LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[251 -275]

பாடல் 251 - திருத்தணிகை
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தான தத்தன தான தத்தன
     தான தத்தன தான தத்தன
          தான தத்தன தான தத்தன ...... தந்ததான
ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென் 
றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப் 
பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப் 
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ 
ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே 
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே 
மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே 
மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.
எனக்கு புத்தி ஏது ஐயனே? இனிமேல் நான் யாரைச் சென்று விரும்பி நாடுவேன்? வீணாக இறப்பதுதான் என் தலைவிதியோ? எனக்கு நீயே தாயும் தந்தையுமாக இருந்தும் நான் இந்த விதமாகவே தவித்திடலாமா? உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான் ஆளாகலாமா? என்னை இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள் ஐயனே*, என் நிலை தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில், உலகோர் நகைப்பார்கள் ஐயனே, தந்தையின் முன் குழந்தை ஓடிச்சென்று, பால் மணம் மாறாத வாயால் குரலெழுப்பி அழுதால், இந்தக் குழந்தையை யார் எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக இப்பூமியிலே விட்டு விடுவார்களோ? எனக்கு இந்த உண்மை சிந்தையிலே தோன்றலாகாதோ? வெள்ளமாய்ப் பெருகி எழும் பாற்கடல் பொங்கியது போல எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த மூடர்களான அசுரர்களை ஓடும்படி வெட்டியழித்த சூரிய ஒளி கொண்ட சக்திவேலைக் கரத்திலே கொண்ட எங்கள் அரசனே, கங்கை வெள்ளம் பெருகும் அடர்ந்த சடாமுடி ஆடவும், பொருந்தி அமர்ந்த மானும், மழுவும் ஏந்திய கரங்கள் ஆடவும், அழகிய கால்களில் கழல் ஒலிசெய்யவும், நடனம் புரிந்த சிவனார் தந்தளித்த செல்வமே, பெரிய தினைப்புனத்தின் மீது இருந்தவளும், மை பூசிய, ஒளி மிகுந்த கண்களை உடையவளுமான குறப்பெண் வள்ளியை, உன் அழகிய மார்புறத் தழுவிய மயில்வாகனனே, அற்புத மூர்த்தியாம் கந்த வேளே, மன்மதன் வெற்றி பெறும்படியான அழகிய பூமுடித்த கூந்தலை உடைய மாதர்கள் ஆச்சரியப்படும்படியான பெரிய மெய்த்தவசிகள் வாழும் திருத்தணிகை என்ற சிறந்த மலைத்தலத்தில் வாழும் தம்பிரானே. 
* தான் கேட்ட வரத்தின்படியே முருகனின் திருவடி தீட்சையை அருணகிரிநாதர் அவரது வாழ்வில் பெற்றார்.
பாடல் 252 - திருத்தணிகை
ராகம் - ...; தாளம் -
தான தத்தன தத்தன தத்தன
     தான தத்தன தத்தன தத்தன
          தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
     ரூப மொத்தநி றத்திகள் விற்கணை
          யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை ...... யமுதோடே 
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
     லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்
          ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் ...... மணம்வீசும் 
மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி
     வார ழுத்துத னத்திகள் குத்திர
          மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு ...... மடமாதர் 
மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை
     வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு
          மாத ருக்குவ ருத்தமி ருப்பது ...... தணியாதோ 
வேலை வற்றிட நற்கணை தொட்டலை
     மீத டைத்துத னிப்படை விட்டுற
          வீற ரக்கன்மு டித்தலை பத்தையு ...... மலைபோலே 
மீத றுத்திநி லத்தில டித்துமெய்
     வேத லக்ஷ¤மி யைச்சிறை விட்டருள்
          வீர அச்சுத னுக்குந லற்புத ...... மருகோனே 
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
     வாரி முத்துந கைக்கொடி சித்திர
          நீல ரத்தின மிக்கஅ றக்கிளி ...... புதல்வோனே 
நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்
     நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு
          நீல முற்றதி ருத்தணி வெற்புறை ...... பெருமாளே.
குண்டலங்களைக் காதணியாக அணிந்தவர்கள், அழகிய உருவம் வாய்ந்த நிறத்தை உடையவர்கள், வில் போன்ற புருவங்களும், அம்பு போன்ற கண்களும் உடையவர்கள், சர்க்கரை அமுதுடன் ஊறின சுவையைப் போன்ற (இனிய) பேச்சினை உடையவர்கள், பறவைகளின் குரலுடன் மெல்லப் பேசும் கண்டத்தை உடையவர்கள், ஒலி செய்யும் உடுக்கை போன்ற இடையை உடையவர்கள், வாசனை வீசுகின்ற பூ மாலை அணிந்த கழுத்தை உடையவர்கள், முத்து மாலை அணிந்த, ரவிக்கையை அழுத்துகின்ற, மார்பகங்களை உடையவர்கள், வஞ்சகம் நிறைந்த காம மயக்கத்தை உண்டாக்கி ஆடவர்கள் மனதைப் பாழாக்கும் விலைமாதர்கள். மார்பை அசைத்து மோக மயக்கத்தை உண்டு பண்ணி, இருண்ட படுக்கை அறைக்கு வரும்படி அழைத்து, கைப் பொருளை அபகரித்துத் தழுவிடும் விலைமாதரருக்காக நான் வேதனைப்படுவது தவிராதோ? கடல் வற்றிப் போகும்படி சிறந்த பாணத்தைச் செலுத்தி, கடலின் மேல் அணை இட்டு ஒப்பற்ற வானரப்படையைச் செலுத்தும்படிச் செய்து, கர்வம் கொண்ட இராவணன் முடி தரித்த பத்துத் தலைகளையும் மலை விழுவது போல மேலே அறுத்து தரையில் வீழ்த்தி, சத்திய வேத சொரூபியான லக்ஷ்மிதேவியாகிய சீதையை சிறையினின்றும் விடுவித்து அருளிய வீரம் பொருந்திய ராமருக்குச் சிறந்த மருகனே. கரு நிறம் கொண்டவள், பரிசுத்தமானவள், குணம் கடந்தவள், கடலின்றும் எடுத்த முத்து போன்ற தூயவள், ஒளி வீசும் பற்களை உடையவள், அழகிய நீல ரத்தின அணியைக் கொண்டவள், தருமக் கிளி ஆகிய பார்வதியின் மகனே, திருநீறு அணிந்து நினைக்கின்றவர்களின் மனதில் நிறைய அன்பை அளித்திடும் சற்குருநாதனே, நீலோற்பல மலர்கள் நிறைந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 253 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தத்தன தனதன தத்தன தனதன
     தத்தன தனதன ...... தனதான
கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
     கைச்சரி சொலிவர ...... மயல்கூறிக் 
கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
     கட்செவி நிகரல்குல் ...... மடமாதர் 
இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
     யெச்சமி லொருபொரு ...... ளறியேனுக் 
கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை
     யிப்பொழு தணுகவு ...... னருள்தாராய் 
கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
     நச்சியெ திருடிய ...... குறையால்வீழ் 
குற்கிர வினியொடு நற்றிற வகையறி
     கொற்றவு வணமிசை ...... வருகேசன் 
அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்
     அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே 
அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
     யப்பனெ யழகிய ...... பெருமாளே.
கச்சு அணிந்த இளைய மார்பகங்கள் மீது முத்தாலான ஆபரணங்கள் ஜொலிக்க, பல விதமான கை வளையல்கள் பிரகாசிக்க, காம இச்சைகளை வெளியிட்டு, (வந்த ஆடவர்களின்) கைப் பணத்தைத் திருடும் மை தீட்டிய கண்களை உடையவர், பாம்பின் படத்தை ஒத்துள்ள நிதம்பத்தை உடைய விலைமாதர்கள் மீது, ஆசையால் உள்ளமும் உடலும் உருகிய தழும்பினன், அறிவில்லாதவன் நான். குறைவில்லாத ஒப்பற்ற பரம் பொருளை அறியாதவனான எனக்கு, இந்த உலகில் மணமுள்ள அழகான மலர் போன்ற திருவடி இணைகளை இப்போதே கிடைக்கும்படி உன் திருவருளைத் தந்தருள்வாய். இடையர் குலத்தைச் சேர்ந்தவர் வீட்டில் இடைச்சியர்கள் சேர்த்து வைத்திருந்த தயிரை விரும்பி திருடிய குறைப்பாட்டினால் (கட்டப்பட்டுக்) கிடந்திருந்த உரலோடு இழுத்துச் சென்று நல்ல ஒரு பாக்கியச் செயலை* அறிந்து செய்த அரசன், கருட வாகனத்தில் வருகின்ற திருமால், அந்த அமுதம் நிறைந்த திருப்பாற் கடலில் விஷம் மிகுந்த பாம்பாகிய ஆதிசேஷன் மீது உறங்கும் திருமால் மகிழும் மருகனே, கங்கை நீரைத் தரித்த சடையை உடைய சிவபெருமான் மெச்சிய திருத்தணிகை மலையில் இருக்கும் அப்பனே, அழகிய பெருமாளே. 
* நளகூபரன், மணிக்¡£வன் என்னும் குபேரனின் புத்திரர் இருவரும் மதுவருந்தி, ஆடையின்றி ஜலக்¡£டை செய்து, நாரதர் முன் தோன்றினர். நாரதர் சபிக்க அவர்கள் மருத மரமாயினர். கண்ணன் கட்டப்பட்ட உரல் அவர்கள் மீது விழுந்ததும் சாபம் தீர்ந்து மகிழ்ந்தனர்.
பாடல் 254 - திருத்தணிகை
ராகம் - ...; தாளம் -
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்
     கடைக்கணிற் கொடுத்தழைத் ...... தியல்காமக் 
கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்
     கரைத்துடுத் தபட்டவிழ்த் ...... தணைமீதே 
சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத்
     தமிட்டிருட் குழற்பிணித் ...... துகிரேகை 
சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்
     தலத்தில்வைப் பவர்க்கிதப் ...... படுவேனோ 
இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்
     தெழிற்றினைக் கிரிப்புறத் ...... துறைவேலா 
இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்
     சிறைச்சியைப் பசித்திரைக் ...... கிசைகூவும் 
பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்
     பிதற்றறப் படுத்துசற் ...... குருவாய்முன் 
பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்
     பெருக்குமெய்த் திருத்தணிப் ...... பெருமாளே.
கடலையும் உலகையும் தம் கீழ் அடங்கும்படியாக அடக்கி, தம்மை நாடி வந்தவர்களுக்கு துன்பத்தை தமது கடைக் கண்ணால் கொடுத்து, அவர்களை அழைத்து மன்மத காம நூல்களை உரக்க எடுத்துச் சொல்லி, தொண்டையில் வேறு வேறு புட்குரல்களைக் காட்டி, மனதைக் கரைத்து, உடுத்துள்ள பட்டுப் புடவையை அவிழ்த்துப் படுக்கை மேல் வேகமாகச் சேர்ந்து, மார்பகத்தின் மீது அணைத்து, இதழூறலை அளித்து முத்தம் தந்து, கரிய கூந்தலைக் கட்டி முடித்து, நகக் குறியை மூர்க்கத்துடன் புதைய அழுத்தி, அரச இலை போன்ற பெண்குறியில் (வந்தவர்களைச்) சேர்ப்பவர்களுடன் இன்பம் அனுபவித்துக் கொண்டே இருப்பேனோ? ஐம்புலன்களின் சேட்டை முதலான முரண்களை அடக்கும் சத்திய வாசகப் பொருளைக் கொண்ட உனது திருப் புகழுக்கு உயிர் நிலை போன்ற பெரிய பலத்தைத் தந்து, அழகிய தினைப்புனம் உள்ள வள்ளி மலையில் வீற்றிருக்கும் வேலனே, போரில் கர்வத்துடன் வந்த அசுரர்களை அழித்து, ஒலியுடன் மிகப் பச்சையான மாமிசத்தை பசியுடன் இரை வேண்டும் என்று கேட்கும் குரலுடன் கூவுகின்ற பெட்டைக் கோழிக் கூட்டங்களுக்குக் கொடுத்த, சேவல் கொடியை கையில் ஏந்தியவனே, பொய்யான பிதற்றல் மொழிகளை அறவே களைந்து, குருநாதராக வந்து முன்பு ஒரு நாள் பிறப்பு இல்லாத சிவபெருமானுக்கு போதித்த சித்த மூர்த்தியே, நெல்லின் பெரிய குவியல்களை மேலும் பெருக வைக்கும் உண்மை வாய்ந்த திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 255 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ...... தனதான
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
     கரிக்குவ டிணைக்குந் ...... தனபாரக் 
கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்
     கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத் 
தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்
     தவிர்த்துன துசித்தங் ...... களிகூரத் 
தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்
     தலத்தினி லிருக்கும் ...... படிபாராய் 
புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்
     பொடிப்பணி யெனப்பன் ...... குருநாதா 
புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்
     புகழ்ச்சிய முதத்திண் ...... புலவோனே 
திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்
     தெறிப்புற விடுக்குங் ...... கதிர்வேலா 
சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்
     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
கரிய நிறம் உள்ள கூந்தலை விரித்தும், வெளித் தோன்றும் கயல் மீனை ஒத்த கண்களை விழித்தும், யானை போன்றும் மலை போன்றும் உள்ள மார்பகங்களை உடையவராக, கைகளில் அணிந்துள்ள வளையல்களையும் பொன் சங்கிலி மாலைகளையும் ஒலி செய்தும், மேகலை அணிந்துள்ள புடவையை பள பளப்புடன் உடுத்தும், தம்மைப் பணிந்து ஒழுகும் ஆடவர்களை ஏற்று அவர்களின் மனத்தை அழிக்கும் வஞ்சகர்களாகிய விலைமாதர்களின் தொடர்பை விலக்கி, உனது மனம் மகிழ்ச்சி அடைய, தவக் கடலில் மூழ்கிக் குளித்து இப்பொழுது உனக்கு அடிமை பூண்டு, உன் தலமாகிய திருத்தணிகையில் இருக்கும்படியான பாக்கியத்தைக் கண் பார்த்து அருளுக. திரி புரங்களையும் எரித்து, அழகிய யானையையும் தோல் உரித்து, ஒளி வீசும் திருநீற்றை ஆபரணமாகக் கொண்ட என் தந்தையாகிய சிவ பெருமானின் குரு நாதனே, தோளில் ஆபரணமாக கடப்ப மாலையை அணிந்து, மேலான தன்மையை உற்று இனிய புகழ் அமுதத்தைக் கொண்ட திண்ணிய புலவனே, கூட்டமான குதிரைகளும், யானைகளும் பொடிபடவும், அசுரர்கள் சிதறுண்ணவும் வேலைச் செலுத்திய ஒளி வேலனே, சிறப்புடனே குறப் பெண்ணாகிய வள்ளி மகிழ்கின்ற வெற்றியும் அழகும் கொண்ட திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 256 - திருத்தணிகை
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தானம் தனதன தானம்
     தனதன தானம் ...... தனதான
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
     கனவளை யாலுங் ...... கரைமேலே 
கருகிய காளம் பெருகிய தோயங்
     கருதலை யாலுஞ் ...... சிலையாலுங் 
கொலைதரு காமன் பலகணை யாலுங்
     கொடியிடை யாள்நின் ...... றழியாதே 
குரவணி நீடும் புயமணி நீபங்
     குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே 
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
     திருமகள் நாயன் ...... தொழும்வேலா 
தினைவன மானுங் கநவன மானுஞ்
     செறிவுடன் மேவுந் ...... திருமார்பா 
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
     தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா 
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
     தனிமயி லேறும் ...... பெருமாளே.
மேகலை முதலிய ஆபரணங்கள் அணிந்த மாதர்களின் வசைப்பேச்சின் ஒலியினாலும், பெருத்த சங்கின் பேரொலியினாலும், கரையின் மேல் இருந்து கூவுகின்ற மன்மதனுடைய எக்காளமாகிய கருங் குயிலின் ஓசையாலும், பரந்து விரிந்த கடலின் ஓசையாலும், சிந்தனை அலைகளாலும், கரும்பு வில்லால் கொலை செய்யவல்ல மன்மதன் வீசுகின்ற பல மலர் அம்புகளினாலும், கொடி போன்ற மெல்லிய இடையாளாகிய இத்தலைவி உன் பிரிவுத் துயரால் கவலைப்பட்டு நின்று அழிவுறாமல், குரா மலர்களைத் தரித்துள்ள நீண்ட புயங்களில் அணிந்துள்ள கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை நீ தலைவிக்குத் தந்து அருள்வாயாக. மலையரசன் மகள் பார்வதி நாயகன் சிவனும், கலைமகள் ஸரஸ்வதியின் நாயகன் பிரம்மனும், லக்ஷ்மியின் நாயகன் திருமாலும் வணங்கி வழிபடுகின்ற* வேலாயுதனே, தினைப் புனத்திலே காவல் காத்த மான் போன்ற வள்ளியும், விண்ணுலகில் மேன்மையான கற்பக வனத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையும் மனம் நிறைந்து அணைக்கும் திருமார்பினனே, நிலமகளாகிய இவ்வுலகின் மீது மதிப்பிற்குரிய புலவர்கள் உலாவும் திருத்தணிகையில் வாழும் ஒளி படைத்த வேலினை உடையவனே, உலக பாசத்தை நீக்கிய உன் அடியார்களின் மிக்க தனிமை நீக்கி அருளி, நாள்தோறும் ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளும் பெருமாளே. 
* திருத்தணிகையில் மும்மூர்த்திகளும் வழிபாடு செய்த வரலாறு உண்டு. தணிகைக்கு அருகே ஓடும் நந்தி ஆற்றின் வடகரையில் சிவ சந்நிதியும், தாரகாசுரன் விஷ்ணுவிடமிருந்து கவர்ந்த சக்ராயுதத்தை மீட்டுக் கொடுத்த முருகனை, திருமால் வழிபட்ட விஷ்ணுதீர்த்தம் கோயிலுக்கு மேற்கேயும், சிருஷ்டித் தொழிலில் முருகனிடம் தேர்ச்சி பெற்ற பிரம்மனுக்கான பிரம்மச்சுனை மலை ஏறும் வழியிலும் உள்ளன.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.ஊர்ப் பெண்களின் ஏச்சு, கடல், அலைகள், குயிலோசை, சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 257 - திருத்தணிகை
ராகம் - ...; தாளம் -
தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
     தனனத்த தத்தனத் ...... தனதான
கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
     கடவுட்ப்ர திஷ்டைபற் ...... பலவாகக் 
கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
     கருவிற்பு கப்பகுத் ...... துழல்வானேன் 
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
     கசரப்ப ளிக்கெனப் ...... பொருள்தேடி 
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின்
     சரணப்ர சித்திசற் ...... றுணராரோ 
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
     குமுறக்க லக்கிவிக் ...... ரமசூரன் 
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
     துதிரத்தி னிற்குளித் ...... தெழும்வேலா 
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
     றுவலைச்சி மிழ்த்துநிற் ...... பவள்நாணத் 
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
     சுருதித்த மிழ்க்கவிப் ...... பெருமாளே.
வஞ்சக எண்ணம் கொண்ட சித்தர்களும், ஆறு* சமயங்களையும் மேற்கொண்டு வாதம் செய்யும் வெறியர்களும், சிறந்த கடவுளர்களின் பிரதிஷ்டை என்ற பெயரில் பலப்பல வகையாக யோசித்து, அந்தக் கடவுளருக்குப் பெயர்களைக் குறிப்பிட்டு வைத்து, உருவ அமைப்புக்களை (சிலை, யந்திரம் முதலியவற்றில் வடித்து) ஏற்படுத்தி, துன்ப மயமான கருவிலே புகுவதற்குக் காரணமான பிரிவினை மனப்பான்மையுடன் ஏன் அலைந்து திரிகிறார்கள்? பொன் சரட்டில் கோத்த சங்கிலிக்கும், முத்திரை மோதிரத்துக்கும், இரண்டு கைகளிலும் அணியும் வளையல்களுக்கும், மேலான வைர அட்டிகைக்கும் என்று பெண்களுக்குத் தரும் நகைகளுக்காகப் பொருளைத் தேடிய மக்கள், அனைத்திலும் ஒன்றுபட்டுக் கலந்து, அதேசமயம் கலவாமல் வேறுபட்டு நிற்கும் உனது திருவடிகளின் பெருமையைச் சற்றேனும் உணரமாட்டார்களோ? (கிரெளஞ்சகிரி, சூரனின் ஏழு குல மலைகள் ஆகிய) எட்டு மலைகளையும் அழித்து, பரந்த கடல்களின் கூட்டத்தை ஒலி செய்யும்படி கலக்கி, வீரம் நிறைந்த சூரனின் குடலைத் தோளில் மாலையாகத் தரித்து, அவனது உடலைப் பிளந்து, கோபித்து, அவனுடைய ரத்தத்தில் குளித்து எழுந்த வேலாயுதத்தை உடையவனே, வள்ளியின் திருவடிச் சுவடுகள் பதிந்த அற்புதமான தினைப்புனத்தில், உதிரிப் பூக்களை மாலையாகக் கட்டி அணிந்து நின்ற வள்ளி நாணும்படியாக அவளைத் தொழுது புகழ்ந்த முக்தனே, அழகிய மதில்கள் சூழ்ந்த திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும், வேதமாகிய தேவாரத் தமிழ்க் கவிதைகளைத் தந்த (திருஞான சம்பந்தப்) பெருமாளே. 
* ஆறு சமயங்கள்: காணாபத்யம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், செளரம், கெளமாரம் என்பனவாம்.
பாடல் 258 - திருத்தணிகை
ராகம் - ...; தாளம் -
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
     கனத்தையொத் துமொய்த்தமைக் ...... குழலார்தங் 
கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்
     கழற்பதத் தடுத்திடற் ...... கறியாதே 
இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்
     திசைத்தசைத் தசுக்கிலத் ...... தசைதோலால் 
எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்
     தெனக்குநித் தமுத்தியைத் ...... தரவேணும் 
பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்
     பயத்தினிற் பயப்படப் ...... பொரும்வேலா 
பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்
     படைத்தகுக் குடக்கொடிக் ...... குமரேசா 
தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
     செருக்குறத் திருப்புயத் ...... தணைவோனே 
திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
     திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.
திண்ணியதாய் மிகப் பருமையுடைய அழகிய மூங்கில் போன்ற மென்மையான தோள்களிலும், மலைகள் போன்ற மார்பகங்களிலும், மேகத்தை ஒத்து அடர்ந்த கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய (விலை) மாதர்களின் கறுத்த மை தீட்டிய கயல்மீன் போன்ற கண்களிலும் (எனது) எண்ணங்களை வைத்து, ஒப்பற்ற உனது கழல் அணிந்த திருவடிகளைச் சேர்வதற்கு அறியாமல், தொகுதியான நோய்களின் கூட்டத்துக்கு இருப்பிடம் என்று சொல்லும்படி, உலை ஊது கருவி போல் ஒலி செய்து (மேலும் மேலும் பெருமூச்சு விட்டு), கட்டுண்ணும் அந்த இந்திரியங்கள், ஊன், தோல் இவைகளால் எடுக்கப்பட்ட நிலையில்லாத உடம்பைச் சுமக்கின்ற இந்தப் பிறப்பை ஒழித்து, எனக்கு அழியாத முத்தியைத் தந்தருள வேண்டும். பனை மரம் போன்ற துதிக்கையையும் கோபமும் கொண்ட வெள்ளை யானையாகிய ஐராவதத்தை உடைய இந்திரனைத் துரத்தி ஓட்டிய சூரனை, (சமுத்திரமாகிய) கடல் நீரில் பயப்படும்படி ஓட்டிச் சண்டை செய்த வேலனே, மலைகளின் கர்வம் அடங்கி ஒழியும்படி மிதித்துச் சவட்டும் முள் போன்ற நுனிகள் உடைய கால்களைக் கொண்ட கோழியைக் கொடியாகக் கொண்ட குமரேசனே, தினைப் புனம் உள்ள (வள்ளி) மலையில் குடிகொண்டிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை மகிழ்ச்சியுடன் அழகிய புயங்களில் அணைபவனே, அழகிய ஊரின் வெளிப்புறப் பகுதிகளில் (உள்ள வயல்களில்) லக்ஷ்மிகரம் பொருந்திய, பரிசுத்தமான முத்துக்கள் விளங்கும் புண்ணிய திசையாகிய (தமிழ்நாட்டுக்கு) வடக்கில் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 259 - திருத்தணிகை
ராகம் - கானடா; தாளம் - அங்கதாளம் - 11 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான

கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே
     கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே 
தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே
     தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ 
தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா
     திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே 
பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா
     படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே.
ஒலித்து அதிர்கின்ற இந்தப் பொங்கும் கரிய கடல் ஒன்றினாலும், கோபித்து மிகச் சிவந்து போய் நெருப்பின் சூட்டினைப் பூண்டுகொண்டு உதித்த சந்திரனாலே, ஒப்பற்ற கரும்பு வில்லினை ஏந்தி மன்மதன் செலுத்திய மலர்ச் சரங்களாலே, வாட்டத்தால் தனித்த ஒருத்தியாம் இந்தத் தலைவி இளைப்புற்று இங்கு உடல் தளரலாமோ? தினைப் புனத்தில் உள்ள பயிரை முன்னாள் காவல் செய்த வள்ளியின் கணவனே, திருத்தணித் தலத்தின் மலை மீது விளங்குகின்ற கந்தக் கடவுளே, பனைமரம் போன்று பருத்த தும்பிக்கையை உடைய வெள்ளை யானைக்கு (ஐராவதம்) உரிய தேவர்கள் போற்றுகின்ற மங்கையாகிய தேவயானையின் பக்கத்தில் இருப்பவனே, ஆக்கி அளித்து அகற்றும் முத்தொழில்களையும் செய்யும் மும்மூர்த்திகளின் தலைவனான பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 260 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான
கிரியு லாவிய முலைமிசை துகிலிடு
     கபட நாடக விரகிக ளசடிகள்
          கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் ...... விரகாலே 
க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்
     முழுது நாறிக ளிதமொழி வசனிகள்
          கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் ...... பொருளாலே 
பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்
     அதிக மாவொரு பொருள்தரு பவரொடு
          பழைய பேரென இதமுற அணைபவர் ...... விழியாலே 
பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
     தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை
          பகர மாமயில் மிசைவர நினைவது ...... மொருநாளே 
அரிய ராதிபர் மலரய னிமையவர்
     நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ
          அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக ...... இளையோனே 
அரிய கானக முறைகுற மகளிட
     கணவ னாகிய அறிவுள விதரண
          அமரர் நாயக சரவண பவதிற ...... லுடையோனே 
தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
     சரிவு றாநிலை பெறுதவ முடையவர்
          தளர்வி லாமன முடையவ ரறிவினர் ...... பரராஜர் 
சகல லோகமு முடையவர் நினைபவர்
     பரவு தாமரை மலரடி யினிதுற
          தணிகை மாமலை மணிமுடி யழகியல் ...... பெருமாளே.
மலை போன்ற மார்பின் மேல் ஆடையை அணிந்துள்ள கபட நாடகம் ஆடும் தந்திரக்காரிகள், முட்டாள்கள், கெட்ட நோய்களை இடம் கொண்டுள்ள தேகத்தை உடையவர்கள், வெகு சாமர்த்தியமாக, (தங்கள் மீது) அன்பு வைத்தவர்களோடு மணம் செய்து கொள்வதாகக் கூறி பிறகு நழுவி விடுபவர்கள், முழுதும் துர் நாற்றம் வீசுபவர்கள், இன்பம் உண்டாகும்படி பேசுபவர்கள், படுக்கையின் மீது ஆடவர் மனம் உருகும்படி தழுபவர்கள், பொருள் காரணமாக அன்பு கலவாத ஆசையுடன் சண்டை செய்பவர்கள், அதிகமாக ஒரு பொருளைக் கொடுப்பவர்களிடம் (அவர்களோடு) பழைய உறவினர் போல இன்பம் பிறக்க அணைபவர்கள், கண்களால் அம்பு செலுத்துவது போல காரியத்தை வெல்லும் திருடிகள், (அத்தகைய) விலைமாதர்களை நான் எண்ணாதபடிக்கு, அடைய வேண்டிய நற் கதியைப் பெறும் வழியை, எனக்கு நீ போதிக்க, சிறந்த மயில் மேல் வர நீ நினைக்கும்படியான ஒரு நாள் உண்டாகுமோ? திருமால், ருத்திரன் என்னும் மேலோர், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன், தேவர்கள் (தத்தம் தொழிலில்) நிலை பெற ஒட்டாமல் துன்பப்பட, உடனே விரைந்து சென்று, அசுரர்கள் தூளாகுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய ஆறு முக இளையோனே, அருமையான வள்ளி மலைக் காட்டில் உறைகின்ற குறமகள் வள்ளி நாயகியின் கணவனாகிய, அறிவுள்ள தயாள குணம் படைத்தவனே, தேவர்களின் தலைவனே, சரவணபவனே, வெற்றியை உடையவனே, தரும நீதி வாய்ந்தவர்களும், வேதம் கற்றவர்களும், பொறுமை உடையவர்களும், தவறுதல் இல்லாத நிலைத்த வகையில் தவம் புரிபவர்களும், சோர்வு இல்லாத மனத்தை உடையவர்களும், அறிஞர்களும், மேலான அரசர்களும், எல்லா உலகங்களுக்கும் அதிபர்களும், உன்னை நினைந்து போற்றுபவர்களும் தொழும் தாமரைமலர் போன்ற திருவடி இனிது பொருந்த திருத்தணி மாமலையின் அழகிய உச்சியில் அழகு விளங்க வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 261 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் ...... தனதான
கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
     கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக் 
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
     கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும் 
அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
     றறவுநெக் கழிகருக் ...... கடலூடே 
அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
     றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ 
பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
     பொறியிலச் சமணரத் ...... தனைபேரும் 
பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
     புகலியிற் கவுணியப் ...... புலவோனே 
தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
     தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந் 
தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
     தணியினிற் சரவணப் ...... பெருமாளே.
பொய்ம்மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்புலன்களின் வழியே செல்லுபவர்களை, கெட்ட இப்பிறப்பு (நற் பிறப்பு) ஆகாமல் அழியும்படி விழிக்கின்ற விழியை உடைய கெட்டவர்களை, அறிவில்லாத குருடர்களை, திருடர்களை, சமயவாதிகளை (நான்) நெருங்குதலுற்று, அறிவு சற்றும் அறிதல் இல்லாமல், தளர்ச்சி உற்று, (மனம் பக்தியால்) நெகிழ்தல் இல்லாமல், குறைபாடு அடைந்து மிகவும் கெட்டு அழிவு தரும் பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போதல் நீங்கி, முன்னுக்கு வந்து, நல்லுணர்வு பெறும் நலமான வழியில் மேம்பாடு அடைந்து, உன் திருவடியிணையை அணுகப் பெறுவேனோ? அறிவுள்ள (கூன்) பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும், சிவ மணத் திருநீற்றை (மதுரையில்) பரப்பினவரும், சீகாழியில் உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய திருஞான சம்பந்தரே, அழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி, திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே, சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும் பூவைத் தருகின்ற திருத்தணிகையில் (வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே. 
* சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: பிரமபுரம், வேணுபுரம், தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, கொச்சை, வெங்குரு, கழுமலம், முதுநகர், புகலி என்பன.
** செரு = போர். போர் முடிந்தும் கோபம் தணியாத முருகன் திருத்தணியில் தங்கியதும் கோபம் தணிந்தது. முதலில் செருத்தணி என்றிருந்த பெயர் திருத்தணியாக மாறியது.
பாடல் 262 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனனந் தனனத் தனனந் தனனத்
     தனனந் தனனத் ...... தனதான
குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
     கொலையின் பமலர்க் ...... கணையாலே 
குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
     கொடிகொங் கையின்முத் ...... தனலாலே 
புயல்வந் தெறியக் கடனின் றலறப்
     பொருமங் கையருக் ...... கலராலே 
புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
     புயம்வந் தணையக் ...... கிடையாதோ 
சயிலங் குலையத் தடமுந் தகரச்
     சமனின் றலையப் ...... பொரும்வீரா 
தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
     தனமொன் றுமணித் ...... திருமார்பா 
பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
     பணியுந் தணிகைப் ...... பதிவாழ்வே 
பரமன் பணியப் பொருளன் றருளிற்
     பகர்செங் கழநிப் ...... பெருமாளே.
குயில் போன்ற பேச்சுக்களை உடையவளாகிய இவள் குயிலின் சோக கீதத்தால் செய்வது அறியாமல் நின்று வேதனையுற்று அலைவதாலும், கொலையே புரியவல்ல இன்ப நீலோத்பல மலராகிய (மன்மதனது ஐந்தாவது) பாணத்தாலும், குளிர்ந்துள்ள, வெண்ணிறமான சிறந்த நிலாவின் ஒளிக் கொடி போன்ற இவளுடைய மார்பின் மீதுள்ள முத்து மாலை (பொரிபடுமாறு வீசும்) நெருப்பாலும், புயல் காற்று வந்து வீசும் அந்தக் கடல் விடாது நின்று செய்யும் பேரொலியாலும், கூடி நின்ற பெண்கள் தூற்றுகின்ற வசை மொழியாலும், உனது புயத்தைக் கூட (விரும்பி) மிகவும் தளர்கின்ற, தனிமையில் இருக்கும் (இவளுக்கு) உன் தோள் வந்து அணைப்பதற்குக் கிட்டாதோ? கிரெளஞ்ச மலை அழிய, மற்ற ஏழு கிரிகளும் உடைபட்டு அழிய, யமன் நின்று (அங்குமிங்கும்) அலையும்படி சண்டை செய்த வீரனே, (கேட்டதை அளிக்கும்) கற்பக மரங்கள் உள்ள விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானை, வள்ளிமலைக் காட்டிலே வளர்ந்த குறப் பெண்ணாகிய வள்ளி (ஆகிய இருவரின்) சிறந்த மார்பகங்கள் பொருந்தும் அழகிய மார்பை உடையவனே, ஆகாயத்தில் பொருந்தும் நிலவானது குளிர்ந்த சோலைகளின் உயர்ந்த மரங்களுக்குக் கீழாக விளங்கும் திருத்தணியில் வாழ்கின்ற செல்வமே, சிவபெருமான் வணங்க அன்று அருளுடன் (பிரணவப் பொருளை) போதித்தவனும், செங்கழுநீர்ப் பூ தினமும் மலரும் தணிகை மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.குயில், நிலவு, மன்மதன், மலர் அம்பு, அலைகடல், மாதர்களின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 263 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனன தனத்தன தனன தனத்தன
     தனன தனத்தன தனன தனத்தன
          தனன தனத்தன தனன தனத்தன ...... தனதான
குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
     அரிய வனத்திடை மிருக மெனப்புழு
          குறவை யெனக்கரி மரமு மெனத்திரி ...... யுறவாகா 
குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
     கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி
          குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் ...... நகையாமல் 
மருவு புயத்திடை பணிக ளணப்பல
     கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு
          மதன சரக்கென கனக பலக்குட ...... னதுதேடேன் 
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
     அமையு மெனக்கிட முனது பதச்சரண்
          மருவு திருப்புக ழருள எனக்கினி ...... யருள்வாயே 
விருது தனத்தன தனன தனத்தன
     விதமி திமித்திமி திமித திமித்திமி
          விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு ...... வெகுதாளம் 
வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை
     நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
          மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட ...... விடும்வேலா 
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
     அயனை முடித்தலை யரியு மழுக்கையன்
          அகில மனைத்தையு முயிரு மளித்தவ ...... னருள்சேயே 
அமண ருடற்கெட வசியி லழுத்திவி
     ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ
          டழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...... பெருமாளே.
குருவி போலவும், பல கழுகுகள் நரிகள் கூட்டம் போலவும், அரிய காட்டில் உள்ள விலங்குகள் போலவும், புழு, குறவை மீன் போலவும், யானை போலவும், மரம் போலவும் திரிபவர்களுடைய நட்பு கூடாது. குமரிப் பெண்களால் வரும் மனக் கவலை தரும் செயல்களில் படிந்து, மனத்துயரும் கொடுமைகளும் நோய்களும் வருத்த, அலைந்து திரிகின்ற நிலை கெட்டவன் இவன் என்றும், இழிவானவன், தரித்திரன் இவன் என்றும் என்னைப் பலரும் பரிகாசம் செய்யாமல், பொருந்திய தோள்களில் அணிகலன்கள் நெருங்கி விளங்கவும், பல யானைகள், குதிரைகள் சூழ்ந்து வர, பட்டு ஆடைகளை உடுத்தி, ஒப்பற்ற மன்மதனின் வியாபாரப் பண்டம் இவன் என்று (கண்டோர் வியக்க), பொன்னாலாகிய பல்லக்கில் செல்லும் பெருமையை நான் தேட மாட்டேன். இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப்பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். (ஆதலால் அத்திருவடியைச்) சேருதற்குரிய திருப்புகழ் பாக்களை நான் பாட எனக்கு அருள் புரிவாயாக. விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு என வெகு தாளம் வெற்றி முழக்கமாக, தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனவும், குகு என்றும் பல தாளங்கள் அச்சம் தரும்படியாக ஒலித்து, புகழ் பெற்ற ஆதிசேஷனுடைய மணிமுடித் தலைகள் நெறுநெறு என்று இடிபட, திசைகள் அதிர்ச்சி கொள்ளும்படி நெருங்கி அடைபட, தங்கள் கூட்டம் அழியும்படி சண்டை செய்த அசுரர்கள் சிதறுண்டு முறிய செலுத்திய வேலனே, அரிய திரி புரங்கள் எரிந்து விழ (நெற்றிக் கண்ணால்) விழித்தவனும், பிரமனது முடித்தலையை அரிந்த மழுவை ஏந்திய கையை உடையவனும், எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவனுமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, (திருஞான சம்பந்தராக வந்து) சமணர்களின் உடல் அழிய அவர்களைக் கழுவில் ஏறச்செய்தவனே, விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் போற்றி வளர்த்த மங்கையாகிய தேவயானை, குற மகளாகிய வள்ளி இவர்களுடன் அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே. 
பாடல் 264 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனத்த தனத் தனத்த தனத்
     தனத்த தனத் தனத்த தனத்
          தனத்த தனத் தனத்த தனத் ...... தனதான
குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
     கழுத்து மணித் தனப்பு ரளக்
          குவித்த விழிக் கயற்சு ழலப் ...... பிறைபோலக் 
குனித்த நுதற் புரட்டி நகைத்
     துருக்கி மயற் கொளுத்தி யிணைக்
          குழைச்செ வியிற் றழைப்ப பொறித் ...... தனபாரப் 
பொலித்து மதத் தரித்த கரிக்
     குவட்டு முலைப் பளப்ப ளெனப்
          புனைத்த துகிற் பிடித்த இடைப் ...... பொதுமாதர் 
புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
     குலுக்கி லறப் பசப்பி மயற்
          புகட்டி தவத் தழிப்ப வருக் ...... குறவாமோ 
தலத்த நுவைக் குனித்தொ ருமுப்
     புரத்தை விழக் கொளுத்தி மழுத்
          தரித்து புலிக் கரித்து கிலைப் ...... பரமாகத் 
தரித்து தவச் சுரர்க்கண் முதற்
     பிழைக்க மிடற் றடக்கு விடச்
          சடைக்க டவுட் சிறக்க பொருட் ...... பகர்வோனே 
சிலுத்த சுரர்க் கெலித்து மிகக்
     கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
          செழிக்க அருட் கொடுத்த மணிக் ...... கதிர்வேலா 
தினைப்பு னமிற் குறத்தி மகட்
     டனத்தின் மயற் குளித்து மகிழ்த்
          திருத்த ணியிற் றரித்த புகழ்ப் ...... பெருமாளே.
மயிர் அவிழ்ந்து கலைந்து போக, சங்கு போன்ற கழுத்தில் உள்ள மணிமாலை மார்பகங்களின் மேல் புரள, குவிந்த கண்கள் கயல் மீனைப் போல சுழல, பிறைச் சந்திரனைப் போல வளைவுற்ற நெற்றியை நெறித்து, சிரித்து மனதை உருகச் செய்து, காம ஆசையை உண்டு பண்ணி, இணையான குண்டலங்கள் காதுகளில் விளங்க, தேமல் கொண்ட தனப் பாரம், அழகு பெற்று மதம் கொண்ட யானை போன்றும் மலை போன்றும் மார்பகங்கள் பளப்பள என்று ஒளியிட, இறுக்க உடுத்த ஆடையைக் கொண்ட இடுப்பை உடைய பொது மகளிர் தோள்களினாலும், வளைப் பிலுக்காலும், நடைக் குலுக்காலும் மிகவும் இன் முகம் காட்டி ஏய்த்து மோகத்தை ஊட்டி, தவத்தையும் அழிக்கக் கூடிய பொது மகளிர்களின் சம்பந்தம் ஆகுமோ? பூமியின் மத்தியில் விளங்கும் மேருவாகிய வில்லை வளைத்து, ஒப்பற்ற முப்புரங்களை பொடிபடும்படி எரித்து, மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி, புலி, யானை இவைகளின் தோலை ஆடையாக அணிந்து, தவம் நிறைந்த தேவர்கள் முதலானோர் பிழைக்கும் பொருட்டு கண்டத்தில் அடக்கிய விஷத்தை உடைய சடைப் பெருமானாகிய சிவபெருமான் மகிழ்ச்சி பெற பிரணவப் பொருளைக் கூறியவனே, சண்டை இட்ட அசுரர்களை வென்று, அவர்களை நிரம்ப எரியிட்டு, வேதம் துதி செய்ய அதனால் தேவர்கள் செழிப்புற அருள் புரிந்த அழகிய சுடர் வேலனே, தினைப் புனத்தில் குறப் பெண் வள்ளியின் மார்பகங்கள் மீதான மோகத்தில் குளித்து மகிழும் பெருமாளே, திருத்தணிகை மலையில் நிலைத்து வீற்றிருக்கும் புகழ் வாய்ந்த பெருமாளே. 
பாடல் 265 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
     குடையிட் டகுறைப் ...... பிறையாலே 
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
