|
||||||||
ஐயனாரைத் தேடி-1 - கை.அறிவழகன் |
||||||||
நண்பர்கள் குழுவில் பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, இடையில் நண்பன் தயாள் ஒரு வேண்டுகோள் வைத்தான். "நம்முடைய நிலப்பகுதியில் (சிவகங்கை மாவட்டம் மற்றும் மதுரையைச் சுற்றி) நாட்டார் வழிபாட்டு முறைகள் அதிலும் குறிப்பாக ஐயனார் மற்றும் கருப்பசாமி வழிபாடு குறித்து நீ ஒரு ஆய்வு நோக்கிலான கட்டுரை எழுது."
"காந்தாரா திரைப்படம் (First Chapter) முன்வைத்த மலைக்காடுகளின் நாட்டார் வழிபாட்டு முறை எப்படி மனிதர்களின் ஆதி நினைவுகளைக் கிளறிப் பெருவெற்றி அடைந்தது" என்பது குறித்து அவன் பேசினான்.
அது போன்றதொரு கதையை நாம் மெல்ல மெல்ல திரைப்படமாக்கலாம் என்பது அவனது எண்ணம்.
பஞ்சாயத்து இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை, நேற்று இரவில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது இடையில் வந்து வாய்க்கு வந்தபடி என்னைத் திட்டித் தீர்த்தவன் அதற்குப் பிறகு அரவமேயில்லை.
அது ஒரு இனம்புரியாத நேசம், அவன் அப்படிப் பேசுவதையோ அல்லது நான் அவனுக்கு உறுத்தும் வகையில் பதில் தருவதையோ நீங்கள் யாரேனும் வாசிக்க நேர்ந்தால் அவ்வளவுதான். அவ்வளவு கடுமையான தாக்குதல்கள் நடக்கும்.
ஆனாலும், அது எங்களுக்குள் இருக்கும் தடையற்ற அன்பு, அது காலத்திற்கும் எங்களுக்கு வேண்டும். அப்படி நாங்கள் சண்டையிட மறந்து போனால் நாங்கள் உண்மைக்கு வெகுதொலைவில் இருக்கிறோம் என்பதுதான் அதன் அற்புதமான உட்பொருள்.
அடுத்த நாள் காலையில் நாங்கள் நேற்று எதுவுமே நடக்காததைப் போல வேறொன்றைக் குறித்து உரையாடுவோம். (The most exclusive format of Love which remains forever in such conversations).
சரி, நாம் விஷயத்துக்கு வருவோம், நாட்டார் வழிபாடு, ஐயனார், கருப்பசாமி என்று தயாள் பேசியதும் இரவு முழுவதும் பழைய நினைவுகள் சுற்றி வளைக்க அந்த மாய உலகிற்குள் புகுந்து கொண்டது மனம்.
நான் முதன்முதலாகப் பார்த்த ஐயனார் காரைக்குடி நாட்டான் கண்மாயில் இருந்து குறுக்கு வழியாக சங்கந்திடல் போகிற வழியில் இருந்தது. பெரிய பெயர் தெரியாத மரம் அடர்ந்து நிலத்தை அடைத்துக் கிடக்க, எதிரே இருக்கிற பசுந்தண்ணீரைப் பார்த்தபடி நிற்கிற ஐயனார்.
பெரும்பாலும் ஆளரவமற்ற நிலம் அது. ஆடு, மாடு மேய்க்கிற வயதான மனிதர்கள் அல்லது பச்சைத் தவளை பிடிக்கிற சில வளையர்கள் எப்போதாவது தென்படுவார்கள். அது தவிர்த்து ஏகாந்தமாகவும் ஒரு அமானுஷ்யமான உணர்வு தரக்கூடியதாகவும் குளிர் காற்றும், பறவைகளும் சுற்றித் திரிகிற இடம் அது.
