LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள் - சு. அரங்கநாதன்

முன்னுரை:

ஆதிகால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவின் உற்பத்திக் குறைவைப் போக்க அல்லது அதன் தேவையினை அதிகரிக்க, தானே உற்பத்தி செய்யும் முறையினை மேற்கொண்டான். கால ஓட்டத்தில் பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். மேலும் ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்கக் கற்றுக் கொண்டனர். கற்றுக் கொண்ட தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றிபெற அவரவர் திறமைகளைக் காட்டத் துவங்கினர். இவ்வாறு பல்வேறு தொழில்கள் வளர்ந்த நிலையில், இருந்த சங்ககாலத் தொழில்கள் பற்றியும், அத்தொழில்கள் அவரவர் பயன்படுத்திய நுட்பங்கள் பற்றியும் கலித்தொகை மூலம் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

கட்டடத் தொழில்: குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்த மனிதன் தனக்கென இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதன் வளர்ச்சியே மாளிகைகளும், அரண்மனைகளும், வீடுகளும் ஆகும். கலித்தொகை பாடல்களில் இவை குறித்த செய்திகள் அறியக் கிடைக்கின்றன.

 

''நிலன் நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார்'' (கலி.35:17)

 

என்ற வரியில் நீண்ட மாடங்களுடன் அமைக்கப்பட்ட மாளிகை குறிக்கப்படுகின்றது.

 

''ஆய்சுதை மாடத்து அணிநிலா முற்றத்துள்'' (கலி. 96:19)

 

என்பதில் அழகுடைய சாந்து பூசப்பட்ட மாடமும் அழகுடைய நிலா முற்றமும் குறிக்கப்படுகின்றன.

 

''சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர்சீர்த்தி'' (கல்.83-13)

 

''பெருந்திரு நிலைஇய வீய்கு சோற்று அகல்மனை

 

பொருந்தி நோன்கதவ ஒற்றிப் புலம்பியாம் உலமா'' (கலி.83:1-2)

 

ஆகிய வரிகளில் சாளரம் அமைக்கப்பட்டு, இரட்டைக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ள வீடு பற்றிய செய்தி கூறப்படுகின்றது.

 

ஆடைத் தொழில்: இலைகளையும், மரப்பட்டைகளையும் ஆடைகளாக அணிந்த மனிதன், நூலினாலான ஆடைகளை உடுத்தத் தொடங்குகிறான். வளர்ச்சி அடைந்த நிலையில் பல்வேறு வண்ணங்களையும் சிறப்புக் கூறுகளையும் உருவாக்கத் தொடங்கி மனிதன் அதில் பல்வேறு தொழில் நுட்பங்களைக் கையாண்டுள்ளான் என்பதனைக் கீழ்க்காணும் கலித்தொகை பாட்ல்வரிகள் காட்டுகின்றன.

 

அணிகலன்கள்: உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் பற்றியும், இவ்வணிகலன்கள் செய்யக் கையாளப்பட்ட நுட்பங்கள் பற்றியும் கலித்தொகையில் பல்வேறு பாடல்கள் சுட்டுகின்றன.

 

''அளிமாற பொழுதின் இவ்ஆயிழை கவினே (கலி-25)

 

நறா இதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்ப''

 

''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்''

 

''புனை இழை நோக்கியும்'' (கலி.76)

 

''மாணிழை ஆறாகச் சாறு'' (கலி.102)

 

''கடியவே கனங்குழாஅய் காடுஎன்றார்'' (கலி-11)

 

''ஞால்இயல் மென்காதின் புல்லிகைச் சாமரை'' (கலி-96)

 

''கிண்கிணித் தாரொடு ஒலித்து ஆர்ப்பு ஒண்தொடிப்'' (கலி-74)

 

என அமைந்த கலித்தொகை வரிகளால் ஆண் சுறாமீன் வடிவத்தில் உள்ள மோதிரம் அணிந்தமை பற்றியும், ஒளியை உடைய அணிகலன்கள் பற்றியும், பொன்னால் செய்த கனமான காதணி பற்றியும், கிழே தொங்கும் தன்மையுடைய புல்லிகை என்ற அணி பற்றியும், மணிகள் சேர்க்கப்பட்ட மாலை பற்றியும் அறிய முடிகிறது. மேலும், கைக்கவசம், தொடி, பொலன், கோதை, முத்தாரம், கழுத்தணி, வயந்தகம் போன்ற அணிகள் பற்றியும் அதில் செய்யப்பட்ட நுட்ப வேலைப்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

 

குவளை மலர் விற்றல்: பெண்கள் சூடும் மலர்களைக் கொய்து விற்பனை செய்யும் தொழில் பற்றிக் கலித்தொகை கூறுகின்றது.