     குயிலுக் குமினித் ...... தளராதே 
இவளைத் துவளக் கலவிக் குநயத்
     திறுகத் தழுவிப் ...... புயமீதெ 
இணையற் றழகிற் புனையக் கருணைக்
     கினிமைத் தொடையைத் ...... தரவேணும் 
கவளக் கரடக் கரியெட் டலறக்
     கனகக் கிரியைப் ...... பொரும்வேலா 
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
     கலவிக் கணயத் ...... தெழுமார்பா 
பவளத் தரளத் திரளக் குவைவெற்
     பவையொப் புவயற் ...... புறமீதே 
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
     பதியிற் குமரப் ...... பெருமாளே.
(ஐந்தாவது பாணமாகிய) நீலோற்பல மலர்* அம்பைச் செலுத்திய மன்மதனுடைய முடியின் மீது குடையாக அமைத்த, களங்கத்தை உடைய சந்திரனுடைய (வெப்பத்துக்கும்), பழிச்சொல் பேசி நெருங்கிவரும் மங்கையர்க்கும், இனிய குரலுடன் கூவும் குயிலுக்கும் இனிமேல் தளராதவாறு, (உன் மேல் காதல் கொண்ட) இந்தப் பெண்ணை துவள்கின்ற கூடல் இன்பத்துக்கு விரும்பி அழுத்தமாகத் தழுவி, உன் தோள்களின் மேல் விளங்கும் இனிமையான (கடப்ப) மாலையை ஒப்புதல் இல்லாத அழகுடன் இவள் அணிந்து கொள்ள, கருணையுடன் நீ தந்தருள வேண்டும். உணவு உண்டை உண்பனவும், மதம் பாயும் சுவட்டை தாடையில் கொண்டனவுமான யானைகள் எட்டும் (அஷ்ட திக்கஜங்களும்) அலறிப் பயப்பட, பொன் மலையாகிய கிரெளஞ்சத்துடன் போர் செய்த வேலனே, அசோக* மலர்க் கணையைத் தோளில் ஏந்திய மன்மதனின் வேண்டுமென்றே அம்பெய்த செயலால் (வள்ளியைத் தழுவ) மனம் உருகிச் சேருதற்கு விரும்பி எழுகின்ற மார்பனே. பவளம், முத்து இவை திரண்டுள்ள குவியல்கள் மலை போல் கிடக்கும் வயற் புறங்களின் மேல் சங்கின் கூட்டங்கள் நிறைந்த திருத்தணிகை என்னும் தலத்தில் (வீற்றிருக்கும்) குமரப் பெருமாளே. 
* மன்மதனுடைய ஐந்து கணைகளாவன: தாமரை, மா, அசோகம், முல்லை, நீலோற்பலம். அசோகமலருக்கு செயலை என்று பெயர் உண்டு.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் செவிலித்தாய் பாடுவதுபோல் அமைந்தது.மன்மதன், அவனது மலர்க் கணைகள், சந்திரன், பழிச்சொல் பேசும் மங்கையர், குயில் ஓசை இவையெல்லாம் தலைவனைப் பிரிந்த தலைவியின் விரகதாபத்தைக் கூட்டுவன.
பாடல் 266 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தாந்தன தத்தன தத்தன தத்தன
     தாந்தன தத்தன தத்தன தத்தன
          தாந்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
     பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்
          கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர் ...... புயமீதே 
கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்
     வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்
          கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் ...... பலநாளும் 
ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ
     ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ
          ¡£ங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள் ...... பொருள்தீரில் 
ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்
     பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட
          ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட ...... லருள்வாயே 
காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
     வேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு
          காண்டிப அச்சுத னுத்தம சற்குணன் ...... மருகோனே 
காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்
     வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
          கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி ...... யிளையோனே 
தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை
     வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ
          தேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறை ...... குவைவானந் 
தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு
     வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர்
          சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறை ...... பெருமாளே.
கூந்தலை அவிழ்த்தும் முடித்தும் மினுக்குபவர்கள். பாய்கின்ற கண்களுக்கு மை இட்டு மிரட்டுபவர்கள். கோபக் குறிப்பான மொழிகளைச் சொல்லும் விலைமாதர்கள். தம்மிடம் வந்தவர்களின் தோள்களின் மேல் கோங்கு மர முகையைப் போன்ற மார்பகத்தால் அழுத்துபவர்கள். விருப்பத்துடன் முன்னர் தழுவி பின்னர் துன்பம் ஊட்டும் சண்டை இடுபவர்கள். வளைத்த பிறை போன்ற நகக் குறியை வைப்பவர்கள். பல நாளும் கொடுத்து வந்த பொருளுக்கு மேல் அதிகமாகப் பெற தங்கள் விருப்பத்தை எடுத்துச் சொல்பவர்கள். தங்கள் விருப்பம் நிறைவேறும் வழி அற்ற போது அழுகைக் குரலைக் காட்டுபவர்கள். தீங்கு செய்யும் துன்பம் தரும் குணத்தைக் கொண்ட பயனற்றவர்கள். (கையில் தமக்குப் கொடுப்பதற்குப்) பொருள் இல்லாது போனால் மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி வைப்பவர்கள். ஆகிய பொது மகளிருடைய நட்பு ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ அருளவில்லையே. எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள் புரிவாயாக. (சுக்கி¡£வனை) காந்தள் மலர் மாலையை அணியச் செய்து (வாலியின்) எதிரே போருக்கு அனுப்பி, ஒப்பற்ற அந்த வாலி என்னும் குரங்கு அரசை அவன் கவசத்துடன் அழியக் கொன்ற காண்டீபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதனும், உத்தமமான நற் குணம் வாய்ந்தவனும் ஆகிய (ராமபிரானுடைய) மருகனே, (உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப் பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா, பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும் வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர் வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம் போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான விநாயகருக்குத் தம்பியே, இனிமையுள்ள தினையை விதைத்த வேடர்கள் வருவதை அறிந்து தனி வேங்கை மரத்தின் அழகு விளங்க நின்றவனே, தேன் போல இனிய சொற்களை உடைய வள்ளியைச் சேர்வதற்கு (அவள் இருந்த) தினைப் புனத்தைச் சேர்ந்து அங்கு இருந்தவனே, ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்த மூங்கிலின் கூட்டத்துக்கு அருகே நெருங்கி நிற்பனவும், பொன் போல ஒளி வீசும் குவளை மலர்கள் சுனையில் சுற்றிலும் (எங்கும்) பூத்திருப்பதுமான திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 267 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான
கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
     கோடா லழைத்துமல ...... ரணைமீதே 
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை
     கோல்போல் சுழற்றியிடை ...... யுடைநாணக் 
கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு
     காதோ லையிற்றுவிழ ...... விளையாடுங் 
காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம
     கானூ ருறைக்கலக ...... மொழியாதோ 
வீரா ணம்வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
     வேதா கமத்தொலிகள் ...... கடல்போல 
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்
     வேலா திருத்தணியி ...... லுறைவோனே 
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
     மாபோ தகத்தையருள் ...... குருநாதா 
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு
     மாலோ டணைத்துமகிழ் ...... பெருமாளே.
கூர்மையான வேலாயுதத்தைப் பழித்து வென்ற கண்களாலே வருபவரை மயக்குவித்து, மலை போன்ற மார்பால் வரவழைத்து, மலர்ப் படுக்கை மேல் தம்பலப் பூச்சி போலச் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும்படி மார்புறத் தழுவி, கண்ணை அம்பு போலச் சுழற்றி, இடையில் உள்ள ஆடை நெகிழவும், மேகம் போல் கருப்பான கூந்தல் சரியவும், வாய் அதட்டும் சொற்களைப் பேசவும், இரண்டு காதுகளில் உள்ள ஓலைகளும் கழன்று விழவும், லீலைகளைச் செய்து காம மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மகளிருடன் மகிழ்வுற்று, யமனுடைய நரகில் சேர்ந்து இருக்கும்படியான குழப்பம் என்னை விட்டு அகலாதோ? வீராணம் என்னும் பெரிய பறை, வெற்றி முரசாகிய ஜய பேரிகை, மேள வகை, திமிலை என்ற பறை, வேதாகம ஒலிகள் இவையெல்லாம் கடல் போல மிக்க சிறப்புடன் முழக்கம் செய்ய, எதிர்த்து வந்த சூரர்கள் இறக்கும்படி செலுத்திய வேலாயுதனே, திருத்தணிகைப் பதியில் வீற்றிருப்பவனே, மன்மதன் இறக்கும்படி சிரித்த தந்தையின் காதுகளில் சிறந்த ஞானோபதேசத்தை அருளிய குரு நாதனே, திருமால் பெற்ற வள்ளி அம்மை மிக்க மகிழ்ச்சிகொள்ள, அதிக ஆசையுடன் அவளை அணைத்து மகிழ்ந்த பெருமாளே. 
பாடல் 268 - திருத்தணிகை
ராகம் - நாதநாமக்ரியா; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தந்து தானன தனதன தனதன
     தந்து தானன தனதன தனதன
          தந்து தானன தனதன தனதன ...... தனதான
கொந்து வார்குர வடியினு மடியவர்
     சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
          கொண்ட வேதநன் முடியினு மருவிய ...... குருநாதா 
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
     செந்தில் காவல தணிகையி லிணையிலி
          கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத 
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
     சந்தி யாதது தனதென வருமொரு
          சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச் 
சஞ்ச ¡£கரி கரமுரல் தமனிய
     கிண்கி ணீமுக விதபத யுகமலர்
          தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே 
சிந்து வாரமு மிதழியு மிளநவ
     சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
          செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே 
செண்ப காடவி யினுமித ணினுமுயர்
     சந்த னாடவி யினுமுறை குறமகள்
          செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும் 
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
     குங்கு மாசல யுகளமு மதுரித
          இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம 
இந்த்ர கோபமு மரகத வடிவமு
     மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
          மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே.
பூங்கொத்துக்களால் நிறைந்த குராமரத்து* அடியிலும், அடியார்களின் இதயத் தாமரையின் நடுவிலும், பல நெறிகளைக் கொண்ட வேதத்தின் நல்ல முடிவிலும், விளங்குகின்ற குருநாதனே, கொங்கு நாட்டில் அழகு நிறைந்த பழனியில் ஆறுமுகனாக எழுந்தருளியவனே, திருச்செந்தூரில் காவற்காரனாக விளங்குபவனே, திருத்தணிகையில் இணையில்லாதவனாக விளங்குபவனே, கூட்டமாக இரைச்சலுடன் தர்க்கித்து வருகின்ற, அநேக யுக்திகளைக்கொண்டு கொண்டு விரோதிக்கின்ற, சமயவாதிகளால் பெறுவதற்கு அரிதானதும், அன்னியர்களால் சந்திக்க முடியாததும், தனக்கே உரிய ஓர் ஒப்பற்ற பரம்பரையாக வருவதும், இதுவே என்று எனக்கு உபதேசித்து, வாசனை பொருந்திய கடம்பமாலை அணிந்ததும், வண்டினம் ஒலிப்பதும், பொன்னால் ஆன சிறுசலங்கைகளைத் தரித்ததுமான, சுகம் தரும் இரு திருவடித் தாமரைகளைத் தந்த பெரிய கிருபையை கனவிலும் நனவிலும் மறவேன். நதியையும் (கங்கை), ஆத்திமலரையும், கொன்றையையும், இளமையும் புதுமையும் உடைய பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்துள்ள சிவந்த சடையுடைய சிவபெருமானது அழகிய குழந்தையாக அவதரித்த முருகனே, செண்பகமரங்கள் நிறை வனத்திலும், பரண்மீதும், உயரமான சந்தன மரக் காட்டிலும் வாசம் செய்த குறமகள் வள்ளியின் செம்பொன் சிலம்பை அணிந்த தாமரை போன்ற பாதங்களையும், வளையல் அணிந்த இளம் மூங்கில் போன்ற கரங்களையும், சந்திரனை ஒத்த ஒளிமிக்க முகத் தாமரையையும், கஸ்தூரியும் குங்குமமும் தரித்த மார்பையும், இனிமையான யாழ் போன்றதும் அமிர்தம் போன்றதுமான வசனத்தையும், இளநகையையும், வசீகரிக்கும் (இந்த்ரகோபம் என்ற சிவந்த பூச்சி போன்ற) சிவப்பான அதரங்களையும், மரகதப் பச்சை வடிவத்தையும், வானவில் போன்ற புருவங்களையும், இரு குண்டலங்களோடு போர்புரிவது போல காதுவரை நீண்ட கண்களின் நீலமணிகளையும், மடல் ஏட்டில்** எழுதி வர்ணித்த பெருமாளே. 
* குராமரம்: முருகன் விரும்பி அமரும் மரம். திருவிடைக்கழி என்ற தலத்தில் குராமரத்தின் கீழே முருகன் வீற்றிருக்கிறான்.
** மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
பாடல் 269 - திருத்தணிகை
ராகம் - ஆபோகி; தாளம் - கண்டசாபு - 2 1/2 
தகிட-1 1/2, தக-1
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ...... தனதான
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் 
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் 
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் 
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் 
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
     தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி 
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
     தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் 
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
     சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா 
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
முருகன் அடியார்களை கோபிப்பவர்களது தலைக்கும், அவர்களைப் பகை செய்தவர்களது குடும்பத்திற்கும், அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும், அவர்களைக் கண்டு கோபமாகச் சிரிப்பவர்கட்கும், அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும், திருப்புகழே நெருப்பாகி (அடியோடு அழிக்குமென) யாம் நன்கு அறிவோம். (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும் அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும், (பாடுவோர், கேட்போரின்) மனதையும் உருக்குவதும், மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம் இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை அறுப்பதும், அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே எரிப்பதும், மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய, எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய். தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் (அதே ஒலியுடன்) பேரிகைகள் முழங்கவும், (அதே ஒலியுடன்) உடுக்கைகள் முழங்கவும், சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த கொடிய சூராதி அசுரர்களின் கோபத்தையும், அறுத்தெறிந்த பிணமலைகள் யாவையும், புன்னகை புரிந்தே அதிலெழுந்த அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே, தினைப்பயிர் விளையும் மலைக் குறவள்ளியை மார்புற அணைத்து இன்புற்று, உயர்ந்தோர் மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 270 - திருத்தணிகை
ராகம் - சாமா ; தாளம் - ஆதி 2 களை 
- எடுப்பு - 3/4 இடம்
தனத்த தத்தன தனதன தனதன
     தனத்த தத்தன தனதன தனதன
          தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
     செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
          செனித்த தெத்தனை திரள்கய லெனபல ...... வதுபோதா 
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
     செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
          செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ ...... தளவேதோ 
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
     கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
          வதைத்த தெத்தனை யளவிலை விதிகர ...... மொழியாமல் 
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
     மடைக்கு லத்தனை மதியழி விரகனை
          மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் ...... புரிவாயே 
தனத்த னத்தன தனதன தனதன
     திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
          தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ 
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
     தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
          தமித்த மத்தள தமருக விருதொலி ...... கடல்போலச் 
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
     திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
          தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை ...... பொரும்வேலா 
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
     முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
          திருத்த ணிப்பதி மருவிய குறமகள் ...... பெருமாளே.
