அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாம் இந்தியராக இருப்பது மட்டுமே நமக்கு வலிமை என்பதை இந்த நாளில் நாம் உணரவேண்டும். தமிழருக்கும், மற்ற மொழி பேசும் நம் சகோதரர்களுக்குமான சம உரிமைகளைப் பெற நடுநிலை எண்ணமும், நாட்டுப்பற்றும் உள்ள, உறுதியாக முடிவுகளை எவ்வித சமரசமும் இன்றி எடுக்கும் தன்னலமற்ற தமிழர்கள் இந்திய அரசியலில் அதிகம் ஈடுபடுவதும், இந்தி-இந்தியா என்ற எண்ணத்தை மாற்றி அனைத்து மொழிகளும் சம அங்கீகாரம் பெற முயற்சிப்பதும், அதில்தான் இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் இருக்கிறது என்பதை வாக்கு வங்கி அரசியல்வாதிகளுக்கு புரிய வைப்பதும் மிக அவசியம். பல்வேறு மொழிகளும், பரந்துபட்ட கலாச்சாரமும்தான் இந்தியாவின் வலிமை.
உலகத்தை கவனிக்கும்போது பல நாடுகளில் இன்று மக்கள் அமைதியாக வாழ வழியில்லாமல், சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். போரால் ஒருபக்கம் மக்களுக்கு பிரச்சினை, போதிய இயற்கை வளம் இன்மையாலும், சரியான தலைவர்கள் இல்லாததாலும், அறியாமையாலும், ஊழலாலும் இன்று பல நாடுகளில் மக்கள் வாழ வழியின்றி அவதிப்படுகிறார்கள். குறிப்பாக சமீபத்தில் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் குறிப்பாக மெக்சிகோ போன்ற நாடுகளில் போதை, அராஜகம்,சரியான சட்ட ஒழுங்கு இல்லாமை போன்றவற்றால் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒவ்வொருவரும் 5000$க்கு மேல் செலவழித்து, உயிரை பயணம் வைத்து அமெரிக்காவின் எல்லைகளில் வந்து குவிந்து வரும் அவலத்தைக் காண்கிறோம். இது இன்று ட்ரம்ப் அரசிற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது என்பதைக் காண்கிறோம்.
சுதந்திரம் என்பது அது இல்லாத வாழ்வு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்தால், அப்படி இல்லாத மக்கள் படும் அவதியைப் பார்த்தால் அதன் அருமை புரியும். இன்று நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திர நாட்டில் சுயநலமிக்க, நாட்டுப்பற்று இல்லாத, மனிதத்தின் மதிப்பு உணராக, ஊழல் எண்ணம கொண்ட, வளர்ச்சி சிந்தனை இல்லாத, மொழி வெறி கொண்ட பழமை அரசியல்வாதிகள் விடைபெற்று, அறிவு சார்ந்த, அறம் சார்ந்த ,அனைவரின் உரிமைகளையும் மதிப்பளிக்கும் இளைஞர்கள் அரசியலில் அதிகம் பங்கேடுக்கும்போது இன்றைய சுதந்திரம் இன்னும் மக்களுக்கு பல நன்மைகளை பெற்று வளமான இந்தியா, வலிமையான இந்தியாவாகத் திகழும் என்று நம்புவோம்...
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிகளுக்கு மேல் சென்றுவிட்டது. இன்னும் ஐந்து-பத்து ஆண்டுகளில் தண்ணீர் பிரச்சினையால் ஒரு மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கப் போகிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். இதை உணர்ந்து எதிர்கால சமூகம் நிம்மதியாக இந்த சுதந்திரத்தை அனுபவிக்க நதிநீர் இணைப்பு, நிலத்தடி நீர் அதிகரிப்பு, மழைநீர் சேகரிப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவோம்.
|