LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-16

3.03. கண்ணப்ப நாயனார் புராணம்



650    
மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு     3.3.1

651    
இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில்
நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும்     3.3.2

652    
குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்     3.3.3

653    
வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும்
புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்     3.3.4

654    
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்     3.3.5

655    
ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி
ஏறுடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும்     3.3.6

656    
மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்
பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான்     3.3.7

657    
பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான்
வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்     3.3.8

658    
அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப்
பெரும் புறம் அலையப் பூண்டான் பீலியும் குழையும் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வான்     3.3.9

659     
பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறே
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே
முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார்     3.3.10

660     
வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை     3.3.11

661     
பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு
எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன
மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே     3.3.12

662     
கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்
ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே
பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது     3.3.13

663     
கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும்
பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி
வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்
அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த     3.3.14

664     
அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம்
பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக்
கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை
பொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான்     3.3.15

665     
கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும்
இரும்புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி
அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற     3.3.16

666     
அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்
திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்
புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக்
கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே     3.3.17

667     
வரையுறை கடவுட் காப்பு மறகுடி மரபில் தங்கள்
புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த
அரை மணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்     3.3.18

668     
வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம்
திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார்     3.3.19

669     
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப்
பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க     3.3.20

670     
பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்க
காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில்     3.3.21

671     
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்
உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ் சொல்
வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்     3.3.22

672     
பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப்
பரிஉடைத் தந்தை கண்டு பைந்தழை கைக் கொண்டோ ச்ச
இரு சுடர்க் குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி     3.3.23

673     
துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப்
பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல்
அடிச் சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும்
குடிச் செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து     3.3.24

674     
அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்
வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும்
சினை மலர்க் காவுகள் ஆடி செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனை மருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி     3.3.25

675     
கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி
கொடு வரிக் குருளை செந்நாய் கொடுஞ் செவிச் சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து
இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண்ணிலாத     3.3.26

676    
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்
குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல்
புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச்
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார்     3.3.27

677     
தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால்
சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி
முந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான்     3.3.28

678     
வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று
ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு
மாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம்     3.3.29

679     
மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச்
சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார்     3.3.30

680     
. மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா எங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்து
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன்     3.3.31

681     
பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த
தேனலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் செய்தார்     3.3.32

682     
சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த
நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர்
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள்     3.3.33

683     
ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி
மெய் வரைத் தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்
கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச்
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர்     3.3.34

684     
செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு
அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள்     3.3.35

685     
அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்     3.3.36

686     
பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத் தோல் கட்டி கவடி மெய்க் கலன்கள் பூண்டார்
மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி
ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார்     3.3.37

687     
தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள்     3.3.38

688     
குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆட
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட
வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர்     3.3.39

689     
வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத்
தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள்     3.3.40

690     
பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்த
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக்
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம்     3.3.41

691     
வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்று
கண்ணகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல்
எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப்
புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர் அதன் பொலிவு போல்வார்     3.3.42

692     
இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில்
    இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
    மை வண்ண வரை நெடுந் தோள் நாகன் தானும் மலை எங்கும்
    வனம் எங்கும் வரம்பில் காலம்
    கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கண
    நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து
    மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின்
    பெரு முயற்சி மெலிவன் ஆனான்     3.3.43

693     
அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும்
    அடலேனம் புலி கரடி கடமை ஆமா
    வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள்
    மிக நெருங்கி மீதூர் காலைத்
    திங்கள் முறை வேட்டை வினை தாழ்தது என்று சிலை
    வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று
    தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல்
    நாகன் பால் சார்ந்து சொன்னார்     3.3.44

694    
சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து
    வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
    முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல்
    வேட்டையினில் முயல கில்லேன்
    என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கைக்
    கொண்மின் என்ற போதின்
    அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி
    இம் மாற்றம் அரைகின்றார்கள்     3.3.45

695     
இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது
    உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
    அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி
    வேறு உளதோ அதுவே அன்றி
    மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே
    பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
    வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை
    ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர்     3.3.46

696     
சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை
    முன் கொண்டுவரச் செப்பி விட்டு
    மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக்
    காடு பலி மகிழ்வு ஊட்ட
    தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என
    அங்குச் சார்ந்தோர் சென்று
    நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து
    விருப்பினோடும் கடிது வந்தாள்     3.3.47