சிறிய எள்ளு, தினை, சிறு மணல் ஆகியவற்றின் அளவுள்ள உடலினை எடுத்து மறைந்த ஜன்மங்கள் எத்தனை? அலை வீசும் கடலுக்கடியில் பெருத்த சுறா மீனிலிருந்து சிறிய கடல் ஜந்து வரை எடுத்த பிறவிகள் எத்தனை? அவையெல்லாம் போதாவென்று மலைகளிலும் சுனைகளிலும் ஜனித்த பிறவிகள் எத்தனை? பலவிதமான உடம்புகளின் புகுந்து வளர்ந்து கீழ்மைக்குரிய பெண்களின் மார்பிலே மையல் கொண்டு அலைந்தமை எத்தனை? யமன் பல பல பிறவிகளிலும் பறித்துக் கொண்ட உயிர்கள் எத்தனை? மனத்திலேதான் எத்தனை வஞ்சகமான எண்ணங்கள்? வேண்டுமென்றே கெடுத்த மற்றவர்களின் குடிகள்தாம் எத்தனை? கொடிய மிருகம்போல் மற்ற உயிர்களை வதைத்தது எத்தனை? இவை யாவற்றையும் எண்ணினால் அளவிட முடியாது. விதி வகுத்த வழியினின்று மாறாமல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை? கொசுவைப் போன்ற அற்பனகிய என்னை, முரட்டுக்குணம் உடைய என்னை, மூடர்கள் குலத்தனான என்னை, அறிவற்ற காமாதூரனான என்னை, உன் மலரடிகளில் என் நெஞ்சை வைத்து உருகுதற்கு இனியாகிலும் நீ அருள் புரிவாயாக. தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி என்ற ஓசையோடு கூடிய சந்தத்தில் தமக்கே உரிய வெற்றி ஒலியோடு மத்தளமும், தமருகம் என்ற முரசும் கடல் அலை ஓசை போல ஆர்ப்பரிக்கவும், கோபம் பொங்கும் போர்க்களத்தில் இரத்தம் கொப்பளித்திடவும், போரில் யானைகளும், அசுரர்களும், குதிரைகளும், விற்களும் தெறித்து சின்னாபின்னமாக விழுந்திடவும், கழுகும் நரியும் பிணங்களைத் தின்ன, மாமிச மலை மீது நின்று சூரனோடு போர் செய்த வேலனே, மனவளம் மிக்க உத்தமர்களான சிவனடியார்களும், தவமுநிவர் கூட்டங்களும் தேன் நிறைந்த மலர்களைக் கொண்டு பணிகின்ற திருத்தணிகை என்ற திருப்பதியிலே வீற்றிருக்கும் குறப்பெண் வள்ளியின் மணவாளப் பெருமாளே. 
பாடல் 271 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனன தனனத் தனன தனனத்
     தனன தனனத் ...... தனதான
சொரியு முகிலைப் பதும நிதியைச்
     சுரபி தருவைச் ...... சமமாகச் 
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
     சுமட ரருகுற் ...... றியல்வாணர் 
தெரியு மருமைப் பழைய மொழியைத்
     திருடி நெருடிக் ...... கவிபாடித் 
திரியு மருள்விட் டுனது குவளைச்
     சிகரி பகரப் ...... பெறுவேனோ 
கரிய புருவச் சிலையும் வளையக்
     கடையில் விடமெத் ...... தியநீலக் 
கடிய கணைபட் டுருவ வெருவிக்
     கலைகள் பலபட் ...... டனகானிற் 
குரிய குமரிக் கபய மெனநெக்
     குபய சரணத் ...... தினில்வீழா 
உழையின் மகளைத் தழுவ மயலுற்
     றுருகு முருகப் ...... பெருமாளே.
மழை பொழிகின்ற மேகத்தையும், பதும நிதியையும், காமதேனுவையும், கற்பக மரத்தையும் (கொடையில்) நீ ஒப்பாய் என்று சொல்லிப் புகழ்ந்தாலும், மனம் ஓர் எள் அளவும் இளகி இரங்குதல் இல்லாத கீழ் மக்களின் அருகில் சென்று, இலக்கியத் தமிழ்ப் புலவர்கள் தெரிந்து பாடிய அருமையான பழைய பாடல்களைத் திருடியும், திரித்து நுழைத்தும் பாடல்களைப் பாடி, திரிகின்ற மயக்க அறிவை விட்டு, குவளை மலர் தினமும் மலர்கின்ற, உன்னுடைய, திருத்தணிகை மலையின் பெருமையைக் கூறும்படியான பாக்கியத்தை நான் பெறுவேனோ? (வள்ளியின்) கரிய புருவம் என்னும் வில் (காம வேதனையால்) வளைந்து சுருங்க, (காமனது ஐந்தாவது) கடைசிப் பாணமானதும்*, விஷம் நிறைந்ததும் ஆகிய நீலோற்பலம் என்னும் கொடுமை வாய்ந்த அம்பு உன் மேல் பட்டு, நீ அதனால் விரக வேதனை மிகுந்து, மிகுந்த அச்சத்துடன், மான்கள் பல உள்ள வள்ளி மலைக் காட்டுக்குச் சென்று, அவ்விடத்துக்கு உரிய குமரியாகிய வள்ளிக்கு அபயம் என்று உரைத்து, அவளது இரண்டு பாதங்களிலும் விழுந்து, பின்பு, மான் பெற்ற மகளாகிய வள்ளியைத் தழுவ மோகம் கொண்டு உருகி நின்ற முருகப் பெருமாளே. 
* நீலோற்பல மலர் மன்மதனின் ஐந்தாவது ஈற்றுப் பாணம். மற்ற கணைகள் - தாமரை, மா, அசோகம், முல்லை.
பாடல் 272 - திருத்தணிகை
ராகம் - கானடா ; தாளம் - ஆதி ; - எடுப்பு - 1/2 இடம்
தாத்தன தத்தன தானன தானன
     தாத்தன தத்தன தானன தானன
          தாத்தன தத்தன தானன தானன ...... தனதான
தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு
     சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு
          சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவமூழ்குந் 
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
     போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
          சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப் 
போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்
     போற்றுத லற்றது ரோகியை மாமருள்
          பூத்தம லத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப் 
போக்கிவி டக்கட னோஅடி யாரொடு
     போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது
          போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் ...... புரிவாயே 
மூக்கறை மட்டைம காபல காரணி
     சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
          மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி ...... முழுமோடி 
மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
     பேற்றிவி டக்கம லாலய சீதையை
          மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு ...... முகிலேபோய் 
மாக்கன சித்திர கோபுர நீள்படை
     வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
          மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் ...... மருகோனே 
வாச்சிய மத்தள பேரிகை போல்மறை
     வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை
          வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே.
தாக்கிச்செய்ய வேண்டிய போருக்கு ஒரு சாரைப்பாம்பு சென்றதைப் போன்றவனை (கோழை), அருகில் வேறு ஒருவரையும் சாக்ஷியாக வைத்து உண்பிக்காமல் தான்மாத்திரம் உண்ணுபவனை (சுயநலவாதி), திருநீற்றைத் தரிக்கிற சைவசாஸ்திர வழிக்கு வெகு தொலைவில் உள்ளவனை (சிவத்வேஷி), மரத்தைத் தாங்கும் வேர்போல் உயிரைத்தாங்கும் தவத்தில் மூழ்கும் நற்பயனை விடுத்து வீணில் உழலும் பாவியை (நாஸ்திகன்), புலவர் போல நடித்துக்கொண்டு, அன்போடு உன்னை நினையாமல், சண்டை செய்து தமிழிலே வைது வாதிட்டுக் குரைக்கும் நாயினை (நாய் போன்றவன்), இந்தநாள் வரைக்கும் தடுமாற்றம் அடைந்து, வேறு புகலிடம் இல்லாத வீணனை (வீணன்), மெய்யறிவாளர்களைப் போற்றாதுவிட்ட துரோக சிந்தனை உடையவனை (துரோகி), பெரும் அஞ்ஞானம் நிறைந்த மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) சேர்ந்த கீழ்மகனை (மகாபாவி), பறையனுக்குச் சமானமானவனை (மிலேச்சன்), இத்தகைய பாவியாகிய அடியேனை (முருகா, நீ) நீக்கிவிடக் கடவதோ? (இதுவரை அருணகிரியார் தம்மைத் தாழ்த்திக் கொண்டு கோழை, சுயநலவாதி, சிவத்வேஷி, நாஸ்திகன், நாய்போன்றவன், வீணன், துரோகி, மகாபாவி, மிலேச்சன் என்று கூறுகிறார்). மோக்ஷ உலகில் உன் அடியார்களோடு சேர்ந்து யானும் போய் பெறக்கூடிய பாக்கியம் எனக்கு இல்லையா? போர் செய்வதும், ஒளிவிடுவதுமான வைரம் போன்ற கூரிய வேலினையும், மயிலினையும் உடையவனே, திருவருள் புரியவேண்டும். (இனி, ராமாயணக் கதைக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்). மூக்கு அறுபட்டவளும், அறிவில்லாதவளும், பெரும் வலிமையுள்ளவளும், ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக இருந்தவளும், சூர்ப்பநகையென்ற பெயருடன், மூளியான கொடியவளும், அவமதிக்கத் தக்கவளும், மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில் பிறந்தவளும், விபீஷணருக்கு சகோதரியும், முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை, அண்ணனும் அரக்கனுமான ராவணனிடம் சென்று சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில் புகுத்திவிட, தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய சீதாதேவியை மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக் கவர்ந்து ஒற்றைத் தேரிலே வைத்து மேகமண்டலம் சென்று, பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில் (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது, அந்த ராவணனின் வம்சமே வேரோடு அற்றுப்போகும்படி, அதற்குரிய வழியை நிறைவேற்றிய வில்லாதி வீரர்களின் தலைவனாம் ராமனின் மருமகனே, வாத்தியங்களான மத்தளம், பேரிகை இவற்றின் ஓசை போல வேதியரின் வேத கோஷங்கள் வாழ்த்தவும், செங்கழுநீர் மலரை நாள்தோறும் தருகின்ற நீண்ட சுனை வாய்க்கப் பெற்ற திருத்தணிகை என்னும் பெருமலையில் மேவிய பெருமாளே. 
பாடல் 273 - திருத்தணிகை
ராகம் - ........; தாளம் -
தனத்த தானன தத்தன தத்தன
     தனத்த தானன தத்தன தத்தன
          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
     வறட்டு மோடியி னித்தந டிப்பவர்
          சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் ...... வலையாலே 
திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்
     இதத்தை யோடவி டுத்தும யக்கிடு
          சிமிட்டு காமவி தத்திலு முட்பட ...... அலைவேனோ 
தரித்து நீறுபி தற்றிடு பித்தனு
     மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு
          சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு ...... முருகோனே 
சமப்ர வீணம தித்திடு புத்தியில்
     இரக்க மாய்வரு தற்பர சிற்பர
          சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண ...... குருநாதா 
வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி
     களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்
          விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட 
விதித்த வீரச மர்க்கள ரத்தமு
     மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்
          விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய ...... மறவோனே 
பெருக்க மோடுச ரித்திடு மச்சமு
     முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு
          பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் ...... கழுநீரின் 
பிணித்த போதுவெ டித்துர சத்துளி
     கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி
          பிறக்க மேவுற அத்தல முற்றுறை ...... பெருமாளே.
திருட்டுப் பெண்கள், கூத்தாடும் உதவாக்கரைகள், பசையற்ற செருக்குடன் தினந்தோறும் நடிப்பவர்கள், சிறப்புடன் உடலைக் குலுக்கி, அங்குமிங்கும் திருப்பும் கண்கள் வீசும் வலையால் (ஆண்களைத்) திகைப்பித்து, உள்ளிருக்கும் உயிரைக் கரைத்து, மனதில் இன்பத்தை ஓட விடுமாறு செய்து மயக்கத்தைத் தருகின்ற கண்களைக் கொட்டுகின்ற காம வழியில் சிக்கும்படி அல்லாடுவேனோ? திரு நீற்றை அணிந்து, மறை மொழிகளைப் பிதற்றுகின்ற பித்தனாகிய* சிவபெருமானும் இன்பத்துடன் பெரிய பிரணவப் பொருளை உபதேசிப்பாயாக, சமர்த்தனாகிய குழந்தையே என்று (உன்னைக்) கேட்கும்படியான புகழைப் பெற்ற முருகனே, பெரும் நிபுணனே, போற்றுகின்ற (அடியார்களின்) புத்தியில் இரக்கத்துடன் எழுந்தருளும் பரம் பொருளே, அறிவுக்கு எட்டாத கடவுளே, பல யோகங்களுள் சிறப்புள்ள (மெளன) யோகநிலையைக் கொண்ட தக்ஷிணா மூர்த்தியான** குரு நாதனே, (தேவர்களை) விரட்டிய சூரனை சம்ஹாரம் செய்து, போரில் கொல்லப்பட்ட இடங்களில் பேய்களுக்குப் (பிணங்களை) இரையாகக் கொடுத்து, (அவற்றின்) பசித் துன்பம் நீங்கி அப்பேய்கள் தித்திகு தித்து என்று குதித்து விளையாடும்படிச் செய்த வீரனே, போர்க் களத்தில் ரத்தமும் பெரிய பிரளய வெள்ளம் போல் ஒலித்து ஓடும்படியாக அசுரர்களை ஒழித்து, வேலாயுதத்தைப் பாய்ச்சி (அவர்களின்) உயிரை உண்ட வீரனே, நிறைந்த வளர்ச்சியோடு வசிக்கின்ற மீன்கள் தமது மனதில் மிகுந்த மகிழ்ச்சி பெறும்படியாக, அவற்றின் குறுகிய, ஆனால் பிளந்திருக்கும், வாய்களில் மூன்று வேளைகளிலும், ஒப்பற்ற செங்குவளையின் கட்டுள்ள மலர்கள் இதழ் விரிந்து ரசத் துளிகளைக் கொடுக்கும் சுனைகள் மிகுந்துள்ள திருத்தணிகையில் விளக்கம் பொருந்த அந்தத் தலத்தை விரும்பி அங்கு வீற்றிருக்கும் பெருமாளே. 
* சிவபிரானை அன்பின் மிகுதியால் சுந்தரமூர்த்தி நாயனார் 'பித்தா' என்று அழைத்தார்.
** திருத்தணிகையில் சிவபெருமானுக்குக் குருநாதராக முருக வேள் யோக நிலையில் இருந்து உபதேசம் செய்தார். ஆதலால் முருகவேள் தக்ஷிணா மூர்த்தி ஆனார். சிவனே முருக வேள் ஆதலின் தனக்குத் தானே குரு மூர்த்தியாயினார்.
பாடல் 274 - திருத்தணிகை
ராகம் - பெஹாக்; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12 
- எடுப்பு - அதீதம்
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தனனத் ...... தனதான
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
     சொற்பா வெளிமுக் ...... குணமோகம் 
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
     சுற்றா மதனப் ...... பிணிதோயும் 
இப்பா வக்கா யத்தா சைப்பா
     டெற்றே யுலகிற் ...... பிறவாதே 
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
     எட்டா அருளைத் ...... தரவேணும் 
தப்பா மற்பா டிச்சே விப்பார்
     தத்தாம் வினையைக் ...... களைவோனே 
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
     தத்தாய் தணிகைத் ...... தனிவேலா 
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
     வற்பா வைதனத் ...... தணைவோனே 
அத்தா நித்தா முத்தா சித்தா
     அப்பா குமரப் ...... பெருமாளே.
உணவைத் தரும் மண், நீர், அசைகின்ற நெருப்பு, நெருங்கி வீசும் காற்று, புகழ்மிக்க பரந்த ஆகாயம் (ஆகிய ஐம்பொரும் பூதங்களும்), மூன்று குணங்களும் (ஸத்வம், ராஜஸம், தாமசம்), மூவாசைகளும் (மண், பெண், பொன்) (மேலே சொன்னவை யாவும்) நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளதும், (ஒன்பது ஓட்டைகளுடன்) கிழிந்த தோலை வைத்துச் சுற்றி மூடப்பட்டதும், காமநோய் தோய்ந்துள்ளதும் ஆகிய இந்தப் பாவம் நிறைந்த உடல்மீது ஆசைப்படுவதை மேற்கொண்டு, உலகில் மீண்டும் மீண்டும் யான் பிறக்காமல், உன்னைத் துதிக்காதவர்களின் கல்வி சாமர்த்தியத்தில் கிடைக்காததும் அவர்களுக்கு எட்டாததுமான உன் திருவருளைத் தந்துதவ வேண்டும். தவறாமல் உன்னையே பாடித் தொழுபவர்கள் எவரெவரோ அவரவர்களின் வினைகளை நீக்குபவனே, செருக்கும், ஆக்ஞாசக்கரமும் உடைய சூரனை அழித்தவனே, மெய்யான சிவஞான பண்டிதனே, திருத்தணிகை மலைமீது வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலவனே, அந்த சர்க்கரைப் பாகு போன்ற, பாலைப் போன்ற, இனிய சொல்லும், தினைப்புனக் காவல் தொழிலும் உள்ள வள்ளியை மார்புறத் தழுவுபவனே, உயர்ந்தவனே, என்றும் உள்ளவனே, பாசங்களில் நீங்கியவனே, சித்தனே, பரம பிதாவே, குமாரக் கடவுளே, பெருமாளே. 
பாடல் 275 - திருத்தணிகை
ராகம் - சுப பந்துவராளி; தாளம் - சதுஸ்ர ஏகம் - 4 களை - 16 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தத்தனாத் தனன தத்தனாத் தனன
     தத்தனாத் தனன ...... தனதான
தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
     துக்கமாற் கடமு ...... மலமாயை 
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
     துப்பிலாப் பலச ...... மயநூலைக் 
கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
     லப்புலாற் றசைகு ...... ருதியாலே 
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
     சட்டவாக் கழிவ ...... தொருநாளே 
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
     அர்ச்சியாத் தொழுமு ...... நிவனாய 
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
     வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா 
இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
     வத்தினோர்க் குதவு ...... மிளையோனே 
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
     டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.
தோல் நீங்காத குடிசையும், அழுக்கைக் கொண்டதும், சுகம், துக்கம், ஆசை இவற்றைத் தன்னுள் கொண்ட குடமும், மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை) என்றிவை நெருக்கமாய் வைத்த காற்றடைத்த பானையும், மிழற்றும் மழலை போன்று பொருள் விளங்காத வார்த்தைகள் உள்ள பல சமய நூல்களை கைக்கொண்டு வீண் கூச்சலை மேற்கொண்டதுமான இந்த உடம்பை, துன்பத்துக்கு இடமான மாமிச பிண்டம், சதை, ரத்தம், இவற்றால் கட்டப்பட்ட கலப்பும் மிக வெறுக்கத்தக்க பொருளானதுமான இந்த உடம்பை, விரும்பித் திரிகிற எனக்கு, அடியோடு வாக்கு அழிந்து போகும் (மெளனநிலை கூடும்) ஒருநாள் ஏற்படுமோ? எலும்புகள், பாம்புகள், திருநீறு, இவற்றைத் தம் உடம்பில் அணிந்துள்ள நம் தந்தையாம் சிவபிரான் மலர்களால் அர்ச்சித்துத் தொழுத ஞானியான அப்பனே, போருக்கு எப்போதும் ஆயத்தமாய் உள்ள பன்னிரண்டு மலைகள் போன்ற புயத்தோனே, குவளை மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையோனே, பார்வதிக்கும் கங்கைக்கும் குமரனே, இந்தப் பூமியில் பார்வை என்று ஒன்று இருந்தால் அது உன் திருநடனத்தைப் பார்க்கும் பார்வையே. அந்தப் பார்வையை உடைய தவசீலர்களுக்கு உதவும் இளையவனே, உன்னை வணங்காதவர்களுக்கு அரியவனாகி, பாசங்களிலிருந்து நீங்கியவனே, தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாய் இருக்கும் பெருமாளே. 

