இங்கு அம்மனின் மூலஸ்தானத்தின் கீழ் மண்ணால் ஆன அம்மனின் சிலையை பிரதிஷ்டை செய்து அதற்கு மேல் புதிய அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு.தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இவ்வூர்மக்கள் திருமலையாம் திருப்பதிக்குச் சென்று சில நாட்கள் தங்கி திருமலையானை ஆனந்தமாக தரிசித்தார்கள். தரிசனம் முடிந்து மறுநாள் கிளம்பலாம் என்று உறக்கத்திற்காக கண்ணயர்ந்த நேரத்தில் கனவில் ஒரு பெண் தெய்வச் சிலை தோன்றி, நான் உங்களுடன் வரப் போகிறேன்.
உங்களுள் ஒருத்தியாய் இருந்து அருள் ஆட்சி செலுத்துவேன் என்றும் என் பெயர் கங்கை அம்மன் என்றும் கூறியதாக கண்டிருக்கிறார் பெரியவர் ஒருவர். என்னவென்று புரியாமல் திருமலையானை வணங்கி திரும்பி வரும் பாதையில் கனவில் கண்டது போன்ற ஒரு பெண் உருவ சிலை சுட்ட களிமண்ணால் ஆனது கண்ணில் பட்டது. கண்ட கனவு பலித்தது என்ற ஆனந்தத்துடன் அச்சிலையை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.
சிறிது தூரம் நடந்தவுடனே பாதையில் வேறொரு வழிப் போக்க பெரியவர் அம்மன் சிலையைப் பார்த்து மகிழ்ச்சி பொங்க மெய்சிலிர்த்தார். பின்னர் தன் கையில் இருந்த கங்கை தீர்த்தத்தைத் தந்து இதனைக் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் என்று தந்தாராம். சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் கங்கை தீர்த்தம் கிடைப்பது என்பது எளிதான விஷயமல்ல. கங்கை தீர்த்தத்துடன் திருப்பதியில் கிட்டிய அம்மன் சிலை என்பதால் அருள்மிகு திருப்பதி கங்கை அம்மன் என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த ஆரம்பித்தார்கள். |