|
||||||||
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை! |
||||||||
![]() உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை! பெருமதிப்பிற்குரிய் தனிநாயக அடிகளார், தமிழ்மொழியின் பெருமைகளைத் தாயகத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் மட்டுமன்றி, அயலகத்தில் வாழ்ந்துவரும் தமிழரல்லாத பிற உலக மக்களும் அறிந்து போற்றிட வேண்டும் என்று மாபெரும் தமிழ்க் கனவு கண்டார். அதற்குத் தமிழறிந்த அறிஞர்கள் பலரும், உலகளாவிய ஆராய்ச்சி செய்து, தமிழ்மொழியின் பெருமைகளை உலகத்தினர் அனைவருக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பதனைத் தொடங்கி, முதலாம் உலகத் தமிழ் மாநாட்டை, மலேசியாவின் கோலாலம்பூரிலே சிறப்பாக நடத்தினார். தனியானதோர் ஆராய்ச்சி இதழையும் இதற்கென நடத்தினார். இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை, அறிஞர் அண்ணா அவர்கள், 29 நாடுகளிலிருந்து அயலக அறிஞர்கள் பலரையும் அழைத்து வந்து, மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். ஆய்வரங்குகளில், தமிழியல் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சித் தாள்கள், சிறப்பான ஆய்வாளர்களைக் கொண்டு விவாதிக்கப்பட்டன. அவை யாவற்றையும் தொகுத்து வெளியிட்டு, அவற்றுக்குத் தொகுப்புரையாக அறிஞர் அண்ணாவே ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் குறிப்புகளின் மீது, இங்கிலாந்து நாட்டின் அறிஞர் பேரா. ஆஷர் அவர்கள், “இது போல் ஓர் ஆய்வுத் தொகுப்புரை இவ்வளவு சிறப்பாக இதுவரை எழுதப்பட்டதில்லை, இனியும் எழுதப்படூமா என்பது ஐயப்பாடு தான்” என்று சிறப்புக் குறிப்பு எழுதினார். இரண்டாவது மாநாட்டிலே பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்பும், சிறப்பான கலைநிகழ்ச்சிகள் பலவும், பொது அரங்கில் நிகழ்ந்தேறின. 11 தமிழறிஞர்களின் திருவுருவச் சிலைகள் திறக்கப்பட்டன. உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த விழாவாக அத்தமிழ் விழா நடந்தேறியதை நானே என் கண்ணால் கண்டு களித்தேன். மூன்றாம் மாநாடு பிரான்சின் தலைநகர் பாரீசிலும், நான்காம் மாநாடு ஈழத்தின் யாழ்ப்பாணத்திலும் உலகத் தமிழறிஞர்கள் ஒருங்குகூடிச் சிறப்புற நடைபெற்றன. அதன் பின்னர் நடந்த சிலபல மாநாடுகள், அரசியல் கலப்பின் காரணமாக, ஆய்வுத் தரம் குறைந்ததாகவே கருதப்பட்டன. 2019-இல் நடைபெற்ற பத்தாவது மாநாட்டில், அமெரிக்கப் பெரும் பல்கலைக்கழகங்கள் - சிகாகோ, ஆர்வார்டு, பென்சில்வேனியா, பெர்க்லி, மற்றும் செருமனியின் கொலோன் பல்கலைக்கழகம் யாவும் இணைந்து, உலக ஆய்வுத் தரத்திலே சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சிலர், சொந்த விருப்புவெறுப்பு காரணமாக, ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுத்தாள்களே மாநாட்டில் இடம்பெற வேண்டும் என்ற பல்கலைக்கழக நெறிமுறையை ஒப்புக்கொள்ள மாட்டாது, தன்னல நோக்கங்களால் பொறுப்பை வலிந்து கைப்பற்றிக் கொண்டனர். அவர்கள் யார் என்பதே தெரியாத காரணத்தால், இச்சீரிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்கத் தயங்கின. சிகாகோவில் நடந்த மாநாட்டிற்குச் சிகாகோ பல்கலைக்கழகமே பங்கேற்க முடியாத அவலநிலை உருவானது. முதன்மைமிக்க அயலகப் பல்கலைக்கழகங்களில் இருந்து ஆய்வுக்கட்டூரைகள் வரவில்லை என்றதும், நமது தாயகங்களிலிருந்து ஆய்வுத்தாள்கள் எழுதியனுப்பிட வேண்டுகோள் விடுத்தோம். கட்டுரைகள் குவிந்தன. உலகத் தரமான கட்டுரைகள் ஒருசிலவே இருப்பினும், அனைவரையும் பெரும் பொருட்செலவில் அமெரிக்கா வரவழைத்து, ஒரு பெரும் தமிழர் மாநாடாக நடத்தினோம். கடைசியில் தமிழ்நாட்டு அரசின் ஆதரவும் பொருளுதவியும் கிடைத்தது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டுவிழா, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா என்று முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டதில் பெருங்கூட்டம் கூடியது. ஆராய்ச்சி மாநாட்டின் உலகத்தரம் சற்றுக் குறைவாகவே இருப்பினும், பெருமளவு உலகத் தமிழர்கள் கூடியது மிக்க ஆறுதலைத் தந்தது. ஆனால் அதே மாநாட்டில், அதே தன்னலம் மிக்க சிலரால், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தையே பிளவுபடுத்தும் கூட்டமும் நடத்தப்பட்டு, இப்போது மலேசியாவில் ஒரு மாநாடும், சென்னையில் ஒரு கூட்டமுமாகப் பிளவுபட்டு நடக்கின்றது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஒரு சிறந்த அயலகத் தமிழறிஞரைத் தலைமைப் பொறுப்பு ஏற்கச்செய்ய வேண்டும். உலகத்” தமிழ் மாநாடு, அதன் பேரில் உள்ளது போலவே, "உலகளாவிய முறையில் நடந்தால் தான், தமிழ்மொழியின் சீர்மை உலகமெலாம் பரவும். உலகப் பல்கலைக்கழகங்களில் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சி பெருகும். அதுவே தனிநாயக அடிகளாரின் மாபெரும் தமிழ்க் கனவு. அக்கனவை நனவாக்க நாம் பணிகளைத் தொடரவேண்டும். அரசியல் மாநாடுகளும், தன்னலம் மிக்க தனிப்பட்டோர் நடத்தும் கூட்டங்களும், தமிழியலின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என்பதே அறிஞர் பெருமக்களின் கருத்தாகவுள்ளது. அதைச் செவிமடுத்து,
இனிவரும் காலத்தில் அடிகளாரின் உலகத் தமிழ்க் கனவை நனவாக்குவோம்.
- சோம. இளங்கோவன் ஒருங்கிணைப்பாளர் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ, அமெரிக்கா.
நாள்: சூலை 10, 2023. |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 10 Jul 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|