697     
கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை
    மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
    மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து
    மனவு மணி வடமும் பூண்டு
    தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தாழைப்பீலி
    மரவுரி மேல் சார எய்திப்
    பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர்
    கோமானைப் போற்றி நின்றாள்     3.3.48

698     
நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி
    அன்னை நீ நிரப்பு நீங்கி
    நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன்
    எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
    மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை
    வளனும் வேண்டிற்று எல்லாம்
    அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி
    என் என்றாள் அணங்கு சார்ந்தாள்     3.3.49

699     
கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள்
    குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு
    பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை
    புகுகின்றான் அவனுக்கு என்றும்
    வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு
    புலங் கவர் வென்றி மேவு மாறு
    காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி
    ஊட்டு என்றான் கவலை இல்லான்     3.3.50

700     
மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து
    இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
    எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன்
    மைந்தன் திண்ணனான வெற்றி வரிச்
    சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான்
    என்று விரும்பி வாழ்த்திக்
    கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன
    குறைவின்றிக் கொண்டு போனாள்     3.3.51

701     
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார்
    சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள்
    மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி மணி நீல
    ஒன்று வந்தது என்னக்
    கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி
    தாதை கழல் வணங்கும் போதில்
    செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் புல்லிச்
    செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான்     3.3.52

702     
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன்
    மூப்பு எனை வந்து அடைந்தலினால் முன்புபோல
    என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி
    எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய்
    மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு
    எறிந்து மா வேட்டை ஆடி என்றும்
    உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடைய
    தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே     3.3.53

703     
தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள்
    குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
    வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட
    குறிப்பினால் மறாமை கொண்டு
    முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை
    உடை தோலும் வாங்கிக் கொண்டு
    சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத் திருத்
    தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான்     3.3.54

704     
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு
    பரித்து அதன் மேல் நலமே செய்து
    தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண்
    சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
    வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
    விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட
    இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என
    விடை கொடுத்தான் இயல்பில் நின்றான்     3.3.55

705     
செங்கண் வயக் கோளரியேறு அன்ன திண்மை
    திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
    வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை
    கொண்டு புறம் போந்து வேடரோடும்
    மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின்
    புலர் காலை வரிவிற் சாலைப்
    பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனை
    தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார்     3.3.56

706     
நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறி கொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொளப் பின்பு செய்து     3.3.57

707     
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்தி
மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்
மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக     3.3.58

708     
கண்டத்திடை வெண் கவடிக் கதிர் மாலை சேர
கொண்டக் கொடு பன் மணி கோத்திடை ஏனக் கோடு
துண்டப் பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க     3.3.59

709     
மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலைத் தாழத்
தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச்
சேர்விற் பொலி கங்கண மீது திகழ்த முன் கைக்
கார்விற் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி     3.3.60

710    
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்து
திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி
நிரையில் பொலி நீளுடை தோல்கரி கைப்புறம் சூழ்
விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி     3.3.61

711    
வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப் பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன்
சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி     3.3.62

712    
அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித்
துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப
வெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார்     3.3.63

713    
பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி
வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கு முன்றில்
சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார்     3.3.64

714    
மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில்
பானற்குல மாமலரில் படர் சோதியார் முன்
தேனற்றசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ள
கானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள்     3.3.65

715    
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி
உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள வல்ல
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள்     3.3.66

716    
அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச்
செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கிக் கைப் பற்றிய
திண் சிலை கார் மழை மேகம் என்ன
மெய்ப் பொற்புடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார்    3.3.67

717    
தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர்
வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார்
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார்
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே     3.3.68

718    
வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன்
சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய்
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம்     3.3.69

719    
போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்பச்
சார் வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முன்னே
கார் வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள்
வார் வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார்    3.3.70

720    
நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத்
தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக்
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்
எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார்     3.3.71

721    
கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம்
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே     3.3.72

722    
நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூட நேர்
வருங்கருஞ் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான்
பொருந் தடந் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெருங்
கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே     3.3.73

723    
தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம்
பன்றி வெம் மரைக் கணங்கள் ஆதியான பல் குலம்
துன்றி நின்ற என்றடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே
வன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார்    3.3.74

