|
||||||||
ஐயனாரைத் தேடி-4 - கை.அறிவழகன் |
||||||||
ஐயனாரைத் தேடி...4 ஐயனாரைக் குறித்த தேடலின் வழியாகப் போகும்போது வரலாற்று ஆய்வாளர் மற்றும் பல்லுயிர் ஆர்வலரான தியோடர் பாஸ்கரன் அவர்களின் "கற்களின் மேல் நடந்த காலம்..." என்றொரு நூலை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. திருவள்ளுவரை அல்லது ஒரு ஆசிவகத் தத்துவ மரபு வழிப்பட்டவர் என்றும், இல்லை அவர் சைவ சித்தாந்த மரபு வழிப்பட்டவர் என்றும் நிறுவ முற்பட்ட ஆய்வுகள் நிறைய இருக்கிறது. தியோடர் பாஸ்கரன் அவர்களின் நூலின் முதல் கட்டுரையில் அவர் தனது இளமைக் காலத்தில் வேலூர் மற்றும் திருப்பரங்குன்றம் மலைப்பகுதிகளில் சுற்றித் திரிந்து சமணப் படுகைகளையும், சமணத் துறவிகள் வாழ்ந்த குகைகளையும் ஆய்வு செய்திருக்கிறார். இறுதியில் அந்தக் கட்டுரையில் அவர் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறார். திருக்குறள் ஆசிவகத் துறவிகள் பலரால் இயற்றப்பட்ட நூல் தொகுப்பு என்றொரு பிரிவும், அவர் சைவ சித்தாந்த மரபு வழி வந்தவர் என்றொரு தரப்பும் தரவுகளை முன்வைக்கிறது. அதற்கு எளிய தீர்வாக இப்போதிருக்கும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி குறள் முழுவதும் இருக்கும் நடை மற்றும் சொல்லாடல்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் வைக்கிறார். சரி, ஐயனார் என்கிற புதிரை விடுவிப்பதற்கு அவரது வேண்டுகோள் எங்கேனும் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுக்கலாம் என்ற நோக்கில் Grok 4 Beta, Gemini மற்றும் Perplexity AI போன்ற AI கருவிகளின் வழியாக ஒரு குறுகிய ஆய்வுக்குள் நுழைந்தேன். அதாவது Syntax Analysis. Syntax Analysis என்றால் என்ன? Syntax என்பது மொழியியலில் தொடரமைப்பு, இது சொற்கள் எவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டு இணைக்கப் பட்டிருக்கிறது. துணை சொற்றொடர் (Clauses) மற்றும் சொற்றொடர்களாக உருவாகின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் குறித்த வரையறைகளை ஆய்வு செயயப் பயன்படுத்தப்படும் மொழியியல் அலகு. இது மொழியியலில் சொற்றொடர் அமைப்புகளை ஆய்வு செய்யப் பயன்படுகிறது. அதாவது, ஒரு நூலில் அல்லது தொகுப்பில் வெவ்வேறு வகையான சொற்கள் அதாவது பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், பெயரடைகள் போன்ற இலக்கணக் கூறுகள் எப்படி இலக்கண ஒழுங்கோடு ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கின்றன என்பதைக் கவனித்து பொருளைக் கடத்துவது. வெவ்வேறு அதிகாரங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 குறள்களை நான் இந்த ஆய்வுக்குக்காகத் தேர்வு செய்து மூன்று வெவ்வேறு செயற்கை அறிவாற்றல் கருவிகளில் உள்ளீடு செய்தேன். இவற்றில் இருக்கும் சொற்றொடர்களை அதன் மொழியியல் தொடரமைப்பை ஆய்வு செய்து (Syntax Analysis) இதை ஒருவர் தான் எழுதி இருக்கிறாரா? அல்லது வேவ்வேறு மனிதர்கள் எழுதி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று ஆழமான குறிப்புகளோடு கட்டளைகள் (Prompt) கொடுத்தேன். மூன்று