LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- முல்லைப்பாட்டு

விளக்க உரைக்குறிப்புகள்

    இம் முல்லைப்பாட்டிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் இப்பாட்டுச் சென்றவழியே உரை உரையாமல், தம் உரைக்கிணங்கப் பாட்டை இணக்குவான் புகுந்து தமக்கு வேண்டியவாறெல்லாஞ் சொற்களை அலைத்தெடுத்து ஓர் உரை எழுதுகின்றார். இங்ஙனம் எடுத்து உரை எழுதுவனவெல்லாம் 'மாட்டு' என்னும் இலக்கணமாமென அதனியல்பைப் பிறழ உணர்ந்து வழுவினா ரென்பதனை முன்னரே காட்டினாம்; ஆண்டுக் கண்டு கொள்க. இனி இங்கு அவர் உரையினை ஆங்காங்கு மறுத்துச் செய்யுட்பொருள் நெறிப் பட்டொழுகும் இயற்கை நன்முறை கடைப்பிடித்து, வேறொரு புத்துரை விளங்கும் வண்ணஞ் சில உரைக்குறிப்புக்கள் தருகின்றோம்.

    (1-6 அடிகள்) பெரிய கையிலே நீர் ஒழுக நிமிர்ந்த திருமாலைப்போல, உலகத்தை வளைத்துக் கடல்நீரைப் பருகி வலமாக எழுந்து மலைமுகடுகளில் தங்கி எழுந்த முகில் முதற்பெயலைப் பொழிந்த மாலைக்காலம் என்க.

    கரிய நிறம் பற்றியும், உலகமெல்லாம் வளைந்த தொழில் பற்றியும், நீர் ஒழுகா நிற்ப நிமிர்ந்தமை பற்றியுந் திருமாலை முகிலிற்கு உவமை கூறினார். மாவலி வார்த்த நீர் கைகளினின்று ஒழுகத் திருமால் நிமிர்ந்ததுபோல, நீரைச் சொரிந்து கொண்டே உயர்ந்த முகில் என்று உரைக்க.

    நனந்தலை - அகன்ற இடம். நேமி - சக்கரம். வலம்புரி பொறித்த - வலம்புரிச் சங்கை வைத்த; "வலம்புரி பொறித்த வண்கை மதவலி" என்றார் சீவகசிந்தாமணியிலும். 'மாதாங்கு' என்பதனை 'மால்' என்பதனொடு கூட்டித் 'திருமகளை மார்பில் தாங்கும் மால்' என்று பொருளுரைக்க. தடக்கை - பெரியகை; "தடவுங் கயவும் நளியும் பெருமை" தொல் - உரியியல். 24. பாடுஇமிழ் பனிக்கடல் - ஒலி முழங்குங் குளிர்ந்த கடல். கொடுஞ்செலவு - விரைந்து போதல். சிறுபுன்மாலை - பிரிந்தார்க்குத் துன்பம் விலைக்குஞ் சிறு பொழுதான மாலை.

    (7-11) ஊர்ப்பக்கத்தே போய் நெல்லும் மலருந் தூவிக் கையாற்றொழுது பெரிதுமுதிர்ந்த மகளிர் நற்சொற் கேட்டுநிற்ப என்க.

    அருங்கடி மூதூர் - பகைவர் அணுகுதற்கரிய காவல் அமைந்த பழைய ஊர். யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப - யாழின் நரம்பொலிபோல் ஒலிக்கும் ஓரினமான வண்டுகள் ஆரவாரிக்க; இவை தூவும் முல்லை மலற்றேனை நச்சி வந்தன. நாழிகொண்ட - நாழி என்னும் முகந்தளக்குங் கருவியின் உட்பெய்த. நறுவீ - நன்மணங் கமழும் மலர். முல்லை - முல்லைக்கொடி. அரும்பு அவிழ்அலரி - அரும்பு விரிந்த மலர். " நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்குஞ், செம்முது பெண்டிர்" என்றார் புறத்திலும், 280

    (12-17) அங்ஙனம் அவர் நிற்கின்றவளவிற் பசிய கன்றின் வருத்தம் மிக்க சுழலுதலை நோக்கிய ஓர் இடைப்பெண்: 'கோவலர் பின்னே நின்று செலுத்த உம்முடைய தாய்மார் இப்போதே வருகுவர்' என்று சொல்வோளுடைய நற்சொல்லைக் கேட்டனம் என்க.

    புதிது ஈன்ற கன்று ஆதலாற் 'பசலைக்கன்று' என்றார்; 'பசலை' பசுமை என்னும் பண்படியிற் பிறந்து குழவித் தன்மையை யுணர்த்திற்று, மிக இளைய கன்று என்றபடி; "பசலை நிலவின்" என்றார் புறத்திலும்(392); நச்சினார்க்கினியர் 'வருத்தத்த யுடைத்தாகிய கன்று' என்றது கூறியது கூறலாகும். உறு துயர் - பாலுண்ணாமையால் உற்ற துன்பம்.

