LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியத்தில் விலங்குகளின் பெயர்கள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூவகை இலக்கணங்களை உரைக்கிறது. இதில் ''விலங்கு'' என்ற சொல்லாட்சி மூவிடங்களில் அமைகிறது (1202, 1456, 1465), மேலும், விலங்கைக் குறிக்க ''மா'' என்ற பொதுச் சொல்லும் காணப்பெறுகிறது (964, 1531), விலங்குகளைக் தொகுப்பாகக் குறிக்கும் சொற்களாக, தவழ்பவை (1504), கடல்வாழ் (1540) நீர்வாழ் சாதி (1542) ஆகியன இடம் பெறுகின்றன.

எழுத்ததிகார உயிர் மயங்கியலில் புணர்ச்சி விதிகள் கூறும் போது மா என்ற பொதுச்சொல்லும் ஆ, சே, பெற்றம் ஆகிய விலங்கின் பெயர்களும் இடம்பெறுகின்றன. ஆ, மா ஆகியன இயல்பாகப் புணரும் (224): மேலும் ஆ என்னும் சொல்லுக்கு னகர ஒற்று வரின் அகரம் சேர்ந்து வரும் (232) ஈகார பகரம் வரின் ஆப்பீ என்ப ஆப்பி எனக் குறுகியும் வரும் (223) ஆ.மா. ஆகியவை விலங்கின் பெயர்களாக வரும்போது னகர ஒற்று மிகும் (231) சே என்பது பெற்றம் என்ற விலங்கினைக் குறித்து வரும்போது இன் சாரியை பெறும் (279). இவ்வாறு எழுத்ததிகாரத்தில் விதி கூறும் பொருட்டு விலங்குகள் இடம்பெற்றுள்ளன. சொல்லதிகாரத்தில் மா என்ற சொல் இடம் பெறினும் (758) அது விலங்கைக் குறிக்கும் பொருட்டு அமையவில்லை.

பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், செய்யுளியல், மரபியல், ஆகியவற்றில் விலங்குகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. விலங்கு என்ற சொல்லாட்சியும் மா என்ற பொதுச்சொல்லும் காணப் பெறுகின்றன. மரபியல் மிகுதியாக விலங்குகள் இடம் பெற்றுள்ளன. விலங்குகளுக்குரிய சிறப்புப் பெயர்களும் இவ்வியலில் கூறுப்பெறுகின்றன.

மரபியல் விலங்குகளின் சிறப்புப் பெயர்களாக ஆண்பால், பெண்பால் மற்றும் இளமைப் பெயர்கள் இடம்பெறுகின்றன. மேலும் விலங்குகளின் பெயர்களும் அவற்றிற்குரிய வேறு சொற்களும், இவ்வியலில் கூறப்பெற்றுள்ளன. உற்றறிதல், நா, மூக்கு, கண், செவி (1526) ஆகிய ஐயறிவுடைய உயிர்களை மா எனத் தொல்காப்பியர் கூறுகிறார் (1531)

விலங்குகளின் பெயர்கள்

அணில் (1505) ஆ (1003, 1004, 1006, 1022, 1519, 1560), உழை (1511, 1535, 1545, 1557), ஊகம் (1521, 1567), எருமை (1515, 1519, 1537, 1539, 1541, 1560, 1568) எலி (1505), ஏனம் (1568) ஒட்டகம் (1517, 1552), கபிலை (1036), கராகம் (இளம்பூரணர்-பாடவேறுபாடு) (1516), கராம் (1535), கலிமா(1140), கவரி(1516, 1535, 1538, 1557) கழுதை (1514, 1552), களிறு (1018, 1501, 1533, 1571), குஞ்சரம் (1518) குதிரை (1018, 1158, 1511, 1514, 1552,1568), குரங்கு (1512, 1521, 1567,1568), கேழல் (1534), சுறவு,(1540), சே (278,279) நரி (1508, 1566), நவ்வி(1511, 1557), நாய் (1507,1510,1558,1565), பகடு (1022) பன்றி (1507, 1536, 1538, 1565, 1568), புலி (15டி7, 1535, 1541), பூசை (1568, பெற்றம் (279, 1539, 1541, 1560, 1562), மரை (1516, 1520, 1535, 1539, 1541, 1552, 1560, 1562), மா (1048, 1140), முசு (1521,1546, 1567) முயல் (1507), மூங்கா (1505), யாடு (1511, 1547, 1564), யானை (1018, 1158, 1514, 1536, 1551), வெருகு (1505, 1568). வேழம் (1533) ஆகியன (40) தொல்காப்பியம் தரும் விலங்குகளின் பெயர்களாகும். இவற்றுள் சில பரியாயப் பெயர்களாக அமைகின்றன. இதை ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றல் (782) என்ற அடிப்படையில் கருதலாம்.

