LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[51-75]

பாடல் 51 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .....
தந்தத் தனனத் தந்தத் தனனத்
     தந்தத் தனனத் ...... தனதானா
கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
     கொண்டற் குழலிற் ...... கொடிதான 
கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
     கொஞ்சுக் கிளியுற் ...... றுறவான 
சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
     சந்திப் பவரைச் ...... சருவாதே 
சந்தப் படியுற் றென்றற் றலையிற்
     சந்தப் பதம்வைத் ...... தருள்வாயே 
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
     கந்திக் கடலிற் ...... கடிதோடா 
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
     றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே 
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
     சென்றுற் றவர்தற் ...... பொருளானாய் 
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
     செந்திற் குமரப் ...... பெருமாளே.
பருமையான மார்பிலும், செம்பொன்னாலான அணிகலன்களிலும், மேகம் போன்ற கரிய கூந்தலிலும், கொடிய வலிமையுடன் தைக்கின்ற அம்புக்கு ஒப்பான அந்தக் கயல் மீன் போன்ற கண்களிலும், கொஞ்சுகின்ற கிளி போன்ற பேச்சுக்கு உறவான சங்கு போன்ற கண்டத்தின் குரலிலும் ஈர்க்ப்பட்டுச் சென்று, வீட்டின் வெளிப்புறத்தில் தம்மிடம் வருவோரைச் சந்திப்பவர்களாகிய விலைமாதர்களுடன் கொஞ்சிக் குலவாமல், பேரின்ப சுக நிலையை நான் அடைய, எனது தலையில் உனது அழகிய திருவடியை வைத்து அருள் புரிவாயாக. அங்கு தனது சேனையை விட்டு நீங்கி, அப்பொழுதே நீர் நிலையாகிய (செந்திலுக்கும் சூரனுடைய தலைநகரான மகேந்திரபுரத்துக்கும் இடையே) சந்தியாக உள்ள கடலை விரைவாகத் தாண்டி, அந்தப் பூமியாகிய மகேந்திரபுரத்தில் (முருகனின்) தூதாகச் சென்று, அசுரர்கள் பயப்படும்படி போர் செய்து, அவர்களுக்கு அஞ்சி நீங்காமல், சிவந்த கிரணங்களை உடைய சூரியனைப் போலப் பொருந்தி, அக் கடல் கடந்து போய் வெற்றியுடன் வந்தவரான வீரபாகு தேவரின் ஆவிப் பொருள் ஆனவனே, சிந்தையின் அன்பு வைத்து, அழகிய பொழில் சூழ்ந்த திருச்செந்தூரில் தங்கும் குமரப் பெருமாளே. 
பாடல் 52 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - ......
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததானா
கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்
     குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன்
          குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் ...... பண்புலாவக் 
கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்
     குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்
          குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் ...... தொன்றுபாய்மேல் 
விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்
     வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்
          மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் ...... செஞ்செநீடும் 
வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென்
     றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன்
          விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் ...... தன்புறாதோ 
படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந்
     துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்
          பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் ...... சிந்தும்வேலா 
படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன்
     பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும்
          பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண் ...... கங்கைமான்வாழ் 
சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந்
     தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்
          சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் ...... பொங்கிநீடும் 
சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின்
     றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந்
          தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே.
கொடி போன்ற இடை துவள, அங்கம் கிளர்ச்சி கொள்ள, அழகிய குமுத மலர் போன்ற அமுதளிக்கும் வாயிதழைப் பருகி இன்பம் கொள்ளும் எண்ணத்தை உடையவன் நான். விலைமாதரோடு குலவி அணைந்து, மேகம் போன்ற கரிய கூந்தலும் சரிந்து, அவர்கள் மீது அன்பினால் வரும் ஆசை வர, வளைந்த விரல் நகக் குறியால் புண்படுகின்ற ஏக்கம் கொண்டவன் நான். கொஞ்சிப் பேசி அந்த மாதர்களுடன் இனிய களிப்பு கொண்டு உள்ளமும் குரலும் ஒடுங்க தன்வசம் இழக்கும் குறுகிய குணத்தை உடையவன் நான். மணம் விரிந்து பொருந்தும் பாய் மீது நஞ்சு போன்ற கண்களை உடைய மகளிர் மார்பகங்களின் இன்பத்தில் அன்பு கொள்ளும் செயலை உடையவன் நான். தகுதியுடன் பொருந்திய உயிர் வெந்து அழிந்து உடலும் இன்பத்தை இழக்க, அறிவில்லாத வழிப் போக்கில் நெருங்கும் தோழன் நான். செவ்விதாய் நீடித்துள்ள மிக்க பொன் ஒளி விளங்கும் அழகு பொருந்திய திருச்செந்தூர் என்று கருதி நெகிழ, மனம் உருகி வருகின்ற அன்பு இல்லாதவன் நான். நூல் ஆராய்ச்சி இல்லாதவன் நான். (இருப்பினும்) அத்தகைய எனக்கு உனது பொருந்திய இரண்டு தாமரை போன்ற திருவடியைத் தந்து மகிழ்ந்து அன்பு காட்ட மாட்டாயோ? படம் விளங்கும் பாம்பின் உடலையும் அங்கங்களையும் பிளவுபடக் கிழித்து உதறுகின்ற ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளி வந்து, தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் எல்லாருடைய உடல்களும் பிளவுண்டு பிளவுண்டு போகும்படி, அவ்விடத்தில் கொன்ற வேலனே, மண்ணவரும் தேவர்களும் நின்று வணங்கும் எட்டு குணங்களை உடையவன். பழம் பொருளாகிய இறைவன். உருவம் இல்லாதவன். அடியார்கள் பங்கில் இருப்பவன். பெரிதும் துன்பம் செய்து வந்த திரி புரங்களும் எரியும்படித் திறந்த சிவந்த (நெற்றிக்) கண்ணை உடையவன். மான் போன்ற கங்கை(நதி)யாகிய மாது வாழ்கின்ற சடையின் மீது அழகாகத் தரித்த கொன்றை மலரும், குணம் கொண்ட இள மதியின் குறைத் துண்டத்தையும், சிவந்த கையில் எல்லா உலகங்களும் ஒழிக்க வல்ல பெருங் கோபம் கொண்டுள்ள ஒள்ளிய நெருப்பையும், கிளர்ந்து உயர்ந்த உடல் கொண்ட (நந்தியாகிய) ரிஷபத்தையும் பாம்பையும் கொண்டவன், (அந்த சிவபெருமானின்) தூய, அழகிய (இடப்) பக்கத்தில் நின்று உலகெலாம் அளிக்கும் கெளரி உமை முலைப் பாலைத் தந்து அன்பு கொள்ளும் தமிழ் வல்லவனே, உயர்ந்த பரம் பொருளாகிய சங்கரன் வணங்கும் தம்பிரானே. 
* சிவனின் (இறைவனின்) எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
பாடல் 53 - திருச்செந்தூர்
ராகம் - கரஹரப்ரியா; தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6 - ஏடுப்பு 3/4 இடம்
தந்தன தானான தானன
     தந்தன தானான தானன
          தந்தன தானான தானன ...... தனதான
கொம்பனை யார்காது மோதிரு
     கண்களி லாமோத சீதள
          குங்கும பாடீர பூஷண ...... நகமேவு 
கொங்கையி னீராவி மேல்வளர்
     செங்கழு நீர்மாலை சூடிய
          கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே 
உம்பர்கள் ஸ்வாமிந மோநம
     எம்பெரு மானேந மோநம
          ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும் 
உன்புக ழேபாடி நானினி
     அன்புட னாசார பூசைசெய்
          துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே 
பம்பர மேபோல ஆடிய
     சங்கரி வேதாள நாயகி
          பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி 
பங்கமி லாநீலி மோடிப
     யங்கரி மாகாளி யோகினி
          பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண் 
டெம்புதல் வாவாழி வாழியெ
     னும்படி வீறான வேல்தர
          என்றுமு ளானேம நோகர ...... வயலூரா 
இன்சொல்வி சாகாக்ரு பாகர
     செந்திலில் வாழ்வாகி யேயடி
          யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
பூங்கொடி போன்ற மாதர்களின் காதுவரை நீண்டு அதை மோதும் இரண்டு கண்களிலும், வாசம் மிக்கதும், குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம், நகைகள் அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களிலும், நீர்த் தடாகத்தின் மேல் வளரும் செங்கழுநீர் மலர்மாலையைச் சூடிய கூந்தலிலும், உடலின் அழகிலும் மயங்காமல், தேவர்களின் ஸ்வாமியே போற்றி, போற்றி, எங்கள் பெருமானே போற்றி, போற்றி, ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி, என்று தினமும் உனது புகழையே பாடி யான் இனி அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும், என் வாழ்நாள் வீண் நாளாகப் போகாதபடியும் அருள் புரிவாயாக. பம்பரம் போலவே சுழன்று நடனம் ஆடும் சங்கரி, வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு) தலைவி, தாமரை போன்ற திரு நிறைந்த பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத் தரித்தவள், குற்றமில்லாத கருநீல நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள் (தந்த பயத்தைப் போக்குபவள்) மகா காளி, யோகத்தின் தலைவியாகிய அன்னை பார்வதி, முன்பு மதுபானம் செய்திருந்த சூரனோடு நீ எதிர்த்துப் போர் செய்யவேண்டி, என் மகனே நீ வாழ்க, வாழ்க என்று ஆசி கூறும் வகையில் வெற்றியைத் தரும் வேலாயுதத்தைத் தரப்பெற்ற, என்றும் அழியாது விளங்கும் மூர்த்தியே, மனத்துக்கு இன்பம் தருபவனே, வயலூர்ப் பெருமானே, இனிய சொற்களை உடைய விசாகப் பெருமானே, கருணை நிறைந்தவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செல்வமாகி அடியேனை உய்விக்கும்படியாக வாழ்வை எனக்கு அருளும் பெருமாளே. 
பாடல் 54 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....
தனதன தனதன தனதன தன
     தந்தத் ...... தனதானா
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
     கும்பத் ...... தனமானார் 
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
     கொண்டுற் ...... றிடுநாயேன் 
நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
     நின்றுற் ...... றிடவேதான் 
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
     நின்பற் ...... றடைவேனோ 
சிலையென வடமலை யுடையவர் அருளிய
     செஞ்சொற் ...... சிறுபாலா 
திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த
     செந்திற் ...... பதிவேலா 
விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
     ரும்பிப் ...... புணர்வோனே 
விருதணி மரகத மயில்வரு குமரவி
     டங்கப் ...... பெருமாளே.
கொலை செய்யும் மத யானைக்கு ஒப்பானதும், கஸ்தூரி அணிந்ததும், குடம் போன்றதும் ஆகிய மார்பகங்களை உடைய விலைமாதர்களின் குமுத மலர் போன்றதும், அமுதம் தருவதுமான வாயிதழ் ஊறலைப் பருகி, மனம் உருகி மோக மயக்கம் கொண்டுள்ள நாயேனுடைய நல்ல நிலையை அழிக்கின்ற கவலைகள் எல்லாம் நீங்குமாறு, உனது அருட் பார்வையில் நின்று நிலை பெறுவதற்கு, உன்னுடைய இரண்டு திருவடி மலர் இணைகளை மனத்தில் இருக்கச் செய்ய உன் மீது பற்றைப் பெறுவேனோ? வில்லாக வடக்கில் உள்ள மேரு மலையைக் கொண்டவராகிய சிவபெருமான் பெற்ற, செவ்விய சொற்களை உடைய, சிறு குழந்தையே, அலை கடலின் நடுவே நின்ற சூரனை வதைத்த திருச்செந்தூர் நகர் வேலவனே, வில்லுக்கு நிகரான நெற்றியை உடைய, (ஐராவதம் என்ற) யானை போற்றி வளர்த்த மயில் போன்ற தேவயானையையும், குறப் பெண்ணாகிய வள்ளியையும் விரும்பி மணம் புரிந்தவனே, வெற்றிச் சின்னம் அணிந்த பச்சை மயிலில் ஏறி வரும் குமரனே, சுயம்பு மூர்த்தியாக வந்த பெருமாளே. 
* 'டங்கம்' என்றால் உளி. 'விடங்கம்' என்றால் உளியால் செதுக்கப்படாமல் தான்தோன்றியாக, 'சுயம்புவாக' வந்த மூர்த்தி.
பாடல் 55 - திருச்செந்தூர்
ராகம் - .....;தாளம் - .....
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்
     தந்தனா தந்தனத் ...... தனதான
சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்
     சந்தமோ கின்பமுத் ...... தெனவானிற் 
றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்
     பென்றுதாழ் வொன்றறுத் ...... துலகோரைத் 
துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்
     கொண்டுதாய் நின்றுரைத் ...... துழலாதே 
துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத்
     தொண்டினா லொன்றுரைக் ...... கருள்வாயே 
வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத்
     துண்டுமே லண்டருக் ...... கமுதாக 
விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்
     குண்டுபே ரம்பலத் ...... தினிலாடி 
செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத்
     தின்கணா டுந்திறற் ...... கதிராழித் 
திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்
     செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
சங்கைப் போன்ற மெல்லிய கழுத்து, அந்த வாயிலுள்ள பற்கள் மோக இன்பத்தைத் தரும் முத்துக்கள் என்றும், ஆகாயத்தில் தங்கியுள்ள கார்மேகம் கருங்குழல் என்றும், மார்பகங்கள் நீண்ட குளிர்ந்த மலை என்றும் (மாதர்களைப் பற்றி உவமை கூறி) வெட்கம் என்பதையே விட்டு சொல்லித் திரியாமலும், உலகில் பொருள் உள்ளவர்களிடம் போய் சிறந்த வேந்தன் நீ என்றும், செங்கைக் கொடைத் திறத்தில் அழகிய மேகத்தை ஒப்பாய் நீ என்றும் புகழ்ந்து பேசி, அவர்களிடம் தாவி வேகத்துடன் போய்த் திரியாமலும், (எனது) துன்ப நோய் ஒழிய, நல்ல கந்த வேளே என்று உன்னை, தொண்டு செய்யும் வழியில் நின்று பொருந்தி துதி ஒன்றைக் கூற அருள்வாயாக கொடிய கண்களை உடைய (வாசுகி என்ற) பாம்பு மனம் கொதித்து (விஷத்தை உமிழ), அது எங்கும் வேகச் செய்யும் என்று கருதி அந்த விஷத்தை எடுத்து அருந்தி, பின்னும் தேவர்களுக்கு ஆகும்படி அமுதத்தை வெளிவரச் செய்தவன், அழகிய மேக வண்ணனாகிய திருமாலைத் தனது பாகத்தில் கொண்டவன்*, ஆனந்தம் கொண்டு பேரம்பலமாகிய சிதம்பரத்தில் கூத்தாடுபவன், சிவந்த கண்களை உடைய திருமால் தனது தாமரைக் கண்ணால் காணக் கூடாத வகையில் வெட்ட வெளியில் ஆடும் வல்லமை பெற்றவன், ஒளி பொருந்திய கடலில் பிறந்த சந்திரன் பொருந்தி வாழ்கின்ற சடையை உடைய தலைவன் ஆகிய சிவபெருமான், பேரன்பு கொள்ளும்படியாக திருச்செந்தூரில் வாழ்கின்ற செந்தமிழ்ப் பெருமாளே. 
* சிவபெருமான் திருமாலைப் பாகமாகக் கொண்டவர் என்பது கருத்து.சங்கரன்கோவில் என்ற தலத்தில் 'சங்கரநாராயணன்' என்ற பெயர் பெற்றவர்.
பாடல் 56 - திருச்செந்தூர்
ராகம் - ......; தாளம் - ......
தந்தனா தந்தனா தந்தனா தந்தனா
     தந்தனா ...... தந்ததான
சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
     சஞ்சலா ...... ரம்பமாயன் 
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
     சம்ப்ரமா ...... நந்தமாயன் 
மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
     வம்பிலே ...... துன்புறாமே 
வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
     வந்துநீ ...... யன்பிலாள்வாய் 
கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
     கந்தனே ...... விஞ்சையூரா 
கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
     கண்டலே ...... சன்சொல்வீரா 
செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
     சென்றுமோ ...... தும்ப்ரதாபா 
செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
     செந்தில்வாழ் ...... தம்பிரானே.
கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல், மனத்தில் சஞ்சலம் கொண்டுள்ள மாயையில் தொடக்கத்தில் இருந்தே அகப்பட்டவனும், சந்தனத்துடன், குங்குமம் இவைகளால் சிங்கார ஆடம்பரம் செய்துகொண்டு, பரபரப்பான களிப்பும், ஆனந்தமும் கொண்ட மாயையில் அகப்பட்டவனும் ஆகிய நான் விலைமாதர்களின் மார்பகம் முதலான அங்கங்களின் மேல் உள்ள மோகங்களால் வீணாகத் துன்பம் கொள்ளாமல், வள்ளல் தன்மை வாய்ந்த குகனே, உனது திருவுருவமான பேரொளியுடன் நீ வந்து அன்புடன் என்னை ஆண்டருளுக. கங்கையைத் தலையில் சூடியுள்ள பிரானாகிய சிவ பெருமானின் மகனே, அழகனே, கந்தப் பெருமானே, வித்தையில் சிறந்தவர் ஊர்களில் வாழ்பவனே, நாங்கள் நடுக்கம் கொள்ளாதவாறு எங்கள் பொன்னுலகைக் காத்தருள்க என்று முறையிட்ட அந்த (ஆகண்டலேசன் என்னும்) இந்திரன் புகழ்ந்த வீரனே, செங்கையில் உள்ள ஆயுதமாகிய வெற்றிவேல் கொண்டு சூரன் அழியவே, சென்று அவனைத் தாக்கிய கீர்த்தி உள்ளவனே, சிவந்த கண்களை உடைய திருமாலும், தாமரையில் வாழும் பிரமனும் தொழுகின்ற ஆனந்தமான முருக வேளே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் தலைவனே. 