    நடுங்கு சுவல்அசைத்த கையள் - குளிரால் நடுங்குந் தோள்களின் மேற் கட்டின கையளாய். கைய - கையிற் பிடித்த, கொடுங்கோல் - வருத்துகின்ற தாற்றுக்கோல். நன்னர் நன்மொழி - நன்றாகிய நல்லமொழி, நன்மைப் பொருளையுணர்த்தும் நன்னர் நல் என்னுஞ் சொற்கள் இருங்கு வந்தமை "ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்" என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாற்றானமக்கப்படும். (சொல், எச்சவியல், 64)

    (18) அதனாலும், நின் தலைவன், படைத்தலைவர் தாஞ் செல்லுமுன்னே நற்சொற் கேட்போர் கேட்டுவந்த நிமித்தச் சொற்களும் நன்றாயிருந்தனவாதலாலும் என்க.

    நல்லோர் - படையுள் நற்சொற்கேட்டதற் குரியோர். வாய்ப்புள் - வாயிற்பிறந்த நிமித்தச்சொல்.

    பெருமுது பெண்டிர் தாங்கேட்டுவந்த நற்சொற் கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துத், தலைமகன் சென்றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத்தினையும் உடன் எடுத்துக்காட்டி வற்புறுத்துகின்றார் என்பது இவ்வடியினால் இனிது பெறப்படுகின்றது. பகைவரது மண்கொள்ளச் செல்கின்ற வேந்தன் படைத்தலைவர் இங்ஙனம் ஒரு பாக்கத்திலே விட்டிருந்து விரிச்சி கேட்பரென்பது ஆசிரியர் தொல்காப்பியனாராற் சொல்லப்பட்டது. இப்பொருள் இவ்வடியினால் இனிது பெறப்படுவதாகவும், இதனை உணராத நச்சினார்க்கினியர் 18 ஆவது அடியிலுள்ள ' நல்லோர்' என்பதனை 7 ஆவது அடியிலுள்ள 'போகி' என்னும் வினையடு கூட்டி இடர்ப்பட்டும் இப் பொருளே கூறினார்; அங்ஙனம் இடர்ப்பட்டுக் கூட்டிப் பொருளுரைக்கும் வழிப், பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டபொருள் அவரால் உரையின்றி விடப்பட்டது. தலைமகன் குறித்துப்போன கார்ப்பருவ வரவினைக் கண்டு ஆற்றாளான தலைமகளை ஆற்றுவித்தற் பொருட்டுப் பெருமுது பெண்டிரும் விரிச்சி கேட்டுவந்து ஆற்றுவிக்கின்றார் என்பது நப்பூதனார் கருத்தாகலானும், மேலெடுத்துச் செல்லும் வேந்தன் படைத்தலைவர் மட்டுமே விரிச்சி கேட்டதற்கு உரியோர், ஏனையோர் உரியரல்லர் என்பது தொல்காப்பியனார்க்குக் கருத்தன் றாகலானும், யாங்கூறும் பொருளாற் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டலும் படைத்தலைவர் வாய்ப்புகளும் இனிது பெறப்படுவதாக அவர் உரையாற் படைத்தலைவர் கேட்ட நன்னிமித்தம் ஒன்றுமே வலிந்து கொள்ளப்படுதலானும் நச்சினார்க்கினியருரை போலியுரையா மென்று மறுக்க.

    (19-23) 'நின்றலைவன் பகைவர் இடமெல்லாந் திறைப்பொருளாகக் கவர்ந்து கொண்டு, இங்ஙனந் தான் எடுத்த போர்வினையை இனிது முடித்து விரைவில் வருதல் உண்மையேயாம்; மாயோய்! நீ நின் துயரத்தை விலக்கு' என்று அவர் வற்புறுப்பவுந் தலைமகள் ஆற்றாளாய்க் கலுழ்ச்சிமிக்குக் குவளைப்பூவின் இதழை ஒத்த கண்ணிலே முத்துமுத்தாய் நீர் துளிப்ப வருந்தி என்க.

    இனி, இங்கு இவ்வாறு உரை கூறுதலை நச்சினார்க்கினியர் மறுக்கின்றார். அவர் கூறிய மறுப்பின் பொருள் வருமாறு : - முல்லை என்பது கதலனைப் பிரிந்த காதலி அவன் வருந்துணையும் ஆற்றியிருக்கும் ஒழுக்கமாகும். நப்பூதனார் இதற்கு 'முல்லைப்பாட்டு' என்று பெயரமைத்தமையால் இதன்கண் அவ்வொழுக்கமே கூறப்படுதல் வேண்டும்; இதற்கு வேறாகத் தலைவி ஆற்றாமல் வருந்தினாள் என்றல் நெய்தல் என்னும் இரங்கல் ஒழுக்கமாம். ஆகலின், இவ் விரங்கல் ஒழுக்கம் போதரப் பொருளுரைத்தல் நூலாசிரியர் கருத்தொடு முரணுமாகலின் இப் பாட்டுக்கு நேரே பொருள் கூறுதலாகாது; என்று சொல்லிப் பொற்சரிகை பின்னிய நற்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத் தைத்து அவம்படுவார் போலச், செய்யுட் சொற்றொடர்களை ஒரு முறையுமின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டியவாறு சேர்த்துப் பின்னி உரை வரைகின்றார்.