 

''வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட'' (கலி.11)

 

சலவைத்தொழில்:

 

''சலவைத் தொழிலில் சங்ககால மக்கள் ஈடுபட்டுள்ளதை,

 

.....................................................................ஊரவர்

 

ஆடை கொண்டு ஒலிக்கும்நின் புலைத்தி

 

என்ற கலித்தொகை வரி காட்டுகின்றது.

 

வள்ளிக்கிழங்கெடுத்தல், தேனெடுத்தல்''

 

குறிஞ்சிநில மக்கள் வள்ளிக்கிழங்கினைத் தோண்டியெடுத்தலும், தேனெடுத்தலும் பற்றிய குறிப்பினைக் கலித்தொகை

 

''வள்ளி கீழ்வீழா, வரைமிசைத் தேன்தொடா'' (கலி.39)

 

என்று கூறுகின்றது.

 

ஆநீரை மேய்த்தல்: முல்லைநில மக்கள் ஆடு, மாடுகளையும் அவற்றைக் காத்து வைத்திருத்தலையும் முக்கியச் செயலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதனை முல்லைக்கலிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

 

''தத்தம் இனநிரை

 

பொழுதோடு தோன்றிய கார்நனை வியனிட புலத்தார்'' (கலி-106)

 

''மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் (கலி-108)

 

''பாங்கரும் பாட்டாய்கால் கன்றோடு செவ்வோம்யாம்'' (கலி-116)

 

என்பதன் மூலம் கோவலர்கள் மனைக்கு அருகில் உள்ள புல்வெளிகளுக்குக் கன்றோடு பசுவினையும் சேர்த்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர் என்பதையும் அதனைக் காக்க வேண்டிக் கோலூன்றி நின்றனர் என்பதையும் அறியமுடிகின்றது.

 

மோர் விற்றல்: ஆநிரையால் பெற்ற பாலை மோராக மாற்றி விற்கும் தொழிலில் மகளிர் ஈடுபட்டனர்.

 

''அகலாங்கண் அளைமாறி அலமந்து பெயருங்கால்

 

அளைமாறிப் பெயர் தருவாய்'' (கலி-108)

 

என்ற வரிகளினால் பெண்கள் அருகில் உள்ள சிற்றூரில் மோர் விற்றுத் திரும்பியதைத் தெரிய முடிகிறது.

 

வெண்ணெய் விற்றல்: முல்லை நிலத்துப் பெண்கள் மோரில் இருந்து வெண்ணெய் எடுத்து அதனையும் விற்றனர்.

 

''வெண்ணெய்க்கும் அன்னள்எனக் கொண்டாய் ஒண்ணுதல்'' (கலி-110)

 

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே'' (கலி-115)

 

பனங்குருத்தால் பெட்டி புனைதல் : பனை ஓலை, தென்னை ஓலைகளைக் கொண்டு அன்றாடத் தேவைகளுக்குப் பொருட்களைச் செய்தனர். ஓலைகளைப் பயன்படுத்தி பலவிதமான கூடைகள் செய்தனர். அவை புட்பில் எனப்பட்டது என்பதனை முல்லைக்கலியல் உள்ள

 

''போழின் புனைந்த வலிப்புட்டில்'' (கலி-117)

 

''வரிகூழ வட்டி தழீஇ'' (கலி-109)

 

என்ற இவ்வரிகளினால் பெட்டிகள் செய்து அவற்றில் நெல்லினைக் கொண்டு சென்றதனையும் அறிய முடிகின்றது.

 

தினைப் புனங்காத்தல்: விளைந்த தினைக்கதிரைப் பறவைகள் வந்து உண்டுவிடாமல் இருக்க தினைப்புனங் காக்கின்ற தொழிலை தலைவியும் தோழியும் செய்தனர்.

