|
||||||||
ஐயனாரைத் தேடி - 2 -கை.அறிவழகன் |
||||||||
ஐயனாரைத் தேடி - 2... ஐயனாரைத் தேடிப் போகும்போது பாதைமாறிப் போகும் நிலை வந்துகொண்டே இருக்கிறது, மேருமலைக்குப் மேற்புறமாக இருக்கும் நாகரீகம் சு-மேரு (சுமேரியா) நாகரீகம் என்றும்... கீழ்புறமாக இருக்கும் நாகரீகம் கு-மேரு (குமர-குமரி) நாகரீகம் என்றும் தரவுகளோடு பல்வேறு ஆய்வு நோக்கிலான கட்டுரைகள் காணப்படுகிறது, முதல் பத்திகளில் இருந்தே அவை நம்மை ஆழமாக இழுத்துச் சென்று விடுகிற உள்ளடக்கம் கொண்டவை. ஆனால், ஆனால், நமது இலக்கு ஐயனாரைத் தேடுவது அவரோடு துணைக்கிருக்கிற கருப்பசாமியையும் இன்ன பிற தமிழர் தெய்வங்களையும் தேடுவது என்பதால் விருப்பமில்லாமல் அவற்றில் இருந்து வெளியேறி வரவேண்டி இருந்தது. ஏறத்தாழ 100 ஆண்டுகளாக கடவுள் மறுப்புக் குடும்பப் பின்னணியில் வந்தவன் நான், ஐயா சங்கரன் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்தவர், அவருடைய தந்தையார் அழகன், அவருடைய தந்தையார் பெரியாம்பிள்ளை. பெரியாம்பிள்ளை குறித்த வரலாற்றுப் பதிவுகளோ, வாய்வழிச் செய்திகளோ கிடைக்கவில்லை, ஆனால், பாட்டனார் அழகன் ஒரு கிராமப் பூசாரியாக, சாமியாடியாக அறியப்பட்டவர், அவர் குறித்த பல்வேறு செவிவழிக் கதைகள் ஏறத்தாழ "திரில்லர்" கதைகள் போலிருக்கும். கத்தரிக்காய் கொடுக்காத ஒரு சக விவசாயி பனைமரத்தில் ஏறி இருந்தபோது "அங்கேயே இரு" என்று சொல்லிவிட்டுச் செல்ல, அவர் நீண்ட நேரமாக மரத்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்ததாகவும், பிறகு அவரே திரும்ப வந்து "சரி, சரி, இறங்கி வாப்பா" என்று சொன்ன பிறகு அவர் இறங்கியதாகவும் ஒரு கதை உண்டு. ஒருவர் இருவர் இல்லாமல் பலரும் சொல்வதைக் கேட்டு அதற்குப் பின்னாலிருக்கும் உளவியல் என்ன என்று யோசித்திருக்கிறேன். Fear of Processing என்பது அதில் முக்கியமானது, எந்த உறுதியான காரணிகளும் இல்லாமல் உடலின் இயக்கத்தை மூளையில் உறையும் அச்சம் நிறுத்தி விடும், அப்படி ஏதேனும் இருக்கலாம் என்பது எனது முடிவு. இப்போது எதற்காக இந்த சுயபுராணம்? என்று நினைப்பீர்கள், ஐயா சங்கரன் கம்யூனிச சிந்தனைகள் வழியாக திராவிட இயக்கத்தை வந்து சேர்ந்தவர், தந்தையார் தீவிரமான கடவுள் மறுப்பாளர், கடவுளர் குறித்த சிந்தனைகள், கோவில்கள் குறித்த அடிப்படை அறிவு ஏதுமற்ற நான் ஐயனார் அல்லது கருப்பசாமி குறித்த ஆய்வுக் கட்டுரையை நோக்கி ஏன் நகர வேண்டும்? ஒற்றைக் காரணம் மட்டுமே அதன் பின்னணி, தொடர்ந்து நாட்டார் வழிபாடு செய்யும் இடங்களில் எல்லாம் கடவுள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவராகவே இருக்கிறார். சிலைகளைத் தொட்டு சடங்குகளை செய்கிற எளிய மனிதர்களின் உரிமைகளும், விடுதலை உணர்வும் நாட்டார் வழிபாட்டு முறைகளில் தமிழ் சமூகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. வேதாகமக் கட்டுப்பாடுகளும், நிறுவனமயமாக்கப்பட்ட ஒற்றை நவீன வழிபாட்டு முறைகளும் கோவில்களையும், கடவுளர்களையும் மக்களிடம் இருந்து பிரித்தன, இந்தியா முழுவதும் எளிய மக்கள் எப்படியெல்லாம் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். அங்கெல்லாம் ஒற்றை சமூகம் எப்படி கோவில்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது? அங்கெல்லாம் உழைக்கும் எளிய மக்களால் பேசப்படும் ஒற்றை மொழி எப்படி ஒரு