பாடல் 251 - திருத்தணிகை
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தான தத்தன தான தத்தன     தான தத்தன தான தத்தன          தான தத்தன தான தத்தன ...... தந்ததான

ஏது புத்திஐ யாஎ னக்கினி     யாரை நத்திடு வேன வத்தினி          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென் 
றேயி ருக்கவு நானு மிப்படி     யேத வித்திட வோச கத்தவ          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப் 
பாதம் வைத்திடை யாதே ரித்தெனை     தாளில் வைக்கநி யேம றுத்திடில்          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப் 
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ 
ஓத முற்றெழு பால்கொ தித்தது     போல எட்டிகை நீசமுட்டரை          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே 
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்     மான்ம ழுக்கர மாட பொற்கழ          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே 
மாதி னைப்புன மீதி ருக்குமை     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே 
மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.

எனக்கு புத்தி ஏது ஐயனே? இனிமேல் நான் யாரைச் சென்று விரும்பி நாடுவேன்? வீணாக இறப்பதுதான் என் தலைவிதியோ? எனக்கு நீயே தாயும் தந்தையுமாக இருந்தும் நான் இந்த விதமாகவே தவித்திடலாமா? உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான் ஆளாகலாமா? என்னை இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள் ஐயனே*, என் நிலை தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில், உலகோர் நகைப்பார்கள் ஐயனே, தந்தையின் முன் குழந்தை ஓடிச்சென்று, பால் மணம் மாறாத வாயால் குரலெழுப்பி அழுதால், இந்தக் குழந்தையை யார் எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக இப்பூமியிலே விட்டு விடுவார்களோ? எனக்கு இந்த உண்மை சிந்தையிலே தோன்றலாகாதோ? வெள்ளமாய்ப் பெருகி எழும் பாற்கடல் பொங்கியது போல எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த மூடர்களான அசுரர்களை ஓடும்படி வெட்டியழித்த சூரிய ஒளி கொண்ட சக்திவேலைக் கரத்திலே கொண்ட எங்கள் அரசனே, கங்கை வெள்ளம் பெருகும் அடர்ந்த சடாமுடி ஆடவும், பொருந்தி அமர்ந்த மானும், மழுவும் ஏந்திய கரங்கள் ஆடவும், அழகிய கால்களில் கழல் ஒலிசெய்யவும், நடனம் புரிந்த சிவனார் தந்தளித்த செல்வமே, பெரிய தினைப்புனத்தின் மீது இருந்தவளும், மை பூசிய, ஒளி மிகுந்த கண்களை உடையவளுமான குறப்பெண் வள்ளியை, உன் அழகிய மார்புறத் தழுவிய மயில்வாகனனே, அற்புத மூர்த்தியாம் கந்த வேளே, மன்மதன் வெற்றி பெறும்படியான அழகிய பூமுடித்த கூந்தலை உடைய மாதர்கள் ஆச்சரியப்படும்படியான பெரிய மெய்த்தவசிகள் வாழும் திருத்தணிகை என்ற சிறந்த மலைத்தலத்தில் வாழும் தம்பிரானே. 
* தான் கேட்ட வரத்தின்படியே முருகனின் திருவடி தீட்சையை அருணகிரிநாதர் அவரது வாழ்வில் பெற்றார்.

பாடல் 252 - திருத்தணிகை
ராகம் - ...; தாளம் -

தான தத்தன தத்தன தத்தன     தான தத்தன தத்தன தத்தன          தான தத்தன தத்தன தத்தன ...... தனதான

ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர     ரூப மொத்தநி றத்திகள் விற்கணை          யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை ...... யமுதோடே 
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர     லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்          ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் ...... மணம்வீசும் 
மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி     வார ழுத்துத னத்திகள் குத்திர          மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு ...... மடமாதர் 
மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை     வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு          மாத ருக்குவ ருத்தமி ருப்பது ...... தணியாதோ 
வேலை வற்றிட நற்கணை தொட்டலை     மீத டைத்துத னிப்படை விட்டுற          வீற ரக்கன்மு டித்தலை பத்தையு ...... மலைபோலே 
மீத றுத்திநி லத்தில டித்துமெய்     வேத லக்ஷ¤மி யைச்சிறை விட்டருள்          வீர அச்சுத னுக்குந லற்புத ...... மருகோனே 
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில     வாரி முத்துந கைக்கொடி சித்திர          நீல ரத்தின மிக்கஅ றக்கிளி ...... புதல்வோனே 
நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்     நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு          நீல முற்றதி ருத்தணி வெற்புறை ...... பெருமாளே.

குண்டலங்களைக் காதணியாக அணிந்தவர்கள், அழகிய உருவம் வாய்ந்த நிறத்தை உடையவர்கள், வில் போன்ற புருவங்களும், அம்பு போன்ற கண்களும் உடையவர்கள், சர்க்கரை அமுதுடன் ஊறின சுவையைப் போன்ற (இனிய) பேச்சினை உடையவர்கள், பறவைகளின் குரலுடன் மெல்லப் பேசும் கண்டத்தை உடையவர்கள், ஒலி செய்யும் உடுக்கை போன்ற இடையை உடையவர்கள், வாசனை வீசுகின்ற பூ மாலை அணிந்த கழுத்தை உடையவர்கள், முத்து மாலை அணிந்த, ரவிக்கையை அழுத்துகின்ற, மார்பகங்களை உடையவர்கள், வஞ்சகம் நிறைந்த காம மயக்கத்தை உண்டாக்கி ஆடவர்கள் மனதைப் பாழாக்கும் விலைமாதர்கள். மார்பை அசைத்து மோக மயக்கத்தை உண்டு பண்ணி, இருண்ட படுக்கை அறைக்கு வரும்படி அழைத்து, கைப் பொருளை அபகரித்துத் தழுவிடும் விலைமாதரருக்காக நான் வேதனைப்படுவது தவிராதோ? கடல் வற்றிப் போகும்படி சிறந்த பாணத்தைச் செலுத்தி, கடலின் மேல் அணை இட்டு ஒப்பற்ற வானரப்படையைச் செலுத்தும்படிச் செய்து, கர்வம் கொண்ட இராவணன் முடி தரித்த பத்துத் தலைகளையும் மலை விழுவது போல மேலே அறுத்து தரையில் வீழ்த்தி, சத்திய வேத சொரூபியான லக்ஷ்மிதேவியாகிய சீதையை சிறையினின்றும் விடுவித்து அருளிய வீரம் பொருந்திய ராமருக்குச் சிறந்த மருகனே. கரு நிறம் கொண்டவள், பரிசுத்தமானவள், குணம் கடந்தவள், கடலின்றும் எடுத்த முத்து போன்ற தூயவள், ஒளி வீசும் பற்களை உடையவள், அழகிய நீல ரத்தின அணியைக் கொண்டவள், தருமக் கிளி ஆகிய பார்வதியின் மகனே, திருநீறு அணிந்து நினைக்கின்றவர்களின் மனதில் நிறைய அன்பை அளித்திடும் சற்குருநாதனே, நீலோற்பல மலர்கள் நிறைந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 253 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தத்தன தனதன தத்தன தனதன     தத்தன தனதன ...... தனதான

கச்சணி யிளமுலை முத்தணி பலவகை     கைச்சரி சொலிவர ...... மயல்கூறிக் 
கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்     கட்செவி நிகரல்குல் ...... மடமாதர் 
இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி     யெச்சமி லொருபொரு ...... ளறியேனுக் 
கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை     யிப்பொழு தணுகவு ...... னருள்தாராய் 
கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை     நச்சியெ திருடிய ...... குறையால்வீழ் 
குற்கிர வினியொடு நற்றிற வகையறி     கொற்றவு வணமிசை ...... வருகேசன் 
அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்     அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே 
அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை     யப்பனெ யழகிய ...... பெருமாளே.

கச்சு அணிந்த இளைய மார்பகங்கள் மீது முத்தாலான ஆபரணங்கள் ஜொலிக்க, பல விதமான கை வளையல்கள் பிரகாசிக்க, காம இச்சைகளை வெளியிட்டு, (வந்த ஆடவர்களின்) கைப் பணத்தைத் திருடும் மை தீட்டிய கண்களை உடையவர், பாம்பின் படத்தை ஒத்துள்ள நிதம்பத்தை உடைய விலைமாதர்கள் மீது, ஆசையால் உள்ளமும் உடலும் உருகிய தழும்பினன், அறிவில்லாதவன் நான். குறைவில்லாத ஒப்பற்ற பரம் பொருளை அறியாதவனான எனக்கு, இந்த உலகில் மணமுள்ள அழகான மலர் போன்ற திருவடி இணைகளை இப்போதே கிடைக்கும்படி உன் திருவருளைத் தந்தருள்வாய். இடையர் குலத்தைச் சேர்ந்தவர் வீட்டில் இடைச்சியர்கள் சேர்த்து வைத்திருந்த தயிரை விரும்பி திருடிய குறைப்பாட்டினால் (கட்டப்பட்டுக்) கிடந்திருந்த உரலோடு இழுத்துச் சென்று நல்ல ஒரு பாக்கியச் செயலை* அறிந்து செய்த அரசன், கருட வாகனத்தில் வருகின்ற திருமால், அந்த அமுதம் நிறைந்த திருப்பாற் கடலில் விஷம் மிகுந்த பாம்பாகிய ஆதிசேஷன் மீது உறங்கும் திருமால் மகிழும் மருகனே, கங்கை நீரைத் தரித்த சடையை உடைய சிவபெருமான் மெச்சிய திருத்தணிகை மலையில் இருக்கும் அப்பனே, அழகிய பெருமாளே. 
* நளகூபரன், மணிக்¡£வன் என்னும் குபேரனின் புத்திரர் இருவரும் மதுவருந்தி, ஆடையின்றி ஜலக்¡£டை செய்து, நாரதர் முன் தோன்றினர். நாரதர் சபிக்க அவர்கள் மருத மரமாயினர். கண்ணன் கட்டப்பட்ட உரல் அவர்கள் மீது விழுந்ததும் சாபம் தீர்ந்து மகிழ்ந்தனர்.

பாடல் 254 - திருத்தணிகை
ராகம் - ...; தாளம் -

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்     கடைக்கணிற் கொடுத்தழைத் ...... தியல்காமக் 
கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்     கரைத்துடுத் தபட்டவிழ்த் ...... தணைமீதே 
சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத்     தமிட்டிருட் குழற்பிணித் ...... துகிரேகை 
சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்     தலத்தில்வைப் பவர்க்கிதப் ...... படுவேனோ 
இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்     தெழிற்றினைக் கிரிப்புறத் ...... துறைவேலா 
இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்     சிறைச்சியைப் பசித்திரைக் ...... கிசைகூவும் 
பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்     பிதற்றறப் படுத்துசற் ...... குருவாய்முன் 
பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்     பெருக்குமெய்த் திருத்தணிப் ...... பெருமாளே.

கடலையும் உலகையும் தம் கீழ் அடங்கும்படியாக அடக்கி, தம்மை நாடி வந்தவர்களுக்கு துன்பத்தை தமது கடைக் கண்ணால் கொடுத்து, அவர்களை அழைத்து மன்மத காம நூல்களை உரக்க எடுத்துச் சொல்லி, தொண்டையில் வேறு வேறு புட்குரல்களைக் காட்டி, மனதைக் கரைத்து, உடுத்துள்ள பட்டுப் புடவையை அவிழ்த்துப் படுக்கை மேல் வேகமாகச் சேர்ந்து, மார்பகத்தின் மீது அணைத்து, இதழூறலை அளித்து முத்தம் தந்து, கரிய கூந்தலைக் கட்டி முடித்து, நகக் குறியை மூர்க்கத்துடன் புதைய அழுத்தி, அரச இலை போன்ற பெண்குறியில் (வந்தவர்களைச்) சேர்ப்பவர்களுடன் இன்பம் அனுபவித்துக் கொண்டே இருப்பேனோ? ஐம்புலன்களின் சேட்டை முதலான முரண்களை அடக்கும் சத்திய வாசகப் பொருளைக் கொண்ட உனது திருப் புகழுக்கு உயிர் நிலை போன்ற பெரிய பலத்தைத் தந்து, அழகிய தினைப்புனம் உள்ள வள்ளி மலையில் வீற்றிருக்கும் வேலனே, போரில் கர்வத்துடன் வந்த அசுரர்களை அழித்து, ஒலியுடன் மிகப் பச்சையான மாமிசத்தை பசியுடன் இரை வேண்டும் என்று கேட்கும் குரலுடன் கூவுகின்ற பெட்டைக் கோழிக் கூட்டங்களுக்குக் கொடுத்த, சேவல் கொடியை கையில் ஏந்தியவனே, பொய்யான பிதற்றல் மொழிகளை அறவே களைந்து, குருநாதராக வந்து முன்பு ஒரு நாள் பிறப்பு இல்லாத சிவபெருமானுக்கு போதித்த சித்த மூர்த்தியே, நெல்லின் பெரிய குவியல்களை மேலும் பெருக வைக்கும் உண்மை வாய்ந்த திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 255 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்     தனத்தன தனத்தம் ...... தனதான

கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்     கரிக்குவ டிணைக்குந் ...... தனபாரக் 
கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்     கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத் 
தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்     தவிர்த்துன துசித்தங் ...... களிகூரத் 
தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்     தலத்தினி லிருக்கும் ...... படிபாராய் 
புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்     பொடிப்பணி யெனப்பன் ...... குருநாதா 
புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்     புகழ்ச்சிய முதத்திண் ...... புலவோனே 
திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்     தெறிப்புற விடுக்குங் ...... கதிர்வேலா 
சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.

கரிய நிறம் உள்ள கூந்தலை விரித்தும், வெளித் தோன்றும் கயல் மீனை ஒத்த கண்களை விழித்தும், யானை போன்றும் மலை போன்றும் உள்ள மார்பகங்களை உடையவராக, கைகளில் அணிந்துள்ள வளையல்களையும் பொன் சங்கிலி மாலைகளையும் ஒலி செய்தும், மேகலை அணிந்துள்ள புடவையை பள பளப்புடன் உடுத்தும், தம்மைப் பணிந்து ஒழுகும் ஆடவர்களை ஏற்று அவர்களின் மனத்தை அழிக்கும் வஞ்சகர்களாகிய விலைமாதர்களின் தொடர்பை விலக்கி, உனது மனம் மகிழ்ச்சி அடைய, தவக் கடலில் மூழ்கிக் குளித்து இப்பொழுது உனக்கு அடிமை பூண்டு, உன் தலமாகிய திருத்தணிகையில் இருக்கும்படியான பாக்கியத்தைக் கண் பார்த்து அருளுக. திரி புரங்களையும் எரித்து, அழகிய யானையையும் தோல் உரித்து, ஒளி வீசும் திருநீற்றை ஆபரணமாகக் கொண்ட என் தந்தையாகிய சிவ பெருமானின் குரு நாதனே, தோளில் ஆபரணமாக கடப்ப மாலையை அணிந்து, மேலான தன்மையை உற்று இனிய புகழ் அமுதத்தைக் கொண்ட திண்ணிய புலவனே, கூட்டமான குதிரைகளும், யானைகளும் பொடிபடவும், அசுரர்கள் சிதறுண்ணவும் வேலைச் செலுத்திய ஒளி வேலனே, சிறப்புடனே குறப் பெண்ணாகிய வள்ளி மகிழ்கின்ற வெற்றியும் அழகும் கொண்ட திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 256 - திருத்தணிகை
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தானம் தனதன தானம்     தனதன தானம் ...... தனதான

கலைமட வார்தஞ் சிலையத னாலுங்     கனவளை யாலுங் ...... கரைமேலே 
கருகிய காளம் பெருகிய தோயங்     கருதலை யாலுஞ் ...... சிலையாலுங் 
கொலைதரு காமன் பலகணை யாலுங்     கொடியிடை யாள்நின் ...... றழியாதே 
குரவணி நீடும் புயமணி நீபங்     குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே 
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்     திருமகள் நாயன் ...... தொழும்வேலா 
தினைவன மானுங் கநவன மானுஞ்     செறிவுடன் மேவுந் ...... திருமார்பா 
தலமகள் மீதெண் புலவரு லாவுந்     தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா 
தனியவர் கூருந் தனிகெட நாளுந்     தனிமயி லேறும் ...... பெருமாளே.

மேகலை முதலிய ஆபரணங்கள் அணிந்த மாதர்களின் வசைப்பேச்சின் ஒலியினாலும், பெருத்த சங்கின் பேரொலியினாலும், கரையின் மேல் இருந்து கூவுகின்ற மன்மதனுடைய எக்காளமாகிய கருங் குயிலின் ஓசையாலும், பரந்து விரிந்த கடலின் ஓசையாலும், சிந்தனை அலைகளாலும், கரும்பு வில்லால் கொலை செய்யவல்ல மன்மதன் வீசுகின்ற பல மலர் அம்புகளினாலும், கொடி போன்ற மெல்லிய இடையாளாகிய இத்தலைவி உன் பிரிவுத் துயரால் கவலைப்பட்டு நின்று அழிவுறாமல், குரா மலர்களைத் தரித்துள்ள நீண்ட புயங்களில் அணிந்துள்ள கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை நீ தலைவிக்குத் தந்து அருள்வாயாக. மலையரசன் மகள் பார்வதி நாயகன் சிவனும், கலைமகள் ஸரஸ்வதியின் நாயகன் பிரம்மனும், லக்ஷ்மியின் நாயகன் திருமாலும் வணங்கி வழிபடுகின்ற* வேலாயுதனே, தினைப் புனத்திலே காவல் காத்த மான் போன்ற வள்ளியும், விண்ணுலகில் மேன்மையான கற்பக வனத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையும் மனம் நிறைந்து அணைக்கும் திருமார்பினனே, நிலமகளாகிய இவ்வுலகின் மீது மதிப்பிற்குரிய புலவர்கள் உலாவும் திருத்தணிகையில் வாழும் ஒளி படைத்த வேலினை உடையவனே, உலக பாசத்தை நீக்கிய உன் அடியார்களின் மிக்க தனிமை நீக்கி அருளி, நாள்தோறும் ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளும் பெருமாளே. 
* திருத்தணிகையில் மும்மூர்த்திகளும் வழிபாடு செய்த வரலாறு உண்டு. தணிகைக்கு அருகே ஓடும் நந்தி ஆற்றின் வடகரையில் சிவ சந்நிதியும், தாரகாசுரன் விஷ்ணுவிடமிருந்து கவர்ந்த சக்ராயுதத்தை மீட்டுக் கொடுத்த முருகனை, திருமால் வழிபட்ட விஷ்ணுதீர்த்தம் கோயிலுக்கு மேற்கேயும், சிருஷ்டித் தொழிலில் முருகனிடம் தேர்ச்சி பெற்ற பிரம்மனுக்கான பிரம்மச்சுனை மலை ஏறும் வழியிலும் உள்ளன.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.ஊர்ப் பெண்களின் ஏச்சு, கடல், அலைகள், குயிலோசை, சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 257 - திருத்தணிகை
ராகம் - ...; தாளம் -

தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்     தனனத்த தத்தனத் ...... தனதான

கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்     கடவுட்ப்ர திஷ்டைபற் ...... பலவாகக் 
கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்     கருவிற்பு கப்பகுத் ...... துழல்வானேன் 
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்     கசரப்ப ளிக்கெனப் ...... பொருள்தேடி 
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின்     சரணப்ர சித்திசற் ...... றுணராரோ 
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்     குமுறக்க லக்கிவிக் ...... ரமசூரன் 
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்     துதிரத்தி னிற்குளித் ...... தெழும்வேலா 
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்     றுவலைச்சி மிழ்த்துநிற் ...... பவள்நாணத் 
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்     சுருதித்த மிழ்க்கவிப் ...... பெருமாளே.

