LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)

குடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது சிலநேரம் குழந்தைகளின் கூட இருப்பதற்கு ஒப்பாகும், அத்தனை அவர்கள் உலகம் மறந்திருப்பதைக் காண்கையில் தன்னை மறந்து அன்பில் பேச்சில் குழைகையில் நமக்கே இவனா அவனென்று வியப்பைத் தரும். அதுபோல் வேறுசிலரும் உண்டு. அவர்கள் குடித்துவிட்டால் உடனிருப்பவருக்கு ஒரு அரக்கனோடு சிக்கிக்கொண்ட பயம் எழும். இவனைவிட்டு எவ்வாறு விடுபடுவேனென்றுத் தோன்றும். பயம் உள்ளே திகிலென சூழ்ந்திருக்கும். இந்த கனகனும் அப்படித்தான். குடித்துவிட்டால் பெரும் அரக்கத்தனம் பூண்டுவிடுவான். இந்தியாவில் இது புதிதாக புகுத்தப்பட்டதாலோ என்னவோ அதிகபட்ச இந்திய பிரஜைகள் குடித்துவிட்ட பிறகுதான் தன்னை எஜமானனாகவும் மனைவியை மட்டுமேதோ எடுப்புவேலைக்கு வாங்கிவந்ததாகவோ எண்ணி மிகக் கேவலமாக நடந்துக்கொள்கின்றனர்.

அம்மா மண்டையுடைந்து கீழே விழுந்திருக்க, அப்பா சிரித்துக்கொண்டு அருகில் அமர்ந்திருக்கும் காட்சி நிறைய வீடுகளில் குடித்ததற்குப்பின் சாத்தியப்படுகிறது.

கனகனும் அதைத்தான் செய்தான், சரோஜாவின் முடியை பிடித்துக்கொண்டு தரதரவென தெருவுக்கு இழுத்துவந்தான். ரத்னா ஒரு புறம் காலை கட்டிக்கொண்டு “அப்பா அம்மாவை விடுங்கப்பா” “அப்பா அம்மாவை விடுங்கப்பா”  என்று கத்துகிறாள். கதறுகிறாள். அவன் அதையெல்லாம் பெரிதாக கருதவில்லை. நேரே இழுத்துக்கொண்டுவந்து வெளியே விட்டுவிட்டு ரத்னாவை மட்டும் தூக்கி தோளில் போட்டவனாய் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டான்.

சரோஜா கதறிக்கொண்டு ஓடினாள். அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர். அவளுக்கு வலி ஒரு பக்கமென்றாலும் இன்னொரு பக்கம் அவமானமாகவுமிருந்தது. ஏனிந்த வாழ்க்கை, ஓடிச்சென்று அந்த கிணற்றில் விழுந்துவிடலாமா என்றுகூட யோசிக்கிறாள்.

திடீரென வீட்டினுள்ளே எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் சப்தம் கேட்கிறது. சரோஜா ஓடிச்சென்று கதவைத் தட்டுகிறாள். மன்னிச்சிடுங்க. மன்னிச்சிடுங்க. நான் செய்தது தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க என்று கதறுகிறாள்.

எல்லோருக்கும் ஆச்சர்யம். இவளென்ன செய்திருப்பாள். அவன் தான் குடிகாரன். நாசமா போறவன். இவள் ராசாத்தியாச்சே..

நீ ஏன் கண்ணு அழுவுற, டேய் போய் உடைங்கடா கதவை. எதிர்வீட்டுக் கிழவி ஆணையிட. விருட்டென ஓடிவந்து இரண்டு பேர் கதவை உடைத்தார்கள். அவ்வளவுதான் தாமதம், உள்ளே கனகன். கத்தியோடு நின்றிருந்தான். பதறி போய்விட்டது எல்லோருக்கும். ஒரு நொடி சரோஜா கதறிவிட்டாள். எட்டி உள்ளே பார்க்க ரத்னா கீழே விழுந்துக் கிடந்தாள்.

