LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கம்பர் (Kambar )

யுத்த காண்டம்-மருத்துமலைப் படலம்

 

உணவு கொண்டுவந்து, பாசறையில் சேர்த்த வீடணன் போர்க்களத்திற்குச் செல்லுதல்
போயினள் தையல்; இப்பால், 'புரிக' எனப் புலவர் கோமான்
ஏயின கருமம் நோக்கி, ஏகிய இலங்கை வேந்தன்,
மேயின உணவு கொண்டு, மீண்டு, அவை உறையுள் விட்ட
ஆயின ஆக்கி, தான் வந்து, அமர்ப் பெருங் களத்தன் ஆனான். 1
போர்க்கள நிலை கண்டு வருந்திய வீடணன் இலக்குவனுடனே சாய்ந்து கிடந்த இராமனை அணுகுதல்
நோக்கினான்; கண்டான், பண்டு, இவ் உலகினைப் படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று, தியங்கினான், உணர்வு தீர்ந்தான். 2
விளைந்தவாறு உணர்கிலாதான், ஏங்கினான்; வெதும்பினான்; மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான்; 'ஆவி உண்டு, இலை' என்ன, ஓய்ந்தான்;
வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்;
இளங் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான். 3
வீடணன் இராமன் மேனியில் வடு இன்மையை உணர்ந்து, துயரம் தணிதல்
'என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள் எல்லாம்,
பின்பு என்ப அல்லவேனும், தம்முடைய நிலையின் பேரா;
முன்பு என்றும் உளது என்றாலும், முழுவதும் தெரிந்தவாற்றால்,
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே. 4
'ஆயினும், இவருக்கு இல்லை அழிவு' எனும் அதனால் ஆவி
போயினது இல்லை; வாயால் புலம்பலன், பொருமி; பொங்கித்
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன், தெரிய நோக்கி,
'நாயகன் மேனிக்கு இல்லை வடு' என நடுக்கம் தீர்ந்தான். 5
அயன் படையால் விளைந்தது என்பது உணர்ந்த வீடணன், அதனைத் தீர்க்கும் உபாயத்தை ஆராய்தல்
அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின் நோக்கி,
சிந்தையின் உணர எண்ணி, தீர்வது ஓர் உபாயம் தேர்வான். 6
'உள்ளுறு துன்பம் ஊன்ற, உற்றனன் உறக்கம் அன்றோ?
தெள்ளிதின் உணர்ந்த பின்னை, சிந்தனை தெரிவென் அன்றே,
வள்ளலோ, தம்பி மாள வாழ்கிலன்; மாய வாழ்க்கைக்
கள்வனோ வென்றான்?' என்றான், மழை எனக் கலுழும் கண்ணான் 7
'பாசம் போய் இற்றாற் போலப் பதுமத்தோன் படையும் இன்னே
நாசம் போய் எய்தும்; நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை;
வீசும் போர்க் களத்து வீய்ந்த வீரரும் மீள்வர்; வெய்ய
நீசன் போர் வெல்வது உண்டோ ?' என்றனன், நெறியில் நின்றான் 8
'இறவாதவர் யாரேனும் உளரோ?' என, வீடணன் தேடுதல்
'உணர்வதன்முன்னம், இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த 
துணைவர்கள், துஞ்சல் இல்லார், உளர் எனின், துருவித் தேடிக்
கொணர்குவென், விரைவின்' என்னா, கொள்ளி ஒன்று அம் கைக் கொண்டான்
புணரியின் உதிர வெள்ளத்து, ஒரு தனி விரைவின் போனான். 9
அனுமனைக் கண்ட வீடணன், அம்புகளை நீக்கி, நீர் தெளித்து, மயக்கம் தெளிவித்தல்
வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச் செங் கண்
தீ உக, கனகக் குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட
ஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான்,
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான் 10
கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி கால,
'உண்டு உயிர்' என்பது உன்னி, உடற் கணை ஒன்று ஒன்று ஆக,
விண்டு உதிர் புண்ணின் நின்று மெல்லென விரைவின் வாங்கி,
கொண்டல் நீர் கொணர்ந்து, கோல முகத்தினைக் குளிரச் செய்தான் 11
உணர்வு பெற்ற அனுமன், இராமனைப் பற்றி உசாவி அறிதல்
உயிர்ப்பு முன் உதித்த பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி
வியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப்
பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக,
அயர்த்திலன் இராம நாமம், வாழ்த்தினன்; அமரர் ஆர்த்தார். 12
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர,
தழுவினன் அவனை, தானும் அன்பொடு தழுவி, 'தக்கோய்!
வழு இலன் அன்றே, வள்ளல்?' என்றனன்; 'வலியன்' என்றான்;
தொழுதனன், உலகம் மூன்றும் தலையின் மேல் கொள்ளும் தூயான் 13
இருவரும் சாம்பனைத் தேடிச் சென்று அடைதல்
அன்பு தன் தம்பிமேல் ஆத்து, அறிவினை மயக்க, ஐயன்,
துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வு இனித் தொடர்ந்த பின்னே
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென்!' என்றலோடும்,
'தன் பெருந் தகைமைக்கு ஒத்த சாம்பன் எத் தலையன்?' என்றான் 14
'அறிந்திலென் அவனை; யாண்டும் கண்டிலென்; "ஆவி யாக்கை
பிறிந்திலன், உளன்" என்று ஒன்றும் தெரிந்திலென், பெயர்ந்தேன்' என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய, காலின் செம்மல், 
'இறும் திறம் அவனுக்கு இல்லை; நாடுதும், ஏகி' என்றான். 15
'அன்னவன் தன்னைக் கண்டால், ஆணையே, அரக்கர்க்கு எல்லாம்
மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்'
என்னலும், 'உய்ந்தோம், ஐய! ஏகுதும் விரைவின்' என்றான்;
மின் எரி ஒளியில் சென்றார்; சாம்பனை விரைவில் கண்டார். 16
அம்பினால் வருந்தி மயங்கிய நிலையிலும், சாம்பன் செவி வாயிலாக இருவரின் வருகையை உணர்தல்
எரிகின்ற மூப்பினாலும், ஏவுண்ட நோவினாலும்,
அரிகின்ற துன்பத்தாலும், ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும் 
தெரிகின்றது இல்லா மம்மர்ச் சிந்தையன் எனினும், வீரர்
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான், செவிகளால் - வயிரத் தோளான் 17
'அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன் தானோ?
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ? முனிவரேயோ?
வரக் கடவார்கள், எல்லாம்; மாற்றலர், மலைந்து போனார்;
புரக்க உள்ளாரே!' என்னக் கருதினன், பொருமல் தீர்ந்தான். 18
அனுமனின் வருகையால் சாம்பன் பெரு மகிழ்வு கொள்ளுதல்
வந்து அவண் நின்று, குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச்
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மைத் தேற்றி,
'அந்தம் இல் குணத்திர்! யாவிர், அணுகினிர்?' என்றான்; 'ஐய!
உய்ந்தனம்; உய்ந்தோம்!' என்ற வீடணன் உரையைக் கேட்டான் 19
'மற்று அயல் நின்றான் யாவன்?' என்ன, மாருதியும், 'வாழி!
கொற்றவ! அனுமன் நின்றேன்; தொழுதனென்' என்று கூற,
'இற்றனம், ஐய! எல்லோம் எழுந்தனம், எழுந்தோம்!' என்னா,
உற்ற பேர் உவகையாலே, ஓங்கினான், உற்றம் மிக்கான். 20
இராமனின் நிலையை அறிந்த சாம்பன், மருத்துமலை கொணர வழி கூறி அனுமனை ஏவுதல்
'விரிஞ்சன் வெம் படை என்றாலும், வேதத்தின் வேதம் அன்ன
அரிந்தமன் தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல்
தெரிந்தனென்; முன்னே, அன்னான் செய்தது என்? தெரித்தி' என்றான்;
'பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான், பெரும!' என்றான் 21
'அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ? ஆக்கை வேறே;
இன் உயிர் ஒன்றே; மூலத்து இருவரும் ஒருவரேயால்;
என், அது கிடக்க; தாழா இங்கு, இனி இமைப்பின் முன்னர்,
கொன் இயல் வயிரத் தோளாய்! மருந்து போய்க் கொணர்தி' என்றான் 22
'எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும், நல் அற மூர்த்திதானும்,
வழு இலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி. 23
'பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின் யோசனைகள் பேச நின்ற
ஒன்பதினாயிரம் கடந்தால், இமயம் எனும் குலவரையை உறுதி; உற்றால்,
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை; அது பின் தவிரப் போனால்,
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை, பொற்-கூடம் சென்று உறுதி, மொய்ம்ப! 24
'இம் மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம், யோசனையின் நிடதம் என்னும்
செம் மலை; அம் மலைக்கும் அளவு அத்தனையே; அது கடந்தால், சென்று காண்டி,
எம் மலைக்கும் அரசு ஆய வடமலையை; அம் மலையின் அகலம் எண்ணின்,
மொய்ம் மலைந்த திண் தோளாய்! முப்பத்து ஈர் - ஆயிரம் யோசனையின் முற்றும்; 25
மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால்,
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும்;
மாருதி! மற்ரு அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும்,
கார் வரையைக் காணுதி; மற்று, அது காண, இத் துயர்க்குக் கரையும் காண்டி; 26
அங்குள்ள மருந்துகளின் அடையாளம் முதலியவற்றைச் சாம்பன் தெரிவித்தல்
'மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும், மெய் வேறு வகிர்களாகக் 
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர!
