|
||||||||||||||||||
ஆடிப்பெருக்கும் ஆட்டனத்தியும்! - மேகலா இராமமூர்த்தி, வட கரோலினா,அமெரிக்கா |
||||||||||||||||||
- மேகலா இராமமூர்த்தி, வட கரோலினா, அமெரிக்கா ஆடித் திங்கள் பதினெட்டாம் நாளை 'ஆடிப் பெருக்கு' என்று கொண்டாடுவது நம் மக்களின் வழக்கம். இந்நாளில் கலவைச் சோறுகளைத் (சித்திரான்னங்கள்) தயாரித்து, காவிரியாற்றங்கரையில் அமர்ந்து உண்டுமகிழ்வர். அத்தோடு, பல மங்கலப் பொருட்களையும் காவிரியன்னைக்குப் படைத்தின்புறுவர். அவ்வினிய வேளையில் காவிரியின் புதுவெள்ளத்தோடு மக்களின் மகிழ்ச்சி வெள்ளமும் சேர்ந்தே பாயும்! முற்காலத்தில் ஆடிப்பெருக்கானது ’புனல் விழா’ என்ற பெயரில் காவிரியாற்றின் துறைமுகப் பகுதிகளில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. புதுப்புனல் பாய்ந்துவரும் ஆடி மாதத்தின் ஒரு நன்னாள்! கழார் எனும் காவிரியாற்றின் துறையில் நீர்விழாக் கொண்டாடிக்கொண்டிருந்தான் பீடும் பெருமையும் கொண்ட கரிகாற் பெருவளத்தான்! ஆட்டத்தில் வல்லவனும் (அன்றைய பிரபுதேவா!)😎கரிகாலனின் மருமகனுமான சேரமான் ’ஆட்டனத்தி’ (ஆட்டத்தில் சிறந்திருந்ததால் அத்தி எனும் பெயர்கொண்ட அவன் ஆட்டனத்தி என்றே அழைக்கப்பட்டிருக்கிறான்) அவ்விழாவில் நீர் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அப்போது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராதவிதமாய் அவன் அடித்துச் செல்லப்பட்டுவிட்டான்! அவன் நடனத்தைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் எதிர்பாராத இந்த நிகழ்வுகண்டு திகைத்தனர். இதனால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த கரிகாலன் மகளும், அத்தியின் மனைவியுமான ஆதிமந்தி, “என் கணவரைக் காப்பாற்றுங்கள்!” என்று அலறிக்கொண்டே காவிரியின் கரையோரமாய் ஓடினாள். காவிரி கடலில் கலக்கும் இடத்தருகே வந்து நின்றாள் மூச்சிரைக்க! அப்போது ஆங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது! கடலிலிருந்து தோன்றிய ஓர் இளம்பெண் சுயநினைவற்ற நிலையில் இருந்த அத்தியைத் தன் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு கரையோரமாய் வந்தாள். ஆதிமந்தியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. விரைந்தோடிச்சென்று தன் கணவனைப் பற்றினாள். நல்லவேளை! அவன் உயிரோடுதான் இருந்தான். ஆதிமந்தி அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏது? எல்லாம் சரி….கடல்நடுவே திடீரென்று தோன்றி அத்தியைக் காத்த அந்த அதிசயக் கன்னி யார்? அவள் பெயர் ‘மருதி.’ அவள் அத்தியின் முன்னாள் காதலி என்கின்றனர் சிலர். கடலே அத்தியைக் கரையொதுக்கியது; ’மருதி’ பாத்திரம் கற்பனையாகப் புனையப்பட்டது என்று சொல்வாரும் உளர். நான் அருகிலிருந்து பார்க்காததால் எது உண்மை என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ;-) இந்த வரலாற்று நிகழ்வால் ஈர்க்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன், ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்றை, ’சேர தாண்டவம்’ எனும் பெயரில் நாடகமாகவும், கவியரசு கண்ணதாசன் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் பெயரில் சுவையான குறுங்காவியமாகவும் படைத்தனர். இந்தக் கதையே மக்கள் திலகம் எம்ஜிஆர், அஞ்சலி தேவி, பத்மினி ஆகியோர் நடிக்க மன்னாதி மன்னன் திரைப்படமாகவும் பின்னர் எடுக்கப்பட்டது. சோழன் கரிகாலனின் அருமை மகளான இந்த ஆதிமந்தியே தமிழிலக்கியத்தில் பெண்பாற் புலவர்களில் ஒருவராகப் போற்றப்படும் ’ஆதிமந்தியார்.’ மள்ளர் குழீஇய விழவி னானும் (குறுந்: 31) எனும் குறுந்தொகைப் பாடல் ஆதிமந்தியார் எழுதியதாகப் பதிவாகியிருக்கிறது. ”வீரர்கள் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும் பெருமைமிக்க என் தலைவனை நான் காணவில்லை. யானும் ஓர் ஆடுகள மகளே; என் கையிலுள்ள சங்கு வளையல்களை நெகிழச் செய்த என் தலைவனும் ஓர் ஆடுகள மகனே” என்பது இப்பாடலின் பொருள். தன் வாழ்க்கைச் சம்பவத்தையே சுவையான பாடலாய் வடித்துள்ளார் ஆதிமந்தியார் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது! ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் 18-ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை இந்த ஆடிப்பெருக்கு விழா குறிக்கும். இதில் புதுமணத் தம்பதிகளுக்கு முதல் ஆடிப்பெருக்கில் தாலிப்பெறிக்கி போடுவது வழக்கம். இதை "பதினெட்டாம் பேர்" என்று வழக்கத்தில் அழைப்பதும் உண்டு. தமிழர்களின் முக்கிய விழாக்களில் பொங்கல், கார்த்திகை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகியவை சிறப்பானவை... |
||||||||||||||||||
by Swathi on 03 Aug 2018 4 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|