ஐயோ என் பிள்ளைன்னு சரோஜா ஓடிச்சென்று ரத்னாவைத் தூக்கி மடியில் கிடத்திக் கத்தினாள். முகத்தில் தண்ணீர் தெளித்தாள். மகள் எழுந்து அப்பா அப்பா என்று கேட்க.. எல்லோரும் சத்தம் போட்டார்கள். “அப்பாவா அவன் அரக்கன். என்னத்த குடியோ இது(?) எவன்தான் இவனுங்களுக்கு குடிகுடின்னு ஊத்திவிடுறானுங்களோ தெரியலை, அவனுங்களை முதல்ல அடிக்கணும். சிட்டாட்டம் குழந்தை, சீரா பொண்டாட்டின்னு வாழறதைவிட்டுவிட்டு வேறென்ன குறை இந்த நாய்க்கு..?”

சரோஜா பக்கத்துவீட்டுக்காரி தன் கணவனை நாய் என்றதும் திரும்பி அவளை முறைத்துப்பார்க்கிறாள்.

“இதுல ஒன்னு குறைச்ச இல்லை போ உனக்கு, நீ தாண்டியம்மா அவனை கெடுத்து இப்படிக் குட்டிச்சுவராக்கி வெச்சிருக்க..”

“அதுக்காக நாய்ன்னு.. ???”

“சரி விடு ரத்தம் ஒழுவுது பார், அதை முதல்ல தொடை.., வேறென்ன மனசு பதைக்கல? எங்க பிள்ளையைத்தான் படுபாவி போதைன்னுச் சொல்லி குத்திகித்தி போட்டுட்டானோன்னு பார்த்தேன்.

“சரி அப்படி என்னதாம்மா ஆச்சு..?”

“சோறு கேட்டார். போட்டேன். காரம் உப்பு போதையில, உரைக்கலைபோல கத்தினார். சரி அதை மறைச்சிகிட்டு ஏன் குடிச்சீங்க.. போன வேலை என்னாச்சுன்னு கேட்டேன் அது தப்புன்னு..” அவள் விசும்பினாள்

“சரி விடு, நாசமா போனவன் இப்படி போட்டு அடிச்சி இருக்கானே; அது சரி அதுக்கா இப்படிப்போட்டு ரகளை பண்றான்..”

“இல்லைக்கா; வாய் சும்மா இல்லாம நாந்தான் ‘உன்னை காதலிச்சு கட்டினதுக்கு வேற யாரைன்னா கட்டி இருக்கலாம்னு’ சொல்லிட்டேன். அதான் கோபம். போ எங்கனா போன்னு சண்டை..

“ஏண்டி நீயும் ஒண்ணு புரியாம ஒண்ணு இப்புடி..?”

“மனசு தாங்காம கத்திட்டேக்கா. வெளியப் போன்னு சொன்னா எங்க போறது? அதான் அப்போ என்னை ஏன் கட்டிக்கின, ஏன் இவளை பெத்துக்குனன்னு நல்லா சத்தமா கேட்டேன். அதான் எதிர்த்துப் பேசுறையான்னு அடிச்சிட்டாரு. நானும் திரும்ப என் கையில இருந்ததை தூக்கி பதிலுக்கு அடிக்க கோபம் பொங்கிப்போச்சு”

அதற்குள் இவர்களின் பேச்சையெல்லாம் கவனியாது அந்த பாப்பா மீண்டும் ‘அப்பா ‘அப்பா என்று தேம்பியழுதது.

“என்னடி ஆச்சு நீ அப்பா அப்பா ன்ற ?”

“அப்போது தான் சுதரித்தார்கள் “ஏம்பா அவன் எங்க.. கனகன் ?”

சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். “ஐயோ ஆமா கனகனை காணோமே எங்கே.. ?”

“என்னங்க.. என்னங்க... ஐயோ எங்க போனாரோ தெரியலையே..” சரோஜா கத்திக்கொண்டு எழுந்து வாசலுக்கு ஓடிவருகிறாள். எல்லோரும் ஓடுகிறார்கள். இங்குமங்கும் பாய்ந்தோடிப் பார்க்கிறார்கள். “கையில கத்திவேறு வைத்திருந்தானேயென பதட்டத்தோடு ஆளுக்கொருப் பக்கத்தில் போய் தேடுகிறார்கள்.

கனகனை காணவில்லை.