    இனி, அவர் நிகழ்த்திய தடையினைப் போக்கியுரைக்கின்றாம். வேனிற்காலத் தொடக்கத்தில் தலைவன் தான் பிரியும்போது 'யான் கார்காலந் துவங்குதலும் மீண்டு வந்து நின்னுடன் இருப்பேன்; என் ஆருயிர்ப் பாவாய்! நீ அதுகாறும் நம் பிரிவாற்றாமையால் நிகழுந் துயரைப் பொறுத்திருத்தல் வேண்டும்' என்று கற்பித்தவண்ணமே, ஆற்றியிருந்த தலைமகள் அவன் குறித்த கார்ப்பருவம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பெரிதும் ஆற்றாளாயினள்; இ·துலக இயற்கை. இங்ஙனம் ஆற்றாளாகின்றமை கண்ட பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டு வந்து வற்புறுப்பவும் ஆற்றாது வருந்துந் தலைவி பின் ' நாம் இங்ஙனம் ஆற்றாமை வருந்துகின்றது கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும்' என்று நெடுக நினைந்து பார்த்து 'அவர் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலது.' என்று தன்னைத் தேற்றிக் கொண்டு கிடந்தாள் என்பது 82 ஆவது அடி முதல் நன்கெடுத்துக் கூறப்படுதலின், இப்பாட்டின்கண் முல்லை யழுக்கமே விளக்கமாகச் சொல்லப்பட்டதென்பது அறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக் கிடந்தது. அற்றன்று, முல்லையழுக்கமே பயின்று வரும் இப்பாட்டின்கட் "பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப" என்னும் இரங்கற்குரிய அழுகையினைக் கூறுதல் பொருந்தாதாம் பிறவெனின்; நன்று கடாயினாய், முன்னும் பின்னுமெல்லாம் முல்லையழுக்கமே தொடர்ந்து வரும் இச்செய்யுளின் அகத்து இடையே தோன்றிய அவ்விரங்கற் பொருள் பற்றி ஈண்டைக்கு வரக்கடவதாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவதூஉந் தொடர்ந்து அவ்விரங்கற்பொருள் வருமாயினன்றே அது குற்றமாம். அல்லதூஉங், குறிஞ்சி, பாலை, மருதம், முல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறுங்காலெல்லாம் இடைஇடையே தலைவி மாட்டு ஆற்றாமை தோன்றும் என்பதூஉம், அங்ஙனந் தோன்றும் அவ்வாற்றாமை எல்லாம் நெய்தல் ஒழுக்கமாதல் இல்லை என்பதூஉம் 'அகநானூறு', 'கலித்தொகை' முதலிய பண்டை நூல்களிலெல்லாங் காணக் கிடத்தலின், இம்முல்லைப்பாட்டினிடையே வந்த அவ்வடிபற்றி ஈண்டைக் காவதொரு குற்றமுமில்லையென விடுக்க. ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியளாயிருந்து கடலை நோக்கியுங் கானலை நோக்கியுந் தலைவி இரங்குதலும், பிறர் உள்வழி அவரோடு இரங்கிக் கூறுதலும், செய்தலொழுக்கமாம் என்பது தொல்லாசிரியர் நூலகளிற் காண்க 1 ஆற்றுவிப்பார் உள்வழி யெல்லாம் நிகழும் ஆற்றாமை 'னெய்தல்' ஆவதில்லை யாகலின், இப்பாட்டின் கண்ணுங் கணவன் கூறிய சொல்லும் பெருமுது பெண்டிரும் ஆற்றுவித்தற் காரணமாய் நிற்பத் தலைவிமாட்டுத் தோன்றிய ஆற்றாமை இடையே வைத்து மொழியப்பட்டதாகலின், இது நெய்தற் றிணையாதல் ஒரு சிறிதும் பொருந்தாமையின் நச்சினார்க்கினியர் நிகழ்த்திய மறுப்புப் போலியாமென்று ஒழிக.

    பருவரல் - துன்பம், துயரம், எவ்வம் - வருத்தம். மாயோள் - வெளிறித் தளுக்காக மிளிருங் கரியநிறம் உடையவள்; "மாயோள் முன்கை யாய்தொடி" என்னும் பொருநராற்றுப்படை யடியுரையிலும் இப்பொருளே காண்க. கலுழ்ச்சி - அழுகை. புலம்பு - தனிமை; அது தனித்தனியே இடையற்று விழுங் கண்ணீர்த் துளிமேல் நின்றது; இச்சொல் இப்பொருட்டாதல் "புலம்பே தனிமை" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறிக.

