LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-15

3.02. ஏனாதிநாத நாயனார் புராணம்



608     
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும்
தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில்
வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்து
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர்     3.2.1

609    
வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்
வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில்
ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார்     3.2.2

610    
தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின்
நன்மைக் கண் நின்ற நலம் என்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும்
தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார்     3.2.3

611    
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம்
நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில்
தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டு
ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார்     3.2.4

612    
நள்ளர்களும் போற்றும் நன்மைத் துறையின் கண்
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள்
தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின்
உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான்     3.2.5

613    
மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள்
கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும்
பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து
உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான்     3.2.6

614    
தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின்
ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம்
மேனாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான்     3.2.7

615    
கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலை
மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்றப்
பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்று
எதிர் போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான்     3.2.8

616    
தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம்
கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று
வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என
மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான்     3.2.9

617    
வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்
பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு
பொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே
அங்கட் கடை நின்று அழைத்தான் ஒலி கேளா     3.2.10

618    
ஆர் கொல் பொர அழைத்தார்? என்றரி ஏற்றின் கிளர்ந்து
சேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு
போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்     3.2.11

619    
புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும்
விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார்
மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து
செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள்     3.2.12

620    
வந்தழைத்த மாற்றான் வயப் புலி போத்து அன்னார் முன்
நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால்
இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும்
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென்     3.2.13

621    
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து
சென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக்
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார்     3.2.14

622    
மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடு
மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன
வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர்
காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர்     3.2.15

623    
கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய
வாளொளி வட்ட முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர்
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன     3.2.16

624    
வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர்
செங்கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன     3.2.17

625    
வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில்     3.2.18

626    
குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின வீசியறு துடிகள் புரண்டன
இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை     3.2.19

627    
நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர்
தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட
ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும்     3.2.20

628    
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன்
நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர்
ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்     3.2.21

629    
பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட
விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட
உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர்     3.2.22

630    
அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு
படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில்
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி
புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன     3.2.23

631    
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர்
புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர்
விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்     3.2.24

632    
இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர்
வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த
தம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்பு
தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார்     3.2.25

633    
வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்ப
நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண்
எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர்
தஞ்சிரமும் தோளுரமும் தாளுரமும் தாந்துணித்தார்     3.2.26

634    
தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்
கொலைப் பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார்     3.2.27

635    
இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால்
தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு
மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு
அன்னவர் தம் முன் சென்று அதி சூரன் நேர் அடர்ந்தான்     3.2.28

636    
மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச்
சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து
பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப்
பொற்றடந் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான்     3.2.29

637    
போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்த
மான மிக மீதூர மண் படுவான் கண் படான்
ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே
ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான்     3.2.30

638    
கேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும்
நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து
வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக எனத்
தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான்     3.2.31

639    
இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்
அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து
கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தில்
வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார்     3.2.32

640    
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள்
பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து
மற்றவன் முன் சொல்லி வரக்குறித்தே அக் களத்தே
பற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார்     3.2.33

641    
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு 1
தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் 2
ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப்
பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான்     3.2.34

642    
வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி
உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு
வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு
புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்     3.2.35

643    
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து
நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி
சென்று கிடப்பளவுந் திண் பலகையான் மறைத்தே
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான்     3.2.36

644    
அடல் விடையேறு என்ன அடத்தவனைக் கொல்லும்
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர்
புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்கக்
கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார்     3.2.37

645    
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று     3.2.38

646    
கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார்     3.2.39

647    
அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்
இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார்     3.2.40

648    
மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப்
பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப்
பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்     3.2.41

649    
தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடைய
எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும்
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம்     3.2.42


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.