தேசத்தின் பொது வழிபாட்டு மொழியாக மாறியது? அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலும், வரலாற்றுப் பின்னணியும் மிக முக்கியமானது. முதலாளித்துவ உலகின் வணிக உள்ளீடுகள் எப்படி இன்று நவீன மத விழாக்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி அவர்களை அலைக்கழிக்கிறது? வருணாசிரம அடுக்குகளை மிக நுட்பமாக அவை எப்படிப் பாதுகாக்கின்றன? நாம் எப்போது நிறுவனமயமாக்கப்பட்ட இந்த மத வழிபாட்டு முறைகளுக்குள் நுழைந்தோம் போன்ற கேள்விகள் தான் ஐயனாரைத் தேடி என்னை அழைத்துச் செல்கிறது. சரி நாம் ஐயனாருக்குத் திரும்புவோம், தமிழ் சமூகம் என்றில்லாமல், அறிவிற் சிறந்த மேன்மக்களை, கல்வியில் சிறந்த அறிஞர்களை, மருத்துவ அறிவு கொண்டவர்களை, காலநிலையைக் கணிக்கத் தெரிந்த பெரியவர்களை, கடலோடிகளுக்குத் துணையாக இருந்தவர்களை எல்லாம் உலகின் பல்வேறு நாகரீகங்கள் தலைவர்களாக, கடவுளர்களாக, முனிவர்களாக மாற்றிக் கொண்டாடின. “கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலும் மல்லவை கடிதலும் செவிலிக்குரிய வாகுமென்ப சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய..” மேற்கண்ட தொல்காப்பியத்தின். பொருளதிகாரம். கற்பியல் 153, 154 பாடல் வரிகள், சான்றோர், மருத்துவர், பொது சிந்தனை கொண்டு கூட்டு சமூகத்தின் எல்லைகளைக் காத்தவர்கள் தான் சித்தர்களும், நம்முடன் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் அல்லது ஐயன்கள். இவர்கள் இறந்ததும் “ஐயனார்” என்று தமிழ் சமூகம் இவர்களைப் போற்றி வணங்கி இருக்க வேண்டும். பேராசிரியர் க.நெடுஞ்செழியன் சொல்வது போல் ஆசீவகத்தின் உச்சநிலைத் துறவாக அறியப்படும் பரம சுக்க நிலையை அடைபவர்கள் ஐயன்களாகிப் பின்பு ஐயனாராகப் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தமிழகமெங்கும் பரவலாக காணக்கிடைக்கிற ஐயனார் கோவில்களில் நிலைகொண்டிருக்கும் ஒவ்வொரு ஐயனாருக்கும் தனிப்பெயர்கள் உண்டு. அவர்களுக்கான தனிக் கதைகள் உண்டு. ஆகவே ஒற்றை மனிதரே ஐயனார் என்கிற கூற்று உறுதியாக பல்வேறு உறுதியான தரவுகளால் புறந்தள்ளப்படலாம் என்பதே எனது முதன்மைக் கருதுகோள். லண்டனின் "ஸ்டோஹெஞ்" என்றொரு இடத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டு நிகழ்வுகள், சான்றுகள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு மியூசியம் வைத்திருக்கிறார்கள். அவ்விடத்தில் நிறுவப்பட்டுள்ள கல் வரிசைகளில் நின்று பார்த்தால் நீண்ட பகல் கொண்ட நாளின் சூரிய உதயத்தையும், குறைந்த பகல் கொண்ட நாளின் சூரிய அஸ்தமனத்தையும் பார்க்க முடியும் என்கிறார்கள். ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மனிதர்கள் வானிலை சார்ந்த மாற்றங்களைக் கண்டறிய ஏறத்தாழ ஒரு ஆய்வு மையத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலின் இடுகாட்டுப் பகுதிகளில் "ஸ்டோஹெஞ்சை" ஒத்த, அதே அலைவரிசை கொண்ட ஒரு கட்டமைப்பு இருப்பதாக ஒரு செய்தி இருக்கிறது. இந்தப் பகுதிகளில் அகழ்வாய்வுகள் செய்தால் தமிழர் நாகரீகத்தின் மிகச்சிறந்த அறிவியல்பூர்வமான வரலாற்று நிகழ்வுகளை நம்மால் அடையாளம் காணமுடியும், கீழடிக்கும் காளையார்கோவிலுக்கும் மிக அதிக தொலைவில்லை என்பதுதான் முக்கியமான செய்தி. ஐயனார் ஊர் தெய்வம், படிநிலையில் மானுட சமூகத்தின் முன்னேறிய கடவுளாக