ஆகிய பல அசுர வீரர்களின் குறைபட்ட உடலை எடுத்து வீசி எறிந்து, பேயும் பத்ர காளியும் மகிழ்ச்சி அடைந்து வாயால் குலவை ஒலி (நாவை உதடுகளுக்கு இடையே வேகமாக அசைத்து எழுப்பும் ஒலியை) எழுப்ப, வெற்றி வேலைச் செலுத்தியவனே, நல்ல விளைச்சல் இருந்த தினைப் புனத்தில் உலாவுகின்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் அழகிய, கனத்த, வாசனையுடன் கூடிய மார்பினைத் தழுவிய அழகிய மார்பனே, ஒன்றோடொன்று போர் செய்து கொண்டு மிக்கெழுந்த பெண் குரங்குகள் மழை பொழியும் மேகத்தைக் கண்டு அஞ்சி ஏறி ஒளிந்து கொள்ளும் பழனி மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 

பாடல் 139 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த     தனதனன தத்த தந்த ...... தனதான

களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து     கயலொடுப கைத்த கண்கள் ...... குழைதாவக் 
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து     கடியிருளு டுக்கு லங்க ...... ளெனவீழ 
முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப     முருகிதழ்சி வப்ப நின்று ...... விலைகூறி 
முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து     முடுகுமவ ருக்கி ரங்கி ...... மெலிவேனோ 
இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து     இனியபொரு ளைப்ப கர்ந்த ...... குருநாதா 
இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப     எனதுதலை யிற்ப தங்க ...... ளருள்வோனே 
குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து     குமரசிவ வெற்ப மர்ந்த ...... குகவேலா 
குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த     குறவர்மக ளைப்பு ணர்ந்த ...... பெருமாளே.

கலவைச் சந்தனம் அணிந்த மார்பகத்தைத் திறந்து, முல்லை போன்ற பற்களைக் காட்டி, கயல் மீனோடு மாறுபட்ட கண்கள் (செவிகளிலுள்ள) தோடுகளின் மீது தாவவும், கருத்த கூந்தலை வாரி ஒழுங்கு படுத்தி, (மலர்கள்) சொருகப்பட்ட கொண்டை கலைவதால், இருளை நீக்குகின்ற நட்சத்திரக் கூட்டங்களைப் போல் உதிரவும், பூரணச் சந்திரனைப் போல சிறந்த ஒளி பொருந்திய முகத்தை மினுக்கி, இன்பம் தரும் வாசனையுள்ள இதழ்கள் சிவக்கும்படி (வாயிற்படியில்) நின்று விலை பேசி, (வந்தவருடைய) பொருள் யாவும் தமது கையில் வந்த பின் அழகிய புடவையைத் திறந்து நெருங்கி உறவாடும் வேசியர்களுக்கு (ஈடுபட்டு) இரங்கி மெலிந்து நிற்பேனோ? பிறைச் சந்திரனையும், கொன்றை மலரையும், தும்பையையும், பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானுக்கு இணங்கி, இனிமை வாய்ந்த (பிரணவமாகிய) மூலப் பொருளை உபதேசித்த குரு நாதனே, யானை முகக் கணபதிக்குப் பிரியமான தம்பியே, நறுமணமுடைய கடப்ப மாலையை அணிபவனே, எனது தலையில் உனது திருவடியைச் சூட்டியவனே, குழந்தை என்று எடுத்து மகிழ்ந்த உமா தேவியின் திருமுலைகளைப் பற்றி (ஞானப்) பாலை உண்ட குமரனே, சிவ மலையில் (பழநி மலையில்) வீற்றிருக்கும் குகனே, வேலனே, சிறு குடிசைக்கு அருகில் நெருங்கியிருந்த பரண் அமைந்த தினைப் புனத்திலிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை மணந்த பெருமாளே. 

பாடல் 140 - பழநி
ராகம் - .....; தாளம் -

தனத்த தனதன தனதன தந்தத்     தனத்த தனதன தனதன தந்தத்          தனத்த தனதன தனதன தந்தத் ...... தனதான

கறுத்த குழலணி மலரணி பொங்கப்     பதித்த சிலைநுத லணிதில தம்பொற்          கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் ...... சிரமான 
கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்     குவட்டு முலையசை படஇடை யண்மைக்          கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் ...... கொடிபோலச் 
சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்     குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்          டிருக்கு நடைபழ கிகள்கள பங்கச் ...... சுடைமாதர் 
திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்     குவட்டி யவர்வலை யழலுறு பங்கத்          திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் ...... தவிர்வேனோ 
பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்     செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்          படித்த மதியற லரவணி சம்புக் ...... குருநாதா 
பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்     கொதித்த அலைகட லெரிபட செம்பொற்          படைக்கை மணியயில் விடுநட னங்கொட் ...... கதிர்வேலா 
தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்     குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்          சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற் ...... றிருபாதா 
சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்     குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்          சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் ...... பெருமாளே.

