|
||||||||
ஐயனாரைத் தேடி - 3 -கை.அறிவழகன் |
||||||||
ஐயனாரைத் தேடி...3 ஐயனாரைத் தேடிப் புறப்படும் பாதையெங்கும் தொடர்ந்து தமிழர் வரலாற்றின் நெடி திகைப்பளிக்கிறது. எனது பழைய சிந்தனைகளின் தொகுப்பில் தமிழர் மெய்யியலின் துவக்கம் ஆசிவகத்தின் தோற்றமும் வளர்ச்சியுமாக இருக்கலாம் என்ற ஒரு மயக்க நிலை இருந்தது. ஆனால் அந்த மயக்க நிலையை இந்த ஐயனார் குறித்த ஆய்வு நோக்கிலான பார்வை மாற்றி அமைக்கிறது. ஆசிவகம் ஏறத்தாழ கிமு 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் துவங்குகிறது. ஏறத்தாழ 8 நூற்றாண்டுகள் வரை அதாவது கிமு 14 ஆம் நூற்றாண்டு வரை அதன் தாக்கம் காணக்கிடைக்கிறது. ஆனால், ஐயனார் குறித்த குறிப்புகள் கிமு 5 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களின் வரலாற்றில் இடம்பெறுகிறது என்பதை சில வரலாற்று அறிஞர்கள் (எ.கா : தமிழ்நாட்டு வரலாறு - முனைவர் அ.ராமசாமி) ஏற்கனவே எழுதி விட்டார்கள். அப்படியானால், தமிழர்களுக்கான மெய்யியல் ஆசிவகமே என்ற வாதம் கொஞ்சம் பின்வாங்குகிறது. நமக்கான தெளிந்த மெய்யியல் அதற்கு முன்பாகவே இடம் பெற்றிருக்கிறது என்கிற இடத்தை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும். சரி, அப்படியானால், தமிழர்களின் வரலாற்றை நிலத்தோடு இணைத்து சரி பார்க்க வேண்டும். உலகம் முழுவதும் பழங்கற்காலம் கிமு 35,000 த்தில் இருந்து கிமு 10000 வரை, இந்தக் காலத்தின் தமிழர் நிலவியல் ஆய்வுகள் புரூஸ் புரூட் என்பவரால் 1863 ஆம் ஆண்டில் அகழ்வாய்வு நடத்தி அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இவர் இப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்லாவரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தனது ஆய்வை மேற்கொண்டு சில பழங்கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார். அப்போது நியாண்டர்தல் தமிழர்கள் வேட்டைக்குடி நாடோடிகளாக இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கிறது. சமூக அமைப்பு இல்லை, நிலையான வாழிடம் இல்லை, கற்கருவிகள் முறையாக செதுக்கப்பட்டிருக்கவில்லை. இறந்தவர்களை அப்படியே விட்டுச் செல்லும் நிலைதான். பிறகு இடைக் கற்காலம் வருகிறது, முறையான வேட்டை துவங்குகிறது, நன்கு வடிவமைக்கப்பட்ட கற்கருவிகள் கிடைக்கிறது, இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் தமிழர்களிடம் வந்து சேர்கிறது. குழுவாக இயங்கும் முறை பழக்கமாகிறது. அடுத்தது புதிய கற்காலம், முறையான சமூக அமைப்பில் வாழத் துவங்குகிறார்கள், நெருப்பின் பயன்பாடு துவங்குகிறது, பயிரிடும் முறைகளைக் கற்றுக் கொண்டு விட்டார்கள். படகு செய்வது, நெசவு செய்வது போன்றவை அறிமுகமாகிறது. இக்காலத்தில் நெருப்பையும், மழையையும் பாம்பையும் வழிபடுகிறார்கள் தமிழர்கள். (அதாவது தமிழ் நிலத்தின் ஆதி மனிதர்கள்). புதிய கற்காலத்துக்குப் பிறகு, உலகெங்கும் பொதுவாக தாமிர யுகம், அல்லது வெண்கல யுகம் தோன்றுகிறது. ஆனால், தமிழக நிலவியலில் எந்த ஆய்வுகளும் இந்த தாமிரம் அல்லது வெண்கல யுகத்தை (Copper age and Brass Age) கண்டுபிடிக்க முடியவில்லை. நேராகத் தமிழர்கள் இரும்பு யுகத்திற்குள் நுழைந்து விட்டார்கள். தாழிகள், இரும்புப் பயன்பாடு தங்க நகை வடிவமைப்பு, அழகு சாதனப் பொருட்கள், அணிகலன்கள், குழந்தைகளுக்கான உலோக பொம்மைகள் என்று செழித்துக் கொண்டாடத் துவங்கி