அங்கிருக்கிற ஐயனாருக்கு வயதிருக்கலாம், வரலாறு இருக்கலாம். ஆனால், அங்கு சுற்றித் திரியும் காற்றுக்கு என்ன வயதிருக்கலாம்? போன்ற பதில் தெரியாத கேள்விகளைக் கேட்டபடி என்னுடைய அரை சைக்கிளில் சுற்றித் திரிந்த காலத்தின் நினைவுகள்.
பிறகு கண்டவராயன்பட்டி பெரிய கண்மாய் முகப்பில் மரத்தடியில் அமர்ந்திருக்கிற ஐயனாரும், எண்ணற்ற புரவிகளும் (மண் குதிரைகள்) எனக்கு நெருக்கமானவை.
அத்தை பிள்ளைகளோடு சேர்ந்து கோடைக்காலங்களில் கிரிக்கெட் விளையாடிய நினைவு இப்போதும் நிறைந்து கிடக்கிறது. புரவி எடுப்பு என்றொரு பெரிய விழா நடக்கும், ஊரின் எல்லா சமூக மக்களும் பங்குபெறுகிற விழா அது.
அதன் பிறகு கல்லலுக்குப் போகிற வழியில் செவரகோட்டை விலக்கிளோ, கருகுடி விலக்கிளோ, ஐயனாரையும் அவரது குதிரைகளையும் பார்த்ததாக நினைவு. நினைவுகள் பெருகப் பெருக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கிராமங்களின் கண்மாய்க் கரைகளில் அமர்ந்திருக்கும்
"இந்த ஐயனார் யார்?
"இவரை தமிழர்கள் ஏன் வழிபடுகிறார்கள்?"
"எப்போதிலிருந்து வழிபடுகிறார்கள்?"
என்றொரு தேடலை நோக்கி செலுத்தியது அந்த உரையாடல். பண்டைத் தமிழக வரலாறு, ஐயா தொ.பரமசிவத்தின் சில தமிழக நாட்டார் வழிபாடு குறித்த நூல்கள் என்று தேடித்தேடி வாசித்திருக்கிறேன்.
ஆனால், ஐயனார் அல்லது கருப்பசாமி என்ற இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளை நோக்கி இல்லாமல் வேறு சில வரலாற்றுக் குறிப்புகளை எடுப்பதற்கு அவற்றை நான் பயன்படுத்தி இருக்கிறேன்.
இடையில் அன்பு நண்பன் பாண்டியன் களத்தி ஐயனார் பதிகம் என்றொரு நூலின் பிரதியை அனுப்பி வைத்திருந்தான். எனது சேமிப்பில் இருந்த சில நூல்கள், பழைய வலைப்பூக்களில் குறிப்பாக கிடைத்த சில ஆய்வு நோக்கிலான சில கட்டுரைகள் (PR லட்சுமியின் தமிழ்செல்வா), என்று ஐயனாரைக் குறித்த ஒரு திடமான முடிவுக்கு வந்து விடுவதற்கு ஏங்கியது மனம்.
தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறார் போல என்று இலகுவாகப் போனவனுக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தது. கர்நாடகாவின் வடகிழக்கு மாவட்டங்கள் குறிப்பாக உடுப்பி மற்றும் கேரளத்தை ஒட்டிய நிலப்பகுதிகளில் ஐயனார் சரியாக கண்மாய்க் கரையோரங்களில் அமர்ந்திருக்கிறார்...
அதே தோற்றம், ஒரு காலை மடக்கி ஒரு காலைக் கீழிறக்கிபடி செண்டாயுதங்கள் மற்றும் துணை நாட்டார்கள் புடை சூழ...
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா என்று தென்னிந்தியா முழுவதும் ஐயனார் நீக்கமற கண்மாய்க் கரைகளில் அல்லது ஊரின் எல்லையில் ஊர்களுக்குப் பிரிந்து போகிற முச்சந்திகளில் எல்லாம் ஐயனார் இருப்பது உறுதியாகி விட்டது. பல இடங்களில் அவருக்குப் பக்கத்தில் இருப்பது கருப்பசாமி, பேச்சியம்மாள், கருப்பி, சிவப்பி.