பாடல் 57 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....
தத்ததன தானதன தத்தான
     தத்ததன தானதன தத்தான
          தத்ததன தானதன தத்தான ...... தனதான
சத்தமிகு மேழுகட லைத்தேனை
     யுற்றமது தோடுகணை யைப்போர்கொள்
          சத்திதனை மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு 
தக்கமணம் வீசுகம லப்பூவை
     மிக்கவிளை வானகடு வைச்சீறு
          தத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர் 
மத்தகிரி போலுமொளிர் வித்தார
     முத்துவட மேவுமெழில் மிக்கான
          வச்சிரகி ¡£டநிகர் செப்பான ...... தனமீதே 
வைத்தகொடி தானமயல் விட்டான
     பத்திசெய ஏழையடி மைக்காக
          வஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயே 
சித்ரவடி வேல்பனிரு கைக்கார
     பத்திபுரி வோர்கள்பனு வற்கார
          திக்கினுந டாவுபுர விக்கார ...... குறமாது 
சித்தஅநு ராககல விக்கார
     துட்டஅசு ரேசர்கல கக்கார
          சிட்டர்பரி பாலலளி தக்கார ...... அடியார்கள் 
முத்திபெற வேசொல்வச னக்கார
     தத்தைநிகர் தூயவநி தைக்கார
          முச்சகர்ப ராவுசர ணக்கார ...... இனிதான 
முத்தமிழை யாயும்வரி சைக்கார
     பச்சைமுகில் தாவுபுரி சைக்கார
          முத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே.
ஒலி மிக்க ஏழு கடலை, (தேன் ஈட்டும்) வண்டை, தேன் நிறைந்த மலரை, அம்பை, சண்டை செய்யும் சக்தி வேலை, மாவடுவை, கருங்குவளைப் பூவை மேம்பட்டனவாயும், தகுந்த நறு மணம் வீசும் தாமரைப் பூவை, மிக முதிர்ந்த விஷத்தை, சீறிக்கொண்டு நீரில் தாவிப் பாயும் வாளை மீனை ஒத்தனவாயும், கொல்லும் குணம் கொண்ட, மை தீட்டிய கண்களை உடைய விலைமாதர்களின் மதம் கொண்ட யானை போல விளங்கும், விரிவாக உள்ள முத்து மாலை அணிந்ததாய், அழகு மிகுந்த வைரக் கி¡£டத்துக்கு ஒப்பானதாய், சிமிழ் போன்ற மார்பகத்தின் மீது நான் வைத்துள்ள கொடிய மயக்கத்தை விட்டு, மிகுந்த பக்தி செய்யும்படி ஏழை அடி¨மாகிய எனக்காக உறுதியான மயிலில் ஏறி இனி நீ எப்போது வருவாய்? அழகிய கூரிய வேலை ஏந்திய பன்னிரண்டு திருக்கைகளை உடையவனே, பக்தி செய்பவர்களுடைய நூலில் விளங்குபவனே, திசை தோறும் செலுத்தப்படுகின்ற குதிரையாகிய (மயில்) வாகனனே, குறப் பெண்ணாகிய வள்ளி உள்ளன்போடு இணையும் இன்பம் கொண்டவனே, துஷ்டர்களான அசுரர்கள் தலைவரோடு போர் புரிபவனே, நல்லவர்களைக் காத்தளிக்கும் திருவிளையாடல்களைக் கொண்டவனே, அடியார்கள் முக்தி பெறும்படி உபதேசிக்கும் திருவார்த்தைகளை உடையவனே, கிளி போன்ற பரிசுத்தமான தேவயானைக்குக் கணவனே, மூவுலகத்தினரும் பரவிப் போற்றும் திருவடிகளை உடையவனே, இனிதான (இயல், இசை, நாடகம் என்னும்) முத்தமிழை ஆய்ந்த சிறப்பைக் கொண்டவனே, கரிய மேகங்கள் தாவிச் செல்லும் மதில்களைக் கொண்ட திருக்கோயிலை உடையவனே, முத்துக்கள் உலவுகின்ற கடல் சூழ்ந்த நகராகிய திருச்செந்தூரில் வாழ்பவனே, மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே. 
பாடல் 58 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .....
தந்ததன தானதன தத்தான
     தந்ததன தானதன தத்தான
          தந்ததன தானதன தத்தான ...... தனதான
சந்தனச வாதுநிறை கற்பூர
     குங்குமப டீரவிரை கத்தூரி
          தண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாச 
சண்பகக லாரவகு ளத்தாம
     வம்புதுகி லாரவயி ரக்கோவை
          தங்கியக டோரதர வித்தார ...... பரிதான 
மந்தரம தானதன மிக்காசை
     கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
          வஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள் 
வந்தியிடு மாயவிர கப்பார்வை
     அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
          வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே 
இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
     சம்ப்ரமம யூரதுர கக்கார
          என்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின் 
இன்பஅநு போகசர சக்கார
     வந்தஅசு ரேசர்கல கக்கார
          எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின் 
செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
     குன்றெறியும் வேலின்வலி மைக்கார
          செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும் 
திங்கள்முடி நாதர்சம யக்கார
     மந்த்ரவுப தேசமகி மைக்கார
          செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே.
சந்தனம், சவ்வாது, நிறைந்த பச்சைக் கற்பூரம், செஞ்சாந்து, மணமுள்ள கஸ்தூரி, குளிர்ந்த புனுகுச் சட்டம் இவை சேர்ந்துள்ள கலவை பூசப்பட்டதாய், தண்ணிய மிக்க மணமுள்ள சண்பகப்பூ, செங்கழுநீர்ப்பூ, மகிழம்பூ இவற்றின் மாலைகள் பூண்டதாய், கச்சு, ஆடை (இவைகளின் மேற்கொண்ட) முத்து மாலை வைர மாலையை உடையதாய், கடினமும், விரிவும், பருமையும் உடையதாய், மந்தர மலை போன்றதாய் உள்ள மார்பகங்களை உடையவர்களாய், பேராசை கொண்டு பொருளைத் தேடும் மிகக் கொடியவர்களாய், வஞ்சக எண்ணம் கொண்ட மனம் உள்ளவர்களாய், அழகிய நாகணவாய்ப் புள்ளைப் போன்றவர்களாயுள்ள விலைமாதருடைய வருத்தத்தை உண்டு பண்ணும் மாயக் காமப் பார்வையாகிய அம்பினால் மனம் வாடுகின்ற அறிவிலியாகிய என்னிடம் வந்து என்னை அடிமை கொண்டு ஆள்வதற்கு இனி எப்போது நினைப்பாய்? இந்திரனுடைய பொன்னுலகைக் காத்த முதன்மையாளனே, மிகச் சிறந்த மயிலாகிய குதிரையை வாகனமாகக் கொண்டவனே, என்றும் நீங்காத இளமையாக இருப்பவனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் இன்ப அனுபோக காம லீலைகளை உடையவனே, வந்த அசுரர் தலைவர்களோடு போர் புரிந்தவனே, எங்களுடைய உமா தேவியின் குழந்தை என்ற அருமை வாய்ந்தவனே, மிகுந்த பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்து தேவாரமாகப் புனைந்த) நாற்* கவியாளனே, கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த வேல் வலிமை கொண்டவனே, சத்தியச் சொல்லைக் கொண்ட அடியார்களுக்கு எளிமையாய் இருப்பவனே, அழகு வாய்ந்த சந்திரனைத் தரித்த நாதருடைய சைவ சமயத்தனே, (அந்தச் சிவபெருமானுக்கு) மந்திர உபதேசம் செய்த பெருமை வாய்ந்தவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும், அருமைத் தேவர்களின் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
பாடல் 59 - திருச்செந்தூர்
ராகம் - சுருட்டி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தானத் தானன தானத் தானன
     தானத் தானன ...... தந்ததான
சேமக் கோமள பாதத் தாமரை
     சேர்தற் கோதும ...... நந்தவேதா 
தீதத் தேயவி ரோதத் தேகுண
     சீலத் தேமிக ...... அன்புறாதே 
காமக் ரோதவு லோபப் பூதவி
     காரத் தேயழி ...... கின்றமாயா 
காயத் தேபசு பாசத் தேசிலர்
     காமுற் றேயும ...... தென்கொலோதான் 
நேமிச் சூரொடு மேருத் தூளெழ
     நீளக் காளபு ...... யங்ககால 
நீலக் ¡£பக லாபத் தேர்விடு
     நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே 
ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
     லோகத் தேதரு ...... மங்கைபாலா 
யோகத் தாறுப தேசத் தேசிக
     வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
காவலாய் இருப்பவையும் அழகானவையுமான உன் தாமரை போன்ற திருவடிகளை அடைவதற்கு வழிகளைச் சொல்லும் கணக்கற்ற வேதங்களைக் கடந்த நிலையின் மீதும், பகையற்ற சாந்த நிலைமீதும், நற்குண நன்னெறியின் மீதும் அன்பை வைக்காமல், காமத்தாலும், கோபத்தாலும், ஈதற் குணமே இல்லாததாலும், ஐம்பூதங்களின் சேஷ்டைகளாலும் அழிகின்ற மாயையான இந்த உடல் மீதும், இந்த ஜீவாத்மா இச்சைப் படுகின்ற உலகப் பற்றுக்களின் மீதும் சிலர்ஆசைகொண்டு இருக்கின்ற அந்த நிலை ஏன்தானோ? தெரியவில்லை. கடலும், சூரனும், மேரு மலையும் தூளாகும்படி நெடிய விஷமுடைய பாம்பைக் காலிலே கொண்டு நீலக் கழுத்தையும் தோகையையும் கொண்ட தேர் போன்ற மயிலைச் செலுத்தும் கடப்ப மாலை அணிந்த வீரனே, திருச்செந்தூரில் வாழ்பவனே, வேள்வித்தீயை தவறாமல் வளர்ப்பவர்களுக்கு இருப்பிடத்தை சிவலோகத்திலே தருகின்ற உமாதேவியின் குமாரனே, யோகவழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே, உன் முன்னே வாயில்லா ஊமைகளாகிவிடும் தேவர்களின் தனிப் பெரும் தலைவனே. 
பாடல் 60 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - ......
தனதனன தாந்த தந்தத்
     தனதனன தாந்த தந்தத்
          தனதனன தாந்த தந்தத் ...... தனதான
தகரநறை பூண்ட விந்தைக்
     குழலியர்கள் தேய்ந்த இன்பத்
          தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார் 
தமைமனதில் வாஞ்சை பொங்கக்
     கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
          சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும் 
புகலரிய தாந்த்ரி சங்கத்
     தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்
          புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர் 
புநிதமிலி மாந்தர் தங்கட்
     புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்
          புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ 
தகுடதகு தாந்த தந்தத்
     திகுடதிகு தீந்த மிந்தித்
          தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான 
தனனதன தாந்த னந்தத்
     தெனநடன மார்ந்த துங்கத்
          தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா 
திசையசுரர் மாண்ட ழுந்தத்
     திறலயிலை வாங்கு செங்கைச்
          சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலா 
திகழ்வயிர மேந்து கொங்கைக்
     குறவனிதை காந்த சந்த்ரச்
          சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே.
மயிர்ச் சாந்தின் நறு மணம் கொண்ட அழகிய கூந்தலை உடையவர்கள், மெலிந்ததும் இன்பம் தருவதும் தளர்ந்துள்ளதுமான இடுப்பு தாங்கும் தங்கநிற மார்பினை உடைய விலைமாதர்களை, உள்ளத்தில் காம ஆசை மேலெழ, கலவி இன்பத்தில் கூடி, மந்திரம், மதம், துதி இவைகளை விட்டு இவ்வாறு ஒவ்வொரு நாளும், சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும், பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும், பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்) புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ? தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத் தென்ற தாளத்துக்கு ஏற்ப நடனம் நிறைந்த உயர்ந்த ஒப்பில்லாத மயிலை வாகனமாகக் கொண்ட, சந்தனம் அணிந்த அழகிய மார்பனே, திசைகளில் உள்ள அசுரர்கள் இறந்து அடங்கும்படி, செவ்விய திருக்கையில் ஏந்திய வெற்றி வேலைச் செலுத்தியவனே, பல உச்சிகளைக் கொண்ட (இமய) மலை (அரசன்) பெற்ற மகளாகிய பார்வதியின் ஒப்பற்ற குழந்தையே, விளங்குகின்ற வைர மாலையை அணிந்த மார்பினைக் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, சந்திரன் தவழும் கோபுரத்தின் மேல் மேகங்கள் விளங்குகின்ற திருச்செந்தூர்ப் பெருமாளே. 
பாடல் 61 - திருச்செந்தூர்
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12 
- எடுப்பு - அதீதம்
தந்தா தந்தா தந்தா தந்தா
     தந்தா தந்தத் ...... தனதான
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
     தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார் 
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
     சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன் 
மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
     வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய் 
வன்கா னம்போ யண்டா முன்பே
     வந்தே நின்பொற் ...... கழல்தாராய் 
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
     கொன்றாய் வென்றிக் ...... குமரேசா 
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
     குன்றா மன்றற் ...... கிரியோனே 
கண்டா கும்பா லுண்டா யண்டார்
     கண்டா கந்தப் ...... புயவேளே 
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
     கந்தா செந்திற் ...... பெருமாளே.
குளிர்ந்த தேனைப் பருகி வண்டுகள் ஆர்வத்துடன் மொய்க்கின்ற தண்மையான மாலைகளைச் சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய பெண்களிடத்தில் அன்பு நிறைந்த மனத்தைக் கொண்டு சல்லாபித்து சம்பாஷணைகளைச் செய்கின்ற நாயினும் கீழான அடியேன், மண், நீர், தீ, மென்மையான காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான வளமிக்க இந்த சா£ரமாகிய பொய்க் குடிசையிலிருந்து உயிர் நீங்கி, கொடும் சுடுகாட்டுக்கு அருகில் நெருங்குவதற்கு முன்பாக என்முன் தோன்றி உன் அழகிய திருவடிகளைத் தந்தருள்வாயாக. தன்னைக் கொண்டாடிப் புகழ்பவர்களுடன் கூடி மகிழும் சூரனை கொன்றவனே, வெற்றியை உடைய குமரேசனே, பூக்களின் மகரந்தங்களில் நிறைந்த வண்டுகள் அருமையாய் இசைக்கும் சிறப்பு குறையாத வள்ளிமலையில்* வாழ்பவனே, கற்கண்டு போன்று இனிக்கும் உமையின் திருமுலைப்பால் உண்டவனே, பகைவர்களைக் கண்டித்தவனே, மணம் கமழும் புயத்தை உடையவனே கம்பம் போன்ற வலிமையுள்ள அழகிய தோள்களை உடைய குமரா, கந்தனே, திருச்செந்தூர்ப் பதியில் வாழும் பெருமாளே. 
* மன்றல் கிரி என்பது வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் நிகழ்ந்த வள்ளிமலை ஆகும்.
பாடல் 62 - திருச்செந்தூர்
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் / தந்யாஸி 
தாளம் - கண்டசாபு - 2 1/2
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
     தந்ததன தந்தனந் ...... தந்ததானா
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் 
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் 
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் 
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ 
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது 
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் 
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே 
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
தண்டை என்கின்ற காலணி, வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, (சலங்கை என்னும்) சதங்கையும், அருள் கழல்களும், சிலம்புடன் (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க உன் தந்தை சிவனை அன்புடன் வலம்வந்து நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சூரனை அழித்த வேலும், பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், என் கண்கள் குளிரும்படியாக என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், மகிழ்ச்சி பொங்கி எழ, நீ போர்க்களம் புகுந்த போது, பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக நீ கொண்ட நடனப் பாதங்கள் திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தனாகிய மன்மத சொரூபனே குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் மார்பை நுகர்கின்ற தம்பிரானே அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே. 
* முருகன் சூரனை வதைத்தபோது போர்க்களத்தில் விசுவரூபம் கொண்டதையும், அதனை திருமாலும், சிவனும் கண்டு மகிழ்ச்சி கொண்டதையும் குறிக்கும்.
பாடல் 63 - திருச்செந்தூர்
ராகம் - ஆரபி; தாளம் - ஆதி
தந்த தனதனன தந்த தனதனன
     தந்த தனதனன ...... தனதானா
தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார் 
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார் 
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா 
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி 
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ 
அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே 
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா 
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.
ஏற்பட்ட பசியை அறிந்து, முலைப்பால் தந்து, முதுகைத் தடவிவிட்ட தாயார், தம்பி, ஏவல் செய்து வந்த வேலைக்காரர்கள், அன்புமிக்க தங்கை, மருமக்கள், தம்முயிர் போல அன்பு பூண்டு சார்ந்திருந்த பிள்ளைகள், மனைவியர், சுற்றத்தார், யாவரும் தத்தம் கடமைக்குரிய அந்த உறவு முறைகளைச் சொல்லிக்கொண்டு, குறையுடன் வந்து தலைமயிர் அவிழ்ந்து தரையில் விழவும், மயங்கவும், ஓர் எருமைக்கடாவின் மேல் ஏறி யமனும் என்னை நெருங்கி வரும்போது, அஞ்சாதே என்று கூறியவண்ணம் வலியதான மயில் மீது நீ அந்த யமனிடம் இவன் நமக்கு மிகவும் வேண்டிய மனிதன், நம்முடைய அன்பன் என்று சொல்லவந்து அருள்வாயாக. சிந்தை மகிழும்படியாக, ஹிமவான் மகளாகிய பார்வதியின் இரண்டு மார்பிலும் பீறிட்ட பால் அமுதை உண்ட வேலாயுதக் கடவுளே, நிலவும், பாம்பும், கங்கைநதியும் நெருங்கிப் பொதிந்துள்ள ஜடாமுடியை உடைய சிவபெருமான் அருளியவனே, திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 64 - திருச்செந்தூர்