விட்டார்கள் தமிழர்கள். இனக்குழுக்கள் தனியாக அறியப்படவில்லை, தமிழ் நிலத்திலேயே பிறந்து வளர்ந்த பழங்குடிகள், பிறகு பல்வேறு நிலப்பரப்புகளில் இருந்து வந்த பிற பழங்குடிகளுடனான கலப்பு என்று அதிலும் நம்மவர்கள் பரந்த சிந்தனைகளோடு கலந்து விட்டார்கள். இந்த இடத்தில் நாம் லெமூரியாக் கண்டக் கோட்பாட்டைக் குறித்துப் பேசியாக வேண்டும். லெமூரியாக் கண்டம் என்பது இன்றும் உயிர்ப்போடு பல தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் முன்வைக்கும் கடலில் மூழ்கிப் போன பெரும் நிலப்பரப்பு. குமரிக் கண்டம் என்றும் இதனை சிலர் குறிப்பிடுகிறார்கள், ஆனால், ஒரு புவி அமைப்பியல் மாணவனாக, கடல்சார் ஆய்வுகள் குறித்த புரிதல் உள்ள எளிய வாசிப்பவனாக பல்வேறு ஆய்வுகளை ஆழமாகக் கவனித்தால் இந்தியப் பெருங்கடலில் கடலுக்குக் கீழே புதைந்த நிலம் உயரமான மேடும் பள்ளமுமான மலைகள் நிறைந்தது. இந்த மலைப் பகுதிகள் ஆழ்கடல் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள் வழங்கும் ஆதாரங்களின் அடிப்படையில் மனிதர்கள் வாழ்வதற்கான தகுதியற்ற கரடுமுரடான நிலம். கூர்மையான மிக உயரமான மலைகள் அதிலும் அந்த மலைத் தொடர்களின் நெருக்கமும் பள்ளத்தாக்குப் பகுதிகளும் மானுட உயிர் வாழ்வு குறித்த எந்த முகாந்திரமும் இல்லாத நிலைதான். ஆகவே, லெமூரியாக் கண்டம் அதன் பரப்பில் தமிழர் நிலம் என்பது பெரிய அளவில் ஏற்றுக்கொள்வதற்கான அறிவியல் தரவுகள் இல்லை. ஆனால், சங்க காலத்தின் வரிசையை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றைப் பார்க்கும் போது நமது இலக்கியங்கள் மட்டுமில்லாமல் வடவர்களின் இலக்கியங்களில் குறிப்பாக வியாசரின் மகாபாரதமும், வால்மீகியின் ராமாயணமும் பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரமான கபாடபுரத்தை குமரி நிலப்பகுதியில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. பாண்டியர்களின் முதல் தலைநகரமான தென்மதுரை ஆழிப்பேரலையில் மூழ்கிப் போனதை நமது இலக்கியங்கள் உறுதிபட எடுத்து வைக்கிறது. தென்மதுரை இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய பிறகு பாண்டியர்கள் தங்களது இரண்டாம் தலைநகரை கபாடபுரத்தில் அமைத்துக் கொள்கிறார்கள். இரண்டாவது ஆழிப்பேரலை கபாடபுரத்தையும் கடலுக்குள் தள்ளி விடுகிறது. பிறகு மூன்றாவது சுனாமி மணலூர் மற்றும் பெரும்பாலான பாண்டியர் ஆண்ட நிலத்தை மூழ்கடித்து விடுகிறது.இதற்கான குறைந்த பட்ச தரவுகள் நம்மிடம் உண்டு. இலக்கியக் குறிப்புகள், பயணக் குறிப்புகள் மற்றும் சில கடல் சார் ஆய்வுகள் பெரும்பான்மையான குமரி நிலத்தை கடற்கோள் கொண்டதற்கான ஆதாரங்கள். இந்த இடத்தில் நாம் சில யூகமான முடிவுகளுக்கு வந்தே ஆக வேண்டும். குமரிக் கண்டம் அல்லது லெமூரியா என்கிற கோட்பாடு வேண்டுமானால் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், நமது பெரும்பான்மையான செழித்து வளர்ந்திருந்த நாகரீக நிலமானது கடலுக்குள் மூழ்கியது என்கிற உண்மைதான் அது. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு வியப்பான தகவல் நம்மை திடுக்கிட வைக்கிறது. அது சிந்துசமவெளி நாகரீகம் தான் தமிழர் நாகரீகம் என்கிற முந்தைய பெரும்பான்மைப் கருதுகோள். நானே கூட சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து தென்னிந்தியாவிற்குள் தமிழர்கள் வந்து சேர்ந்திருத்கலாம் என்பதுதான் அது. ஆனால், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளில் துவக்க கால மனிதக் குடியிருப்புகள் இங்கு கிமு 6000 நூற்றாண்டில் துவங்கி இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். சிந்து சமவெளி நாகரீகம் தோராயமாக கிமு 3300 இல் துவங்கி வளர்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதே காலகட்டத்தில் தமிழர் நாகரீகம் தனது இருப்பை ஆதிச்சநல்லூரில் பறைசாற்றுகிறது. எப்படிப் பார்த்தாலும் கிமு 3500 காலத்தில் தமிழர்கள் நாகரீகத்தில் செழித்து வளர்ச்சி அடைந்து விட்டார்கள். கி.மு 6000 ஆண்டுகளில் தமிழ் பிராமிக் குகை சித்திரங்கள் தோன்றி விட்டது. அப்படியானால் குறைந்தது கிமு 4000 வாக்கில் நாம் மொழியை செதுக்கி இன்னும் சிறப்பான நாகரீக மனிதர்களாக உருமாறி இருப்போம். இந்த வரலாற்றுக் கால வரிசையில் கிமு 500 களில் ஐயனார் தமிழகத்திற்குள் வந்து அமர்ந்து விட்டார். அதாவது ஆசிவகத்துக்கு முன்பாகவே என்பதுதான் தலைசுற்ற வைக்கிறது. 4000 ஆண்டுகளுக்கு முந்தைய ஐயனார் வைத்திருக்கிற மாதிரியான வாள் சிவகங்கை சிவகங்கை மாவட்டம் சேவினிப்பட்டியில் ஒன்றும், வேலூர் அருகே ஒரு கிராமத்தில் எட்டும், கோவை பகுதியில் இரண்டும் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு அருங்காட்சியகங்களில் இருக்கிறது. அப்படியானால் ஆசிவகத்திற்கு நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னதாகவே தமிழகத்துக்கு ஐயனார் வந்து விட்டார். ஐயனார் தாய்த் தமிழகம் மட்டுமல்லாது தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும், தோன்றி வளர்ந்த இலங்கை மாதிரியான நாடுகளிலும் ஏற்கனவே ஜம்மென்று அமர்ந்திருக்கிறார். இன்னொரு சிக்கல், ஐயனார் பல இடங்களில் குதிரையில் அமர்ந்திருக்கிறார், பல இடங்களில் யானையில் அமர்ந்நிருக்கிறார். யானைகள் புழக்கத்தில் இல்லாத சமவெளிப் பகுதிகள் பலவற்றின் ஐயனார் கோவில்களில் ஐயனார் யானையில் அமர்ந்து காவல் காக்கிறார். இது ஒரு சிக்கலான முடிச்சு, இந்த முடிச்சை அவிழ்ப்பதற்கான சான்றுகள், தரவுகள் மற்றும் நூல்கள் நமக்குக் கிடைத்தால் ஐயனார் என்கிற இந்த உலகின் பழமையான காவற்காரரை நாம் யார் என்று கண்டுபிடிக்கலாம். தேரிக்காடு ஐயனார் - தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள தேரிக்குடியிருப்பு என்னும் இடத்தில் அமைந்துள்ள கற்குவேல் அய்யனார் கோவில் புகழ்பெற்றது. இந்த கோவில், தேரிக்காடு என்று அழைக்கப்படும் செம்மண் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது ஒரு தனிச்சிறப்பு. தேரிக்காடு உருவான கதை முற்காலத்தில் இந்த நிலப்பகுதி மானவீர வளநாடு என்று அழைக்கப்பட்டு, செழிப்பான விவசாய நிலமாக இருந்ததாக ஒரு கதை உண்டு. அங்கு ஒரு மன்னன் இருந்தான். அவனது அநீதியான செயலால் பாதிக்கப்பட்ட ஒரு விதவைப் பெண், அந்த நாடு மண்மாரி பெய்து செம்மண் பாலைவனமாக மாறும்படி சபித்தாள் என்கிறார்கள். ஆனால், தனக்கு ஆதரவாக இருந்த கற்குவேல் அய்யனார் குடிகொண்டிருக்கும் இடம் மட்டும் அழியாமல் இருக்க வேண்டும் என்று வாழ்த்தி இருக்கிறாள். அந்த சாபத்தின் விளைவாகவே, வளமான நாடு இன்று தேரிக்காடாக மாறிவிட்டது என்றும், அய்யனார் கோவில் மட்டும் இங்கு நிலைபெற்று இருப்பதாகவும் ஒரு வாய்மொழிக் கதை வழங்கி வருகிறது. சிறப்பு வாய்ந்த 'கள்ளர் வெட்டு' திருவிழா இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி மூன்று நாட்கள் 'கள்ளர் வெட்டு' திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஐயனார் தனது பரிவார தெய்வங்களிடம், ஊருக்குள் திருடும் கள்ளனை உயிரோடு பிடித்து வரச் சொல்வது இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாகும். திருவிழாவின் இறுதியில், கோவிலின் பின்புறமுள்ள செம்மண் மேட்டில் (தேரியில்) இளநீர் வெட்டப்படும் சடங்கு நடக்கும். வெட்டப்பட்ட இளநீரிலிருந்து தரையில் விழும் நீர் புனிதமாகக் கருதப்பட்டு, மண்மீது பட்ட அந்த செம்மண்ணை பக்தர்கள் தங்கள் விளைநிலங்களில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டுகிறார்கள். சொரிமுத்து அய்யனார் கோவில் : பாபநாசம் அருகில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் பழமையானதும் சிறப்பு வாய்ந்ததுமாகும். பாபநாசத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், பாபநாசம் ரிஷப தீர்த்தத்தின் அருகில் இந்தக் கோவில் உள்ளது. இது ஒரு கட்டுமானக் கோவிலாக மாற்றம் பெற்றிருக்கிறது. ஐயப்பனின் முதல் நிலையாக, (ஆதி சாத்தன் / சாஸ்தா) சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் இங்கு வந்து மாலை அணிந்து கொள்கிறார்கள். இந்தக் கோவில் சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசுகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கும், கிராமங்களுக்கும் சொரிமுத்து அய்யனாரே காவல் தெய்வமாக இருந்து வந்துள்ளார். (கம்யூனிச இயக்கத் தலைவர் ஐயா ப.ஜீவானந்தம் அவர்களின் இயற்பெயர் சொரிமுத்து என்று நண்பர் ஒருவர் தகவல் கொடுத்தார்.) சிறப்புத் திருவிழா: ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இந்தக் கோவிலில் மிகப்பெரிய திருவிழா நடைபெறுகிறது. இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடி அய்யனாரை வழிபடுகின்றனர். இங்கு முண்டன், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசுவாமி, பட்டவராயர் போன்ற பல பரிவார தெய்வங்களும் ஐயனாரோடு துணையிருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தின் (கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள்) பழமையான அய்யனார் கோவில்கள் பல காணக்கிடைக்கிறது. கொங்கு மண்டலத்தில் அய்யனார் வழிபாடு மிகவும் பழமையானது. அவர் இந்த நிலப்பகுதியில் கிராமத்துக் காவல் தெய்வமாகவும் (தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே சாஸ்தா என்ற பெயரிலும்) வணிகப் பெருவழிகளைக் காக்கும் தெய்வமாகவும் போற்றப்படுகிறார். கொங்கு மண்டலத்தின் பழமையான அய்யனார் சிற்பங்கள்/கோவில்கள் கொங்கு மண்டலத்தில் பழமையான கோவில் கட்டடங்களை விடவும், பழமையான அய்யனார் சிற்பங்களும், கல்வெட்டுகளும் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகில் கிடைத்த அய்யனார் சிற்பம் மிகப் பழமையான அய்யனார் சிற்பங்களில் ஒன்று, சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.பி. 