LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
-

யூதா திருமுகம்

1-ம் அதிகாரம்

யூதா. 1:1 தந்தையாம் கடவுளால் அழைக்கப்பெற்று அவரது அன்பிலும் இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பிலும் வாழ்வோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் யாக்கோபின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது:

யூதா. 1:2 இரக்கமும் அமைதியும் அன்பும் உங்களில் பெருகுக.

யூதா. 1:3 அன்பார்ந்தவர்களே, நம்மெல்லாருக்கும் கிடைத்துள்ள பொதுவான மீட்பைக் குறித்து உங்களுக்கு நான் எழுத மிகவும் ஆர்வமாய் இருந்தேன். ஆனால் எல்லாக் காலத்துக்குமென இறைமக்களிடம் ஒப்படைக்கப்பட்ட விசுவாசத்துக்காகப் போராடும் படி உங்களை ஊக்குவிக்க இதை எழுதும் தேவை ஏற்பட்டுள்ளது.

யூதா. 1:4 ஏனெனில், திருட்டுத்தனமாகச் சிலர் உங்களிடையே புகுந்ததுள்ளனர். இவர்கள் தண்டனைக்குள்ளாகவேண்டுமென்று முன்னரே எழுதப்பட்டள்ளது. இறைப்பற்றில்லாத இவர்கள் நம்முடைய கடவுளின் அருளைத் தங்கள் காமவெறிக்கு ஏற்பத் திரித்துக் கூறுகிறார்கள். நம் ஒரே தலைவரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கின்றார்கள்.

யூதா. 1:5 நீங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள். ஆயினும் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன். ஆண்டவர் எகிப்து நாட்டிலிருந்து மக்களை ஒரேமுறையாக விடுவித்தாரெனினும், தம்மை நம்பாதவர்களைப் பின்னர் அழித்து விட்டார்.

யூதா. 1:6 சில வானதூதர்கள் தங்கள் ஆளும் அதிகாரத்தைக் காத்துக்கொள்ளாமல், தங்கள் உறைவிடத்தைத் துறந்துவிட்டார்கள். என்றும் கட்டப்பட்டவர்களாய் அவர்களைக் கடவுள் மாபெரும் தீர்ப்புநாளுக்காகக் காரிருளில் வைத்திருக்கிறார்.

யூதா. 1:7 அவர்களைப்போலவே, சோதோம், கொமோரா அவற்றின் சுற்றுப்புற நகரங்கள் ஆகியவற்றின் மக்கள் பரத்தைமையிலும் இயற்கைக்கு மாறாக சிற்றின்பத்திலும் மூழ்கியிருந்தார்கள். ஆகவே அவர்கள் என்றும் அணையாத நெருப்பில் தண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் நமக்கொரு பாடமாய் உள்ளார்கள்.

யூதா. 1:8 இருப்பினும் இப்பொய்க் காட்சியாளர்களும் அவ்வாறே உடலை மாசுபடுத்துகிறார்கள்: அதிகாரத்தைப் புறக்கணிக்கிறார்கள்: மாட்சிமிகு வானவரைப் பழித்துரைக்கிறார்கள்.

யூதா. 1:9 தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, ' ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக ' என்று மட்டும் சொன்னார்.

யூதா. 1:10 ஆனால் இவர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றையும் பழிக்கிறார்கள். பகுத்தறிவில்லாத விலங்குகளைப்போல் இயல்புணர்ச்சியினால் இவர்கள் அறிந்திருப்பதும் இவர்களுக்கு அழிவையே விளைவிக்கும்.

யூதா. 1:11 இவர்களுக்குக் கேடு விளைக. ஏனெனில் இவர்கள் காயின் சென்ற வழியில் சென்றார்கள்: கூலிக்காகப் பிலயாமின் தவற்றைத் துணிந்து செய்தார்கள்: கோராகைப் போல எதிர்த்து நின்று அழிந்தார்கள்.

யூதா. 1:12 இவர்கள் அச்சமின்றி உங்கள் அன்பின் விருந்துகளில் கூடி உண்டு அவற்றைக் கறைப்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் நலனில் மட்டுமே கருத்தாய் இருப்பவர்கள்: காற்றால் அடித்துச் செல்லப்படும் நீரற்ற மேகங்கள்: கனிதரும் காலத்தில் கனி தராமல், பின்னர் வேரொடு பிடுங்கப்படும் மரங்களைப் போல இருமுறை செத்தவர்கள்.

யூதா. 1:13 தங்களுடைய வெட்கக்கேடுகளை நுரையாகத் தள்ளுகின்ற கொந்தளிக்கும் கடல் அலைகள். வழிதவறித் திரியும் விண்மீன்கள். என்றென்றும் உள்ள காரிருளே இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

யூதா. 1:14 ஆதாமுக்குப்பின் ஏழாந்தலைமுறையான ஏனோக்கு இவர்களைக் குறித்து, ' இதோ ஆண்டவர் எல்லாருக்கும் தீர்ப்பளிக்கத் தம் பல்லாயிரக்கணக்கான தூயவர்களோடு வந்து விட்டார்.

யூதா. 1:15 இறைப்பற்றில்லாதவர்கள் செய்த அனைத்துத் தீயசெயல்களுக்காகவும், இறைப்பற்றில்லாத பாவிகள் பேசிய அனைத்துக் கடுஞ்சொற்களுக்காகவும் தண்டனை வழங்குவார் ' என்று முன்னுரைத்துள்ளார்.

யூதா. 1:16 இவர்கள் எப்போதும் முணுமுணுப்பவர்கள்: குறை கூறுபவர்கள்: தங்கள் தீய நாட்டங்களின்படி வாழ்பவர்கள்: வரம்பு மீறிப் பெருமை பேசுபவர்கள்: தங்கள் நலனுக்காகப் பிறரைப் போலியாகப் புகழ்பவர்கள்.

யூதா. 1:17 அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.

யூதா. 1:18 ஏனெனில், ' இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக் காலத்தில் தோன்றுவர் ' என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள்.

யூதா. 1:19 இவர்கள் பிரிவினை உண்டுபண்ணுபவர்கள்: மனித இயல்பின்படி நடப்பவர்கள்: கடவுளின் ஆவியைக் கொண்டிராதவர்கள்.

யூதா. 1:20 அன்பானவர்களே, தூய்மை மிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்: தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்.

யூதா. 1:21 கடவுளது அன்பில் நிலைத்திருங்கள். என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள்.

யூதா. 1:22 நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்.

யூதா. 1:23 வேறு சிலரை அழிவுத் தீயிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள். மற்றும் சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்: ஊனியல்பால் கறைப்பட்ட அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள்.

யூதா. 1:24 வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு,

யூதா. 1:25 நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்.

by Swathi   on 24 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.