சரி, தமிழர்களின் அல்லது தென்னிந்தியர்களின் வாழ்வோடு இணைந்து கிடக்கிற ஐயனார் எப்படியும் இலங்கையில் இருப்பார் என்று ஒரு சுற்றுப் பார்த்தால் யாழ்ப்பாணத்தின் அனலைத்தீவு ஐயனார், கந்தரோடை ஐயனார், முல்லைத்தீவு குருந்தூர் மலையடிவாரத்தில் அமர்ந்திருக்கும் ஆதி ஐயனார், புத்தலம் முனீசுவரன் ஐயனார் என்று ஐயனார் தமிழர் நிலங்களில் எல்லாம் வலம் வந்திருக்கிறார்.
இதில் கந்தரோடை ஐயனார் ஏற்கனவே பௌத்தர்களும் வழிபடும் விகாரையாகப் பார்க்கப்பட்டாலும், வழிபாட்டு முறைகள், உருவ மற்றும் தளவாட அடையாளங்கள் முழுவதும் நமது சங்கந்திடல் ஐயனாரை அப்படியே பிரதி எடுத்தது போல்...
குருந்தூர் மலையடிவாரத்தின் ஐயனார் 2009 இறுதிப் போருக்குப் பிறகு பௌத்த விகாரையாக ராஜபக்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசால் மாற்றப்பட்டது கூடுதல் செய்தி.
ஆனால் மிகப்பெரிய வியப்பு இதற்குப் பின்புதான், இலங்கையின் வரலாற்றில் "ஐயநாயகே" என்று ஒரு வழிபாட்டுக்குரிய தெய்வம் இருக்கிறது. இலங்கையின் பௌத்தமத வழிபாடுகள் மற்றும் பண்பாட்டில் ஐயநாயகே முக்கியமான தெய்வம்.
குறிப்பாக சிங்கள பௌத்த மரபுகளில். அவரை கிராமப் பாதுகாவலர் அல்லது கிராம தெய்வமாக வணங்குகிறார்கள் சிங்களர்கள், கிராமிய சமூகங்கள், விவசாயம் மற்றும் உள்ளூர் நலன்களைப் பாதுகாக்கும் பூதக்கடவுள் இந்த ஐயநாயகே.
இலங்கையில் ஐயனாயகேயின் வழிபாடு இடைக்காலத்தில் (தோராயமாக கி.பி. 10–15 ஆம் நூற்றாண்டு) உருவானது, கண்டி இராசதானியில் (1469–1815) கிராம அடிப்படையிலான வழிபாடுகள் உயர்ந்து செழித்த காலத்தில். இந்த ஐயனார் சகாப்தம் மத்திய மலைப்பகுதியில் சிங்களக் கிராமங்களில் நிறுவப்பட்டு வளர்ச்சி பெறுகிறது.
தென்னிந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான வணிகம், இடம்பெயர்வு மற்றும் சோழர் படையெடுப்புகளிலிருந்து (10–11 ஆம் நூற்றாண்டு) ஐயனார் அறிமுகமாகி இருக்கலாம் என்று நாம் கருதினாலும்...
ஐயனார் அதற்கு அனுமதி மறுத்து அதற்கு முன்னிருந்த கண்டி மற்றும் அனுராதபுரம் மாதிரியான மனிதத் தோன்றல் வரலாற்று நிலத்தின் கிராமங்களால் நீர்நிலைகளுக்கு முன்பாக அமர்க்களமாக எப்படி அமர்ந்தார்?
"ஐயனாயகே" என்ற பெயர் சிங்கள மற்றும் தமிழ் வேர்களிலிருந்து வருகிறது, "ஐயா" என்கிற சொல் தமிழ் மற்றும் சிங்களத்தில் "தலைவர் / ஆண்டவர்" என்றோ "மூத்த சகோதரர்" என்றோ பொருள் தருகிறது, "நாயகே" என்ற சொல் சிங்களத்தில் "தலைவர்" அல்லது "முதல்வர்".