    (24-28) மேல் எடுத்துச் சென்ற வேந்தன் படைத்தலைவர் பகைப்புலத்திற்கு அரணாய் அமைந்த முல்லைக்காட்டிலே பிடவஞ்செடிகளையும் பசிய தூறுகளையும் அழித்து, அங்குள்ள வேடரின் காவற் கோட்டைகளையும் அழித்து, முள்ளாலே மதில் வளைத்து அகலமாய்ச் சமைத்த பாசறை என்க.

    இன்கே பகையரசன் பாடிவீட்டில் இருக்கும் இருப்பும், எடுத்துச் சென்ற வேந்தன் பாடிவீட்டில் இருக்கும் இருப்புமாக இரண்டு பாசறையமைப்பு இதன்கட் சொல்லப்பட்டதெனக்கொண்டு சில எழுதினாரும் உளர். நச்சினார்க்கினியர் உரையிலாதல் நப்பூதனார் பாட்டிலாதல் அங்ஙனம் இருவகைப் பாசறையிருப்புச் சொல்லப்பட்ட தில்லாமையால் அவர் கூறியது பொருந்தாவுரையாம் என்க.

    கான்யாறு தழீஇய அகல் நெடும்புறவு - காட்டியாறு சூழ்ந்த அகன்று நீண்ட முல்லைக்காடு. சேண்நாறு - நீளமணங்கமழும்; இவ் அடை மொழியைப் 'பைம்புதல்' என்பதனொடு கூட்டியுமுரைத்தல் ஆம். எருக்கி - அழித்து. புழை அருப்பம் - வாயில் அமைந்த கோட்டை, 'இடுமுட்புரிசை' முள் இடு புரிசை என மாற்றுக; காட்ட - காட்டின் கண் உள்ள, இது முள்ளுக்கு அடை; புரிசை - மதில். 'ஏமம்உறு' இடைக்குறைத்து ஏமுறு எனவாயின; ஏமம் - காவல். படுநீர்ப்புணரி - ஒலிக்கின்ற நீரையுடைய கடல்.

    (29-36) இப்பாசறையின் உள்ளுள்ள தெருக்களின் நாற்சந்தி கூடும் முற்றத்திற் காவலாக நின்ற மதயானை, கரும்பொடு கதிரும் நெருங்கக் கட்டிய அதிமதுரத் தழையினை உண்ணாமல், அவற்றால் தனது நெற்றியைத் துடைத்துக் கொம்பிலே தொங்கவிட்ட தன் புழைக்கையிலே கொண்டு நின்றதாகப் பாகர் பரிக்கோலினாற் குத்தி வடசொற்பல்காற் கூறிக் கவளம் ஊட்ட என்க.

    உவலைக் கூரை - தழைகள் வேய்ந்த கூரை ; பாடி வீட்டில் மறவர் இருத்தற்காக அறை அறையாக வகுத்து மேலே தழைகள் வேய்ந்திடப்பட்ட கூரைகள் இவை. ஒழுகிய தெரு - இங்ஙனம் வகுக்கப்பட்ட கூரைகள் ஒழுங்காக இருக்கும் தெருக்கள். கவலை - நாற்சந்தி கூடும் இடம். பாடியினுட் புகுவார் இவ்விடத்திலுள்ள முற்றத்தின்கண் வந்தே பாசறையிலுள்ள தெருக்களுக்குப் போகல் வேண்டுதலின், இங்கே யானை காவலாக நிறுத்தப்பட்டது. தேம்படு கவுள - மதநீர் ஒழுகுங் கன்னத்தினையுடைய. ஓங்குநிலைக் கரும்பு - உயர்ந்து வளர்ந்து நிற்றலையுடைய கரும்பு. கதிர் மிடைந்து யாத்த - நெற்கதிர்களை நெருங்கப் பொதிந்து கட்டிய. வயல் விளை - வயலில் விளைந்த. இன்குளகு - அதிமதுரத் தழை. அயில்நுனை - கூரிய முனை. கவைமுள் கருவி - கவர்த்த அல்லது பிளப்பான முள்ளுள்ள பரிக்கோல். கல்லா இளைஞர் - யானை பழக்குஞ் சொற்களையன்றி வேறு வடசொற்களைக் கல்லாத இளைஞர். கைப்ப - ஊட்ட.