ராகம் - ஆபோகி; தாளம் - சதுஸ்ர ஏகம் - மிஸ்ர நடை - 14 
- எடுப்பு - அதீதம்
தனத்தந்தன தனத்தந்தன
     தனத்தந்தன ...... தனதானத்
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
     தவிக்குங்கொடி ...... மதனேவிற் 
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
     தமிழ்த்தென்றலி ...... னுடனேநின் 
றெரிக்கும்பிறை யெனப்புண்படு
     மெனப்புன்கவி ...... சிலபாடி 
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
     யுரைத்துய்ந்திட ...... அறியாரே 
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
     மனுக்குந்தெரி ...... வரிதான 
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
     மரற்கும்புரி ...... தவபாரக் 
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
     வரிக்குங்குரு ...... பரவாழ்வே 
கிளைக்குந்திற லரக்கன்கிளை
     கெடக்கன்றிய ...... பெருமாளே.
உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது, விரக வேதனையால் தவிக்கின்றேன், கொடி போன்ற யான் மன்மதனது பாணத்தால் தடை படுகின்றேன், தனிமையில் நின்று திகைக்கின்றேன், மெல்லிய இனிய தென்றல் காற்றினுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன், என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி சில புலவர்கள் வீணே இருக்கின்றனர். திருச்செந்தூரில் எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ? திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும், பிரமனுக்கும் காண்பதற்கு முடியாத திருவடியையும் சிவந்த ஜடாமுடியையும் உடைய சிவ பிரானுக்கும், செய்தவம் நிறைந்தவரும், பொதிய மலையில் வாழ்பவருமான அகஸ்திய முநிவருக்கும், கருணை புரிந்து உபதேசித்த மேலான குருமூர்த்தியே, சுற்றத்தார் சூழ வலிமையுடன் வந்த அரக்கன் சூரன் தன் குலத்தோடு அழியும்படிக் கோபித்த பெருமாளே. 
* குடத்தில் தோன்றியதால் அகஸ்தியருக்கு கும்பமுநி எனப் பெயர். முருகனிடம் ப்ரணவ மந்திர உபதேசம் பெற்றவர்.
பாடல் 65 - திருச்செந்தூர்
ராகம் - பைரவி; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தந்தந்தந் தந்தன தந்தன
     தந்தந்தந் தந்தன தந்தன
          தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான
துன்பங்கொண் டங்கமெ லிந்தற
     நொந்தன்பும் பண்பும றந்தொளி
          துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி ...... லணுகாதே 
இன்பந்தந் தும்பர்தொ ழும்பத
     கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி
          யென்றென்றுந் தொண்டுசெ யும்படி ...... யருள்வாயே 
நின்பங்கொன் றுங்குற மின்சர
     ணங்கண்டுந் தஞ்சமெ னும்படி
          நின்றன்பின் றன்படி கும்பிடு ...... மிளையோனே 
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
     குன்றெங்குஞ் சங்குவ லம்புரி
          பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே.
துன்பப்பட்டு, தேகம் மெலிந்து, மிகவும் நொந்துபோய், அன்பையும் நல்ல குணங்களையும் மறந்து, தேக காந்தி மங்கும்படி செய்யும் பெண் மயக்கம் என்னும் துக்கத்தில் நான் அணுகி சிக்கிக்கொள்ளாமல் இன்பத்தைக் கொடுத்து தேவர்கள் தொழும் உன் பாதத் தாமரையே நமது தஞ்சம் என்று கொண்டு எப்போதும் உனக்குத் தொண்டு செய்யும்படி நீ அருளவேண்டும். உன் பக்கத்திலேயே இணைந்து நிற்கும் குறக்குல மின்னல் போன்ற வள்ளியின் பாதங்களைக் கண்டு இதுவே எனக்குப் புகலிடம் என்று நின்று அன்பின் முறைப்படி அவள் பாதத்தில் கும்பிட்ட இளையோனே, பசுமைப் பொலிவு பெற்ற கடலின் கரையில் விளங்கும் குன்றெல்லாம் சங்கும் வலம்புரியும் நிரம்பிய அழகிய திருச்செந்தூரில் வந்தருள் பெருமாளே. 
பாடல் 66 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....
தனத்த தத்தத் தனத்தனா
     தனத்த தத்தத் தனத்தனா
          தனத்த தத்தத் தனத்தனா ...... தந்ததான தனனா
தெருப்பு றத்துத் துவக்கியாய்
     முலைக்கு வட்டைக் குலுக்கியாய்
          சிரித்து ருக்கித் தருக்கியே ...... பண்டைகூள மெனவாழ் 
சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்
     மனத்தை வைத்துக் கனத்தபேர்
          தியக்க முற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசி யுடனே 
இருப்ப கத்துத் தளத்துமேல்
     விளக்கெ டுத்துப் படுத்துமே
          லிருத்தி வைத்துப் பசப்பியே ...... கொண்டுகாசு தணியா 
திதுக்க துக்குக் கடப்படா
     மெனக்கை கக்கக் கழற்றியே
          இளைக்க விட்டுத் துரத்துவார் ...... தங்கள்சேர்வை தவிராய் 
பொருப்பை யொக்கப் பணைத்ததோ
     ரிரட்டி பத்துப் புயத்தினால்
          பொறுத்த பத்துச் சிரத்தினால் ...... மண்டுகோப முடனே 
பொரப்பொ ருப்பிற் கதித்தபோ
     ரரக்கர் பட்டுப் பதைக்கவே
          புடைத்து முட்டத் துணித்தமா ...... லன்புகூரு மருகா 
வரப்பை யெட்டிக் குதித்துமே
     லிடத்தில் வட்டத் தளத்திலே
          மதர்த்த முத்தைக் குவட்டியே ...... நின்றுசேலி னினம்வாழ் 
வயற்பு றத்துப் புவிக்குள்நீள்
     திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்
          வயத்த நித்தத் துவத்தனே ...... செந்தில்மேவு குகனே.
தெருவின் வெளிப்புறத்திலேயே கட்டுண்டவராக நிற்பவர்களாய், மார்பகம் என்னும் மலையைக் குலுக்குபவர்களாய், சிரித்துப் பேசி, வரும் ஆடவர்கள் மனதை உருக்கியும், அகங்கரித்தும், பழைய குப்பை என்று வாழும்படி, (வேசியர் குலத்து) இளம் பெண்கள் பெரிதாகக் காப்பவர்கள் போல இதமான மொழியைக் கூறுபவர்களாய், செல்வத்தில் மனதை வைத்து, பலமான பேர்வழிகளான ஆடவர் தம்மேல் மயக்கம் கொண்டு தவிக்குமாறு அவர்களைப் பார்த்தும் பேசியும், உடனேயே (தாங்கள்) இருக்கும் வீட்டின் உள்ளே தளத்தின் மேல் விளக்கை அணைத்துவிட்டு, படுத்து, மேலே படுக்க வைத்து, பசப்பு நடிப்புகளை நடித்துக் கொண்டு, (கொடுத்த) பொருள் போதாமல், இதற்கு வேண்டும், அதற்கு வேண்டும் என்று ஜாலப் பேச்சுக்களைப் பேசி, கையில் உள்ள பொருள்களை எல்லாம் கக்கும்படிச் செய்து பிடுங்கி, சோர்வடையும்படி செய்து (விரட்டித்) துரத்துவார்களுடன் சேருவதை நீக்கி அருள்க. மலைபோல பெருத்ததான இருபது புயங்களாலும், அவை தாங்கியுள்ள பத்துத் தலைகளாலும், மிகுந்த கோபத்துடன் (ராவணன்) சண்டை செய்ய, மலை போல கொதித்தெழுந்த போர் அரக்கர்கள் யாவரும் சிதைக்கப்பட்டு பதைக்கவே அவர்களை அடித்து எல்லாரையும் வெட்டி ஒழித்த (ராமராக வந்த) திருமால் அன்பு மிக வைத்துள்ள மருகனே, வயலின் வரப்பின் மேல் எட்டிக் குதித்து மேலே உள்ள வட்டமான நிலப் பரப்பில் செழிப்புடன் கிடக்கும் முத்தைக் குவியக் கூட்டி நின்று, சேல் மீன் கூட்டங்கள் வாழும் வயற்புரங்களைக் கொண்ட, பூமியில் ஓங்கிய, திருத்தணிகையில் சிறப்புடன் வாழ்கின்ற வெற்றியாளனே, என்றும் உள்ளவனே, திருச் செந்தூரில் வாழ்கின்ற குகனே. 
பாடல் 67 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .......
தனதன தந்தாத் தந்தத்
     தனதன தந்தாத் தந்தத்
          தனதன தந்தாத் தந்தத் ...... தனதான
தொடரிய மன்போற் றுங்கப்
     படையைவ ளைந்தோட் டுந்துட்
          டரையிள குந்தோட் கொங்கைக் ...... கிடுமாயத் 
துகில்விழ வுஞ்சேர்த் தங்கத்
     துளைவிர குஞ்சூழ்த் தண்டித்
          துயர்விளை யுஞ்சூட் டின்பத் ...... தொடுபாயற் 
கிடைகொடு சென்றீட் டும்பொற்
     பணியரை மென்றேற் றங்கற்
          றனையென இன்றோட் டென்றற் ...... கிடுமாதர்க் 
கினிமையி லொன்றாய்ச் சென்றுட்
     படுமன முன்றாட் கன்புற்
          றியலிசை கொண்டேத் தென்றுட் ...... டருவாயே 
நெடிதுத வங்கூர்க் குஞ்சற்
     புருடரும் நைந்தேக் கம்பெற்
          றயர்வுற நின்றார்த் தங்கட் ...... கணையேவும் 
நிகரில்ம தன்தேர்க் குன்றற்
     றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச்
          சிறிதுநி னைந்தாட் டங்கற் ...... றிடுவார்முன் 
திடமுறு அன்பாற் சிந்தைக்
     கறிவிட முஞ்சேர்த் தும்பர்க்
          கிடர்களை யும்போர்ச் செங்கைத் ...... திறல்வேலா 
தினவரி வண்டார்த் தின்புற்
     றிசைகொடு வந்தேத் திஞ்சித்
          திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
தோல்வியின்றித் தொடர்ந்து வரும் யமனைப் போல காமனது வெற்றிப் படைகளை வளைத்துச் செலுத்தும் துஷ்டர்களாகிய விலைமாதர்களுக்கு, தழைத்த தோளின் மீதும் மார்பகங்கள் மீதும் அணிந்துள்ள, மயக்கத்தைத் தர வல்ல, ஆடை விழவும், உடலோடு சேர்த்து வருந்தக் கூடிய தந்திர சூழ்ச்சிகளுடன் நெருங்கி, துன்பம் விளைவிக்கும் சூடான இன்பத்துடன் படுக்கை இடத்துக்கு அழைத்துச் சென்று சேர்க்கும் பொன் அணிகளை உடைய விலைமாதர்களுக்கு, மெதுவாகத் தெளிவு கற்றுக்கொண்டு விட்டாயோ எனக் கூறி, இன்று ஓடிப் போய்விடு என்று விரட்டி அன்பு சுருங்கும் விலைமாதர்களுக்கு, இனிமையில் ஒன்றுபட்டுச் சென்று உட்படுகின்ற என் மனம் உன்னுடைய தாள் மீது அன்பு கொண்டு, இயற்றமிழிலும், இசைத் தமிழிலும் பாக்களை இயற்றி ஏத்த வேண்டும் என்னும் மனப் பக்குவத்தைத் தருவாயாக. நீண்ட தவத்தை மேற்கொண்ட உத்தமமானவர்களும் நொந்துபோய் ஏக்கம் கொண்டு சோர்வு அடையும்படியாக, நின்று ஆர்ப்பரித்து தமது மலர் அம்புகளைச் செலுத்தும் ஒப்பு இல்லாத மன்மதன் தமது மலை போன்ற தேரை இழந்து, தீயில் விழுந்து, அழகு அழியும் வண்ணம், சற்றே நினைந்து திருவிளையாடலைச் செய்த சிவபெருமான் முன்னிலையில், திடம் கொண்ட அன்பினால் அந்தச் சிவனுடைய மனதில் தெளிவு தரும் அறிவுப் பொருளை உபதேசித்து, தேவர்களின் துன்பத்தைக் களைய சண்டை செய்து, செவ்விய திருக்கையில் உள்ள திறல் வாய்ந்த வேலாயுதத்தை உடையவனே, நாள்தோறும், ரேகைகளை உடைய வண்டுகள் ஒலித்து இன்புற்று இசையுடன் வந்து ஏத்துகின்ற, மதில் சூழ்ந்த, செல்வம் வளரும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
பாடல் 68 - திருச்செந்தூர்
ராகம் - தோடி/அடாணா 
தாளம் - அங்தாளம் - 7 1/2 - ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதா-2, 
தகிடதக-2 1/2
தந்த தனன தனனா தனனதன
     தந்த தனன தனனா தனனதன
          தந்த தனன தனனா தனனதன ...... தனதான
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி 
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி 
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி 
மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் 
எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம 
இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன் 
சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா 
திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
பெருத்த வயிறு சரியவும், முடி நரைக்கவும், வரிசையாயிருந்த பற்கள் ஆடவும், முதுகில் கூன் விழவும், உதடு தொங்கிப்போகவும், (நடக்க உதவ) ஒரு கையானது தடியின் மீது வரவும், பெண்கள் கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும், முன்னே இருமல் கிண்கிண் என்று ஒலிக்கவும், பின்னே பேச்சு குழறவும், கண்கள் மங்கி குருட்டுத்தன்மை அடையவும், செவிட்டுத்தன்மையை காதுகள் அடையவும், வந்த நோய்களும், அவற்றின் இடையிலே புகுந்த ஒரு வைத்தியனும், உடல் படும் வேதனையும், சிறு பிள்ளைகள் சொத்து எவ்வளவு, கடன் எது எது என்று விடாது கேட்டுத் தொளைக்கவும், மிக்க துயரம் கொண்டு மனைவி அழுது விழவும், யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவர போராடவும், மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும், உயிர் மங்கும் அந்தக் கடைசி நேரத்தில் முருகா, நீ விரைவில் மயில்மேல் வரவேண்டும். என் அப்பனே வா, ரகுநாயகனே வா, குழந்தாய் வா, மகனே இதோ வா, என் கண்ணே வா, என் ஆருயிரே வா, அழகிய ராமனே வா, இங்கே வா, அரசே வா, பால் குடிக்க வா, பூ முடிக்க வா, என்றெல்லாம் அன்போடு கோசலை கூறி அழைக்க வந்த மாயன் திருமால் மனம் மகிழும் மருமகனே, குறவர் குல இளங்கொடியான வள்ளி அணையும் அழகா, தேவர்களின் சிறைவாசம் ஒழிய, அசுரக் கூட்டம் வேரோடு மடிய அழித்த தீரனே, நிலவும், பாம்பும், நதியும் சூடிய பரமர் தந்தருளிய குமரனே, அலை கரையில் மோதும் திருச்செந்தூரில் இன்பமாய் வீற்றியருளும் பெருமாளே. 
பாடல் 69 - திருச்செந்தூர்
ராகம் - ஜோன்புரி; தாளம் - ஆதி - எடுப்பு 3/4 இடம்
தானன தானன தானன தந்தத்
     தானன தானன தானன தந்தத்
          தானன தானன தானன தந்தத் ...... தனதான
தோலொடு மூடிய கூரையை நம்பிப்
     பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
          சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான 
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
     கோவையு லாமடல் கூறிய ழுந்தித்
          தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங் 
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
     கோளனை மானமி லாவழி நெஞ்சக்
          காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக் 
காரண காரிய லோகப்ர பஞ்சச்
     சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
          காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் ...... றருளாதோ 
பாலன மீதும னான்முக செம்பொற்
     பாலனை மோதப ராதன பண்டப்
          பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப் 
பாவியி ராவண னார்தலை சிந்திச்
     சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
          பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ...... கினியோனே 
சீலமு லாவிய நாரதர் வந்துற்
     றீதவள் வாழ்புன மாமென முந்தித்
          தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய் 
சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித்
     தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
          சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.
தோல் கொண்டு மூடப்பட்ட இந்த உடலை நம்பி, மாதர்களுடைய வஞ்சக லீலைகள் நிரம்புவதால், அவர்களுக்கு வேண்டிய பொருளைத் தேட வேண்டி ஓடியும், வருந்தியும், புதுவிதமான நூல்களாக தூது, நான்மணிமாலை, பிரபந்தங்கள், கோவை, உலா, மடல்* முதலியவற்றைப் பாடி, அவற்றிலேயே ஈடுபட்டு, குற்றம் நிறைந்த இளைஞர்களின் வாசல் தோறும் புகுந்து வருந்துகின்ற கால்களைக் கொண்டவனை, வீணனை, நீதி தவறிய பொய்யைக் கொண்டவனை, மானமில்லாது அழிந்திடும் நெஞ்சனை, பிறரை வருத்தும் லோபியை, பயனற்றவனை, நிந்திக்கப்படும் கீழ்மகனாகிய என்னை, காரண, காரியத் தொடர்போடு வரும் இவ்வுலகத் துன்பங்கள் எல்லாம் நீங்கவும், நல்வாழ்வு சேரவும், விருப்பமுடன் குற்றமற்ற செல்வமாகிய உண்மை ஞானமான தவநிலை வந்தடைய சிறிதாவது அருளக்கூடாதோ? பால் போன்ற வெண்மையான அன்னத்தின் மீது வீற்றிருந்து, நான்கு முகங்களும் பொன்னிறமும் கொண்டு, படைத்தல் தொழில் செய்யும் பிரமனை, முன்பு தலைகளில் குட்டி, தண்டனை விதித்தவனே, முன்பு, அந்தப் பெரிய அநுமானின் தோளிலே வீற்றிருந்து போர் செய்து, பாவியாம் ராவணனுடைய தலைகள் சிதறவும், உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறவும் செய்து, மணந்த பாவையாம் சீதையின் தோளைத் தழுவிய மாமனாம் (ராமனின்) திருமாலின் சிந்தைக்கு இனியவனே, நல்ல குணங்கள் நிறைந்த நாரத முநிவர் உன்னிடம் வந்து, இதுதான் அவ்வள்ளி வாழும் தினைப்புனமாகும் என்று குறிப்பிட்டுக் காட்ட, உடனே நீ முடுகிச் சென்று, தேன் போன்ற மொழியாளாகிய வள்ளியின் பச்சைக்கற்பூர கலவையை அணிந்த, அழகிய, இன்பம் நல்கும் மலையொத்த மார்பினைத் தழுவியவனே, சேல், வாளை, வரால் மீன்கள் யாவும் கிளம்பித் துள்ளிப் பாய்ந்து, குலைசாய்த்திருக்கும் பாக்கு மரங்களில் குலாவும் இன்பகரமான திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* இங்கு கூறியுள்ள நூல்கள் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் 96 வகைகளில் சில.
பாடல் 70 - திருச்செந்தூர்
ராகம் - கோதார கெளளை; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தான தந்த தான தான - தான தந்த தான தான
     தான தந்த தான தான ...... தனதான
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
     நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே 
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
     நாட றிந்தி டாம லேக ...... வளராமுன் 
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
     நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை 
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
     நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே 
காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
     காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி 