கருவிகளும் ஒத்திசைவோடு இந்த ஆய்வை இப்படி முடிக்கின்றன. திருக்குறளில் உள்ள 1,330 பாடல்களும் குறள் வெண்பா யாப்பின் இலக்கண விதிகளுக்குக் கட்டுப்படுகின்றன. இந்த செய்யுள் இலக்கணக் கட்டுப்பாடு, அந்த நூலின் தொடரமைப்பு எல்லைகளைக் கீழ்க்கண்டவாறு கட்டளையிடுகிறது: முதல் அடி: நான்கு சீர்களைக் (தளைகள்/சொற்தொகுதிகள்) கொண்டிருக்க வேண்டும். இரண்டாம் அடி: மூன்று சீர்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு குறளில் சரியாக ஏழு சீர்கள். இந்த உறுதியான கட்டமைப்பு, இந்தத் தொடரமைப்புச் சுருக்கம் சீராக 1330 குறள்களிலும் கடைபிடிக்கப் பட்டிருக்கிறது நூலின் தொடரமைப்பில் உள்ள எந்தவொரு மாறுபாடும் இந்த ஏழு நிலையான இடங்களுக்குள் மட்டுமே இயங்க வேண்டும்.பாடல்களின் அடிப்படையில் 25 சமவாய்ப்புப் குறட்பாக்களைப் பகுப்பாய்வு செய்யும் போது, பின்வரும் தொடரமைப்பில் சீரான தன்மை வெளிப்படுகிறது. சொற்றொடர் அமைப்பு , அனைத்துப் பாடல்களும், ஏழு சீர்களுக்குள் சுருக்கப்பட்ட, ஒற்றை மற்றும் கச்சிதமான முழுமையான வாக்கியமாகவோ அல்லது தொடர் வாக்கியமாகவோ உள்ளன. சொல் ஒழுங்கில் யாப்புறுதி அல்லது சொற்கள் விடுபடுதல் (Ellipsis) இருந்தாலும், தமிழ் மொழியின் விரும்பப்படும் சொல் ஒழுங்கு (எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலைசுருக்கமாக SOV) உறுதியாக 25 பாடல்களிலும் பராமரிக்கப்படுகிறது. யாப்புக் கட்டுப்பாடுகளையும் மீறி அடிப்படை இலக்கணம் இந்த 25 குறள்களும் நிலையாக உள்ளது. தொடர்ந்து பயன்படுத்தப்படும் இந்த அதிகப்படியான சுருக்கமான மொழி இலக்கணம் உறுதியாக ஒரு சிறப்பான தனித்துவம் மிக்க நடை. இணைப்பிகள் மற்றும் இடைச்சொற்கள் | வெளிப்படையான இடைச்சொற்களின் (எ.கா : போன்ற அல்லது ஆனால் போன்றவை) பயன்பாடு இந்தப் பாடல்களில் இல்லை அல்லது மிகக் குறைவு. பாடல்களின் கருத்துக்கள் பெரும்பாலும் அடுக்கப்பட்ட சொற்கள் அல்லது வினையெச்சங்களால் இணைக்கப்படுகின்றன. அணி வகைகள் மற்றும் இறுக்கமான உறுதித் தன்மை கொண்ட யாப்பு போன்றவை இந்தப் பாடல்களின் ஆசிரியர் ஒருவராகவே இருக்க முடியும் என்ற முடிவை தீர்க்கமாக ஆதரிக்கிறது. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று முற்றிலும் மாறுபட்ட தலைப்புகளைக் கையாளும் 1,330 பாடல்களிலும் இத்தகைய தேவை மிகுந்த யாப்பு மற்றும் தொடரமைப்புக் கட்டுப்பாட்டைப் பேணுவது, ஒரே ஒரு ஆசிரியரின் நடையியல் மற்றும் இலக்கணச் சீரான தன்மைக்குரிய உயர் பண்பாகும். இந்தப் பாடல்கள் பல ஆசிரியர்களால் இயற்றப்பட்டிருந்தால், நாம் பொதுவாக யாப்புக் கடைப்பிடித்தலில் நிகழும் மாறுபாடுகள், அவரவருக்கு விருப்பமான சொல் ஒழுங்கில் மாற்றங்கள்... வெவ்வேறு அதிகாரங்கள் அல்லது பிரிவுகளுக்கு இடையில் சொற்கள் விடுபடல், மாறுபாடுகள் மற்றும் அணி வகைகளின் எண்ணிக்கையில் கவனிக்கத்தக்க வேறுபாடுகளைக் நாம் கண்டிருக்க முடியும். ஆனால் திருக்குறளில் அத்தகைய வேறுபாடுகள் இல்லை, என்பதே ஆழமான மொழியியல் சொற்றொடர்கள் (Syntax Analysis) குறித்த ஆய்வில் நமக்குக் கிடைக்கும் முடிவு. இந்தத் தொழில் நுட்ப யுகத்தில் திருக்குறளை ஒருவர் மட்டுமே எழுதி இருக்கிறார் என்ற இலக்கண முறைமைகளுக்கு உட்பட்ட முடிவுக்கு நாம் வருவது எளிதானது. ஆசிவகம் அல்லது சைவ சித்தாந்தம் போன்ற தத்துவங்களுக்கு ஊடாக திருக்குறளை ஆய்வு செய்வது மிக முக்கியமானது. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் குறித்து அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. பொதுவாகப் பல்வேறு ஆய்வுகளின் தொகுப்புகளின் அடிப்படையில் பொது யுகத்திற்கு முன்பு 2-ஆம் நூற்றாண்டு முதல் 5-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதிக்குள் ஏதோ ஒரு காலகட்டத்தில் திருக்குறள் இயற்றப்பட்டிருக்கலாம். திருக்குறளின் தத்துவங்களை வைத்து (Philosophy of Thirukkural) அது ஆசிவகத் தத்துவ நூலா அல்லது சைவ சித்தாந்த நூலா என்பது குறித்து ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வர முடியாது. திருவள்ளுவர் தனது நூலின் 1330 குறள்களிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, தத்துவப் பிரிவையோ வெளிப்படையாக ஆதரிக்கவில்லை அல்லது குறிப்பிடவில்லை. அவரவர் சார்ந்த தத்துவங்களை திருக்குறளுக்குள் வலிந்தேற்றி அதன் பொதுத் தன்மையை சிதைக்க முற்பட்டாலும் திருக்குறள் ஒரு சமயச் சார்பற்ற நீதி நூல் (Secular Ethical Text) என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். திருக்குறளை சமணத் தத்துவத்தின் சாயல் கொண்ட நூலாகப் பல அறிஞர்கள் கருதுகின்றனர். இதற்கான முக்கியக் காரணங்களாக அவர்கள் குறிப்பிடுவது... கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் (அதிகாரம் 26), உயிர்க் கொலைத் தவிர்ப்பு (அதிகாரம் 33) போன்ற கருத்துகளுக்கு அது அளிக்கும் முக்கியத்துவம், சமண சமயத்தின் அடிப்படைக் கொள்கையோடு ஒத்துப்போகிறது என்பதுதான். ஐம்புலன் அடக்கம், குறிப்பாக "பொறிவாயில் ஐந்தவித்தான்" (குறள் 6) ஐம்புலன்களையும் அடக்க வேண்டும் என்கிற சமணக் கருத்துடன் நெருக்கமாக இருக்கிறது. மற்றொருபுறம் சைவ சித்தாந்த அறிஞர்கள், திருக்குறளில் உள்ள பல கருத்துக்கள் சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மைகளை (பதி, பசு, பாசம்) உள்ளடக்கியிருப்பதாக தங்கள் தரப்பை முன்வைக்கிறார்கள். ஊழ்/வினை: (அதிகாரம் 38) குறித்து வள்ளுவர் பேசுவது, சைவ சித்தாந்தம் கூறும் கன்ம மலத்தின் தாக்கத்தோடு சைவ சித்தாந்த வாதிகளால் ஒப்பு நோக்கப்படுகிறது. "ஆதி பகவன்", "மலர்மிசை ஏகினான்", "எண்குணத்தான்" போன்ற சொற்கள் சிவபெருமானின் குணங்களைக் குறிப்பதாகச் சைவ மரபுரை என்று அவர்கள் ஆய்வுகளில் கூறுவதுண்டு. திருக்குறள் எந்தவொரு குறிப்பிட்ட தத்துவப் பிரிவையும் ஆதரிக்கவில்லை, சார்ந்திருக்கவில்லை என்பதுதான் அதன் தனித்துவமான உண்மை. மாறாக திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தின் தத்துவங்களான ஆசிவகம், சமணம், பௌத்தம் மற்றும் தமிழர் மெய்யியல் ஆகியவற்றின் தலைசிறந்த தார்மீகக் கருத்துகளை உள்வாங்கி, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உரைத்த உலகளாவிய தத்துவங்களின் பொதுமறை