    (37-44) துறவோன் தனது முக்கோலை நாட்டி அதன்கட் காவியுடையைத் தொங்கவிட்டு வைத்தாற்போலப், போரிற் பின்னிடாமைக்கு ஏதுவான வலிய வில்லில் தூணியைத் தொங்கவிட்டுப் பின் அவ்விற்களை யெல்லாம் படங்குக்காக ஊன்றிப், பின்னர் அவை தம்மை யெல்லாங் கயிற்றால் வளைத்துக் கட்டிச் செய்த இருக்கையிற் குந்தங்கோல்களை நட்டு, அவற்றொடு படல்களை வரிசையாகப் பிணைத்து, இவ்வாறு இயற்றிய வளைந்த வில்லாலான அரணமே தமக்குக் காவலிடமாக அமைந்த வேறுவேறான பல்பெரும் படைகளின் நடுவில், நீண்ட குத்துக் கோல்களோடு சேர்த்துச் செய்த பலநிறம் வாய்ந்த மதிட்டிரையை வளைத்து வேறோர் உள்வீடு அரசனுக்கு என்று எல்லோரும் உடன்பட்டுச் செய்து என்க.

    கல் - காவிக்கல். கல்தோய்த்து உடுத்த - துகிலைக் காவிக்கற் சாயத்தில் தோய்த்து. படிவம் - தவவேடம்; "பல்புகழ் நிறுத்த படிமையோனே" என்னும் பனம்பாரனார் பாயிரச் செய்யுளிலும் இச்சொல் இப்பொருட்டாதல் காண்க. அசைநிலை - தங்க வைத்த தன்மை; என்றது காவியுடையை. கடுப்ப - ஒப்ப; இச்சொல் மெய்உவமத்தின் கண் வருமென்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். தூணி நாற்றி - அம்பறாப் புட்டிலைத் தொங்கவிட்டு. கூடம், கூடாரம், படங்கு என்பன ஒருபொருட் கிளவிகள். பூந்தலைக் குந்தம் - பூச்செதுக்கின தலையையுடைய கைவேல். கிடுகு - படல். நிரைத்து - வரிசையாக வைத்து. நாப்பண் - நடு. காழ் - கம்பு; கோல். கண்டம் - கூறு, கூறுபட்ட பல நிறத்தினையுடைய திரையை உணர்த்தியது ஆகுபெயரால்: " நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த" என்றார் சிலப்பதிகாரத்திலும்2.

    (45-49) வாளினைத் தமது கச்சிலே சேரக் கட்டின மங்கையர் பாவையின் கையிலுள்ள விளக்குகள் கெடுந்தோறுந் திரிக் குழாயினால் திரியைக் கொளுத்தி அவற்றைக் கொளுத்த என்க.

    இதற்கு இவ்வாறன்றி மங்கையர் கையிலுள்ள விளக்கினைத் திரிக்குழாயையுடைய சிற்றாட்கள் கொளுத்த என்னுரைப்பின், 'மங்கையர்' என்னுஞ்சொல் தழுவும் வினையின்றி நின்று வற்றுமாகலின் அப்பொருள் பொருந்தாதென்க.

    தொடி - கைவளை; இப்பொருட்டாதல் "கங்கணங் கைவளை யருபலந் தொடியே" என்னும் பிங்கலந்தையிற் காண்க. புறம் - முதுகு. கூந்தல் அம் சிறுபுறத்து - கூந்தல் கிடக்கும் அழகிய சிறிய முதுகினையுடைய, என்று மங்கையர்க்கு அடையாக்குக. இரவைப் பகலாக்கும் வலிய பிடியமைந்த ஒளியுடைய வாள். விரவு - கலந்த, சேர்ந்த; 'விரவ' எனத்திரிக்க. வரிக்கச்சு - வரிந்து கட்டப்பட்ட இரவிக்கை; 'வரி' - நிறம் எனினுமாம். நிறத்தினையுடைய கச்சு என்க. குறுந்தொடியணிந்த முன்கையினையுங் கூந்தலசைந்து கிடக்குஞ் சிறு புறத்தினையுடைய மங்கையர், வாள் விரவ வரிந்து கட்டின கச்சையணிந்த மங்கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக. நெய் உமிழ் சுரை - நெய்யை ஒழுக விடுந் திரிக்குழாய். நந்து தொறும் - கெடுந்தோறும்.

    (50-54) மணியினோசையும் அடங்கிய நள்ளிரவில், அசையும் மோசி மல்லிகைக்கொடி யேறிய சிறு தூறுகள் துவலையடு வந்து அசையுங் காற்றினால் அசைந்தாற் போலத், தூக்க மயக்கத்தால் அசைதலையுடைய மெய்காப்பாளர் காவலாகச் சுற்றித் திரியவென்க.