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
     காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே 
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
     ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே 
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
     யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே.
ஒன்பது* வாசல்களைப் பிளந்து வைத்த, அவதூறுக்கு இடமான, இவ்வுடம்பு கால்களும் கரங்களும் கொண்டு, நரம்புகள், எலும்புகள் இவைகளால் ஆகிய சா£ரம். அந்த உடம்பினுள் ஒலி என்னும் இந்திரியம் பொருந்த, எல்லாத் தொழில்களுக்கும் மூல காரணமான ஐம்பொறிகள் கொண்டு பல வகையான கூத்துக்களை இவ்வுலகில் ஆடி, இவ்வாறு உயிர் போயிற்று என்று உலகில் யாரும் அறியாதபடி உயிர் பிரியும் வரை இந்த உடம்பு வளர்வதற்கு முன்பு, பல கோடி நூல்களைத் தேடிப் படித்து மயக்கத்தை அடைந்து, உலகில் உள்ள செல்வந்தரை நூறு செவ்வையான சொற்களால் பாடி, புத்தி மாறி, அதனால் தீமை விளைந்து, பலவிதமான பிணிகளுடன் கலந்த துன்ப வாழ்வை அடையாமல், நீ எனது அறிவில் கலந்து உள்ளத்தில் பொருந்தும் ஞான சாஸ்திரங்கள் முழுவதும் ஓதி உணரக் கூடிய வாழ்வைத் தந்தருள்வாயாக. யமன் வந்து இளைஞன் மார்க்கண்டேயனின் உயிரை வருத்த பாசக்கயிறை வீசுகின்ற சமயத்திலே வெளிப்பட்டு அஞ்சேல் அஞ்சேல் என்று அருளிய ஆதி முதல்வரும், மன்மதனை நீ உனது ஐந்து மலர்க் கணைகளோடு எரிவாயாக என்று நெற்றிக் கண்ணால் பார்த்த மெளன மூர்த்தியும், நீலகண்டருமாகிய சிவபெருமானுக்கு வேத முதலாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தவனே, ஆலகாலம் தோன்றிய பாற்கடலில் பள்ளிகொண்டு, கஜேந்திரன் என்னும் யானையின் அச்சத்தைத் தீர்த்த ஆதிமூலப் பொருளும், சக்ராயுதத்தை அழகிய கரத்தில் ஏந்துபவரும், ஆயர் குலத்தில் தோன்றியவருமான மாயன் திருமாலின் மருகோனே, வேதங்களெல்லாம் உனது திருவடிகளைத் துதிக்க, சேவற் கொடியைக் கரத்திலே தாங்கிய ஆதிப் பரம் பொருளாகி, திருச்செந்தூரில் வாழ்கின்ற பெருமாளே. 
* ஒன்பது வாசல்கள்: இரு கண்கள், இரு செவிகள், இரு நாசிகள், ஒரு வாய், இரு கழிவுப் பாதைகள்.
பாடல் 71 - திருச்செந்தூர்
ராகம் - தந்யாஸி ; தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 ; - எடுப்பு - அதீதம்
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்
     தனத்தத் தந்தனம் ...... தனதான
நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
     நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை 
நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
     றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும் 
புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
     புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும் 
புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
     புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே 
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
     மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி 
மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
     டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே 
குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
     கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே 
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
செல்வத்துக்கு குபேரன் என்றும், நற்பதவிக்கு தேவேந்திரன் என்றும், பொன் போன்ற நிறத்துக்கு கந்தப்பெருமான் என்றும் கொடுப்பதற்கு வருந்தும் செல்வந்தரிடம் சென்று, இந்த உலகத்தில் தன் பெரும் பசியைப் போக்குதற்கு நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு, துயரம் மிகுந்த மனதில் தினமும் புதுப்புதுச் சொற்களின் கூட்டத்தால் ஒரு கவிதை பாடி, சங்கடத்தில் சிக்கி உடம்பு அழிந்து மாய்கின்ற புலன்களால் வரும் துன்பங்களைத் தொலைத்து, உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய அன்பினை வழங்கி அருள்வாயாக. மனத்தில் கருதி, வலிய திரிபுரத்தை புன்னகை செய்தே எரித்த வீரம் மிகுந்த தந்தையாரும், அம்பலத்தில் ஆனந்த நடனம் புரிந்தவரும், மழுவைக் கரத்தில் ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று, வளமான தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே, அலைகள் குதித்து, குன்றுகளைத் தோண்டி அலைத்து, சிவந்த பொன்னையும் கொழித்துத் தள்ளுகின்ற திருச்செந்தூரின் செல்வமே, குறவர்களின் பொன்னான குலக்கொடியாகிய வள்ளியை முன்பு தினைப்புனத்தில் செம்மையான கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே. 
பாடல் 72 - திருச்செந்தூர்
பாடல் 72 - திருச்செந்தூர் 
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - மிஸ்ரசாபு - விலோமம் - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தனனாத் தனன தனனாத் தனன
     தனனாத் தனன ...... தனதான
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
     நெடுநாட் பொழுது ...... மவமேபோய் 
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
     நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி 
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
     மடிவேற் குரிய ...... நெறியாக 
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
     மலர்தாட் கமல ...... மருள்வாயே 
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
     குளமாய்ச் சுவற ...... முதுசூதம் 
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
     கொதிவேற் படையை ...... விடுவோனே 
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
     அழியாப் புநித ...... வடிவாகும் 
அரனார்க் கதித பொருள்காட் டதிப
     அடியார்க் கெளிய ...... பெருமாளே.
நிலையில்லாத பொருட்களை பொன்னாக மதித்து, நீண்ட நாட்களெல்லாம் வீணாக்கி, மனத்திண்மை போய், செவிடாகி, குருடாகி, நோய்கள் மிகுந்து, ஐம்பொறிகளும் தடுமாற்றம் அடைந்து, மலமும், சிறுநீரும் படுக்கை மேலேயே (தன்னிச்சையின்றி) பெருகி, இறந்து படுவேனுக்கு, கடைத்தேறுவதற்கு உரிய முக்தி நெறியாக, வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான ஒளியாக விரிந்துள்ள நின்மலர்த் தாமரையை தந்தருள்வாயாக. கொலையே செய்து வருகின்ற அசுரர்கள் அழிய, பெருங்கடல் சிறு குளம் போல் வற்றிப்போக, முற்றிய மாமரம் (வடிவில் நின்ற சூரன்) குறிவைத்தபடி பட்டு, பிளவுபட, மேலே பற்றும்படியாக பிடியுள்ள எரிவீசும் வேற்படையை செலுத்தியவனே, திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) கடற்கரையில் மகிழ்ச்சியோடு கோலம் கொண்ட குமரனே, அழியாத பரிசுத்த வடிவில் உள்ள சிவனார்க்கு யாவும் கடந்த ஓம் என்னும் பொருளை விளக்கிய அதிபனே, அடியவர்களுக்கு எளிதான பெருமாளே. 
பாடல் 73 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - ......
தனத்தந் தானன தத்தன தத்தன
     தனத்தந் தானன தத்தன தத்தன
          தனத்தந் தானன தத்தன தத்தன ...... தனதான
நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்
     கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்
          நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல ...... தடவாமேல் 
நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்
     ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை
          நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி ...... யெனவோதி 
உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட
     விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
          யுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி ...... லுழலாமே 
உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ்
     கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம்
          உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட ...... அருள்வாயே 
கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை
     யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி
          கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் ...... மருகோனே 
கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி
     திருச்செங் கோடுஇ டைக்கழி தண்டலை
          களர்ச்செங் காடுகு றுக்கைபு றம்பயம் ...... அமர்வோனே 
சிறுக்கண் கூர்மத அத்திச யிந்தவ
     நடக்குந் தேரனி கப்படை கொண்டமர்
          செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை ...... யுருவானோன் 
செருக்குஞ் சூரக லத்தையி டந்துயிர்
     குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள்
          திருச்செந் தூர்நக ரிக்குள்வி ளங்கிய ...... பெருமாளே.
சூதாடும் கருவியைப் போன்று, நிமிர்ந்து நிற்கும் மார்பகங்களை நெஞ்சின் மீது உடைய முண்டைகள். கரும்பின் சாற்றுடன் அரைத்து வைத்துள்ள (மருந்து) உருண்டைகளை நிழலில் உலர்த்தி, வாசனை திரவியங்கள் பலவும் தடவி பின்னர், நெருங்கிப் படுக்கையில் வெற்றிலையின் புறத்தில் (அந்த மருந்தை) ஒளித்து வந்தவருக்கு அன்பு காட்டிக் கொடுத்து, அதன் பிறகு, இங்கு இருக்கும் என்னை நீங்கள் நினைப்பதே இல்லை, மெச்சும் இதமான சொற்களைப் பேசுவதில்லை என்று கூறி, (வந்தவர்) தமது மயக்கத்தில் விழுவதைப் பார்த்து, மோக வலைக்குள் அவர் அழுந்தும்படி விடுக்கின்ற பாவிகளான வேசிகள். மனதை உருக்கும் மாமிசப் பிண்டங்கள் போன்றவரது உலோப குணத்தில் நான் சிக்குண்டு அலைச்சல் அடையாத வண்ணம் அழிவில்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும், திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக் கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக. கரிய பரிசுத்தமான கழுத்தை உடைய சிவபெருமானது அரிய மலையாகிய கயிலையை எடுத்த தோள்களை உடையவனும், (உடைந்த கொம்புகள் தனது) மார்பில் பொருந்த வந்த (அஷ்டதிக்கஜங்கள் ஆகிய) எட்டு யானைகளை வென்றவனுமாகிய அரக்கன் ராவணனைக் கொன்ற இணையற்ற தோள் வலிமை பெற்ற (ராமன்) திருமாலின் மருகனே, பெருமை வாய்ந்த தஞ்சாவூர், சிக்கல், திருவலஞ்சுழி, திருச்செங்கோடு, திருவிடைக்கழி, தண்டலைநீணெறி, திருக்களர், திருச்செங்காட்டங்குடி, திருக்குறுக்கை, திருப்புறம்பயம் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, சிறிய கண்களையும், மிகுந்த மதத்தையும் உடைய யானை, குதிரை, நடத்தப்படும் தேர், காலாட்படை (என்னும் நால்வகைப்) படைகளையும் கொண்டு, போர் புரிந்தவனும், பாதகனும், அநீதி செய்பவனும், வஞ்சகமே உருக் கொண்டவனும், அகங்காரம் மிக்கவனும் ஆகிய சூரனுடைய மார்பைப் பிளந்து, அவனுடைய உயிரைக் குடித்த கூரிய சக்திவேலைக் கையிலேந்தி அமர்ந்து, அருள்மிகு திருச்செந்தூர் நகரில் விளங்கும் பெருமாளே. 
பாடல் 74 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .......
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்
     தந்தனா தந்தனத் ...... தனதான
பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்
     பந்தபா சந்தனிற் ...... றடுமாறிப் 
பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்
     பண்பிலா டம்பரப் ...... பொதுமாதர் 
தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்
     சங்கைமால் கொண்டிளைத் ...... தயராதே 
தண்டைசூழ் கிண்கிணிப் புண்டா£ கந்தனை
     தந்துநீ யன்புவைத் ...... தருள்வாயே 
அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்
     தண்டவே தண்டமுட் ...... படவேதான் 
அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்
     கண்டலோ கங்கொடுத் ...... தருள்வோனே 
திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்
     செஞ்சடா பஞ்சரத் ...... துறுதோகை 
சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்
     செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
குற்றங்களோடு பொருந்திய பிறப்பு என்னும் பேரிருளில், பந்த பாசங்களில் தடுமாற்றம் அடைந்து, (மன்மதனின்) ஐந்து அம்புகளும் பாய்வதால் புண்பட்டு, வஞ்சகமுள்ள, நற்குணம் இல்லாத ஆடம்பரமான விலைமாதர்களின் தழுவுதலால் அவர்களின் மார்பகங்கள் உடலில் பட, குற்ற உணர்ச்சியும் ஆசையும் கொண்டு இளைத்துத் தளராமல், தண்டையும், அவற்றைச் சூழ்ந்துள்ள கிண்கிணியும் அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியைக் கொடுத்து, நீ என் மீது அன்பு கொண்டு அருள் புரிவாயாக. அழகிய கையில் வேல் எடுத்து, அண்டங்களும் மலைகளும் உட்பட யாவும் பயப்படும்படி, சூரனாகிய அசுரனது பெருமையைக் கெடுத்தவனே, திண்ணிய திறலைக் கொண்ட மேக வாகனனாகிய தேவேந்திரனுக்கு விண்ணுலகத்தைக் கொடுத்து அருள் புரிந்தவனே, நிலவு, ஆத்தி, கொன்றை, ஊமத்தம் மலர், துளசி (இவைகள்) நெருங்கிய, அழகிய, சிவந்த (சிவ பெருமானின்) சடையாகிய கூட்டிலிருக்கும் கங்கையாகிய நங்கையின் சிந்தைக்கு உகந்தவனே, தென் திசையிலிருந்து தென்றல் வீசும் சோலைகள் (நிறைந்த) திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செந்தமிழ்ப் பெருமாளே. 
பாடல் 75 - திருச்செந்தூர்
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம்; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
     குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக
          பங்க வாண்முக முடுகிய நெடுகிய ...... திரிசூலம் 
பந்த பாசமு மருவிய கரதல
     மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு
          பண்பி லாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன் 
அஞ்ச வேவரு மவதர மதிலொரு
     தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்
          அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ...... னெதிரேநீ 
அண்ட கோளகை வெடிபட இடிபட
     எண்டி சாமுக மடமட நடமிடும்
          அந்த மோகர மயிலினி லியலுடன் ...... வரவேணும் 
மஞ்சு போல்வள ரளகமு மிளகிய
     ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென
          வந்த தூயவெண் முறுவலு மிருகுழை ...... யளவோடும் 
மன்றல் வாரிச நயனமு மழகிய
     குன்ற வாணர்த மடமகள் தடமுலை
          மந்த ராசல மிசைதுயி லழகிய ...... மணவாளா 
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
     விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து
          திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் ...... மகமேரு 
செண்டு மோதின ரரசரு ளதிபதி
     தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு
          செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.
(கொலை, களவு, பொய், கள் குடித்தல், குருநிந்தை எனப்படும்) ஐந்து பாதகமும் செய்பவரைத் தாக்கும் (யமன்), பிறைச் சந்திரன் போல் (வெளுப்பும், வளைவும்) உள்ள பற்களுடன், நெருப்புப் போன்ற தலை மயிருடன், கொடிய விஷம் ததும்பும் கண்களுடன், குரங்கைப் போன்ற பயங்கர ஒளிகொண்ட முகத்துடன், விரைந்து செல்ல வல்ல நீண்ட திரிசூலத்துடன், கட்டுவதற்கான பாசக்கயிற்றைக் கொண்டுள்ள கையினனாக, மிகுத்து நீண்ட கரிய மேகம் போன்ற உருவத்துடன் அழகு இல்லாத ஓர் எருமையின் முதுகில் ஏறி வருகின்ற யமராஜன் யான் பயப்படும்படியாக வருகின்ற அந்தச் சமயத்தில் ஒப்பற்ற அடைக்கலமாய் தலைமுறை தலைமுறையாக உனது திருவருளைப் பெற விரும்பும் அன்பு கொண்டு உன் திருவடியைப் புகழும் அடிமையாகிய என் எதிரே நீ, அண்ட முகடு வெடி படவும், இடி படவும், எட்டுத் திக்குக்களும் மடமட என்று முறியும்படியாகவும் நடனம் செய்யும் அந்த உக்கிரமான மயிலின் மேல் ஏறி அன்புடன் வரவேண்டும். (கரிய) மேகம்போல் வளர்ந்துள்ள கூந்தலும், மெல்லிய இன்பகரமான அமிர்தம் போன்ற பேச்சும், நிலவைப் போல் விளங்கும் பரிசுத்த வெண்மையான பற்களும், இருசெவிகளின் அளவும் ஓடுகின்ற நறு மணம் உள்ள தாமரை போன்ற கண்களும் உடையவளாக அழகுள்ள குன்றில் வாழும் வேடர்களின் இளம்பெண் வள்ளியின் பருத்த மார்பகங்களாகிய மந்தர மலை மீது தூங்கும் அழகிய கணவனே, தமிழ் மொழி விளங்கும் சிறந்த தெற்கு திசை, வடதிசை, மேற்கு திசை, மேலான கிழக்கு திசை முதலிய திக்குகள் எல்லாவற்றிலும் போர் செய்து, நிலவை அணிந்த சடை முடியராகிய சிவபெருமானுடைய பல கோயில்களையும் தொழுது, உயர்ந்த பெரிய மேரு மலையின் மீது செண்டை எறிந்த சக்கரவர்த்தியே*, தொண்டர் முதலானோர் வழிவழி அடிமையாக இருந்து முத்தி பெற அருளிய திருச்செந்தூரில் இனிது வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. 
* முருகன் பாண்டியச் சக்கரவர்த்தி உக்கிர குமாரனாய் அரசாண்டபோது பொன் பெற வேண்டி மேருமலையைச் செண்டாலடித்த திருவிளையாடலைக் குறிக்கும்.