ஆண்டு ஏகி, கொணர்தி' என அடையாளத்தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்.27
'இன்ன மருந்து ஒரு நான்கும், பயோததியைக் கலக்கிய ஞான்று, எழுந்த; தேவர்
உன்னி அமைத்தனர்; மறைக்கும் எட்டாத பரஞ்சுடர், இவ் உலகம் மூன்றும்
தன் இரு தாள் உள் அடக்கிப் பொலி போழ்தின், யான் முரசம் சாற்றும் வேலை,
அன்னவை கண்டு, உயாவுதலும், தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால்; 28
'இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்; இரங்கா, யார்க்கும்;
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமிப் படையும் அவற்றுடனே நிற்கும்;
பொய்ம் மருங்கின் நில்லா தாய்! புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி,
கைம் மருங்கு உண்டாம்; நின்னைக் காயாவாம்; அப்புறம் போய்க் கரக்கும்' என்றான். 29
மருந்து கொணர அனுமன் பெரு வடிவு கொண்டு, விரைந்து எழுதல்
'ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தாரும் பிறந்தாரே; எம் கோற்கு யாதும்
தீங்கு இடையூறு எய்தாமல், தெருட்டுதிர், போய்' எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான் -
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்; பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க
வீங்கின; ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் - வேதம் போல்வான். 30
கோளோடு தாரகைகள், கோத்து அமைந்த மணி ஆரக் கோவை போன்ற;
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா;
தாளோடு தாள் பெயர்க்க, இடம் இலது-ஆகியது இலங்கை; தடக் கை வீச,
நீளோடு திசை போதா; விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா! 31
வால் விசைத்து, கைந் நிமிர்த்து, வாயினையும் சிறிது அகல வகுத்து, மானக்
கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் விரித்து, கழுத்தினையும் சுரிக்கிக் காட்டி,
தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து எழுந்தான், அவ் இலங்கை, துளங்கிச் சூழ்ந்த
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம்போல், சுரித்து உலைய,-விசையத் தோளான். 32
அனுமனின் வேகத்தால் நிகழ்ந்தவை
கிழிந்தன, மா மழைக் குலங்கள்; கீண்டது, நீள் நெடு வேலை; கிழக்கும் மேற்கும்
பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்புஇனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன, வானவர் மானம், ஆகாயத் திடையினில் பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல், கீறின போய்த் திசைகள் எல்லாம் 33
பாய்ந்தனன், அங்கு அப்பொழுதே; பரு வரைகள் எனைப் பலவும் படர ஆர்த்துச்
சாய்ந்தன; 'பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில், தாதை சால
ஓய்ந்தனன்' என்று உரைசெய்ய, விசும்பூடு படர்கின்றான், உரு வேகத்தால்,
காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன; வெந்து எரிந்த, பெருங் கானம் எல்லாம் 34
கடல் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான்
உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச் செல, செல்வான் உருவை நோக்கி,
'அடல் முன்னே தொடங்கிய நாள், ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீரிடைப் படுத்து, பறித்தனன் நம் துயர்' என்றார், தேவர் எல்லாம் 35
அனுமனைக் கண்ட வானுலகத்தவரின் கூற்று
மேகத்தின் பதம் கடந்து, வெங் கதிரும் தண் கதிரும் விரைவில் செல்லும்
மாகத்தின் நெறிக்கும் அப்பால், வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி,
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்படப் போய், 'பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து அன்றாம்' என்ன, எழுந்து சென்றான் 36
வான நாட்டு உறைகின்றார், 'வயக் கலுழன் வல் விசையால், மாயன் வைகும்
தான நாட்டு எழுகின்றான்' என்று உரைத்தார், சிலர்; சிலர்கள், 'விரிஞ்சன் தான் தன்
ஏனை நாட்டு எழுகின்றான்' என்று உரைத்தார்; சிலர் சிலர்கள், 'ஈசன் அல்லால்,
போன நாட்டிடை போக வல்லனோ? இவன் முக் கண் புனிதன்' என்றார். 37
'வேண்டு உருவம் கொண்டு எழுந்து, விளையாடுகின்றான்; மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன்' என்றார்; '"தெரிய நோக்கிக்
காண்டும்" என இமைப்பதன்முன், கட் புலமும் கடந்து அகலும்; இன்னும் காண்மின்;
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும்' என்றார், மேன்மேல் உள்ளார் 38
'உரு' என்றார், சிலர் சிலர்கள்; 'ஒளி' என்றார், சிலர் சிலர்கள் 'ஒளிரும் மேனி
அரு' என்றார், சிலர் சிலர்கள்; 'அண்டத்தும் புறத்தும் நின்று, உலகம் ஆக்கும்
கரு' என்றார், சிலர் சிலர்கள்; 'மற்று' என்றார், சிலர் சிலர்கள்; கடலைத் தாவிச்
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார்-உலகு அனைத்தும் தெரியும் செல்வர். 39
அனுமன் சென்ற வேகத்தில் தோன்றிய ஒலி
வாச நாள் மலரோன் தன் உலகு அளவும் நிமிர்ந்தன, மேல் வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனகத் தோள்கள்
வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம,
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார்; விதிர் எறிந்தது, அண்டகோளம் 40
தேவர் முதலியோரின் மகிழ்ச்சி
தொடுத்த நாள்மாலை வானோர், முனிவரே முதல தொல்லோர்,
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால், அவுணர் வேந்தன்
கொடுத்த நாள், அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் 
எடுத்த நாள் ஒத்தது-அண்ணல் எழுந்த நாள், உலகுக்கு எல்லாம். 41
தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும், 
மூவகை உலகினுள்ளார், உவகையால் தொடர்ந்து மொய்த்தார்;
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த,
பூவுடை அமரர் தெய்வத் தரு என, விசும்பில் போனான். 42
இமயம் கடந்து, கயிலையைக் கண்டு கைகூப்பி, அனுமன் செல்லுதல்
இமய மால் வரையை உற்றான்; அங்கு உள இமைப்பிலோரும்,
கமையுடை முனிவர், மற்றும் அறன் நெறி கலந்தோர், எல்லாம்,
'அமைக, நின் கருமம்!' என்று வாழ்த்தினர்; அதனுக்கு அப்பால்,
உமையொருபாகன் வைகும் கயிலை கண்டு, உவகை உற்றான். 43
வட குண திசையில் தோன்றும், மழுவலான் ஆண்டு வைகும்
தட வரை அதனை நோக்கி, தாமரைக் கைகள் கூப்பி, 
படர்குவான் தன்னை, அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான்;
தடமுலை உமைக்குக் காட்டி, 'வாயுவின் தனயன்' என்றான். 44
உமையின் வினாவும், ஈசனது உரையும்
'என், இவன் எழுந்த தன்மை?' என்று, உலகு ஈன்றாள் கேட்ப,
'மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர்
தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நன்னுதல்! நாமும் வெம் போர் காணுதும், நாளை" என்றான். 45
ஏமகூடத்தைத் தாண்டி, அனுமன் மேரு மலையின் மீது போதல்
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி,
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன், இறுதி இல்லாக்
காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்;-
நேமியின் விசையின் செல்வான் - நிடத்ததின் நெற்றி உற்றான். 46
எண்ணுக்கும், அளவு இலாத அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும், கடியன் ஆனான்,
மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன் வைகும்
விண்ணுக்கும், அளவை ஆன மேருவின்மீது சென்றான். 47
மேரு மலையில் அனுமன் பிரமன் முதலிய தேவர்களைக் கண்டு, வணங்கிச் செல்லுதல்
'யாவதும் நிலைமைத் தன்மை இன்னது' என்று, இமையா நாட்டத் 
தேவரும் தெரிந்திலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்;
நாவலம் பெருந் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில்,
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தைக் கண்டான். 48
அன்ன மா மலையின் உம்பர், உலகு எலாம் அமைத்த அண்ணல்
நல் நெடு நகரம் நோக்கி, அதன் நடு நாப்பண் ஆய 
பொன் மலர்ப் பீடம் தன்மேல் நான்முகன் பொலியத் தோன்றும்
தன்மையும் கண்டு, கையால் வணங்கினான் - தருமம் போல்வான். 49
தரு வனம் ஒன்றில், வானோர் தலைத்தலை மயங்கித் தாழ,
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க,
மரு விரி துளப மோலி, மா நிலக் கிழத்தியோடும்
திருவோடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம் செய்தான். 50