கரிய கூந்தலில் அணியப்பட்ட மலர் வரிசை நன்கு விளங்கவும், வில்லைப் போன்ற நெற்றியில் பதித்துள்ள அழகிய பொட்டும், ஒளி பொருந்திய அம்புக்கு ஒத்த, சுழற்சி கொண்டு எழும் தாமரை மலர் போன்ற, கண்களும், கமுகுக்கு ஒத்த கழுத்தில் உள்ள மணி மாலையும், வளைகளும், குண்டலங்களும் ஒளி விட்டு வீசவும், மலை போன்ற மார்பகங்கள் அசையவும், இடுப்பை ஒட்டினாற்போல அணிந்துள்ள சேலை இறுகக் கட்டியபடியால் வஞ்சிக் கொடியைப் போல் இடை நெளியவும், மெல்லிய கழுத்திலிருந்து பொங்கி எழும் இன்ப மதம் ஒழுகும் இனிய சொற்கள் குயில்களின் குரலைப் போல் ஒலிக்க, அழகிய மயில்கள் அன்னங்கள் இவைகளின் நடை போலக் காணப்படும் நடையைப் பழகுபவரும், கலவைச் சாந்து படும் இறுகிய கச்சை அணிந்த விலைமாதர்கள் ஆடவரைத் திகைக்கச் செய்கின்ற ஆற்றலோடு பொருளைப் பறிக்கும் ஒளி பொருந்திய கண்களை வளைத்து தம்முடைய வலையாகிய நெருப்பு ஒத்த துன்பத்தில் திடமாக வீழச் செய்யவல்ல கீழானவருடைய வழியில் செல்வதால் கிடைக்கும் இன்பத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? கண்களுடன் விளங்கும், பறிக்கப்பட்ட பிரம கபாலத்தையும், மழுவாயுதம், மான் இவைகளை ஏந்திய திருக்கைகள் இலங்கும் சிவபெருமான், புது கொன்றை தும்பை மலர்கள், பொருந்திய சந்திரன், கங்கை நதி, பாம்பு இவைகளைச் சடையில் அணிந்த சம்புவுக்கு குருநாதனே, பருத்த அசுரர்களின் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் ஆகிய மலைகள் மடியவும், கொதித்த அலை வீசும் கடல் எரியவும், செவ்விய அழகிய படைகளை ஏந்தும் திருக் கரத்தினின்று மணி கட்டிய வேலாயுதத்தைத் தெரிந்து செலுத்தி வெற்றி நடனம் புரியும் கதிர்வேலனே, கண் தெறித்து ஆதி சேஷனது உடம்பு நிமிரவும், அழகிய ஒளி பொருந்திய சிகரங்களை உடைய ஒள்ளிய திசைக் கிரிகளும் பொடியாகும்படியாக, வேகத்தில் சிறந்த மயிலின் மீது ஏறி உலகை வலம் வந்த அழகிய பாதங்களை உடையவனே, சிறந்த அழகு பொருந்திய லக்ஷ்மியின் புதல்வியும், வஞ்சிக் கொடி போன்ற குறமகளும், உமா தேவியின் மருமகளுமாகிய வள்ளி நாயகியின் மார்பாகிய மலையைத் தழுவும் குகனே, சிவ மலையில் (* பழநியில்) வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* இடும்பன் காவடியாகக் கொண்டு வந்த சிவ மலை, சக்தி மலைகளுள், முருகன் வீற்றிருக்கும் பழனி மலை, சிவமலை எனப்படும் - பழனி புராணம்.

பாடல் 141 - பழநி
ராகம் - ...; தாளம் -

தனன தந்தன தந்த தானன     தனன தந்தன தந்த தானன          தனன தந்தன தந்த தானன ...... தந்ததான

கனக கும்பமி ரண்டு நேர்மலை     யெனநெ ருங்குகு ரும்பை மாமணி          கதிர்சி றந்தவ டங்கு லாவிய ...... முந்துசூதம் 
கடையில் நின்றுப ரந்து நாடொறு     மிளகி விஞ்சியெ ழுந்த கோமள          களப குங்கும கொங்கை யானையை ...... யின்பமாக 
அனைவ ருங்கொளு மென்று மேவிலை     யிடும டந்தையர் தங்கள் தோதக          மதின்ம ருண்டுது வண்ட வாசையில் ...... நைந்துபாயல் 
அவச மன்கொளு மின்ப சாகர     முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி          தருப தங்கதி யெம்பி ரானருள் ...... தந்திடாயோ 
தனத னந்தன தந்த னாவென     டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை          தகுதி திந்திகு திந்த தோவென ...... வுந்துதாளந் 
தமர சஞ்சலி சஞ்ச லாவென     முழவு டுண்டுடு டுண்டு டூவென          தருண கிண்கிணி கிண்கி ணாரமு ...... முந்தவோதும் 
பணிப தங்கய மெண்டி சாமுக     கரிய டங்கலு மண்ட கோளகை          பதறி நின்றிட நின்று தோதக ...... என்றுதோகை 
பவுரி கொண்டிட மண்டி யேவரு     நிசிச ரன்கிளை கொன்ற வேலவ          பழநி யங்கிரி யின்கண் மேவிய ...... தம்பிரானே.

இரண்டு பொன் குடத்துக்கு ஒப்பான மலைக்கு நிகர் என்று கூறும்படி நெருங்கியுள்ள இள நீர் குரும்பைப் போன்று, அழகிய மணிகள் ஒளி சிறந்த மாலைகளில் விளங்கினவாய், முற்பட்ட சூதாடு கருவிகளைப் போன்ற மார்பகங்களுடன், வீட்டு வாயிலில் நின்று யாரை வசப்படுத்தலாம் என்ற பரபரப்பு கொண்டு, ஒவ்வொரு நாளும், இளகி மேல் எழுந்துள்ள அழகிய கலவைச் சாந்து அணிந்த குங்குமம் விளங்கும் யானையைப் போன்ற மார்பகங்களை இன்பத்துடன் எல்லாரும் கொள்ளுங்கள் என்று விலைக்கு விற்கும் விலைமாதர்களுடைய மாய்மாலச் செயலில் மயங்கி வாடி, உள்ளம் நசுங்கி, படுக்கையில் பரவசம் போன்ற மயக்கத்தை அதிகமாகக் கொள்ளும் இன்பக் கடலில் முழுகும் வஞ்சக மனத்தைத் தொலைக்கவல்ல உனது திருவடியாகிய புகலிடத்தை, எம்பிரானே, நீ அருளமாட்டாயோ? பேரிகை தனதனந்தன தந்தனா டிகுகு டிங்குகு டிங்கு என்று முழங்க, வீச்சுடன் தாளவாத்தியங்கள் தகுதி திந்திகு திந்த தோவென்று சப்திக்க, டமருகம் என்ற வாத்தியம் சஞ்சலி சஞ்சலா என்று ஒலிக்க, முரசு டுண்டுடு டுண்டு டூவென்று அடிக்கப்பட, சிறிய சதங்கை கிண்கிண் என்று முற்பட்டு ஒலிக்க, பாம்பைத் தனது பாதத்தில் பூண்டதாய், எட்டு திசைகளில் உள்ள யானைகள் யாவும், உருண்டை வடிவமான அண்டங்களும் நடுங்கி நிற்கவும், தோகை மயில் தோ தக என்ற ஒலிக் குறிப்புடன் நடனம் புரிய, நெருங்கி வந்த அசுரனாகிய சூரனது கூட்டத்தைக் கொன்ற வேலவனே, அழகிய பழனி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 