(எ.கா.) யானை - களிறு, குஞ்சரம், வேழம்.
குதிரை - கலிமா, புரவி, மா

மேலும், விலங்குகளின் உள்வகைகளைக்கூறும் பொருட்டும் இப்பெயர்கள் அமைக்கப் பெற்றுள்ளன எனக் கருதலாம்.

இளமைப் பெயர்கள் (1500)

மரபியலில் இளமைப்பெயர்களை முதலில் தொல்காப்பியர் தருகிறார். அவை, கன்று (1514) குட்டி (1505), குருளை (1507) குழவி (1519), பறழ் (15டி6), பார்ப்பு (1503, 1513), பிள்ளை (1503, 1510, 15,69), மகவு (1513, 1522), மறி (1511) ஆகியன (9) இவற்றுள் பார்ப்பு மற்றும் பிள்ளை என்பவற்றைக் குறிப்பிட்ட விலங்களுக்கு எனச் சுட்டாமல் தவழ்பவற்றுக்கு உரிய எனக் கூறுகிறார்.

ஆண்பற்பெயர்கள் (1501)

அப்பர் (1547), இரலை (1544), உதள் (1547) ஏற்றை (1549), ஏறு (1538, 1540), ஒருத்தல் (1535), கடுவன் (1568), கண்டி (1568), கலை (1544, 1545), களிறு (1018, 1501, 1533, 1571), சேவல் (1568), தகர் (1547), பூசை (1568), போத்து (1541) மோத்தை (1547) ஆகியன (15) தொல்காப்பியம் கூறும் ஆண்பாற்பெயர்களாகும். இவற்றுள் ஏற்றை என்பது ''ஆற்றலோடு கூடிய ஆண்பாற்கு எல்லாம் பொருந்தும்'' என வகைப்படுத்தி பொதுமைப்பட வழங்கியிருக்கிறார். சுறவின் ஆண்பாற்பெயராக ஏறு என்பதைக் கூறும்போது ''கடல் வாழ் சுறவு'' என அடையுடன் தெளிவுபடுத்துகிறார். போத்து என்னும் ஆண்பெயரை ''நீர் வாழ் சாதிக்கு உரியது'' எனப் பொதுவாகக் கூறியுள்ளதால் அப்பெயர் சுறவுக்கும் உரியதாகிறது.

பெண்பாற்பெர்கள் (1502)

ஆ(1562, 1563), கடமை (1514, 1520, 1564) நாகு (1562, 1563), பாட்டி (1565), பிட் (1551), பிணவு (1558), பிணவல் (1558), பிணவல் (1559), பிணை (1557) பெட்டை (1552, மந்தி (1567), மூடு (1564) ஆகியன (11) தொல்காப்பியத்தில் இடம்பெறும் பெண்பாற் பெயர்களாகும்.

மரபியலில் கூறப்பெற்றிருக்கும் இச்சிறப்புப் பெயர்கள் அனைத்தும் எல்லா விலங்குகளுக்கும் பொதுவானவை அல்ல. குறிப்பிட்ட சில பெயர்கள் மரபு அடிப்படையில் வழங்கப்பெற்றமை தொல்காப்பியரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் எல்லா விலங்குகளுக்கும் இம்மூவகைப் பெயர்களும் இடம்பெறவில்லை. சிலவற்றிற்கே தரப்பெற்றுள்ளன.

(எ.கா) உழை - ஏறு (ஆ.பெ), பிணை (பெ.பெ), மறி (இ.பெ)
எருமை - கண்டி (ஆ.பெ.), நாகு (பெ.பெ), கன்று (இ.பெ)

அரசர்க்குரிமை

புரவியும்,, களிறும் செங்கோல் அரசர்குரியவை (1571) என்ற மரபுச்செய்தியும் மரபியலில் இடம்பெறுகிறது. பொருளதிகாரத்தின் பிற இயல்கள்

அதத்திணையியலில் கருப்பொருளைக் கூறும் தொல்காப்பியர் மா என விலங்கை உட்படுத்துகிறார் (964). இக்கருப்பொருட்களில் தெய்வம் ஒழிந்ததை இடமாகக் கொண்டு உள்ளுறை பிறக்கும் (993) என்றதால் விலங்குகளும் குறிப்பெருள் உத்தியாகிய உள்ளுறைக் கூறாக அமைகின்றன என்பது தெரிகிறது.

