LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-33

5.07. நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்



1871    வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம் பணையும் செழும் நீர்த் தடமும் புடை உடைத்தாய்
பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால்
எய்தும் பெருமை எண் திசையும் ஏறூர் ஏமப் பேர் ஊரால்     5.7.1

1872     
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய்     5.7.2

1873     
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச் செய்ய
துணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன
புணர் வெண் புரி நூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல்
மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீமானுமால்     5.7.3

1874    
பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவ நெறி
ஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்து
அருமை புரிவார் நமி நந்தி அடிகள் என்பார் ஆயினார்     5.7.4

1875     
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத் தகுவார்
தூய்மைத் திரு நீற்று அடைவே மெய்ப் பொருள் என்று அறியும் துணிவினார்
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார்     5.7.5

1876    
அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல்
எவ்வூதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார்     5.7.6

1877     
செம் பொன் புற்றின் மாணிக்கச் செழும் சோதியை நேர் தொழுஞ் சீலம்
தம் பற்றாக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து
அம் பொன் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரன் நெறியின்
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உட்புக்கு வணங்க நண்ணினார்     5.7.7

1878    
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன்
அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார்     5.7.8

1879     
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியின் இடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்ன
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும்
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார்     5.7.9

1880     
கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்     5.7.10

1881     
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில்     5.7.11

1882    
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்     5.7.12

1883     
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்
நன்னீர் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி
அந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார்     5.7.13

1884     
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய     5.7.14

1885     
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரியக்
குறையும் தகளிகலுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணி உற்று ஒருப்பட்டார்     5.7.15

1886     
இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல்
விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு புலர் காலை
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார்     5.7.16

1887     
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டு
சிந்தை மகிழப் பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார்     5.7.17

1888     
பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுகத்
தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண்
குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர்     5.7.18

1889     
நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப்
பூத நாதர் புற்றிடங் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரி அணையின்
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம விதி விளங்க     5.7.19

1890     
வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம்
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும்
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார்     5.7.20

1891    
இன்ன பரிசு திருப் பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார்
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமி நந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய     5.7.21

1892     
தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருள
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம்
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார்     5.7.22

1893    
பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில் புகத்
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழ்கின்றார்     5.7.23

1894    
திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும் கடன் முறையால்
அங்கி தனை வேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று     5.7.24

1895     
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும் அதற்கு நீ
சீத நன்னீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் எனச் செப்பக்
காதலால் மனையார் தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார்     5.7.25

1896     
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ? அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண்     5.7.26

1897    
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள் தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார்     5.7.27

1898     
ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டு
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
நாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் அந் நகர் காண்பார்     5.7.28

1899     
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து கள்஢சிறந்தார்     5.7.29

1900     
படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்
அடியேன் பிழையைப் பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால்
குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார்     5.7.30

1901    
நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவே
வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப் புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்
பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்     5.7.31

1902     
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச் செய்து
நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார்     5.7.32



1903     
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி

நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம் படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறைப் புதல்வன் தன்னைப் புக்கு ஒளியூர்த்
தட்டா மரையின் மடுவின் கண் தனி மா முதலை வாய் நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே


திருச்சிற்றம்பலம்


திருநின்ற சருக்கம் முற்றிற்று.

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.