இருக்கிறார், இவருக்கு முன்பு நாம் சிலரைக் கடந்து வரவேண்டும், முதலாவது வீட்டுத் தெய்வம், வாழ்ந்து மறைந்த தங்கள் முன்னோர்களையும், கன்னியாகவே மறைந்து போன பெண்களையும் தமிழ் சமூகம் வீட்டுத் தெய்வங்களாக வழிபடுகிறது. வீட்டுச் சாமி, கன்னிச்சாமி, வாழ்வரசி, குடும்ப தெய்வம் என்றெல்லாம் அழைக்கிறார்கள், இந்த மரபு பொதுவாக தமிழகத்தின் ஆதிக் குடியான சமூகங்கள் அனைத்திலும் நீக்கமற இடம் பெறுகிறது. அடுத்ததாக வருவது குலசாமி, ஒரு குறிப்பிட்ட மூதாதை சமூக அமைப்பின் மரபில் தோன்றி ஒன்று கூடி, தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளாத உறவு சார்ந்த அமைப்பே குலம். வெவ்வேறு ஊர்களில் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள், வாழ்வாதார நிலைப்பாடுகளுக்காக தலைமுறைகளுக்கு முன்பாகவே வேறு நிலங்களில் குடியேறியவர்கள், ஒருவரை ஒருவர் அறியாதவர்களாக இருப்பார்கள். தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமானவர்கள் இல்லை, வியப்புக்குரிய செய்தியாக இவர்களில் சில வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் ஒரே குலசாமியை வழிபடுபவர்கள். ஒரு சிறு எடுத்துக்காட்டாக என்னையே எடுத்துக் கொள்வோம், எங்கள் குடும்பத்தின் குலசாமி மகிபாலன்பட்டியில் நிலைகொண்டிருக்கும் கருப்பர், குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஆண்டுக்கொரு முறை சென்று பொங்கல் படையலிட்டு அவரை வழிபடுவார்கள். மகிபாலன்பட்டி எனது தற்போதைய சொந்த ஊரில் இருந்து ஏறத்தாழ 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மகிபாலன்பட்டியில் நெருங்கிய திருமணம் செய்து கொள்கிற அளவுக்கு நெருக்கமான ரத்த உறவுகள் யாருமில்லை. அங்கிருக்கும் இன்னும் இரண்டு வெவ்வேறு சமூகங்களுக்கும் அதே கறுப்பர் தான் குலசாமி, (இப்போது விழாக்காலங்கள், குடும்ப விழாக்களுக்கு அந்தந்த சமூகங்களில் இருந்தும் அன்போடு அழைப்புகள் வைக்கிறார்கள் என்பது வேறு செய்தி). அடுத்தது இனத்தெய்வம், தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு குலங்கள் சேர்ந்து ஒரு சாதியாகிறது, அப்படியான ஒரு குறிப்பிட்ட சாதிக்கென்று உள்ள தெய்வங்கள் இனத்தெய்வங்கள், இனச்சார்புத் தெய்வங்கள், சாதி்த் தெய்வங்கள் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன. ஒரே மரபில் தோற்றம் கண்டு வெவ்வேறு இடங்களில் வாழும் குல உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலச் சுழற்சியிலோ ஒன்றுகூடி தங்கள் மரபின் பெருமைகளைக் கொண்டாடும் முகமாக இருப்பவரே இனத்தெய்வம். அடுத்ததுதான் நம்முடைய ஐயனார் தோற்றம் கொள்கிற ஊர்த் தெய்வம், ஒரு குறிப்பிட்ட வீட்டைக் காப்பது வீட்டுத் தெய்வம், ஒற்றைக் குலத்தைக் காப்பது குல தெய்வம், குலங்களின் தொகுப்பான சாதி இனத்தாரைக் காப்பது இனத்தெய்வம். ஆனால், எல்லா ஊர்களிலும் வாழும் மக்கள் அனைவரையும் காப்பது தான் ஐயனாரின் தனிச்சிறப்பு, ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து தான் அய்யனாருக்கு மிக விமரிசையாகப் பெரிய கும்பிடு நடத்துவர். பல்வேறு தனி அடையாளங்களைக் கடந்து ஊரை ஒருங்கிணைக்கும் வேலையை ஐயனார் செய்வதால் தான் அவர் குறித்து நாம் கவனம் கொள்வதற்கும் காரணம். கெடுவாய்ப்பாக இன்று ஊர்க்காவல் தெய்வங்கள், சிறுதெய்வங்கள் என்று பல்வேறு நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் நிறுவனமயமாக்கப்பட்ட வெகுசனத் தெய்வ நிலைக்குத் தொடர்ந்து மாற்றப்படுகின்றன. சிறுதெய்வங்களாக வெவ்வேறு நிலங்களில் தனித்தனியாக வழிபடப்பட்டு வந்த தெய்வங்கள் அவதாரக் கடவுளாகவும், பெருந்தெய்வங்களுக்கு உறவுடையதாகவும் மாற்றப்படும் சூழலை நீங்கள் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் தெரியும். முதலில் திறந்தவெளி வழிபாட்டிடங்களாக இருக்கும் இத்தகைய நாட்டார் தெய்வங்கள் பிரபலமான புனித ஆற்றல் கொண்டவையாக, பெருந்தெய்வங்களிடம் இருந்து வரம் பெற்றவர்களாக அல்லது அவர்களுக்கே பிறந்தவர்களாக மாற்றப்படுவார்கள். நோய்கள் துன்பங்கள் ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணம் கொடுப்பவையாக நம்பப்படும், பரப்பப்படும். இயல்புணர்வுகளில் இருந்து அதாவது பழிவாங்கும் உணர்வு, ஆவேசம், உக்கிரம் போன்றவை குறைக்கப்பட்டுச் சாந்தம், அமைதி போன்ற பெருந்தெய்வக் குணங்கள் இத்தெய்வங்களுக்கு போதிக்கப்படும். ஒருவேளை கோயிலின் வருமானமும், பக்தர்களும் நம்பமுடியாத வகையில் மாறும்போது ஆகம விதிகளின்படி கோயிலும் தெய்வ உருவமும் மாற்றி அமைக்கப்படும். சைவப் படையல் தெய்வத்தின் முன்பாகவும், அசைவப் படையல் கோயிலுக்கு வெளிப்புறமும் துரத்தப்படும். எனக்குத் தெரிந்த நான் பார்த்த அத்தகைய சிறுதெய்வம் காரைக்குடி முத்துமாரியம்மன். கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாக நாட்டார் வழிபாட்டு தெய்வமான முத்துமாரி, நிறுவனமயமாக்கப்பட்ட ஆகம விதிகளுக்கு உட்பட்ட பெருந்தெய்வமாக மாறி எளிய உழைக்கும் மக்கள் நெருங்க முடியாத அளவில் சில ஆண்டுகளில் மாற்றப்படுவார். புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலைக்கு அருகில் ஊரப்பட்டி என்கிற ஊரில் நிலை கொண்டிருக்கிறார் அடைக்கலம் காத்த ஐயனார், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மிகப்பெரிய பஞ்சத்தில் இந்த ஊரைச் சுற்றி இருந்த பல்வேறு கிராமங்கள் இடம் பெயர்ந்து செல்லத் துவங்கி இருக்கிறார்கள். தத்தமது ஊர்களில் அவர்கள் வழிபாட்டு வந்த காவல் தெய்வங்களை எல்லாம் அனாதையாக விட்டுச் செல்ல மனமின்றி ஊரப்பட்டி ஐயனாரிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள். இப்போதும் பல்வேறு நாட்டார் வழிபாட்டு தெய்வங்களின் சிலைகள், நடுகற்கள் என்று சுற்றிலும் புதர்களோடு மறைந்து கிடக்கிறார்கள் நாட்டார் தெய்வங்கள், ஆண்டுக்கொருமுறை பல்வேறு ஊர்களில் இருந்தும் இங்கு வந்து சேரும் தங்கள் குலசாமிகளையும், வீட்டுத் தெய்வங்களையும் கண்டு கிடா வெட்டிப் படையல் போட்டுச் செல்கிறார்கள் மக்கள். இது ஒரு துணைக்கதை. ஊரப்பட்டி ஐயனார் கதை வேறு, அவர் ஆற்றிய பணிகள் வேறு, ஆனால், சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு அவரை அடைக்கலம் காத்த ஐயனார் என்று பெயர் மாறச்செய்து விட்டது. இப்படித்தான் கதைகள் கிளைக்கின்றன, கடவுளர்கள் தோன்றுகிறார்கள், மாற்றம் பெறுகிறார்கள். தேரிக்காட்டு ஐயனார், களக்காடு சொரிமுத்து ஐயனார் மற்றும் கொங்கு நாட்டு ஐயனார்கள் குறித்து அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்... |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
| by Swathi on 05 Dec 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|