“அப்பா அறுத்துக்குனாரும்மா...” குழந்தை மெல்ல அவள் முகத்தைப் பார்த்துச் சொன்னது.

“அடக் கடவுளே!!!! என்னடி சொல்ற???!!!”

“ஆமாம்மா.. உள்ள வந்ததும் இங்கும் அங்குமா அளஞ்சாறு. அவருக்கு நீ சொன்ன வார்த்தை பெருசாயிருந்துதுபோல. வலிச்சாமாதிரி கத்தினாரு, என்னவோ ‘இப்படி சொல்லிட்டாளே’ ‘இப்படி சொல்லிட்டாளேன்னு கதறினாரு..

திடீர்னு ஏதோ நினைவு வந்தவராய் ஓடிப்போய் சமையல்அறையிலிருந்து கத்தியை எடுத்துவந்து கையை அறுத்துக்குனார்ம்மா. ஒரே ரத்தமா அடிச்சிது. அதுலதான் எனக்கு மயக்கம் வந்துடுச்சே...”

“கடவுளே கடவுளே தப்பு பண்ணிட்டேனே.. ஐயோ என் கனகு.. என்ன ஆச்சோ.. யார்னா ஒடுங்களேன்.. அண்ணே அண்ணே அங்கப்போய் பாருங்கண்ணே எதனா ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிட்டா.. ஒடுங்கன்னே பாருங்கண்ணே.. நான் செத்தேப் போய்டுவண்ணே பாருங்கண்ணே..”

அவள் ஒரு புறம் அழுதுக் கொண்டே ஓட, ஆளாளுக்கு வேறு புறமென ஓட. கனகுவை எங்கும். காணவில்லை. ஊரார் ஒரு பக்கம் தவிக்க, ரத்னாவை கூட்டிக்கொண்டு அவள் ஒரு பக்கம் தவிக்க இருட்டுவேளையில் நாலாப்புறமும் தேடியும். எங்குமே கனகனை காணவில்லை.

-----------X---------------X-------------

வீட்டிற்குள் ஓடிப்போய் ரத்தமிருந்ததை எல்லாம் பார்த்து கதறினாள் சரோஜா. அதற்குள் ஒருவர் ஓடிவந்து அம்மா அம்மா உன் புருஷன் அதோ அந்த ஏரி ஓரத்துல மயங்கி கிடக்குறான்னுச் சொல்ல, எல்லோரும் ஒரே திரளாக’ மொத்த அந்த ஊரே சேர்ந்து பதறிக்கொண்டு ஏரியை நோக்கி ஓடுகிறது. சரோஜாவின் அன்பு, தன் புருஷன் மீதானா அக்கறை, அவள் அவனை காதலிக்கும் காதல், குடிக்காதபோது கனகன் எல்லோரையும் மதிக்கும் விதமென எல்லாம்சேர்ந்து அந்த ஊரையே சற்றுநேரத்தில் ஆட்கொண்டுவிட்டது. அவள் அழுகையில் ஆறுதல் சொல்வதும். பிள்ளையைத் தூக்கிக்கொண்டு ஓடுவதுமாய் எல்லோரும் அந்த ஏரியை நோக்கிப்போக்க, சுடுகாட்டு ஓரமான ஊர் என்பதால், தூரத்தில் ஒரு பிணம் எரிவது தெரிந்தது. பிண வாடை மூக்கையடைக்க’ ஒரு மரண வாசனை எல்லோருக்குள்ளும் பரவியிருந்தது. சரோஜா சற்று மயங்கியே விட்டாள். அவளால் அதற்குமேல் ஓடமுடியவில்லை.