அல்லது தமிழர் மெய்யியல் நூல் என்பதே மகத்தான மறுக்க முடியாத உண்மை. சரி, நாம் ஐயனாருக்கு வருவோம், ஐயனார் தமிழகம் மட்டுமல்லாது தமிழர் குடியேற்றங்கள் மற்றும் தமிழர் நிலவியல் சார்ந்து தோன்றிய பல்வேறு நிலப்பரப்புகளில் கிராமங்கள் தோறும் நீர்நிலைகளுக்கு அருகில் அல்லது ஊர் எல்லைகளில் அமர்ந்திருக்கிறார். ஐயனாருக்கும், திருவள்ளுவருக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். சமணப் படுகைகளில், சமணர்கள் வாழ்விடங்களில் அல்லது ஒரு தொடரியக்கம் நிகழ்ந்திருக்கிறது, அங்கு நீதிநெறிக் கற்றல், ஒழுக்கம் சார்ந்த பாடங்களை வழங்குதல் என்று அவை பள்ளி அல்லது உறை என்றழைக்கப்பட்டன. படுகைகள் "அதிட்டாணம்" என்ற பெயரில் ஏறத்தாழ பொதுப் பள்ளிக்கூடங்களைப் போல இயங்கி இருக்கின்றன. இதுதவிர "அஞ்சினார் புகலிடம்" என்றொரு இயக்கமும், அது என்ன அஞ்சினார் புகலிடம்? பல்வேறு காரணங்களுக்காக தண்டனை அறிவிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டு ஊர்களில் இருந்து தலைமறைவாக இருந்தவர்கள். இதுதவிர வேறு பல அச்சங்கள் காரணமாக உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் பலரை இந்த இடங்களில் வைத்து சமணத் துறவிகள் அல்லது ஆசிவகத் துறவிகள் பாதுகாத்து அவர்களுக்கு அடைக்கலம் தருவது மரபு, அதற்காகவே "அஞ்சினான் அடைக்கலம்". இந்தத் துறவிகளில் வடக்கிருந்து உயிர் விட்டவர்கள், இயற்கையாக மரணித்தவர்கள் இருப்பின் ஊர்மக்கள் ஒரு பொதுவிடத்தில் இவர்களைப் புதைத்து நினைவுக்கல் நட்டிருக்கிறார்கள். அவ்விடத்தை புனிதத் தலங்களாக மாற்றி இருக்கிறார்கள். தவிர ஊர் எல்லைகளில் வாழ்ந்து வானிலைக் கணிப்பு, நீர் மேலாண்மை, காட்டு விலங்குகளிடம் இருந்தும் நோயுற்றவர்களுக்கு மருத்துவம் என்று ஒரு தனிக்குழு இயங்கி இருக்கிறது. இவர்கள் ஊர்த் தலைவர்களாக, பொது வாழ்வில் ஈடுபடும் வீரமும், ஈரமும் கொண்ட குழு. இந்தக் குழு தமிழர் பண்பாட்டில் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால், ஆசிவகத் துறவிகள், சமணத் துறவிகள் அல்லது சைவ சித்தாந்தத் துறவிகள் என்றுகூட வைத்துக் கொள்வோம், சிக்கல் எங்கு வருகிறது என்றால் அவர்கள் வாழ்ந்த காலம் மற்றும் ஐயனார் வழிபாட்டுக் காலம் துவங்கிய இடத்தில் வருகிறது. பொது யுகத்திற்கு முன்பு 6-ஆம் நூற்றாண்டில் சமணம், ஆசிவகம், இது மகாவீரர் மற்றும் மற்கலி கோசாலர் காலம். அதாவது வேத மறுப்பு இயக்கங்களின் தோற்றம். பொது யகத்திற்கு முன்பு 3-ஆம் நூற்றாண்டு , சமணத்தின் ஆதிக்கம் ஆட்சியாளர்களின் ஆதரவால் வலுவடைந்தது; மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனான அமைப்பு ரீதியிலான தொடர்புஸ உண்டு. பொது யுகம் 400 - 500 க்கு இடைப்பட்ட காலத்தில் திருவள்ளுவர்/திருக்குறள். பொது யுகம் 450 - 500 காலம் திருவள்ளுவர், பொது யுகம் 5-ஆம் நூற்றாண்டு, சைவ சித்தாந்தத்தின் தோற்றம். இந்தக் காலத்தில் ஆகமங்கள் மற்றும் வேதங்களின் அடிப்படையில் ஒரு தனித்துவமான தத்துவ அமைப்பாக சைவ சித்தாந்தம் உருவாக்கப்பட்டது. அதாவது திருமூலர் காலம். பொது யுகத்தின் 7 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் சைவ சித்தாந்தம் ஆட்சியாளர்கள் ஆதரவோடு வளர்ச்சி அடைகிறது. நாயன்மார்களின் பக்தி இயக்கத்தால் திருமுறைகள் உருவாகின, இக்காலத்தின் சைவ சித்தாந்த வளர்ச்சி சமணம் மற்றும் பௌத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. சைவ சித்தாந்தம் பக்தி வழிபாட்டின் மூலம் தமிழகத்தின் ஆதிக்கம் செலுத்தும் சமயமாக மாறியது. பொ.