 

''ஒளிதிகழ் ஞெகிழார் கவணையார் வில்லர்

 

களிறுஎன ஆ‘ப்பவர் ஏனல் காவலேரே'' (கலி-52)

 

''படிகிளி பாயும் பசுங்குரல் ஏனல்'' (கலி-50)

 

தினைப்புனங் காக்கும் மகளிர் கவனையும், வில்லையும் கொண்டு களிற்றினை விரட்டி ஆரவாரம் செய்தமையும் தினைப்புனத்திற்கு வருகின்ற கிளிகளைக் கவன் கொண்டு ஓட்டியமையும் கூறப்பட்டுள்ளது.

 

வேட்டையாடுதல்: சங்க காலத்தில வேட்டைத்தொழில் சிறப்பாக நடந்தது. வேட்டைக்குச் செல்வோர் அதற்குத் தேவையான கருவிகளுடன் சென்று காட்டில் எல்லாத் திசைகளிலும் அலைந்து வேட்டையாடுவதற்குரிய விலங்குகள் உள்ள இடத்தை அறிந்து தாக்கினர். அவர்கள் வெள்ளை யானை, மான் போன்றவற்றை வேட்டையாடியதனை,

 

''இலங்கொளி மருப்பின் கைம்மா உளம்புநர்

 

புலங்கொடி கவனையின் பூஞ்சினை உதிர்க்கும்

 

கொலைவெம் கொள்கையோடு நாயஅகப் படுப்ப

 

வலைவர்க்கு அமர்ந்தே மடமான்''

 

என்ற பாலைக்கலி வரிகளின் மூலம் அறியலாம்.

 

ஆறலைக்கள்வர்: பாலை நிலம் வழியாகச் செல்லும் வழிப்போக்கர்களிடம் அவர்தம் உடைமைகளைப் பறித்துச் செல்லும் ஆற்றலைக் கள்வர்கள் பற்றிய செய்தி கலித்தொகையில் இடம் பெறுகின்றது.

 

''அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர்தாம்

 

கொள்ளுப் பொருள் இலர்ஆயினும் வம்பலர்

 

துள்ளுநர்க் கண்மார் தொடர்ந்து உயிர் வெளவலின்'' (கலி.4)

 

தோற்பைகள் செய்தல் : கொல்லன் பட்டறையில் பயன்படுத்தப்பட்ட ஊதுலைக் கருவி தோலால் செய்யப்பட்டது. இது மெல்லிய தோலால் செய்யப்பட்டது.

 

''கழுவொரு சுடுபடை சுருக்கிய தோற்கண்'' (கலி.106)

 

என்பதனால் ஆநிரைகள் மேய்க்கச் செல்லும் போது முல்லை நிலக் கோவலர் கழுவோடு சூட்டுக் கோலையும் தோற்பையில் இட்டுச் சுருக்கிக் கட்டிக்கொள்வர் என்பதைத் தெரியமுடிகின்றது.

 

தச்சுத் தொழில்: சங்க காலத்தில் மரத்தினால் கட்டில்களையும் பொம்மைகளையும் செய்தனர் என்பதைப் பின்வரும் பாடல்வரிகள் மூலம் அறியமுடியும்.

 

''படைஅமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ

 

இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள்'' (கலி: 72)

 

புரிபுனை பூங்காற்றில் பையல வாங்கி (கலி: 80)

 

கமயரணம் பாயாநின் கைபுனை வேழம் (கல்: 86)

 

முடிவுரை: சங்க காலத்தில் மக்கள் பல்வேறு தொழில்கள் செய்துவந்துள்ளனர், அத்தொழில்களில் அக்கால மக்கள் காட்டிய ஆர்வமும் செயல்திறனும் சிறப்புடையன. ஆண்களோடு இணைந்து அவர்கள் அறிந்த தொழிலைச் செய்து தம்குடும்ப பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொண்டனர். சங்க கால மக்கள் தோல், நூல், பொன், மண்டபம், மரம் போன்ற பொருட்களினால் செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் தெரியமுடிகின்றது.

 

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.