ஆயதன் வட கீழ்ப் பாகத்து, ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய் கதிர் பரப்பி, ஐந்து கதிர் முகக் கமலம் காட்டி,
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த
சேயிழை பாகத்து, எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான். 51
சந்திரன் அனைய கொற்றத் தனிக் குடை தலைமேல் ஆக,
சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற,
அந்தர வான நாடர் அடி தொழ, முரசம் ஆர்ப்ப,
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப் போனான். 52
பூ அலர் அமைந்த பொற்பின் கிரணங்கள் பொலிந்து பொங்க,
தேவர்தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில்,
மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான். 53
அத் தடங் கிரியை நீங்கி, அத் தலை அடைந்த வள்ளல்,
உத்தரகுருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செத்திய இருள் இன்றாக, விளங்கிய செயலை நோக்கி,
வித்தகன், 'விடிந்தது!' என்னா, 'முடிந்தது, என் வேகம்!' என்றான். 54
'ஆதியான் உணராமுன்னம் அரு மருந்து உதவி, அல்லின்
பாதியால், அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான்; உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்;
ஏது யான் செய்வது?' என்னா, இடர் உற்றான், இணை இலாதான். 55
கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான், - 'கதிரின் செல்வன்
மேல் திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினான், வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினார்' என்ன, துன்பம் தவிர்ந்தனன் - தவத்து மிக்கான். 56
உத்தரகுரு நாட்டைக் கண்டு, அனுமன் அப்பால் போதல்
இருவரே தோன்றி, என்றும் ஈறு இலா ஆயுள் எய்தி,
ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி,
பொரு அரும் இன்பம் துய்த்து, புண்ணியம் புரிந்தோர் வைகும்,
திரு உறை கமலம் அன்ன, நாட்டையும் தெரியக் கண்டான். 57
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்,
கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி,
சென்னி நாள் தெரியல் வீரன், தியாக மா விநோதன் தெய்வப் 
பொன்னி நாட்டு உவமை வைப்பை, புலன் கொள, நோக்கிப் போனான். 58
நீல மலைக்கு அப்பால் மருத்துமலையை அனுமன் காணுதல்
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும்
பெரியவன், அயனார் செல்வம் பெற்றவன், பிறப்பும் பேர்ந்தான்,
அரியவன், உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும்
கரியவன் என்ன நின்ற, நீல மால் வரையைக் கண்டான். 59
அல் குன்ற அலங்கு சோதி அம் மலை அகலப் போனான்,
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான், புலவன் சொன்ன
நல் குன்றம் அதனைக் கண்டான், உணர்ந்தனன் - 'நாகம் முற்ற
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம்' என்ன. 60
மருத்துமலையைக் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்று, அனுமன் அம் மலையைப் பெயர்த்தல்
பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை பாதலத்துச்
சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன, தடுத்து வந்து,
காய்ந்தன, 'நீதான் யாவன்? கருத்து என்கொல்? கழறுக!' என்ன,
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறியச் சொன்னான். 61
கேட்டு அவை, 'ஐய! வேண்டிற்று இயற்றி, பின் கெடாமல் எம்பால்
காட்டு' என உரைத்து, வாழ்த்திக் கரந்தன; கமலக்கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி, மறைந்தது; மண்ணின்நின்றும்
தோட்டனன், அனுமன், மற்று அக் குன்றினை, வயிரத் தோளால். 62
'இங்கு நின்று, இன்னன மருந்து என்று எண்ணினால்,
சிங்குமால் காலம்' என்று உணரும் சிந்தையான்,
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான்,
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான். 63
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து,
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை,
'ஏ' எனும் மாத்திரத்து, ஒரு கை ஏந்தினான்,
தாயினன் - உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான். 64
அனுமனை அனுப்பியபின், சாம்பனும் வீடணனும் இராமனைச் சென்று காணுதல்
அத் தலை, அன்னவன் அனையன் ஆயினான்;
இத் தலை, இருவரும் இசைய எய்தினார்,
கைத் தலத்தால் அடி வருடும் காலையில்,
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம் அரோ. 65
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும்
கண்டன, கெழீஇ வரும் கருணை தாம் எனக்
கொண்டன, கொடுப்பன வரங்கள், கோள் இலாப்
புண்டரீகத் தடம் தருமம் பூத்தென; 66
நோக்கினன் - கரடிகட்கு அரசும், நோன் புகழ்
ஆக்கிய நிருதனும், அழுத கண்ணினார்,
தூக்கிய தலையினர், தொழுத கையினர்,
ஏக்கமுற்று, அருகு இருந்து, இரங்குவார்களை. 67
இருவரது நலனையும் இராமன் வினாவுதல்
'ஏவிய காரியம் இயற்றி எய்தினை?
நோவிலை? வீடணா!' என்று நோக்கி, பின்,
தா அரும் பெரும் புகழ்ச் சாம்பன் தன்னையும்,
'ஆவி வந்தனைகொல்?' என்று அருளினான் அரோ. 68
'ஐயன்மீர்! நம் குலத்து அழிவு இது ஆதலின்,
செய்வகை பிறிது இலை; உயிரின் தீர்ந்தவர்
உய்கிலர்; இனிச் செயற்கு உரியது உண்டுஎனின்,
பொய் இலீர்! புகலுதிர், புலமை உள்ளத்தீர்! 69
'சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய 
பேதையேன், சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன்! உலகொடு இவ் உறாக்
காதை, வன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன். 70
'"மாயை இம் மான்" என, எம்பி, வாய்மையான்,
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்,
போயினென்; பெண் உரை மறாது போனதால்,
ஆயது, இப் பழியுடை மரணம் - அன்பினீர்! 71
'கண்டனென், இராவணன் தன்னைக் கண்களால்;
மண்டு அமர் புரிந்தனென், வலியின்; ஆர் உயிர்
கொண்டிலென், உறவு எலாம் கொடுத்து, மாள, நான்,
பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால். 72
'"தேவர்தம் படைக்கலம் தொடுத்து, தீயவன்
சாவது காண்டும்" என்று இளவல் சாற்றவும்,
ஆவதை இசைந்திலென், -அழிவது என்வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வென்றியால். 73
'நின்றிலென் உடன், நெறி படைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்;
பொன்றினர் நமர் எலாம்; இளவல் போயினான்;
வென்றிலென் அரக்கனை, விதியின் வெம்மையால். 74
'ஈண்டு, இவண் இருந்து, அவை இயம்பும் ஏழைமை
வேண்டுவது அன்று; இனி, அமரின் வீடிய
ஆண் தகை அன்பரை அமரர் நாட்டிடைக்
காண்டலே நலம்; பிற கண்டது இல்லையால். 75
'எம்பியைத் துணைவரை இழந்த யான், இனி,
வெம்பு போர் அரக்கரை முருக்கி, வேர் அறுத்து,
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து,
உம்பருக்கு உதவி, மேல் உறுவது என் அரோ? 76
'இளையவன் இறந்தபின், எவ்வம் என் எனக்கு?
அளவு அறு சீர்த்தி என்? அறன் என்? ஆண்மை என்?
கிளை உறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்?
விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்? 77
'இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு,
அரக்கரை வென்று நின்று, ஆண்மை ஆள்வெனேல்,
மரக் கண் வன் கள்வனே, வஞ்சனேன்; இனி,
கரக்குவது அல்லது, ஓர் கடன் உண்டாகுமோ? 78
'"தாதையை இழந்தபின், சடாயு இற்றபின்,
காதலின் துணைவரும் மடிய, காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய, கோள் இலன்,
சீதையை உவந்துளான்" என்பர், சீரியோர். 79
'வென்றனென், அரக்கரை வேரும் வீய்ந்து அறக்
கொன்றனென், அயோத்தியைக் குறுகினேன், குணத்து
இன் துணை எம்பியை இன்றி, யான் உளேன்;
நன்று, அரசாளும் அவ் அரசும் நன்று அரோ. 80
'படியின்மேல் காதலின், யாதும் பார்க்கிலென்,
முடிகுவென், உடன்' என முடியக் கூறலும்,
அடி இணை வணங்கிய சாம்பன், 'ஆழியாய்!
நொடிகுவது உளது' என நுவல்வதாயினான்: 81
'உன்னை நீ உணர்கிலை; அடியனேன் உனை
முன்னமே அறிகுவேன்; மொழிதல் தீது, அது;
என் எனில், இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம்;
பின்னரே தெரிகுதி; - தெரிவு இல் பெற்றியோய்! 82
'அம்புயத்து அயன் படை ஆதல் தேறினென்,
உம்பியை, உலப்பு அரும் உருவை ஊன்றிட,
வெம்பு போர்க் களத்திடை வீழ்த்த வென்றியான்;
எம் பெருந் தலைவ! ஈது எண்ணம் உண்மையால்; 83
'அன்னவன் படைக்கலம், அமரர் தானவர் -
தன்னையும், விடின் உயிர் குடிக்கும்; தற்பர!