பாடல் 51 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .....

தந்தத் தனனத் தந்தத் தனனத்     தந்தத் தனனத் ...... தனதானா

கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்     கொண்டற் குழலிற் ...... கொடிதான 
கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்     கொஞ்சுக் கிளியுற் ...... றுறவான 
சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்     சந்திப் பவரைச் ...... சருவாதே 
சந்தப் படியுற் றென்றற் றலையிற்     சந்தப் பதம்வைத் ...... தருள்வாயே 
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்     கந்திக் கடலிற் ...... கடிதோடா 
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்     றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே 
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்     சென்றுற் றவர்தற் ...... பொருளானாய் 
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்     செந்திற் குமரப் ...... பெருமாளே.

பருமையான மார்பிலும், செம்பொன்னாலான அணிகலன்களிலும், மேகம் போன்ற கரிய கூந்தலிலும், கொடிய வலிமையுடன் தைக்கின்ற அம்புக்கு ஒப்பான அந்தக் கயல் மீன் போன்ற கண்களிலும், கொஞ்சுகின்ற கிளி போன்ற பேச்சுக்கு உறவான சங்கு போன்ற கண்டத்தின் குரலிலும் ஈர்க்ப்பட்டுச் சென்று, வீட்டின் வெளிப்புறத்தில் தம்மிடம் வருவோரைச் சந்திப்பவர்களாகிய விலைமாதர்களுடன் கொஞ்சிக் குலவாமல், பேரின்ப சுக நிலையை நான் அடைய, எனது தலையில் உனது அழகிய திருவடியை வைத்து அருள் புரிவாயாக. அங்கு தனது சேனையை விட்டு நீங்கி, அப்பொழுதே நீர் நிலையாகிய (செந்திலுக்கும் சூரனுடைய தலைநகரான மகேந்திரபுரத்துக்கும் இடையே) சந்தியாக உள்ள கடலை விரைவாகத் தாண்டி, அந்தப் பூமியாகிய மகேந்திரபுரத்தில் (முருகனின்) தூதாகச் சென்று, அசுரர்கள் பயப்படும்படி போர் செய்து, அவர்களுக்கு அஞ்சி நீங்காமல், சிவந்த கிரணங்களை உடைய சூரியனைப் போலப் பொருந்தி, அக் கடல் கடந்து போய் வெற்றியுடன் வந்தவரான வீரபாகு தேவரின் ஆவிப் பொருள் ஆனவனே, சிந்தையின் அன்பு வைத்து, அழகிய பொழில் சூழ்ந்த திருச்செந்தூரில் தங்கும் குமரப் பெருமாளே. 

பாடல் 52 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - ......

தனதனன தனதனன தந்தனந் தந்தனம்     தனதனன தனதனன தந்தனந் தந்தனம்          தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததானா

கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்     குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன்          குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் ...... பண்புலாவக் 
கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்     குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்          குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் ...... தொன்றுபாய்மேல் 
விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்     வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்          மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் ...... செஞ்செநீடும் 
வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென்     றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன்          விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் ...... தன்புறாதோ 
படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந்     துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்          பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் ...... சிந்தும்வேலா 
படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன்     பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும்          பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண் ...... கங்கைமான்வாழ் 
சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந்     தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்          சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் ...... பொங்கிநீடும் 
சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின்     றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந்          தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே.

கொடி போன்ற இடை துவள, அங்கம் கிளர்ச்சி கொள்ள, அழகிய குமுத மலர் போன்ற அமுதளிக்கும் வாயிதழைப் பருகி இன்பம் கொள்ளும் எண்ணத்தை உடையவன் நான். விலைமாதரோடு குலவி அணைந்து, மேகம் போன்ற கரிய கூந்தலும் சரிந்து, அவர்கள் மீது அன்பினால் வரும் ஆசை வர, வளைந்த விரல் நகக் குறியால் புண்படுகின்ற ஏக்கம் கொண்டவன் நான். கொஞ்சிப் பேசி அந்த மாதர்களுடன் இனிய களிப்பு கொண்டு உள்ளமும் குரலும் ஒடுங்க தன்வசம் இழக்கும் குறுகிய குணத்தை உடையவன் நான். மணம் விரிந்து பொருந்தும் பாய் மீது நஞ்சு போன்ற கண்களை உடைய மகளிர் மார்பகங்களின் இன்பத்தில் அன்பு கொள்ளும் செயலை உடையவன் நான். தகுதியுடன் பொருந்திய உயிர் வெந்து அழிந்து உடலும் இன்பத்தை இழக்க, அறிவில்லாத வழிப் போக்கில் நெருங்கும் தோழன் நான். செவ்விதாய் நீடித்துள்ள மிக்க பொன் ஒளி விளங்கும் அழகு பொருந்திய திருச்செந்தூர் என்று கருதி நெகிழ, மனம் உருகி வருகின்ற அன்பு இல்லாதவன் நான். நூல் ஆராய்ச்சி இல்லாதவன் நான். (இருப்பினும்) அத்தகைய எனக்கு உனது பொருந்திய இரண்டு தாமரை போன்ற திருவடியைத் தந்து மகிழ்ந்து அன்பு காட்ட மாட்டாயோ? படம் விளங்கும் பாம்பின் உடலையும் அங்கங்களையும் பிளவுபடக் கிழித்து உதறுகின்ற ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளி வந்து, தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் எல்லாருடைய உடல்களும் பிளவுண்டு பிளவுண்டு போகும்படி, அவ்விடத்தில் கொன்ற வேலனே, மண்ணவரும் தேவர்களும் நின்று வணங்கும் எட்டு குணங்களை உடையவன். பழம் பொருளாகிய இறைவன். உருவம் இல்லாதவன். அடியார்கள் பங்கில் இருப்பவன். பெரிதும் துன்பம் செய்து வந்த திரி புரங்களும் எரியும்படித் திறந்த சிவந்த (நெற்றிக்) கண்ணை உடையவன். மான் போன்ற கங்கை(நதி)யாகிய மாது வாழ்கின்ற சடையின் மீது அழகாகத் தரித்த கொன்றை மலரும், குணம் கொண்ட இள மதியின் குறைத் துண்டத்தையும், சிவந்த கையில் எல்லா உலகங்களும் ஒழிக்க வல்ல பெருங் கோபம் கொண்டுள்ள ஒள்ளிய நெருப்பையும், கிளர்ந்து உயர்ந்த உடல் கொண்ட (நந்தியாகிய) ரிஷபத்தையும் பாம்பையும் கொண்டவன், (அந்த சிவபெருமானின்) தூய, அழகிய (இடப்) பக்கத்தில் நின்று உலகெலாம் அளிக்கும் கெளரி உமை முலைப் பாலைத் தந்து அன்பு கொள்ளும் தமிழ் வல்லவனே, உயர்ந்த பரம் பொருளாகிய சங்கரன் வணங்கும் தம்பிரானே. 
* சிவனின் (இறைவனின்) எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.

பாடல் 53 - திருச்செந்தூர்
ராகம் - கரஹரப்ரியா; தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6 - ஏடுப்பு 3/4 இடம்

தந்தன தானான தானன     தந்தன தானான தானன          தந்தன தானான தானன ...... தனதான

கொம்பனை யார்காது மோதிரு     கண்களி லாமோத சீதள          குங்கும பாடீர பூஷண ...... நகமேவு 
கொங்கையி னீராவி மேல்வளர்     செங்கழு நீர்மாலை சூடிய          கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே 
உம்பர்கள் ஸ்வாமிந மோநம     எம்பெரு மானேந மோநம          ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும் 
உன்புக ழேபாடி நானினி     அன்புட னாசார பூசைசெய்          துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே 
பம்பர மேபோல ஆடிய     சங்கரி வேதாள நாயகி          பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி 
பங்கமி லாநீலி மோடிப     யங்கரி மாகாளி யோகினி          பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண் 
டெம்புதல் வாவாழி வாழியெ     னும்படி வீறான வேல்தர          என்றுமு ளானேம நோகர ...... வயலூரா 
இன்சொல்வி சாகாக்ரு பாகர     செந்திலில் வாழ்வாகி யேயடி          யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.

பூங்கொடி போன்ற மாதர்களின் காதுவரை நீண்டு அதை மோதும் இரண்டு கண்களிலும், வாசம் மிக்கதும், குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம், நகைகள் அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களிலும், நீர்த் தடாகத்தின் மேல் வளரும் செங்கழுநீர் மலர்மாலையைச் சூடிய கூந்தலிலும், உடலின் அழகிலும் மயங்காமல், தேவர்களின் ஸ்வாமியே போற்றி, போற்றி, எங்கள் பெருமானே போற்றி, போற்றி, ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி, என்று தினமும் உனது புகழையே பாடி யான் இனி அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும், என் வாழ்நாள் வீண் நாளாகப் போகாதபடியும் அருள் புரிவாயாக. பம்பரம் போலவே சுழன்று நடனம் ஆடும் சங்கரி, வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு) தலைவி, தாமரை போன்ற திரு நிறைந்த பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத் தரித்தவள், குற்றமில்லாத கருநீல நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள் (தந்த பயத்தைப் போக்குபவள்) மகா காளி, யோகத்தின் தலைவியாகிய அன்னை பார்வதி, முன்பு மதுபானம் செய்திருந்த சூரனோடு நீ எதிர்த்துப் போர் செய்யவேண்டி, என் மகனே நீ வாழ்க, வாழ்க என்று ஆசி கூறும் வகையில் வெற்றியைத் தரும் வேலாயுதத்தைத் தரப்பெற்ற, என்றும் அழியாது விளங்கும் மூர்த்தியே, மனத்துக்கு இன்பம் தருபவனே, வயலூர்ப் பெருமானே, இனிய சொற்களை உடைய விசாகப் பெருமானே, கருணை நிறைந்தவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செல்வமாகி அடியேனை உய்விக்கும்படியாக வாழ்வை எனக்கு அருளும் பெருமாளே. 

பாடல் 54 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....

தனதன தனதன தனதன தன     தந்தத் ...... தனதானா

கொலைமத கரியன ம்ருகமத தனகிரி     கும்பத் ...... தனமானார் 
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்     கொண்டுற் ...... றிடுநாயேன் 
நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி     நின்றுற் ...... றிடவேதான் 
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற     நின்பற் ...... றடைவேனோ 
சிலையென வடமலை யுடையவர் அருளிய     செஞ்சொற் ...... சிறுபாலா 
திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த     செந்திற் ...... பதிவேலா 
விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி     ரும்பிப் ...... புணர்வோனே 
விருதணி மரகத மயில்வரு குமரவி     டங்கப் ...... பெருமாளே.

கொலை செய்யும் மத யானைக்கு ஒப்பானதும், கஸ்தூரி அணிந்ததும், குடம் போன்றதும் ஆகிய மார்பகங்களை உடைய விலைமாதர்களின் குமுத மலர் போன்றதும், அமுதம் தருவதுமான வாயிதழ் ஊறலைப் பருகி, மனம் உருகி மோக மயக்கம் கொண்டுள்ள நாயேனுடைய நல்ல நிலையை அழிக்கின்ற கவலைகள் எல்லாம் நீங்குமாறு, உனது அருட் பார்வையில் நின்று நிலை பெறுவதற்கு, உன்னுடைய இரண்டு திருவடி மலர் இணைகளை மனத்தில் இருக்கச் செய்ய உன் மீது பற்றைப் பெறுவேனோ? வில்லாக வடக்கில் உள்ள மேரு மலையைக் கொண்டவராகிய சிவபெருமான் பெற்ற, செவ்விய சொற்களை உடைய, சிறு குழந்தையே, அலை கடலின் நடுவே நின்ற சூரனை வதைத்த திருச்செந்தூர் நகர் வேலவனே, வில்லுக்கு நிகரான நெற்றியை உடைய, (ஐராவதம் என்ற) யானை போற்றி வளர்த்த மயில் போன்ற தேவயானையையும், குறப் பெண்ணாகிய வள்ளியையும் விரும்பி மணம் புரிந்தவனே, வெற்றிச் சின்னம் அணிந்த பச்சை மயிலில் ஏறி வரும் குமரனே, சுயம்பு மூர்த்தியாக வந்த பெருமாளே. 
* 'டங்கம்' என்றால் உளி. 'விடங்கம்' என்றால் உளியால் செதுக்கப்படாமல் தான்தோன்றியாக, 'சுயம்புவாக' வந்த மூர்த்தி.

பாடல் 55 - திருச்செந்தூர்
ராகம் - .....;தாளம் - .....

தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்     தந்தனா தந்தனத் ...... தனதான

சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்     சந்தமோ கின்பமுத் ...... தெனவானிற் 
றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்     பென்றுதாழ் வொன்றறுத் ...... துலகோரைத் 
துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்     கொண்டுதாய் நின்றுரைத் ...... துழலாதே 
துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத்     தொண்டினா லொன்றுரைக் ...... கருள்வாயே 
வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத்     துண்டுமே லண்டருக் ...... கமுதாக 
விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்     குண்டுபே ரம்பலத் ...... தினிலாடி 
செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத்     தின்கணா டுந்திறற் ...... கதிராழித் 
திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்     செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.

சங்கைப் போன்ற மெல்லிய கழுத்து, அந்த வாயிலுள்ள பற்கள் மோக இன்பத்தைத் தரும் முத்துக்கள் என்றும், ஆகாயத்தில் தங்கியுள்ள கார்மேகம் கருங்குழல் என்றும், மார்பகங்கள் நீண்ட குளிர்ந்த மலை என்றும் (மாதர்களைப் பற்றி உவமை கூறி) வெட்கம் என்பதையே விட்டு சொல்லித் திரியாமலும், உலகில் பொருள் உள்ளவர்களிடம் போய் சிறந்த வேந்தன் நீ என்றும், செங்கைக் கொடைத் திறத்தில் அழகிய மேகத்தை ஒப்பாய் நீ என்றும் புகழ்ந்து பேசி, அவர்களிடம் தாவி வேகத்துடன் போய்த் திரியாமலும், (எனது) துன்ப நோய் ஒழிய, நல்ல கந்த வேளே என்று உன்னை, தொண்டு செய்யும் வழியில் நின்று பொருந்தி துதி ஒன்றைக் கூற அருள்வாயாக கொடிய கண்களை உடைய (வாசுகி என்ற) பாம்பு மனம் கொதித்து (விஷத்தை உமிழ), அது எங்கும் வேகச் செய்யும் என்று கருதி அந்த விஷத்தை எடுத்து அருந்தி, பின்னும் தேவர்களுக்கு ஆகும்படி அமுதத்தை வெளிவரச் செய்தவன், அழகிய மேக வண்ணனாகிய திருமாலைத் தனது பாகத்தில் கொண்டவன்*, ஆனந்தம் கொண்டு பேரம்பலமாகிய சிதம்பரத்தில் கூத்தாடுபவன், சிவந்த கண்களை உடைய திருமால் தனது தாமரைக் கண்ணால் காணக் கூடாத வகையில் வெட்ட வெளியில் ஆடும் வல்லமை பெற்றவன், ஒளி பொருந்திய கடலில் பிறந்த சந்திரன் பொருந்தி வாழ்கின்ற சடையை உடைய தலைவன் ஆகிய சிவபெருமான், பேரன்பு கொள்ளும்படியாக திருச்செந்தூரில் வாழ்கின்ற செந்தமிழ்ப் பெருமாளே. 
* சிவபெருமான் திருமாலைப் பாகமாகக் கொண்டவர் என்பது கருத்து.சங்கரன்கோவில் என்ற தலத்தில் 'சங்கரநாராயணன்' என்ற பெயர் பெற்றவர்.

பாடல் 56 - திருச்செந்தூர்
ராகம் - ......; தாளம் - ......

தந்தனா தந்தனா தந்தனா தந்தனா     தந்தனா ...... தந்ததான

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே     சஞ்சலா ...... ரம்பமாயன் 
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா     சம்ப்ரமா ...... நந்தமாயன் 
மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்     வம்பிலே ...... துன்புறாமே 
வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே     வந்துநீ ...... யன்பிலாள்வாய் 
கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே     கந்தனே ...... விஞ்சையூரா 
கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா     கண்டலே ...... சன்சொல்வீரா 
செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே     சென்றுமோ ...... தும்ப்ரதாபா 
செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்     செந்தில்வாழ் ...... தம்பிரானே.

கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல், மனத்தில் சஞ்சலம் கொண்டுள்ள மாயையில் தொடக்கத்தில் இருந்தே அகப்பட்டவனும், சந்தனத்துடன், குங்குமம் இவைகளால் சிங்கார ஆடம்பரம் செய்துகொண்டு, பரபரப்பான களிப்பும், ஆனந்தமும் கொண்ட மாயையில் அகப்பட்டவனும் ஆகிய நான் விலைமாதர்களின் மார்பகம் முதலான அங்கங்களின் மேல் உள்ள மோகங்களால் வீணாகத் துன்பம் கொள்ளாமல், வள்ளல் தன்மை வாய்ந்த குகனே, உனது திருவுருவமான பேரொளியுடன் நீ வந்து அன்புடன் என்னை ஆண்டருளுக. கங்கையைத் தலையில் சூடியுள்ள பிரானாகிய சிவ பெருமானின் மகனே, அழகனே, கந்தப் பெருமானே, வித்தையில் சிறந்தவர் ஊர்களில் வாழ்பவனே, நாங்கள் நடுக்கம் கொள்ளாதவாறு எங்கள் பொன்னுலகைக் காத்தருள்க என்று முறையிட்ட அந்த (ஆகண்டலேசன் என்னும்) இந்திரன் புகழ்ந்த வீரனே, செங்கையில் உள்ள ஆயுதமாகிய வெற்றிவேல் கொண்டு சூரன் அழியவே, சென்று அவனைத் தாக்கிய கீர்த்தி உள்ளவனே, சிவந்த கண்களை உடைய திருமாலும், தாமரையில் வாழும் பிரமனும் தொழுகின்ற ஆனந்தமான முருக வேளே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் தலைவனே. 

பாடல் 57 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....

தத்ததன தானதன தத்தான     தத்ததன தானதன தத்தான          தத்ததன தானதன தத்தான ...... தனதான

சத்தமிகு மேழுகட லைத்தேனை     யுற்றமது தோடுகணை யைப்போர்கொள்          சத்திதனை மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு 
தக்கமணம் வீசுகம லப்பூவை     மிக்கவிளை வானகடு வைச்சீறு          தத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர் 
மத்தகிரி போலுமொளிர் வித்தார     முத்துவட மேவுமெழில் மிக்கான          வச்சிரகி ¡£டநிகர் செப்பான ...... தனமீதே 
வைத்தகொடி தானமயல் விட்டான     பத்திசெய ஏழையடி மைக்காக          வஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயே 
சித்ரவடி வேல்பனிரு கைக்கார     பத்திபுரி வோர்கள்பனு வற்கார          திக்கினுந டாவுபுர விக்கார ...... குறமாது 
சித்தஅநு ராககல விக்கார     துட்டஅசு ரேசர்கல கக்கார          சிட்டர்பரி பாலலளி தக்கார ...... அடியார்கள் 
முத்திபெற வேசொல்வச னக்கார     தத்தைநிகர் தூயவநி தைக்கார          முச்சகர்ப ராவுசர ணக்கார ...... இனிதான 
முத்தமிழை யாயும்வரி சைக்கார     பச்சைமுகில் தாவுபுரி சைக்கார          முத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே.