வஞ்சக எண்ணம் கொண்ட சித்தர்களும், ஆறு* சமயங்களையும் மேற்கொண்டு வாதம் செய்யும் வெறியர்களும், சிறந்த கடவுளர்களின் பிரதிஷ்டை என்ற பெயரில் பலப்பல வகையாக யோசித்து, அந்தக் கடவுளருக்குப் பெயர்களைக் குறிப்பிட்டு வைத்து, உருவ அமைப்புக்களை (சிலை, யந்திரம் முதலியவற்றில் வடித்து) ஏற்படுத்தி, துன்ப மயமான கருவிலே புகுவதற்குக் காரணமான பிரிவினை மனப்பான்மையுடன் ஏன் அலைந்து திரிகிறார்கள்? பொன் சரட்டில் கோத்த சங்கிலிக்கும், முத்திரை மோதிரத்துக்கும், இரண்டு கைகளிலும் அணியும் வளையல்களுக்கும், மேலான வைர அட்டிகைக்கும் என்று பெண்களுக்குத் தரும் நகைகளுக்காகப் பொருளைத் தேடிய மக்கள், அனைத்திலும் ஒன்றுபட்டுக் கலந்து, அதேசமயம் கலவாமல் வேறுபட்டு நிற்கும் உனது திருவடிகளின் பெருமையைச் சற்றேனும் உணரமாட்டார்களோ? (கிரெளஞ்சகிரி, சூரனின் ஏழு குல மலைகள் ஆகிய) எட்டு மலைகளையும் அழித்து, பரந்த கடல்களின் கூட்டத்தை ஒலி செய்யும்படி கலக்கி, வீரம் நிறைந்த சூரனின் குடலைத் தோளில் மாலையாகத் தரித்து, அவனது உடலைப் பிளந்து, கோபித்து, அவனுடைய ரத்தத்தில் குளித்து எழுந்த வேலாயுதத்தை உடையவனே, வள்ளியின் திருவடிச் சுவடுகள் பதிந்த அற்புதமான தினைப்புனத்தில், உதிரிப் பூக்களை மாலையாகக் கட்டி அணிந்து நின்ற வள்ளி நாணும்படியாக அவளைத் தொழுது புகழ்ந்த முக்தனே, அழகிய மதில்கள் சூழ்ந்த திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும், வேதமாகிய தேவாரத் தமிழ்க் கவிதைகளைத் தந்த (திருஞான சம்பந்தப்) பெருமாளே. 
* ஆறு சமயங்கள்: காணாபத்யம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், செளரம், கெளமாரம் என்பனவாம்.

பாடல் 258 - திருத்தணிகை
ராகம் - ...; தாளம் -

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்     கனத்தையொத் துமொய்த்தமைக் ...... குழலார்தங் 
கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்     கழற்பதத் தடுத்திடற் ...... கறியாதே 
இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்     திசைத்தசைத் தசுக்கிலத் ...... தசைதோலால் 
எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்     தெனக்குநித் தமுத்தியைத் ...... தரவேணும் 
பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்     பயத்தினிற் பயப்படப் ...... பொரும்வேலா 
பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்     படைத்தகுக் குடக்கொடிக் ...... குமரேசா 
தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்     செருக்குறத் திருப்புயத் ...... தணைவோனே 
திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்     திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.

திண்ணியதாய் மிகப் பருமையுடைய அழகிய மூங்கில் போன்ற மென்மையான தோள்களிலும், மலைகள் போன்ற மார்பகங்களிலும், மேகத்தை ஒத்து அடர்ந்த கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய (விலை) மாதர்களின் கறுத்த மை தீட்டிய கயல்மீன் போன்ற கண்களிலும் (எனது) எண்ணங்களை வைத்து, ஒப்பற்ற உனது கழல் அணிந்த திருவடிகளைச் சேர்வதற்கு அறியாமல், தொகுதியான நோய்களின் கூட்டத்துக்கு இருப்பிடம் என்று சொல்லும்படி, உலை ஊது கருவி போல் ஒலி செய்து (மேலும் மேலும் பெருமூச்சு விட்டு), கட்டுண்ணும் அந்த இந்திரியங்கள், ஊன், தோல் இவைகளால் எடுக்கப்பட்ட நிலையில்லாத உடம்பைச் சுமக்கின்ற இந்தப் பிறப்பை ஒழித்து, எனக்கு அழியாத முத்தியைத் தந்தருள வேண்டும். பனை மரம் போன்ற துதிக்கையையும் கோபமும் கொண்ட வெள்ளை யானையாகிய ஐராவதத்தை உடைய இந்திரனைத் துரத்தி ஓட்டிய சூரனை, (சமுத்திரமாகிய) கடல் நீரில் பயப்படும்படி ஓட்டிச் சண்டை செய்த வேலனே, மலைகளின் கர்வம் அடங்கி ஒழியும்படி மிதித்துச் சவட்டும் முள் போன்ற நுனிகள் உடைய கால்களைக் கொண்ட கோழியைக் கொடியாகக் கொண்ட குமரேசனே, தினைப் புனம் உள்ள (வள்ளி) மலையில் குடிகொண்டிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை மகிழ்ச்சியுடன் அழகிய புயங்களில் அணைபவனே, அழகிய ஊரின் வெளிப்புறப் பகுதிகளில் (உள்ள வயல்களில்) லக்ஷ்மிகரம் பொருந்திய, பரிசுத்தமான முத்துக்கள் விளங்கும் புண்ணிய திசையாகிய (தமிழ்நாட்டுக்கு) வடக்கில் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 259 - திருத்தணிகை
ராகம் - கானடா; தாளம் - அங்கதாளம் - 11 1/2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2

தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான     தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான

கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே     கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே 
தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே     தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ 
தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா     திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே 
பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா     படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே.

ஒலித்து அதிர்கின்ற இந்தப் பொங்கும் கரிய கடல் ஒன்றினாலும், கோபித்து மிகச் சிவந்து போய் நெருப்பின் சூட்டினைப் பூண்டுகொண்டு உதித்த சந்திரனாலே, ஒப்பற்ற கரும்பு வில்லினை ஏந்தி மன்மதன் செலுத்திய மலர்ச் சரங்களாலே, வாட்டத்தால் தனித்த ஒருத்தியாம் இந்தத் தலைவி இளைப்புற்று இங்கு உடல் தளரலாமோ? தினைப் புனத்தில் உள்ள பயிரை முன்னாள் காவல் செய்த வள்ளியின் கணவனே, திருத்தணித் தலத்தின் மலை மீது விளங்குகின்ற கந்தக் கடவுளே, பனைமரம் போன்று பருத்த தும்பிக்கையை உடைய வெள்ளை யானைக்கு (ஐராவதம்) உரிய தேவர்கள் போற்றுகின்ற மங்கையாகிய தேவயானையின் பக்கத்தில் இருப்பவனே, ஆக்கி அளித்து அகற்றும் முத்தொழில்களையும் செய்யும் மும்மூர்த்திகளின் தலைவனான பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 260 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனன தானன தனதன தனதன     தனன தானன தனதன தனதன          தனன தானன தனதன தனதன ...... தனதான

கிரியு லாவிய முலைமிசை துகிலிடு     கபட நாடக விரகிக ளசடிகள்          கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் ...... விரகாலே 
க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்     முழுது நாறிக ளிதமொழி வசனிகள்          கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் ...... பொருளாலே 
பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்     அதிக மாவொரு பொருள்தரு பவரொடு          பழைய பேரென இதமுற அணைபவர் ...... விழியாலே 
பகழி போல்விடு வினைகவர் திருடிகள்     தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை          பகர மாமயில் மிசைவர நினைவது ...... மொருநாளே 
அரிய ராதிபர் மலரய னிமையவர்     நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ          அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக ...... இளையோனே 
அரிய கானக முறைகுற மகளிட     கணவ னாகிய அறிவுள விதரண          அமரர் நாயக சரவண பவதிற ...... லுடையோனே 
தரும நீதியர் மறையுளர் பொறையுளர்     சரிவு றாநிலை பெறுதவ முடையவர்          தளர்வி லாமன முடையவ ரறிவினர் ...... பரராஜர் 
சகல லோகமு முடையவர் நினைபவர்     பரவு தாமரை மலரடி யினிதுற          தணிகை மாமலை மணிமுடி யழகியல் ...... பெருமாளே.

மலை போன்ற மார்பின் மேல் ஆடையை அணிந்துள்ள கபட நாடகம் ஆடும் தந்திரக்காரிகள், முட்டாள்கள், கெட்ட நோய்களை இடம் கொண்டுள்ள தேகத்தை உடையவர்கள், வெகு சாமர்த்தியமாக, (தங்கள் மீது) அன்பு வைத்தவர்களோடு மணம் செய்து கொள்வதாகக் கூறி பிறகு நழுவி விடுபவர்கள், முழுதும் துர் நாற்றம் வீசுபவர்கள், இன்பம் உண்டாகும்படி பேசுபவர்கள், படுக்கையின் மீது ஆடவர் மனம் உருகும்படி தழுபவர்கள், பொருள் காரணமாக அன்பு கலவாத ஆசையுடன் சண்டை செய்பவர்கள், அதிகமாக ஒரு பொருளைக் கொடுப்பவர்களிடம் (அவர்களோடு) பழைய உறவினர் போல இன்பம் பிறக்க அணைபவர்கள், கண்களால் அம்பு செலுத்துவது போல காரியத்தை வெல்லும் திருடிகள், (அத்தகைய) விலைமாதர்களை நான் எண்ணாதபடிக்கு, அடைய வேண்டிய நற் கதியைப் பெறும் வழியை, எனக்கு நீ போதிக்க, சிறந்த மயில் மேல் வர நீ நினைக்கும்படியான ஒரு நாள் உண்டாகுமோ? திருமால், ருத்திரன் என்னும் மேலோர், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன், தேவர்கள் (தத்தம் தொழிலில்) நிலை பெற ஒட்டாமல் துன்பப்பட, உடனே விரைந்து சென்று, அசுரர்கள் தூளாகுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய ஆறு முக இளையோனே, அருமையான வள்ளி மலைக் காட்டில் உறைகின்ற குறமகள் வள்ளி நாயகியின் கணவனாகிய, அறிவுள்ள தயாள குணம் படைத்தவனே, தேவர்களின் தலைவனே, சரவணபவனே, வெற்றியை உடையவனே, தரும நீதி வாய்ந்தவர்களும், வேதம் கற்றவர்களும், பொறுமை உடையவர்களும், தவறுதல் இல்லாத நிலைத்த வகையில் தவம் புரிபவர்களும், சோர்வு இல்லாத மனத்தை உடையவர்களும், அறிஞர்களும், மேலான அரசர்களும், எல்லா உலகங்களுக்கும் அதிபர்களும், உன்னை நினைந்து போற்றுபவர்களும் தொழும் தாமரைமலர் போன்ற திருவடி இனிது பொருந்த திருத்தணி மாமலையின் அழகிய உச்சியில் அழகு விளங்க வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 261 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்     தனதனத் தனதனத் ...... தனதான

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்     கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக் 
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்     கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும் 
அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்     றறவுநெக் கழிகருக் ...... கடலூடே 
அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்     றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ 
பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்     பொறியிலச் சமணரத் ...... தனைபேரும் 
பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்     புகலியிற் கவுணியப் ...... புலவோனே 
தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்     தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந் 
தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்     தணியினிற் சரவணப் ...... பெருமாளே.

பொய்ம்மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்புலன்களின் வழியே செல்லுபவர்களை, கெட்ட இப்பிறப்பு (நற் பிறப்பு) ஆகாமல் அழியும்படி விழிக்கின்ற விழியை உடைய கெட்டவர்களை, அறிவில்லாத குருடர்களை, திருடர்களை, சமயவாதிகளை (நான்) நெருங்குதலுற்று, அறிவு சற்றும் அறிதல் இல்லாமல், தளர்ச்சி உற்று, (மனம் பக்தியால்) நெகிழ்தல் இல்லாமல், குறைபாடு அடைந்து மிகவும் கெட்டு அழிவு தரும் பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போதல் நீங்கி, முன்னுக்கு வந்து, நல்லுணர்வு பெறும் நலமான வழியில் மேம்பாடு அடைந்து, உன் திருவடியிணையை அணுகப் பெறுவேனோ? அறிவுள்ள (கூன்) பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும், சிவ மணத் திருநீற்றை (மதுரையில்) பரப்பினவரும், சீகாழியில் உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய திருஞான சம்பந்தரே, அழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி, திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே, சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும் பூவைத் தருகின்ற திருத்தணிகையில் (வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே. 
* சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: பிரமபுரம், வேணுபுரம், தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, கொச்சை, வெங்குரு, கழுமலம், முதுநகர், புகலி என்பன.
** செரு = போர். போர் முடிந்தும் கோபம் தணியாத முருகன் திருத்தணியில் தங்கியதும் கோபம் தணிந்தது. முதலில் செருத்தணி என்றிருந்த பெயர் திருத்தணியாக மாறியது.

பாடல் 262 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனனந் தனனத் தனனந் தனனத்     தனனந் தனனத் ...... தனதான

குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்     கொலையின் பமலர்க் ...... கணையாலே 
குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்     கொடிகொங் கையின்முத் ...... தனலாலே 
புயல்வந் தெறியக் கடனின் றலறப்     பொருமங் கையருக் ...... கலராலே 
புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்     புயம்வந் தணையக் ...... கிடையாதோ 
சயிலங் குலையத் தடமுந் தகரச்     சமனின் றலையப் ...... பொரும்வீரா 
தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்     தனமொன் றுமணித் ...... திருமார்பா 
பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்     பணியுந் தணிகைப் ...... பதிவாழ்வே 
பரமன் பணியப் பொருளன் றருளிற்     பகர்செங் கழநிப் ...... பெருமாளே.

குயில் போன்ற பேச்சுக்களை உடையவளாகிய இவள் குயிலின் சோக கீதத்தால் செய்வது அறியாமல் நின்று வேதனையுற்று அலைவதாலும், கொலையே புரியவல்ல இன்ப நீலோத்பல மலராகிய (மன்மதனது ஐந்தாவது) பாணத்தாலும், குளிர்ந்துள்ள, வெண்ணிறமான சிறந்த நிலாவின் ஒளிக் கொடி போன்ற இவளுடைய மார்பின் மீதுள்ள முத்து மாலை (பொரிபடுமாறு வீசும்) நெருப்பாலும், புயல் காற்று வந்து வீசும் அந்தக் கடல் விடாது நின்று செய்யும் பேரொலியாலும், கூடி நின்ற பெண்கள் தூற்றுகின்ற வசை மொழியாலும், உனது புயத்தைக் கூட (விரும்பி) மிகவும் தளர்கின்ற, தனிமையில் இருக்கும் (இவளுக்கு) உன் தோள் வந்து அணைப்பதற்குக் கிட்டாதோ? கிரெளஞ்ச மலை அழிய, மற்ற ஏழு கிரிகளும் உடைபட்டு அழிய, யமன் நின்று (அங்குமிங்கும்) அலையும்படி சண்டை செய்த வீரனே, (கேட்டதை அளிக்கும்) கற்பக மரங்கள் உள்ள விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானை, வள்ளிமலைக் காட்டிலே வளர்ந்த குறப் பெண்ணாகிய வள்ளி (ஆகிய இருவரின்) சிறந்த மார்பகங்கள் பொருந்தும் அழகிய மார்பை உடையவனே, ஆகாயத்தில் பொருந்தும் நிலவானது குளிர்ந்த சோலைகளின் உயர்ந்த மரங்களுக்குக் கீழாக விளங்கும் திருத்தணியில் வாழ்கின்ற செல்வமே, சிவபெருமான் வணங்க அன்று அருளுடன் (பிரணவப் பொருளை) போதித்தவனும், செங்கழுநீர்ப் பூ தினமும் மலரும் தணிகை மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.குயில், நிலவு, மன்மதன், மலர் அம்பு, அலைகடல், மாதர்களின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 263 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனன தனத்தன தனன தனத்தன     தனன தனத்தன தனன தனத்தன          தனன தனத்தன தனன தனத்தன ...... தனதான

குருவி யெனப்பல கழுகு நரித்திரள்     அரிய வனத்திடை மிருக மெனப்புழு          குறவை யெனக்கரி மரமு மெனத்திரி ...... யுறவாகா 
குமரி கலித்துறை முழுகி மனத்துயர்     கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி          குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் ...... நகையாமல் 
மருவு புயத்திடை பணிக ளணப்பல     கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு          மதன சரக்கென கனக பலக்குட ...... னதுதேடேன் 
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்     அமையு மெனக்கிட முனது பதச்சரண்          மருவு திருப்புக ழருள எனக்கினி ...... யருள்வாயே 
விருது தனத்தன தனன தனத்தன     விதமி திமித்திமி திமித திமித்திமி          விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு ...... வெகுதாளம் 
வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை     நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட          மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட ...... விடும்வேலா 
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்     அயனை முடித்தலை யரியு மழுக்கையன்          அகில மனைத்தையு முயிரு மளித்தவ ...... னருள்சேயே 
அமண ருடற்கெட வசியி லழுத்திவி     ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ          டழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...... பெருமாளே.

குருவி போலவும், பல கழுகுகள் நரிகள் கூட்டம் போலவும், அரிய காட்டில் உள்ள விலங்குகள் போலவும், புழு, குறவை மீன் போலவும், யானை போலவும், மரம் போலவும் திரிபவர்களுடைய நட்பு கூடாது. குமரிப் பெண்களால் வரும் மனக் கவலை தரும் செயல்களில் படிந்து, மனத்துயரும் கொடுமைகளும் நோய்களும் வருத்த, அலைந்து திரிகின்ற நிலை கெட்டவன் இவன் என்றும், இழிவானவன், தரித்திரன் இவன் என்றும் என்னைப் பலரும் பரிகாசம் செய்யாமல், பொருந்திய தோள்களில் அணிகலன்கள் நெருங்கி விளங்கவும், பல யானைகள், குதிரைகள் சூழ்ந்து வர, பட்டு ஆடைகளை உடுத்தி, ஒப்பற்ற மன்மதனின் வியாபாரப் பண்டம் இவன் என்று (கண்டோர் வியக்க), பொன்னாலாகிய பல்லக்கில் செல்லும் பெருமையை நான் தேட மாட்டேன். இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப்பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். (ஆதலால் அத்திருவடியைச்) சேருதற்குரிய திருப்புகழ் பாக்களை நான் பாட எனக்கு அருள் புரிவாயாக. விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு என வெகு தாளம் வெற்றி முழக்கமாக, தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனவும், குகு என்றும் பல தாளங்கள் அச்சம் தரும்படியாக ஒலித்து, புகழ் பெற்ற ஆதிசேஷனுடைய மணிமுடித் தலைகள் நெறுநெறு என்று இடிபட, திசைகள் அதிர்ச்சி கொள்ளும்படி நெருங்கி அடைபட, தங்கள் கூட்டம் அழியும்படி சண்டை செய்த அசுரர்கள் சிதறுண்டு முறிய செலுத்திய வேலனே, அரிய திரி புரங்கள் எரிந்து விழ (நெற்றிக் கண்ணால்) விழித்தவனும், பிரமனது முடித்தலையை அரிந்த மழுவை ஏந்திய கையை உடையவனும், எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவனுமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, (திருஞான சம்பந்தராக வந்து) சமணர்களின் உடல் அழிய அவர்களைக் கழுவில் ஏறச்செய்தவனே, விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் போற்றி வளர்த்த மங்கையாகிய தேவயானை, குற மகளாகிய வள்ளி இவர்களுடன் அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே. 