உன்னை ஒன்று இழைத்திலது, ஒழிந்து நீங்கியது;
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ? 84
'பெருந் திறல் அனுமன், ஈண்டு உணர்வு பெற்றுளான்,
அருந் துயர் அளவு இலாது அரற்றுவானை, யான்,
"மருந்து இறைப் பொழுதினில் கொணர்குவாய்!" என,
பொருந்தினன், வட திசைக் கடிது போயினான். 85
'பனி வரை கடந்தனன், பருப்பதங்களின்
தனி அரசின்புறம் தவிரச் சார்ந்துளன்,
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்
துனி வரு துன்பம் நீ துறத்தி, தொல்லையோய்! 86
'யான் அலால், எந்தையாய் உலகை ஈன்றுளான் -
தான் அலால், சிவன் அலால், நேமி தாங்கிய
கோன் அலால், எனைவரும் உணரும் கோள் இலர்,-
வேனிலான் மேனியாய்!-மருந்தை மெய் உற. 87
'ஆர்கலி கடைந்த நாள், அமுதின் வந்தன;
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன;
மேருவின் உத்தரகுருவின்மேல் உள;
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின; 88
'தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில;
ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள்:
மூன்று என ஒன்றிய உலகம், முன்னை நாள்,
ஈன்றவன் இறப்பினும், ஆவி ஈயுமால், 89
'சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள்
புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயின
நல் உயிர் ஈகுவது ஒன்று; நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று;-தொல்லையோய்! 90
'வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி,
தரு நெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன்;
அருமையது அன்று' எனா, அடி வணங்கினான்;
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான். 91
சாம்பனது உரை கேட்டு இராமன் மகிழும்போது, வட திசையிலே ஒலி எழுதல்
'"பொன் மலைமீது போய், போக பூமியின்
நல் மருந்து உதவும்" என்று உரைத்த நல் உரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்'
என்னலும், விசும்பிடை எழுந்தது, ஈட்டு ஒலி. 92
வட திசையில் உற்ற சண்டமாருதத்தால் நேர்ந்த குழப்பம்
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர, கார் வரை
இடை இடை பறிந்து விண் ஏற, இற்று இடை
தடை இலாது உடற்றுறு சண்டமாருதம்
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால். 93
மீன் குலம் குலைந்து உக, வெயிலின் மண்டிலம்
தான் குலைந்து உயர் மதி தழுவ, தன்னுழை
மான் குலம் வெருக் கொள, மயங்கி, மண்டி, வான்,
தேன் குலம் கலங்கிய நறவின், சென்றவால். 94
வேர்த்தன தூரொடு விசும்பை மீச் செலப்
போர்த்தன, மலையொடு மரனும், முன்புபோல்
தூர்த்தன, வேலையை; காலின் தோன்றலும்,
ஆர்த்தனன், அனையவர் அரந்தை ஆற்றுவான். 95
அனுமன் மலை கொண்டு வந்த தோற்றம்
மழைகளும் கடல்களும், மற்றும் முற்றும், மண்-
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள,
குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால்-
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே. 96
எறி திரைப் பெருங் கடல் கடைய ஏற்ற நாள்,
'செறி சுடர் மந்தரம் தருதி, சென்று' என,
'வெறிது உலகு!' எனக் கொடு, விசும்பின் மீச்செலும்
உறு வலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான். 97
பூதலத்து, அரவொடு மலைந்து போன நாள்,
ஓதிய வென்றியன், உடற்றும் ஊற்றத்தன், 
ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய
தாதையும் ஒத்தனன், உவமை தற்கு இலான். 98
அனுமன் வந்து, நிலத்தில் அடி இடுதல்
'தோன்றினன்' என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து 
ஊன்றினன், நிலத்து அடி; கடவுள் ஓங்கல்தான்
வான் தனில் நின்றது, வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான். 99
மருத்துமலையினின்று வந்த காற்றுப் பட்டவுடன், யாவரும் உயிர் பெற்று எழுதல்
காற்று வந்து அசைத்தலும்,-கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் -
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார்,
கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார். 100
அரக்கர் தம் ஆக்கைகள் அழிவு இல் ஆழியில்
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய, கண்டன
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன; 
குரக்குஇனம் உய்ந்தது கூற வேண்டுமோ? 101
சுழன்றன, நெடுங் கணை; கரந்த புண்; கடுத்து
அழன்றில குளிர்ந்தன, அங்கம்; செங் கண்கள்
சுழன்றில;-உலகு எலாம் தொழுவ-தொங்கலின்
குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான். 102
யாவரும் எழுந்தனர்; ஆர்த்த ஏழ் கடல்
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும்,-
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செங் கணான்
யோகம் நீங்கினன் என, -இளவல் ஓங்கினான். 103
இராமன் தம்பியைத் தழுவித் துயர் தீர்தல்
ஓங்கிய தம்பியை, உயிர் வந்து உள் உற
வீங்கிய தோள்களால் தழுவி, வெந் துயர்
நீங்கினன், இராமனும்; உலகில் நின்றில,
தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர். 104
அரம்பையர் வாழ்த்து ஒலி, அமுத ஏழ் இசை,
நரம்பு இயல் கின்னரம் முதல் நன்மையே
நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா
விரும்பின; முனிவரும் வேதம் பாடினார். 105
வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன;
ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன; தேவர் ஆர்த்தனர். 106
அயன்படை இராமனை வலம் வந்து, தொழுது அகல்தல்
உந்தினை பின் கொலை, 'ஒழிவு இல் உண்மையும்
தந்தனை நீ; அது நினக்குச் சான்று' எனா,
சுந்தரவில்லியைத் தொழுது, சூழ வந்து,
அந்தணன் படையும் நின்று, அகன்று போயதால். 107
இராமன் அனுமனை மார்புறத் தழுவுதலும், அனுமன் இராமன் திருவடிகளை வணங்குதலும்
ஆய காலையின், அமரர் ஆர்த்து எழ,
தாயின் அன்பனைத் தழுவினான்,-தனி
நாயகன், பெருந் துயரம் நாம் அற,
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான். 108
எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு
உழுத மார்பினான், உருகி, உள் உறத்
தழுவி நிற்றலும், தாழ்ந்து, தாள் உறத்
தொழுத மாருதிக்கு, இனைய சொல்லுவான்: 109
இராமன் அனுமனைப் புகழ்ந்து, வாழ்த்துதல்
'முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது,
என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்;
நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்! 110
'அழியுங்கால் தரும் உதவிக்கு, ஐயனே!
மொழியுங்கால், தரும் உயிரும் முற்றுமே?