    நெடுநா வெண்மணி - நீண்ட நாக்கினையுடைய வெள்ளிய மணி, நிழத்திய - நுணிகிய; அ·தாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணுக்கப் பொருளையுணர்த்துதல் ''ஓய்தல் ஆய்தல் நிகழ்த்தல் சாஅய், ஆவயின் நான்கும் நுணுக்கப் பொருள" என்னுந் தொல்காப்பிய உரியியற் சூத்திரத்திற் காண்க. இனி 'நிழற்றல்' எனப் பாடமோதுவாருமுளர்; 'நிழற்றல்' ஒளிவிடுதலெனப் பொருடரும் பிறிதொரு சொல்லாதலின் அ·தீண்டைக்குப் பொருந்தாது; அற்றேல், திவாகரத்தில் ''நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலு மாகும்" என்று அ·து இரு பொருளும் உடைத்தாக ஓதப்பட்டவாறென்னையெனின்; அது காப்பியத்தொடு முரணுவதாகலிற் கொள்ளற்பாலதன்றென மறுக்க. என்றது குதிரையானை என்றற் றொடக்கத்தனவும் உறங்குதலின், அவற்றின் கழுத்திற் கட்டிய மணியோசையும் அடங்கினமை கூறிற்று; இனிப் பாடிவீட்டின்கண் எல்லாருந் தொழிலவிதற்குத் திரிகுறியாக அடித்துவிட்ட மணியென்றுரைப்பினும் அமையும். 'பூத்த ஆடு அதிரற்கொடி' எனச் சொற்களை மாற்றிக் கூட்டுக. படார் - சிறுதூறு. சிதர் - திவலை. துகில்முடித்துப் போர்த்த - கூறையால் மயிரை முடித்து உடம்பையும் போர்த்துக் கொண்ட; இச் சொற்றொடர் மெய்காப்பாளர்க்கு அடையாய் நின்றது; "மீப்பால் வெண்டுகில் போர்க்குநர் பூப்பால், வெண்டுகில் சூழ்ப்பக் குழன் முறுக்குநர்" என்னும் பரிபாடற் பத்தாஞ் செய்யுளடிகள் ஈண்டு ஒப்பிடற்பாலன. ஓங்குநடைப் பெருமூதாளர் - உயர்ந்த நல்லொழுக்கத்தினை யுடைய மெய்காப்பாளர்; தம் அரசர்க்குப் பகையாவார் செய்யுங் கீழறுத்தல்களுக்கு இடங் கொடாது தம் அரசர் மாட்டு மெய்யழுக்க முடையராதல் பற்றி 'ஓங்குநடை' யுடையரெனச் சிறந்தெடுத்துக் கூறினார்; 'பெருமூதாளர்' என்பது பெரிது முதிர்ந்த காவலாளர் எனப் பொருடருதலின், ஏனைக் காவற்றொழிலிலெல்லாங் கடமை வழாது மெய்ப்பட ஒழுகி முதிர்ந்தார் தம்மையே பின்னர் மெய்காப்பாளராக வைப்பரென்பதூஉம் பெற்றாம்.

    (55-58) பொழுதினை இத்துணையென்று வரம்பறுத்து உணரும் பொழுதறி மக்கள், அரசனைத் தொழுது கொண்டே காணுங்கையினராய், விளங்க வாழ்த்தி 'நிலவுலகத்தை வென்று கைப்பற்றுதற்குச் செல்வோனே! நினது கடாரத்திலே இட்ட சிறிய நீருள்ள நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இவ்வளவு' என்று சொல்ல வென்க.

    தம் அரசர்க்குப் பகைவரானோர் செய்யுங் கீழறுத்தலுக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக் கூறுவார் போலாது, என்றுந் தம் அரசர்பால் நெகிழா மெய்யன்பு பூண்டு பொழுதினைப் பொய்த்தலின்றி அறிவிப்பார் இவர் என்பது புலப்படப் 'பொய்யா மாக்கள்' என்றும், பொழுதளந்தறியுந் தொழிலன்றிப் பிறிது அறியாமையின் இவரை மக்கள் என்னாது மாக்கள் என்றுங் கூறினார். இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் பொழுதறியும் வினையாளர் என்று நேரே பொருள்படும் இச்சொற்றொடரை 'மாக்கள் பொழுதளந்தறியும் பொய்யாக் காண்கையர்' எனப் பிறழ்த்தியதன் மேலும் ஈண்டைக்கோர் இயைபின்றியும் உரைத்தார். எறிநீர் வையகம் - வீசுகின்ற கடல் நீராற் சூழப்பட்ட நிலவுலகம். குறுநீர் - சிறிய நீர்; இது நாழிகை வட்டிலினுட் கசிந்த நீர். 'குறுநீர்' என்பதற்கு நாழிகை வட்டில் என்று குறிப்பு எழுதினாருமுளர்; அப்பொருள் நச்சினார்க்கினிய ருரையிலாதல் மற்றை நூல்களிலாதல் பெறப்படாமையால் அது பொருந்தாதென விடுக்க. கன்னல் - நாழிகைவட்டில்; இ·திப் பொருட்டாதல் "கன்னலுங் கிண்ணமும் நாழிகை வட்டில்" என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்திற் காண்க. "குறுநீர்க் கன்னலின், யாமங் கொள்பவர்" என்றார் மணிமேகலையிலும் (7, 64-65). ஒரு கடாரத்திலே நீரை நிரப்பி, அடியிற் சிறு தொளையுள்ள ஒரு வட்டிலை இட்டாற் கடாரத்து நீர் அப் புழைவழியே வட்டிலினுள் ஊறும்; அங்ஙனம் ஊறும் நீரினளவுக்குத் தக நாழிகை கணக்கிடுவர். பொழுது இனைத்து என்று பொழுது அவாய் நிலையான் வந்தது.