அவள் முகத்தில் தண்ணீர் அடித்து, ஓரிடத்தில் அமர வைத்தார்கள். ஊரார் ஓடிச்சென்றுப் பார்க்கையில் கனகன் குப்புற விழுந்துகிடந்தான். ரத்தம் கையெல்லாம் வழிந்து கீழே ஊறி உறைந்துகிடந்தது. அப்போதே வந்து விழிந்திருப்பான்போல, கொஞ்சம் சுவாசமமும் லேசான முனகலும் மட்டும் மிச்சமிருந்தது. நான்கு பேர் சேர்ந்து அவனை புரட்டிப்போட்டார்கள். உயிரிருப்பது தெரிந்து உடனே மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

 

வழியெல்லாம் சரோஜா சரோஜா என்று புலம்பினான் கனகன். என்னை மன்னிச்சிடு மன்னிச்சிடு என்று கெஞ்சினான்.. யார் பேசுவதும் அவனுடைய காதுக்கு எட்டவில்லை. அவன் மட்டும் பேசிக்கொண்டிருக்க. நண்பர்களுள் ஒருவர் முன்னரே ஓடி மருத்துவமனையின் வாசலில் மருத்துவரோடு காத்திருக்க நேரடியாக அவசரப் பிரிவுக்குக் கொண்டுப்போனார்கள்.
 
மருத்துவர் குடிப்பிரச்சனை என்றதும் சற்று தயங்கினார் முதலில். கை வேறு அறுபட்டிருக்கே காவலில் புகார் கொடுக்கவேண்டுமென்றார். அதற்குள் இப்படி விஷயம், இவன்தான் அந்த கனகன். முதலமைச்சரை வரவழைத்து மதுக்கடைகளை மூட வித்திட்டவன், இன்று ஏதோ அவர்ககுள்ளான வீட்டுப்பிரச்னை, கோவத்தில் அவனே இப்படிச் செய்துக்கொண்டான், தயவுசெய்து காப்பாற்றுங்கள் என்று எல்லோரும் கெஞ்ச, தலைமை மருத்துவர் வந்து ஓ அவரா உடனே உள்ளக் கொண்டுப்போங்க, நேரே அவசரபிரிவிற்கு கொண்டுவாங்க என்றுச் சொல்லிவிட்டு, அவரும் விருட்டென பின்னாலேயே தொடர்ந்துபோனார்.

சற்றுநேரத்தில் சரோஜா தெளிந்து மருத்துவமனைக்கு ஓடிவர. உயிருக்கு ஒன்றுமில்லையெனும் செய்தியவளுக்கு முதலாய்ச் சொல்லப்பட்டது. மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதாள். சிலநேரம் இப்படித்தான், யாரையும் ஒன்றும் செய்ய இயலாதபோது தன்னைத்தானே அடித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒருவேளை இப்படித்தானோ என் கனகுவும் தன் வலி தாளாது தன்னைத் தானே குத்திக்கொண்டானோ.. கடவுளே என் கனகுவைக் காப்பாற்று. அவனின்றி நானில்லை. அவன் அறிவாளி. அவனுக்கு தெரியும் இது தவறென்று தெரியும். இப்போதைக்கு அவனைக் காப்பாற்று. காப்பாற்று என்று வெளியே வாய்விட்டு சரோஜா அழ, அருகில் இருந்தோர் வந்து அவளை மார்பில் சாய்த்துக்கொண்டு ஆறுதல் சொல்கின்றனர். அதலாம் ஒன்றும் ஆகாது. கனகனுக்கு ஒன்றும் ஆகாது. நீ கவலையை விடு என்கின்றனர்.

-----------X---------------X-------------

என்ன வாழ்க்கையிது(?) எப்படிப் பட்ட குடும்பமிது(?) இந்தச் சின்ன வாழ்க்கைக்குள் இத்தனை பெரிய பிரச்சனைகளை புகுத்தும் இந்த குடி எல்லோருக்கும் தேவையா???

கேட்டால் ஒருநாள் என்கிறார்கள். என்றைக்கோ ஒருநாளைக்கு என்கிறார்கள். இப்படி ஒரு நாள் ஒருநாள் என்றுதான் மெல்ல மெல்ல சேரும் மழை பூமிக்கே பாரமாய் வலுப்பதுபோல் மனசும் அந்த போதைக்குள் முழுகி மூடத்துள் வலுத்துப்போய்விடுகிறது. இல்லைன்னா இப்படி ஒருவனை முட்டாளாக்குமா இந்த குடி? ஒருத்தரா இரண்டு பேரா இந்த தமிழகத்தில்? ஆயிர ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்கள் அழிய, ஏன் இந்தியாவிலேயே இருபது சதவிகிதத்திற்கும் மேல் குடும்பங்கள் பல சீரழிய இந்த குடிப்பழக்கமும் போதையும்தான் காரணமென்றால் அதை நம்மிடத்தில் இனி அண்டவிடலாமா? கூடாது. இனி போதையை நாம் அனுமதிக்கவேகூடாது என்றெல்லாம் அங்கிருந்த இளைஞர்களில் சிலர் பேசிக்கொண்டனர்.