பழியும் காத்து, அரும் பகையும் காத்து, எமை
வழியும் காத்து, நம் மரபும் காத்தனை. 111
'தாழ்வும் ஈங்கு இறைப்பொழுது தக்கதே,
வாழி எம்பிமேல் அன்பு மாட்ட, வான்
ஏழும் வீயும்; என் பகர்வது?-எல்லை நாள்
ஊழி காணும் நீ, உதவினாய் அரோ! 112
'இன்று வீகலாது, எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்;
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது, நீ
என்றும் வாழ்தியால் இனிது, என் ஏவலால்!' 113
மற்றையோர்களும் அனுமனை வாழ்த்துதல்
மற்றையோர்களும், அனும் வண்மையால்,
பெற்ற ஆயுளார், பிறந்த காதலார்,
சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்;
உற்றவாறு எலாம் உணரக் கூறினான். 114
மருத்துமலையை உரிய இடத்தில் மீண்டும் வைத்திடுமாறு சாம்பன் உரைக்க, அனுமன் போதல்
'உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார்,
பொய்த்த சிந்தையார், இறுதல் போக்குமால்;
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்!' 115
என்று சாம்பன் ஆண்டு இயம்ப, 'ஈது அரோ
நன்று, சால!' என்று, உவந்து, 'ஒர் நாழிகைச்
சென்று மீள்வென்' என்று எழுந்து, தெய்வ மாக் 
குன்று தாங்கி, அக் குரிசில் போயினான். 116
மிகைப் பாடல்கள்
மூன்று அரத் தாவொடும் புல்லின் முன்னம் வந்து,
ஊன்றின நிலத்து அடி, கடவுள் ஓங்கருள்;
வான் தனி நின்றது; வஞ்சர் ஊர் வர,
ஏன்றிலது; ஆதலால், அனுமன் எய்தினான். 97-1
அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன்,
வியன் கர நேமி அம் படை அவ் வெற்பினை
நியங்கொடு தாங்கி விண் நின்றதால்; அதில்
இயங்கிய ஊதை வெங் களத்தின் எய்தவே. 99-1
வந்த நல் மருந்தினை மருத்து வானவன்
சிந்தையில் பெரு மகிழ் சிறப்பச் சேர்ந்து உறீஇ,
அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர்
வந்து இரைந்து, ஆர்த்து, எழும்வகை செய்தான் அரோ. 99-2

உணவு கொண்டுவந்து, பாசறையில் சேர்த்த வீடணன் போர்க்களத்திற்குச் செல்லுதல்
போயினள் தையல்; இப்பால், 'புரிக' எனப் புலவர் கோமான்ஏயின கருமம் நோக்கி, ஏகிய இலங்கை வேந்தன்,மேயின உணவு கொண்டு, மீண்டு, அவை உறையுள் விட்டஆயின ஆக்கி, தான் வந்து, அமர்ப் பெருங் களத்தன் ஆனான். 1
போர்க்கள நிலை கண்டு வருந்திய வீடணன் இலக்குவனுடனே சாய்ந்து கிடந்த இராமனை அணுகுதல்
நோக்கினான்; கண்டான், பண்டு, இவ் உலகினைப் படைக்க நோற்றான்வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும்தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானேதேக்கினான் என்ன நின்று, தியங்கினான், உணர்வு தீர்ந்தான். 2
விளைந்தவாறு உணர்கிலாதான், ஏங்கினான்; வெதும்பினான்; மெய்உளைந்து உளைந்து உயிர்த்தான்; 'ஆவி உண்டு, இலை' என்ன, ஓய்ந்தான்;வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்;இளங் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான். 3
வீடணன் இராமன் மேனியில் வடு இன்மையை உணர்ந்து, துயரம் தணிதல்
'என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள் எல்லாம்,பின்பு என்ப அல்லவேனும், தம்முடைய நிலையின் பேரா;முன்பு என்றும் உளது என்றாலும், முழுவதும் தெரிந்தவாற்றால்,அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே. 4
'ஆயினும், இவருக்கு இல்லை அழிவு' எனும் அதனால் ஆவிபோயினது இல்லை; வாயால் புலம்பலன், பொருமி; பொங்கித்தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன், தெரிய நோக்கி,'நாயகன் மேனிக்கு இல்லை வடு' என நடுக்கம் தீர்ந்தான். 5
அயன் படையால் விளைந்தது என்பது உணர்ந்த வீடணன், அதனைத் தீர்க்கும் உபாயத்தை ஆராய்தல்
அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்றஇந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆகநொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின் நோக்கி,சிந்தையின் உணர எண்ணி, தீர்வது ஓர் உபாயம் தேர்வான். 6
'உள்ளுறு துன்பம் ஊன்ற, உற்றனன் உறக்கம் அன்றோ?தெள்ளிதின் உணர்ந்த பின்னை, சிந்தனை தெரிவென் அன்றே,வள்ளலோ, தம்பி மாள வாழ்கிலன்; மாய வாழ்க்கைக்கள்வனோ வென்றான்?' என்றான், மழை எனக் கலுழும் கண்ணான் 7
'பாசம் போய் இற்றாற் போலப் பதுமத்தோன் படையும் இன்னேநாசம் போய் எய்தும்; நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை;வீசும் போர்க் களத்து வீய்ந்த வீரரும் மீள்வர்; வெய்யநீசன் போர் வெல்வது உண்டோ ?' என்றனன், நெறியில் நின்றான் 8
'இறவாதவர் யாரேனும் உளரோ?' என, வீடணன் தேடுதல்
'உணர்வதன்முன்னம், இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த துணைவர்கள், துஞ்சல் இல்லார், உளர் எனின், துருவித் தேடிக்கொணர்குவென், விரைவின்' என்னா, கொள்ளி ஒன்று அம் கைக் கொண்டான்புணரியின் உதிர வெள்ளத்து, ஒரு தனி விரைவின் போனான். 9
அனுமனைக் கண்ட வீடணன், அம்புகளை நீக்கி, நீர் தெளித்து, மயக்கம் தெளிவித்தல்
வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச் செங் கண்தீ உக, கனகக் குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்டஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான்,காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான் 10
கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி கால,'உண்டு உயிர்' என்பது உன்னி, உடற் கணை ஒன்று ஒன்று ஆக,விண்டு உதிர் புண்ணின் நின்று மெல்லென விரைவின் வாங்கி,கொண்டல் நீர் கொணர்ந்து, கோல முகத்தினைக் குளிரச் செய்தான் 11
உணர்வு பெற்ற அனுமன், இராமனைப் பற்றி உசாவி அறிதல்
உயிர்ப்பு முன் உதித்த பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப ஊறிவியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப்பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக,அயர்த்திலன் இராம நாமம், வாழ்த்தினன்; அமரர் ஆர்த்தார். 12
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர,தழுவினன் அவனை, தானும் அன்பொடு தழுவி, 'தக்கோய்!வழு இலன் அன்றே, வள்ளல்?' என்றனன்; 'வலியன்' என்றான்;தொழுதனன், உலகம் மூன்றும் தலையின் மேல் கொள்ளும் தூயான் 13
இருவரும் சாம்பனைத் தேடிச் சென்று அடைதல்
அன்பு தன் தம்பிமேல் ஆத்து, அறிவினை மயக்க, ஐயன்,துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வு இனித் தொடர்ந்த பின்னேஎன் புகுந்து எய்தும் என்பது அறிகிலென்!' என்றலோடும்,'தன் பெருந் தகைமைக்கு ஒத்த சாம்பன் எத் தலையன்?' என்றான் 14
'அறிந்திலென் அவனை; யாண்டும் கண்டிலென்; "ஆவி யாக்கைபிறிந்திலன், உளன்" என்று ஒன்றும் தெரிந்திலென், பெயர்ந்தேன்' என்றுசெறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய, காலின் செம்மல், 'இறும் திறம் அவனுக்கு இல்லை; நாடுதும், ஏகி' என்றான். 15
'அன்னவன் தன்னைக் கண்டால், ஆணையே, அரக்கர்க்கு எல்லாம்மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்'என்னலும், 'உய்ந்தோம், ஐய! ஏகுதும் விரைவின்' என்றான்;மின் எரி ஒளியில் சென்றார்; சாம்பனை விரைவில் கண்டார். 16
அம்பினால் வருந்தி மயங்கிய நிலையிலும், சாம்பன் செவி வாயிலாக இருவரின் வருகையை உணர்தல்
எரிகின்ற மூப்பினாலும், ஏவுண்ட நோவினாலும்,அரிகின்ற துன்பத்தாலும், ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும் தெரிகின்றது இல்லா மம்மர்ச் சிந்தையன் எனினும், வீரர்வருகின்ற சுவட்டை ஓர்ந்தான், செவிகளால் - வயிரத் தோளான் 17
'அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன் தானோ?இரக்கம் உற்று அருள வந்த தேவரோ? முனிவரேயோ?வரக் கடவார்கள், எல்லாம்; மாற்றலர், மலைந்து போனார்;புரக்க உள்ளாரே!' என்னக் கருதினன், பொருமல் தீர்ந்தான். 18
அனுமனின் வருகையால் சாம்பன் பெரு மகிழ்வு கொள்ளுதல்
வந்து அவண் நின்று, குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச்சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மைத் தேற்றி,'அந்தம் இல் குணத்திர்! யாவிர், அணுகினிர்?' என்றான்; 'ஐய!உய்ந்தனம்; உய்ந்தோம்!' என்ற வீடணன் உரையைக் கேட்டான் 19
'மற்று அயல் நின்றான் யாவன்?' என்ன, மாருதியும், 'வாழி!கொற்றவ! அனுமன் நின்றேன்; தொழுதனென்' என்று கூற,'இற்றனம், ஐய! எல்லோம் எழுந்தனம், எழுந்தோம்!' என்னா,உற்ற பேர் உவகையாலே, ஓங்கினான், உற்றம் மிக்கான். 20
இராமனின் நிலையை அறிந்த சாம்பன், மருத்துமலை கொணர வழி கூறி அனுமனை ஏவுதல்
'விரிஞ்சன் வெம் படை என்றாலும், வேதத்தின் வேதம் அன்னஅரிந்தமன் தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல்தெரிந்தனென்; முன்னே, அன்னான் செய்தது என்? தெரித்தி' என்றான்;'பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான், பெரும!' என்றான் 21
'அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ? ஆக்கை வேறே;இன் உயிர் ஒன்றே; மூலத்து இருவரும் ஒருவரேயால்;என், அது கிடக்க; தாழா இங்கு, இனி இமைப்பின் முன்னர்,கொன் இயல் வயிரத் தோளாய்! மருந்து போய்க் கொணர்தி' என்றான் 22
'எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,முழுதும் இவ் உலகம் மூன்றும், நல் அற மூர்த்திதானும்,வழு இலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த!பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி. 23
'பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின் யோசனைகள் பேச நின்றஒன்பதினாயிரம் கடந்தால், இமயம் எனும் குலவரையை உறுதி; உற்றால்,தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை; அது பின் தவிரப் போனால்,முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை, பொற்-கூடம் சென்று உறுதி, மொய்ம்ப! 24
'இம் மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம், யோசனையின் நிடதம் என்னும்செம் மலை; அம் மலைக்கும் அளவு அத்தனையே; அது கடந்தால், சென்று காண்டி,எம் மலைக்கும் அரசு ஆய வடமலையை; அம் மலையின் அகலம் எண்ணின்,மொய்ம் மலைந்த திண் தோளாய்! முப்பத்து ஈர் - ஆயிரம் யோசனையின் முற்றும்; 25
மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால்,நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும்;மாருதி! மற்ரு அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும்,கார் வரையைக் காணுதி; மற்று, அது காண, இத் துயர்க்குக் கரையும் காண்டி; 26
அங்குள்ள மருந்துகளின் அடையாளம் முதலியவற்றைச் சாம்பன் தெரிவித்தல்
'மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும், மெய் வேறு வகிர்களாகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர!ஆண்டு ஏகி, கொணர்தி' என அடையாளத்தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்.27
'இன்ன மருந்து ஒரு நான்கும், பயோததியைக் கலக்கிய ஞான்று, எழுந்த; தேவர்உன்னி அமைத்தனர்; மறைக்கும் எட்டாத பரஞ்சுடர், இவ் உலகம் மூன்றும்தன் இரு தாள் உள் அடக்கிப் பொலி போழ்தின், யான் முரசம் சாற்றும் வேலை,அன்னவை கண்டு, உயாவுதலும், தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால்; 28
'இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்; இரங்கா, யார்க்கும்;நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமிப் படையும் அவற்றுடனே நிற்கும்;பொய்ம் மருங்கின் நில்லா தாய்! புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி,கைம் மருங்கு உண்டாம்; நின்னைக் காயாவாம்; அப்புறம் போய்க் கரக்கும்' என்றான். 29
மருந்து கொணர அனுமன் பெரு வடிவு கொண்டு, விரைந்து எழுதல்
'ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தாரும் பிறந்தாரே; எம் கோற்கு யாதும்தீங்கு இடையூறு எய்தாமல், தெருட்டுதிர், போய்' எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான் -ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்; பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்கவீங்கின; ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் - வேதம் போல்வான். 30
கோளோடு தாரகைகள், கோத்து அமைந்த மணி ஆரக் கோவை போன்ற;தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா;தாளோடு தாள் பெயர்க்க, இடம் இலது-ஆகியது இலங்கை; தடக் கை வீச,நீளோடு திசை போதா; விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா! 31
வால் விசைத்து, கைந் நிமிர்த்து, வாயினையும் சிறிது அகல வகுத்து, மானக்கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் விரித்து, கழுத்தினையும் சுரிக்கிக் காட்டி,தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து எழுந்தான், அவ் இலங்கை, துளங்கிச் சூழ்ந்தவேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம்போல், சுரித்து உலைய,-விசையத் தோளான். 32
அனுமனின் வேகத்தால் நிகழ்ந்தவை
கிழிந்தன, மா மழைக் குலங்கள்; கீண்டது, நீள் நெடு வேலை; கிழக்கும் மேற்கும்பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்புஇனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி;அழிந்தன, வானவர் மானம், ஆகாயத் திடையினில் பேர் அசனி என்னவிழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல், கீறின போய்த் திசைகள் எல்லாம் 33
பாய்ந்தனன், அங்கு அப்பொழுதே; பரு வரைகள் எனைப் பலவும் படர ஆர்த்துச்சாய்ந்தன; 'பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில், தாதை சாலஓய்ந்தனன்' என்று உரைசெய்ய, விசும்பூடு படர்கின்றான், உரு வேகத்தால்,காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன; வெந்து எரிந்த, பெருங் கானம் எல்லாம் 34
கடல் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான்உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச் செல, செல்வான் உருவை நோக்கி,'அடல் முன்னே தொடங்கிய நாள், ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும்திடல் முந்நீரிடைப் படுத்து, பறித்தனன் நம் துயர்' என்றார், தேவர் எல்லாம் 35
அனுமனைக் கண்ட வானுலகத்தவரின் கூற்று
மேகத்தின் பதம் கடந்து, வெங் கதிரும் தண் கதிரும் விரைவில் செல்லும்மாகத்தின் நெறிக்கும் அப்பால், வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி,போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்படப் போய், 'பூவின் வந்தஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து அன்றாம்' என்ன, எழுந்து சென்றான் 36
வான நாட்டு உறைகின்றார், 'வயக் கலுழன் வல் விசையால், மாயன் வைகும்தான நாட்டு எழுகின்றான்' என்று உரைத்தார், சிலர்; சிலர்கள், 'விரிஞ்சன் தான் தன்ஏனை நாட்டு எழுகின்றான்' என்று உரைத்தார்; சிலர் சிலர்கள், 'ஈசன் அல்லால்,போன நாட்டிடை போக வல்லனோ? இவன் முக் கண் புனிதன்' என்றார். 37
'வேண்டு உருவம் கொண்டு எழுந்து, விளையாடுகின்றான்; மெய் வேதம் நான்கும்தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன்' என்றார்; '"தெரிய நோக்கிக்காண்டும்" என இமைப்பதன்முன், கட் புலமும் கடந்து அகலும்; இன்னும் காண்மின்;மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும்' என்றார், மேன்மேல் உள்ளார் 38
'உரு' என்றார், சிலர் சிலர்கள்; 'ஒளி' என்றார், சிலர் சிலர்கள் 'ஒளிரும் மேனிஅரு' என்றார், சிலர் சிலர்கள்; 'அண்டத்தும் புறத்தும் நின்று, உலகம் ஆக்கும்கரு' என்றார், சிலர் சிலர்கள்; 'மற்று' என்றார், சிலர் சிலர்கள்; கடலைத் தாவிச்செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார்-உலகு அனைத்தும் தெரியும் செல்வர். 39
அனுமன் சென்ற வேகத்தில் தோன்றிய ஒலி
வாச நாள் மலரோன் தன் உலகு அளவும் நிமிர்ந்தன, மேல் வானம் ஆனகாசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனகத் தோள்கள்வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம,ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார்; விதிர் எறிந்தது, அண்டகோளம் 40
தேவர் முதலியோரின் மகிழ்ச்சி
தொடுத்த நாள்மாலை வானோர், முனிவரே முதல தொல்லோர்,அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால், அவுணர் வேந்தன்கொடுத்த நாள், அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் எடுத்த நாள் ஒத்தது-அண்ணல் எழுந்த நாள், உலகுக்கு எல்லாம். 41
தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும், மூவகை உலகினுள்ளார், உவகையால் தொடர்ந்து மொய்த்தார்;தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த,பூவுடை அமரர் தெய்வத் தரு என, விசும்பில் போனான். 42
இமயம் கடந்து, கயிலையைக் கண்டு கைகூப்பி, அனுமன் செல்லுதல்
இமய மால் வரையை உற்றான்; அங்கு உள இமைப்பிலோரும்,கமையுடை முனிவர், மற்றும் அறன் நெறி கலந்தோர், எல்லாம்,'அமைக, நின் கருமம்!' என்று வாழ்த்தினர்; அதனுக்கு அப்பால்,உமையொருபாகன் வைகும் கயிலை கண்டு, உவகை உற்றான். 43
வட குண திசையில் தோன்றும், மழுவலான் ஆண்டு வைகும்தட வரை அதனை நோக்கி, தாமரைக் கைகள் கூப்பி, படர்குவான் தன்னை, அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான்;தடமுலை உமைக்குக் காட்டி, 'வாயுவின் தனயன்' என்றான். 44
உமையின் வினாவும், ஈசனது உரையும்
'என், இவன் எழுந்த தன்மை?' என்று, உலகு ஈன்றாள் கேட்ப,'மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர்தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,நன்னுதல்! நாமும் வெம் போர் காணுதும், நாளை" என்றான். 45
ஏமகூடத்தைத் தாண்டி, அனுமன் மேரு மலையின் மீது போதல்
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி,ஏம கூடத்தின் உம்பர் எய்தினன், இறுதி இல்லாக்காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்;-நேமியின் விசையின் செல்வான் - நிடத்ததின் நெற்றி உற்றான். 46