ஒலி மிக்க ஏழு கடலை, (தேன் ஈட்டும்) வண்டை, தேன் நிறைந்த மலரை, அம்பை, சண்டை செய்யும் சக்தி வேலை, மாவடுவை, கருங்குவளைப் பூவை மேம்பட்டனவாயும், தகுந்த நறு மணம் வீசும் தாமரைப் பூவை, மிக முதிர்ந்த விஷத்தை, சீறிக்கொண்டு நீரில் தாவிப் பாயும் வாளை மீனை ஒத்தனவாயும், கொல்லும் குணம் கொண்ட, மை தீட்டிய கண்களை உடைய விலைமாதர்களின் மதம் கொண்ட யானை போல விளங்கும், விரிவாக உள்ள முத்து மாலை அணிந்ததாய், அழகு மிகுந்த வைரக் கி¡£டத்துக்கு ஒப்பானதாய், சிமிழ் போன்ற மார்பகத்தின் மீது நான் வைத்துள்ள கொடிய மயக்கத்தை விட்டு, மிகுந்த பக்தி செய்யும்படி ஏழை அடி¨மாகிய எனக்காக உறுதியான மயிலில் ஏறி இனி நீ எப்போது வருவாய்? அழகிய கூரிய வேலை ஏந்திய பன்னிரண்டு திருக்கைகளை உடையவனே, பக்தி செய்பவர்களுடைய நூலில் விளங்குபவனே, திசை தோறும் செலுத்தப்படுகின்ற குதிரையாகிய (மயில்) வாகனனே, குறப் பெண்ணாகிய வள்ளி உள்ளன்போடு இணையும் இன்பம் கொண்டவனே, துஷ்டர்களான அசுரர்கள் தலைவரோடு போர் புரிபவனே, நல்லவர்களைக் காத்தளிக்கும் திருவிளையாடல்களைக் கொண்டவனே, அடியார்கள் முக்தி பெறும்படி உபதேசிக்கும் திருவார்த்தைகளை உடையவனே, கிளி போன்ற பரிசுத்தமான தேவயானைக்குக் கணவனே, மூவுலகத்தினரும் பரவிப் போற்றும் திருவடிகளை உடையவனே, இனிதான (இயல், இசை, நாடகம் என்னும்) முத்தமிழை ஆய்ந்த சிறப்பைக் கொண்டவனே, கரிய மேகங்கள் தாவிச் செல்லும் மதில்களைக் கொண்ட திருக்கோயிலை உடையவனே, முத்துக்கள் உலவுகின்ற கடல் சூழ்ந்த நகராகிய திருச்செந்தூரில் வாழ்பவனே, மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே. 

பாடல் 58 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .....

தந்ததன தானதன தத்தான     தந்ததன தானதன தத்தான          தந்ததன தானதன தத்தான ...... தனதான

சந்தனச வாதுநிறை கற்பூர     குங்குமப டீரவிரை கத்தூரி          தண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாச 
சண்பகக லாரவகு ளத்தாம     வம்புதுகி லாரவயி ரக்கோவை          தங்கியக டோரதர வித்தார ...... பரிதான 
மந்தரம தானதன மிக்காசை     கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர          வஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள் 
வந்தியிடு மாயவிர கப்பார்வை     அம்பிலுளம் வாடுமறி வற்றேனை          வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே 
இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார     சம்ப்ரமம யூரதுர கக்கார          என்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின் 
இன்பஅநு போகசர சக்கார     வந்தஅசு ரேசர்கல கக்கார          எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின் 
செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார     குன்றெறியும் வேலின்வலி மைக்கார          செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும் 
திங்கள்முடி நாதர்சம யக்கார     மந்த்ரவுப தேசமகி மைக்கார          செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே.

சந்தனம், சவ்வாது, நிறைந்த பச்சைக் கற்பூரம், செஞ்சாந்து, மணமுள்ள கஸ்தூரி, குளிர்ந்த புனுகுச் சட்டம் இவை சேர்ந்துள்ள கலவை பூசப்பட்டதாய், தண்ணிய மிக்க மணமுள்ள சண்பகப்பூ, செங்கழுநீர்ப்பூ, மகிழம்பூ இவற்றின் மாலைகள் பூண்டதாய், கச்சு, ஆடை (இவைகளின் மேற்கொண்ட) முத்து மாலை வைர மாலையை உடையதாய், கடினமும், விரிவும், பருமையும் உடையதாய், மந்தர மலை போன்றதாய் உள்ள மார்பகங்களை உடையவர்களாய், பேராசை கொண்டு பொருளைத் தேடும் மிகக் கொடியவர்களாய், வஞ்சக எண்ணம் கொண்ட மனம் உள்ளவர்களாய், அழகிய நாகணவாய்ப் புள்ளைப் போன்றவர்களாயுள்ள விலைமாதருடைய வருத்தத்தை உண்டு பண்ணும் மாயக் காமப் பார்வையாகிய அம்பினால் மனம் வாடுகின்ற அறிவிலியாகிய என்னிடம் வந்து என்னை அடிமை கொண்டு ஆள்வதற்கு இனி எப்போது நினைப்பாய்? இந்திரனுடைய பொன்னுலகைக் காத்த முதன்மையாளனே, மிகச் சிறந்த மயிலாகிய குதிரையை வாகனமாகக் கொண்டவனே, என்றும் நீங்காத இளமையாக இருப்பவனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் இன்ப அனுபோக காம லீலைகளை உடையவனே, வந்த அசுரர் தலைவர்களோடு போர் புரிந்தவனே, எங்களுடைய உமா தேவியின் குழந்தை என்ற அருமை வாய்ந்தவனே, மிகுந்த பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்து தேவாரமாகப் புனைந்த) நாற்* கவியாளனே, கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த வேல் வலிமை கொண்டவனே, சத்தியச் சொல்லைக் கொண்ட அடியார்களுக்கு எளிமையாய் இருப்பவனே, அழகு வாய்ந்த சந்திரனைத் தரித்த நாதருடைய சைவ சமயத்தனே, (அந்தச் சிவபெருமானுக்கு) மந்திர உபதேசம் செய்த பெருமை வாய்ந்தவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும், அருமைத் தேவர்களின் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.

பாடல் 59 - திருச்செந்தூர்
ராகம் - சுருட்டி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தானத் தானன தானத் தானன     தானத் தானன ...... தந்ததான

சேமக் கோமள பாதத் தாமரை     சேர்தற் கோதும ...... நந்தவேதா 
தீதத் தேயவி ரோதத் தேகுண     சீலத் தேமிக ...... அன்புறாதே 
காமக் ரோதவு லோபப் பூதவி     காரத் தேயழி ...... கின்றமாயா 
காயத் தேபசு பாசத் தேசிலர்     காமுற் றேயும ...... தென்கொலோதான் 
நேமிச் சூரொடு மேருத் தூளெழ     நீளக் காளபு ...... யங்ககால 
நீலக் ¡£பக லாபத் தேர்விடு     நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே 
ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ     லோகத் தேதரு ...... மங்கைபாலா 
யோகத் தாறுப தேசத் தேசிக     வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே.

காவலாய் இருப்பவையும் அழகானவையுமான உன் தாமரை போன்ற திருவடிகளை அடைவதற்கு வழிகளைச் சொல்லும் கணக்கற்ற வேதங்களைக் கடந்த நிலையின் மீதும், பகையற்ற சாந்த நிலைமீதும், நற்குண நன்னெறியின் மீதும் அன்பை வைக்காமல், காமத்தாலும், கோபத்தாலும், ஈதற் குணமே இல்லாததாலும், ஐம்பூதங்களின் சேஷ்டைகளாலும் அழிகின்ற மாயையான இந்த உடல் மீதும், இந்த ஜீவாத்மா இச்சைப் படுகின்ற உலகப் பற்றுக்களின் மீதும் சிலர்ஆசைகொண்டு இருக்கின்ற அந்த நிலை ஏன்தானோ? தெரியவில்லை. கடலும், சூரனும், மேரு மலையும் தூளாகும்படி நெடிய விஷமுடைய பாம்பைக் காலிலே கொண்டு நீலக் கழுத்தையும் தோகையையும் கொண்ட தேர் போன்ற மயிலைச் செலுத்தும் கடப்ப மாலை அணிந்த வீரனே, திருச்செந்தூரில் வாழ்பவனே, வேள்வித்தீயை தவறாமல் வளர்ப்பவர்களுக்கு இருப்பிடத்தை சிவலோகத்திலே தருகின்ற உமாதேவியின் குமாரனே, யோகவழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே, உன் முன்னே வாயில்லா ஊமைகளாகிவிடும் தேவர்களின் தனிப் பெரும் தலைவனே. 

பாடல் 60 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - ......

தனதனன தாந்த தந்தத்     தனதனன தாந்த தந்தத்          தனதனன தாந்த தந்தத் ...... தனதான

தகரநறை பூண்ட விந்தைக்     குழலியர்கள் தேய்ந்த இன்பத்          தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார் 
தமைமனதில் வாஞ்சை பொங்கக்     கலவியொடு சேர்ந்து மந்த்ரச்          சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும் 
புகலரிய தாந்த்ரி சங்கத்     தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்          புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர் 
புநிதமிலி மாந்தர் தங்கட்     புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்          புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ 
தகுடதகு தாந்த தந்தத்     திகுடதிகு தீந்த மிந்தித்          தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான 
தனனதன தாந்த னந்தத்     தெனநடன மார்ந்த துங்கத்          தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா 
திசையசுரர் மாண்ட ழுந்தத்     திறலயிலை வாங்கு செங்கைச்          சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலா 
திகழ்வயிர மேந்து கொங்கைக்     குறவனிதை காந்த சந்த்ரச்          சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே.

மயிர்ச் சாந்தின் நறு மணம் கொண்ட அழகிய கூந்தலை உடையவர்கள், மெலிந்ததும் இன்பம் தருவதும் தளர்ந்துள்ளதுமான இடுப்பு தாங்கும் தங்கநிற மார்பினை உடைய விலைமாதர்களை, உள்ளத்தில் காம ஆசை மேலெழ, கலவி இன்பத்தில் கூடி, மந்திரம், மதம், துதி இவைகளை விட்டு இவ்வாறு ஒவ்வொரு நாளும், சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும், பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும், பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்) புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ? தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத் தென்ற தாளத்துக்கு ஏற்ப நடனம் நிறைந்த உயர்ந்த ஒப்பில்லாத மயிலை வாகனமாகக் கொண்ட, சந்தனம் அணிந்த அழகிய மார்பனே, திசைகளில் உள்ள அசுரர்கள் இறந்து அடங்கும்படி, செவ்விய திருக்கையில் ஏந்திய வெற்றி வேலைச் செலுத்தியவனே, பல உச்சிகளைக் கொண்ட (இமய) மலை (அரசன்) பெற்ற மகளாகிய பார்வதியின் ஒப்பற்ற குழந்தையே, விளங்குகின்ற வைர மாலையை அணிந்த மார்பினைக் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, சந்திரன் தவழும் கோபுரத்தின் மேல் மேகங்கள் விளங்குகின்ற திருச்செந்தூர்ப் பெருமாளே. 

பாடல் 61 - திருச்செந்தூர்
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12 - எடுப்பு - அதீதம்

தந்தா தந்தா தந்தா தந்தா     தந்தா தந்தத் ...... தனதான

தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்     தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார் 
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே     சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன் 
மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்     வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய் 
வன்கா னம்போ யண்டா முன்பே     வந்தே நின்பொற் ...... கழல்தாராய் 
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்     கொன்றாய் வென்றிக் ...... குமரேசா 
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்     குன்றா மன்றற் ...... கிரியோனே 
கண்டா கும்பா லுண்டா யண்டார்     கண்டா கந்தப் ...... புயவேளே 
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா     கந்தா செந்திற் ...... பெருமாளே.

குளிர்ந்த தேனைப் பருகி வண்டுகள் ஆர்வத்துடன் மொய்க்கின்ற தண்மையான மாலைகளைச் சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய பெண்களிடத்தில் அன்பு நிறைந்த மனத்தைக் கொண்டு சல்லாபித்து சம்பாஷணைகளைச் செய்கின்ற நாயினும் கீழான அடியேன், மண், நீர், தீ, மென்மையான காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான வளமிக்க இந்த சா£ரமாகிய பொய்க் குடிசையிலிருந்து உயிர் நீங்கி, கொடும் சுடுகாட்டுக்கு அருகில் நெருங்குவதற்கு முன்பாக என்முன் தோன்றி உன் அழகிய திருவடிகளைத் தந்தருள்வாயாக. தன்னைக் கொண்டாடிப் புகழ்பவர்களுடன் கூடி மகிழும் சூரனை கொன்றவனே, வெற்றியை உடைய குமரேசனே, பூக்களின் மகரந்தங்களில் நிறைந்த வண்டுகள் அருமையாய் இசைக்கும் சிறப்பு குறையாத வள்ளிமலையில்* வாழ்பவனே, கற்கண்டு போன்று இனிக்கும் உமையின் திருமுலைப்பால் உண்டவனே, பகைவர்களைக் கண்டித்தவனே, மணம் கமழும் புயத்தை உடையவனே கம்பம் போன்ற வலிமையுள்ள அழகிய தோள்களை உடைய குமரா, கந்தனே, திருச்செந்தூர்ப் பதியில் வாழும் பெருமாளே. 
* மன்றல் கிரி என்பது வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் நிகழ்ந்த வள்ளிமலை ஆகும்.

பாடல் 62 - திருச்செந்தூர்
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் / தந்யாஸி தாளம் - கண்டசாபு - 2 1/2

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்     தந்ததன தந்தனந் ...... தந்ததானா

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்     தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் 
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்     சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் 
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்     கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் 
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ 
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்     பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது 
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்     புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் 
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்     கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே 
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்     கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.

தண்டை என்கின்ற காலணி, வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, (சலங்கை என்னும்) சதங்கையும், அருள் கழல்களும், சிலம்புடன் (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க உன் தந்தை சிவனை அன்புடன் வலம்வந்து நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சூரனை அழித்த வேலும், பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், என் கண்கள் குளிரும்படியாக என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், மகிழ்ச்சி பொங்கி எழ, நீ போர்க்களம் புகுந்த போது, பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக நீ கொண்ட நடனப் பாதங்கள் திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தனாகிய மன்மத சொரூபனே குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் மார்பை நுகர்கின்ற தம்பிரானே அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே. 
* முருகன் சூரனை வதைத்தபோது போர்க்களத்தில் விசுவரூபம் கொண்டதையும், அதனை திருமாலும், சிவனும் கண்டு மகிழ்ச்சி கொண்டதையும் குறிக்கும்.

பாடல் 63 - திருச்செந்தூர்
ராகம் - ஆரபி; தாளம் - ஆதி

தந்த தனதனன தந்த தனதனன     தந்த தனதனன ...... தனதானா

தந்த பசிதனைய றிந்து முலையமுது     தந்து முதுகுதட ...... வியதாயார் 
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள     தங்கை மருகருயி ...... ரெனவேசார் 
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா 
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம     யங்க வொருமகிட ...... மிசையேறி 
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ 
அந்த மறலியொடு கந்த மனிதனம     தன்ப னெனமொழிய ...... வருவாயே 
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்     சிந்து பயமயிலு ...... மயில்வீரா 
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

ஏற்பட்ட பசியை அறிந்து, முலைப்பால் தந்து, முதுகைத் தடவிவிட்ட தாயார், தம்பி, ஏவல் செய்து வந்த வேலைக்காரர்கள், அன்புமிக்க தங்கை, மருமக்கள், தம்முயிர் போல அன்பு பூண்டு சார்ந்திருந்த பிள்ளைகள், மனைவியர், சுற்றத்தார், யாவரும் தத்தம் கடமைக்குரிய அந்த உறவு முறைகளைச் சொல்லிக்கொண்டு, குறையுடன் வந்து தலைமயிர் அவிழ்ந்து தரையில் விழவும், மயங்கவும், ஓர் எருமைக்கடாவின் மேல் ஏறி யமனும் என்னை நெருங்கி வரும்போது, அஞ்சாதே என்று கூறியவண்ணம் வலியதான மயில் மீது நீ அந்த யமனிடம் இவன் நமக்கு மிகவும் வேண்டிய மனிதன், நம்முடைய அன்பன் என்று சொல்லவந்து அருள்வாயாக. சிந்தை மகிழும்படியாக, ஹிமவான் மகளாகிய பார்வதியின் இரண்டு மார்பிலும் பீறிட்ட பால் அமுதை உண்ட வேலாயுதக் கடவுளே, நிலவும், பாம்பும், கங்கைநதியும் நெருங்கிப் பொதிந்துள்ள ஜடாமுடியை உடைய சிவபெருமான் அருளியவனே, திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 64 - திருச்செந்தூர்
ராகம் - ஆபோகி; தாளம் - சதுஸ்ர ஏகம் - மிஸ்ர நடை - 14 - எடுப்பு - அதீதம்

தனத்தந்தன தனத்தந்தன     தனத்தந்தன ...... தனதானத்

தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர     தவிக்குங்கொடி ...... மதனேவிற் 
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு     தமிழ்த்தென்றலி ...... னுடனேநின் 
றெரிக்கும்பிறை யெனப்புண்படு     மெனப்புன்கவி ...... சிலபாடி 
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை     யுரைத்துய்ந்திட ...... அறியாரே 
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர     மனுக்குந்தெரி ...... வரிதான 
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு     மரற்கும்புரி ...... தவபாரக் 
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை     வரிக்குங்குரு ...... பரவாழ்வே 
கிளைக்குந்திற லரக்கன்கிளை     கெடக்கன்றிய ...... பெருமாளே.

உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது, விரக வேதனையால் தவிக்கின்றேன், கொடி போன்ற யான் மன்மதனது பாணத்தால் தடை படுகின்றேன், தனிமையில் நின்று திகைக்கின்றேன், மெல்லிய இனிய தென்றல் காற்றினுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன், என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி சில புலவர்கள் வீணே இருக்கின்றனர். திருச்செந்தூரில் எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ? திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும், பிரமனுக்கும் காண்பதற்கு முடியாத திருவடியையும் சிவந்த ஜடாமுடியையும் உடைய சிவ பிரானுக்கும், செய்தவம் நிறைந்தவரும், பொதிய மலையில் வாழ்பவருமான அகஸ்திய முநிவருக்கும், கருணை புரிந்து உபதேசித்த மேலான குருமூர்த்தியே, சுற்றத்தார் சூழ வலிமையுடன் வந்த அரக்கன் சூரன் தன் குலத்தோடு அழியும்படிக் கோபித்த பெருமாளே. 
* குடத்தில் தோன்றியதால் அகஸ்தியருக்கு கும்பமுநி எனப் பெயர். முருகனிடம் ப்ரணவ மந்திர உபதேசம் பெற்றவர்.

பாடல் 65 - திருச்செந்தூர்
ராகம் - பைரவி; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தந்தந்தந் தந்தன தந்தன     தந்தந்தந் தந்தன தந்தன          தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான

துன்பங்கொண் டங்கமெ லிந்தற     நொந்தன்பும் பண்பும றந்தொளி          துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி ...... லணுகாதே 
இன்பந்தந் தும்பர்தொ ழும்பத     கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி          யென்றென்றுந் தொண்டுசெ யும்படி ...... யருள்வாயே 
நின்பங்கொன் றுங்குற மின்சர     ணங்கண்டுந் தஞ்சமெ னும்படி          நின்றன்பின் றன்படி கும்பிடு ...... மிளையோனே 
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய     குன்றெங்குஞ் சங்குவ லம்புரி          பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே.

துன்பப்பட்டு, தேகம் மெலிந்து, மிகவும் நொந்துபோய், அன்பையும் நல்ல குணங்களையும் மறந்து, தேக காந்தி மங்கும்படி செய்யும் பெண் மயக்கம் என்னும் துக்கத்தில் நான் அணுகி சிக்கிக்கொள்ளாமல் இன்பத்தைக் கொடுத்து தேவர்கள் தொழும் உன் பாதத் தாமரையே நமது தஞ்சம் என்று கொண்டு எப்போதும் உனக்குத் தொண்டு செய்யும்படி நீ அருளவேண்டும். உன் பக்கத்திலேயே இணைந்து நிற்கும் குறக்குல மின்னல் போன்ற வள்ளியின் பாதங்களைக் கண்டு இதுவே எனக்குப் புகலிடம் என்று நின்று அன்பின் முறைப்படி அவள் பாதத்தில் கும்பிட்ட இளையோனே, பசுமைப் பொலிவு பெற்ற கடலின் கரையில் விளங்கும் குன்றெல்லாம் சங்கும் வலம்புரியும் நிரம்பிய அழகிய திருச்செந்தூரில் வந்தருள் பெருமாளே. 

பாடல் 66 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....

தனத்த தத்தத் தனத்தனா     தனத்த தத்தத் தனத்தனா          தனத்த தத்தத் தனத்தனா ...... தந்ததான தனனா

தெருப்பு றத்துத் துவக்கியாய்     முலைக்கு வட்டைக் குலுக்கியாய்          சிரித்து ருக்கித் தருக்கியே ...... பண்டைகூள மெனவாழ் 
சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்     மனத்தை வைத்துக் கனத்தபேர்          தியக்க முற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசி யுடனே 
இருப்ப கத்துத் தளத்துமேல்     விளக்கெ டுத்துப் படுத்துமே          லிருத்தி வைத்துப் பசப்பியே ...... கொண்டுகாசு தணியா 
திதுக்க துக்குக் கடப்படா     மெனக்கை கக்கக் கழற்றியே          இளைக்க விட்டுத் துரத்துவார் ...... தங்கள்சேர்வை தவிராய் 
பொருப்பை யொக்கப் பணைத்ததோ     ரிரட்டி பத்துப் புயத்தினால்          பொறுத்த பத்துச் சிரத்தினால் ...... மண்டுகோப முடனே 
பொரப்பொ ருப்பிற் கதித்தபோ     ரரக்கர் பட்டுப் பதைக்கவே          புடைத்து முட்டத் துணித்தமா ...... லன்புகூரு மருகா 
வரப்பை யெட்டிக் குதித்துமே     லிடத்தில் வட்டத் தளத்திலே          மதர்த்த முத்தைக் குவட்டியே ...... நின்றுசேலி னினம்வாழ் 
வயற்பு றத்துப் புவிக்குள்நீள்     திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்          வயத்த நித்தத் துவத்தனே ...... செந்தில்மேவு குகனே.

தெருவின் வெளிப்புறத்திலேயே கட்டுண்டவராக நிற்பவர்களாய், மார்பகம் என்னும் மலையைக் குலுக்குபவர்களாய், சிரித்துப் பேசி, வரும் ஆடவர்கள் மனதை உருக்கியும், அகங்கரித்தும், பழைய குப்பை என்று வாழும்படி, (வேசியர் குலத்து) இளம் பெண்கள் பெரிதாகக் காப்பவர்கள் போல இதமான மொழியைக் கூறுபவர்களாய், செல்வத்தில் மனதை வைத்து, பலமான பேர்வழிகளான ஆடவர் தம்மேல் மயக்கம் கொண்டு தவிக்குமாறு அவர்களைப் பார்த்தும் பேசியும், உடனேயே (தாங்கள்) இருக்கும் வீட்டின் உள்ளே தளத்தின் மேல் விளக்கை அணைத்துவிட்டு, படுத்து, மேலே படுக்க வைத்து, பசப்பு நடிப்புகளை நடித்துக் கொண்டு, (கொடுத்த) பொருள் போதாமல், இதற்கு வேண்டும், அதற்கு வேண்டும் என்று ஜாலப் பேச்சுக்களைப் பேசி, கையில் உள்ள பொருள்களை எல்லாம் கக்கும்படிச் செய்து பிடுங்கி, சோர்வடையும்படி செய்து (விரட்டித்) துரத்துவார்களுடன் சேருவதை நீக்கி அருள்க. மலைபோல பெருத்ததான இருபது புயங்களாலும், அவை தாங்கியுள்ள பத்துத் தலைகளாலும், மிகுந்த கோபத்துடன் (ராவணன்) சண்டை செய்ய, மலை போல கொதித்தெழுந்த போர் அரக்கர்கள் யாவரும் சிதைக்கப்பட்டு பதைக்கவே அவர்களை அடித்து எல்லாரையும் வெட்டி ஒழித்த (ராமராக வந்த) திருமால் அன்பு மிக வைத்துள்ள மருகனே, வயலின் வரப்பின் மேல் எட்டிக் குதித்து மேலே உள்ள வட்டமான நிலப் பரப்பில் செழிப்புடன் கிடக்கும் முத்தைக் குவியக் கூட்டி நின்று, சேல் மீன் கூட்டங்கள் வாழும் வயற்புரங்களைக் கொண்ட, பூமியில் ஓங்கிய, திருத்தணிகையில் சிறப்புடன் வாழ்கின்ற வெற்றியாளனே, என்றும் உள்ளவனே, திருச் செந்தூரில் வாழ்கின்ற குகனே. 

பாடல் 67 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .......

தனதன தந்தாத் தந்தத்     தனதன தந்தாத் தந்தத்          தனதன தந்தாத் தந்தத் ...... தனதான

தொடரிய மன்போற் றுங்கப்     படையைவ ளைந்தோட் டுந்துட்          டரையிள குந்தோட் கொங்கைக் ...... கிடுமாயத் 
துகில்விழ வுஞ்சேர்த் தங்கத்     துளைவிர குஞ்சூழ்த் தண்டித்          துயர்விளை யுஞ்சூட் டின்பத் ...... தொடுபாயற் 
கிடைகொடு சென்றீட் டும்பொற்     பணியரை மென்றேற் றங்கற்          றனையென இன்றோட் டென்றற் ...... கிடுமாதர்க் 
கினிமையி லொன்றாய்ச் சென்றுட்     படுமன முன்றாட் கன்புற்          றியலிசை கொண்டேத் தென்றுட் ...... டருவாயே 
நெடிதுத வங்கூர்க் குஞ்சற்     புருடரும் நைந்தேக் கம்பெற்          றயர்வுற நின்றார்த் தங்கட் ...... கணையேவும் 
நிகரில்ம தன்தேர்க் குன்றற்     றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச்          சிறிதுநி னைந்தாட் டங்கற் ...... றிடுவார்முன் 
திடமுறு அன்பாற் சிந்தைக்     கறிவிட முஞ்சேர்த் தும்பர்க்          கிடர்களை யும்போர்ச் செங்கைத் ...... திறல்வேலா 
தினவரி வண்டார்த் தின்புற்     றிசைகொடு வந்தேத் திஞ்சித்          திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.

தோல்வியின்றித் தொடர்ந்து வரும் யமனைப் போல காமனது வெற்றிப் படைகளை வளைத்துச் செலுத்தும் துஷ்டர்களாகிய விலைமாதர்களுக்கு, தழைத்த தோளின் மீதும் மார்பகங்கள் மீதும் அணிந்துள்ள, மயக்கத்தைத் தர வல்ல, ஆடை விழவும், உடலோடு சேர்த்து வருந்தக் கூடிய தந்திர சூழ்ச்சிகளுடன் நெருங்கி, துன்பம் விளைவிக்கும் சூடான இன்பத்துடன் படுக்கை இடத்துக்கு அழைத்துச் சென்று சேர்க்கும் பொன் அணிகளை உடைய விலைமாதர்களுக்கு, மெதுவாகத் தெளிவு கற்றுக்கொண்டு விட்டாயோ எனக் கூறி, இன்று ஓடிப் போய்விடு என்று விரட்டி அன்பு சுருங்கும் விலைமாதர்களுக்கு, இனிமையில் ஒன்றுபட்டுச் சென்று உட்படுகின்ற என் மனம் உன்னுடைய தாள் மீது அன்பு கொண்டு, இயற்றமிழிலும், இசைத் தமிழிலும் பாக்களை இயற்றி ஏத்த வேண்டும் என்னும் மனப் பக்குவத்தைத் தருவாயாக. நீண்ட தவத்தை மேற்கொண்ட உத்தமமானவர்களும் நொந்துபோய் ஏக்கம் கொண்டு சோர்வு அடையும்படியாக, நின்று ஆர்ப்பரித்து தமது மலர் அம்புகளைச் செலுத்தும் ஒப்பு இல்லாத மன்மதன் தமது மலை போன்ற தேரை இழந்து, தீயில் விழுந்து, அழகு அழியும் வண்ணம், சற்றே நினைந்து திருவிளையாடலைச் செய்த சிவபெருமான் முன்னிலையில், திடம் கொண்ட அன்பினால் அந்தச் சிவனுடைய மனதில் தெளிவு தரும் அறிவுப் பொருளை உபதேசித்து, தேவர்களின் துன்பத்தைக் களைய சண்டை செய்து, செவ்விய திருக்கையில் உள்ள திறல் வாய்ந்த வேலாயுதத்தை உடையவனே, நாள்தோறும், ரேகைகளை உடைய வண்டுகள் ஒலித்து இன்புற்று இசையுடன் வந்து ஏத்துகின்ற, மதில் சூழ்ந்த, செல்வம் வளரும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 

பாடல் 68 - திருச்செந்தூர்
ராகம் - தோடி/அடாணா தாளம் - அங்தாளம் - 7 1/2 - ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதா-2, தகிடதக-2 1/2

தந்த தனன தனனா தனனதன     தந்த தனன தனனா தனனதன          தந்த தனன தனனா தனனதன ...... தனதான

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை     தந்த மசைய முதுகே வளையஇதழ்          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி 
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி 
வந்த பிணியு மதிலே மிடையுமொரு     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி 
மங்கை யழுது விழவே யமபடர்கள்     நின்று சருவ மலமே யொழுகவுயிர்          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் 
எந்தை வருக ரகுநா யகவருக     மைந்த வருக மகனே யினிவருக          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம 
இங்கு வருக அரசே வருகமுலை     யுண்க வருக மலர்சூ டிடவருக          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன் 
சிந்தை மகிழு மருகா குறவரிள     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா 
திங்க ளரவு நதிசூ டியபரமர்     தந்த குமர அலையே கரைபொருத          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.

பெருத்த வயிறு சரியவும், முடி நரைக்கவும், வரிசையாயிருந்த பற்கள் ஆடவும், முதுகில் கூன் விழவும், உதடு தொங்கிப்போகவும், (நடக்க உதவ) ஒரு கையானது தடியின் மீது வரவும், பெண்கள் கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும், முன்னே இருமல் கிண்கிண் என்று ஒலிக்கவும், பின்னே பேச்சு குழறவும், கண்கள் மங்கி குருட்டுத்தன்மை அடையவும், செவிட்டுத்தன்மையை காதுகள் அடையவும், வந்த நோய்களும், அவற்றின் இடையிலே புகுந்த ஒரு வைத்தியனும், உடல் படும் வேதனையும், சிறு பிள்ளைகள் சொத்து எவ்வளவு, கடன் எது எது என்று விடாது கேட்டுத் தொளைக்கவும், மிக்க துயரம் கொண்டு மனைவி அழுது விழவும், யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவர போராடவும், மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும், உயிர் மங்கும் அந்தக் கடைசி நேரத்தில் முருகா, நீ விரைவில் மயில்மேல் வரவேண்டும். என் அப்பனே வா, ரகுநாயகனே வா, குழந்தாய் வா, மகனே இதோ வா, என் கண்ணே வா, என் ஆருயிரே வா, அழகிய ராமனே வா, இங்கே வா, அரசே வா, பால் குடிக்க வா, பூ முடிக்க வா, என்றெல்லாம் அன்போடு கோசலை கூறி அழைக்க வந்த மாயன் திருமால் மனம் மகிழும் மருமகனே, குறவர் குல இளங்கொடியான வள்ளி அணையும் அழகா, தேவர்களின் சிறைவாசம் ஒழிய, அசுரக் கூட்டம் வேரோடு மடிய அழித்த தீரனே, நிலவும், பாம்பும், நதியும் சூடிய பரமர் தந்தருளிய குமரனே, அலை கரையில் மோதும் திருச்செந்தூரில் இன்பமாய் வீற்றியருளும் பெருமாளே. 

பாடல் 69 - திருச்செந்தூர்
ராகம் - ஜோன்புரி; தாளம் - ஆதி - எடுப்பு 3/4 இடம்

தானன தானன தானன தந்தத்     தானன தானன தானன தந்தத்          தானன தானன தானன தந்தத் ...... தனதான

தோலொடு மூடிய கூரையை நம்பிப்     பாவையர் தோதக லீலைநி ரம்பிச்          சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான 
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்     கோவையு லாமடல் கூறிய ழுந்தித்          தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங் 
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்     கோளனை மானமி லாவழி நெஞ்சக்          காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக் 
காரண காரிய லோகப்ர பஞ்சச்     சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்          காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் ...... றருளாதோ 
பாலன மீதும னான்முக செம்பொற்     பாலனை மோதப ராதன பண்டப்          பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப் 
பாவியி ராவண னார்தலை சிந்திச்     சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்          பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ...... கினியோனே 
சீலமு லாவிய நாரதர் வந்துற்     றீதவள் வாழ்புன மாமென முந்தித்          தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய் 
சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித்     தாறுகொள் பூகம ளாவிய இன்பச்          சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.

தோல் கொண்டு மூடப்பட்ட இந்த உடலை நம்பி, மாதர்களுடைய வஞ்சக லீலைகள் நிரம்புவதால், அவர்களுக்கு வேண்டிய பொருளைத் தேட வேண்டி ஓடியும், வருந்தியும், புதுவிதமான நூல்களாக தூது, நான்மணிமாலை, பிரபந்தங்கள், கோவை, உலா, மடல்* முதலியவற்றைப் பாடி, அவற்றிலேயே ஈடுபட்டு, குற்றம் நிறைந்த இளைஞர்களின் வாசல் தோறும் புகுந்து வருந்துகின்ற கால்களைக் கொண்டவனை, வீணனை, நீதி தவறிய பொய்யைக் கொண்டவனை, மானமில்லாது அழிந்திடும் நெஞ்சனை, பிறரை வருத்தும் லோபியை, பயனற்றவனை, நிந்திக்கப்படும் கீழ்மகனாகிய என்னை, காரண, காரியத் தொடர்போடு வரும் இவ்வுலகத் துன்பங்கள் எல்லாம் நீங்கவும், நல்வாழ்வு சேரவும், விருப்பமுடன் குற்றமற்ற செல்வமாகிய உண்மை ஞானமான தவநிலை வந்தடைய சிறிதாவது அருளக்கூடாதோ? பால் போன்ற வெண்மையான அன்னத்தின் மீது வீற்றிருந்து, நான்கு முகங்களும் பொன்னிறமும் கொண்டு, படைத்தல் தொழில் செய்யும் பிரமனை, முன்பு தலைகளில் குட்டி, தண்டனை விதித்தவனே, முன்பு, அந்தப் பெரிய அநுமானின் தோளிலே வீற்றிருந்து போர் செய்து, பாவியாம் ராவணனுடைய தலைகள் சிதறவும், உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறவும் செய்து, மணந்த பாவையாம் சீதையின் தோளைத் தழுவிய மாமனாம் (ராமனின்) திருமாலின் சிந்தைக்கு இனியவனே, நல்ல குணங்கள் நிறைந்த நாரத முநிவர் உன்னிடம் வந்து, இதுதான் அவ்வள்ளி வாழும் தினைப்புனமாகும் என்று குறிப்பிட்டுக் காட்ட, உடனே நீ முடுகிச் சென்று, தேன் போன்ற மொழியாளாகிய வள்ளியின் பச்சைக்கற்பூர கலவையை அணிந்த, அழகிய, இன்பம் நல்கும் மலையொத்த மார்பினைத் தழுவியவனே, சேல், வாளை, வரால் மீன்கள் யாவும் கிளம்பித் துள்ளிப் பாய்ந்து, குலைசாய்த்திருக்கும் பாக்கு மரங்களில் குலாவும் இன்பகரமான திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* இங்கு கூறியுள்ள நூல்கள் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் 96 வகைகளில் சில.