    (59-66) உடையினையும் மெய்ப்பையினையுந் தோற்றத்தினையும் யாக்கையினையுமுடைய யவனர், புலிச் சங்கிலி விட்டுக் கைசெய்த இல்லில் அழகிய மணிவிளக்கினை ஒளிரவைத்து வலிய கயிற்றிற் சுருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளன்றுமாக இரண்டறை வகுத்த பள்ளியறையுட் புறவறையின்கண்ணே சட்டையிட்ட ஊமை மிலேச்சர் அருகே காவலிருப்பரென்க.

    மத்திகை - சவுக்கு, குதிரைச் சம்மட்டி. மத்திகை வளை இயஉடை - குதிரைச்சம்மட்டி சூழப்பட்ட உடை; மறிந்து வீங்கு செறிவுஉடை - மடங்கிப் புடைக்க நெருங்குதலுறக் கட்டின உடை. மெய்ப்பை - சட்டை. வெருவருந் தோற்றம் - காண்பார்க்கு அச்சம் வருவதற்கேதுவான தோற்றம். வலிபுணர்யாக்கை - வலிமைகூடிய உடம்பு. யவனர் - கிரேக்கர், சோனகர்( Ionians). மணிவிளக்கம் - பளிங்கு விளக்கு; மணிபோதலிற் பளிங்கும் மணி எனப்பட்டது; "மணியிற் றிகழ்தரு" என்பதற்குப் பரிமேலழகரும் 'பளிக்கு மணி' என்று பொருளுரைத்தார். திருக்குறள் 1273. எழினி - திரை. 'உடம்பின் உரைக்கும் நாவினுரையா' என மாறி உடம்பாற் குறிகாட்டித் தெரிவித்தலன்றி நாவால் உரைக்க மாட்டாத என்க. மிலேச்சர் - ஆரியர், பெலுச்சிதானத்தினின்று வந்த துருக்கர்; 'பெலுச்சி' என்பது மிலேச்சர் எனத் திரிந்தது; பெலுச்சிதானத்தின் வழியாகப் பரத நாட்டினுட் புகுந்தமை பற்றியே பண்டைக் காலத்தில் ஆரியர் தமிழரால் மிலேச்சரென அழைக்கப்பட்டனர். திவாகரத்திலும் "மிலேச்சர் ஆரியர்" எனப் போந்தமை காண்க.

    (67-79) பள்ளியறையின் அகத்தே சென்ற அரசன் நாளைக்குச் செய்யும் மிக்க போரினை விரும்புதலாலே உறக்கங் கொள்ளானாய், முன்னாட்களிற் பகைவர் வீசிய வேல் நுழைந்தமையாற் புண்மிக்குப் பெட்டை யானைகளையும் மறந்த களிற்றியானைகளையும், யானைகளின் பரிய தும்பிக்கை அற்றுவிழத் தாம் அணிந்த வஞ்சிமாலைக்கு நல்வெற்றியினைச் செவ்விதாக்கிச் செஞ்சோற்றுக் கடன் தப்பாமற் கழித்து இறந்த மறவரையும் நினைந்துங், காவலாயிட்ட தோற்பரிசையினையும் அறுத்துக் கொண்டு அப்புகள் அழுந்தினமையாற் செவியைச் சாய்த்துக் கொண்டு தீனி எடாமல் வருந்துங் குதிரைகளை நினைந்தும் ஒரு கையினைப் படுக்கையின் மேல் வைத்து மற்றொரு கையால் முடியைத் தாங்கியும் நீளச் சிந்தித்து இரங்கி இங்ஙனமெல்லாம் அவ்விரவைக் கழித்துப் பின்னாளிற் பகைவரைக் குறித்துப் படைக்கலங்கள் எடுத்த தன் வலிய விரலாலே அவர் தம்மையெல்லாம் வென்றமையின் தான் அணிந்த வஞ்சிமாலைக்கும் நல்வெற்றியினை நிலைநிறுத்திப், பின்னாளில் தன் மனைவியைக் காணும் மகிழ்ச்சியாற் பாசறையில் இனிய துயில் கொள்கின்றான் என்க.