பாடல் 142 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனத்ததனத் தனத்ததனத்     தனத்ததனத் தனத்ததனத்          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

கனத்திறுகிப் பெருத்திளகிப்     பணைத்துமணத் திதத்துமுகக்          கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய் 
கவட்டையுமெத் தடக்கிமதர்த்     தறக்கெருவித் திதத்திடுநற்          கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந் 
தனத்தியர்கட் கிதத்துமிகுத்     தனற்குண்மெழுக் கெனப்புவியிற்          றவித்திழிசொற் பவக்கடலுற் ...... றயர்வாலே 
சலித்தவெறித் துடக்குமனத்     திடக்கனெனச் சிரிக்கமயற்          சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோ 
புனத்தின்மலைக் குறத்தியுயர்த்     திருக்குதனக் குடத்தினறைப்          புயத்தவநற் கருத்தையுடைக் ...... குகவீரா 
பொருப்பரசற் கிரக்கமொடுற்     றறற்சடிலத் தவச்சிவனிற்          புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதா 
சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்     திகைத்துவிழக் கணப்பொழுதிற்          சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் ...... துடையோனே 
செருக்கொடுநற் றவக்கமலத்     தயற்குமரிக் கருட்புரிசைத்          திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.

பாரமுள்ளதாய், அழுத்தம் உள்ளதாய், பெருத்ததாய், நெகிழ்ச்சி உள்ளதாய், எழுச்சி உடையதாய், நறு மணம் வீசுவதாய், இதம் தருவதாய், நுனி கரு நிறம் உடையதாய், பரப்புள்ளதாய், மேரு மலைக்கு ஒப்பானதாய், கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அறக் கெருவித்து இதத்திடு நல் கலைச் சவுளித் தலைக் குலவிக் களி கூரும் கபடத்தை மிகவும் உள்ளடக்கியதாய், செழிப்புள்ளதாய், மிக்க ஆடம்பரம் உள்ளதாய், இன்பம் தருமாறு நல்ல ஆடையையும், அணி கலன்களுடன் மேற்கொண்டதாய், இன்பம் மிகும் மார்பகங்களை உடைய பொது மகளிர் கண்களுக்கு இன்பத்துடன் ஈடுபட்டு, நெருப்பில் இட்ட மெழுகைப் போல் பூமியில் தவிப்புண்டு, இழிவான சொல்லுக்கு இடமான பிறவிக் கடலில் (நீந்த முடியாமல்) ஏற்பட்ட சோர்வினால் அலுத்த வெறியில் கட்டுண்ட மனத்தையுடைய கீழ் மகன் என்று (உலகோர்) சிரிக்க, (வேசியர்) மயக்கத்துக்கும் கோபத்துக்கும் வசை மொழிகளுக்கும் இணக்கம் உடையவனாக இருக்கக் கடவேனோ? தினைப் புனத்திலிருந்த (வள்ளி) மலைக் குறத்தியாகிய வள்ளியின் சிறந்த கண்களும், குடம் போன்ற மார்பகங்களும் படும் மணம் வீசும் புயத்தவனே, நல்ல எண்ணத்தை உடைய குக வீரனே, மலை அரசனான இமவானிடம் அன்புடன் (அவனது நாட்டிற்குச்) சென்ற கங்கையைத் தரித்த சடை முடியை உடைய அந்தச் சிவனிடத்து உள்ள ஞானாம்பாளுக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கும் குழந்தைநாதனே, கோபத்துடன் எதிர்த்து வந்த துஷ்ட அரக்கர்களை திகைப்புண்டு விழும்படி, ஒரு நொடிப் பொழுதில் அழித்திட்ட, நல்ல ஒளி வீசும் கைப்படையாகிய வேலை உடையவனே, களிப்புடன் நல்ல தவம் நிறைந்த தாமரைப் பீடத்துப் பிரமனுக்கும், திருமாலுக்கும் அருள் பாலித்தவனே, மதில் சூழ்ந்த திருப் பழனி மலையில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 

பாடல் 143 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனனா தனந்தனத் தனனா தனந்தனத்     தனனா தனந்தனத் ...... தனதான

கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்     புரமா ரணந்துளுத் ...... திடுமானார் 
கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்     பொருளே யிழந்துவிட் ...... டயர்வாயே 
மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்     டறவே யுலந்துசுக் ...... கதுபோலே 
வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்     பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ 
புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்     புணர்கா தல்கொண்டஅக் ...... கிழவோனே 
புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்     டெழவே லெறிந்தவுக் ...... கிரவீரா 
தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச்     சிறுகீ தசெம்பதத் ...... தருளாளா 
சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத்     திருவா வினன்குடிப் ...... பெருமாளே.