8-ம் நூற்றாண்டு அல்லது 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். இந்தச் சிற்பத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வட்டெழுத்து என்பது தற்போதைய தமிழ் எழுத்துக்களுக்கு முன் வழக்கத்தில் இருந்த எழுத்து முறை என்பது குறிப்பிடத்தக்கது. அய்யனார் மகாராஜா லீலாசனத்தில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்க விட்டபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்தப் பகுதி கொங்கப் பெருவழி என்றழைக்கப்பட்ட பண்டைய வணிகப் பெருவழியில் அமைந்திருந்ததால், வணிகர்களைக் காக்கும் பொருட்டு இங்கு ஐயனார் வந்து சேர்ந்திருக்கிறார். திருப்பூர் சின்னாரிப்பட்டி கம்பதீஸ்வரர் சிவன் கோவிலில் இந்த அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டது. இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் பின்புறம் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. பல்லவ மன்னனான இராஜசிங்க பல்லவன் இப்பகுதியை ஆட்சி செய்தபோது, தேவனென் வெட்கோ (குயவர் இனத்தைச் சேர்ந்த தேவனென்) என்பவர் இந்தச் சிற்பத்தை வடித்ததாக அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கண்டியன் கோவில் அய்யனார், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் கண்டீஸ்வரன் சிவன் கோவிலுக்குப் பின்னால் இந்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு அய்யனார் தனது துணைவியர் பூர்ணா மற்றும் புஷ்கலாவுடன் வீற்றிருந்து வழிபடப்படுகிறார். இதுவும் கொங்கு நாட்டின் முக்கியமான அய்யனார் வழிபாட்டுத் தளங்களில் ஒன்று. கொங்கு மண்டலம் முழுவதும் பொதுவாக, கொங்கு மண்டல கிராமங்களில் அய்யனார் அதே பந்தாவுடன் ஒரு காலை மடக்கி மற்றொரு காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறார். இங்கும் அய்யனார் கோவில்கள் பெரும்பாலும் ஊரின் எல்லைப் புறங்களில் நீர்நிலைகளுக்கு அருகே அல்லது வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. பெரும்பாலான கோவில்களில் பிரம்மாண்டமான களிமண் குதிரைகள், யானைகள், நாய்கள் போன்ற துணை சிலைகள் அய்யனாருக்கு காணிக்கையாக வைக்கப்பட்டு, காவல் தெய்வமாக வழிபடுகிறார்கள். அவர் கையில் சாட்டைக் கம்புடனும் அதிகாரத்தின் சின்னமாக இருப்பார். கொங்கு மண்டலத்தில் அய்யனாரை வழிபடும் மரபு, பண்டைய வணிகப் பாதைகள், காவல் தெய்வ வழிபாடு, நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு காரணிகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும் ஐயனார் தனது பரிவாரங்களோடு, குறிப்பாக கருப்பசாமியோடும், குதிரை மற்றும் யானைகளோடு அமர்ந்திருக்கிறார். கால்களை அதே நிலையில் ஒன்றை மடக்கியும், ஒன்றைத் தொங்கவிட்டபடியும் தான் அமர்கிறார். செண்டை, கதா, அரிவாள், சாட்டை என்று பல்வேறு பாதுகாப்பு ஆயுதங்களோடு இருக்கிறார். கொடுமீசைக்காரர். இறைச்சியும், சாராயமும் பல இடங்களில் படைக்கப் படுகிறது. ஒரே உருவ ஒற்றுமை, ஆனால் ஊருக்கு ஏற்ற வெவ்வேறு பெயர்கள். யாரிந்த ஐயனார்? எனக்கே ஒரு பெரிய ஆர்வமும், கிளர்ச்சியான உணர்வும் தோன்றுகிறது. ஐயனாரை யாரென்று கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று... நண்பர்கள் பலர் பழைய ஆவணங்கள், செய்திகள் என்று அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள், ஐயா ரத்னவேல் சில நூல்களை அனுப்பி இருக்கிறார். நம்மோடு, தமிழர் வாழ்வோடு கி.மு 500 ஆண்டுகளில் இருந்து வருகிற ஒரு காவல் தெய்வத்தின் வரலாற்றை நாம் தேடுவதும், பொது சமூகத்துக்கான அவரது பணிகளை ஆவணப் படுத்துவதும் மிக முக்கியமான பணி. தேடுவோம், கண்டடைவோம்... ஐயனாரின் தேடுதல் தொடரும்... ஐயனாரைத் தேடி...5 ஐயனாரைத் தேடி...5 ஐயனார் அத்தனை எளிதாகப் பிடி கொடுக்கிறவராக இல்லை, தமிழர்களின் பழங்கால வழிபாட்டு முறைகள் (கி.