    'மண்டு' என்பதனை அமர் என்பதனோடாதல் நசையென்பதனோடாதல் கூட்டி மிக்குச் செல்லும் போர், மிக்குச் செல்லும் நசை என்க. பாம்பு பதைப்பு அன்ன - அடியுண்ட பாம்பின் துடிப்பை யத்த ; இது வெட்டுண்டு விழுந்து துடிக்கும் யானைத் தும்பிக்கைக்கு உவமம். தேம்பாய் கண்ணி - தேன் ஒழுகும் வஞ்சிமாலை. சோறு வாய்த்தல் - செஞ்சோற்றுக்கடன் தப்பாமற் கழித்தல்; இதனைச் 'சிறந்ததிதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப" என்னும் புறப்பொருள் வெண்பா மாலை யுரையிலுங் காண்க. கடகம் - கங்கணம், தொடி, வளை; இவ் அணிகலன் ஆண்மக்களும் அணிதலுண்டென்பது 'கண்ணெரி தவழ அவ்ண்கை மணிநகு கடகம் எற்றா" என்னுஞ் சீவக சிந்தாமணிச் செய்யுளிலுங் காண்க. கையைத் தலைக்கு அணையாக வைத்தலிற் கையில் அணிந்த கடகத்தை முடியிற் சேர்த்தி என்றார். நகைதாழ் கண்ணி - ஒளி தங்கு மாலை, என்றது தனக்குண்டாம் ஒளி தங்குதற்கு அடையாளமாய் இட்ட வஞ்சி மாலையை. அரசு இருந்து பனிகும் முரசு முழங்கு பாசறை என்க. பனிக்கும் - நடுங்கும்.

    (80-103) பொழிப்புரை பொருட்பாகுபாட்டில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது. ஆண்டுக் காண்க.

    நிறைதபு புலம்பு - நிறை கெடுதற்கு ஏதுவான தனிமை. "நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை" என்றார் கலியிலும். ஏஉறுமஞ்ஞை - அம்பு தைத்த மயில், இது மயிலின் சாயலினையுடைய தலைமகள் நடுக்கத்திற்கு உவமையாயிற்று. இடம் சிறந்து உயரிய - இடம் அகன்று சிறந்து உயர்ந்த. பாவை - வெண்கலத்தாற் செய்த பிரதிமை; இதன் கையில் விளக்கெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். முடங்கு இறை - கூடல்வாய்; கூரையின் இருபகுதிகள் ஒன்று பொருந்தும் மூட்டுவாய். மாத்திரள் அருவி - பெரிது திரண்டு விழும் அருவிநீர். இன்பல் இமிழ் இசை - இனியவாய்ப் பலவகையாய் ஒலிக்கின்ற ஓசை. ஓர்ப்பனள் கிடந்தோள் - செவியிற் கேட்பவளாய்க் கிடந்த தலைவியின். அம்செவி நிறைய ஆலின - உட்செவி நிரம்ப ஒலித்தன. பிறர் வேண்டுபுலம் - பகைவர் விரும்பிய நிலங்கள். வயிர் - ஊதுகொம்பு. வலன் நேர்பு ஆர்ப்ப - எய்திய வெற்றிக்கு ஒத்து ஒலிப்ப. அயிர - நுண்மணலிடத்த; மணன்மேன் வளர்தலின் 'அயிரகாயா' என்றார். அஞ்சனம் - மை; மைந்நிறமுடைய பூவுக்கு ஆகுபெயர். பொன்கால - பொன் நிறமான பூவைத் தர. முறிஇணர் - தளிருங் கொத்தும். தோடுஆர் - இதழ் நிறைந்த; 'தொகுதி நிறைந்த' என உரைப்பினுமாம். கானம் நந்திய செந்நிலப் பெருவழி - காடு செழித்த செவ்விய முல்லை நிலத்தின் வழியிலே. வானம் வாய்த்த - வேண்டும் பருவத்து மழை பெய்யப்பெற்ற. வாங்கு கதிர்வரகு - வளைந்த கதிரினையுடைய வரகு. திரிமறுப்பு இரலை - முறுக்குண்ட கொம்பினை யடைய புல்வாய்க் கலைகள். எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்கள் - இனிமேற் பெய்தற்காகச் செல்லும் வெண்புயல் மழையைப் பொழிதற்குரிய கார்காலந் தொடங்கும் ஆவணித் திங்கள் முதலில்; இதற்கு நச்சினார்க்கினியர் முன் பனிக்காலம் என்று பொருள் கொண்டு இப்பாட்டின் பொருளுக்குச் சிறிதும் இணங்காதவாறு உரை கூறினார். பிறக்கு - பின். துனைபரி துரக்கும் - விரைந்து செல்லுங் குதிரையை மேலுந் தூண்டிச் செலுத்தும். வினை விளங்கு - போர்வினைக்கண் தமதுதிறம் மிக்கு விளங்கும், என்றது தலைமகனது தேரிற்பூட்டிய குதிரைகளை.

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.