பாரத்துடன் எழுந்து மலை போல் உயர்ந்து, கற்பூரம் முதலியன பூசப்பட்டு, மரணத்தைத் தரவல்ல (மந்திர வித்தை கொண்டது போல) செழிப்புடன் வளர்ந்த மார்பகங்கள் கொண்ட விலைமாதர்களின் கொவ்வைக் கனி போன்ற செவ்வாயை விரும்பி, விடாது உறுதியாகத் தழுவி, கைப் பொருள் எல்லாவற்றையும் இழந்து விட்டு, தளர்ச்சியுற்று மனம் தளர்ந்து, விக்கல் எடுத்து, அளவின்றி உடல் அழிவுற்று சுக்கு போலாகி உலர்ந்து, தன் வசம் அழிந்து ஒடுக்குகின்ற நோயை அகற்றி, சேமநிதி (நீயே) என்று கருதி உன்னைப் புகழ மாட்டேனோ? தினைப் புன வேடர்கள் பெற்ற அழகிய குற மகளாகிய வள்ளி இன்பம் கொள்ளும்படி, அவளைச் சேர்வதற்குக் காதல் கொண்ட அந்தக் கிழ வேடம் பூண்டவனே, ஏழு கடல்களும் வற்றும்படி, ஏழு மலைகளோடு, சூரனுடைய தலைகள் பொடிபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய பெருங் கோப வீரனே, நாள் தோறும் விரும்பக் கூடிய குங்குமப்பூ முதலிய வாசனைகள் பூசப்பட்ட தோள்களில் மணம் நிறைந்தவனே, கிண்கிணிகளின் மெல்லிய இசையுடன் கூடிய செவ்விய திருவடிகளை உடைய அருளாளனே, சிவலோகத்தில் உள்ள சங்கரிக்குத் தலைவனான சிவபெருமானுடைய பிள்ளையே, பசுமையான நீர் நிலைகளையுடைய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 144 - பழநி
ராகம் - ...; தாளம் -

தான தந்ததனத் தான தந்ததனத்     தான தந்ததனத் ...... தனதான

கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்     காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக் 
கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்     காய மொன்றுபொறுத் ...... தடியேனும் 
தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்     சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம் 
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்     தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான் 
சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்     தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா 
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்     சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே 
ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்     றால முண்டவருக் ...... குரியோனே 
ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்     றாவி னன்குடியிற் ...... பெருமாளே.

மேகங்களை அணிந்த மலைகளுடன் கூடிய இப் பூமியில் பிறந்து, வினைகளைப் பெருக்கும் காதலினால் உள்ளம் சோர்ந்து, தடுமாற்றம் கொண்டு, வாயு, நரம்பு, இரத்தம், தோல், கொழுப்பு இவைகளோடு கூடிய பொய்யான உடல் ஒன்றினைச் சுமந்து அடியேனாகிய நான், மாலை சேர்ந்த கூந்தலையும், கூர்மையான கண்களையும், வில்லுக்கு ஒப்பான நெற்றியையும் உடைய கொடி போன்ற பொதுமகளிருடைய பாதங்களை வணங்கி, அவர்களுடைய அழகிய தோள்களின் மேல் ஆசைப்பட்டு, மிகவும் கீழான நிலையை அடைந்து, அழிந்து போகத் தக்கதாமோ? சூரனுடைய உடல் அழிந்து போக, தேவர்கள் நின்று போற்ற, கடலும் வற்றிப்போக, சண்டை செய்யும் வேலனே, பரிசுத்தம் கொண்ட மயில் போன்ற வள்ளி நின்ற, தினைப் புனங்கள் சூழ்ந்த வள்ளிமலையில் திரிகின்றவனே, பிரமன், கருடக் கொடியையுடைய திருமால் இருவரும் வணங்க, ஆலகால விஷம் முழுவதையும் உண்ட சிவபெருமானுக்கு உரியவனே, கரும்பு ஆலைகளும், வயல்களும், சோலைகளும் பக்கங்களில் சூழ்ந்துள்ள திருவாவினன்குடியில் (பழநியில்) வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 145 - பழநி
ராகம் - கெளளை; தாளம் - ஆதி - 2 களை - 16

தனந்த தனதன தனதன தனதன     தனந்த தனதன தனதன தனதன          தனந்த தனதன தனதன தனதன ...... தனதான

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு     எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி          குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக் 
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்     இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்          குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான 
சரம்ப ருறவனை நரகனை துரகனை     இரங்கு கலியனை பரிவுறு சடலனை          சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித் 
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்     அழுந்த வுரைசெய வருமுக நகையொளி          தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே 
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி     லுறைந்த குயிலளி யொலிபர விடமயி          லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா 
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக     டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக          இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே 
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்     அரம்பை மகளிரொ டரகர சிவசிவ          செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா 
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு     சிறந்த குறமக ளிணைமுலை புதைபட          செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே.