யு. 8 - 9-ஆம் நூற்றாண்டுகளில் ஐயனார் வழிபாடு, நாட்டார் மரபுகள், சிரமணத் தத்துவங்களின் (சமணம், ஆசிவகம், பௌத்தம்) தாக்கங்கள் ஆகியவற்றை இணைத்துக் கொண்டு தமிழகமெங்கும் தெய்வ வடிவமாகத் திரண்டது என்பது காலக்கோடு. ஆனால், ஐயனார் வழிபாட்டின் நாட்டார் வேர்கள் சங்க காலத்திற்கு முந்தையது என்பதற்கான குறிப்புகள் நம்மிடம் வலுவான தரவுகளோடு இருக்கிறது. ஐயனார் தனி தெய்வமாக வலுப்பெற்று ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பட்ட காலம் தான் மேற்கண்ட காலக்கோடு. ஆதாரம் ஒன்று : தொடர்புடைய சங்கப் பாடல் பாடல் (புறநானூறு 394), இந்தப் பாடல், அறப்பெயர்ச் சாத்தன் கிளையைச் சேர்ந்த ஒருவரைக் குறிக்கிறது. இதில் 'அறப்பெயர் சாத்தன்' என்ற பெயர் வருகிறது. "சிறுகண் யானைப் பெறலருந் தித்தன், செல்லா நல்லிசை உறந்தைக் குணாது, நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர், அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!" (மதுரை நக்கீரர் புறநானுற்றுப் பாடல் 394) 'சாத்தன்' என்ற பெயர், சங்க காலத்திலேயே வணிகப் பாதைகளில், அறநெறியோடு தொடர்புடைய ஒரு காவல் பண்பைக் குறிக்கும் பெயராகவும், சில குடும்பங்கள் தங்கள் குலதெய்வத்தின் பெயராகவும் பயன்படுத்தும் அளவுக்கு ஆழமான சமூக வேரூன்றலைக் கொண்டிருந்தது. ஐயனாரின் பிரதான பெயர் 'சாத்தன்' என்பதால், இந்தத் தெய்வத்தின் காவல் சார்ந்த நாட்டார் மரபு சங்க காலத்திலேயே நிலை பெற்றிருந்தது என்பதற்கு இது வலுவான அடித்தளமிடுகிறது. ஆதாரம் இரண்டு : சங்க காலத்தின் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் பொது யுகத்தின் 2 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நுற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களால் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட காலம். தொல்காப்பியம் திணைக் கடவுள்களைப் பட்டியலிடுகிறது. அப்படியானால் தொல்காப்பியம் எழுந்த காலத்திற்கு முன்பிருந்தே திணைக்கு அப்பாற்பட்ட எல்லைக் காவல், ஊர்ப் பாதுகாப்பு போன்ற செயல்களில் ஈடுபட்ட சிறுதெய்வ வழிபாடுகள் தமிழ் சமூகத்தில் இருந்திருக்கிறது. இவை பொதுவாக தமிழகமெங்கும் கிராம மக்களிடையே இருந்தன. தொல்காப்பியத்தில் பெருஞ்சாத்தன், சாத்தன், ஆதன், பூதன் போன்ற சொற்கள் உயர்திணைப் பண்புப் பெயர்களாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் சாத்தனாகிய ஐயனார் சங்க காலத்திற்கு முன்பாகவே தமிழ் சமூகத்தில் குடியேறி இருக்கிறார். (ஐயனாரைத் தேடும் பயணம் தொடரும்...)
|
||||||||
| by Swathi on 05 Dec 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|