எண்ணுக்கும், அளவு இலாத அறிவினோர் இருந்து நோக்கும்கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும், கடியன் ஆனான்,மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன் வைகும்விண்ணுக்கும், அளவை ஆன மேருவின்மீது சென்றான். 47
மேரு மலையில் அனுமன் பிரமன் முதலிய தேவர்களைக் கண்டு, வணங்கிச் செல்லுதல்
'யாவதும் நிலைமைத் தன்மை இன்னது' என்று, இமையா நாட்டத் தேவரும் தெரிந்திலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்;நாவலம் பெருந் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில்,காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தைக் கண்டான். 48
அன்ன மா மலையின் உம்பர், உலகு எலாம் அமைத்த அண்ணல்நல் நெடு நகரம் நோக்கி, அதன் நடு நாப்பண் ஆய பொன் மலர்ப் பீடம் தன்மேல் நான்முகன் பொலியத் தோன்றும்தன்மையும் கண்டு, கையால் வணங்கினான் - தருமம் போல்வான். 49
தரு வனம் ஒன்றில், வானோர் தலைத்தலை மயங்கித் தாழ,பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க,மரு விரி துளப மோலி, மா நிலக் கிழத்தியோடும்திருவோடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம் செய்தான். 50
ஆயதன் வட கீழ்ப் பாகத்து, ஆயிரம் அருக்கர் ஆன்றகாய் கதிர் பரப்பி, ஐந்து கதிர் முகக் கமலம் காட்டி,தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்தசேயிழை பாகத்து, எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான். 51
சந்திரன் அனைய கொற்றத் தனிக் குடை தலைமேல் ஆக,சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற,அந்தர வான நாடர் அடி தொழ, முரசம் ஆர்ப்ப,இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப் போனான். 52
பூ அலர் அமைந்த பொற்பின் கிரணங்கள் பொலிந்து பொங்க,தேவர்தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில்,மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான். 53
அத் தடங் கிரியை நீங்கி, அத் தலை அடைந்த வள்ளல்,உத்தரகுருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,செத்திய இருள் இன்றாக, விளங்கிய செயலை நோக்கி,வித்தகன், 'விடிந்தது!' என்னா, 'முடிந்தது, என் வேகம்!' என்றான். 54
'ஆதியான் உணராமுன்னம் அரு மருந்து உதவி, அல்லின்பாதியால், அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்சோதியான் உதயம் செய்தான்; உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்;ஏது யான் செய்வது?' என்னா, இடர் உற்றான், இணை இலாதான். 55
கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான், - 'கதிரின் செல்வன்மேல் திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேருமாற்றினான், வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்சாற்றினார்' என்ன, துன்பம் தவிர்ந்தனன் - தவத்து மிக்கான். 56
உத்தரகுரு நாட்டைக் கண்டு, அனுமன் அப்பால் போதல்
இருவரே தோன்றி, என்றும் ஈறு இலா ஆயுள் எய்தி,ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி,பொரு அரும் இன்பம் துய்த்து, புண்ணியம் புரிந்தோர் வைகும்,திரு உறை கமலம் அன்ன, நாட்டையும் தெரியக் கண்டான். 57
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்,கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி,சென்னி நாள் தெரியல் வீரன், தியாக மா விநோதன் தெய்வப் பொன்னி நாட்டு உவமை வைப்பை, புலன் கொள, நோக்கிப் போனான். 58
நீல மலைக்கு அப்பால் மருத்துமலையை அனுமன் காணுதல்
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும்பெரியவன், அயனார் செல்வம் பெற்றவன், பிறப்பும் பேர்ந்தான்,அரியவன், உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும்கரியவன் என்ன நின்ற, நீல மால் வரையைக் கண்டான். 59
அல் குன்ற அலங்கு சோதி அம் மலை அகலப் போனான்,பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான், புலவன் சொன்னநல் குன்றம் அதனைக் கண்டான், உணர்ந்தனன் - 'நாகம் முற்றஎல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம்' என்ன. 60
மருத்துமலையைக் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்று, அனுமன் அம் மலையைப் பெயர்த்தல்
பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை பாதலத்துச்சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன, தடுத்து வந்து,காய்ந்தன, 'நீதான் யாவன்? கருத்து என்கொல்? கழறுக!' என்ன,ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறியச் சொன்னான். 61
கேட்டு அவை, 'ஐய! வேண்டிற்று இயற்றி, பின் கெடாமல் எம்பால்காட்டு' என உரைத்து, வாழ்த்திக் கரந்தன; கமலக்கண்ணன்வாள் தலை நேமி தோன்றி, மறைந்தது; மண்ணின்நின்றும்தோட்டனன், அனுமன், மற்று அக் குன்றினை, வயிரத் தோளால். 62
'இங்கு நின்று, இன்னன மருந்து என்று எண்ணினால்,சிங்குமால் காலம்' என்று உணரும் சிந்தையான்,அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான்,பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான். 63
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து,ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை,'ஏ' எனும் மாத்திரத்து, ஒரு கை ஏந்தினான்,தாயினன் - உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான். 64
அனுமனை அனுப்பியபின், சாம்பனும் வீடணனும் இராமனைச் சென்று காணுதல்
அத் தலை, அன்னவன் அனையன் ஆயினான்;இத் தலை, இருவரும் இசைய எய்தினார்,கைத் தலத்தால் அடி வருடும் காலையில்,உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம் அரோ. 65
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும்கண்டன, கெழீஇ வரும் கருணை தாம் எனக்கொண்டன, கொடுப்பன வரங்கள், கோள் இலாப்புண்டரீகத் தடம் தருமம் பூத்தென; 66
நோக்கினன் - கரடிகட்கு அரசும், நோன் புகழ்ஆக்கிய நிருதனும், அழுத கண்ணினார்,தூக்கிய தலையினர், தொழுத கையினர்,ஏக்கமுற்று, அருகு இருந்து, இரங்குவார்களை. 67
இருவரது நலனையும் இராமன் வினாவுதல்
'ஏவிய காரியம் இயற்றி எய்தினை?நோவிலை? வீடணா!' என்று நோக்கி, பின்,தா அரும் பெரும் புகழ்ச் சாம்பன் தன்னையும்,'ஆவி வந்தனைகொல்?' என்று அருளினான் அரோ. 68
'ஐயன்மீர்! நம் குலத்து அழிவு இது ஆதலின்,செய்வகை பிறிது இலை; உயிரின் தீர்ந்தவர்உய்கிலர்; இனிச் செயற்கு உரியது உண்டுஎனின்,பொய் இலீர்! புகலுதிர், புலமை உள்ளத்தீர்! 69
'சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன், சிறுமையால் உற்ற பெற்றியையாது என உணர்த்துகேன்! உலகொடு இவ் உறாக்காதை, வன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன். 70
'"மாயை இம் மான்" என, எம்பி, வாய்மையான்,தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்,போயினென்; பெண் உரை மறாது போனதால்,ஆயது, இப் பழியுடை மரணம் - அன்பினீர்! 71
'கண்டனென், இராவணன் தன்னைக் கண்களால்;மண்டு அமர் புரிந்தனென், வலியின்; ஆர் உயிர்கொண்டிலென், உறவு எலாம் கொடுத்து, மாள, நான்,பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால். 72
'"தேவர்தம் படைக்கலம் தொடுத்து, தீயவன்சாவது காண்டும்" என்று இளவல் சாற்றவும்,ஆவதை இசைந்திலென், -அழிவது என்வயின்மேவுதல் உறுவது ஓர் விதியின் வென்றியால். 73
'நின்றிலென் உடன், நெறி படைக்கு நீதியால்ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்;பொன்றினர் நமர் எலாம்; இளவல் போயினான்;வென்றிலென் அரக்கனை, விதியின் வெம்மையால். 74
'ஈண்டு, இவண் இருந்து, அவை இயம்பும் ஏழைமைவேண்டுவது அன்று; இனி, அமரின் வீடியஆண் தகை அன்பரை அமரர் நாட்டிடைக்காண்டலே நலம்; பிற கண்டது இல்லையால். 75
'எம்பியைத் துணைவரை இழந்த யான், இனி,வெம்பு போர் அரக்கரை முருக்கி, வேர் அறுத்து,அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து,உம்பருக்கு உதவி, மேல் உறுவது என் அரோ? 76
'இளையவன் இறந்தபின், எவ்வம் என் எனக்கு?அளவு அறு சீர்த்தி என்? அறன் என்? ஆண்மை என்?கிளை உறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்?விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்? 77
'இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு,அரக்கரை வென்று நின்று, ஆண்மை ஆள்வெனேல்,மரக் கண் வன் கள்வனே, வஞ்சனேன்; இனி,கரக்குவது அல்லது, ஓர் கடன் உண்டாகுமோ? 78
'"தாதையை இழந்தபின், சடாயு இற்றபின்,காதலின் துணைவரும் மடிய, காத்து உழல்கோது அறு தம்பியும் விளிய, கோள் இலன்,சீதையை உவந்துளான்" என்பர், சீரியோர். 79
'வென்றனென், அரக்கரை வேரும் வீய்ந்து அறக்கொன்றனென், அயோத்தியைக் குறுகினேன், குணத்துஇன் துணை எம்பியை இன்றி, யான் உளேன்;நன்று, அரசாளும் அவ் அரசும் நன்று அரோ. 80
'படியின்மேல் காதலின், யாதும் பார்க்கிலென்,முடிகுவென், உடன்' என முடியக் கூறலும்,அடி இணை வணங்கிய சாம்பன், 'ஆழியாய்!நொடிகுவது உளது' என நுவல்வதாயினான்: 81