சிறு குடிலாகிய இந்த வீடு - உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட வழுவழுப்பான கொழுப்பும், எலும்பும், அடுக்காகச் சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும், முறையின்றி சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன், இவற்றோடு கெட்ட அழுக்குகள் நிறைந்ததுமான, இந்த வீட்டில் (உடலில்) ஐவர் (ஐம்புலன்கள்) குடி புகுந்துள்ளனர். அவர்கள் மிகவும் கடுமையான கொடுங்குணத்தினர். அகந்தை கொண்டவர்கள். ஒரு வழியில் போகாதவர்கள். குற்றம் உடையவர்கள். குரங்கு போல் சேட்டை செய்பவர்கள். அறிவில்லாதவர்கள். நன்னெறியில் ஒழுகாதவர்கள். மிருகத் தன்மை உடைய வலிமை வாய்ந்தவர்கள். விஷம் போன்ற குணம் உடையவர்கள். (இத்தகையோர்களுடன்) நட்பு உடையவனை, நரகம் புகுகின்றவனை, குதிரை போல் மிக வேகமாகச் செல்லும் மனத்தை உடையவனை, அழுது ஏங்கும் வறியவனை, துன்பத்துக்கு உறைவிடமாகிய உடல்மேல் அன்பு கொண்டவனுமாகிய என்னை, அழகிய முகத்தவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, நீஅழகோடு மயிலின் மீது ஏறி வந்து, செழிப்புடன் பூரித்த சிவ ஒளியை என்னுடைய மனதில் அழுந்தும்படி நன்றாக ஓதி உபதேசிக்கும் பொருட்டு வந்த திருமுகச் சிரிப்பு பூத்த ஒளியையும், குளிர்ந்த கண்களையும், உனது மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் நான் மறவேன்.* இலுப்ப மரங்களும் மகிழ மரங்களும் நிறைந்து இவைகளின் மேல் பல மேகங்கள் தங்கும் சோலைகளில் வசிக்கின்ற குயில்களும் வண்டுகளும் இனிமையான ஒலிகளைப் பரப்ப, மயில்கள் அந்த இசைக்கு ஒத்து நடமிடுகின்ற இணை இல்லாத சிதம்பரம் என்னும் வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே. இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை இடிந்து பொடியாக, பல மலைகளும் பொடிபட, மகர மீன்கள் உறையும் கடல் தீப்பற்றிக்கொள்ள, ஒளி பெற்ற எட்டு திசைகளில் உள்ள யானைகளும் கலங்கிப் பிளிற, ஆர்ப்பரித்து வந்த அசுரர்களோடு (அவர்களுடைய) யானை, குதிரை முதலிய படைகளையும் யம லோகத்துக்கு அனுப்பிய தலைவனே, உயர்ந்த பொன் நிறம் கொண்ட பிரமனும், முனிவர்களும், தேவர்களும், அரம்பை மகளிரும் அரகர, சிவசிவ, சுயம்பு மூர்த்தியே என்று புகழ, நடனம் செய்கின்ற திருவடி அழகாக அமையப்பெற்ற சிவபெருமானுக்கு குருநாதனே, செழித்த பவளம் போன்ற, நிலவைப் பழித்துச் சிரிக்கும் மலர்ந்த முகமும், சிறப்புடன் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் இரு மார்பகங்களும் அழுந்தும் வண்ணம் வெற்றி கொண்டு அவளை அணைத்த குகனே, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இப்பாடலில் அருணகிரியார் முருகதரிசனத்துக்கு நன்றி செலுத்துகிறார்.

பாடல் 146 - பழநி
ராகம் - கேதார கெளளை; தாளம் - மிஸ்ர சாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தனன தனதன தனன தனதன     தனன தனதன தனன தனதன          தனன தனதன தனன தனதன ...... தனதான

குருதி மலசல மொழுகு நரகுட     லரிய புழுவது நெளியு முடல்மத          குருபி நிணசதை விளையு முளைசளி ...... யுடலூடே 
குடிக ளெனபல குடிகை வலிகொடு     குமர வலிதலை வயிறு வலியென          கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணி 
மருவி மதனனுள் கரிய புளகித     மணிய சலபல கவடி மலர்புனை          மதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகா 
மனது துயரற வினைகள் சிதறிட     மதன பிணியொடு கலைகள் சிதறிட          மனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயே 
நிருதர் பொடிபட அமரர் பதிபெற     நிசித அரவளை முடிகள் சிதறிட          நெறிய கிரிகட லெரிய வுருவிய ...... கதிர்வேலா 
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்     நிருப குருபர குமர சரணென          நெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனே 
பருதி மதிகனல் விழிய சிவனிட     மருவு மொருமலை யரையர் திருமகள்          படிவ முகிலென அரியி னிளையவ ...... ளருள்பாலா 
பரம கணபதி யயலின் மதகரி     வடிவு கொடுவர விரவு குறமக          ளபய மெனவணை பழநி மருவிய ...... பெருமாளே.

ரத்தம், மலம், நீர், இவை ஒழுகுகின்ற மனிதக் குடலையும், சிறிய புழுக்கள் நெளியக்கூடிய உடலையும் கொண்டு, மதம் கொண்ட விகார வடிவம் கொண்டவனாய், கொழுப்பு, சதை, ஊறி எழும் சேறு போன்ற சளி இவை உடலினுள்ளே குடியிருப்பவர்கள் போல உரிமையுடன் பலவும் குடிகொண்டு, வலியதான கண்ட வலி (ஒருவகை வலிப்பு நோய்), தலைவலி, வயிற்றுவலி என்று கொடுமையான நோய்கள் செய்யும் வேதனை மிகுந்த இந்த உடலை, மிகவும் விரும்பிய யான், மாதருடன் கலந்து, பொறாமையால் மன்மதனின் உள்ளமும் கரிந்து போகும்படியாக, புளகாங்கிதமும், மணிகளும் பூண்ட, மலை போன்ற, பல நகைகளை அணிந்த, மலர்களைப் புனைந்த, மதன நூல்களில் கூறியபடி, பெருமலையன்ன மார்பகங்களில் மயக்கம் கொள்ளாமல், மனத்தின் துன்பங்கள் ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும், காமநோயும் காம சாஸ்திரமும் விலகி நீங்கவும், என் மனம் பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி அருள்வாயாக. அசுரர்கள் அழிந்து பொடியாகுமாறும், தேவர்கள் தங்கள் அமராவதிப் பதியைப் பெறுமாறும், கூர்மையான நாகாஸ்திரம், சக்ராயுதம் என்ற பாணங்களின் நுனிகள் சிதறுமாறும், மலைகள் நெறிந்து பொடிபடவும், கடல்கள் தீப்பற்றி எரியவும், செலுத்திய ஒளிமிகுந்த வேலாயுதத்தை உடையவனே, நிரம்பவும் மலர்களைப் பொழிந்து தேவர்களும் முநிவர்களும், அரசனே, குருநாதனே, குமரனே, சரணம் என்று பணிய, பெரிய மேகத்தின் உடலைக் கிழித்துக் கொண்டு ஊடுருவி வருகின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே, சூரியன், சந்திரன், அக்கினி இவற்றை விழியாகக் கொண்ட சிவபிரானின் இடப்பக்கத்தில் இருப்பவளும், ஒப்பற்ற மலையரசனான ஹிமவானின் திருமகளாக வந்தவளும், தன் வடிவம் மேகம்போல் கருத்த திருமாலின் தங்கையானவளுமான பார்வதி தேவி அருளிய குழந்தையே, பரம் பொருளாகிய கணபதி அருகில் மதயானை உருவம் எடுத்து வர, உடனிருந்த குறமகள் வள்ளி அபயம் என அடைக்கலம் புகுந்து தழுவ, பழநியில் வசிக்கின்ற பெருமாளே. 