மு. 500க்கு முந்தைய காலம்) "மெகாலித்திக்" எனப்படும் பெரிய கற்காலத்தில் இருந்து பிரம்மாண்டமாக விரிகிறது. இது கற்காலம், செப்புக்காலம், இரும்புக் காலம் போன்றதொரு காலம் அல்ல, உலகெங்கும் பல்வேறு காலகட்டங்களில் ஒரே மாதிரியான கல் கட்டுமான மரபு பரவிய ஒரு பண்பாட்டு நிகழ்வு. பெருங்கற்காலம் கி.மு 3000த்தில் துவங்கி கி.மு 300 வரை உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட அகழாய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் வழியாக நிறுவப்பட்டிருக்கும் காலம். இந்தியா, ஐரோப்பா, இந்தோனேஷியா, ஆப்ரிக்கா, கொரியா மற்றும் பரவலாக உலகெங்கும் பெருங்கற்காலக் கட்டுமானங்கள் காணக்கிடைக்கிறது. "டோல்மென்" எனப்படும் மேசை வடிவக் கல்லறைகள், "மென்ஹிர்" எனப்படும் நிற்கும் கல் தூண்கள், கல் வண்ணங்களால் குறிக்கப்பட்ட நினைவிடங்கள், கற்பெட்டி அடக்கம் (சிஸ்ட்), கல்லுறை அடக்கம், மற்றும் தாழி அடக்கம் போன்றவை இந்தக் காலத்தின் மிக முக்கியமான அடையாளங்கள். பெரும்பாலும் இந்த கற்கால அடையாளங்கள் மூன்று முக்கியமான பொருளடக்கம் கொண்டது. முதலில் இறந்தோருக்கான கல்லறைகள், முன்னோர் வழிபாடு, எல்லைக் குறியீடுகள் மற்றும் வானிலையைக் கணிக்கும் இடங்கள். தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 1000த்துக்கும் மேற்பட்ட செழுமையான மெகாலித்திக் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் உலக அளவில் பேசுபொருளாக மாறிய இடங்கள் ஆதிச்சநல்லூர், பொருந்தல், கொடுமணல், கீழடி ஆகியவை. ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்), காலம் கி.மு. 1500–1000 வரை, கிடைத்த தொல்லியல் சான்றுகள் : இரும்புப் பொருட்கள், கல்லுறை அடக்கம் (தாழிகள்), தங்க மகுடம். கீழடி (சிவகங்கை மாவட்டம்) காலம் கி.மு. 600–300 வரை, கிடைத்த தொல்லியல் சான்றுகள் : கல்லுறை, பாண்டங்களில் கீறல் குறியீடுகள், உலகளாவிய நகர்ப்புற வணிகத் தொடர்புக்கான சான்றுகள், தங்க அணிகலன்கள்.| கொடுமணல் (ஈரோடு மாவட்டம்) காலம் கி.மு. 300 வரை, கிடைத்த தொல்லியல் சான்றுகள் : இரும்பு உருக்காலை, மாணிக்க மணிகள், ரோமானியத் தொடர்பு. பொருந்தல் (திண்டுக்கல் மாவட்டம்), காலம் கி.மு. 500 வரை, கிடைத்த தொல்லியல் சான்றுகள் : கண்ணாடி மணிகள், நெல் புதைகலன்கள். தெற்காசியாவின் முதல் இரும்புப் பயன்பாடு கி.மு 1200 வரையிலான மெகாலித்திக் ஆய்விடங்களில் கிடைத்திருக்கிறது. இது வட இந்தியாவின் வண்ணம் பூசப்பட்ட மட்பாண்டக் (Painted Grey Ware - PGW) காலத்திற்கும் முந்தையது. தமிழகத்தில் நீர்நிலைகள் (ஆறு, குளம், கடல்) அருகே காவல் தெய்வங்கள் பரவலாக உண்டு, தமிழர் நாட்டார் வழிபாட்டு அடையாளங்களான இவை தமிழ் நிலமெங்கும் வழிபாட்டு முறைகளில் ஒரே மாதிரியானவை. கிராம எல்லையில் அமைந்த கோயில்கள், கண்மாய்களுக்கு அருகில் இருக்கும் டெரகோட்டா மண் குதிரைகள், அடர் மரங்கள், அலைகள் (அம்மன், கருப்பு சாமி, பேச்சி, சுடலைமாடன்). இவை பெரும்பாலும் மழை, விளைச்சல், நோய் மற்றும் காட்டு விலங்குகள் தடுப்புக்கு பாதுகாவலர்கள். நம்முடைய ஐயனாரிடம் பிற நாட்டார் தெய்வங்களிடமும் இரும்பாலும், பிற உலோகங்களாலும் ஆன அரிவாள், வேல், செண்டு போன்ற ஆயுதங்கள் கி.