ஐயநாயகே, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சடங்குகளில் பயிர்ப் பாதுகாப்பு, விவசாயத்திற்குப் பயன்படும் நீர்நிலைப் பாதுகாப்பு, காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற துன்பங்களிலிருந்து சிங்களர்களைப் பாதுகாக்கிறார்.
அவர் அறுவடைத் திருவிழாக்களின் போது அல்லது கிராமப் பாதுகாப்பு சடங்குகளின் போது தவறாமல் அழைக்கப்படுகிறார். அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள், "ஐயனாயகே தேவாலயம்" என்று அழைக்கப்படும், "சபரகமுவ" மற்றும் "உவா" மாகாணங்களின் கிராமிய பகுதிகளில் பொதுவானவை, அங்கு அவை கூட்டு சமூக மையங்களாகவும் செயல்படுகின்றன.
இதெல்லாம் வியப்பல்ல, அச்சு அசலாக நமது கண்மாய்க் கரைகளில் அமர்ந்திருக்கும் ஐயனாருக்கும் இந்த ஐயநாயகேவுக்கும் உருவத்தில் பெரிய வேறுபாடுகளே இல்லை.
பொதுவாக நீர்நிலைகளில் அமர்ந்தபடியும், (காலும் அதே ஸ்டைல் தான்) வெட்டவெளிகளில் பெரிய குதிரை சிலையில் அமர்ந்து செண்டு, ஈட்டி அல்லது திரிசூலம் மாதிரியான ஆயுதம் ஏந்தியவாறு, அதே உதவியாளர்கள் புடை சூழ நிற்கிறார். சில இடங்களில் யானைகளுடன்...
கண்டி இராசதானியின் காலத்தில், விமலதர்மசூரிய II (1687–1707) போன்ற அரசர்களின் கீழ், ஐயனாயகே அல்லது ஐயனார் போன்ற உள்ளூர் தெய்வங்கள் வெவ்வேறு இனக்குழுக்களை (சிங்களர், தமிழர் மற்றும் வேடர்) ஒருங்கிணைக்க அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலக் காலனித்துவப் பதிவுகள் (1815–1948) 19 ஆம் நூற்றாண்டில் ஐயனாயகே சன்னதிகளை நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இயக்கமாக அல்லது இடங்களாக அடையாளம் காட்டுகின்றன. ஆதிக்குடிகளின் பூர்வீக நில உரிமைகளைப் பேணுவதில் அவரது பங்கை வலியுறுத்துகின்றன.
தமிழகத்தில் ஐயனாரின் கதை சில தென்மாவட்டங்களில் கள்ளர்களின் கதையோடும், வரலாற்றோடும் இணைத்துப் பேசப்பட்டாலும், தெற்காசியா முழுவதும் அவருக்கு ஒரு பொதுத்தன்மை இருக்கிறது.
அவருக்குத் துணையாக எப்போதும் நிற்கிற கருப்பசாமி பல்வேறு சமூகங்களின் பொதுக் கடவுளாகவே தனித்தும் வழிபாடு செய்யப்படுகிறார்.
யாரிந்த ஐயனார்? ஒரே ஆள் தானா? இல்லை ஊருக்கு ஒருவரா? சிவராத்திரிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? சபரிமலை ஐயப்பன் ஐயனார் தானா?
விடை தெரியாத பல கேள்விகள் நமக்கு முன்னே சுவர் கட்டி நிற்கிறது. தேடுவோம். பழமையைத் தேடிச் சென்று வரலாற்றை செம்மைப்படுத்துவது தானே நிறுவனமயமாக்கப்பட்ட ஒற்றைக் கோட்பாட்டு நவீன மத வழிபாட்டை உடைக்க ஒரே வழி.
தேடுவோம்,கண்டடைவோம்...ஐயனார் ஆய்வுக் கட்டுரை தொடரும்...
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
| by Swathi on 05 Dec 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|