724    
ஓடி எறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பு எலாம்
நெடிய திண் வலைத் தொடக்கு நீளிடைப் பிணித்து நேர்
கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்
செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார்     3.3.75

725    
வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன்
மஞ்சலைக்கு மாமலை சரிப் புறத்து வந்த மா
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்
செஞ்சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர்     3.3.76

726    
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர்
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்
மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக்
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம்     3.3.77

727    
ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக் குலம்
கான மேதி யானை வெம் புலிக் கணங்கள் கான் மரை
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன்
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார்     3.3.78

728    
தாளறுவன் இடை துணிவன தலை துமிவன கலைமா
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா
நீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா
மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே     3.3.79

729    
வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்
செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனைப்
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்     3.3.80

730    
பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய்
முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன் அக்
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத்
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள்     3.3.81

731    
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்
குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே
பொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால்
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே     3.3.82

732    
நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான்
தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம்
வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையைக்
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே     3.3.83

733    
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால்
மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி     3.3.84

734    
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய்
நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர்
புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவுளவே     3.3.85

735    
துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார்
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்
அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர்     3.3.86

736    
இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக்
கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம்
பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி
மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில்     3.3.87

737    
போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு
ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்
ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்     3.3.88

738    
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்     3.3.89

739    
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடக் குரல் நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடித்
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்
சென்று அதனிடை நின்றது வலிது தெருமர நிரையில்     3.3.90

740    
அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்
கைத் தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி
மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர்     3.3.91

741    
வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார்     3.3.92

742    
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றி கொள் வேட்டைக் காடு குருகுவோம் மெல்ல என்றார்     3.3.93

743    
என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்
நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான்     3.3.94

744    
பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார்
செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை     3.3.95

745    
நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான்     3.3.96

746    
ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம்     3.3.97

747    
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும்
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார்     3.3.98

748    
ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு
வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி
ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார்     3.3.99

749    
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம்
களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு
குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்     3.3.100

750    
கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட
இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான்     3.3.101

751    
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன
அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும்     3.3.102

752    
நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சாரா அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர் படச் செல்லும் போதில்     3.3.103

753    
திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே
அம் கண்ணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார்     3.3.104

754    
மாகமார் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள
ஏக நாயகரைக் கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின்
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும்
மோகமாய் ஓடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்     3.3.105

755    
நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர்க் கண்ணீர் அருவி பாய
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படி இலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற     3.3.106

756    
வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல்
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்
இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார்     3.3.107

757    
கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப்
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்     3.3.108

758    
வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக்
குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி
ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன்பு அறைந்த தேர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்     3.3.109

759    
உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை
எண்ணிய இவைகொலாம் என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ்
அண்ணலைப் பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட     3.3.110

760    
இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே
இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை
இவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால
இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று     3.3.111

761    
போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆப் போல்வர்
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்     3.3.112

762    
ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன்
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று
சோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகி
வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார்     3.3.113

763    
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன்
பின்பு வந்து அணைய முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி
அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்
பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார்     3.3.114

764    
காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன்     3.3.115

765    
அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான்
இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்
நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான்     3.3.116

766    
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்
வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு     3.3.117

767    
கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார்     3.3.118

768    
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு
தரும் பரிசு உணரான் மற்றைத் தசை புறத்து எறியா நின்றான்     3.3.119

769    
தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல்
ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் கானில்
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார்     3.3.120

770    
கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த
தூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார்     3.3.121

771    
தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி
இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம்     3.3.122

772    
இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின்
முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்
வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார்     3.3.123

773    
தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி
மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை
இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து     3.3.124

774    
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு
அழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார்     3.3.125

775    
அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்     3.3.126

776    
அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி
மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார்     3.3.127

777    
சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார்     3.3.128

778    
கழை சொரி தரளக் குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத்
தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்
குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும்     3.3.129

779    
விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி
பொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும்
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும் எங்கும்     3.3.130

780    
செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்
ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை     3.3.131

781    
வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக்
கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர்
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி     3.3.132