பாடல் 264 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனத்த தனத் தனத்த தனத்     தனத்த தனத் தனத்த தனத்          தனத்த தனத் தனத்த தனத் ...... தனதான

குலைத்து மயிர்க் கலைத்து வளைக்     கழுத்து மணித் தனப்பு ரளக்          குவித்த விழிக் கயற்சு ழலப் ...... பிறைபோலக் 
குனித்த நுதற் புரட்டி நகைத்     துருக்கி மயற் கொளுத்தி யிணைக்          குழைச்செ வியிற் றழைப்ப பொறித் ...... தனபாரப் 
பொலித்து மதத் தரித்த கரிக்     குவட்டு முலைப் பளப்ப ளெனப்          புனைத்த துகிற் பிடித்த இடைப் ...... பொதுமாதர் 
புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்     குலுக்கி லறப் பசப்பி மயற்          புகட்டி தவத் தழிப்ப வருக் ...... குறவாமோ 
தலத்த நுவைக் குனித்தொ ருமுப்     புரத்தை விழக் கொளுத்தி மழுத்          தரித்து புலிக் கரித்து கிலைப் ...... பரமாகத் 
தரித்து தவச் சுரர்க்கண் முதற்     பிழைக்க மிடற் றடக்கு விடச்          சடைக்க டவுட் சிறக்க பொருட் ...... பகர்வோனே 
சிலுத்த சுரர்க் கெலித்து மிகக்     கொளுத்தி மறைத் துதிக்க அதிற்          செழிக்க அருட் கொடுத்த மணிக் ...... கதிர்வேலா 
தினைப்பு னமிற் குறத்தி மகட்     டனத்தின் மயற் குளித்து மகிழ்த்          திருத்த ணியிற் றரித்த புகழ்ப் ...... பெருமாளே.

மயிர் அவிழ்ந்து கலைந்து போக, சங்கு போன்ற கழுத்தில் உள்ள மணிமாலை மார்பகங்களின் மேல் புரள, குவிந்த கண்கள் கயல் மீனைப் போல சுழல, பிறைச் சந்திரனைப் போல வளைவுற்ற நெற்றியை நெறித்து, சிரித்து மனதை உருகச் செய்து, காம ஆசையை உண்டு பண்ணி, இணையான குண்டலங்கள் காதுகளில் விளங்க, தேமல் கொண்ட தனப் பாரம், அழகு பெற்று மதம் கொண்ட யானை போன்றும் மலை போன்றும் மார்பகங்கள் பளப்பள என்று ஒளியிட, இறுக்க உடுத்த ஆடையைக் கொண்ட இடுப்பை உடைய பொது மகளிர் தோள்களினாலும், வளைப் பிலுக்காலும், நடைக் குலுக்காலும் மிகவும் இன் முகம் காட்டி ஏய்த்து மோகத்தை ஊட்டி, தவத்தையும் அழிக்கக் கூடிய பொது மகளிர்களின் சம்பந்தம் ஆகுமோ? பூமியின் மத்தியில் விளங்கும் மேருவாகிய வில்லை வளைத்து, ஒப்பற்ற முப்புரங்களை பொடிபடும்படி எரித்து, மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி, புலி, யானை இவைகளின் தோலை ஆடையாக அணிந்து, தவம் நிறைந்த தேவர்கள் முதலானோர் பிழைக்கும் பொருட்டு கண்டத்தில் அடக்கிய விஷத்தை உடைய சடைப் பெருமானாகிய சிவபெருமான் மகிழ்ச்சி பெற பிரணவப் பொருளைக் கூறியவனே, சண்டை இட்ட அசுரர்களை வென்று, அவர்களை நிரம்ப எரியிட்டு, வேதம் துதி செய்ய அதனால் தேவர்கள் செழிப்புற அருள் புரிந்த அழகிய சுடர் வேலனே, தினைப் புனத்தில் குறப் பெண் வள்ளியின் மார்பகங்கள் மீதான மோகத்தில் குளித்து மகிழும் பெருமாளே, திருத்தணிகை மலையில் நிலைத்து வீற்றிருக்கும் புகழ் வாய்ந்த பெருமாளே. 

பாடல் 265 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்     குடையிட் டகுறைப் ...... பிறையாலே 
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்     குயிலுக் குமினித் ...... தளராதே 
இவளைத் துவளக் கலவிக் குநயத்     திறுகத் தழுவிப் ...... புயமீதெ 
இணையற் றழகிற் புனையக் கருணைக்     கினிமைத் தொடையைத் ...... தரவேணும் 
கவளக் கரடக் கரியெட் டலறக்     கனகக் கிரியைப் ...... பொரும்வேலா 
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்     கலவிக் கணயத் ...... தெழுமார்பா 
பவளத் தரளத் திரளக் குவைவெற்     பவையொப் புவயற் ...... புறமீதே 
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்     பதியிற் குமரப் ...... பெருமாளே.

(ஐந்தாவது பாணமாகிய) நீலோற்பல மலர்* அம்பைச் செலுத்திய மன்மதனுடைய முடியின் மீது குடையாக அமைத்த, களங்கத்தை உடைய சந்திரனுடைய (வெப்பத்துக்கும்), பழிச்சொல் பேசி நெருங்கிவரும் மங்கையர்க்கும், இனிய குரலுடன் கூவும் குயிலுக்கும் இனிமேல் தளராதவாறு, (உன் மேல் காதல் கொண்ட) இந்தப் பெண்ணை துவள்கின்ற கூடல் இன்பத்துக்கு விரும்பி அழுத்தமாகத் தழுவி, உன் தோள்களின் மேல் விளங்கும் இனிமையான (கடப்ப) மாலையை ஒப்புதல் இல்லாத அழகுடன் இவள் அணிந்து கொள்ள, கருணையுடன் நீ தந்தருள வேண்டும். உணவு உண்டை உண்பனவும், மதம் பாயும் சுவட்டை தாடையில் கொண்டனவுமான யானைகள் எட்டும் (அஷ்ட திக்கஜங்களும்) அலறிப் பயப்பட, பொன் மலையாகிய கிரெளஞ்சத்துடன் போர் செய்த வேலனே, அசோக* மலர்க் கணையைத் தோளில் ஏந்திய மன்மதனின் வேண்டுமென்றே அம்பெய்த செயலால் (வள்ளியைத் தழுவ) மனம் உருகிச் சேருதற்கு விரும்பி எழுகின்ற மார்பனே. பவளம், முத்து இவை திரண்டுள்ள குவியல்கள் மலை போல் கிடக்கும் வயற் புறங்களின் மேல் சங்கின் கூட்டங்கள் நிறைந்த திருத்தணிகை என்னும் தலத்தில் (வீற்றிருக்கும்) குமரப் பெருமாளே. 
* மன்மதனுடைய ஐந்து கணைகளாவன: தாமரை, மா, அசோகம், முல்லை, நீலோற்பலம். அசோகமலருக்கு செயலை என்று பெயர் உண்டு.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் செவிலித்தாய் பாடுவதுபோல் அமைந்தது.மன்மதன், அவனது மலர்க் கணைகள், சந்திரன், பழிச்சொல் பேசும் மங்கையர், குயில் ஓசை இவையெல்லாம் தலைவனைப் பிரிந்த தலைவியின் விரகதாபத்தைக் கூட்டுவன.

பாடல் 266 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தாந்தன தத்தன தத்தன தத்தன     தாந்தன தத்தன தத்தன தத்தன          தாந்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான

கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்     பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்          கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர் ...... புயமீதே 
கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்     வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்          கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் ...... பலநாளும் 
ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ     ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ          ¡£ங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள் ...... பொருள்தீரில் 
ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்     பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட          ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட ...... லருள்வாயே 
காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு     வேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு          காண்டிப அச்சுத னுத்தம சற்குணன் ...... மருகோனே 
காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்     வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய          கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி ...... யிளையோனே 
தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை     வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ          தேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறை ...... குவைவானந் 
தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு     வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர்          சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறை ...... பெருமாளே.

கூந்தலை அவிழ்த்தும் முடித்தும் மினுக்குபவர்கள். பாய்கின்ற கண்களுக்கு மை இட்டு மிரட்டுபவர்கள். கோபக் குறிப்பான மொழிகளைச் சொல்லும் விலைமாதர்கள். தம்மிடம் வந்தவர்களின் தோள்களின் மேல் கோங்கு மர முகையைப் போன்ற மார்பகத்தால் அழுத்துபவர்கள். விருப்பத்துடன் முன்னர் தழுவி பின்னர் துன்பம் ஊட்டும் சண்டை இடுபவர்கள். வளைத்த பிறை போன்ற நகக் குறியை வைப்பவர்கள். பல நாளும் கொடுத்து வந்த பொருளுக்கு மேல் அதிகமாகப் பெற தங்கள் விருப்பத்தை எடுத்துச் சொல்பவர்கள். தங்கள் விருப்பம் நிறைவேறும் வழி அற்ற போது அழுகைக் குரலைக் காட்டுபவர்கள். தீங்கு செய்யும் துன்பம் தரும் குணத்தைக் கொண்ட பயனற்றவர்கள். (கையில் தமக்குப் கொடுப்பதற்குப்) பொருள் இல்லாது போனால் மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி வைப்பவர்கள். ஆகிய பொது மகளிருடைய நட்பு ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ அருளவில்லையே. எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள் புரிவாயாக. (சுக்கி¡£வனை) காந்தள் மலர் மாலையை அணியச் செய்து (வாலியின்) எதிரே போருக்கு அனுப்பி, ஒப்பற்ற அந்த வாலி என்னும் குரங்கு அரசை அவன் கவசத்துடன் அழியக் கொன்ற காண்டீபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதனும், உத்தமமான நற் குணம் வாய்ந்தவனும் ஆகிய (ராமபிரானுடைய) மருகனே, (உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப் பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா, பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும் வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர் வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம் போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான விநாயகருக்குத் தம்பியே, இனிமையுள்ள தினையை விதைத்த வேடர்கள் வருவதை அறிந்து தனி வேங்கை மரத்தின் அழகு விளங்க நின்றவனே, தேன் போல இனிய சொற்களை உடைய வள்ளியைச் சேர்வதற்கு (அவள் இருந்த) தினைப் புனத்தைச் சேர்ந்து அங்கு இருந்தவனே, ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்த மூங்கிலின் கூட்டத்துக்கு அருகே நெருங்கி நிற்பனவும், பொன் போல ஒளி வீசும் குவளை மலர்கள் சுனையில் சுற்றிலும் (எங்கும்) பூத்திருப்பதுமான திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 267 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தானா தனத்ததன தானா தனத்ததன     தானா தனத்ததன ...... தனதான

கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை     கோடா லழைத்துமல ...... ரணைமீதே 
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை     கோல்போல் சுழற்றியிடை ...... யுடைநாணக் 
கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு     காதோ லையிற்றுவிழ ...... விளையாடுங் 
காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம     கானூ ருறைக்கலக ...... மொழியாதோ 
வீரா ணம்வெற்றிமுர சோடே தவிற்றிமிலை     வேதா கமத்தொலிகள் ...... கடல்போல 
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்     வேலா திருத்தணியி ...... லுறைவோனே 
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்     மாபோ தகத்தையருள் ...... குருநாதா 
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு     மாலோ டணைத்துமகிழ் ...... பெருமாளே.

கூர்மையான வேலாயுதத்தைப் பழித்து வென்ற கண்களாலே வருபவரை மயக்குவித்து, மலை போன்ற மார்பால் வரவழைத்து, மலர்ப் படுக்கை மேல் தம்பலப் பூச்சி போலச் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும்படி மார்புறத் தழுவி, கண்ணை அம்பு போலச் சுழற்றி, இடையில் உள்ள ஆடை நெகிழவும், மேகம் போல் கருப்பான கூந்தல் சரியவும், வாய் அதட்டும் சொற்களைப் பேசவும், இரண்டு காதுகளில் உள்ள ஓலைகளும் கழன்று விழவும், லீலைகளைச் செய்து காம மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மகளிருடன் மகிழ்வுற்று, யமனுடைய நரகில் சேர்ந்து இருக்கும்படியான குழப்பம் என்னை விட்டு அகலாதோ? வீராணம் என்னும் பெரிய பறை, வெற்றி முரசாகிய ஜய பேரிகை, மேள வகை, திமிலை என்ற பறை, வேதாகம ஒலிகள் இவையெல்லாம் கடல் போல மிக்க சிறப்புடன் முழக்கம் செய்ய, எதிர்த்து வந்த சூரர்கள் இறக்கும்படி செலுத்திய வேலாயுதனே, திருத்தணிகைப் பதியில் வீற்றிருப்பவனே, மன்மதன் இறக்கும்படி சிரித்த தந்தையின் காதுகளில் சிறந்த ஞானோபதேசத்தை அருளிய குரு நாதனே, திருமால் பெற்ற வள்ளி அம்மை மிக்க மகிழ்ச்சிகொள்ள, அதிக ஆசையுடன் அவளை அணைத்து மகிழ்ந்த பெருமாளே. 

பாடல் 268 - திருத்தணிகை
ராகம் - நாதநாமக்ரியா; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தந்து தானன தனதன தனதன     தந்து தானன தனதன தனதன          தந்து தானன தனதன தனதன ...... தனதான

கொந்து வார்குர வடியினு மடியவர்     சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல          கொண்ட வேதநன் முடியினு மருவிய ...... குருநாதா 
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக     செந்தில் காவல தணிகையி லிணையிலி          கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத 
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்     சந்தி யாதது தனதென வருமொரு          சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச் 
சஞ்ச ¡£கரி கரமுரல் தமனிய     கிண்கி ணீமுக விதபத யுகமலர்          தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே 
சிந்து வாரமு மிதழியு மிளநவ     சந்த்ர ரேகையு மரவமு மணிதரு          செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே 
செண்ப காடவி யினுமித ணினுமுயர்     சந்த னாடவி யினுமுறை குறமகள்          செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும் 
இந்து வாண்முக வனசமு ம்ருகமத     குங்கு மாசல யுகளமு மதுரித          இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம 
இந்த்ர கோபமு மரகத வடிவமு     மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு          மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே.

பூங்கொத்துக்களால் நிறைந்த குராமரத்து* அடியிலும், அடியார்களின் இதயத் தாமரையின் நடுவிலும், பல நெறிகளைக் கொண்ட வேதத்தின் நல்ல முடிவிலும், விளங்குகின்ற குருநாதனே, கொங்கு நாட்டில் அழகு நிறைந்த பழனியில் ஆறுமுகனாக எழுந்தருளியவனே, திருச்செந்தூரில் காவற்காரனாக விளங்குபவனே, திருத்தணிகையில் இணையில்லாதவனாக விளங்குபவனே, கூட்டமாக இரைச்சலுடன் தர்க்கித்து வருகின்ற, அநேக யுக்திகளைக்கொண்டு கொண்டு விரோதிக்கின்ற, சமயவாதிகளால் பெறுவதற்கு அரிதானதும், அன்னியர்களால் சந்திக்க முடியாததும், தனக்கே உரிய ஓர் ஒப்பற்ற பரம்பரையாக வருவதும், இதுவே என்று எனக்கு உபதேசித்து, வாசனை பொருந்திய கடம்பமாலை அணிந்ததும், வண்டினம் ஒலிப்பதும், பொன்னால் ஆன சிறுசலங்கைகளைத் தரித்ததுமான, சுகம் தரும் இரு திருவடித் தாமரைகளைத் தந்த பெரிய கிருபையை கனவிலும் நனவிலும் மறவேன். நதியையும் (கங்கை), ஆத்திமலரையும், கொன்றையையும், இளமையும் புதுமையும் உடைய பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்துள்ள சிவந்த சடையுடைய சிவபெருமானது அழகிய குழந்தையாக அவதரித்த முருகனே, செண்பகமரங்கள் நிறை வனத்திலும், பரண்மீதும், உயரமான சந்தன மரக் காட்டிலும் வாசம் செய்த குறமகள் வள்ளியின் செம்பொன் சிலம்பை அணிந்த தாமரை போன்ற பாதங்களையும், வளையல் அணிந்த இளம் மூங்கில் போன்ற கரங்களையும், சந்திரனை ஒத்த ஒளிமிக்க முகத் தாமரையையும், கஸ்தூரியும் குங்குமமும் தரித்த மார்பையும், இனிமையான யாழ் போன்றதும் அமிர்தம் போன்றதுமான வசனத்தையும், இளநகையையும், வசீகரிக்கும் (இந்த்ரகோபம் என்ற சிவந்த பூச்சி போன்ற) சிவப்பான அதரங்களையும், மரகதப் பச்சை வடிவத்தையும், வானவில் போன்ற புருவங்களையும், இரு குண்டலங்களோடு போர்புரிவது போல காதுவரை நீண்ட கண்களின் நீலமணிகளையும், மடல் ஏட்டில்** எழுதி வர்ணித்த பெருமாளே. 
* குராமரம்: முருகன் விரும்பி அமரும் மரம். திருவிடைக்கழி என்ற தலத்தில் குராமரத்தின் கீழே முருகன் வீற்றிருக்கிறான்.
** மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.

பாடல் 269 - திருத்தணிகை
ராகம் - ஆபோகி; தாளம் - கண்டசாபு - 2 1/2 தகிட-1 1/2, தக-1

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்     தனத்தன தனத்தம் ...... தனதான

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் 
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் 
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் 
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் 
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்     தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி 
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்     தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் 
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்     சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா 
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.

முருகன் அடியார்களை கோபிப்பவர்களது தலைக்கும், அவர்களைப் பகை செய்தவர்களது குடும்பத்திற்கும், அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும், அவர்களைக் கண்டு கோபமாகச் சிரிப்பவர்கட்கும், அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும், திருப்புகழே நெருப்பாகி (அடியோடு அழிக்குமென) யாம் நன்கு அறிவோம். (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும் அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும், (பாடுவோர், கேட்போரின்) மனதையும் உருக்குவதும், மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம் இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை அறுப்பதும், அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே எரிப்பதும், மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய, எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய். தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் (அதே ஒலியுடன்) பேரிகைகள் முழங்கவும், (அதே ஒலியுடன்) உடுக்கைகள் முழங்கவும், சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த கொடிய சூராதி அசுரர்களின் கோபத்தையும், அறுத்தெறிந்த பிணமலைகள் யாவையும், புன்னகை புரிந்தே அதிலெழுந்த அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே, தினைப்பயிர் விளையும் மலைக் குறவள்ளியை மார்புற அணைத்து இன்புற்று, உயர்ந்தோர் மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 270 - திருத்தணிகை
ராகம் - சாமா ; தாளம் - ஆதி 2 களை - எடுப்பு - 3/4 இடம்

தனத்த தத்தன தனதன தனதன     தனத்த தத்தன தனதன தனதன          தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான

சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்     செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்          செனித்த தெத்தனை திரள்கய லெனபல ...... வதுபோதா 
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை     செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு          செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ ...... தளவேதோ 
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி     கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்          வதைத்த தெத்தனை யளவிலை விதிகர ...... மொழியாமல் 
வகுத்த தெத்தனை மசகனை முருடனை     மடைக்கு லத்தனை மதியழி விரகனை          மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் ...... புரிவாயே 
தனத்த னத்தன தனதன தனதன     திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி          தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ 
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி     தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு          தமித்த மத்தள தமருக விருதொலி ...... கடல்போலச் 
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய     திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை          தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை ...... பொரும்வேலா 
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ     முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி          திருத்த ணிப்பதி மருவிய குறமகள் ...... பெருமாளே.