பாடல் 147 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனன தனதன தனன தனதன     தனன தனதன ...... தனதான

குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்     குமுத வதரமு ...... றுவலாரம் 
குழைம கரம்வளை மொழிகு யிலமுது     குயமு ளரிமுகை ...... கிரிசூது 
விழிக யலயில்ப கழிவ ருணிகரு     விளைகு வளைவிட ...... மெனநாயேன் 
மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி     வெறிது ளம்விதன ...... முறலாமோ 
கழல்ப ணியவினை கழல்ப ணியையணி     கழல்ப ணியவருள் ...... மயில்வீரா 
கமலை திருமரு கமலை நிருதரு     கமலை தொளைசெய்த ...... கதிர்வேலா 
பழனி மலைவரு பழநி மலைதரு     பழநி மலைமுரு ...... கவிசாகா 
பரவு பரவைகொல் பரவை வணஅரி     பரவு மிமையவர் ...... பெருமாளே.

பெண்களின் கூந்தல் காடு, மேகம் (போன்றது). நெற்றி வீரம் பொருந்திய வில். வாய் இதழ்கள் குமுத மலர். பற்கள் முத்துக்கள். மகர மீன் வடிவம் பொருந்திய குண்டலம் தரித்துள்ள காது வள்ளிக் கொடி இலை போன்றது. பேச்சு குயில் போன்றும் அமுதம் போன்றும் இனியது. மார்பகங்கள் தாமரை அரும்பையும், மலையையும், சூதாடும் கருவியையும் போன்றவை. கண்கள் கயல் மீன், வேல் என்றும், அம்பு, கடல், கரு விளை மலர், நீலோற்பல மலர், நஞ்சு என்றெல்லாம் உவமை கூறி, நாயேனாகிய அடியேன் மிகவும் பெண்களை சிறிதும் பயனற்ற வழிகளில் வியந்துரைத்து வீணாக என் உள்ளம் விசனப்படலாமோ? செய்த வினைகள் கழல (நீங்க), வீரக் கழலையும் தண்டை முதலிய ஆபரணங்களையும் அணிந்துள்ள திருவடிகளைப் பணியும்படி அருள் புரிவாயாக, மயில் வீரனே, தாமரையில் வாழும் லக்ஷ்மியின் மருகனே, (கிரெளஞ்சம், எழு கிரி ஆகிய) மலைவாழ் அரக்கர்கள் அழிய அந்த மலைகளைத் தொளைத்த ஒளி வீசும் வேலனே, பழம் போன்றவளும், இமய மலையில் அவதரித்தவளும், பழமையுடைய நிமலையும் ஆகிய பார்வதி பெற்ற, பழநிமலைவாழ் முருகனே, விசாக மூர்த்தியே, பரந்துள்ள கடலில் மீது பாணத்தைச் செலுத்தி அடக்கிய கடல் நிறம் உடைய (ராமனாகிய) திருமால் போற்றும், தேவர்களின் பெருமாளே. 

பாடல் 148 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனன தனன தனன தனன தனன தனன     தனன தனன ...... தனதான

குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ     கொலைகள் செயவெ ...... களவோடே 
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்     குமுற வளையி ...... னொலிமீற 
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்     இடையு மசைய ...... மயில்போலே 
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்     இடரில் மயலில் ...... உளர்வேனோ 
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்     விஜய கிரிசொல் ...... அணிவோனே 
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி     விபின கெமனி ...... யருள்பாலா 
பழைய மறையின் முடிவி லகர மகர உகர     படிவ வடிவ ...... முடையோனே 
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ     பழநி மருவு ...... பெருமாளே.

கூந்தல் சரியவும், பேச்சு பதறவும், கண்கள் புரண்டு கொலைத் தொழிலைக் காட்டவும், களவு எண்ணத்துடன் குலவுதல் செய்து, கிகிகி என்ற ஓசை எழவும், கண்டத்தில் (புட்குரல்கள்) குமுறி எழவும், வளையல்களின் ஒலி மிகுந்து மேலெழவும், இளநீர் என்று சொல்லும்படி மார்பகங்கள் அசையவும், இரண்டு தொடைகளும் இடுப்பும் அசையவும், மயில் போல் நடனமாடி, (இதழ்களில் இருந்து) இன்ப ஊற்று வடியவும் மிகுதியான கலவி புரிகின்ற பரத்தையருடைய துன்பத்திலும் மயக்கிலும் பட்டு அழிவேனோ? விளங்கிய இலக்கியச் சுவை பொலிவுறும் அருணகிரி* என்கின்ற புலவன் சொல்லுகின்ற வெற்றி மலை போன்ற புகழ் மாலையை அணிபவனே, தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகிய உமை பெற்ற குழந்தையே, பழைமையான வேத முடிவில் பிரணவத்தை (அ + உ+ ம் = ஓம் என்ற) உருவத் திரு மேனியாகக் கொண்டவனே, நன்செய் புன்செய் நிலங்களும், கமுகு மரங்களும், வாழை, பலா மரங்களும் விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இப்பாடலில் கவிஞர் அருணகிரிநாதர் தம்மைப் பற்றி மூன்றாம் மனிதர் போலக் கூறும் குறிப்பை வைத்து, சிலர் கவிஞர் இதனை இயற்றவில்லை எனக் கூறுவர்.