புறத்திணையியலிலும் விலங்குக்கு இடம் அமைகிறது. வெட்சித்திணையின் இலக்கணமாக ''ஆதந்து ஓம்பல்'' (1003) கூறப்பெறுகிறது. மேலும் இத்திணையின் துறைகளாக (1003) கூறப்பெறுகிறது. மேலும் இத்திணையின் துறைகளாக (1004) ''ஆகோள்'' (பசுக்கூட்டத்தைக் கொள்ளுதல்), ''நோயின்று உய்த்தல்'ண' (அவற்றை நோயில்லாமல் தம் நாட்டுக்குக் கொணரல்), ''தந்துநிறை'' (அவற்றைக் கொணர்ந்து நிறுத்துதல்), ''பாதீடு'' (பங்கு வைத்தல்) ஆகியவை பேசப் பெறுகின்றன. வெட்சியின் பிற பகுதியான கரந்தையில் ''ஆ பெயர்த்துத் தருதல்'' (1006) இடம் பெறுகிறது. தும்பைத்திணையின் துறைகளில் (1018), ''யானை''ப்படை, ''குதிரைப்படை, ''களிறு எரிந்து எதிர்த்தோர் பாடு'', ''களிற்றோடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலை'' ஆகியன உள.

வாகைத்திணையின் துறையாகப் பகட்டினாலும் ஆவினானும் துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் (1022) கூறப்பெறுகிறது. பகடு (=எருது) என்ற பெயர் இவ்விடத்தில் மட்டும் இடம்பெறுகிறது. பாடாண்திணையின் துறைகளில் ''கபிலை கண்ணிய வேள்வி நிலை (1036) கூறப்பெறுகிறது. கபிலை(=பசு) என்னும் நிற அடிப்படையில் தோன்றிய பெயர் இங்கு மட்டும் வருகிறது. இவ்வாறு புறத்திணையியலில் ஆ.கபிலை, களிறு, குதிரை, பகடு, யானை ஆகிய விலங்குப் பெயர்கள் துறைக்குறிப்பில் சார்புக் கூறாக அமைகின்றன.

களவியலில் குதிரையைக் குறிக்கும் மா என்ற சொல் ''மடன்மா'' என்ற வருகையில் இடம்பெறுகிறது (1048).

கற்பியலில் பார்ப்பார் கூற்றாக ஆவொடு பட்ட நிமித்தங்கூறல் (1123) காணப்படுகிறது. இங்கு நன்னிமித்தமாக ஆ கருதப் பெற்றுள்ளது. பறவை போல பறந்து செல்லும் மனச்செருக்குடைய குதிரையைத் தலைவன் கொண்டுள்ளதால் இடையில் தாமதித்தல் இல்லை (1140) என்பதில் குதிரையைக் குறிக்க ''கலிமா'' என்ற சொல் ஆளப் பெற்றுள்ளது.

செய்யுளியலில் விலங்கு எனும் சொல் இரு இடங்களில் காணப் பெறுகின்றது. செய்யுளில் விலங்குகள் பேசுவன போலவும், கேட்பன போலவும் அமையும் (1456) எனவும்: துறைவிளக்கம் இடம்பெறும் இடத்தில் விலங்குகள் தத்தம் இயல்புக்கு ஏற்ப மரபொடு பொருந்தி வருதல் வேண்டும் (1465) எனவும் கூறப்பெற்றுள்ளன.

முடிவுரை

தொல்காப்பியத்தில் விலங்குகள் எழுத்ததிகாரத்திலும், பொருளதிகாரத்திலும் இடம்பெறுகின்றன. எழுத்ததிகாரத்தில் சொற்புணர்ச்சி விதி கூறும் பொருட்டு விலங்குப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பொருளதிகாரத்தில், அதத்திணையில் கருப்பொருள் கூறாக விலங்குகள் அமைந்துள்ளன. உள்ளுறை, இறைச்சி ஆகிய குறிப்புப் பொருளுணர்த்தும் இலக்கிய உத்திக்கு கடனாக அமைகின்றன. புறத்திணைகளின் துறைக்குறிப்பில் விலங்குகள் சார்புக் கூறாக அமைகின்றன. களவியலில் மடன்மா எனவும், கற்பியலில் நிமித்தம் கூறும் பொருட்டும் அமைக்கப்பெற்றுள்ளன.

பொருளியலில் போர்ப்படைகளில் யானை, குதிரை ஆகியன முதன்மை பெறுகின்றமை சுட்டப்படுகின்றது. தலைமையை அடையாளம் காட்டும் ஊர்தியாக அரசர்க்கும், வீரர்க்கும் இவ்விலங்குகள் அமைகின்றன. உணர்வு வடிகாலாக விலங்குகள் செய்யுள்களில் அமையும் முறை கூறப்பெற்றுள்ளது. மரபு பிறழக்கூடாது என்ற செய்யுளியல் விளக்கத்திற்கு ஏற்ப மரபியலில் விலங்குகள் அமைக்கப் பெற்றுள்ளன. மரபியல் ஐயறிவுடைய உயிர் விலங்கு என்ற தகவலை அளிக்கிறது. சிறப்புக் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. 40 விலங்குப் பெயர்களும், 15 ஆண்பாற்பெயர்களும், 11 பெண்பாற்பெயர்களும், 9 இளமைப்பெயர்களும் தொல்காப்பிய மரபியலில் இடம்பெறுகின்றன.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.