சிறிய எள்ளு, தினை, சிறு மணல் ஆகியவற்றின் அளவுள்ள உடலினை எடுத்து மறைந்த ஜன்மங்கள் எத்தனை? அலை வீசும் கடலுக்கடியில் பெருத்த சுறா மீனிலிருந்து சிறிய கடல் ஜந்து வரை எடுத்த பிறவிகள் எத்தனை? அவையெல்லாம் போதாவென்று மலைகளிலும் சுனைகளிலும் ஜனித்த பிறவிகள் எத்தனை? பலவிதமான உடம்புகளின் புகுந்து வளர்ந்து கீழ்மைக்குரிய பெண்களின் மார்பிலே மையல் கொண்டு அலைந்தமை எத்தனை? யமன் பல பல பிறவிகளிலும் பறித்துக் கொண்ட உயிர்கள் எத்தனை? மனத்திலேதான் எத்தனை வஞ்சகமான எண்ணங்கள்? வேண்டுமென்றே கெடுத்த மற்றவர்களின் குடிகள்தாம் எத்தனை? கொடிய மிருகம்போல் மற்ற உயிர்களை வதைத்தது எத்தனை? இவை யாவற்றையும் எண்ணினால் அளவிட முடியாது. விதி வகுத்த வழியினின்று மாறாமல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை? கொசுவைப் போன்ற அற்பனகிய என்னை, முரட்டுக்குணம் உடைய என்னை, மூடர்கள் குலத்தனான என்னை, அறிவற்ற காமாதூரனான என்னை, உன் மலரடிகளில் என் நெஞ்சை வைத்து உருகுதற்கு இனியாகிலும் நீ அருள் புரிவாயாக. தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி என்ற ஓசையோடு கூடிய சந்தத்தில் தமக்கே உரிய வெற்றி ஒலியோடு மத்தளமும், தமருகம் என்ற முரசும் கடல் அலை ஓசை போல ஆர்ப்பரிக்கவும், கோபம் பொங்கும் போர்க்களத்தில் இரத்தம் கொப்பளித்திடவும், போரில் யானைகளும், அசுரர்களும், குதிரைகளும், விற்களும் தெறித்து சின்னாபின்னமாக விழுந்திடவும், கழுகும் நரியும் பிணங்களைத் தின்ன, மாமிச மலை மீது நின்று சூரனோடு போர் செய்த வேலனே, மனவளம் மிக்க உத்தமர்களான சிவனடியார்களும், தவமுநிவர் கூட்டங்களும் தேன் நிறைந்த மலர்களைக் கொண்டு பணிகின்ற திருத்தணிகை என்ற திருப்பதியிலே வீற்றிருக்கும் குறப்பெண் வள்ளியின் மணவாளப் பெருமாளே. 

பாடல் 271 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனன தனனத் தனன தனனத்     தனன தனனத் ...... தனதான

சொரியு முகிலைப் பதும நிதியைச்     சுரபி தருவைச் ...... சமமாகச் 
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்     சுமட ரருகுற் ...... றியல்வாணர் 
தெரியு மருமைப் பழைய மொழியைத்     திருடி நெருடிக் ...... கவிபாடித் 
திரியு மருள்விட் டுனது குவளைச்     சிகரி பகரப் ...... பெறுவேனோ 
கரிய புருவச் சிலையும் வளையக்     கடையில் விடமெத் ...... தியநீலக் 
கடிய கணைபட் டுருவ வெருவிக்     கலைகள் பலபட் ...... டனகானிற் 
குரிய குமரிக் கபய மெனநெக்     குபய சரணத் ...... தினில்வீழா 
உழையின் மகளைத் தழுவ மயலுற்     றுருகு முருகப் ...... பெருமாளே.

மழை பொழிகின்ற மேகத்தையும், பதும நிதியையும், காமதேனுவையும், கற்பக மரத்தையும் (கொடையில்) நீ ஒப்பாய் என்று சொல்லிப் புகழ்ந்தாலும், மனம் ஓர் எள் அளவும் இளகி இரங்குதல் இல்லாத கீழ் மக்களின் அருகில் சென்று, இலக்கியத் தமிழ்ப் புலவர்கள் தெரிந்து பாடிய அருமையான பழைய பாடல்களைத் திருடியும், திரித்து நுழைத்தும் பாடல்களைப் பாடி, திரிகின்ற மயக்க அறிவை விட்டு, குவளை மலர் தினமும் மலர்கின்ற, உன்னுடைய, திருத்தணிகை மலையின் பெருமையைக் கூறும்படியான பாக்கியத்தை நான் பெறுவேனோ? (வள்ளியின்) கரிய புருவம் என்னும் வில் (காம வேதனையால்) வளைந்து சுருங்க, (காமனது ஐந்தாவது) கடைசிப் பாணமானதும்*, விஷம் நிறைந்ததும் ஆகிய நீலோற்பலம் என்னும் கொடுமை வாய்ந்த அம்பு உன் மேல் பட்டு, நீ அதனால் விரக வேதனை மிகுந்து, மிகுந்த அச்சத்துடன், மான்கள் பல உள்ள வள்ளி மலைக் காட்டுக்குச் சென்று, அவ்விடத்துக்கு உரிய குமரியாகிய வள்ளிக்கு அபயம் என்று உரைத்து, அவளது இரண்டு பாதங்களிலும் விழுந்து, பின்பு, மான் பெற்ற மகளாகிய வள்ளியைத் தழுவ மோகம் கொண்டு உருகி நின்ற முருகப் பெருமாளே. 
* நீலோற்பல மலர் மன்மதனின் ஐந்தாவது ஈற்றுப் பாணம். மற்ற கணைகள் - தாமரை, மா, அசோகம், முல்லை.

பாடல் 272 - திருத்தணிகை
ராகம் - கானடா ; தாளம் - ஆதி ; - எடுப்பு - 1/2 இடம்

தாத்தன தத்தன தானன தானன     தாத்தன தத்தன தானன தானன          தாத்தன தத்தன தானன தானன ...... தனதான

தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு     சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு          சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவமூழ்குந் 
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்     போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்          சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப் 
போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்     போற்றுத லற்றது ரோகியை மாமருள்          பூத்தம லத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப் 
போக்கிவி டக்கட னோஅடி யாரொடு     போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது          போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் ...... புரிவாயே 
மூக்கறை மட்டைம காபல காரணி     சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி          மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி ...... முழுமோடி 
மூத்தவ ரக்கனி ராவண னோடியல்     பேற்றிவி டக்கம லாலய சீதையை          மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு ...... முகிலேபோய் 
மாக்கன சித்திர கோபுர நீள்படை     வீட்டிலி ருத்திய நாளவன் வேரற          மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் ...... மருகோனே 
வாச்சிய மத்தள பேரிகை போல்மறை     வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை          வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே.

தாக்கிச்செய்ய வேண்டிய போருக்கு ஒரு சாரைப்பாம்பு சென்றதைப் போன்றவனை (கோழை), அருகில் வேறு ஒருவரையும் சாக்ஷியாக வைத்து உண்பிக்காமல் தான்மாத்திரம் உண்ணுபவனை (சுயநலவாதி), திருநீற்றைத் தரிக்கிற சைவசாஸ்திர வழிக்கு வெகு தொலைவில் உள்ளவனை (சிவத்வேஷி), மரத்தைத் தாங்கும் வேர்போல் உயிரைத்தாங்கும் தவத்தில் மூழ்கும் நற்பயனை விடுத்து வீணில் உழலும் பாவியை (நாஸ்திகன்), புலவர் போல நடித்துக்கொண்டு, அன்போடு உன்னை நினையாமல், சண்டை செய்து தமிழிலே வைது வாதிட்டுக் குரைக்கும் நாயினை (நாய் போன்றவன்), இந்தநாள் வரைக்கும் தடுமாற்றம் அடைந்து, வேறு புகலிடம் இல்லாத வீணனை (வீணன்), மெய்யறிவாளர்களைப் போற்றாதுவிட்ட துரோக சிந்தனை உடையவனை (துரோகி), பெரும் அஞ்ஞானம் நிறைந்த மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) சேர்ந்த கீழ்மகனை (மகாபாவி), பறையனுக்குச் சமானமானவனை (மிலேச்சன்), இத்தகைய பாவியாகிய அடியேனை (முருகா, நீ) நீக்கிவிடக் கடவதோ? (இதுவரை அருணகிரியார் தம்மைத் தாழ்த்திக் கொண்டு கோழை, சுயநலவாதி, சிவத்வேஷி, நாஸ்திகன், நாய்போன்றவன், வீணன், துரோகி, மகாபாவி, மிலேச்சன் என்று கூறுகிறார்). மோக்ஷ உலகில் உன் அடியார்களோடு சேர்ந்து யானும் போய் பெறக்கூடிய பாக்கியம் எனக்கு இல்லையா? போர் செய்வதும், ஒளிவிடுவதுமான வைரம் போன்ற கூரிய வேலினையும், மயிலினையும் உடையவனே, திருவருள் புரியவேண்டும். (இனி, ராமாயணக் கதைக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்). மூக்கு அறுபட்டவளும், அறிவில்லாதவளும், பெரும் வலிமையுள்ளவளும், ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக இருந்தவளும், சூர்ப்பநகையென்ற பெயருடன், மூளியான கொடியவளும், அவமதிக்கத் தக்கவளும், மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில் பிறந்தவளும், விபீஷணருக்கு சகோதரியும், முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை, அண்ணனும் அரக்கனுமான ராவணனிடம் சென்று சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில் புகுத்திவிட, தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய சீதாதேவியை மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக் கவர்ந்து ஒற்றைத் தேரிலே வைத்து மேகமண்டலம் சென்று, பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில் (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது, அந்த ராவணனின் வம்சமே வேரோடு அற்றுப்போகும்படி, அதற்குரிய வழியை நிறைவேற்றிய வில்லாதி வீரர்களின் தலைவனாம் ராமனின் மருமகனே, வாத்தியங்களான மத்தளம், பேரிகை இவற்றின் ஓசை போல வேதியரின் வேத கோஷங்கள் வாழ்த்தவும், செங்கழுநீர் மலரை நாள்தோறும் தருகின்ற நீண்ட சுனை வாய்க்கப் பெற்ற திருத்தணிகை என்னும் பெருமலையில் மேவிய பெருமாளே. 

பாடல் 273 - திருத்தணிகை
ராகம் - ........; தாளம் -

தனத்த தானன தத்தன தத்தன     தனத்த தானன தத்தன தத்தன          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்     வறட்டு மோடியி னித்தந டிப்பவர்          சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் ...... வலையாலே 
திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்     இதத்தை யோடவி டுத்தும யக்கிடு          சிமிட்டு காமவி தத்திலு முட்பட ...... அலைவேனோ 
தரித்து நீறுபி தற்றிடு பித்தனு     மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு          சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு ...... முருகோனே 
சமப்ர வீணம தித்திடு புத்தியில்     இரக்க மாய்வரு தற்பர சிற்பர          சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண ...... குருநாதா 
வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி     களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்          விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட 
விதித்த வீரச மர்க்கள ரத்தமு     மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்          விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய ...... மறவோனே 
பெருக்க மோடுச ரித்திடு மச்சமு     முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு          பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் ...... கழுநீரின் 
பிணித்த போதுவெ டித்துர சத்துளி     கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி          பிறக்க மேவுற அத்தல முற்றுறை ...... பெருமாளே.

திருட்டுப் பெண்கள், கூத்தாடும் உதவாக்கரைகள், பசையற்ற செருக்குடன் தினந்தோறும் நடிப்பவர்கள், சிறப்புடன் உடலைக் குலுக்கி, அங்குமிங்கும் திருப்பும் கண்கள் வீசும் வலையால் (ஆண்களைத்) திகைப்பித்து, உள்ளிருக்கும் உயிரைக் கரைத்து, மனதில் இன்பத்தை ஓட விடுமாறு செய்து மயக்கத்தைத் தருகின்ற கண்களைக் கொட்டுகின்ற காம வழியில் சிக்கும்படி அல்லாடுவேனோ? திரு நீற்றை அணிந்து, மறை மொழிகளைப் பிதற்றுகின்ற பித்தனாகிய* சிவபெருமானும் இன்பத்துடன் பெரிய பிரணவப் பொருளை உபதேசிப்பாயாக, சமர்த்தனாகிய குழந்தையே என்று (உன்னைக்) கேட்கும்படியான புகழைப் பெற்ற முருகனே, பெரும் நிபுணனே, போற்றுகின்ற (அடியார்களின்) புத்தியில் இரக்கத்துடன் எழுந்தருளும் பரம் பொருளே, அறிவுக்கு எட்டாத கடவுளே, பல யோகங்களுள் சிறப்புள்ள (மெளன) யோகநிலையைக் கொண்ட தக்ஷிணா மூர்த்தியான** குரு நாதனே, (தேவர்களை) விரட்டிய சூரனை சம்ஹாரம் செய்து, போரில் கொல்லப்பட்ட இடங்களில் பேய்களுக்குப் (பிணங்களை) இரையாகக் கொடுத்து, (அவற்றின்) பசித் துன்பம் நீங்கி அப்பேய்கள் தித்திகு தித்து என்று குதித்து விளையாடும்படிச் செய்த வீரனே, போர்க் களத்தில் ரத்தமும் பெரிய பிரளய வெள்ளம் போல் ஒலித்து ஓடும்படியாக அசுரர்களை ஒழித்து, வேலாயுதத்தைப் பாய்ச்சி (அவர்களின்) உயிரை உண்ட வீரனே, நிறைந்த வளர்ச்சியோடு வசிக்கின்ற மீன்கள் தமது மனதில் மிகுந்த மகிழ்ச்சி பெறும்படியாக, அவற்றின் குறுகிய, ஆனால் பிளந்திருக்கும், வாய்களில் மூன்று வேளைகளிலும், ஒப்பற்ற செங்குவளையின் கட்டுள்ள மலர்கள் இதழ் விரிந்து ரசத் துளிகளைக் கொடுக்கும் சுனைகள் மிகுந்துள்ள திருத்தணிகையில் விளக்கம் பொருந்த அந்தத் தலத்தை விரும்பி அங்கு வீற்றிருக்கும் பெருமாளே. 
* சிவபிரானை அன்பின் மிகுதியால் சுந்தரமூர்த்தி நாயனார் 'பித்தா' என்று அழைத்தார்.
** திருத்தணிகையில் சிவபெருமானுக்குக் குருநாதராக முருக வேள் யோக நிலையில் இருந்து உபதேசம் செய்தார். ஆதலால் முருகவேள் தக்ஷிணா மூர்த்தி ஆனார். சிவனே முருக வேள் ஆதலின் தனக்குத் தானே குரு மூர்த்தியாயினார்.

பாடல் 274 - திருத்தணிகை
ராகம் - பெஹாக்; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12 - எடுப்பு - அதீதம்

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தனனத் ...... தனதான

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்     சொற்பா வெளிமுக் ...... குணமோகம் 
துற்றா யப்பீ றற்றோ லிட்டே     சுற்றா மதனப் ...... பிணிதோயும் 
இப்பா வக்கா யத்தா சைப்பா     டெற்றே யுலகிற் ...... பிறவாதே 
எத்தார் வித்தா ரத்தே கிட்டா     எட்டா அருளைத் ...... தரவேணும் 
தப்பா மற்பா டிச்சே விப்பார்     தத்தாம் வினையைக் ...... களைவோனே 
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ     தத்தாய் தணிகைத் ...... தனிவேலா 
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா     வற்பா வைதனத் ...... தணைவோனே 
அத்தா நித்தா முத்தா சித்தா     அப்பா குமரப் ...... பெருமாளே.

உணவைத் தரும் மண், நீர், அசைகின்ற நெருப்பு, நெருங்கி வீசும் காற்று, புகழ்மிக்க பரந்த ஆகாயம் (ஆகிய ஐம்பொரும் பூதங்களும்), மூன்று குணங்களும் (ஸத்வம், ராஜஸம், தாமசம்), மூவாசைகளும் (மண், பெண், பொன்) (மேலே சொன்னவை யாவும்) நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளதும், (ஒன்பது ஓட்டைகளுடன்) கிழிந்த தோலை வைத்துச் சுற்றி மூடப்பட்டதும், காமநோய் தோய்ந்துள்ளதும் ஆகிய இந்தப் பாவம் நிறைந்த உடல்மீது ஆசைப்படுவதை மேற்கொண்டு, உலகில் மீண்டும் மீண்டும் யான் பிறக்காமல், உன்னைத் துதிக்காதவர்களின் கல்வி சாமர்த்தியத்தில் கிடைக்காததும் அவர்களுக்கு எட்டாததுமான உன் திருவருளைத் தந்துதவ வேண்டும். தவறாமல் உன்னையே பாடித் தொழுபவர்கள் எவரெவரோ அவரவர்களின் வினைகளை நீக்குபவனே, செருக்கும், ஆக்ஞாசக்கரமும் உடைய சூரனை அழித்தவனே, மெய்யான சிவஞான பண்டிதனே, திருத்தணிகை மலைமீது வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலவனே, அந்த சர்க்கரைப் பாகு போன்ற, பாலைப் போன்ற, இனிய சொல்லும், தினைப்புனக் காவல் தொழிலும் உள்ள வள்ளியை மார்புறத் தழுவுபவனே, உயர்ந்தவனே, என்றும் உள்ளவனே, பாசங்களில் நீங்கியவனே, சித்தனே, பரம பிதாவே, குமாரக் கடவுளே, பெருமாளே. 

பாடல் 275 - திருத்தணிகை
ராகம் - சுப பந்துவராளி; தாளம் - சதுஸ்ர ஏகம் - 4 களை - 16 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தத்தனாத் தனன தத்தனாத் தனன     தத்தனாத் தனன ...... தனதான

தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக     துக்கமாற் கடமு ...... மலமாயை 
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை     துப்பிலாப் பலச ...... மயநூலைக் 
கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ     லப்புலாற் றசைகு ...... ருதியாலே 
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல     சட்டவாக் கழிவ ...... தொருநாளே 
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்     அர்ச்சியாத் தொழுமு ...... நிவனாய 
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்     வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா 
இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத     வத்தினோர்க் குதவு ...... மிளையோனே 
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ     டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.

தோல் நீங்காத குடிசையும், அழுக்கைக் கொண்டதும், சுகம், துக்கம், ஆசை இவற்றைத் தன்னுள் கொண்ட குடமும், மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை) என்றிவை நெருக்கமாய் வைத்த காற்றடைத்த பானையும், மிழற்றும் மழலை போன்று பொருள் விளங்காத வார்த்தைகள் உள்ள பல சமய நூல்களை கைக்கொண்டு வீண் கூச்சலை மேற்கொண்டதுமான இந்த உடம்பை, துன்பத்துக்கு இடமான மாமிச பிண்டம், சதை, ரத்தம், இவற்றால் கட்டப்பட்ட கலப்பும் மிக வெறுக்கத்தக்க பொருளானதுமான இந்த உடம்பை, விரும்பித் திரிகிற எனக்கு, அடியோடு வாக்கு அழிந்து போகும் (மெளனநிலை கூடும்) ஒருநாள் ஏற்படுமோ? எலும்புகள், பாம்புகள், திருநீறு, இவற்றைத் தம் உடம்பில் அணிந்துள்ள நம் தந்தையாம் சிவபிரான் மலர்களால் அர்ச்சித்துத் தொழுத ஞானியான அப்பனே, போருக்கு எப்போதும் ஆயத்தமாய் உள்ள பன்னிரண்டு மலைகள் போன்ற புயத்தோனே, குவளை மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையோனே, பார்வதிக்கும் கங்கைக்கும் குமரனே, இந்தப் பூமியில் பார்வை என்று ஒன்று இருந்தால் அது உன் திருநடனத்தைப் பார்க்கும் பார்வையே. அந்தப் பார்வையை உடைய தவசீலர்களுக்கு உதவும் இளையவனே, உன்னை வணங்காதவர்களுக்கு அரியவனாகி, பாசங்களிலிருந்து நீங்கியவனே, தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாய் இருக்கும் பெருமாளே. 

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.