பாடல் 149 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனத்ததனத் தனத்ததனத்     தனத்ததனத் தனத்ததனத்          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

குறித்தமணிப் பணித்துகிலைத்     திருத்தியுடுத் திருட்குழலைக்          குலைத்துமுடித் திலைச்சுருளைப் ...... பிளவோடே 
குதட்டியதுப் புதட்டைமடித்     தயிற்பயிலிட் டழைத்துமருட்          கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் ...... குறியாலே 
பொறித்ததனத் தணைத்துமனச்     செருக்கினர்கைப் பொருட்கவரப்          புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் ...... திடுமாதர் 
புலத்தலையிற் செலுத்துமனப்     ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்          புரித்தருளித் திருக்கழலைத் ...... தருவாயே 
பறித்ததலைத் திருட்டமணக்     குருக்களசட் டுருக்களிடைப்          பழுக்களுகக் கழுக்கள்புகத் ...... திருநீறு 
பரப்பியதத் திருப்பதிபுக்     கனற்புனலிற் கனத்தசொலைப்          பதித்தெழுதிப் புகட்டதிறற் ...... கவிராசா 
செறித்தசடைச் சசித்தரியத்     தகப்பன்மதித் துகப்பனெனச்          சிறக்கவெழுத் தருட்கருணைப் ...... பெருவாழ்வே 
திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத்     தடுத்தடிமைப் படுத்தஅருட்          டிருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.

சிறந்ததென்று கருதிய ரத்தின மணிகள் பதித்த ஆபரணங்களையும் ஆடைகளையும் முறையே சரிப்படுத்தி உடுத்து, கரிய கூந்தலை கலைத்து முடித்து, வெற்றிலையைப் பாக்குப் பிளவுடன் மெல்லுகின்ற பவளம் போன்ற இதழ்களை மடித்து, வேல் போன்ற கண்களால் நெருக்கி அருகே அழைத்து, காம மயக்கத்தைக் கொடுத்து நல்லுணர்வைக் கெடுத்து, நகக் குறியால் அடையாளம் இடப்பட்ட மார்பகத்தில் அணைத்து, மனம் கர்வம் கொண்டவராய், (தம்மிடம் வந்தவர்களிடம்) கைப் பொருளைக் கவரும் பொருட்டு கலவியில் கட்டுப்படுத்துகின்ற விலைமாதர்கள். அவர்களிடத்தில் செலுத்துகின்ற மயக்கம் அற்றுப் போக நான் பெரும் புகழ் பெற அன்பு கூர்ந்து அருள் புரிந்து உனது அழகிய திருவடியைத் தருவாயாக. ரோமத்தை விலக்கிய தலையையும் கள்ள நெஞ்சத்தையும் உடைய சமணக் குருக்களாகிய அறிவில்லாதவர்களின் விலா எலும்புகள் முறிந்து விழ, (அவர்கள்) கழு மரங்கள் ஏறும்படி விபூதியைப் பரவ வைத்த அந்த மதுரையம்பதிக்குச் சென்று, நெருப்பிலும் நீரிலும் பெருமை வாய்ந்த (தேவாரத்) திருப் பதிகத்தைப் பொறித்து எழுதப்பட்ட ஏடுகளைப் புகவிட்ட ஞான வலிமையுடைய (சம்பந்தராக வந்த) கவியரசனே, நெருங்கி அடர்ந்த சடையில் சந்திரனைத் தரித்த அந்தத் தந்தையாகிய சிவ பெருமான் பாராட்டி மகிழ்வான் என்று சிறப்புறும் வகையில் பிரணவத்தின் பொருளை உபதேசித்து அருளிய கருணைச் செல்வமே, விளக்கமுறும் வயலூரில் என்னைத் தடுத்து ஆட்கொண்டு அடிமை ஆக்கிய அருளாளனே, அழகிய பழனி மலையில் உறையும் குமரப் பெருமாளே. 

பாடல் 150 - பழநி
ராகம் - ....; தாளம் -

தந்தம் தந்தம் தந்தம் தந்தம்     தனதன தனதன தனதன தனதனதந்தம் தந்தம் தந்தம் தந்தம்     தனதன தனதன தனதன தனதனதந்தம் தந்தம் தந்தம் தந்தம்     தனதன தனதன தனதன தனதன ...... தனதான

குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்     படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்     கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்     சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் ...... விரகாலும் 
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்     குடியென வளர்தரு கொடியவர் கடியவர்எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்     தனதுரி மையதென நலமுட னணைபவர்கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்     பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் ...... மயலாலும் 
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்     டுனதிரு மலரடி பரவிட மனதினில்நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்     தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெறஇன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்     தமுமிக வருள்பெற விடைதரு விதமுன ...... மருள்வாயே 
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்     அவன்விடு மதிசய வினையுறு மலகையைவென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்     செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்     துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் ...... மருகோனே 
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்     தொளைபட மதகரி முகனுடல் நெரிபடடுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்     டிடியென விழுமெழு படிகளு மதிர்படஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்     றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ...... யடுவோனே 
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்     சிவனருள் குருபர வெனமுநி வரர்பணியுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்     றொலிபட நடமிடு பரனரு ளறுமுகஉண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்     விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை ...... புயவீரா 
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்     கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்     படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்படஅன்பின் பண்பெங் குங்கண் டென்பின்     அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு ...... திறலோனே 
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்     கமர்தனில் விஜயவ னிரதமை நடவியதுங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்     தருமகன் முநிதழல் வருதக ரிவர்வலஅங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்     கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே.