மு 1500 முதலே காணக் கிடைக்கிறது. அப்படியானால் இரும்பு மற்றும் உலோகப் பயன்பாட்டில் நாம் முன்னோடிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கான முழுமையான தரவுகள் நம்மிடம் உண்டு. நெருப்பு எப்படி ஆதிக்குடிகளின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து நவீன மனிதர்களை உருவாக்கியதோ அதே போல் நவீனப் பழங்குடி மனிதர்களின் வாழ்வில் உலோகப் பயன்பாடு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இரும்பு உலகெங்கும் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே புழக்கத்திற்கு வந்துவிட்டது. இன்றைய துருக்கியான, அன்றைய ‘ஹிட்டைட் பேரரசில்’ (The Hittiite Dynasty), கி.மு.1400 முதல் கி.மு.1200 வரையான காலங்களில், இரும்பு முதன்முதலாக அறிமுகமாகியது என்று வரலாற்றுக் குறிப்புகள் தரவுகளோடு சொல்கின்றன. அதாவது கி.மு 1200 இல் ஆதி மனிதர்களின் இரும்புக் காலம் துவங்குகிறது. பனியுகம், கற்காலம் இவற்றைக் கடந்து இரும்பு யுகம் கி.மு 1500 வாக்கில் துவங்கியதாக ஆய்வாளர்கள் சொல்லி வந்தார்கள். 3000 ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ முதன்முதலாகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட இரும்பை, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கண்டு பிடித்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதல்ல செய்தி. இயல்பாகத் தனிமங்களின் கண்டுபிடிப்பு என்பது மனித வரலாற்றில் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் நிகழ்ந்தே வந்திருக்கிறது. பிற உலோகங்களைப் போல, மனிதனால் இரும்பை அத்தனை எளிதாகக் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை. தனி மனிதர்களால் கண்டறியப்படாத வகையில் அது கொஞ்சம் சிக்கலான தனிமம். பிற மதிப்புமிக்க உலோகங்களாக மாறிய தங்கம், தாமிரம், துத்தநாகம், அலுமினியம், காரீயம் போன்றவை பாறைப்படிவுகளில் அல்லது தாதுமணலில் கலந்திருக்கும். இவற்றைப் பிரித்து எடுப்பதற்கு மானுடக் கூட்டுழைப்பு மட்டுமே தேவை. ஆனால், இயற்கையாகத் தாதுமணலில் தூய இரும்பு கிடைப்பதில்லை. கலப்படமற்ற தூய இரும்பு (Fe), மிக எளிதாக வளிமண்டல ஆக்சிஜனுடன் (Oxygen) வேதிவினை கொண்டு, இரும்பு ஆக்சைடாக (Ferric oxide) மாறி விடும். இரும்பு ஆக்சைட் மட்டுமே இயற்கைத் தாது மணலில் (Iron Ore) கலந்திருக்கும். இரும்பு ஆக்சைடு மூன்று வகைகளில் கிடைக்கும். முதல் வகை இரும்பு ஆக்சைடு (FeO) நிலையாக இருப்பதில்லை. இது ஆக்ஸிஜனுடன் (O2) சுலபமாக வினைபுரிந்து, ‘Fe2O3’ என்னும் அடுத்தவகை இரும்பு ஆக்சைடாக மாறிவிடுகிறது. ஆகவே, முதல் வகை மிகவும் அரிதானது. ஆனால், பிற இரண்டு ஆக்சைடு வகைகள் தாதுமணலாக் கிடைக்கின்றன. சிவப்பு, பழுப்பு, கருப்பு வண்ணத்தில் மண் அல்லது பாறைகளோடு காணப்படும். இவற்றை வேதியியலில் ஹெமடைட் (Hemetite), மக்னடைட் ( Magnatide) என்பார்கள்.இந்த இரண்டு தாதுமணற் கலவையில் இருந்து தான் தூய இரும்பு வார்க்கப்பட வேண்டும். ஆனால் இந்த வேதிவார்ப்புச் செயற்பாட்டுக்கு மிகப்பெரிய அறிவியல் துணை வேண்டும். நவீன எந்திரங்களைப் போன்ற பெருவுலைகள் வழியாக நினைத்துப் பார்க்க இயலாத வெப்ப அளவை உருவாக்க வேண்டும். இயல்பான நிலமேற்பரப்பு மண் பெரும்பாலும் பழுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். கரிசல் நிலங்களில் மண் கருப்பு வண்ணத்திலும், வறண்ட நிலங்கள் சிலவற்றில் சிவப்பு கலந்த பழுப்பாகவும் இருக்கும்.