|
||||||||
சர்வதேச விண்வெளி நிலையத்தைச் செயல் இழக்கச் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் - நாசா அறிவிப்பு |
||||||||
![]()
சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்த சர்வதேச விண்வெளி நிலையம், 2031ஆம் ஆண்டில் தனது பணியை நிறைவு செய்கிறது.
பூமியிலிருந்து சுமார் 400 - 415கி.மீ உயரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம், 109 மீட்டர் நீளம் (ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு) மற்றும் நான்கு லட்சம் கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டது. இது 1998 முதல் 2011 வரை கட்டமைக்கப்பட்டது.
நாற்பதுக்கும் அதிகமான விண்வெளித் திட்டங்கள் மூலம் பூமியிலிருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, அவை விண்வெளியில் ஒன்று சேர்க்கப்பட்டன.
விண்வெளி நிலையம் பூமியின் தாழ் வட்டப்பாதையில் (Low earth orbit - பூமியிலிருந்து 160-2000 கிமீ வரையிலான உயரம்), அதுவும் பூமியின் மேற்பரப்பிலிருந்து வெறும் 415 கி.மீ உயரத்தில் சுற்றி வருகிறது. மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்குச் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது.
இத்தகைய வேகத்தில் சுற்றும் ஒரு பிரமாண்டக் கட்டமைப்பு திடீரெனக் கட்டுப்பாடின்றி, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்வதே அச்சமூட்டுவதாக இருக்கும்.
ஆனால், அப்படி ஓர் ஆபத்தான சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே 2031-ல், சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்த நாசா முடிவு செய்துள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து கூட்டாக உருவாக்கிய இந்த விண்வெளி நிலையம் தொடக்கத்தில் 15 ஆண்டுகள் செயல்படுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது.
இருப்பினும் அதன் தொடர்ச்சியான வெற்றி காரணமாக, விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகத்தில் இந்த விண்வெளி நிலையத்தின் ஆயுளை 2030 வரை நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அதே ஆண்டில் இந்த விண்வெளி நிலையம் தொடர்பாக ரஷ்யாவிலிருந்து ஓர் எச்சரிக்கை வெளியானது. காலாவதியான கருவிகள், வன்பொருள்கள் காரணமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சரிசெய்ய முடியாத கோளாறுகள் ஏற்படலாம் என்பதே அந்த எச்சரிக்கை.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பகுதியில் உள்ள கருவி அமைப்புகளில் 80 சதவீதம் காலாவதியானவை என்றும், இது தவிர, சிறிய விரிசல்கள் தென்படுவதாகவும் அது காலப்போக்கில் பெரிதாகலாம் என்றும் ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் விண்வெளி வீரர் விளாதிமிர் சோலோவ்யோவ் தெரிவித்தார்.
"சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சுற்றுப்பாதையிலிருந்து அகற்றுவதற்கான பணிகளைத் தொடங்க வேண்டிய நேரம் இது. எந்தக் காரணத்திற்காக அது நிறுவப்பட்டதோ, அது பூர்த்தியாகிவிட்டது. இனி நாம் செவ்வாய்க் கோளில் கவனம் செலுத்துவோம்" என்று எலான் மஸ்க்கும் கூறியிருந்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தைச் செயலிழக்கச் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நாசா கூறுகிறது. அதன் முதல்கட்டமாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையானது வளிமண்டல இழுவையின்கீழ் தானாகச் சிதைவதற்கு அனுமதிக்கப்படும். அதாவது 'ரீ-பூஸ்ட்' செயல்முறை குறைக்கப்படும்.
அதன் பிறகு விண்வெளி நிலையத்தின் உயரம் 280 கிலோமீட்டராகக் குறைக்கப்படும்.
பின்னர் பிரத்தியேக விண்கலத்தின் உதவியுடன் அதன் தூரத்தை 120 கிலோமீட்டராகக் குறைக்கும் வகையில் இறுதி உந்துதல் அளிக்கப்படும்.
இந்த முயற்சிகள் திட்டமிட்டபடி வெற்றியடையும் பட்சத்தில், பூமியிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவைச் சர்வதேச விண்வெளி நிலையம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிலையம் 120 கிலோமீட்டர் தொலைவை அடைந்தால், அப்போது பூமியின் வளிமண்டலத்தை அது மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அதிபயங்கர வேகத்தில் தாக்கும்.
ஆனால், வளிமண்டல மறு நுழைவின்போது அதீத வெப்பத்தின் காரணமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிடும். மீதமுள்ள பாகங்கள் பசிபிக் பெருங்கடலின் 'பாயின்ட் நீமோ' எனும் பகுதியில் விழும். அது மக்கள் வாழும் பகுதி இல்லை என்பதாலும், வழக்கமாகத் தேவையற்ற விண்கலங்கள் இங்கு விழும் என்பதாலும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாசா கூறுகிறது.
இவ்வாறு சர்வதேச விண்வெளி நிலையத்தை, செயலிழக்கச் செய்து அழிக்க, எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாசா தேர்வு செய்தது. அதற்காக அந்த நிறுவனத்துடன் 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஏழாயிரம் கோடி) மதிப்புள்ள ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.
|
||||||||
by hemavathi on 21 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|