மலையும் வளர்ச்சி குறைந்து இருக்கும்படியும், பூச்செண்டும் வாடும்படியாகவும் வளர்ந்த மார்பகத்தில் கஸ்தூரிக் கலவை பூண்பவர். சந்திரனைப் போலவும் அழகு தங்கும் குளிர்ச்சியும் சிவப்பு நிறமும் பொருந்திய தாமரை போன்று விளங்கும் முகத்தைக் கொண்ட (விலை) மாதர்கள். கொஞ்சுதலும், கெஞ்சிக் கேட்பதும் செய்தும், வஞ்சகமாக, சமாதானம் வரும்படி, ஒப்பற்ற செயல்களைப் புரியும் மாதர். சூழ்ச்சியாலும், கும்பல் கூடியிருத்தலும், வேடிக்கையும், அழகும், ஆணவமும் (இக்குணங்கள்) தம்முள் குடிவளர்த்துள்ள பொல்லாதவர்கள். கடுமையானவர்கள். எங்கே, எங்கே எமக்கு உரிய பங்கு என்று கூறி, எப்போதும் தமக்குச் சொந்தமானது என்று நிலை நிறுத்தி, பின் நலம் பேசி அணைபவர். கொஞ்சமே உள்ள இன்பத்தைக் கொடுத்து என்னிடம் உள்ள பொருள் அனைத்தையும் சாமர்த்தியமாக கவர்ந்து கொள்பவர்கள். காம இச்சையாலும், எந்த நாளும் மனம் இரங்கி நொந்து போதலையும், துன்பத்தையும் கொண்டுள்ள நான் உனது மலர் போன்ற இரு திருவடியை போற்றுதற்கும், மனத்தில் நல்லது என்று எப்பொழுதும் அறிந்து என்றும் (உன் திருக்கோயிலுக்குச்) சென்று தொழுகின்ற பெருமையின் பண்பை என் அறிவில் நின் அருளால் நான் பெறவும், இன்பமும் நற்பண்பும் உற்சாகமும் உனது தொடர்பும் சேர்ந்து நிரம்பும்படியான அருளைப் பெறவும் நீ அனுமதி செய்யும் வழியை முன்னதாகக் காட்டி அருள் புரிவாயாக. பயத்தால் ஏங்கிய கம்சன் வஞ்சகன், அற்பன். (கண்ணனைக் கொல்லும் பொருட்டு) அவன் ஏவிய அதிசயமான செயலை உடைய (பூதனை என்ற) பேயை வெற்றி கொண்டு, கொன்று, துண்டம் துண்டமாகச் செய்த திருமால், ஒரு காலத்தில் இரணியன் என்னும் வலியவனுடைய உயிரை உண்ட நரசிங்க வடிவினர், ஆதிசேஷனாகிய தோணி மேல் (பாற்கடலில்) துயில் கொள்பவர், அன்ன வாகனனாகிய பிரம தேவனைப் பெற்ற கரிய மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே, நிகரில்லாத சூரிய மண்டலம் வரை உயர்ந்து நின்ற கிரெளஞ்ச மலை பிளக்கும்படியும், மதம் பொழியும் யானை முகமுடைய தாரகாசுரனது உடம்பு நெரிபட்டு அழியவும், டுண் டுண் டுண் டுண் டிண் டிண் டிண் டிண் டிடி என்ற ஒலியுடன், விழும்படியான நிலையில் இருந்த ஏழு உலகங்களும் அதிர்ச்சி கொள்ளவும், ஒள்ளிய சங்கம் சஞ்சம் சஞ்சம் என்று ஒலிக்கவும், இந்திரன் வணங்கவும் அசுரர்களை மாய்த்தவனே, நீயே முக்காலும் அடைக்கலம், சிவனுக்கு அருளிய ஞான மூர்த்தியே என்று முனிவர்கள் பணியும், தொம்தம் தொம்தம் என்ற தாளத்தோடு ஒலி பரவ நடம் செய்யும் சிவபெருமான் அருளிய ஆறுமுகனே, தேன் உண்ணுகிற இடத்தில் வண்டுகளைக் கொண்டு விளங்க, வாசனை வீசுகின்ற குரா மலர்கள் மலரும், அழகு செய்கின்ற தோள்களை உடைய வீரனே, பிற மதங்கள் முக்தி வழி அன்று என்று கூறி தங்கள் நெறி ஒன்றையே கொண்டு அன்பு இல்லாமல் அங்கு அடியவர்களை இகழ்ந்து பேசிய சமணர்களை கழுவில் அவர்கள் உடல் சிந்தும்படியும், குறைபட்டு மாளும்படியும் செய்து, ஒரே வெள்ளமாய் நுரைத்து வந்த வைகையாற்றில் ஏடுகள் எதிர் வரச் செய்து, (அத்தகைய செயல்களால்) சிவத்தின் தன்மையை எங்கும் பரவச் செய்து, எலும்பிலிருந்து பூம்பாவையை எதிரில் உயிரோடு வரும்படி செய்த கவி பாடிய திருஞானசம்பந்தராக வந்து தேவார திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்து அருளிய சமர்த்தனே, அண்டங்களை உண்டாக்கியும், முன்னொரு நாளில் அவற்றை உண்டும், முடுகி வந்த போரில் அருச்சுனனின் ரதத்தைத் (தேர்ப் பாகனாக வந்து) செலுத்திய பரிசுத்த மூர்த்தி, தீயாரை வஞ்சம் புரிந்து அழிப்பவரும், பாஞ்ச ஜன்யம் என்ற சங்கை உடையவரும் ஆகிய திருமாலின் புதல்வராகிய பிரம்ம தேவருடைய புத்திரரான நாரத முனிவர் புரிந்த வேள்வியில் பிறந்த ஆட்டுக் கடாவின் மீது ஏறுகின்ற வல்லவனே, தமது அடையாள உறுப்பாக தாமரையும், சங்கும் பொலிந்து விளங்கும் தடாகங்கள் நிறைந்த வளப்பம் பொருந்திய சிவ கிரியாகிய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.