ஆனால், இரும்புத் தாது கலந்த மேக்னடைட் அல்லது ஹேமடைட் உள்ளடங்கிய மண்ணின் நிறம் இவற்றில் இருந்து நுட்பமாக வேறுபட்டது. தாது மணலை வெப்பமயப்படுத்தும் போது உலோகங்களைப் பிரிக்கலாம் என்ற அறிவியல் தமிழர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் என்பதால் அவர்கள் இரும்பையும் அதே வழிமுறைகளில் தனித்தெடுக்க முயற்சி செய்தார்கள். வழக்கமாக வேறு சில உலோகங்களைப் பிரிக்கக் கையாளும் வழிமுறையாக மரக்கட்டைப் படுக்கையின் மீது மண்ணைக் கொட்டி உருக்கும் தொழில்நுட்பம் கைகொடுக்கவில்லை. இரும்புத் தாது நேரடியாக உருகாது, முதலில் அதிலுள்ள ஆக்ஸிஜனை நீக்க வேண்டும் (Reduction Process) கார்பன் அனல் உலையில் (Blast Furnace) 1,200–1,500°C வெப்பத்தில் திரவ இரும்பு உற்பத்தி செய்யப்பட வேண்டும். இப்போதுதான் மானுட குலம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ஒப்பற்ற தொழில்நுட்பத்தை தமிழர்கள் கண்டைகிறார்கள். ‘இரும்பிற்கான காற்று அனல் உலை’ (Bloomery Furnace) தமிழர்களால் உருவாக்கப்பட்டது. கி.மு.700 களில் சூடான் நாட்டில் களிமண்ணால் உருவாக்கப்பட்ட அனல் உலைகள் (Bloomery Furnaces) பயன்படுத்திய வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. அனல் உலைகள் அங்குதான் முதன்முதலாக உருவாக்கப் பட்டதாக இதுவரை சொல்லப்பட்டு வந்தது. இரும்பு தனித்த உலோகமாக மிக மென்மையானது, ஆனால் வண்ணமும் உறுதியும் அற்றது. இரும்புக் குழம்பை உறுதியாக மாற்ற அதனுடன் குறிப்பிட்ட அளவில் அதனுடன் கார்பன் கலக்கப்பட வேண்டும். மிகக்குறைந்த அளவிலான சரி விகிதத்தில் கார்பன் கலக்கப்பட வில்லையெனில் அது உருக்குலைந்து பயன்பாட்டுக்கு உதவாது. நாம் இப்போது ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை நோக்கித் திரும்ப வேண்டும். இங்கெல்லாம் தமிழர்கள் இரும்பை அதாவது கார்பன் கலந்த இரும்பு எஃகுவை உருவாக்கியிருக்கிறார்கள். எப்படி, எங்கே, ஏன் இரும்பைத் தமிழர்கள் மிக இலகுவாகக் கையாண்டார்கள் என்ற கேள்வியோடு சித்த மருத்துவத்தின் புடம் போடுதல் என்கிற பழங்கால அறிவியல் மருத்துவ முறையையும் நாம் உள்ளீடு செய்து கொள்ள வேண்டும். சித்தர்கள் உருவாக்கிய மருத்துவமுறை தமிழர்களின் சித்த மருத்துவம், சித்த மருத்துவத்தை யார் கண்டுபிடித்தார்கள்? ஆதி சித்தரான சிவன் பார்வதிக்கு அருளியதை, அவர் சிவகணங்களான அவரது உதவியாளர்களுக்கு வழங்க, அதில் ஒருவரான நந்திதேவர், பிறகு அகத்தியருக்கு அருளினார் என்கிறது சித்த மருத்துவ வரலாறு. இரும்பைத் தமிழர்கள் அணுகிய விதமும், அதனோடு தொடர்புடைய சித்த மருத்துவ அறிவியலும் இன்னும் ஊடாக வருகின்ற சிவனுக்கும், ஐயனாருக்கும் ஒருவேளை தொடர்பு இருக்கலாமோ என்று வேறொரு பக்கமாக இழுத்துச் செல்கிறது இந்த ஐயனார் தேடல்... ஐயனார் குறித்த தேடல் தொடரும்... ஆய்வுக்கு இதுவரை உதவிய நூல்கள் : 1) தமிழர் வரலாறு - கா.கோவிந்தன் 2) ஒத்தைக் காளை வண்டியும், முத்துசாமி ராவும் - அ.கா.பெருமாள் (நூல் கொடை - ஐயா.ரத்னவேல்) 3) History and Doctrines of the Asivakas (A.L. Basham, 1951) 4) Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom (G. Shanthi) 5) கல் மேல் நடந்த காலம் - சு.தியோடர் பாஸ்கரன் 6) Discovery of Steel (Iron) by Tamils - Article by Rajshivank |
||||||||
|
||||||||
|
||||||||
| by Swathi on 05 Dec 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|