 அப்படியே அறையிரவு கழிந்து மறுநாள் விடியயிருந்தது. மருத்துவர்களும் செவிலியர்களும் இங்குமங்குமாய் போவதும் மருந்துகள் ஏற்றுவதும். ஏதோ ரத்தம் சோதனையெல்லாம் செய்வதுமாய் இருந்தார்கள். வெளியிலிருந்த சரோஜாவிடம் கையெழுத்து எல்லாம் வேறு வாங்கிக் கொண்டார்கள். வெறும் கைய்யறுந்தது என்பதுபோக அதற்கும் மேலாக ஏதோச் செய்வதாகப் பட்டது சரோஜாவிற்கு.

 மருத்துவர் எல்லோரையும் வீட்டிற்குப் போகச்சொன்னார். சென்று நாளைக்கு வாங்க. வருத்தம் வேண்டாம் ஒன்னும் ஆகாது நாளைக்கு வாங்க பேசிக்கலாமென்றுச் சொல்லி எல்லோரையும் அனுப்பிவைத்தார்.

 சரோஜா அங்கேயே ஒரு மூளையில், மருத்துவமனைக்கு எதிரே ஒரு மூன்று நான்கு பேரோடு சேர்ந்தவாறு படுத்துக்கொண்டாள். மறுநாள் விடிந்ததும் எழுந்துப்போய் கனகனைப் பார்க்கக் கேட்டதற்கு பெரியமருத்துவர் வரணும். தனிப்படுத்தப்பட்ட அறையில் ஐசொலேசனில் வைத்திருக்கோம். அவர் வந்தாதான் மீதி விவரமெல்லாம் தெரியவரும் என்றார்கள். சரோஜா அந்த வழியிலேயே ஒரு ஓர சுவற்றில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள். நேரம் நகர்ந்து நகர்ந்து சூரியன் மேலேற உள்ளிருந்து பெரிய மருத்துவர் வந்தார். சரோஜா பதறி ஓடினாள். “பயப்படாதீங்கம்மா, ரத்தம் தான் அதிகமா போயிருக்கு. வேற ரத்தம் கொடுத்திருக்கோம். கைக்கு தையல் போட்டிருக்கோம். ஆனா அவர் மயங்கி விழுந்ததுக்கு காரணம் அது இல்லை..”

“வேற??!!!!” பெரிய ஆச்சர்யத்தோடு விழிகளை உயர்த்தினாள் சரோஜா.

எல்லோரும் திகைப்பில் அதிர்ந்து அவரைப் பார்த்தார்கள்.

அவருக்கு நேற்று மைல்ட் அட்டாக் வந்திருக்கு. அளவுக்குமீறி குடிச்சதுல ஈரல் வெந்துபோய் புண்ணாகி கவனிக்காம விட்டதால மேல மேல மீண்டும் புண் அதிகமாகி அதுக்கு மேலையே குடிச்சி குடிச்சி இப்போ புற்றுநோய் வரைக் கொண்டுபோய் விட்டிருக்கு. அப்சலூட்லி உங்க கணவருக்கு முற்றிய லிவர் கேன்சர். எந்த நேரத்துலயும் அது வெடித்து ரத்தம் வெளியே பரவினா உடனே உயிர் போகும்..

தொடரும்..

 

வித்யாசாகர்!

by Swathi   on 09 Apr 2016  0 Comments
Tags: Oru Koppai   Madhu   Madhu Kathai   மது   கண்ணீர்   கொஞ்சம் மது     
 தொடர்புடையவை-Related Articles
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்! ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்!
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3) ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்..
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38 நலம் காக்கும் சித்த மருத்துவம் – 38
ஆயிரம் கால் மண்டபம் - மதுரை ஆயிரம் கால் மண்டபம் - மதுரை
நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்… நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.