'உன்னை நீ உணர்கிலை; அடியனேன் உனைமுன்னமே அறிகுவேன்; மொழிதல் தீது, அது;என் எனில், இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம்;பின்னரே தெரிகுதி; - தெரிவு இல் பெற்றியோய்! 82
'அம்புயத்து அயன் படை ஆதல் தேறினென்,உம்பியை, உலப்பு அரும் உருவை ஊன்றிட,வெம்பு போர்க் களத்திடை வீழ்த்த வென்றியான்;எம் பெருந் தலைவ! ஈது எண்ணம் உண்மையால்; 83
'அன்னவன் படைக்கலம், அமரர் தானவர் -தன்னையும், விடின் உயிர் குடிக்கும்; தற்பர!உன்னை ஒன்று இழைத்திலது, ஒழிந்து நீங்கியது;இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ? 84
'பெருந் திறல் அனுமன், ஈண்டு உணர்வு பெற்றுளான்,அருந் துயர் அளவு இலாது அரற்றுவானை, யான்,"மருந்து இறைப் பொழுதினில் கொணர்குவாய்!" என,பொருந்தினன், வட திசைக் கடிது போயினான். 85
'பனி வரை கடந்தனன், பருப்பதங்களின்தனி அரசின்புறம் தவிரச் சார்ந்துளன்,இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்துனி வரு துன்பம் நீ துறத்தி, தொல்லையோய்! 86
'யான் அலால், எந்தையாய் உலகை ஈன்றுளான் -தான் அலால், சிவன் அலால், நேமி தாங்கியகோன் அலால், எனைவரும் உணரும் கோள் இலர்,-வேனிலான் மேனியாய்!-மருந்தை மெய் உற. 87
'ஆர்கலி கடைந்த நாள், அமுதின் வந்தன;கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன;மேருவின் உத்தரகுருவின்மேல் உள;யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின; 88
'தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில;ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள்:மூன்று என ஒன்றிய உலகம், முன்னை நாள்,ஈன்றவன் இறப்பினும், ஆவி ஈயுமால், 89
'சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள்புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயினநல் உயிர் ஈகுவது ஒன்று; நல் நிறம்தொல்லையது ஆக்குவது ஒன்று;-தொல்லையோய்! 90
'வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி,தரு நெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன்;அருமையது அன்று' எனா, அடி வணங்கினான்;இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான். 91
சாம்பனது உரை கேட்டு இராமன் மகிழும்போது, வட திசையிலே ஒலி எழுதல்
'"பொன் மலைமீது போய், போக பூமியின்நல் மருந்து உதவும்" என்று உரைத்த நல் உரைக்குஅன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்'என்னலும், விசும்பிடை எழுந்தது, ஈட்டு ஒலி. 92
வட திசையில் உற்ற சண்டமாருதத்தால் நேர்ந்த குழப்பம்
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர, கார் வரைஇடை இடை பறிந்து விண் ஏற, இற்று இடைதடை இலாது உடற்றுறு சண்டமாருதம்வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால். 93
மீன் குலம் குலைந்து உக, வெயிலின் மண்டிலம்தான் குலைந்து உயர் மதி தழுவ, தன்னுழைமான் குலம் வெருக் கொள, மயங்கி, மண்டி, வான்,தேன் குலம் கலங்கிய நறவின், சென்றவால். 94
வேர்த்தன தூரொடு விசும்பை மீச் செலப்போர்த்தன, மலையொடு மரனும், முன்புபோல்தூர்த்தன, வேலையை; காலின் தோன்றலும்,ஆர்த்தனன், அனையவர் அரந்தை ஆற்றுவான். 95
அனுமன் மலை கொண்டு வந்த தோற்றம்
மழைகளும் கடல்களும், மற்றும் முற்றும், மண்-உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள,குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால்-உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே. 96
எறி திரைப் பெருங் கடல் கடைய ஏற்ற நாள்,'செறி சுடர் மந்தரம் தருதி, சென்று' என,'வெறிது உலகு!' எனக் கொடு, விசும்பின் மீச்செலும்உறு வலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான். 97
பூதலத்து, அரவொடு மலைந்து போன நாள்,ஓதிய வென்றியன், உடற்றும் ஊற்றத்தன், ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்தியதாதையும் ஒத்தனன், உவமை தற்கு இலான். 98
அனுமன் வந்து, நிலத்தில் அடி இடுதல்
'தோன்றினன்' என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து ஊன்றினன், நிலத்து அடி; கடவுள் ஓங்கல்தான்வான் தனில் நின்றது, வஞ்சர் ஊர் வரஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான். 99
மருத்துமலையினின்று வந்த காற்றுப் பட்டவுடன், யாவரும் உயிர் பெற்று எழுதல்
காற்று வந்து அசைத்தலும்,-கடவுள் நாட்டவர்போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் -ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார்,கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார். 100
அரக்கர் தம் ஆக்கைகள் அழிவு இல் ஆழியில்கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய, கண்டனமரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன; குரக்குஇனம் உய்ந்தது கூற வேண்டுமோ? 101
சுழன்றன, நெடுங் கணை; கரந்த புண்; கடுத்துஅழன்றில குளிர்ந்தன, அங்கம்; செங் கண்கள்சுழன்றில;-உலகு எலாம் தொழுவ-தொங்கலின்குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான். 102
யாவரும் எழுந்தனர்; ஆர்த்த ஏழ் கடல்தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும்,-தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செங் கணான்யோகம் நீங்கினன் என, -இளவல் ஓங்கினான். 103
இராமன் தம்பியைத் தழுவித் துயர் தீர்தல்
ஓங்கிய தம்பியை, உயிர் வந்து உள் உறவீங்கிய தோள்களால் தழுவி, வெந் துயர்நீங்கினன், இராமனும்; உலகில் நின்றில,தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர். 104
அரம்பையர் வாழ்த்து ஒலி, அமுத ஏழ் இசை,நரம்பு இயல் கின்னரம் முதல் நன்மையேநிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழாவிரும்பின; முனிவரும் வேதம் பாடினார். 105
வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன;ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின்சீதம் நின்று ஆர்த்தன; தேவர் ஆர்த்தனர். 106
அயன்படை இராமனை வலம் வந்து, தொழுது அகல்தல்
உந்தினை பின் கொலை, 'ஒழிவு இல் உண்மையும்தந்தனை நீ; அது நினக்குச் சான்று' எனா,சுந்தரவில்லியைத் தொழுது, சூழ வந்து,அந்தணன் படையும் நின்று, அகன்று போயதால். 107
இராமன் அனுமனை மார்புறத் தழுவுதலும், அனுமன் இராமன் திருவடிகளை வணங்குதலும்
ஆய காலையின், அமரர் ஆர்த்து எழ,தாயின் அன்பனைத் தழுவினான்,-தனிநாயகன், பெருந் துயரம் நாம் அற,தூய காதல் நீர் துளங்கு கண்ணினான். 108
எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடுஉழுத மார்பினான், உருகி, உள் உறத்தழுவி நிற்றலும், தாழ்ந்து, தாள் உறத்தொழுத மாருதிக்கு, இனைய சொல்லுவான்: 109
இராமன் அனுமனைப் புகழ்ந்து, வாழ்த்துதல்
'முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது,என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர்மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்;நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்! 110
'அழியுங்கால் தரும் உதவிக்கு, ஐயனே!மொழியுங்கால், தரும் உயிரும் முற்றுமே?பழியும் காத்து, அரும் பகையும் காத்து, எமைவழியும் காத்து, நம் மரபும் காத்தனை. 111
'தாழ்வும் ஈங்கு இறைப்பொழுது தக்கதே,வாழி எம்பிமேல் அன்பு மாட்ட, வான்ஏழும் வீயும்; என் பகர்வது?-எல்லை நாள்ஊழி காணும் நீ, உதவினாய் அரோ! 112
'இன்று வீகலாது, எவரும் எம்மொடுநின்று வாழுமா நெடிது நல்கினாய்;ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது, நீஎன்றும் வாழ்தியால் இனிது, என் ஏவலால்!' 113
மற்றையோர்களும் அனுமனை வாழ்த்துதல்
மற்றையோர்களும், அனும் வண்மையால்,பெற்ற ஆயுளார், பிறந்த காதலார்,சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்;உற்றவாறு எலாம் உணரக் கூறினான். 114
மருத்துமலையை உரிய இடத்தில் மீண்டும் வைத்திடுமாறு சாம்பன் உரைக்க, அனுமன் போதல்
'உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார்,பொய்த்த சிந்தையார், இறுதல் போக்குமால்;மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்!' 115
என்று சாம்பன் ஆண்டு இயம்ப, 'ஈது அரோநன்று, சால!' என்று, உவந்து, 'ஒர் நாழிகைச்சென்று மீள்வென்' என்று எழுந்து, தெய்வ மாக் குன்று தாங்கி, அக் குரிசில் போயினான். 116
மிகைப் பாடல்கள்
மூன்று அரத் தாவொடும் புல்லின் முன்னம் வந்து,ஊன்றின நிலத்து அடி, கடவுள் ஓங்கருள்;வான் தனி நின்றது; வஞ்சர் ஊர் வர,ஏன்றிலது; ஆதலால், அனுமன் எய்தினான். 97-1
அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன்,வியன் கர நேமி அம் படை அவ் வெற்பினைநியங்கொடு தாங்கி விண் நின்றதால்; அதில்இயங்கிய ஊதை வெங் களத்தின் எய்தவே. 99-1
வந்த நல் மருந்தினை மருத்து வானவன்சிந்தையில் பெரு மகிழ் சிறப்பச் சேர்ந்து உறீஇ,அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர்வந்து இரைந்து, ஆர்த்து, எழும்வகை செய்தான் அரோ. 99-2

by Swathi   on 23 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.