பாடல் 70 - திருச்செந்தூர்
ராகம் - கோதார கெளளை; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தான தந்த தான தான - தான தந்த தான தான     தான தந்த தான தான ...... தனதான

நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி     நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே 
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி     நாட றிந்தி டாம லேக ...... வளராமுன் 
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை     நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை 
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான     நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே 
காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு     காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி 
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்     காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே 
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல     ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே 
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி     யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே.

ஒன்பது* வாசல்களைப் பிளந்து வைத்த, அவதூறுக்கு இடமான, இவ்வுடம்பு கால்களும் கரங்களும் கொண்டு, நரம்புகள், எலும்புகள் இவைகளால் ஆகிய சா£ரம். அந்த உடம்பினுள் ஒலி என்னும் இந்திரியம் பொருந்த, எல்லாத் தொழில்களுக்கும் மூல காரணமான ஐம்பொறிகள் கொண்டு பல வகையான கூத்துக்களை இவ்வுலகில் ஆடி, இவ்வாறு உயிர் போயிற்று என்று உலகில் யாரும் அறியாதபடி உயிர் பிரியும் வரை இந்த உடம்பு வளர்வதற்கு முன்பு, பல கோடி நூல்களைத் தேடிப் படித்து மயக்கத்தை அடைந்து, உலகில் உள்ள செல்வந்தரை நூறு செவ்வையான சொற்களால் பாடி, புத்தி மாறி, அதனால் தீமை விளைந்து, பலவிதமான பிணிகளுடன் கலந்த துன்ப வாழ்வை அடையாமல், நீ எனது அறிவில் கலந்து உள்ளத்தில் பொருந்தும் ஞான சாஸ்திரங்கள் முழுவதும் ஓதி உணரக் கூடிய வாழ்வைத் தந்தருள்வாயாக. யமன் வந்து இளைஞன் மார்க்கண்டேயனின் உயிரை வருத்த பாசக்கயிறை வீசுகின்ற சமயத்திலே வெளிப்பட்டு அஞ்சேல் அஞ்சேல் என்று அருளிய ஆதி முதல்வரும், மன்மதனை நீ உனது ஐந்து மலர்க் கணைகளோடு எரிவாயாக என்று நெற்றிக் கண்ணால் பார்த்த மெளன மூர்த்தியும், நீலகண்டருமாகிய சிவபெருமானுக்கு வேத முதலாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தவனே, ஆலகாலம் தோன்றிய பாற்கடலில் பள்ளிகொண்டு, கஜேந்திரன் என்னும் யானையின் அச்சத்தைத் தீர்த்த ஆதிமூலப் பொருளும், சக்ராயுதத்தை அழகிய கரத்தில் ஏந்துபவரும், ஆயர் குலத்தில் தோன்றியவருமான மாயன் திருமாலின் மருகோனே, வேதங்களெல்லாம் உனது திருவடிகளைத் துதிக்க, சேவற் கொடியைக் கரத்திலே தாங்கிய ஆதிப் பரம் பொருளாகி, திருச்செந்தூரில் வாழ்கின்ற பெருமாளே. 
* ஒன்பது வாசல்கள்: இரு கண்கள், இரு செவிகள், இரு நாசிகள், ஒரு வாய், இரு கழிவுப் பாதைகள்.

பாடல் 71 - திருச்செந்தூர்
ராகம் - தந்யாஸி ; தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 ; - எடுப்பு - அதீதம்

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்     தனத்தத் தந்தனம் ...... தனதான

நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்     நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை 
நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்     றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும் 
புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்     புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும் 
புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்     புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே 
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்     மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி 
மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்     டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே 
குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்     கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே 
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.

செல்வத்துக்கு குபேரன் என்றும், நற்பதவிக்கு தேவேந்திரன் என்றும், பொன் போன்ற நிறத்துக்கு கந்தப்பெருமான் என்றும் கொடுப்பதற்கு வருந்தும் செல்வந்தரிடம் சென்று, இந்த உலகத்தில் தன் பெரும் பசியைப் போக்குதற்கு நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு, துயரம் மிகுந்த மனதில் தினமும் புதுப்புதுச் சொற்களின் கூட்டத்தால் ஒரு கவிதை பாடி, சங்கடத்தில் சிக்கி உடம்பு அழிந்து மாய்கின்ற புலன்களால் வரும் துன்பங்களைத் தொலைத்து, உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய அன்பினை வழங்கி அருள்வாயாக. மனத்தில் கருதி, வலிய திரிபுரத்தை புன்னகை செய்தே எரித்த வீரம் மிகுந்த தந்தையாரும், அம்பலத்தில் ஆனந்த நடனம் புரிந்தவரும், மழுவைக் கரத்தில் ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று, வளமான தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே, அலைகள் குதித்து, குன்றுகளைத் தோண்டி அலைத்து, சிவந்த பொன்னையும் கொழித்துத் தள்ளுகின்ற திருச்செந்தூரின் செல்வமே, குறவர்களின் பொன்னான குலக்கொடியாகிய வள்ளியை முன்பு தினைப்புனத்தில் செம்மையான கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே. 

பாடல் 72 - திருச்செந்தூர்
பாடல் 72 - திருச்செந்தூர் 
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - மிஸ்ரசாபு - விலோமம் - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தனனாத் தனன தனனாத் தனன     தனனாத் தனன ...... தனதான

நிலையாப் பொருளை யுடலாக் கருதி     நெடுநாட் பொழுது ...... மவமேபோய் 
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்     நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி 
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி     மடிவேற் குரிய ...... நெறியாக 
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு     மலர்தாட் கமல ...... மருள்வாயே 
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி     குளமாய்ச் சுவற ...... முதுசூதம் 
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு     கொதிவேற் படையை ...... விடுவோனே 
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர     அழியாப் புநித ...... வடிவாகும் 
அரனார்க் கதித பொருள்காட் டதிப     அடியார்க் கெளிய ...... பெருமாளே.

நிலையில்லாத பொருட்களை பொன்னாக மதித்து, நீண்ட நாட்களெல்லாம் வீணாக்கி, மனத்திண்மை போய், செவிடாகி, குருடாகி, நோய்கள் மிகுந்து, ஐம்பொறிகளும் தடுமாற்றம் அடைந்து, மலமும், சிறுநீரும் படுக்கை மேலேயே (தன்னிச்சையின்றி) பெருகி, இறந்து படுவேனுக்கு, கடைத்தேறுவதற்கு உரிய முக்தி நெறியாக, வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான ஒளியாக விரிந்துள்ள நின்மலர்த் தாமரையை தந்தருள்வாயாக. கொலையே செய்து வருகின்ற அசுரர்கள் அழிய, பெருங்கடல் சிறு குளம் போல் வற்றிப்போக, முற்றிய மாமரம் (வடிவில் நின்ற சூரன்) குறிவைத்தபடி பட்டு, பிளவுபட, மேலே பற்றும்படியாக பிடியுள்ள எரிவீசும் வேற்படையை செலுத்தியவனே, திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) கடற்கரையில் மகிழ்ச்சியோடு கோலம் கொண்ட குமரனே, அழியாத பரிசுத்த வடிவில் உள்ள சிவனார்க்கு யாவும் கடந்த ஓம் என்னும் பொருளை விளக்கிய அதிபனே, அடியவர்களுக்கு எளிதான பெருமாளே. 

பாடல் 73 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - ......

தனத்தந் தானன தத்தன தத்தன     தனத்தந் தானன தத்தன தத்தன          தனத்தந் தானன தத்தன தத்தன ...... தனதான

நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்     கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்          நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல ...... தடவாமேல் 
நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்     ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை          நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி ...... யெனவோதி 
உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட     விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை          யுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி ...... லுழலாமே 
உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ்     கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம்          உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட ...... அருள்வாயே 
கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை     யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி          கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் ...... மருகோனே 
கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி     திருச்செங் கோடுஇ டைக்கழி தண்டலை          களர்ச்செங் காடுகு றுக்கைபு றம்பயம் ...... அமர்வோனே 
சிறுக்கண் கூர்மத அத்திச யிந்தவ     நடக்குந் தேரனி கப்படை கொண்டமர்          செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை ...... யுருவானோன் 
செருக்குஞ் சூரக லத்தையி டந்துயிர்     குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள்          திருச்செந் தூர்நக ரிக்குள்வி ளங்கிய ...... பெருமாளே.

சூதாடும் கருவியைப் போன்று, நிமிர்ந்து நிற்கும் மார்பகங்களை நெஞ்சின் மீது உடைய முண்டைகள். கரும்பின் சாற்றுடன் அரைத்து வைத்துள்ள (மருந்து) உருண்டைகளை நிழலில் உலர்த்தி, வாசனை திரவியங்கள் பலவும் தடவி பின்னர், நெருங்கிப் படுக்கையில் வெற்றிலையின் புறத்தில் (அந்த மருந்தை) ஒளித்து வந்தவருக்கு அன்பு காட்டிக் கொடுத்து, அதன் பிறகு, இங்கு இருக்கும் என்னை நீங்கள் நினைப்பதே இல்லை, மெச்சும் இதமான சொற்களைப் பேசுவதில்லை என்று கூறி, (வந்தவர்) தமது மயக்கத்தில் விழுவதைப் பார்த்து, மோக வலைக்குள் அவர் அழுந்தும்படி விடுக்கின்ற பாவிகளான வேசிகள். மனதை உருக்கும் மாமிசப் பிண்டங்கள் போன்றவரது உலோப குணத்தில் நான் சிக்குண்டு அலைச்சல் அடையாத வண்ணம் அழிவில்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும், திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக் கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக. கரிய பரிசுத்தமான கழுத்தை உடைய சிவபெருமானது அரிய மலையாகிய கயிலையை எடுத்த தோள்களை உடையவனும், (உடைந்த கொம்புகள் தனது) மார்பில் பொருந்த வந்த (அஷ்டதிக்கஜங்கள் ஆகிய) எட்டு யானைகளை வென்றவனுமாகிய அரக்கன் ராவணனைக் கொன்ற இணையற்ற தோள் வலிமை பெற்ற (ராமன்) திருமாலின் மருகனே, பெருமை வாய்ந்த தஞ்சாவூர், சிக்கல், திருவலஞ்சுழி, திருச்செங்கோடு, திருவிடைக்கழி, தண்டலைநீணெறி, திருக்களர், திருச்செங்காட்டங்குடி, திருக்குறுக்கை, திருப்புறம்பயம் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, சிறிய கண்களையும், மிகுந்த மதத்தையும் உடைய யானை, குதிரை, நடத்தப்படும் தேர், காலாட்படை (என்னும் நால்வகைப்) படைகளையும் கொண்டு, போர் புரிந்தவனும், பாதகனும், அநீதி செய்பவனும், வஞ்சகமே உருக் கொண்டவனும், அகங்காரம் மிக்கவனும் ஆகிய சூரனுடைய மார்பைப் பிளந்து, அவனுடைய உயிரைக் குடித்த கூரிய சக்திவேலைக் கையிலேந்தி அமர்ந்து, அருள்மிகு திருச்செந்தூர் நகரில் விளங்கும் பெருமாளே. 

பாடல் 74 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .......

தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்     தந்தனா தந்தனத் ...... தனதான

பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்     பந்தபா சந்தனிற் ...... றடுமாறிப் 
பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்     பண்பிலா டம்பரப் ...... பொதுமாதர் 
தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்     சங்கைமால் கொண்டிளைத் ...... தயராதே 
தண்டைசூழ் கிண்கிணிப் புண்டா£ கந்தனை     தந்துநீ யன்புவைத் ...... தருள்வாயே 
அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்     தண்டவே தண்டமுட் ...... படவேதான் 
அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்     கண்டலோ கங்கொடுத் ...... தருள்வோனே 
திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்     செஞ்சடா பஞ்சரத் ...... துறுதோகை 
சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்     செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.

குற்றங்களோடு பொருந்திய பிறப்பு என்னும் பேரிருளில், பந்த பாசங்களில் தடுமாற்றம் அடைந்து, (மன்மதனின்) ஐந்து அம்புகளும் பாய்வதால் புண்பட்டு, வஞ்சகமுள்ள, நற்குணம் இல்லாத ஆடம்பரமான விலைமாதர்களின் தழுவுதலால் அவர்களின் மார்பகங்கள் உடலில் பட, குற்ற உணர்ச்சியும் ஆசையும் கொண்டு இளைத்துத் தளராமல், தண்டையும், அவற்றைச் சூழ்ந்துள்ள கிண்கிணியும் அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியைக் கொடுத்து, நீ என் மீது அன்பு கொண்டு அருள் புரிவாயாக. அழகிய கையில் வேல் எடுத்து, அண்டங்களும் மலைகளும் உட்பட யாவும் பயப்படும்படி, சூரனாகிய அசுரனது பெருமையைக் கெடுத்தவனே, திண்ணிய திறலைக் கொண்ட மேக வாகனனாகிய தேவேந்திரனுக்கு விண்ணுலகத்தைக் கொடுத்து அருள் புரிந்தவனே, நிலவு, ஆத்தி, கொன்றை, ஊமத்தம் மலர், துளசி (இவைகள்) நெருங்கிய, அழகிய, சிவந்த (சிவ பெருமானின்) சடையாகிய கூட்டிலிருக்கும் கங்கையாகிய நங்கையின் சிந்தைக்கு உகந்தவனே, தென் திசையிலிருந்து தென்றல் வீசும் சோலைகள் (நிறைந்த) திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செந்தமிழ்ப் பெருமாளே. 

பாடல் 75 - திருச்செந்தூர்
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம்; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தந்த தானன தனதன தனதன     தந்த தானன தனதன தனதன          தந்த தானன தனதன தனதன ...... தனதான

பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி     குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக          பங்க வாண்முக முடுகிய நெடுகிய ...... திரிசூலம் 
பந்த பாசமு மருவிய கரதல     மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு          பண்பி லாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன் 
அஞ்ச வேவரு மவதர மதிலொரு     தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்          அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ...... னெதிரேநீ 
அண்ட கோளகை வெடிபட இடிபட     எண்டி சாமுக மடமட நடமிடும்          அந்த மோகர மயிலினி லியலுடன் ...... வரவேணும் 
மஞ்சு போல்வள ரளகமு மிளகிய     ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென          வந்த தூயவெண் முறுவலு மிருகுழை ...... யளவோடும் 
மன்றல் வாரிச நயனமு மழகிய     குன்ற வாணர்த மடமகள் தடமுலை          மந்த ராசல மிசைதுயி லழகிய ...... மணவாளா 
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை     விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து          திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் ...... மகமேரு 
செண்டு மோதின ரரசரு ளதிபதி     தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு          செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.

(கொலை, களவு, பொய், கள் குடித்தல், குருநிந்தை எனப்படும்) ஐந்து பாதகமும் செய்பவரைத் தாக்கும் (யமன்), பிறைச் சந்திரன் போல் (வெளுப்பும், வளைவும்) உள்ள பற்களுடன், நெருப்புப் போன்ற தலை மயிருடன், கொடிய விஷம் ததும்பும் கண்களுடன், குரங்கைப் போன்ற பயங்கர ஒளிகொண்ட முகத்துடன், விரைந்து செல்ல வல்ல நீண்ட திரிசூலத்துடன், கட்டுவதற்கான பாசக்கயிற்றைக் கொண்டுள்ள கையினனாக, மிகுத்து நீண்ட கரிய மேகம் போன்ற உருவத்துடன் அழகு இல்லாத ஓர் எருமையின் முதுகில் ஏறி வருகின்ற யமராஜன் யான் பயப்படும்படியாக வருகின்ற அந்தச் சமயத்தில் ஒப்பற்ற அடைக்கலமாய் தலைமுறை தலைமுறையாக உனது திருவருளைப் பெற விரும்பும் அன்பு கொண்டு உன் திருவடியைப் புகழும் அடிமையாகிய என் எதிரே நீ, அண்ட முகடு வெடி படவும், இடி படவும், எட்டுத் திக்குக்களும் மடமட என்று முறியும்படியாகவும் நடனம் செய்யும் அந்த உக்கிரமான மயிலின் மேல் ஏறி அன்புடன் வரவேண்டும். (கரிய) மேகம்போல் வளர்ந்துள்ள கூந்தலும், மெல்லிய இன்பகரமான அமிர்தம் போன்ற பேச்சும், நிலவைப் போல் விளங்கும் பரிசுத்த வெண்மையான பற்களும், இருசெவிகளின் அளவும் ஓடுகின்ற நறு மணம் உள்ள தாமரை போன்ற கண்களும் உடையவளாக அழகுள்ள குன்றில் வாழும் வேடர்களின் இளம்பெண் வள்ளியின் பருத்த மார்பகங்களாகிய மந்தர மலை மீது தூங்கும் அழகிய கணவனே, தமிழ் மொழி விளங்கும் சிறந்த தெற்கு திசை, வடதிசை, மேற்கு திசை, மேலான கிழக்கு திசை முதலிய திக்குகள் எல்லாவற்றிலும் போர் செய்து, நிலவை அணிந்த சடை முடியராகிய சிவபெருமானுடைய பல கோயில்களையும் தொழுது, உயர்ந்த பெரிய மேரு மலையின் மீது செண்டை எறிந்த சக்கரவர்த்தியே*, தொண்டர் முதலானோர் வழிவழி அடிமையாக இருந்து முத்தி பெற அருளிய திருச்செந்தூரில் இனிது வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. 
* முருகன் பாண்டியச் சக்கரவர்த்தி உக்கிர குமாரனாய் அரசாண்டபோது பொன் பெற வேண்டி மேருமலையைச் செண்டாலடித்த திருவிளையாடலைக் குறிக்கும்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.