782    
ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும்
வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே
ஊறுசெய் காலம் சிந்தித்து உருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார்     3.3.133

783    
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை
எய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்துக்
கை காட்டும் வான் போலக் கதிர் காட்டி எழும் போதில்     3.3.134

784    
எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார்     3.3.135

785    
வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார்     3.3.136

786    
மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்
தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து
போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்
ஆவதோ எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார்     3.3.137

787    
பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்
இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும்
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின்
விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார்     3.3.138

788    
பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்     3.3.139

789    
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர்த் திங்கள்
அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு
தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார்     3.3.140

790    
இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால்
மைவண்ணக் கருங் குஞ்சி வன வேடர் பெருமானார்
கைவண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச்
செய்வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன     3.3.141

791    
திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்
பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்று
ஒரு வழிச் சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி     3.3.142

792    
பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடுருவும்
அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள்
துயில் இடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து
வெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார்     3.3.143

793    
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல்
இட்டு அருகு தீக் கடை கோல் இரும் சுரிகை தனை உருவி
வெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால்
வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார்     3.3.144

794    
இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்
வெம் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள்
கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து     3.3.145

795    
வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்
ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டு
காய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சி
தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார்     3.3.146

796    
எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்
வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்தி
அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத்
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது     3.3.147

797    
நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி
கல்லையினிற் படைத்துத் தேன் பிழிந்து கலந்து கொண்டு
வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் உந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார்     3.3.148

798    
வந்து திருக் காளத்தி மலை ஏறி வனசரர்கள்
தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார்     3.3.149

799    
ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால்
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்
தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார்     3.3.150

800    
இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி
அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார்     3.3.151

801    
மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர்
தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித்
தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால்
ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுவாரால்     3.3.152

802    
நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு
பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக்
காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார்     3.3.153

803    
முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத்
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?     3.3.154

804    
அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப
மன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு
என்னுடைய நாயகனே இது செய்தார் தமைக் காணேன்
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என     3.3.155

805    
அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே
மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி
வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்
நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று     3.3.156

806    
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார்     3.3.157

807    
பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்
அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்
விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.     3.3.158

808    
உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்
பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால்
ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப்
பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம்.     3.3.159

809    
இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே
மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்
செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை
எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா     3.3.160

810    
வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்
நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
எய்யும்வரிச் சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய.     3.3.161

811    
மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்
இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும்
முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ
அன்பில்நினைந் தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல.     3.3.162

812    
உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்
எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்
மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து
புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போனார்     3.3.163

813    
கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப்
புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார்
மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகித்
துனை புரவித் தனித் தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற     3.3.164

814    
முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப்
பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து
மன்னு திருக் காளத்தி மலை ஏறி முன்பு போல்
பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார்     3.3.165

815    
கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம்
வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை
அருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகித்
தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை ஆடி     3.3.166

816    
மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார்     3.3.167

817    
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்
மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய
இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும்
அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில்     3.3.168

818    
அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார்     3.3.169

819    
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக்
கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார்     3.3.170

820    
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது
ஒழிந்திடக் காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்     3.3.171

821    
வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா
மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதி
ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ? அறியேன் என்று
நீளிருங் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார்     3.3.172

822    
வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும்
நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார     3.3.173

823    
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ?
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ?
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ?
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும்     3.3.174

824    
என் செய்தால் தீருமோதான்? எம்பிரான் திறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன் மொய் கழல் வேடர் என்றும்
மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப்
பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார்     3.3.175

825    
நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும்
இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெருக் கொண்டு எய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார்     3.3.176

826    
மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக்
கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டும்
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் செயல் என்று பார்ப்பார்
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார்     3.3.177

827    
இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண்
முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப     3.3.178

828    
நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்     3.3.179

829    
வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்
நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்     3.3.180

830    
கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று
புண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கி
மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்
உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று     3.3.181

831    
கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு
எண்ணுவர் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி
உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர்     3.3.182

832    
செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்ற     3.3.183

833    
கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும்
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப     3.3.184

834    
பேறினி இதன் மேல் உண்டோ ? பிரான் திருக் கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையை
ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில்
மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார்     3.3.185

835    
மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டே
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன்     3.3.186


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.