|
||||||||||||||||||
நல்ல தமிழில் எழுதுவோம் |
||||||||||||||||||
ஆரூர் பாஸ்கர், ப்ளோரிடா,அமெரிக்கா நாட்டு மருந்து கடையா அல்லது மருந்து(க்) கடையா ? சென்ற கட்டுரையில் அல்லன், அல்லள், அல்ல,அல்லை போன்ற சொற்களின் வேறுபாட்டைத் தெரிந்து கொண்டோம். இந்தக் கட்டுரையில் “நாட்டு மருந்து கடையா அல்லது மருந்துக்கடையா? “இதில் எது சரி என்னும் பட்டிமன்றத்துக்குத் தீர்ப்பு சொல்லும் முன்… கடந்த ஆறு மாதங்களாக நாம் நல்ல தமிழில் எழுதுவோம் எனும் தலைப்பில் நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவது பேசுவது குறித்துப் பார்க்கிறோம். அந்தக் கட்டுரைகளில் ஒற்று மிகுதல்,மிகாமை போன்ற இலக்கண விதிகள் எதையும் நாம் பார்க்கவில்லை. ஆனால், நாம் நல்ல தமிழில் எழுத அவற்றைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். ஒற்றெழுத்து என்றதும் பலர் நமக்கு எதுக்கு இந்த வம்பு ? ”க்,ச், த்,ப்” போன்ற ஒற்றெழுத்துகள் எதுவும் போடாமல் இரண்டு சொற்களை அப்படியே எழுதினால் என்ன? எனக் கேட்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே மேலே சொன்ன எடுத்துக்காட்டு. அதாவது நாட்டு மருந்து கடை என்றால் நாட்டு மருந்து என்னும் பாரம்பரிய மருந்தைக் கடை (கடையும் செயல்-ஏவல்) என்று பொருள். மாறாக நாட்டு மருந்துக்கடை என்றால் பாரம்பரிய மருந்து விற்கும் கடை என்று பொருள். அதாவது தமிழில் ஒற்றெழுத்துகள் மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டு. அதைத் அறிந்து கொண்டு பயன்படுத்துவதே சரியாக இருக்கும். ஒற்று அவசியம் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மதுரை(ப்) பையன் என்றால்,மதுரைக்காரப் பையன் எனப் பொருள்; மதுரை பையன் என்றால், மதுரை என்ற பெயருடைய பையன் என்றும் பேச்சு வழக்கில், மதுரையின் பையன் என்றும் பொருள் பெறும். அதுபோல வேலை தேடு என்றால் ஒரு வேலையைத் தேடிக் கொள் என்றும் வேலைத் தேடு என்றால் 'வேல்' என்னும் ஆயுதத்தைத் தேடு எனப் பொருள்படும். இதையொட்டி இன்னொரு கேள்வி - உடல் நலம்பெற நாட்டு மருந்து கடை(ப்)பிடிக்கவேண்டுமா? இல்லை நாட்டு மருந்துக்கடை பிடிக்கவேண்டுமா? கொஞ்சம் யோசியுங்களேன். |
||||||||||||||||||
by Swathi on 20 Jan 2020 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|